Sunday, May 1, 2011

அவமானச் சின்னம்


When intimacy is forbidden and passion is sin, love is the most defiant crime of all.-  Nathaniel Hawthorne
 புனிதர்களும் குற்றங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்பதையே சரித்திரம் திரும்பத் திரும்ப நினைவூட்டுகிறது. அதிலும் பாலியல் குற்றங்களுக்கும் துறவிகளுக்குமான உறவு மிகவும் சிக்கலானது. இறைநெறியைப் பரப்புவதற்காக தங்கள் வாழ்வை ஒப்புதல் அளித்தவர்களாக  காட்டிக் கொள்ளும் மதகுருமார்கள், பலநேரங்களில் தங்களின் ரகசிய ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள எல்லா வகையான கீழான குற்றங்களையும் மேற்கொண்டிருக்கிறார்கள் என்பதே காலம் காட்டும் நிஜம்
புராதனமான மடாலயங்களின் சரித்திரத்தை ஆய்வு செய்கின்ற பலரும் அது பாலியல் குற்றங்களுக்கான ரகசியக்கேந்திரமாக இருந்து வந்திருப்பதை வெளிப்படுத்துகிறார்கள். குறிப்பாக ஒரினப்புணர்ச்சி. சிறுவர்மீதான வன்புணர்ச்சி மதகுருக்களிடம் அதிகமிருந்திருப்பதை இன்றைய ஆய்வுகள் புலப்படுத்துகின்றன.
ஆனால் புனிதர்கள் என்றும் எந்தக் குற்றத்தையும் ஒத்துக் கொண்டதில்லை. கடவுள் பார்த்துக் கொள்வார் என்று பசப்புகிறார்கள், பாலியல் குற்றங்களுக்கு உள்ளாகும் போது தண்டனையை அனுபவிக்க நேர்வது பெண்கள் மட்டுமே. சம்பந்தபட்ட துறவி அதிகாரத்தை முன்னிறுத்தி தப்பிச் சென்று விடுகிறார்.
இறை நம்பிக்கையையும் நல்லொழுக்கங்களையும் போதிக்கும் துறவிகளின் நிழல்வாழ்வை விவரிக்கக் கூடிய இலக்கியப் பிரதிகள் உலகெங்கும் நிறைய வெளிவந்திருக்கின்றன. குறிப்பாக ருஷ்ய அரசாங்கத்தை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த  ரஸ்புடீன் போன்ற ராஜகுருவின் பாலியல் அத்துமீறல்கள் குறித்த குற்றசாட்டுகளும் அதற்காக ரஸ்புடீன் தண்டிக்கபட்ட விபரமும் Rasputin’s Daughter  என்ற நாவலாகவும், பல்வேறு நாட்டார் கதைகளாகவும் இன்றும் உலவிக் கொண்டிருக்கின்றது
துறவிகளின் பாலியல் வேட்கைகளையும் அதற்கு பெண்கள் பலியானதையும் canterbury Tales,  Decameron talesOne Thousand and One Nights போன்ற இலக்கியப்0 பிரதிகளில் காண முடிகிறது. கள்ளத்துறவிகள் பற்றிய கதைகள் இந்தியாவின் கதாசாகசரம் போன்ற பழங்கதையில் நிறையவே இருக்கின்றன. ஐரோப்பாவெங்கும் கடந்த நூற்றாண்டுகளில் துறவிகள் பாலியல் உணர்வுகளை முற்றாக கட்டுபடுத்த வேண்டும், அதை மீறுவது தண்டனைக்குரிய கொடிய பாபம் என்றும் தூய மதக் கோட்பாட்டாளர்கள் கடுமையாக வலியுறுத்தி வந்தார்கள்.
அதிலும் திருமணமான பெண்களோடு துறவிகள் கள்ளஉறவு கொள்வார்களே ஆனால் அவர்களைச் சிரச்சேதம் செய்துவிடுமளவு கடுமையான தண்டனைகள் அராபிய நாடுகளில் இருந்தன.
