Tuesday, May 3, 2011

வள்ளலாரும் பாரதியும்

ப. சரவணன்
"எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்துகொள்ளக்கூடிய சந்தம், பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு இவற்றினை யுடைய காவியம் ஒன்று தற்காலத்தில் செய்துதருவோன் தாய்மொழிக்குப் புதிய உயிர் தருவோன் ஆகிறான்" என்று 1912இல் பாரதி தமது பாஞ்சாலி சபதம் முன்னுரையில் எழுதியிருந்தான். தனக்கென எத்தனையோ தகுதிப்பாடுகளைப் பெற்றுள்ள தமிழ் மொழி, மேலே சுட்டிய நிலையில் இல்லை என்பதே பாரதியின் நிலைப்பாடு. பாரதிக்கு முன்பே இதைச் சுட்டியவர்களும் உண்டு.1 எனவே அதனைச் சரிசெய்யும் பொருட்டுத் தமது படைப்புகள் அமைய வேண்டும் என்னும் மன உந்தல், பாரதியைப் பாஞ்சாலி சபதத்தையும் இன்ன பிற படைப்புகளையும் எளிய முறையில் எழுத வைத்தது.
பாரதியும் தொடக்க காலத்தில் கடின நடையில்தான் பாப் புனைந்திருக்கிறான். மதுரையிலிருந்து வெளியான விவேகபானு இதழில், அவன் எழுதிய 'தனிமையிரக்கம்' என்னும் சானட் வடிவப் பாடல் இதற்கு உதாரணம். இது குறித்துக் கைலாசபதி பின்வருமாறு கூறுவார்: "பாரதியாரது சமகாலத்துப் புலவர்களிடம் காணப்படும் இரு பண்புகளாம் பழந்தமிழ் நடையும் ஆங்கில வாடையும் தொடக்கத்தில் தவிர்க்க முடியாதபடி பாரதியிடத்தும் காணப்படுகின்றன. ஆனால் மற்றையோர் அப்பண்புகளுக்கு உருவங் கொடுத்துக்கொண்டிருக்க, பாரதியோ மின்னல் வேகத்தில் புதுப் பிறவி பெற்றவன்போல் தனிப் பாதையொன்றை வகுத்துக்கொள்கிறான். இதிலேதான் அவன் தனது சகபாடிகளிலிருந்து விலகி முன்னோடிகள் சிலரைச் சார்ந்துகொள்கிறான்".2
ஆனால் இந்த எளிமையைப் பாரதி எங்கிருந்து பெற்றான் என்பதைத் தமிழ்கூறு நல்லுலகம் கவனிக்கத் தவறிவிட்டது. பாரதியின் புதுமைப் பண்பை அறிய வேண்டுமானால் அவனது முன்னோடிகளையும் சேர்த்து அறிய வேண்டும். தமிழ் இலக்கிய வரலாற்றில், அவனுக்கு முன்னோடிகளாக இருந்து கவிவளமூட்டிய கர்த்தாக்களைக் காட்டுவது மிக அரிது.
பாரதி, தனது இலக்கிய முன்னோடிகள் பலரையும் தம்முடைய படைப்புகளில் பொதிந்துள்ளான் என்றாலும் எளிய நடையைக் கையாளுவதில் வள்ளலாரையே அவன் பின்பற்றியுள்ளான் எனக் கருத இடமுண்டு. பாஞ்சாலி சபதத்தின் முன்னுரை மேற்கோளைத் திருவருட்பாவோடு அப்படியே பொருத்திப் பார்க்க முடியும். காவியத்துக்குச் சொன்னது பாட்டுக்கு. இசையும் சொற்களின் எளிமையும் அருட்பா எல்லாவற்றிலும் காணக் கிடைப்பவை; சந்தம் இசைப்பாடல்களில் கேட்பது; மக்கள் விரும்பும் மெட்டு கீர்த்தனைகளில் அமைந்தது.
எனவே, தமிழுக்கும் தமிழிலக்கியத்திற்கும் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய வள்ளலாரே பாரதியின் எளிய படைப்புக்கு ஆதர்ச புருஷர். இதனை, "தனது அருட்பாக்களைத் தெருப்பாடல் என்று அடக்கமாக அழைத்துக்கொண்ட இராமலிங்கர் போன்றவரின் நோக்கும் வாக்குமே தனது யுகத்திற்கு உகந்தவை என்றுணர்ந்து அவற்றை ஆதாரமாகக் கொண்டு உரைத்தான் பாரதி"3 என்னும் கைலாசபதியின் வரிகளும் சுட்டுகின்றன.
