தகவல் தொடர்பு(Communication) என்பது ஒருவர் தமது கருத்துக்களை, தமது தேவைகளை பிறருக்கு அறிவிப்பது ஆகும். ஆராய்ச்சிகள் பல, விலங்குகள், பறவைகள், ஏன், மரம் செடி கொடிகள் கூட தகவல்களைத் தமக்குள் பரிமாறிக்கொள்கின்றன என்று கூறுகின்றன. ஆனால், மனித இனமானது பேசவும் எழுதவும் மொழியைப் பயன்படுத்துவதன் மூலம் தகவல் தொடர்பின் உயரிய நிலையில் உள்ளது. இருந்தாலும், ஒருவருக்கொருவர் நேர்முகமாகப் பேசுகையில் நமது அடிப்படைத் தகவல் தொடர்பு சாதனம் உடல் மொழியே(Body Language) ஆகும். அது மட்டுமல்ல, ஒவ்வொரு நாட்டினரும் பேசும் மொழி மாறுபடலாம். ஆனால் உடல் மொழி பொதுவாக மனித இனம் முழுவதற்குமே பொதுவானது. பசிக்கிறது என்பதற்கு வயிற்றைச் சுட்டிக்காட்டினாலும், போதும் என்பதற்குக் கையை உயர்த்திக்காட்டினாலும் எல்லாருமே புரிந்துகொள்ளலாம்தானே.
நாம் பேசவும் எழுதவும் பல மொழிகளைப் பயன்படுத்துகிறோம். ஆனால் ஒருவருடன் நேரில் பேசுகையில், தகவல் தொடர்பினைச் செயல்படுத்துவதில் நாம் பேசும் வார்த்தைகளின் பங்கு, அதாவது பேசும் மொழியின் பங்கு எவ்வளவு தெரியுமா? வெறும் ஏழே சதவீதம்தான். ஏறத்தாழ முப்பத்து எட்டு சதவீதம் பங்கு நாம் பேசும் தொனிக்கு (அதாவது குரலில் ஏற்படும் மாறுபாட்டிற்கு-Vocal). ஒருவர் மகிழ்ச்சியாக இருக்கிறாரா அல்லது வருத்தமாகவோ கோபமாகவோ இருக்கிறாரா என்பதை அவர் குரலை தொலைபேசியில் கேட்டால் கூட நம்மால் உணர முடியுமல்லவா?
தகவல் தொடர்பில் மீதம் ஐம்பத்து ஐந்து சதப் பங்கினை வகிப்பது நமது உடல் மொழி ஆகும். ஒருவர் முகத்தினை, அவர் அமர்ந்திருக்கும் விதத்தை, வைத்து அவரது மனநிலையை நாம் கணிக்கிறோம்தானே? அதிலும் உடல்மொழியில், குறிப்பாகக் கண்பார்வையின் பங்கு மிக அதிகம். ஒருவர் கண்ணைப் பார்த்தே அவரது உணர்வைப் புரிந்துகொள்ளலாம் என்பார்கள். அதைப் பார்த்துப் புரிந்துகொள்ள எதிராளிக்குக் கண் அவசியமல்லவா? இதிலிருந்து நாம் அறிந்துகொள்வது என்னவென்றால் தகவல் தொடர்பில் பெரும்பங்கினை, அதாவது தொண்ணூற்று மூன்று சதவீதப் பணியினை, உடல்மொழி மற்றும் குரல்தான் வகிக்கிறது. எனவே,அத்தகைய உடல் மொழியை நாம் புரிந்துகொள்வதும், நமது உடல் மொழியினை நேர்மறையானதாகவும், செம்மையானதாகவும் மாற்றிக்கொள்வதும் தகவல் தொடர்பில் நாம் வெற்றிபெற அவசியமாகிறது.
இதைத் திருவள்ளுவர் எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்பே உணர்ந்துள்ளார் என்பதை 'குறிப்பறிதல்' (பொருட்பால்) என்ற அதிகாரமும், அதில் உள்ள குறள்களும் தெரிவிக்கின்றன.
'குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்
என்ன பயத்தவோ கண்' (குறள்- 705) என்ற குறளில், பிறரது முகத்தைக் கண்டு அவரது உள்ளக் குறிப்பினை அறிய இயலாதவருக்குக் கண் என்ற ஒரு உறுப்பு இருந்து என்ன பயன் என்று கேட்கும் திருவள்ளுவர், தமது அடுத்த குறட்பாவில்
'அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்'. (குறள் -706) என்று உடல் மொழியில் முக்கியப் பங்கு வகிக்கும் முகத்தினைப் பற்றிக் கூறுகிறார். (பொருள்- தன்னை அடுத்திருக்கும் பொருளை, பக்கத்தில் இருக்கும் பொருளைக் காட்டும் கண்ணாடி போல், மனம் நினைப்பதை வெளிக்காட்டக்கூடியது முகமாகும்)
மேலும் ஒருவனது மனநிலையை, அவன் மகிழ்ச்சியுடன் இருக்கிறானா, வெறுப்புடன் இருக்கிறானா என்பதைக் காட்டும் அளவுகோல் முகமே என்பதை
'முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்
காயினும் தான்முந் துறும்.'
என்ற தமது 707ம் குறளில் கூறுகிறார் அவர்.
உடல் மொழியில் கண்ணின் பங்கே மிக அதிகம் என்பதையும் கீழ்க்கண்ட குறள்கள் மூலம் தெளிவாக்குகிறார் திருவள்ளுவர்.
'பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்
வகைமை உணர்வார்ப் பெறின்'
(குறள் 709; பொருள் - ஒருவன் நமக்குப் பகைவனா நண்பனா என்பதை, கண்ணின் தன்மை அறிந்தவர்களுக்கு எதிராளியின் கண்ணே கூறிவிடும்)
'நுண்ணியம் என்பார் அளக்குக்கோல் காணுங்கோல்
கண்ணல்லது இல்லை பிற'
(குறள் 710; பொருள் - கூரிய அறிவு படைத்தவர்கள், பிறரைக்குறித்து, பிறர் மனநிலை குறித்து அளவிடப் பயன் படுத்துவது கண்ணைத்தவிர வேறொன்று இல்லை)
உடல்மொழியின் சில கூறுகள்:
ஒருவரது அருகாமை அல்லது தொலைவு(Proximity), அவர் நிற்கும் விதம், கைகள் மற்றும் கால்களை அவர் வைத்திருக்கும் விதம்(Posture), முக பாவனைகள்(Facial Expressions), அவர் பார்வை(Eye contact) இவை எல்லாம் உடல் மொழியின் சில கூறுகள் ஆகும்.
ஒருவர் தமக்கு முன் பின் அறிமுகமற்றவரின் அருகில் நிற்கும்பொழுது அல்லது தமக்குப் பிடிக்காதவர் ஒருவருடைய அருகில் உள்ள இடைவெளியானது தமது நண்பர் அல்லது உறவினரது அருகில் இருக்கின்ற பொழுது உண்டாகும் இடைவெளியை விட அதிகமாக இருக்கும். மனத்தின் நெருக்கம் அதிகரிக்க அதிகரிக்க, இந்த இடைவெளி குறைவதுண்டு. இந்த இடைவெளி மிக நெருங்கிய உறவாகிய தாய்-மகன்/மகள், கணவன்- மனைவி இவைகளில் மிகமிகக் குறைவாக இருக்கும். அதே போல் உயரதிகாரியின் அருகில் அவரின் கீழ் பணிபுரிபவர் நிற்பதற்கும், தமது சக ஊழியர் அருகில் நிற்பதற்கும் மிகுந்த வேறுபாடு காணப்படும். இந்த அருகாமை அல்லது தொலைவு இருவருக்கிடையே உள்ள அன்பின் நெருக்கத்தையோ, அல்லது ஒருவரது பதவி, அந்தஸ்து வேறுபாடுகளையோ சுட்ட வல்லது.
நிற்கும்/அமரும் விதம்: ஒருவர் நம் பேச்சை ஆர்வத்துடன் கேட்கிறாரா என்பதை அவர் நிற்கும் அல்லது அமரும் விதத்தில் இருந்தும், அவர் கைகளை வைத்திருக்கும் நிலையில் இருந்தும் அறிய இயலும். ஒருவர் முன்னோக்கியோ, பக்க வாட்டிலோ சாய்ந்து அமர்ந்துகொண்டு, நமது கண்களைக் கவனிப்பாராயின் அவர் நமது பேச்சை இரசிக்கிறார் என்று பொருள் கொள்ளலாம். அவர் பின்புறம் சாய்ந்துகொண்டும், பார்வையை வேறு எங்கோ நிலைக்கவைத்தும், அல்லது அமர்ந்திருக்கும் நிலையை அல்லது நிற்கும்பொழுது கால்களை அடிக்கடி மாற்றிக்கொண்டும் நின்றால் அவர் நமது பேச்சினால் கவரப் படவில்லை, சலிப்படைந்துவிட்டார் என்று புரிந்துகொள்ளவேண்டும். அதே போல், கைகளைக் கட்டிக்கொண்டு விறைப்பாக நிற்பாரானால் நமது கருத்தினை அவர் ஒப்புக்கொள்ளவில்லை என்று அர்த்தம்.