மேற்குலகில் பாலியல் குற்றங்களில் முதன்மையானதாக் கருதப்படுவது திருமணமான பெண் கணவன் அறியாமல் இன்னொரு ஆணோடு உறவு வைத்திருப்பது. இதைக் கட்டுபடுத்துவதற்காக பலநூற்றாண்டுகாலம் பெண்கள் கற்புக் கவசம் எனப்படும் இரும்பிலான இடுப்புக் கவசங்களை அணிய வேண்டிய கட்டாயமிருந்த்து. அதிலும் பிறப்பு உறுப்புகளை மறைக்கும் கற்பு கவசங்கள் பூட்டு இடப்பட்டு அதன் சாவிகள் கணவனிடமிருந்தன. இந்த கற்பு கவசங்களோடு பெண்கள் பல காலமாக அவதிப்பட்டதை அரபிய இலக்கியங்கள் அடையாளம் காட்டுகின்றன
பதினேழாம் நூற்றாண்டில் ப்யூரிட்டன் எனப்படும் மத்தூய்மைவாதிகளாக தங்களை அறிவித்து கொண்ட  பிரிவனர் மத ஒழுங்கு என்ற பெயரில் அடிப்படை மனித உணர்வுகளைக் கூட கண்காணிக்கவும் கட்டுபடுத்தவும் தலையிட்டனர். . அப்படி மத்த் தூய்மைவாதிகளின் நெருக்கடிக்குப் பலியான ஒரு துறவியின் வாழ்வையே அவமானச் சின்னம் நாவல் விவரிக்கிறது. 1850  ஆண்டு வெளியான இந்த நாவல் பாலின்பம் பாவமா என்பதன் மீதான நீண்ட விசாரணை போல உள்ளது, இயேசுவின் உதாரணக்கதை ஒன்றினை போன்ற எளிய கதையை அடிநாதமாக கொண்டிருந்தாலும் நம்காலத்தின் மறக்கமுடியாத காதல்கதை இதுவே.
தனது தவற்றை உணர்ந்து வருந்தும் ஒரு துறவியின் வாழ்வை முன்னிறுத்தி ஒரு பெண்ணின் துயரக்கதையை விவரிக்கும் தி ஸ்கார்லெட் லெட்டர் இந்த வகை இலக்கியப் போக்கிற்கு முன்னோடி நாவலாக விளங்குகிறது. அமெரிக்க இலக்கியத்தின் முதல் உளவியல் நாவல் என்று கொண்டாடப்படும் ஸ்கார்லெட் லெட்டர் தமிழில் அவமானச்சின்னம் என்ற பெயரில் ஆர்.ஆறுமுகம் என்பவரால் மொழி பெயர்க்கபட்டிருக்கிறது
தமிழில் மட்டுமல்லாது இருபத்தியாறு உலகமொழிகளில் மொழியாக்கம் செய்யபட்டுள்ள தி ஸ்கார்லெட் லெட்டர் (The Scarlet Letter) இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த நாவல்களில் ஒன்றாகவே இன்றுமிருக்கிறது
இந்த நாவலின் மேன்மை குறித்து விவரிக்கும் ஜோர்ஜ் லூயி போர்ஹே நதானியல் ஹதேர்ன் இதை ஒரு குறியீட்டு நாவலைப் போல எழுதியிருக்கிறார். நாவல் கதாபாத்திரங்களின் வாழ்வை மட்டும் விவரிக்கவில்லை மாறாக பதினேழாம் நூற்றாண்டுச் சமூகவாழ்வை அதன் பல்வேறு நுட்பமான விவரணைகள் விமர்சனங்களுடன் சித்தரித்திருப்பது சிறப்பானது என்று பாராட்டுகிறார்
இந்த நாவலின் பாதிப்பு பல முக்கிய இலக்கியவாதிகளிடம் காணப்படுகிறது. குறிப்பாக Henry James’s The Portrait of a Lady (1881),  Kate Chopin’s The Awakening (1899), William Faulkner’sAs I Lay Dying (1930).). போன்ற முக்கிய படைப்புகளில் இந்த நாவலின் ஆளுமையின் எதிரொலிப்பைக் காணமுடிகிறது.
