Sunday, May 1, 2011

இந்திய ஞானமரபும் காந்தியும்


காந்தியின் சுயசரிதையான எனது சத்தியசோதனையில் ஓர் இடம் வருகிறது. மராட்டியமாநிலத்தில் இருக்கையில் ஒருமுறை அவருக்கு உடம்பு சரியில்லாமலாகிறது. அஜீரணமும் காய்ச்சலுமாக துன்பப்படுகிறார். அலோபதி மருத்துவம் மீது அவருக்கு நம்பிக்கை இல்லை. இந்நிலையில் அப்பகுதியில் யோகி என்று புகழ்பெற்றவரான ஒரு சாமியாரை அவருக்கும் மருத்துவம் பார்க்க அழைத்துவருகிறார்கள். அவர் சில மர்மமான வழிமுறைகளை பயன்படுத்தி சிகிழ்ச்சை அளிப்பதாக சொல்லப்படுகிறது
‘அவரைக் கண்டதுமே தெரிந்துவிட்டது, அவரும் என்னைப்போலவே ஒரு கிறுக்கு என்று’ என்று காந்தி பிரியத்துடன் எழுதுகிறார். சாமியாரின் வைத்தியமுறை விபரீதமானது. நெருப்பை பயன்படுத்தி குணப்படுத்துவதாக அவர் சொல்கிறார். பல முரட்டுத்தனமான வழிமுறைகளை அவர் கையாள்கிறார். அவை காந்திக்கு ஏற்புடையனவாக இல்லை. ஆகவே காந்தி அவரை மேற்கொண்டு தனக்கு சிகிழ்ச்சை அளிக்க வேண்டாமெனச் சொல்லிவிடுகிறார். நெருப்புசிகிழ்ச்சைக்குப் பதிலாக தன்னுடைய வழக்கமான மண்சிகிச்சைக்கே காந்தி திரும்பிச்செல்கிறார். கொஞ்சம் தாமதமானாலும் அது அவருக்கு உதவிகரமாக இருக்கிறது.
நெருப்புசிகிழ்ச்சையில் உள்ள வன்முறைதான் தனக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை என்கிறார் காந்தி. ஒருவன் தன் உடலிடமும்கூட வன்முறையை கடைப்பிடிக்கலாகாது என்பது அவரது எண்ணம். ஏனென்றால் உடலும் இயற்கையும் வேறு வேறல்ல. வன்முறை என்பது ஏதோ ஒருவகையில் இயற்கைக்கு மாறானது .
அவரது வழக்கமான மண் சிகிழ்ச்சை அவருக்கு பயன் அளித்தது. ஆனால் மிகமிக மெல்லத்தான் அதன் விளைவுகள் தெரியவந்தன. அதுவரை வலிகளைப்பொறுத்துக்கொண்டு அமைதியாகக் காத்திருக்க வேண்டியதுதான். எல்லா உயிர்களும் அதைத்தானே செய்கின்றன. பெரும்பாலான நோய்களை இயற்கையின் அடிப்படைக்கூறுகளான மண்ணுடனும் நீருடனும் காற்றுடனும் நேரடியாகத் தொடர்பு கொள்வதன் மூலமும் பொறுத்திருப்பதன் மூலமும் தீர்த்துக்கொள்ளலாமென காந்தி எண்ணினார். இந்த பூமியில் பல்வேறு வைத்திய முறைகள் மூலம் உருவாக்கப்பட்டுள்ள பல ஆயிரம் மருந்துக்கள் உண்மையில் நோய்க்கானவை அல்ல, வலிக்கானவை. வலியை தாங்கிக்கொள்ளவும் காத்திருக்கவும் மனிதன் தயாராக இல்லாத காரணத்தால் கண்டு பிடிக்கப்பட்டவை என்றார் காந்தி.
