ஜெயமோகன் ஐயா,
“காந்திக்கு வழங்கப்படாத நோபல் பரிசு” -குறித்த எனது கேள்விகளை எனது பதிவில் இட்டுள்ளேன். காந்தி குறித்த உங்களது பரந்த அறிவை உலகமறியும். இந்த பதிவு குறித்த உங்கள் விமர்சனங்களை எதிர் நோக்கியிருக்கிறேன்.
என்றும் அன்புடன்,
பா.கார்த்திக்.
http://kanakkadalan.blogspot.com/2010/10/blog-post_09.html
அன்புள்ள கார்த்திக்,
காந்தி 1937, 1938, 1939, 1947, 1948 ஆகிய வருடங்களில் நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டு பரிசீலிக்கப்பட்டிருக்கிறார். 1989ல் காந்தியவாதியான தலாய் லாமாவுக்கு பரிசளிக்கப்பட்ட தருணத்தில் காந்திக்கு நோபல் பரிசளிக்காமைக்காக நோபல் குழு பொதுவருத்தத்தை பதிவுசெய்திருக்கிறது.
நோபல் பரிசுக்குழு பல விளக்கங்களை அளித்திருக்கிறது. சமீபத்தில் கூட மூலக்கடிதங்களை பரிசோதித்து காந்திக்கு வழங்கப்படாமைக்கான காரணங்களை ஆய்வாளார்கள் வெளியிட்டிருக்கிறார்கள். அவற்றில் இருந்து தெரியும் காரணம் முக்கியமாக காந்தியின் நோக்கங்கள் பற்றிய ஐயம் அன்றைய நோபல் குழுவிடம் இருந்தது என்பதே.
முதல்முறை காந்திக்கு நோபல் பரிசு பரிந்துரைக்கப்பட்டபோது கமிட்டி ஆலோசகர் ஜேக்கப் வாம் முல்லர் [Jacob Worm-Müller ] காந்தியின் செயல்பாடுகள் சீராக இல்லை என்று சொன்னார். அவர் ஒரு தேசியவாதி என்ற குற்றச்சாட்டு மீண்டும் மீண்டும் முன்வைக்கப்பட்டிருந்தது. அவர் மனிதகுலத்துக்காக போராடவிலலை, மாறாக ஒரு தேசத்துக்காக போராடுகிறார் என்றார்கள். முதல் உலகப்போருக்குப் பின் அன்று ஐரோப்பாவில் பொதுவாக தேசியவாதம் சிந்தனையாளர்களால் ஐயத்துடன் பார்க்கப்பட்டது. சர்வதேசவாதமே மனிதாபிமானம் மிக்கது என்று நம்பப்பட்டது.
காந்தி பேசிக்கொண்டிருந்தது சர்வதேசியவாதமே என்பதை அவர்களால் உணர முடியவில்லை. காந்தி அந்த இலட்சியத்தின் சோதனைக்களமாகவே இந்தியாவை கண்டார். ஆனால் ஐரோப்பியர் காந்தியின் போராட்ட காலகட்டத்தில் நிகழ்ந்த சிறு வன்முறைகளுக்கு காந்தியின் போராட்டம் காரணம் என நினைத்தார்கள். சௌரி சௌரா வன்முறையை மிகைப்படுத்தி அது காந்தி ‘உருவாக்கியது’ என்றார்கள். இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தால் பிரிட்டிஷார் மீதும் இஸ்லாமியர் மீது வன்முறைகள் நிகழும் என ஐரோப்பிய எதிர்பார்த்தார்கள்.ஆகவே நோபல் பரிசை தவிர்த்தார்கள்.
பின்னர் சுதந்திரம் கிடத்தபோது நிகழ்ந்த தேசப்பிரிவினைக்கும் வன்முறைக்கும் காந்தியைப் பொறுப்பாக்கும் மனநிலை அவர்களுக்கு இருந்தது. 1947ல் காந்தியை நோபல்பரிசுக்கு பரிந்துரைத்தபோது நோபல் பரிசின் ஆலோசகராக இருந்த ஜென்ஸ் சேய் [ Jens Arup Sei ] அந்த ஐயத்தை ஏற்றுக்கொண்டார். பொதுவாக காந்திமேல் ஐயங்கள் பல்வேறு தரப்பினரால் எழுப்பப்பட்டபோது அதை அப்படியே ஏற்கும் மனநிலையில் நோபல் குழு இருந்தது என்பதே உண்மை
கடைசியாக இன்னொரு ஐயம் உருவாக்கப்பட்டது. பாக்கிஸ்தான் அரசு அங்குள்ள இந்துக்கள் தாக்கப்பட்டு கொன்றுகுவிக்கப்பட்டபோது நடவடிக்கை ஏதும் எடுக்காமல் இருந்தது- மறைமுக ஆதரவும் அளித்தது. அதை அன்றைய அமெரிக்க ஊடகங்கள் பதிவுசெய்திருக்கின்றன. இந்நிலையில் ஒரு பிரார்த்தனைகூட்டத்தில் காந்தி பாகிஸ்தான் அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இந்தியா பாகிஸ்தான் போருக்கே அது வழிவகுக்கும் என்றும் அது மேலும் பேரழிவுகளை உருவாக்கும் என்றும் சொன்னார்.
