ஜே. கிருஷ்ணமூர்த்தி (தமிழாக்கம்: பி.கே. சிவகுமார்)
எதிரேயிருந்த வெள்ளைச் சுவரின் மீது வெயில் விழுந்து பிரகாசித்துக் கொண்டிருந்தது. அதன் கண் கூசுகிற வெளிச்சத்தில், அங்கே இருந்தவர்களின் முகங்கள் தெளிவற்றும் மங்கலாகவும் தெரிந்தன. தாயின் அனுமதியோ, வழிகாட்டலோ இல்லாமல், ஒரு சிறு பெண் குழந்தை என் அருகே வந்து அமர்ந்து கொண்டார். பின், அக்குழந்தை விரிந்த கண்களுடன், 'இங்கே என்ன நடக்கிறது ' என்கிற வினா கலந்த ஆச்சரியத்துடனும் சுற்றுமுற்றும் பார்த்தார். அவர், புதிதாய் நீராடி, நல்லுடையுடுத்தி, சிகையில் மலர்கள் சூடி, மிகவும் அழகாய் இருந்தார். எல்லாக் குழந்தைகளையும் போலவே, சுற்றி நடப்பதையெல்லாம் உன்னிப்பாய்க் கவனித்துக் கொண்டும், ஆனால் எதையும் மனதில் பதிய வைத்துக் கொள்ளாமலும் இருந்தார். ஒளி படைத்த அவர் கண்கள் - அழுவதா, சிரிப்பதா, மகிழ்வுடனும் விளையாட்டுணர்வுடனும் குதிப்பதா என்று - என்ன செய்வது என்பதறியாமல் யோசித்தன. மாறாக, அவர் என் கையை எடுத்து, உள்ளங்கையையும் விரல்களையும் சுவாரஸ்யமான ஆர்வத்துடன் பார்க்க ஆரம்பித்தார். சிறிது நேரத்தில், தன்னைச் சுற்றி இருந்தவர்களையும், தன்னையும் மறந்தவராய், ஓய்வாக என் மடியில் தலைவைத்துத் தூங்க ஆரம்பித்தார். அவர் சிரம் அழகான வடிவுடனும், நேர்த்தியாகவும் இருந்தது. குறையேதும் இல்லாத தூய்மையும், அழகும் கொண்டவராய் இருந்தார் அப்பெண் குழந்தை. ஆனால், அந்த அறையிலிருந்த மற்றவர்களைப் போலவே, அக்குழந்தையின் எதிர்காலமும், குழப்பமானதாகவும், துன்பமயமானதாகவும் இருக்கும். அக்குழந்தைக்கு நேரப்போகும் முரண்பாடுகளும், துயர்களும் - எதிரே இருந்த சுவரின் மீது விழுந்து கொண்டிருந்த வெயில் போல - தவிர்க்க இயலாதவை. ஏனெனில், அவர் பெறப்போகும் கல்வியும், அவரை ஆட்கொள்ளப் போகும் தாக்கங்களும் - வேதனையிலிருந்தும், வலியிலிருந்தும், துயர்களிலிருந்தும் விடுதலைப் பெறத் தேவையான நுண்ணறிவு அவருக்குக் கிடைக்காவண்ணம் தடுத்துவிடும். புகையில்லாத தீயின் சுடர் போன்ற அன்பு, இவ்வுலகில் மிகவும் அரிதானது. அன்பு என்று நாம் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிற புகையே - நாம் மூச்சடைத்துத் திணறும்படி, சர்வசக்தியுடன் - எங்கும் கவலையையும், கண்ணீரையும் கொண்டுவருகிறது. அந்தப் புகையினூடே தீச்சுடர் தெரிவதில்லை. புகையானது எங்கும் விரவி வியாபிக்கும்போது, தீயின் சுடர் அணைந்து போகிறது. அன்பு என்கிற தீச்சுடர் இன்றி வாழ்க்கை மழுங்கியும் சோர்ந்தும் போகிறது. அன்பெனும் சுடரின்றி, வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லை. ஆனால், இருள் சூழ்ந்த புகையினூடே, தீயின் சுடர் இருக்கவோ, நிலைக்கவோ இயலாது. புகையும் சுடரும் இணைந்தும் பிணைந்தும் வாழ இயலாது. தெளிந்த தீச்சுடர் ஒளியுமிழ, புகை நிறுத்தபப்ட வேண்டும். இப்படிச் சொல்கிற காரணத்தால், தீச்சுடரானது புகைக்கு எதிரி இல்லை. தீச்சுடருக்கு எதிரிகள் இல்லை. புகையானது தீச்சுடர் அல்ல; அங்ஙனமே, புகையானது சுடரின் இருப்பைச் சொல்கிற அடையாளமும் அல்ல. ஏனெனில், புகையிலிருந்து முற்றிலும் விடுபட்டதே சுடராகும்.
