Sunday, May 1, 2011

சீட்டாட்டம்




சிறுகதை
இருபத்தி மூன்று வருசமாக முடிவில்லாமல் நடைபெற்றுவரும் ஒரு சீட்டாட்டம் பற்றிய இந்தக் கதையை விசித்திரமானது என்று எண்ணி நம்ப மறுத்துவிடாதீர்கள், சில சமயம் கற்பனையை விட உண்மை விசித்திரமாகவே இருக்கும்,
அவர்கள் சீட்டுவிளையாடிக் கொண்டிருந்த அறை கடற்கரையோர வீடு ஒன்றில் உள்ளது, அந்த வீட்டின் உரிமையாளர் வினி, அவள் இப்போது நொய்டாவில் வசிக்கிறாள், அவள் சென்னையில் இருந்த போது அந்த வீட்டில் தங்கியிருந்தாள், அவள் ஊரைவிட்டுப் போன பிறகும் சீட்டாட்டம் தடை செய்யப்படக்கூடாது என்பதற்காக சமையலுக்கும் உதவிக்கும் ஒரு ஆளை நியமித்துப் போயிருக்கிறாள், அந்த ஆள் தினமும் இரண்டு முறை உணவுத் தட்டுகளை அறையின் ஜன்னலில் வைத்துப் போகிறான், சில நேரம் பழங்கள் மற்றும் உணவு அப்படியே சாப்பிடப்படாமல் இருக்கின்றன, சில நேரம் சிகரெட் தேவை என்ற குறிப்பு ஜன்னலில் சொருகப்பட்டிருக்கிறது, அந்தச் சமையற்காரன் உள்ளே விளையாடும் மூவரையும் பார்த்ததேயில்லை ஆனால் அவர்களைப் பற்றி அவனாக நிறையக் கற்பனை செய்து வைத்திருக்கிறான்
அவர்கள் மூவரும் சீட்டாடத்துவங்கிய போது மூன்று நிபந்தனை விதித்தார்கள், முழுமையாக ஒருவர் வெற்றி பெரும்வரை ஆட்டத்தைப் பாதியில் விட்டு எவரும் விலகிப் போக கூடாது. விளையாட்டின் போது ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளக்கூடாது, சீட்டாட்டம் முடிவுக்கு வரும்வரை அந்த அறையின் கதவு மூடப்பட்டிருக்க வேண்டும் என்பதே நிபந்தனை,
அந்த மூவருக்கும் பெயர்கள் இருந்த போதும் அவர்கள் 3, 6, 9 என அவர்களின் விருப்பமான எண்களால் அழைக்கப்படவே விரும்பினர், மூன்றாம் எண் உள்ள அந்த ஆள் இருபத்தியோறு வயது நிரம்பியிருந்தான், அதிகம் குடித்து அலையும் அவன் நான்குமுறை காதல் தோல்வியடைந்திருந்தான், ஆறாம் எண் உள்ளவன் ஒரு வணிகன், அவன் மனைவி அழகானவள், அவளைக் காதலித்து திருமணம் செய்து கொண்டான், அவளது அழகு நெருப்பைப் போல காண்பவரைப் பற்றிக் கொண்டுவிடுகிறது என்று சந்தேகம் கொண்டவானயிருந்தான், ஒன்பதாம் எண் உள்ளவன் நாற்பது வயதான ஒரு உயர் அதிகாரி அவன் மற்றவர்களைத் தோற்கடிப்பதில் ஏற்படும் சந்தோஷத்திற்காகவே சீட்டில் ஆர்வம் கொண்டிருந்தான், இவர்கள் மூவரும் ஒன்பதாம் எண் உள்ளவனின் ரகசியத் தோழியான வினி என்பவள் வீட்டினைச் சீட்டு விளையாடத் தேர்வு செய்தார்கள்,