இயற்கையில் அவரசரமென்பதே இல்லை. அதன் அனைத்து மாற்றங்களும் கணக்கிட முடியாத ஏராளமான கூறுகளுடன் சம்பந்தப்பட்டிருக்கின்றன. அதன் ஒவ்வொரு அசைவும் எல்லைகளற்ற ஒரு வலையின் ஒரு கண்ணியின் அசைவு போன்றதே. இயற்கையென நாமறிந்தது ஒரு சில புள்ளிகளை, நம் அறிவுக்கு அப்பாற்பட்ட கணக்கற்ற புள்ளிகளின் முடிவின்மையே இயற்கை. ஆகவே அதன் அத்தனை சலனங்களும் பொருள் உள்ளவையே. நோயும் கூட இயற்கை நிலையே. ஆதலால் இயற்கையின் விரைவான மாறறம் என்பது இயற்கையை மீறுவது. அது எங்கோ இயற்கையின் சமநிலையை இல்லாமலாக்கும். இயற்கை எங்கோ திருப்பி தாக்கும்.
அதனால்தான் தன் சிகிழ்ச்சை முறைகளில் நிதானத்தை, சகித்துக்கொள்ளுதலை , கவனித்துக்கொண்டிருப்பதை ஒரு விதியாகவே காந்தி கருதினார். காந்தியின் வைத்தியமுறைகளைப்பற்றி நான் பாராட்டிப்பேச வரவில்லை. எனக்கு அவற்றில் முழு நம்பிக்கை வரவில்லை. அவை மூர்க்கமான நம்பிக்கையையே வழிமுறையாகக் கொண்டவை என்று எனக்கு படுகிறது. அதாவது நோய் குறித்த என் பயத்தை அவை தணிக்கவில்லை. ஆனால் காந்தியை அவரது வழிமுறை கைவிடவில்லை என்பதும் உண்மை. நான் இங்கே அவரது மருத்துவ நோக்கை அவரது உலகப்பார்வையின் திட்டவட்டமான குறியீடாக முன்வைக்க விரும்புகிறேன்.
இந்திய அரசியலில் காந்தி நுழையும்போது இருந்த பெரும்போக்கு என்பது திலகரால் முன்வைக்கப்பட்டது. அதை நெருப்பின் வழி என்று சொல்லலாம். உடனடியான மாற்றத்துக்காக அறைகூவக்கூடியது. பொறுமையிழந்தது. காந்தி அதற்கு மாற்றான மண்ணின் வழியை இந்தியாவுக்கு அளித்தார். நமது மரபு மண்ணுக்கு அளித்துள்ள சொற்களில் சில மிக அற்புதமானவை. தரித்ரி, அனைத்தையும் தாங்கிக்கொள்பவள். சஹை, அனைத்தையும் சகித்துக்கொள்பவள். காந்தி காட்டிய வழி அவளுடையதுதான். மென்மை, பொறுமை, தாங்கிக்கொண்டு வென்று மேலே செல்லும் கனிவு. காந்தி சத்யாக்ரகம் என்று சொன்னது அதையே. அவரது கண்முன்னால் அது ஒவ்வொரு முறையும் வெற்றி பெற்றது. அவர் மறைந்த பின்னர் ஜனநாயக உலகின் ஒரே போராட்டமுறையாக மாறி இன்று உலகை ஆள்கிறது. கடந்த ஐம்பதாண்டுகளில் நாம் காந்திகளை பார்த்துக்கொண்டே இருக்கிறோம். லே வலேசாவில், மண்டேலாவில், ஆங் சான் சூகியில்…
அந்த வழியை காந்தி எங்கிருந்து பெற்றுக்கொண்டார்.? இந்திய ஞானமரபில் அதற்கு மூவாயிரம் வருட மரபுள்ளது. மகதிகோசாலனின் ஆசீவகத்தில் இருந்து நாம் அதை ஆரம்பிக்கவேண்டும். காந்தியின் பிரகடனம் போலவே ஒரு மகத்தான கவிதை நம் சங்கமரபில் உள்ளது. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர். தீதும் நன்றும் பிறர்தர வாரா’ என ஆரம்பிக்கும் அப்பாடலின் அத்தனை வரிகளையும் காந்தி வேறு சொற்களில் அவரும் சொல்லியிருக்கிறார்.