நூற்றியம்பதாறு வருடங்கள் கடந்த பிறகு இன்றும் அவமானச்சின்னம் நாவல் தனக்குரிய வாசகர் வட்டத்தை அப்படியே தக்க வைத்திருப்பது மிகுந்த ஆச்சரியம் தரக்கூடியது.
கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தைப் பாடமாக பயின்ற நாட்களில் இந்த நாவலை வாசித்திருக்கிறேன். அதன் பிறகு ஒன்றிரண்டு முறை எனது பயணத்தில் திரும்பவும் இதை வாசித்திருக்கிறேன். எனக்கு மிகவும் விருப்பமான நாவலது , இதன் தமிழாக்கமும் சிறப்பானது அதன் பிறகு இதன் வேறுபட்ட மூன்று திரைப்படங்களையும் பார்த்திருக்கிறேன்.
ஒவ்வொரு முறை தி ஸ்கார்லெட் லெட்டரை வாசிக்கும் போது நாவலின் கதாநாயகியான  ஹெஸ்டர் பிரைன் (Hester Prynne) கதாபாத்திரம் ஏற்படுத்தும் தாக்கமும் மனக்கொந்தளிப்பும் பல நாட்களுக்கு கூடவே இருக்கிறது, அபூர்வமான ஒரு இலக்கியக் கதாபாத்திரம், அவளை வாசிக்கையில் பைபிளில் வரும் எஸ்தரும். மரியா மக்தலேனாவும் ஏனோ நினைவிற்கு வருகிறார்கள்
நாவல் முழுவதும் அவளது மௌனமான காத்திருப்பும அவமானத்தை துணிச்சலாக ஏற்றுக் கொள்ளும் தைரியமும் உறைந்திருக்கிறது, அவள்  துக்கத்தால் பூத்திருக்கிறாள், வரிகளுக்குள் அவளது பெருமூச்சு கேட்டபடியே உள்ளது.
அது போலவே அந்தப் பெண்ணை ஏமாற்றி  குழந்தையைத் தந்துவிட்டு அந்த குற்றமனப்பாங்கோடு வாழும் மதகுருவான  ஆர்தர் டிம்ஸ்டேல் (Arthur Dimmesdale) கதாபாத்திரமும் மிக முக்கியமானதே. அவர் தன்னை சுயவிசாரணை செய்து கொள்ளும் மனதோடு இருக்கிறார், ஒருவகையில் அவர் பைபிளில் வரும் வீடு திரும்பிய மகன் கதையில் வரும் மகனைப் போன்றவர், தனது தவறுக்காக அவர் வருந்துகிறார், ஆனால் அதை ஒத்துக் கொள்ளும் தைரியம் வர மறுக்கிறது. பாலின்பத்தை ருசிக்கும் ஆண் அதன் காரணமாக வரும்விளைவுகளை பெண்மீது சுமத்திவிட்டு ரகசியமாக தப்பிவிடுகிறான் என்பதே நாவலின் மையப்புள்ளி, ஒருவகையில் இது இயேசுவின் வாழ்வின் சாயல்களை கொண்டிருக்கிறது என்று கூட வாசிக்க முடிகிறது,
அமெரிக்க இலக்கியத்தின் முன்னோடி எழுத்தாளர் நதானியல் ஹதேர்ன். இவரது குடும்பம் பரம்பரையாக பாஸ்டன் பகுதியில் வசித்து வந்தது. ஹதேர்னின் மூதாதையர்களில் ஒருவர் நீதிபதியாக பணியாற்றியிருக்கிறார்.  அவரது காலத்தில் சூன்யகாரிகள் என்று குற்றம் சாட்டப்பட்ட கிராம மருத்துவச்சிகள்  பலரையும் உயிரோடு தீ வைத்து எரிக்கும்படியாக அவர் தீர்ப்பு வழங்கியிருக்கிறார். அதைப்பற்றி ஹதேர்ன் கதைகளில் காணமுடிகிறது.