பாரதி வள்ளலாரைத் தன் பாடல்களில் எங்கும் குறிக்கவில்லை. ஆனால் உரைநடையில் இரண்டு இடங்களில் மட்டும் சுட்டிக்காட்டுகிறான். "தமிழ்நாட்டின் புதிய விழிப்புக்கு ஆதிகர்த்தர்கள் இராமலிங்க ஸ்வாமியும் சுதேசமித்திரன் சுப்பிரமணிய ஐயரும்" என்றும், "எம்மதமும் சம்மதம் என்றார் ராமலிங்க ஸ்வாமி" என்றும் எழுதுகிறான்.4 பாரதி வள்ளலாரை நேரிடையாகப் புகழ்ந்து பாடாதபோதும் அவனது வாழ்த்துப்பா ஒன்றில் வள்ளலாரை மறைமுகமாகச் சுட்டுவது தெரிகிறது.
பொய் கயமை சினம் சோம்பர் கவலைமயல்
வீண்விருப்பம் புழுக்கம் அச்சம்
ஐயம் எனும் பேயைஎலாம் ஞானமெனும்
வாளாலே அறுத்துத் தள்ளி
எப்போதும் ஆனந்தச் சுடர்நிலையில்
வாழ்ந்துயிர்கட்கு இனிது செய்வோம்
தப்போதே இவ்வுலகில் அமரநிலை பெற்றிடுவர்.5
பொய், கயமை, சினம் முதலியவற்றைத் தனது ஞான வாளால் அறுத்தெறிந்து மரணமிலாப் பெருவாழ்வு அடைந்தவர் வள்ளலார் என்பது ஐதீகம். அதைத்தான் பாரதி மேற்சுட்டிய பாடலில் கூறுகிறான். எனவே இது வள்ளலாரை மனங்கொண்டு பாரதி பாடியது என நம்ப இடமுண்டு. இனி, வள்ளலார் - பாரதி இருவருக்குமான பொருத்தப்பாட்டை அனுபூதி நிலையில் வைத்து ஆய்வோம்.
II
இறைவனது அருளைப் பெறக்கூடிய வேட்கை மீதூர்ந்து எழும்போது, அந்த இறைவனைத் தன்னுள் தேடும் தவிப்பே அனுபூதியியல் என்று அழைக்கப்படுகிறது. அனுபூதி நிலையை முழுமையாக வரையறுத்துக் கூற முடியாது. அது அவரவர் துய்ப்பு, அனுபவம், முதிர்ச்சி, உணர்வுநிலை முதலியவற்றுக்கு ஏற்ப மாறுபடும்.
அனுபூதி நிலை பெற்றவர்களுக்குப் புறத்தில் உள்ள ஐம்பொறிகளையும் தாண்டி அகச்செவியும் கேட்கும்; உட்கண்ணும் திறக்கும். கற்றவர்கள், தத்துவவாதிகள் இறையருள் எது என்று ஆராய்ந்து வாதமிட்டுக்கொண்டிருக்கும்போது, அனுபூதியாளர்கள் அந்த இறையருளில் மூழ்கித் திளைத்து இன்புற்றுக்கொண்டிருப்பார்கள்; அறிவின் சூட்டிலிருந்து விடுதலை பெற்று அருளின் தன்மையில் குளிர்ச்சி பெறுவார்கள் என்றெல்லாம் சொல்லப்படுகிறது. அது அன்பின் கனிவில் கசிந்து பெறுவது. தன்னை இழந்து அன்பு நிலையில் தலைவனைப் பெறும் காதல் வேட்கையின் முற்றிய வடிவம். இதில் மூன்று சிறப்பு வகைகள் நோக்கத்தக்கன. இசை மூலம் அனுபூதி பெறுவது முதலாவது; நாயக - நாயகி பாவம் மூலம் இறையருள் பெறுவது இரண்டாவது; சித்த மரபில் அனுபூதி பெறுவது மூன்றாவது.7
பாரதி, தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக்கொண்டபோதிலும் சிந்து, கும்மி, கண்ணி, கீர்த்தனை ஆகிய இசைப்பாடல் வடிவங்களில் வள்ளலாரை முன் மாதிரியாகக் கொண்டிருப்பது தெரிகிறது. உதாரணத்திற்கு ஒன்றிரண்டை ஆய்வோம்.
வள்ளலார் கும்மி வடிவத்தில் சண்முகர் கொம்மி, நடேசர் கொம்மி என இரு பதிகங்கள் பாடியுள்ளார். அதில் ஒன்று வருமாறு:
கொம்மியடிப் பெண்கள் கும்மியடி - இரு
கொங்கை குலுங்கவே கும்மியடி
நம்மையாளும் பொன்னம்பல வாணனை
நாடிக் கொம்மி யடியுங்கடி - பதம்
பாடிக் கொம்மி யடியுங்கடி                          (திரு. 2964)