நான் ஆச்சரியமான ஒன்றை கவனித்தேன். மலையாளக் கவிஞர் வள்ளத்தோள் நாராயணமேனன் கிட்டத்தட்ட எண்பது வருடங்களுக்கு முன்னர் காந்தியை பற்றி ஒரு கவிதையை எழுதினார். ‘லோகமே தறவாடு..’ என ஆரம்பிக்கும் அக்கவிதை கணியன் பூங்குன்றன் கவிதை போலவே இருந்தது. அப்போது சங்கப்பாடல்கள் எவையும் மலையாளத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டதில்லை!ஆம், காந்தியைப் பற்றிய பேச்சு நேரடியாக ஆசீவகத்துக்கே வந்துசேர்கிறது!
காந்தியைப்பற்றி பேசும்போது அவரது எதிரியான வைஸ்ராய் லார்டு வேவல் அவரது ஆன்மீக வல்லமை என்பது அனைத்து மனிதரையும் அவர் தனக்கு நிகரானவராக நடத்தியதில்தான் இருந்தது என்கிறார். தன்னை விட தாழ்ந்தவர்களை மட்டும் அல்ல, அதிகாரத்திலும் பணத்திலும் புகழிலும் தன்னை விட மேலானவர்களையும்கூட முழுக்கமுழுக்க தனக்கு நிகரானவர்களாகவே நடத்தினார் காந்தி. ‘பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே’ என்ற வரி அவரது வாழ்க்கையாக இருந்தது.
கணியன் பூங்குன்றனின் பாடல் ஆசீவக மரபின் ஆன்மீகத்தை நேரடியாக முன்வைக்கும் கவிதை. தமிழகத்தில் ஆசீவகம் அக்காலத்தில் பெரும்செல்வாக்குடன் இருந்தது. ஆசீவகமும் சமணமும் இரட்டை மதங்கள். ஆசீவகம் பின்னர் சமணத்தால் உள்ளிழுக்கப்பட்டது. சமணம் இந்தியாவில் தழைத்தோங்கியிருந்த நிலங்களில் ஒன்று குஜராத். இன்றும்கூட குஜராத் சமணம் நனைந்த மண். காந்தியின் குடும்பம் சமண ச்சார்பு உடையது.
குஜராத்தின் வணிகர்கள் சமணர்களாகவே இருந்தார்கள். ஒருகட்டத்தில் அவர்கள் புஷ்டிமார்க்க வைணவத்துக்கு மாறினார்கள். ஆனாலும் சமண ஆன்மீகத்தையும் கூடவே வைத்துக்கொண்டார்கள். அக்கால இந்திய மத நம்பிக்கைகள் ஒன்றை ஒன்று நிராகரிப்பவை அல்ல. ஒருவர் குலதெய்வத்தையும் பெருந்தெய்வத்தையும் ஒரேசமயம் வைத்துக்கொள்வது போல் சமண பௌத்த மதங்களைச் சேர்ந்தவர்கள் இந்து நம்பிக்கைகளையும் பேணிக்கொண்டார்கள்
காந்தியின் அம்மா சமணசார்பு உடையவர். பேசாரி சுவாமி என்ற சமண துறவி அவரது குரு. காந்தியை வெளிநாட்டுக்கு அனுப்ப புத்லிபாய்க்கு அன்மதி கொடுத்தவர் அவரே. அவரிடம் சைவ உணவு , பிறமாதர் நாடாமை போன்ற வாக்குறுதிகளைப் அவரே பெற்றுக்கொண்டார். காந்தியின் ஆன்மீகம் என்பது முதன்மையாக அவரது அன்னையிடமிருந்து வந்தது.. ஆகவே அதன் அடிப்படைத்தளம் சமணமாகவே இருந்தது.