'அன்பும் வெறுப்பும் இணைந்திருக்க இயலாதா ? பொறாமையானது அன்பினைச் சொல்லுகிற அடையாளம் தானே! நாம் கைகோத்து மகிழ்கிறோம்; அடுத்த நிமிடமே வசவுகள் பகிர்கிறோம்; கடுமொழிகளால் பரஸ்பரம் சுட்டுக் கொள்கிறோம்; ஆனால், விரைவிலேயே எல்லாம் மறந்து, ஆரத் தழுவி ஆலிங்கனம் செய்து கொள்கிறோம். நாம் சண்டையிடுகிறோம்; பின்னர் முத்தமிட்டு சமரசமும் சமாதானமும் ஆகிவிடுகிறோம். இவையெல்லாம் அன்பும், அன்பின் சமிக்ஞைகளூம் இல்லையா! பொறாமை என்பதே அன்பினை வெளிப்படுத்தப் பிறக்கிற ஒரு மொழிதானே! இருளும் ஒளியும் போல, பொறாமையும் அன்பும் ஒன்றுடன் ஒன்று பிண்ணிப் பிணைந்ததுதானே! துரிதமான கோபமும், இச்சை மொழிகள் நிறைந்த கொஞ்சலும் அன்பின் முழுமை இல்லையா ? வெள்ளம் பெருக்கெடுத்து, முரட்டுத்தனமாய்ப் பாய்கின்ற ஆறுதான், சலனமின்றி நடக்கின்ற நதியாகவும் இருக்கிறது. இரவில், நிழலில், ஒளியில் என்று எந்தச் சூழலில் பாய்ந்தாலும், நடந்தாலும் அது நதிதானே! இவையெல்லாம் தானே நதியின் இயல்பும் அழகும் ஆகும்! '
அன்பு என்றும் நேசம் என்றும் நாம் அழைக்கிறோமே, அதுதான் என்ன ? இந்தப் பொறாமையும், காமமும், கடுமொழிகளும், கொஞ்சலும், கைகோத்துக் கொள்ளுவதும், பிணங்கிச் சண்டையிடுவதும், பின்னர் இணங்கிச் சமரசம் ஆகுவதும் நிறைந்த தளமும் புலமும் தானா அன்பு ? அன்பு என்கிற பெயரால், நாம் செய்கிற நிஜங்களும், செய்கைகளும் இவை. கோபமும், கொஞ்சலும் - அன்பு என்கிற புலத்தில் - நிதந்தோறும் நாம் காணுகிற நிதர்சனங்கள். கோபமும் கொஞ்சலும் சார்ந்த பல்வேறு வகைப்பட்ட செய்கைகளுக்கிடையே ஓர் உறவையும் தொடர்பையும் உருவாக்க நாம் விரும்புகிறோம். அல்லது, இத்தகைய செய்கைகளை ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டுப் பொருள் காண முயல்கிறோம். ஒரு தளத்தில் நிகழ்கிற ஒரு செய்கையை வைத்து, அதே தளத்தில் நிகழ்கிற மற்றொரு செய்கையை கண்டிக்கவோ, நியாயப்படுத்தவோ முயல்கிறோம். அல்லது, ஒரு தளத்தில் நாம் காணுகிற நிதர்சனத்தோடு, அதே தளத்திலோ, அத்தளத்திற்கு அப்பாற்பட்டோ இருக்கிற மற்றொரு நிதர்சனத்தைத் தொடர்புறுத்தி இரண்டுக்குமிடையே ஒரு பொது உறவினை உண்டாக்க முயற்சிக்கிறோம். ஒவ்வொரு செய்கையையும், ஒவ்வொரு நிஜத்தையும் தனித்தனியே எடுத்து ஆராயாமல், அவற்றுக்கிடையே ஒரு பரஸ்பர உறவினையே நாம் உருவாக்க விரும்புகிறோம். நாம் ஏன் அப்படிச் செய்கிறோம் ? அதே தளத்திலோ, அத்தளத்திற்கு அப்பாற்பட்டோ உள்ள மற்றொரு செய்கையை ஊடகமாகப் பயன்படுத்தாத போதே, ஒரு செய்கையை, அந்தச் செய்கையின் நிஜப் பொருளை நம்மால் புரிந்து கொள்ள முடியும். அதே புலத்திலோ, அதற்கு அப்பாற்பட்டோ உள்ள மற்றொரு செய்கையை, புரிந்து கொள்வதற்கான ஊடகமாகப் பயன்படுத்தும்போது, அது முரண்பாடுகளையும், குழப்பத்தையுமே உருவாக்குகிறது. ஆனாலும், நாம் ஏன் ஒரு தளத்தின் பெயரால், பல்வேறு செய்கைகளையும் அவற்றின் நிஜத்தையும் ஒப்பிட்டுக் கொண்டிருக்கிறோம் ? ஒரு செய்கையின் முக்கியத்துவத்தை வைத்து, மற்றொரு செய்கையை விளக்கவோ, ஈடு செய்யவோ ஏன் முயல்கிறோம் ?
'நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதைக் கிரகித்துக் கொள்ளத் தொடங்குகிறேன். ஆனால், நாம் ஏன் அப்படிச் செய்கிறோம் ? '
நாம் ஒரு செய்கையை, அதன் உண்மையை, எண்ணம் என்கிற திரைமூலமாகவோ, நினைவு என்கிற வடிகட்டி மூலமாகவோ புரிந்து கொள்கிறோமா ? உங்களுடன் கைகோத்துக் கொண்டிருந்த காரணத்தால், நான் பொறாமையைப் புரிந்து கொள்கிறேனா ? பொறாமை நிஜமானது என்பது போல, உங்களுடன் கைகோத்துக் கொண்டிருந்ததும் நிஜம். ஆனால், பொறாமையையும், அதன் இயக்கத்தையும் உங்களுடன் கைகோத்துக் கொண்டிருந்ததை நினைவில் வைத்திருக்கிற காரணத்தால் நான் புரிந்து கொள்கிறேனா ? நினைவானது புரிந்து கொள்வதற்கான உபகரணமா ? நினைவு ஒப்பிடுகிறது; நினைவு மாறுகிறது; நினைவு மாற்றுகிறது; நினைவு கண்டிக்கிறது; நினைவு நியாயப்படுத்துகிறது; நினைவு அடையாளம் காணுகிறது; ஆனால், நினைவு எதையும் புரிந்துகொள்வதற்கு உதவ முடியாது. அன்பு என்கிற தளத்தில் நம்முடைய செய்கைகளையும், அவற்றின் நிஜத்தையும் முன்னறுதியிட்ட எண்ணங்களுடனும், முடிவுகளுடனுமே நாம் அணுகுகிறோம். பொறாமையை, எந்த முன்முடிவும் இன்றி, அதன் இயல்பில் எடுத்துக் கொண்டு நாம் அமைதியாகக் கூர்ந்து கவனிப்பதில்லை. ஆனால், பொறாமையை, பொறாமை சார்ந்த செய்கையை, நம்முடைய வசதிக்கும், முடிவுக்கும் ஏற்ப திரித்துப் பொருள் காண விரும்புகிறோம். பொறாமையை, அதன் இயக்கத்தை, நிஜத்தை நாம் புரிந்து கொள்ள விரும்பாததே, நம்மின் இந்த அணுகுமுறைக்குக் காரணம் ஆகும். ஏனெனில், பொறாமை உண்டாக்குகிற கிளர்ச்சியும், எழுச்சியும் கூட கொஞ்சலால் பிறக்கின்ற கிளர்ச்சிக்கும் எழுச்சிக்கும் சமம்; ஆனால், பொறாமையினால் பிறக்கின்ற கிளர்ச்சியானது, பொறாமை கொண்டுவருகிற வலியும், அசெளகரியமும் இல்லாமல் இருக்க வேண்டும் என்றும் நாம் விரும்புகிறோம். அதனால், அன்பு என்கிற தளத்திலே, முரண்பாடுகளூம், குழப்பமும், பகையும் பிறக்கிறது. எனவே, அன்பானது என்ன ?அன்பானது ஓர் எண்ணமா, பாவனையா, கிளர்ச்சியா, தூண்டுதலா அல்லது பொறாமையா ?
'உண்மையானது மாயையையும் சேர்த்தது தானே! இருளானது தன்னுள்ளே ஒளியை உள்ளடக்கியதுதானே! நம்முடைய கடவுளர்கள் கூட இத்தகைய செய்கைகளால்தானே தளைக்கப்பட்டுள்ளனர் ? '
இவையெல்லாம், செல்லத்தகாத, வெறும் எண்ணங்களும், அபிப்ராயங்களூம், தீர்மானங்களுமே ஆகும். இத்தகைய எண்ணங்கள், உண்மைநிலையை உள்ளடக்குவதோ, வெளிப்படுத்துவதோ இல்லையாதலால், பகையையே வளர்க்கின்றன. வெளிச்சம் இருக்கிற இடத்திலே இருள் இல்லை. இருளானது ஒளியை ஒளித்து வைக்க இயலாது. இருளானது ஒளியை உள்ளடக்கியது என்று சொன்னால், அங்கே வெளிச்சமே இல்லை என்று பொருள். பொறாமை இருக்கிற இடத்திலே அன்பு இல்லை. முனஅறுதியிட்ட என்ணங்களும், அபிப்ராயங்களூம், அதனால் பிறக்கிற செய்கைகளும், அன்பினை உள்ளடக்கவோ, வெளிப்படுத்தவோ முடியாது. பகிர்ந்து கொள்வதற்கு உறவு மிக அவசியமாகிறது. அன்பானது எந்த எண்ணத்தையும், அபிப்ராயத்தையும் சார்ந்தது அல்ல; எனவே, முன்னறுதியிட்ட எண்ணங்களோ, அபிப்ராயங்களோ அன்பைப் பரிமாறிக்கொள்ளவோ, பகிர்ந்து கொள்ளவோ உதவாது. புகையற்ற, தெளிந்த தீச்சுடரே அன்பாகும்.
(மூலம்: வாழ்க்கை குறித்த விமர்சனங்கள் - தொகுப்பு: 1 - ஜே. கிருஷ்ணமூர்த்தி [Commentaries on Living - Volume: I - J. Krishnamurthi])
No comments:
Post a Comment