அப்படி தீக்கிரையாகிப் போன  ஒரு பெண்ணின் சாபம் தங்கள் குடும்பத்தின் மீது வழி வழியாகத் தொடர்ந்து வருகின்றது என்றும் அந்தச் சாபம் தான் தன்னைப் பெண்கள் குறித்து மிகக் கவனமாகவும் உண்மையான அக்கறையோடும் எழுத செய்கிறது என்று நதானியல் ஹதேர்ன் ஒரு நேர்காணலில் குறிப்பிடுகிறார்
இந்த நாவல் பதினேழாம் நூற்றாண்டு அமெரிக்காவில் பாஸ்டன் பகுதியில் நடைபெறுகிறது. துறைமுகப்பகுதியின் வரிவசூல் செய்யும் அலுவலகம் ஒன்றில் நதானியல் ஹதேர்ன் சில காலம் பணியாற்றினார். அந்த நாட்களில் தான் கேட்டு அறிந்த சேதிகளின் பின்னணியில் இந்த நாவலை எழுதியிருக்கிறார் என விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள். அதை மெய்பிப்பது போல நாவலும் கஸ்டம்ஸ் ஹவுஸ் எனப்படும் துறைமுக அலுவலகத்தில் கிடைத்த பழைய தகவல்களில் அடங்கிய குறிப்பேடு  ஒன்றிலிருந்தே துவங்குகிறது
ஹெஸ்டர் பிரைன் பாஸ்டன் பகுதி ஒன்றின் கிராமத்தில் வசித்து வருகிறாள். நாவல் துவங்குவதற்குச் சில வருடங்களுக்கு முன்பாக அவளது கணவன் வணிகம் செய்வதற்காக வெளியூர் செல்கிறான். திரும்பி வரும்வழியில் இந்தியப் பழங்குடியினரிடம்  பிடிபடுகிறான். தன் கணவன் இறந்துவிட்டான் என்று கருதும் ஹெஸ்டர் பிரைன் வேறு ஒரு ஆணோடு  ரகசியமாக பாலுறவு வைத்துக் கொள்ளத் துவங்குகிறாள். அந்த உறவின் காரணமாக அவள் கர்ப்பமாகி ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கிறாள்.
கணவன் இல்லாமல் அவள் எப்படிக் குழந்தை பெற்றாள் என்பதை விசாரிக்கும் நியாயசபை அவள் ஒழுக்கம் தவறியிருக்கிறாள் என்று குற்றம்சாட்டி அவளைச் சிறையில் அடைக்கிறது
தனது கைகுழந்தையோடு அவள் சிறைக்குக் கொண்டு செல்லபடுவதிலிருந்து நாவல் துவங்குகிறது. அவளைக் காண்பதற்காக காத்திருந்த கூட்டத்தில் பலரும் அந்தக் குழந்தையின் தகப்பன் யார் என்று கேட்ட போதும் அவள் பதில் சொல்ல மறுக்கிறாள்.
அவள் கள்ளஉறவு கொண்டவள் என்பதை நினைவுபடுத்த “A”    என்ற அடையாள முத்திரையை அவள் தன் மார்பில் பொறித்திருக்க வேண்டும் என்று நியாயசபை ஆணையிடுகிறது. அவள் பூத்தையல்  கொண்டு “A”   என்ற எழுத்தை தங்க நிறத்தில் தன் உடையில் அவமானச் சின்னமாக பதிந்து கொண்டுவிடுகிறாள் .
இது அந்தக் காலத்தில் நடைமுறையில் இருந்த தண்டனை. கள்ளஉறவு கொள்ளும் பெண்களுக்கு” A” என்ற அடையாள முத்திரையும், மிதமிஞ்சி குடித்துவிட்டு தொந்தரவு செய்பவர்களுக்கு”D”என்ற அடையாள முத்திரையும் தண்டனையாகத் தரப்பட்டு அதை அவர்கள் வாழ்நாள் முழுவதும் சுமந்து அலைய வேண்டிய கட்டாயமிருந்தது.
சிறை வாசலில்ல அவளை பலரும் பரிகசிக்கிறார்கள்.  சிறைமுகப்பில் அவளைத் தேடிவரும்  ரோஜர் சில்லிங்வொர்த் என்ற மருத்துவர்  அவளது குழந்தைக்கு தகப்பன் யார் என்று ரகசியமாகக் கேட்கிறார். அப்போதும் அவள் சொல்ல மறுக்கிறாள்.