சமணத்தில் இருந்து காந்தி பெற்றுக்கொண்டவை சைவ உணவுப்பழக்கம், புலனடக்கம் போன்றவை மட்டும் அல்ல. வாழ்நாள் முழுக்க காந்தி அந்த நெறிகளை தனக்கும் பிறருக்கும் வலியுறுத்தி வந்தார். சமணத்தில் இருந்து அவர் பெற்றுக்கொண்ட முக்கியமான மூன்று தத்துவ தரிசனங்கள் உள்ளன. அவரே அவற்றைச் சொல்லியிருக்கிறார். ஒன்று, சமணத்தின் அனேகாந்தவாதம். உண்மைக்கு பலமுகம் இருக்க முடியும் என்பது சமணத்தின் கூற்று. முற்றிலும் முரண்படும் இரு தோற்றங்கள்கூட அதற்கு இருக்க கூடும். ஆகவே எந்த ஒரு தரப்பையும் இறுதியுண்மை என எடுத்துக்கொள்ளலாகாது என்று காந்தி கற்றுக்கொண்டார். அவரது உலகப்பார்வையின் அடிப்படைகளில் ஒன்றாகவே அது இருந்தது.
இன்னும் பெரிய தரிசனம் என்று காந்தியின் அகிம்சையைச் சொல்லலாம். சமணம் அகிம்சையையே தன் அடித்தளமாகக் கொண்ட மதம். இந்தியா என்ற பிரம்மாண்டமான நிலப்பரப்பு, பலகோடி மக்களையும் எண்ணித்தீரா பேதங்களையும் கொண்ட இந்த தேசம், வரலாறு தொடங்கும் காலகட்டத்தில் வேறெந்த நிலத்திலும் நிகழ்ந்தறியா அற்புதம் ஒன்றை சாத்தியமாக்கியது. மிகமிக குறைவான வன்முறையுடன் அது தன்னை ஒரு பெரும் சமூகமாக திரட்டிக்கொண்டது. அந்த வரலாற்றுப் பேரலைக்கு சமணம் அளித்த கொடை மகத்தானது. அகிம்சை என்ற சமண தரிசனம் இந்தியாவின் கோடானுகோடி மக்களுக்கு தீர்த்தங்காரர்கள் அளித்த ஆசி என்றே நான் நினைக்கிறேன்.
சமணத்தின் அகிம்சை என்பது கொல்லாமை மட்டும் அல்ல. அனைத்து தளங்களிலும் வன்முறையை தவிர்த்தல்தான் அது. நம்மைச்சூழந்த உலகை எப்போதும் கருணையுடன் அணுகுவதும் அதன் இயங்குமுறையுடன் முரண்படாது இணைந்து கொள்வதும்தான் அகிம்சை. காந்தி அதை தன் சமூகநோக்கில், அரசியலில், மருத்துவத்தில் அனைத்திலும் வளர்த்தெடுத்தார்.
மூன்றவாதாக காந்தி சமணத்தில் கண்டெடுத்த தரிசனம் என்பது தியாகம் என்ற ஆயுதம்தான். எந்த மனிதனின் ஆன்மாவுடனும் நேரடியாகச் சென்று பேசும் வல்லமை தியாகத்துக்கு உண்டு. ஆகவே அது ஒரு பெருவல்லமை கொண்ட ஆயுதம். பத்மநபபுரம் அரண்மனை அருங்காட்சியகத்தில் இரண்டாயிரம் வருடம் பழமை கொண்ட சில எல்லைக்கற்கள் உள்ளன. சங்க காலத்தைச் சேர்ந்தவை. அவற்றில் சங்க மன்னனாகிய ஆய் அண்டிரன் சமண முனிவர்களுக்கு அஞ்சினான் புகலிடம் அமைக்க நிலமளித்த செய்தி கல்வெட்டாக பொறிக்கப்பட்டுள்ளது.