சீட்டாட்டத்தில் அவர்கள் மாறிமாறி ஜெயிப்பதும் தோற்பதுமாக இருந்தார்கள், ஒரு ஆள் தொடர்ந்து இரண்டுமுறை வெற்றிபெற முடியாதபடி விளையாட்டு நீண்டு கொண்டேயிருந்த்து, இந்த விளையாட்டு அவர்களுக்குள் ஏற்படுத்திய மாற்றம் பற்றிய சில யூகங்களே நிஜத்தை விட முக்கியமானது, அவர்கள் இப்படி எல்லாம் நினைத்திருக்க்கூடும் என்பதே இதன் புதிர்தன்மை,
யூகம் 1 : சீட்டில் ஆறர்ம் எண் கொண்டவன் தோற்றுப்போய்விட்டால் அதற்கு ஈடாக அவன் மனைவியை பறித்துக் கொண்டு அவளுடன் சல்லாபம் செய்யலாம் என்பதைப் பற்றி கற்பனை செய்து கொண்டான், அது சீட்டு விளையாட்டினை விட சுவாரஸ்யமாக இருப்பதாக நினைத்தான் 3ம் எண் உள்ளவன்
யூகம் 2 : 3ம் எண் உள்ளவன் இன்று தோற்றுப்போய் விட்டால் இங்கேயே தற்கொலை செய்து கொண்டுவிடுவான், அவனது சாவின் பிறகு அவனது பழைய காதலிகளை சந்தித்து அவனது கடைசி நிமிசம் பற்றிச் சொல்லி அவர்களோடு நெருங்கிப் பழக அதிக சாத்தியமிருக்கிறது என்பதை நினைத்து மகிழ்ந்தான் 6ம் எண் மனிதன்
யூகம் 3  :ஒன்பதாம் எண் உள்ளவன் தன் எதிரில் ஆடும் நபர்கள் திடீரெனப் பெண்களாக மாறிவிட்டால் அவர்களுடன் எப்படி உறவு கொள்ளலாம் என்று கற்பனை செய்தான்
யூகம் 4   : தனது தோல்விக்குக் காரணமான ஒன்பதாம் எண் உள்ளவனை கொல்வதற்கு என்ன ஆயுதங்களை தேர்வு செய்வது எப்படிக் கொல்வது என்று நினைத்தபடியே மௌனமாக விளையாடினான் ஆறாம் எண்
யூகம் 5 : இந்தச் சீட்டுவிளையாட்டு ஒரு சதித்திட்ட்ம் இதைத் தீட்டியவள் 9ம் எண்ணின் கள்ளக்காதலி அவள் மூவரையும ஒழிப்பதற்காக இதை ஏற்பாடு செய்திருக்கிறாள்,  இந்தச் சதி அவள் நினைத்த்து போல நடக்க கூடாது, ஆகவே ஆட்ட முடிவில் அவளைக் கொன்றுவிட வேண்டும் என்று நினைத்தான்3 எண் உள்ளவன்
யூகம் 6   :கையில் உள்ள சீட்டுக்ள் யாவும் உயிருள்ள பறவைகள் போல பறந்துவிடந்து துடிக்கின்றன, அதைக் கட்டுபடுத்தி வைப்பது சிரம்மானது என்று திகைத்தபடியே சீட்டை இறுக்கமாகப் பற்றிக் கொண்டான் ஆறு எண் உள்ளவன்
யூகம் 7  :இரவும் பகலும் மாறிக் கொண்டேயிருக்கிறது, கடிகாரம் இல்லாமல் சீட்டின் உதவியாலே காலத்தை அளக்கமுடிகிறது, இதுவரை எவ்வளவு சீட்டுகள் இறஙகியிருக்கின்ற்ன  எவ்வளவு ஆட்ட்ம் முடிந்திருக்கிறது என்பதை வைத்து நாட்களைக் கணக்கிடுவது ஒரு விசித்திரம். என்றான் 3ம் எண் உள்ளவ்ன்
யூகம் 8  :ஒரு சீட்டினை ஒருவன் கையில் இருந்து கிழே போடுவதற்கும் மற்றவன் அதை எடுப்பதற்கும் இடையில் எண்ணிக்கையற்ற  உலக நிகழ்வுகள் நடக்கின்றன, பலர் பிறக்கிறார்கள் பலர் சாகிறார்கள் பலர் புணர்கிறார்கள் பலர் முத்த்மிட்டுக் கொள்கிறார்கள் பல கொலைகள் நடக்கின்றன பலர் காதலிக்க துவஙகுகிறார்கள் பலர் துரோகம் செய்கிறார்கள், பலர் செய்வதற்கு எதுவும் இல்லாமல் சகமனிதனை துன்புறுத்துகிறார்கள், இதற்கு இடையில் தான் சீட்டாட்டம் நடக்கிறது என்றான 9ம் எண் உள்ளவன
