சென்னை, மே 12 (டிஎன்எஸ்) சினிமா வாசம் இல்லாத சிறு கதை ஒன்றுக்கு திகட்டாத திரைக்கதை அமைத்து, பொருத்தமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து சுவாரஸ்யமான படமாக சுசீந்திரன் இயக்கியிருக்கும் படம் 'அழகர்சாமியின் குதிரை'.
If u Want 2 Read Story ( Drag the Cursor )
கடவுள் அழகர்சாமியின் மரக்குதிரையும், குதிரையை வைத்து சுமைத்தூக்கி வாழ்க்கையை நடத்தும் தொழிலாளியான அழகர்சாமியின் குதிரையும் காணாமல் போகிறது. கடவுள் அழகர் சாமியின் வாகனமான மரக்குதிரை இல்லாமல் திருவிழா நடத்த முடியாத நிலையில் இருக்கும் கிராம மக்களிடம், கூலி தொழிலாளி அழகர்சாமியின் காணாமல் போன குதிரை கிடைக்கிறது. அதையே கடவுள் அழகர்சாமியின் குதிரை என்று நினைத்து கிராம மக்கள் கொண்டாடுகிறார்கள்.
அந்த குதிரை வந்த நேரத்தில் கிராமத்தில் நல்ல விஷயங்களாக நடக்க, குதிரையையே கடவுளாக நினைத்து கிராம மக்கள் வழிபடுகிறார்கள். இதற்கிடையில் தொலைந்த தனது குதிரையை தேடிவரும் அழகர்சாமி, தனது குதிரையை கிராம மக்களிடம் கேட்க, இது சாமியின் குதிரை இது எங்களுக்குத்தான் சொந்தம் இதை தரமுடியாது என்று கிராம மக்கள் மல்லுகட்ட, தனது குதிரைதான் வாழ்க்கை என்று வாழும் கூலி தொழிலாளி அழகர்சாமியும் கிராம மக்களிடம் மல்லுகட்டி நிற்கிறார். இதற்கிடையில் இந்த பிரச்சனையில் தலையிடும் காவல்துறை, திருவிழா நடக்கும் வரை குதிரை கிராமத்தில் இருக்கட்டும். திருவிழா முடிந்ததும் குதிரையை அழகர்சாமி எடுத்துச்செல்லட்டும். அதுவரை குதிரையுடனே அழகர்சாமி இருக்கட்டும். என்று சமாதானம் பேசுகிறது. இதற்கு இரு தரப்பும் ஒப்புக்கொள்கிறார்கள்.
கிராமத்தில் நிலவும் பஞ்சத்தை தீர்க்க வந்த கடவுளாக மக்கள் பார்வையில் குதிரை தெரிய, அதே குதிரைதான் எல்லாமே, அது காணாமல் போனதால், தனக்கு முடிவான திருமணமே நிற்கும் நிலையில், குதிரை தான் தனது வாழ்க்கை என்ற நிலையில் அழகர்சாமி இருக்க, இறுதியில் குதிரை யாருக்கு சொந்தமானது என்பதுதான் க்ளைமாக்ஸ். இதற்கிடையில் காணாமல் போன குதிரை கிடைத்தாதா இல்லையா? யாரால் திருடப்பட்டது? எதற்காக? என்ற கேள்விகளை திரைக்கதையின் முடிச்சுகளாக்கி, அதை சுவாரஸ்யமான காட்சிகளின் மூலம் அவிழ்க்கும் இயக்குநர் ஒரு அற்புதமான படத்தை கொடுத்திருக்கிறார்.
தலைப்பில் துவங்கி படம் வரை ரீமேக் செய்யும் ரீமேக் ஜாம்பவான்கள், பாஸ்கர் சக்தி போன்ற சிறுக்கதையாசிரியரை தொடர்புகொண்டாலே இதுபோன்ற எளிமையான அதே சமயத்தில் புதுமையான கதைகள் கிடைக்கும்.
கதை என்னவோ எளிமையானதாக இருந்தாலும், அதை காட்சிப்படுத்திய விதம் வலிமையாக இருக்கிறது. தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கு உள்ள தகுதிகள் எதுவும் இல்லாத ஒருவரை ஹீரோவாக்கியதற்காகவே இயக்குநரை பலமுறை பாராட்டலாம். ஷாட் அன்ட் ஸ்வீட் என்ற பாணியில் எதை சொல்ல வேண்டுமோ அதை மட்டுமே சொல்லி படத்தை சுவாரஸ்யத்தோடு நகர்த்தியிருக்கும் இயக்குநர், படத்தின் முதல் பாதியில் இடம்பெறும் டூயட் பாடல் ஒன்றை தவிர்த்திருந்தால் படம் இன்னும் படு ஜோராக இருந்திருக்கும்.