உண்மையில் அது அன்று பட்டேலின் நோக்கமாக இருந்தது. பட்டேலை அதற்காக காந்தி கண்டித்தார். பட்டேல் காந்தியை முழுமையாக தவிர்த்தார். காந்தியின் அந்த பேச்சு அவரது கவலையை வெளிப்படுத்துவது. அவரது கடைசி உண்ணாவிரதமும் பட்டேலை வழிக்க்குக் கொண்டுவருவதற்காகவே. அவர் கொலையுண்டதும் அந்த போராட்டம் மூலம் அவர் பட்டேலை கட்டுப்படுத்திய ‘குற்றத்து’க்காகவே.
ஆனால் காந்தியின் அந்த உரையை ‘பாகிஸ்தானுக்கு எதிராக காந்தியின் ராணுவ மிரட்டல்’ என்று டைம் இதழ் செய்தியாக்கியது. அதை காந்தியின் நோக்கம் குறித்த ஐயமாக ஆக்கினார்கள் அன்றைய நோபல் குழுவின் ஆலோசகர்களான ‘ராஜதந்திரி’களான மார்ட்டின் டிராம்மேல் [ Martin Tranmæl] மற்றும் பிகர் பிராட்லாண்ட் [ Birger Braadland ].. நோபல்குழு அதை ஏற்றதனால் மூன்றாம் முறையாக காந்திக்கு விருதளிப்பது தவிர்க்கப்பட்டது.
காந்தியை கிட்டத்தட்ட இந்தியாவின் அதிபர் என்றே சித்தரித்தார்கள் சில மேலை ஊடகவியலாளர்கள். காந்தியிடம் நோபல் குழு சார்பில் விளக்கம் கேட்கப்பட்டதும் நான் பேசுவதும் செய்வதும் வெளிப்படையானவை என்று சொல்லிவிட்டார். தன் பேச்சு முழுமையாக வெளியிடப்படவில்லை என்றும் சொன்னார், மேலதிக விளக்கம் கொடுக்கவில்லை. சுதந்திர இந்தியாவில் நிகழ்ந்த வகுப்புவாதக்கலவரத்தால், பட்டேலின் போக்கால் மிக மனமுடைந்து இருந்த காந்திக்கு நோபல் பரிசு ஒரு பொருட்டாகப் படவில்லை.
பின்னர் காந்தியின் புகழ்பெற்ற கடைசி உண்ணாவிரதமும் அவர் கொல்லப்பட்டதும் அவரது மனநிலையையும் இந்தியாவின் அன்றைய சூழலையும் உலகுக்குக் காட்டியது. காந்திக்குப் பதிலாக 1946ல் எமிலி கிரீன் பால்ச் என்ற அம்மையாருக்கும் 1947ல் கிறித்தவ சேவைநிறுவனமான குவாக்கர்ஸ் அமைப்புக்கும் நோபல்பரிசு அளிக்கப்பட்டது. அவர்களே அவ்வருடம் காந்திக்கு விருதளிக்கவேண்டும் என்று சிபாரிசு செய்தார்கள். இம்முறை எந்த ஐயமும் அவர்மேல் இருக்கவில்லை. அவர் மானுடத்தின் மகத்தான மனிதர்களில் ஒருவர் என்று பொதுவாக ஏற்கப்பட்டது.
ஆனால் அவர் இறந்துவிட்டிருந்தார். நோபல் பரிசு இறந்தவர்களுக்கு அதுவரை அளிக்கப்படவில்லை. ஆனால் அளிக்கப்படக்கூடாது என்று விதி ஏதும் இல்லை. மேலும் காந்தியின் மரணம் அவரது கொள்கைக்காக நிகழ்ந்த ஒன்று. ஆகவே காந்திக்கு அவ்வருடம் விருதளிக்கப்படலாம் என்ற நிலை நிலவியது. இம்முறை நோபல் குழு புதிய தடையை கண்டுபிடித்தது. காந்தி எந்த அமைப்பையும் சார்ந்தவரல்ல. தன் வாரிசாக சொத்துக்கள் எதையுமே அவர் விட்டுச் செல்லவில்லை. அவரது கொள்கை வாரிசுகள் எவருமில்லை. ஆகவே பரிசுத்தொகையை யாரிடம் கொடுப்பது என்பது சிக்கல். எனவே அவருக்கு விருது தரத் தேவையில்லை என்றார்கள்.