ரோஜர் ஷீல்லிங்வொர்த் என்ற புதிய பெயரில் உருமாறி வந்திருப்பது தன் கணவன் என்று ஹெஸ்டர் அறிந்து கொள்கிறாள். அவனும் தான் ஹெஸ்டரை ஒரு போதும் விரும்பியதேயில்லை என்று சொல்லி அவள் எக்காரணத்தை கொண்டும தனது அடையாளத்தை ஊர்மக்களிடம் வெளிப்படுத்திவிட கூடாது என்று சத்தியம் வாங்கிக் கொள்கிறான்.
ஹெஸ்டரின் சிறை வாழ்வு நீள்கிறது. அங்கிருந்தபடியே பலரது நன்மதிப்பையும் பெறுகிறாள் ஹெஸ்டர். பிறகு விடுதலையாகி வெளியே வருகிறாள்
அதன் பிறகு ஹெஸ்டர்  வேறு ஏதாவது ஒரு நகருக்குச் சென்று விடும்படியாக  பலரும் யோசனை சொல்கிறார்கள். ஹெஸ்டர் பிரைன் அதை மறுத்து தனது கைக்குழந்தையோடு அதே கிராமத்தில்  தனியே ஒரு இடத்தில் வசிக்கத் துவங்குகிறாள். அவளது ஒரே ஆறுதல் குழந்தை மட்டுமே.  அந்தக் குழந்தைக்கு பியர்ல் என்று பெயரிட்டு வளர்த்து வருகிறாள்
ஹெஸ்டருக்கு தெரிந்தது எல்லாம் பூ வேலைப்பாடுள்ள தையல் மட்டுமே. இரவும் பகலும் அவள் தையல் வேலை செய்கிறாள். அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் தனியே வாழ்ந்து கொண்டு வருகிறாள். அவளைத் தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக சித்ரவதை செய்து அவள் யாரோடு கள்ள உறவு கொண்டிருந்தாள் என்ற விபரத்தை அறிந்து கொள்ள முயற்சிக்கிறான்  அவளது கணவன்.
ஹெஸ்டர் அந்த உண்மையை யாரிடமும் சொல்வலவயில்லை. எப்போதும் நெஞ்சில் அவமானச் சின்னத்தை சுமந்தவளாக அவள் தையல் வேலை செய்து கொண்டிருக்கிறாள். பியர்ல்  வளரத்துவங்குகிறாள். அப்போது குழந்தை அவளிடம் வளர்ந்தால் கெட்டுப்போய்விடும் அவள் ஒரு சரியான தாய் அல்ல என்று கருதும் நகர நிர்வாகம் அவளிடமிருந்து குழந்தையைப் பறித்துத் தனிமைப் படுத்த முயற்சிக்கிறது. அவள் தன்னால் தன் குழந்தையை விட்டுத் தரமுடியாது என்று கதறுகிறாள்
இந்த நிலையில் ஹெஸ்டருக்கு உதவுவதற்காக வருகிறார் மதகுரு ஆர்தர் டிம்ஸ்டெல். தாயையும் பிள்ளையும் பிரிக்க வேண்டிய அவசியமில்லை என்று அவர் சிபாரிசு செய்த காரணத்தால் பியர்ல் அம்மாவிடமே வளரும் நிலை உண்டாகிறது
மதகுரு ஆர்தர் டிம்ஸ்டேல் எப்போதும் ஏதோ இனம் புரியாத வேதனையில்  துயரப்பட்டு வருவதையும் அவருக்கு இருதய நோய் இருப்பதையும் அறிந்த ரோஜர் சில்லிங்வொர்த் அவருக்குச் சிகிட்சை செய்ய முன்வருகிறார். ஆர்தரும் சில்லிங்வொர்த் தான் ஹெஸ்டரின் கணவன் என்று அறியாமல் அவனோடு மிகவும் நட்பாகப் பழகத் துவங்குகிறான்
ஹெஸ்டருக்கும் ஆர்தர் டிம்ஸ்டேலுக்கு இடையில் ஏதோ பெயரில்லாத உறவு இருக்கிறது என்று சந்தேகப்படும் சில்லிங்வொர்த் ஒரு நாள் மருத்துவமனையில் ஆர்தரைச் சோதிக்கும் போது அவரது நெஞ்சில் ஒரு காயம் இருப்பதைக் கவனிக்கிறான். ஆர்தர் தனக்கு தானே தண்டனை கொடுத்து கொண்டிருக்கிறான் என்பதை அறிந்து கொள்கிறான்