பாஸ்கர் சக்தியின் வசனங்களில் நாத்திக வாசம் பலமாக வீசினாலும், படத்தின் கதைகளத்திற்கு அதுவே பக்க பலமாகவும் அமைகிறது. தனது வசங்களின் மூலம் ரசிகர்களை சிந்திக்க வைத்த இவர் சிரிக்கவும் வைக்கிறார்.
உணவு உபசரிப்பவர்கள், வாகனம் ஓட்டுனர்கள் போன்றவர்களின் பெயர்களை படம் முடிந்த பிறகே போடும் இந்த நிலையில் படத்தின் ஆரம்பத்திலே அந்த பெயர்களை போட்டு அங்கேயே ரசிகர்களை சிந்திக்க வைக்கிறார் சுசீந்திரன். இதனால் இளையராஜாவின் டைட்டில் இசையை கேட்டு அழமுடியவில்லை. (இப்படத்தின் நிகழ்ச்சியின் போது "படத்தின் டைட்டில் கார்ட் இசையை கேட்டாலே நீங்கள் அழுதுவிடுவீர்கள்" என்று இளையாராஜ கூறினார்.)
இதுமட்டுமா படத்தின் பின்னணி இசையை கூட கவனிக்க முடியாமல் சுசீந்திரனின் கதாபாத்திங்களே நம்மை ஆள்கொள்கிறது. எங்கேயோ வெளிநாட்டில் இருந்து யார் யாரையோ வரவைத்து இசையமைத்தாராம் இசை ஞானி, (எதுக்கு தமிழ்நாட்டு கதை தானே, தமிழ் மண்ணின் முகங்கள்தானே! அதற்கு எதுக்குப்பா வெளிநாட்டு வாத்தியங்கள்) எப்படியோ குதிக்குர குதிக்குர.. என்ற பாடலில் மட்டும் ஞானிக்கு ஏற்ற ஞானம் இருக்கிறது.
அழகர்சாமி, ஊர் பிரஸிடண்ட், அவருடைய மகன் அவன் காதலிக்கும் ஊர் கோடாங்கி மகள், கோடங்கி, வாத்தியார், மைனர், காவல்துறை அதிகாரி, பரோட்டா சிறுவன், கார்பென்டர், அழகர்சாமியின் வருங்கால மனைவி அவருடைய அப்பா, கிராம மக்கள் என ஒவ்வொரு கதாபாத்திரமும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு ஆடம்பரம் இல்லாத அபாரத்தை காட்டுகிறது. கதாபாத்திரங்களின் நிஜத் தண்மையை ஜோராகவே நிலைநாட்டியிருக்கிறது இவருடைய கேமரா. மு.காசிவிஸ்வநாதன் கட்டிங்கை கஞ்சிதமாக செய்திருக்கிறார். கிராம மண்டபம், மலை அடிவார மண்டபம் போன்றவை செட்டாக இருக்குமோ! அல்லது நிஜமானதா? என்று நம்மை சிந்திக்க வைக்கிறார் கலை இயக்குநர் ஜெயச்சந்திரன்.
படம் முழுக்க சினிமாதனத்தை தவிர்த்து எதார்த்தமாக படத்தை நகர்த்தி வந்த இயக்குநர் இறுதிகாட்சியில் குதிரை சண்டைபோடுவது போன்ற காட்சியை வைத்ததுதான் கொஞ்சம் உருத்தலாக இருக்கிறது. இருப்பினும் ஜாதி மாறி கல்யாணம் பண்ணிங்கிட்டாங்க, இனி இந்த ஊர்ல மழையே வராது என்று பிரஸிடண்ட் சொல்லும் போது மழை பெய்யும் காட்சி அந்த குறையை கூட நிறையாக்கியிருக்கிறது.
அழகர்சாமியின் குதிரை பந்தய குதிரை இல்லையென்றாலும், பலருடைய பார்வையை கவரும் குதிரையாக இருக்கிறது.
ஜெ.சுகுமார்.
(டிஎன்எஸ்)
No comments:
Post a Comment