அஞ்சினான் புகலிடம் என்பது சமனமுனிவர்களுக்கு உரிமைப்பட்ட நிலம். அதன் எல்லைக்கற்கள் அவை. அவற்றில் சமணசின்னங்களான முக்குடையும் பீலியும் இருக்கும். அந்த எல்லைக்குள் எவரும் எவரையும் கொல்ல கூடாது. கொன்றால் என்ன ஆகும்? அந்த சமண முனிவர்கள் அனைவரும் கொன்றவனின் வாசல்முன்னால் அமர்ந்து உண்ணா நோன்பிருந்து உயிர்துறப்பார்கள். அதற்கு சல்லேகனை அல்லது வடக்கிருத்தல் என்று பெயர். மாமன்னனாக இருந்தாலும் அந்தப்பழியில் இருந்து தப்ப முடியாது. அதன்பின் ஒருபோதும் அவனுக்கு அவன் குடிகளின் அங்கீகாரம் கிடைக்காது. அவன் அழியவேண்டியதுதான்.
காந்தி அவரது சாத்வீகப்போராட்டமுறையை சமண முனிவர்களிடமிருந்தே கற்றுக்கொண்டார். அவரது ஆயுதம் தியாகம். அவரது அதிகாரம் அறத்தாலானது. தான் நம்பும் ஒன்றுக்காக உயிர்துறக்க எப்போதும் அவர் தயாராக இருந்தார். அந்த தியாகமே அவரை வெல்ல முடியாதவராக ஆக்கியது. அவரது உண்ணாநோன்பும் சத்யாக்கிரகமும் சமணத்தின் வடக்கிருத்தல் அன்றி வேறல்ல என்பதை நாம் உணரலாம். காந்தியின் தோற்றம் கூட வெள்ளுடை அணிந்த ஒரு ஸ்வேதாம்பர சமணமுனிவரின் தோற்றமேயாகும்.
காந்தியின் தத்துவப்பார்வையின் இன்னொரு தளம் வைணவம். கிபி பதினான்காம் நூற்றாண்டில் ஆந்திர மாநிலத்தில் பிறந்த ஸ்ரீவல்லபர் உருவாக்கிய வைணவப்பிரிவே புஷ்டிமார்க்கம் எனப்படுகிறது. வல்லபர் தன் மதத்தை சுத்தாத்வைதம் என்றார். பரம்பொருள் மட்டுமே உள்ளது ஜீவாத்மாக்கள் அதன் லீலைகளே என அது வாதிட்டது. பரம்பொருளை கிருஷ்ணனாகவும் ஜீவாத்மாக்களை கோபிகைகளாகவும் வல்லபர் உருவகித்தார். ஆடி பாடி கிருஷ்ணலீலைகளை வழிபடுவதே புஷ்டிமார்க்கத்தின் வழிமுறை. வாழ்நாளெல்லாம் பிருந்தாவனத்தில் வாழ்ந்த வல்லபரின் புஷ்டிமார்க்கம் குஜராத் ராஜஸ்தான் உட்பட வடநாட்டில் பெரும்செல்வாக்கு பெற்றது. காந்தியின் குடும்பத்தினர் கிருஷ்ண பக்தர்களானார்கள்.