இந்தமுடிவின் அபத்தம் அப்போதே சுட்டிக்காட்டப்பட்டுவிட்டது. காந்தி உருவாக்கிய இந்தியன் ஒப்பினியன் இதழை மணிலால் காந்தி தென்னாப்ரிக்காவில் நடத்திக்கொண்டிருந்தார். ஆப்ரிக்க இனவெறிக்கு எதிரான போராளியாக அவர் விளங்கினார். அவர் காந்திக்கு எல்லா வகையிலும் வாரிசு. எந்த தலைவருக்கும் அப்படி ஒரு வாரிசு அமைந்ததில்லை. காந்தி உருவாக்கிய சபர்மதி ஆசிரமம் அவரது இன்னொரு மகன் ராம்தாஸால் சொந்தசெலவில் நடத்தப்பட்டு வந்தது. மணிலாலுக்கு காந்தியின் வாரிசாக நோபல் பரிசு கொடுக்கப்பட்டிருந்தால் அது தென்னாப்ரிக்க சுதந்திரப்போராட்டத்துக்கு மாபெரும் ஊக்கமாக அமைந்திருக்கும். ஆனால் நோபல் பரிசுக்குழு அதை தவிர்த்தது.
காந்திக்கு விருது கொடுக்கப்படாமைக்கு இந்த ‘நியாயமான’ விவாதங்களே காரணம் என்றும், பிரிட்டிஷ் அரசை நோபல் குழு அஞ்சியதனால் அல்ல என்றும் சிலர் இன்று சொல்கிறார்கள். ஆனால் உண்மையில் அந்த விவாதங்களே ஆழமான முன்முடிவுகளினால் ஆனவை என்பதே உண்மை. காந்தியை அன்று ஐரோப்பிய காலனியாதிக்க நாடுகள் அனைத்துமே அஞ்சின. இதில் சுவீடனும் அடங்கும். உலகப்போர் முடிந்தபின்னர் உலகமெங்கும் காலனிநாடுகளில் சுதந்திர எண்ணம் எழுந்தது. அதற்கு காந்தி ஒரு மாபெரும் தூண்டுதலாக இருந்தார்.
மேலும் அன்று சுதந்திட எண்ணம் எழுந்திருந்த ஆப்ரிக்க நாடுகளில் அறியப்பட்டவராகவும் அவர் இருந்தார். ஆகவே காந்தியை அந்த தருணத்தில் முக்கியப்படுத்தி உலகின் முன் நிறுத்த வேண்டியதில்லை என பொதுவாகவே காலனியாதிக்க ஐரோப்பா எண்ணியது. அவ்வெண்ணத்தையே நோபல் குழு பிரதிபலித்தது. மற்றபடி காந்தி பற்றிய விவாதங்களை எல்லாம் ஓரிரு நாளில் எளிதில் அவர்கள் தெளிவுபடுத்திக்கொண்டிருக்க முடியும்.
நோபல் பரிசில் என்ன இருக்கிறது? காந்திக்கு நோபல் பரிசு கொடுக்கப்படாமல் பதிலுக்குக் கொடுக்கப்பட்ட பரிசுகளைப் பெற்றவர்கள் எவராவது வரலாற்றில் பேசப்படுகிறார்களா என்ன? நோபல் பரிசு என்பது ஒரு போராளியை உலகம்முழுக்க தெரியவைப்பதற்கு உதவுகிறது. வாங்காரி மாதாய் போன்றவர்களை நாம் மற்றபடி அறிந்திருக்கப்போவதில்லை. ஆனால் காந்தி இயல்பாகவே உலகைக் கவர்ந்தவர். அவருக்கு நோபல் பரிசு தேவையில்லை.
ஆனால் பின்னர் அந்தக் குற்றவுணர்ச்சி நோபல் அமைப்பை பீடித்தது. காந்தியின் இறப்புக்கு பின்னர் காந்தியம் உலகம் முழுக்க செல்வாக்கு பெற்று இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் அரசியல்தரிசனமாக வளர்ச்சி பெறுவதை அவர்கள் கண்டார்கள். அதன் பின் இன்று வரை அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்களில் பெரும்பாலானவர்கள் காந்திய வழிகளை கடைப்பிடித்தவர்களே. இப்போது நோபல் பரிசு பெற்றுள்ள சீன போராளி லீயு ஸீயா வரை. நோபல்குழுவே ஒப்புக்கொண்டபடி பிறகு வந்த பல அமைதிப்பரிசுகள் காந்திக்கும் சேர்த்து அளிக்கப்பட்டவையே
ஜெ
http://nobelprize.org/nobel_prizes/peace/articles/gandhi/
More Info :http://www.jeyamohan.in/?p=8660
No comments:
Post a Comment