தான் செய்த தவறின் காரணமாக ஹெஸ்டர் தன் மகளோடு கஷ்டப்படுவதை தொலைவில் இருந்து பார்த்து கண்ணீர் வடிக்கிறான் ஆர்தர். ஆனால் தனது குற்றத்தை ஒத்துக் கொள்ள கூடிய மனத்துணிச்சல் அவனிடமில்லை. அவன் மதசபைக்கும் தன் மீது  மக்கள் கொண்டுள்ள மரியாதையையும் நினைத்துப் பயப்படுகிறான்
வருடங்கள் கடந்து போகின்றன. சிறுமி பியர்ல் விளையாட்டுப் பருவம் அடைகிறாள். அவளோடு சேர்ந்து விளையாடுவதற்கு மற்ற சிறுவர்கள் வர மறுக்கிறார்கள். அம்மாவின் மீதான அவமானம் அவள் மீதும் படர்கிறது. அதன் காரணமாகவே அவள் கற்பனையாகச் சில சிறுவர்களை மனதில் உருவாக்கிக் கொண்டு அவர்களுடன் விளையாடுகிறாள
தனது கணவன் கொஞ்சம் கொஞ்சமாக ஆர்தரைப் பேசிபேசி மனவருத்தம் கொள்ளச் செய்வதை அறிந்த ஹெஸ்டர் ஒரு நாள் ஆர்தரிடம் சென்று தன் கணவன் தான் இப்போது சில்லிங்வொர்த் என்ற பெயரில் வேறு ஆளைப்போல இருக்கிறான் என்ற உண்மையை வெளிப்படுத்தி விடுகிறாள். குற்றமனதோடு தன்னால் நிம்மதியாக வாழ முடியவில்லை எங்காவது போய்விடலாம் என்று ஆர்தர் அவளை அழைக்கிறான். முடிவில் அவனோடு வெளிநாடு செல்வதற்கு ஹெஸ்டர் தயராகிறாள். அதை அறிந்த சில்லிங்வொர்த் தானும் அதே கப்பலில் பயணம் செய்யத் திட்டமிடுகிறான
புதிய வாழ்க்கை கிடைக்கபோகிறது என்று முடிவு செய்த ஹெஸ்டர் நீண்ட நாட்களுக்குப் பிறகு தனது அவமானச் சின்னத்தை வீசி எறிந்துவிட்டு சராசரியான இளம்பெண்ணாகத் தன்னை ஒப்பனை செய்து கொள்கிறாள். மகளால் கூட அவளை அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை
தான் செய்த தவற்றை ஒப்புக் கொள்ளவதா. வேண்டாமா என்ற மனப்போராட்டத்தோடு பிரசங்கம் செய்ய செல்லும் ஆர்தர் இனி இந்த நகரில் வாழப்போவதில்லை என்ற முடிவோடு மிக ஆவேசமாக ஒரு பிரசங்கம் செய்கிறான். அதன் முடிவில் இனியும் குற்றத்தை மறைத்து பிரயோசனமில்லை என்று அவன் தானே ஹெஸ்டரின் குழந்தைக்குத் தகப்பன் என்ற உண்மையை வெளிப்படுத்திவிட்டு அஙகேயே இறந்து விடுகிறான். 
இத்தனை காலமாக தன்னைத் தொடர்ந்து வந்த குற்றத்தின் நிழலில் இருந்து விலிகிய ஹெஸ்டர் தன் மகளை அழைத்துக் கொண்டு அந்த நகரைவிட்டு கிளம்பிச் செல்கிறாள். பலவருடங்கள் செல்கின்றன. சில்லிங்வொர்த்தும் இறந்து போய்விடுகிறான். வயதாகி அதே ஊருக்குத் திரும்பி வருகிறாள் ஹெஸ்டர்.  ஹெஸ்டரின்  மகள்  ஒரு கனவானை மணந்து கொண்டு ஐரோப்பிய நாடு ஒன்றில் சுதந்திரமாக, சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் .