இதில் ஒரு சுவாரசியமான முரண் உள்ளது. புலன் ஒறுப்பையே முதன்மை நெறியாக முன்வைத்த சமண மதத்தில் இருந்து புலன்வழி களியாட்டத்தை இறைவழிபாடாக ஆக்கிக்கொண்ட புஷ்டி மார்க்கம் நோக்கி ஏன் ஒரு மாற்றம் நிகழ்ந்தது? எளிய விடைதான், ஒன்றின் உச்சம் அதற்கு எதிரான ஒன்றின் தேவையை உருவாக்குகிறது. நாணயம் திரும்பி விழுந்தது
காந்தி வைணவ மார்க்கத்தில் இருந்து பெற்றுக்கொண்டது என்ன? இரு விஷயங்களைச் சொல்லலாம் என்று படுகிறது. ஒன்று பூரண சமர்ப்பணம். அவர் கீதையின் செய்தியாக பெற்றுக்கொண்டது அதையே. விளைவுகளை இறைவனின் இச்சைக்கு விட்டுவிட்டு பரிபூரணமாக அவனை சரண் அடைதல். ஆகவே செய்யும்செயல்களில் பற்றுகொள்ளாமல் இருத்தல். இதையே காந்தி தன் கீதை உரைகளில் விளக்குகிறார். அதற்கு அனாசக்தியோகம் என்று அவர் பெயரிட்டார். வைணவத்தின் ஆதார தரிசனமான பூர்ண சமர்ப்பணம் அவரது ஆன்மீகத்தின் மையமாக எப்போதும் இருந்து வந்தது
வைணவத்தில் இருந்து காந்தி பெற்றுக்கொண்ட இன்னொரு முக்கியமான கருத்து என்பது, கைங்கரியம் எனலாம். பியாரிலாலுடன் காந்தி நிகழ்த்தும் உரையாடலில் பியாரிலால் மார்க்ஸியம் பற்றிச் சொல்கிறார். மிக எளிய விஷயங்களை செயற்கையான் ஒரு நடையில் சிக்கலாகச் சொல்கிறார் மார்க்ஸ் என்று காந்தி எண்ணுகிறார்.
காந்தி மார்க்ஸ் மீது விமர்சனமாக முக்கியமாகச் சொல்லும் ஒரு கருத்து கவனிக்கத்தக்கது. மார்க்ஸின் நோக்கில் உழைப்பு என்பது எப்போதும் எதிர்மறையான ஒன்றாகவே உள்ளது. உழைப்பில் இருந்து எந்த அளவுக்கு மக்களை விடுதலைசெய்கிறதோ அந்த அளவுக்கு அது மேலான சமூக அமைப்பு என அவர் நம்புகிறார். சுரண்டல் குறையக்குறைய உழைப்பாளிகள் வேலையில் இருந்து விடுபட்டு கேளிக்கைகள் மற்றும் பண்பாட்டு நடவடிக்கைகளை நோக்கிச் செல்லவேண்டுமென அவர் நினைக்கிரார். அது மார்க்சின் பிரபுகுலம் சார்ந்த நோக்கு.
ஆனால் காந்தியை பொறுத்தவரை அவர் உழைப்பை முற்றிலும் வேறு கோணத்திலேயே பார்க்கிறார். ஒருவன் ஒரு பொருளை உருவாக்குவதென்பது புறவயமான நிகழ்வு மட்டும் அல்ல. அப்போது அவன் தன் அகத்தையும் சேர்த்தே உருவாக்குகிறான். கூடை ஒன்றை முடைபவன் தன் அகத்தையும் சேர்த்தே முடைகிறான். உழைப்பு அளிக்கும் ஆன்மீக விடுதலை குறித்த பிரக்ஞை மார்க்ஸ¤கு இருக்கவில்லை என காந்தி நினைத்தார். கேளிக்கை மனிதனுக்கு தேவையில்லை, தன் அகம் மலரும் உழைப்பே அவனை நிறைவுள்ள மகிழ்ச்சியான மனிதனாக ஆக்கும் என்று சொன்னார்.