திருவருட்பாவில் மனத்தைப் பறிகொடுத்த பாரதியார் அதே மெட்டில் பின்வருமாறு பாடுகிறார்.
கும்மியடி தமிழ்நாடு முழுதும்
குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி
நம்மைப்பிடித்த பிசாசுகள் போயின
நன்மைகண்டோ மென்று கும்மியடி
                                         (பா.க. பெண்கள் விடுதலைக் கும்மி)

இரண்டிரண்டு அடிகளைக் கொண்டு பாடப்படும் இசைப்பாடல் வடிவத்திற்குக் கண்ணி என்று பெயர். பாங்கிமார் கண்ணி, வெண்ணிலாக் கண்ணி, முறையீட்டுக் கண்ணி, திருவடிக் கண்ணி, பேரன்புக் கண்ணி ஆகியன வள்ளலார் பாடிய கண்ணிக்குச் சான்று. இதில்,
தன்னை யறிந்தின்பமுற வெண்ணிலாவே - ஒரு
தந்திரம் நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவே
                                                                              (திரு. 2847)

என்னும் வெண்ணிலாக் கண்ணி புகழ்பெற்றது.
நிலவிடத்து மனத்தைப் பறிகொடுக்காத கவிஞர்கள் இல்லை. பாரதியும் அப்படியே. ஆனால் வடிவத்திற்கு அவன் வள்ளலாரை உள்வாங்கிக்கொள்கிறான்.
எல்லை யில்லாததோர் வானக் கடலிடை
        வெண்ணிலாவே - விழிக்
கின்ப மளிப்பதோர் தீவென் றிலகுவை
        வெண்ணிலாவே              (பா.க. தோத்திரப் பாடல்கள்)
'தன்னையறிந்து இன்பமுற' என்று வள்ளலார் பாட, பாரதி 'விழிக்கு இன்பமளிப்ப' என்று பாடியுள்ளான். மேலும் பாடலின் முதலில், 'வெண்ணிலா என்பது இங்குச் சந்திரனுடைய பிரகாசத்தையன்று, சந்திரனையே குறிப்பது' என்று குறிப்பு எழுதப்பட்டுள்ளது. இது வள்ளலாரின் வெண்ணிலா பாட்டுக்குக் குறிப்புரைக்கும் சன்மார்க்கிகளின் கருத்தோடு ஒத்துப்போகிறது.
நாயக - நாயகி பாவம்
அகத்துறைப் பாடல்களைப் இரண்டு நிலைகளில் வைத்துப் பார்ப்பர். ஒன்று, புலவர் தனித்து நின்று தலைவன், தலைவி இருவருடைய காதல் வாழ்வைப் புறவயமாகப் பாடுவது. மற்றொன்று, பாடுகின்றவர் - அவர் ஆணோ/பெண்ணோ - தன்னை நாயகியாகவும் பரம்பொருளை நாயகனாகவும் வைத்துத் தன் காதலைப் பாடுவது. இதையே நாயக - நாயகி பாவம் என்பர். இதன் மூலம், "இறைவனைத் தன்னேரிலா ஆண்மைத் தத்துவமாக்கி, மானிட உயிரைப் பெண்மையின் அடையாளமாக்கி இரண்டின் உறவையும் 'ஆனுபூதிப் பரவசம்' எனப் பெயரிட்டு மானிடத்தைத் தெய்வத்துடன் இணைக்கின்ற வழியாய் மண்ணின் வாழ்க்கைக்குப் பக்திக் கவிஞர்கள் உயிர்ப்பு தருகின்றனர்".7 என்றுமுள அழியாக் காதலைப் பாடியுருகும் இந்த நாயக - நாயகி பாவத்தை ஆழ்வார்களும் நாயன்மார்களும் பாடியருளினர்.8 வள்ளலார் இதனை மேலும் வளர்த்தெடுத்தார். பாரதி போன்றோருக்கு வழிகாட்டினார்.
இனி வள்ளலாரின் நாயக - நாயகி பாவத்தோடு பாரதியின் பாடல்களைப் பொருத்திப் பார்க்கலாம். தலைவியைக் காணாது அவளைத் தவிக்க விட்டுவிட்டுச் சென்ற தலைவனை ஊரார் ஏசுகின்றனர் (திரு. 1686 - 1690) என்றாலும், "நான் அவர்மேல் கொண்ட காதலைக் கனவிலும் ஒழியேன்" என்று சூளுரைக்கிறாள் அவள் (திரு. 1696 - 1707). ஊராரின் எள்ளல் தலைவியின் உறுதியைக் குலைக்கவில்லை என்றபோதும், தன்னை ஏற்றருள் செய்யாத தலைவனை அவள் கடிந்து பேசுகிறாள் (திரு. 1708- 1717). அதற்காகப் பின் மனம் வருந்தி "சினந்துரைத்தேன் பிழைகள் எல்லாம் மனம் பொறுத்தல் வேண்டும்" (திரு. 3010), "முனிந்துரைத்த பிழைபொறுத்துக் கனிந்தருளல் வேண்டும்" (திரு. 3009), "வெறுத்துரைத்தேன் பிழைகளெல்லாம் பொறுத்தருளல் வேண்டும்" (திரு. 3007) என்று தலைவனிடம் மன்னிப்பைக் கோருகிறாள். அந்நிலையில் தலைவி. "என்பாட்டுக் கிருந்தேன் இங்கெனை வலிந்து நீயே / மணங்குறித்துக் கொண்டாய் நீ கொண்டது தொட்டு எனது / மனம் வேறுபட்டதிலை. . ." (திரு. 3013) என்று தனது ஒன்றிய மனநிலையைச் சொல்லி முறையிடுகிறாள். அப்போதாவது தலைவனுக்கு மனமிரங்குகிறதா என்றால் அதுதான் இல்லை. அவளது கோபம் அதிகரிக்கிறது. எனவே "பின்னுளநான் பிதற்றல் எலாம் வேறு குறித்து எனை / பிழையேற்ற நினைத்திடிலோ பெருவழக்கிடுவேன். . . " (திரு. 3021) என்று தலைவனை அச்சுறுத்துகிறாள். இந்த அச்சுறுத்தலுக்குப் பின்புதான் தலைவன் அவளை ஏற்றருள்கிறான். தலைவன் தன்னை ஆட்கொண்டு இன்பம் தந்தமைக்கு "என்ன புண்ணியம் செய்தேனோ? என்று தன் தாயிடம் சொல்லி மகிழ்ச்சிக் கூத்தாடுகிறாள்" (திரு. 4495). இந்த இன்பம் உடம்பால் வந்தது என்றாலும் மானிட உடம்பாகிய அழியும் கருவியாலன்று. மனமே இங்கு உடம்பு; இறைவனுடன் இரண்டறக் கூடித் திளைக்கும் ஆன்மக் களிப்பு இதுவே. அழியாத என்றுமுள பேரின்பம் என இதைக் கூறல் தகும்.9
ஊண்செய்த மெய்யும் உயிரும் உணர்வும் ஒளிமயமாக்
கோன்செய வேபெற்றுக் கொண்டேன் உண்டேன் அருட்கோன் அமுதே
                                                                                   (திரு. 4814)