யூகம் 9  :ஒரு மலர் உதிர்வதை அல்லது பூப்பதைப் போல ஒரு விந்தையே ஒரு சீட்டை எடுப்பது, சீட்டு விளையாட்டு ஒரு விசித்திரத் தியானம், அங்கே நமது எண்ணங்கள் ஒடுங்கிவிடுகின்றன நாம் கரைந்து போய்விடுகிறோம் கண்களும் கைகளும் மட்டுமே செயல்படுகின்றன என்றான் ஆறாம் எண்
யூகம் 10 : சீட்டுவிளையாட்டு என்பது நமது வெறுப்பு. ஆசை மற்றும் கோபத்தை அளவிட உதவும் ஒரு கருவி. சீட்டு ஆடுகின்றவர்கள் தன்னைப் பரிசோதனை செய்து கொள்கிறார்கள், சீட்டுவிளையாட்டில் தோல்வியை இயல்பாக ஒருவராலும் எடுத்துக் கொள்ள முடியாது, புத்தன் சீட்டு ஆடினாலும் தோற்பதை கண்டு கோபமடைந்தே தீருவான் என்றாம் 3ம் எண் ஆள்
யூகம் 11  :சீட்டுவிளையாட்டில் மனம் எப்போதுமே இல்லாத விசயங்களைக் கற்பனை செய்கிறது, நடக்காத சாத்தியங்களை நிறைவேற்றி பார்க்கிறது, சீட்டு ஆடுபவர்களுக்கு உலகம் ஒரு இலந்தைபழம் அளவு சுருங்கிப்போய்விடுகிறது என்றான் 9ம் எண் ஆள்
யூகம் 12  :ஒருவர் கையில் உள்ள சீட்டும் மற்றவர் கையில் உள்ள சீட்டும் விநோதமான உறவு கொண்டிருக்கின்றன, அவை மனிதர்களின் வழியே தன் ஒன்ற சேருதலையும் பிரிவையும் ஏற்படுத்திக் கொள்கின்றன என்றான் 6ம் எண் மனிதன்
யூகம் 13  :எல்லாச் சீட்டுகளும் ஒன்று போலக் காணப்பட்டாலும் அதன் மதிப்பும் சேர்கையும் ஒன்றுபோல இருப்பதில்லை ஆகவே உலகை கையில் எடுத்து விளையாடுவதன் சிறிய வடிவமே சீட்டாட்டம், ஆகவே சீட்டாடி வெல்ல தெரிந்தவன் உலகை எளிதாக புரிந்து கொண்டுவிடுவான் என்றான் 9ம் எண்மனிதன்
யூகம் 14  :ஒவ்வொரு முறை சீட்டில் தோற்கும் போது காம்ம் பொஙகுகிறது, வென்றவனும் காமத்தை பற்றியே நினைக்கிறான், ஆகவே சீட்டு விளையாட்டின் வெற்றியும் தோல்வியும காமத்தூண்டல்களே, எல்லா விளையாட்டின் வெற்றியும் புணர்ச்சியால் மட்டுமே சாந்தியடைகிறது மனிதன் தனது ஒரே புகலிடமாக பாலின்பத்தையே கொண்டிருக்கிறான் என்றான் 3ம் எண் உள்ளவன்
யூகம் 15  :சீட்டுவிளையாட்டின் போது உருவாகும் மௌனம் தூக்கின் முன்னால் நிற்கும் மௌனம் போல அடர்த்தியானது, அது தொடர்ந்து மனதை வன்முறையை நோக்கியே செலுத்திக் கொண்டிருக்கிறது, சீட்டு மனிதன் கண்டுபிடித்த ரகசியமான ஆயுத்ம் என்று நினைத்தான் 6ம் எண் கொண்டவன்