கடந்த காலத்தின் நினைவுகள் பீடிக்க அதே பழைய வீட்டில் ஹெஸ்டர் தனது அந்திம நாட்களைக் கழித்து அங்கேயே இறந்தும் போய்விடுகிறாள். அவளை ஆர்தர் டிம்ஸ்டெலின் கல்லறைக்கு அருகிலே புதைக்கிறார்கள். அப்போதும் இரண்டு கல்லறைகளுக்கு நடுவில் இடைவெளி இருக்கவே செய்தது. சாவிற்குப் பிறகு ஒரேயொரு கல்லறைப் பலகை மட்டுமே அவர்கள் இருவருக்கும் பொதுவானதாக இருந்தது என்பதோடு நாவல் நிறைவு பெறுகிறது
அலைக்கழிக்கபட்ட ஒரு பெண்ணின் துயரக்கதையை சொல்ல வந்த நதானியல் ஹதேர்ன் பெண் எவர் ஒருவர்  மீது முழுமையாக அன்பு வைத்திருக்கிறாளோ அதற்காக தன் சொந்த வாழ்வை முற்றிலும் தியாகம் செய்யவும் கூடும் என்பதையும், எல்லாக் கஷ்டங்களையும் தாங்கிக் கொண்டு கடைசி வரை போராடக்கூடியவள் பெண் மட்டுமே என்பதையும் மிக வலுவாக வெளிப்படுத்தியிருக்கிறார்
பத்தொன்பதாம் நூற்றாண்டு நாவல்களுக்கே உரித்தான முன்பின்னாக நகரும் கதை சொல்லும் முறையும், மிக நீண்ட வர்ணனைகளும் நாவலில் நிரம்பியிருக்கிறது. இதைத் தாண்டி இந்த நாவலை ஒரு நவீன நாவலாக மாற்றுவது இதன் கவித்துவ உரையாடல்கள். தெறிப்புமிக்க அகப்பார்வைகள் மட்டுமே.
நதானியல் ஹதேரன் ஒரு தனித்துவமிக்க எழுத்தாளர், வறுமையில் இருந்து எழுதியவர். சோபியா என்ற இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்டு அன்றாட வாழ்விற்கே கஷ்டப்படும் சூழலில் எழுதுவதன் வழியாக மட்டுமே பணம் சம்பாதிக்க முடியும் என்ற நம்பிக்கை ஹதேர்னுக்கு ஏற்பட்டது. அதன் காரணமாக தொடர்ந்து 12 வருடங்கள் சிறிதும் பெரிதுமாக நூற்றுக்கணக்கில் கதைகள் கட்டுரைகளை எழுதி வந்தார். ஹதேர்னின் நுட்பமான அவதானிப்பும் மொழி நடையும் பலருக்கும் பிடித்திருந்தது. குறிப்பாக எட்கர் ஆலன் போ,  தோரு,எமர்சன் போன்ற அவரது சமகாலத்தைய எழுத்தாளர்கள் பலரும் அவரது கதை சொல்லும் ஆற்றலை வியந்து பாராட்டியிருக்கிறார்கள்
தி ஸ்கார்லெட் லெட்டர் நாவல் எழுதும் நாட்களில் ஹதேர்ன் மிகவும் வறுமையில் இருந்தார். விளக்கிற்கு எண்ணெய் வாங்க்கூடக் காசில்லாமல் பல இரவுகளில் அவரால் எழுத முடியாத நிலை ஏற்பட்டது. பகலிலும் எழுதும் காகிதம் வாங்கப் பணமில்லாமல் மனைவியின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டியதாக இருந்தது.  அவரது மனைவி ஹதார்னின் பணிகளுக்கு மிகுந்த ஆதரவாக இருந்தார்.
