Tuesday, May 10, 2011

உடல்கூறு வண்ணம்


உடல்கூறு வண்ணம் பட்டினத்தார் எழுதிய பாடல்,
பிறப்பு முதல் இறப்பு வரையான மனிதனின் அத்தனை செயல்களும் ஒரே பாடலில் உள்ளது,
உன்னதமான இந்தப் பாடல் வாழ்வின் நிலையாமையை ஒரே பாடலில் புரிய வைத்துவிடுகிறது
•••
உடல்கூறு வண்ணம்
பட்டினத்தார்
ஒரு மடமாது ஒருவனும் ஆகி, இன்ப சுகம் தரும் அன்பு பொருந்தி,
உணர்வு கலங்கி ஒழுகிய விந்து ஊறு சுரோணிதம் மீது கலந்து,                                                 2
பனியில் ஓர்பாதி சிறுதுளி மாது பண்டியில் வந்து புகுந்து, திரண்டு,
‘பதுமவரும்பு கமடம்இது’ என்று பார்வை, மெய், வாய், செவி, கால், கைகள் என்ற       4
உருவமும் ஆகி, உயிர் வளர்மாதம் ஒன்பதும் ஒன்றும் நிறைந்து, மடந்தை
உதரம் அகன்று, புவியில் விழுந்து, யோகமும் வாரமும் நாளும் அறிந்து,                              6
மகளிர்கள் சேணை தர, அணையாடை மண்பட உந்தி உதைந்து, கவிழ்ந்து,
மடமயில் கொங்கை அமுதம் அருந்தி, ஓரறிவு ஈரறிவு ஆகி வளர்ந்து,                                        8
ஒளிநகை ஊறல் இதழ் மடவாரும் உவந்து முகந்திட வந்து தவழ்ந்து,
மடியில் இருந்து மழலை மொழிந்து, “வா, இரு, போ,” என நாமம் விளம்ப,                               10
உடைமணி ஆடை அரைவடம் ஆட, உண்பவர் தின்பவர் தங்களொடு உண்டு,
தெருவில் இருந்து புழுதி அளைந்து, தேடிய பாலரொடு ஓடி நடந்து
அஞ்சு வயதாகி விளையாடியே . . . ,                                                                                                         12
உயர்தரு ஞான குரு உபதேசமும், தமிழின் கலையும் கரை கண்டு,
“வளர்பிறை,” என்று பலரும் விளம்ப, வாழ் பதினாறு பிராயமும் வந்து,                          14
மயிர்முடி கோதி, அறுபத நீல வண்டிமிர் தண்டொடை கொண்டை புனைந்து,
மணி பொன் இலங்கு பணிகள் அணிந்து, மாகதர் பூகதர் கூடி வணங்க,                           16
“மதன சொரூபன், இவன்!” என மோக மங்கையர் கண்டு, மருண்டு, திரண்டு,
வரிவிழி கொண்டு சுழிய எறிந்து மாமயில் போல் அவர் போவது கண்டு,                 18
மனது பொறாமல் அவர்பிறகு ஓடி, மங்கல செங்கலசம் திகழ் கொங்கை
மருவ, மயங்கி, இதழ் அமுது உண்டு, தேடிய மாமுதல் சேர வழங்கி,                   20
ஒருமுதலாகி முதுபொருளாகி இருந்த தனங்களும் வம்பில் இழந்து,
“மதன சுகந்த விதனம் இது,” என்று, வாலிப கோலமும்வேறு பிரிந்து,                 22
வளமையும் மாறி, இளமையும் மாறி, வன்பல் விழுந்து, −இரு கண்கள் −இருண்டு,
வயது முதிர்ந்து, நரைதிரை வந்து, வாத விரோத குரோதம் அடைந்து,
செங்கையினில் ஓர் தடியுமாகியே                                                                                               24
வருவதும், போவதும், ஒருமுது கூனும் மந்தி எனும்படி குந்தி நடந்து,
மதியும் அழிந்து, செவிதிமிர் வந்து, வாயறியாமல் விடாமல் மொழிந்து,             26
துயில் வரும் நேரம் இருமல் பொறாது தொண்டையும் நெஞ்சும் உலர்ந்து, வரண்டு,
துகிலும் இழந்து, சுணையும் அழிந்து, தோகையர் பாலர்கள் கோறணி கொண்டு,    28
“கலியுகமீதில் இவர் மரியாதை கண்டிடும்!” என்பவர் சஞ்சலம் மிஞ்ச,
கலகல என்று மலசலம் வந்து, கால்வழி மேல்வழி சார நடந்து,                                          30
தெளிவும் இராமல், உரையும் தடுமாறிச், சிந்தையும் நெஞ்சும் உலைந்து, மருண்டு,
திடமும் அலைந்து, மிகவும் மலைந்து, “தேறினால் ஆதரவு ஏது?” என நொந்து,          32
“மறையவன் வேதன் எழுதியவாறு வந்தது கண்டமும்!” என்று தெளிந்து,
“இனியென கண்டம்! இனியென தொந்தம்! மேதினி வாழ்வும் இலாது இனி நின்ற     34
கடன்முறை பேசும்!” என உரை நா உறங்கி விழுந்து, கைகொண்டு மருந்து
கடைவிழி கஞ்சி ஒழுகிட வந்து, பூதமும் நாலும் சுவாசமும் நின்று,
நெஞ்சு தடுமாறி வரும் நேரமே . . . ,                                                                                                   36
வளர்பிறை போல எயிறும், உரோமமும், சடையும், சிறுகுஞ்சியும், விஞ்சு
மனதும் இருண்ட வடியும் இலங்க, மாமலை போல எம தூதர்கள் வந்து                                 38
வலைகொடு வீசி, உயிர்கொடு போக, மைந்தரும் வந்து குனிந்து அழ, நொந்து
மடியில் விழுந்து மனைவி புலம்ப, “மாழ்கினரே இவர்; காலம் அறிந்து                                   40
பழையவர் காணும்!” எனும் அயலோர்கள் பஞ்சு பறந்திட, நின்றவர் “பந்தர்
இடும்!” என வந்து பறையிட முந்தவே, “பிணம் வேக விசாரியும்!” என்று                                42
பலரையும் ஏவி முதியவர் தாமும்,இருந்த “சவம் கழுவும் சிலர்!” என்று,
பணி துகில் தொங்கல் களபம் அணிந்து, பாவகமே செய்து, நாறும் உடம்பை                           44
“வரிசை கெடாமல் எடும்!” என, ஓடிவந்து இளமைந்தர் குனிந்து சுமந்து,
கடுகி நடந்து, சுடலை அடைந்து, ‘மானிட வாழ்’வென ‘வாழ்’வென நொந்து,                             46
விறகிடை மூடி, அழல்கொடு போட, வெந்து விழுந்து, முறிந்து, நிணங்கள்
உருகி, எலும்பு கருகி, அடங்கி ஒருபிடி நீறும் இராத உடம்பை
நம்பும் அடியேனை இனி ஆளுமே!                                                                                                                             48
***

No comments:

Post a Comment