முக பாவனைகள்: ஒருவர் முகத்தில் இருக்கும் புன்னகை, புருவத்தை வைத்திருக்கும் விதம், உதடுகளை மூடியிருக்கும் தன்மை இவை அவரது மனநிலையைத் தெளிவாகக்கூற வல்லவை. புன்னகையைப் பார்த்தே அது மகிழ்ச்சியில் உண்டான புன்னகையா, கேலிப்புன்னகையா அல்லது துயரத்தாலோ வெறுப்பாலோ உண்டான புன்னகையா என்று இனம் பிரித்துவிட இயலும். அதே போல் புருவங்கள் நெறிவது சினத்தின் அடையாளமாகவும், புருவங்களை உயர்த்துவது வியப்பின் அடையாளமாகவும், முகத்தைச் சுளிப்பது அருவருப்பின் அடையாளமாகவும் இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே!
கண்கள்: கண்களை முகத்தின் வாயில் என்று சொல்வதுண்டு. ஒருவர் கண்ணை மட்டும் பார்த்தே அவர் கூறுவது உண்மையா பொய்யா என்று அறிய இயலும். அதனால்தான் யாராவது பொய் சொல்கிறார் என்று தோன்றுகையில் 'கண்ணைப்பார்த்துப் பேசு' என்கிறோம். ஒருவர் மற்றவர் கண்களைச் சந்திப்பதில் இருந்தே அவரது தன்னம்பிக்கை, நேர்மை இவற்றை உணர முடியும். ஒருவர் பேசுகையில் மற்றவர் கண்களைப் பார்ப்பதைத் தவிர்ப்பது எதிர்மறையாகக் கருதப் படுகிறது. பொய், விருப்பமின்மை, பதட்டம் இவற்றை அவை சுட்டுகின்றன. கேட்பவர் பேசுபவரின் கண்களைப் பார்ப்பதைத் தவிர்ப்பது ஆர்வமின்மை, சலிப்பு, பேசுபவர் மீது உள்ள கோபம் அல்லது வெறுப்பு முதலியவற்றைக் காட்டுகிறது.
இவ்வாறு உடல்மொழி உணர்த்தும் ஃபீட்பேக்கைத் தெரிந்து கொள்வோமானால், எதிராளியின் மன நிலையைப் புரிந்துகொண்டு தகவல் தொடர்பை மேற்கொள்ள முடியும். இதுவே நாம் தகவல் தொடர்பில் வெற்றி பெறச் சிறந்த வழி. தகவல் தொடர்பில் வெற்றி பெறுபவர் தனிப்பட்ட வாழ்விலும், தொழிலிலும் மேம்பாடு காண்பதும் உறுதி!!!தகவல் தொடர்பு(Communication) என்பது ஒருவர் தமது கருத்துக்களை, தமது தேவைகளை பிறருக்கு அறிவிப்பது ஆகும். ஆராய்ச்சிகள் பல, விலங்குகள், பறவைகள், ஏன், மரம் செடி கொடிகள் கூட தகவல்களைத் தமக்குள் பரிமாறிக்கொள்கின்றன என்று கூறுகின்றன. ஆனால், மனித இனமானது பேசவும் எழுதவும் மொழியைப் பயன்படுத்துவதன் மூலம் தகவல் தொடர்பின் உயரிய நிலையில் உள்ளது. இருந்தாலும், ஒருவருக்கொருவர் நேர்முகமாகப் பேசுகையில் நமது அடிப்படைத் தகவல் தொடர்பு சாதனம் உடல் மொழியே(Body Language) ஆகும். அது மட்டுமல்ல, ஒவ்வொரு நாட்டினரும் பேசும் மொழி மாறுபடலாம். ஆனால் உடல் மொழி பொதுவாக மனித இனம் முழுவதற்குமே பொதுவானது. பசிக்கிறது என்பதற்கு வயிற்றைச் சுட்டிக்காட்டினாலும், போதும் என்பதற்குக் கையை உயர்த்திக்காட்டினாலும் எல்லாருமே புரிந்துகொள்ளலாம்தானே.
No comments:
Post a Comment