மார்க்ஸ் உழைப்பு என்னும்போது ஆலைத்தொழிலாளியை மட்டுமே கணக்கில் கொண்டார். ஆலைசார்ந்த உழைப்பே முதலாளித்துவ சமூகத்தில் இருக்கும் என்றும் கைத்தொழில் என்பது நிலப்பிரபுத்துவ யுகத்துடன் காலாவதியாகிவிட்டது என்றும் நினைத்தார். ஆலையுழைப்பு என்பது அகம் மலர வாய்ப்பற்றது. கட்டாய உழைப்பு அது. மனிதனை உழைப்பில் இருந்து அன்னியமாக்குவது. மார்க்ஸ் அந்த அன்னியமாதலில் இருந்தே ஆரம்பிக்கிறார் எனலாம்.
ஆனால் ஆலையுழைப்பில் இருந்து தனிப்பட்ட படைப்பூக்கம் கொண்ட அந்தரங்க உழைப்பு நோக்கிச் செல்ல காந்தி அறைகூவினார். ஆலை என்ற கருதுகோளே காந்திக்கு உகந்தது அல்ல. உழைப்பில் சேவையும் படைப்பும் இருக்கவேண்டும் என்பார். அதற்கு அவர் சொல்வது சிறிய அளவிலான உழைப்பே. ஆனால் காந்தியின் அந்த அறைகூவலை சாத்தியமற்ற கனவு என்ரே மார்க்ஸ் சொல்வார். வரலாற்றில் பின்னால்செல்வது சாத்தியம் அல்ல என்பார் மார்க்ஸ்.
காந்தியின் உழைப்பு பற்றிய பார்வையில் இருப்பது கைங்கரியம் என்ற கருதுகோள்தான். அது வைணவத்தில் இருந்து அவர் பெற்றுக்கொண்டது. கைங்கரியம் என்பது தன் கைகளால் ஆற்றப்படும் உழைப்பு. கருணையையும் சேவையையும் படைப்பூக்கத்தையும் பின்னணியாகக் கொண்டது. அந்த உழைப்பு ஒருவனை அகவிடுதலை நோக்கிக் கொண்டுசெல்லும் என்றார் காந்தி. ஒவ்வொருவரும் தன் கைகளால் உழைத்தாகவேண்டும், இல்லையேல் சிந்தனைச்சுதந்திரம்கூட சாத்தியமல்ல என்றார். கைங்கரியத்தின் சின்னமே ராட்டை. அது தன் கைகளால் ஒன்றை படைக்கும் இன்பத்தையும் நிறைவையும் அளிப்பது என்றார் காந்தி. அது வெறும் ஒரு பொருளியல் செயல்பாடு மட்டும் அல்ல, அது ஒரு வழிபாடு, ஒரு தியானம்.
ஏற்கனவே சொன்னதுபோல காந்தியின் சமணமும் காந்தியின் புஷ்டிமார்க்க வைணவமும் ஒன்றுக்கொன்று முரணானவை. ஒன்று புலன்களை ஒறுக்கச் சொன்னது. இன்னொன்று வெளிப்படுத்திக் கொண்டாடச் சொன்னது. காந்தி அவரது தரிசனங்களில் சமணத்தையே சார்ந்திருந்தார். அவர் ராதாமாதவ வழிபாடு செய்ததில்லை. கோயில்களுக்குச் சென்றதில்லை. புலன்களை அடக்கச் சொன்ன காந்தி கஜுராஹோ சிற்பங்களை களிமண் வைத்து மூடிவிடவேண்டும் என்றார்.
ஆனால் அவருக்குள் வைணவதரிசனம் வாழ்ந்தது. ஆனால் அவரது பஜனைகளில் புஷ்டிமார்க்க முறையின் வலுவான பாதிப்பு இருந்தது. குறிப்பாக வைஷ்ணவ ஜனதோ என்ற புகழ்பெற்ற பாடலைச் சொல்லலாம். சமணம் வைணவம் என இரு ஞான அமைப்புகளும் அவருள் இருந்தன. அவை கொண்ட முரண்பாட்டை நாம் காந்தியின் ஆளுமை முரண்பாடாக காணலாம். பலதளங்களில் காந்தி அந்த முரண்பாட்டை வெளிப்படுத்தினார்.