துறைமுகத்தில் தான் வேலை செய்த நாட்களில் கேள்விபட்ட ஒரு பெண்ணின் கதையே இந்த நாவல் எழுதுவதற்கு முக்கியத் தூண்டுதலாக இருந்தது என்கிறார் ஹதேர்ன். நாவல் வெளியான காலத்தில் பெரிய வரவேற்பு பெறவில்லை. ஆனால் காலமாற்றத்தில் இந்த நாவல் அமெரிக்காவின் தலைசிறந்த பத்து நாவல்களில் ஒன்று என்ற அந்தஸ்தை பெற்றிருக்கிறது, லட்சக்கணக்கான பிரதிகள் விற்றிருக்கிறது.
இந்த நாவலுக்கு மிக நெருக்கமாக உள்ள இன்னொரு இலக்கியப்பிரதி லியோ டால்ஸ்டாயின் புத்துயிர்பு (RESURRECTION) நாவல். இந்த நாவலும்  ஒரு பெண்ணை ஏமாற்றிய கனவான் அந்தக் குற்றத்தை உணர்ந்து வருந்துவதைப் பற்றியதே.
ஒரு பெண்ணை ஏமாற்றிய குற்றம் எப்படி ஒரு மனிதனை நிம்மதியற்று அலையச் செய்கிறது என்பதையே டால்ஸ்டாயின் நாவலும் விவரிக்கிறது
நதானியல் ஹதேர்னின் இலக்கிய முயற்சிகளுக்குப் பெரிதும் துணையாக இருந்தது அவரது நண்பரும் புகழ்பெற்ற எழுத்தாளராக இருந்தவருமான ஹெர்மன் மெல்வில். இருவருக்குமான நட்பு மிகவும் ஆழமானது. தனது புகழ்பெற்ற மோபிடிக் நாவலை மெல்வில் தனது நண்பன் நதானியல் ஹதேனுக்குத் தான் சமர்ப்பணம் செய்திருக்கிறார். அந்தளவு இருவரும் உயரிய நட்புடன்  பழகினார்கள்
ஸ்கார்லெட் லெட்டரைத் தடை செய்ய வேண்டும் என்று ஒரு காலத்தில் மதவாதிகள் தீவிரமாகக் குரல் எழுப்பினார்கள். ஆனால் காலம் அந்த எதிர்ப்புக் குரலை ஒடுக்கி விட்டது. அத்தோடு உலக இலக்கியத்தில் மிக முக்கியமான பெண் கதாபாத்திரங்களில் ஒன்றாக ஹெர்டர் பிரைனை உயர்த்தியது.
அமெரிக்காவின் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான டோனி மாரிசன், சீனாவின் நோபல் பரிசு பெற்ற இலக்கியவாதியான ஹென்சுபரோ ஒயி  ஆகிய இருவரும் தி ஸ்கார்லெட் லெட்டரின் ஹெஸ்டர் கதாபாத்திரத்தின் உந்துதலில் இரண்டு நாவல்கள் எழுதியிருக்கிறார்கள்.
இந்நாவல் பலமுறை திரைப்படமாகவும் தொலைக்காட்சித் தொடராகவும் மட்டுமில்லாது ஒபரா போன்ற இசைநாடகமாகவும் நடத்தப்பட்டிருக்கிறது.
பெண்களின் மீதான பாலியல் ஒடுக்குமுறைக்கு எதிராகக் குரல் தந்த முதல் நாவல் என்பதற்காகவும்  மதம் நம் படுக்கை அறை வரை எப்படி ஊடுருவி நம்மைக் கண்காணிக்கிறது என்ற கருத்தியலை முன்வைத்து விமர்சனம் செய்கிறது என்பதற்காகவும் இந்த நாவலை  நான் மிக முக்கியமானது என்று நினைக்கிறேன்.
இந்த நாவலைப்பற்றி டி.ஹெச்.லாரன்ஸ் ஒரு அற்புதமான கட்டுரை எழுதியிருக்கிறார் அதில்  இப்படிக் குறிப்பிடுகிறார்
 It is a marvellous allegory. It is to me one of the greatest allegories in all literature
அவமானச்சின்னம் நாவல் காலத்தின் மார்பில் குத்தப்பட்ட உன்னதமான இலக்கிய அடையாளம்.

No comments:

Post a Comment