யூகம் 16  :ஏதாவது ஒரு நிமிசம் 3வரும் ஒரே சீட்டைத் தேர்வு செய்வதும் 3வரும் ஒரே சீட்டை கிழே போடுவதும் நடக்கிறது  அப்போது ஒரே ஆள் தான் மூன்று தோற்றத்தில் விளையாடுவது போல உள்ளது என்றான் 9ம் ஆள்.  சீட்டாட்டம் உச்சமடையும் போது நிர்வாணமாக இருப்பது போலேவே தோன்றுகிறது, அறைக்கு வெளியே உள்ள உலகின் சிறு சப்தம் கூட பேரோசையாகி விடுகிறது, ஆகவே சீட்டு விளையாட்டு உலகின் நுண்மையை மனம் அறியும் தருணம் என்றான் 6ம் எண் மனிதன்
யூகம் 17  :சீட்டில் வைக்கப் பணம் இல்லாத போது வீட்டின் அருகாமையில் உள்ள மரங்கள் தெருநாய்கள் காட்டில் உள்ள மிருகங்கள் அருவி ஆறு மலை ஆகாசம் நட்சத்திரம் சூரியன் சந்திரன் என எதையும் பந்தயப்பொருளாக வைத்துச் சூதாடலாம், அது ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்றே, அதை எவரும் ஆட்சேபணை செய்ய முடியாது. சீட்டுவிளையாட்டு   கணிதத்தின் உன்னத நிலை அதை விளையாடி அனுபவிக்கிறோம் என்றான் 9ம் எண் உள்ளவன்
யூகம் 18  :கள்ளத்தனத்தை கற்றுக் கொள்வதற்கு எளிமையான பயிற்சியே சூதாட்டம், சீட்டு ஆடும் மேஜையில் வைக்கபடும் உணவு பானகம் இரண்டும் ருசியிழந்துவிடுகின்றன, சூது தேனையும் கசக்க செய்யக்கூடியது என்றான் 3ம் எண்காரன்
யூகம் 19  :விதியை நேர்கொள்ள விரும்பினால் சூதாடி பார்க்கலாம்,   எல்லா சீட்டுவிளையாட்டிலும் கண்ணுக்கு தெரியாமல் விதியும் சேர்ந்து உட்கார்ந்தே ஆடுகிறது, அதன் பரிகாசக்குரலை பல நேரங்களில் நாம் கேட்க முடியும் என்றான் 6ம் எண்
யூகம் 20  :தோற்றுத்திரும்புகின்றவன் அடையும் வலி சொல்லற்றது, அதை புரிந்து கொள்ள சூதாடினால் மட்டுமே முடியும் ஆகவே சூதாட்டம் என்பது வலியை விரும்பி ஏற்றுக் கொள்வது என்றான் 9ம் எண்
இப்படி அவர்கள் நினைத்த யூகங்களைத் தாண்டி அவர்கள் விளையாடிக் கொண்டேயிருந்தார்க்ள் 8365 நாட்கள் தொடர்ச்சியாக அவர்கள் விளையாடிய போதும் சீட்டாட்டம் முடிவடையவேயில்லை, ஒரு நாள் சமையல்காரன் அந்த அறைகதவை திற்ந்து பார்த்த உள்ள மூன்று காலி நாற்காலிகள் மட்டுமே இருந்தன, அதன் முன்னே உள்ள மேஜையில் சீட்டுகள் சிதறியிருந்தன, அவர்களை காணவில்லை, எங்கே போனார்கள் யார் ஜெயித்தார்கள் எப்போது வெளியேறி போனார்கள் என்பது இன்றுவரை மர்ம்மாக இருக்கிறது, சீட்டுவிளையாட்டினைப் போலவே அவர்கள் என்ன ஆனார்கள் என்பதற்கும் முடிவில்லாத சாத்தியங்கங்கள் இருக்கின்றன, அதனால் அவர்களை யாரும் தேடவேயில்லை
••
 (உயிர்மை இதழில் வெளியான சிறுகதை)

No comments:

Post a Comment