தன் கடைசிக்காலத்தில் காந்தி செய்த பிரம்மசரிய சோதனைகள் புஷ்டிமார்க்க வைணவத்தில் உள்ள சஹசயனம் என்ற கேளி யோக முறையைச் சேர்ந்தவை. ஆனால் வைணவத்தின் அந்த ரகசிய வழிமுறையை அவர் வெட்டவெளியில் நிர்வாணமாக தங்கும் சமண துறவிக்குரிய மனநிலையில் அப்பட்டமாக வெளிப்படையாகச் செய்தார். அது அவருக்கு உரிய பயனளிக்கவில்லை, மனத்துன்பங்களையே அளித்தது. வாழ்நாள் முழுக்க வைணவமும் சமணமும் காந்திக்குள் போராடியபடியேதான் இருந்தன.
காந்தியை நான் ஒரு ஊடகமாக கருதுகிறேன். ஏரியின் மடை போல. மரபின் இரு பெரும் வெள்ளங்கள் அவர் வழியாகக் கொப்பளித்துப் பெருகி நம் நவீன காலத்தை அடைந்தன. அவர் மரபும் நவீனமும் சந்திக்கும் ஒரு புள்ளி. அத்தகைய மையங்களில் எப்போதும் இருக்கும் குழப்பங்களும் முரண்பாடுகளும் காந்தியின் ஆன்மீகத்திலும் இருந்தன. ஆனால் பிரம்மாண்டமான நம் மரபை நவீன யுகத்தில் நின்றுகொண்டு நேர்மையுடன், நடைமுறை நோக்குடன் அணுகும் ஒவ்வொருவரும் காந்தி சந்தித்த சிக்கல்கள் மற்றும் முரண்பாடுகள் வழியாகவே செல்ல வேண்டியிருக்கும்
தத்துவத்துறையில் காந்தியின் பங்களிப்பு என்ன? அவர் எந்த தத்துவநூலையும் எழுதவில்லை. கோட்பாடுகளை உருவாக்கவில்லை. அவரது நூல்கள் அவ்வகையில் முக்கியமானவையும் அல்ல. ஆனால் தத்துவத்தை நடைமுறைப்படுத்துபவர் என்ற முறையில் அவர் முதன்மையானவர்.பல்லாயிரம் வருடத்தொன்மை கொண்ட நம் தத்துவ மரபுகளுக்கு இன்றுள்ள பங்களிப்பு என்ன என்பதை அவர்தான் நவீன உலகுக்குக் காட்டினார்.
காந்தி ஞானி அல்ல கர்மயோகி. தரிசனங்களில் அவருக்கு ஆர்வமில்லை. அவருக்கு செயலில் மட்டுமே ஈடுபாடு. அவர் எழுதியதும் பேசியதும் செயல்பாட்டைப்பற்றி மட்டுமே. மேலும் மேலும் வாசிப்பதைப்பற்றி அவர் அக்கறை கொள்ளவில்லை. கற்றவற்றை செயலில் கொன்டுவருவதையே அவர் இலக்காகக் கொண்டார். அவரை ஒரு practicing philosopher என்று சொல்லலாம். பல ஆயிரம் வருடம் சிந்தனைகளில் மறுசிந்தனைகளில் காலங்களைச் செலவிட்ட ஒரு மரபின் நுனியில் ஒரு செயல்வீரர் வந்துசேர்ந்ததும் நல்லூழ்தான்..
நன்றி
[08-09-10 அன்று பினாங்கு [மலேசியா] தண்ணீர் மலை காந்தி மண்டபத்தில் ஆற்றிய உரை]


More info :http://www.jeyamohan.in/?p=8138

No comments:

Post a Comment