என்னும் தலைவியின் சொற்கள் உடம்பைத் தாண்டி உயிரும் உணர்வும் ஒளிமயமாய் இன்பக் கடலில் மூழ்கியதைச் சுட்டும். அந்த மகிழ்ச்சியை இன்னதென்று சொல்ல முடியாது. "ஏழ்கடலில் பெரிதன்றோ நான் அடைந்த சுகம்?" என்று அவள் வியப்பது உண்மையன்றோ? தினையளவுகூட விகற்பமில்லாத இந்தக் கலப்பால் பெற்ற நிறைவைச் சொல்லால் விளக்க முடியாது. "மகிழ்ந்து நினைத்திடுந்தோறும் மனம் கனிவுற்றுருகி இனித்தினிது பொங்கி" அந்த இன்பம் தளும்பி நிற்கிறது.
சிவபெருமானைத் தலைவனாகவும் தன்னைத் தலைவியாகவும் கொண்டு பாடிய வள்ளலாரின் நாயக - நாயகி பாவத்தைப் பாரதியின் 'கண்ணம்மா'விலும் காணலாம். தன்னை ஏற்றருள் புரியாத தலைவனைப் பார்த்து பாரதியின் கண்ணம்மா,
நேரம் முழுதிலுமப் பாவிதன்னையே - உள்ளம்
நினைத்து மறுகுதடி தங்கமே தங்கம்
(பா.க., கண்ணன் என் காதலன், பாங்கி தூது. 8)

என்று உருகுகிறாள். அருட்பாத் தலைவி உருகுவதைப் போன்றதே கண்ணம்மாவின் நிலையும். என்றாலும் தலைவன் மனம் இரங்கவில்லை. எனவே உடனடியாகவே அவனை மிரட்டும் தொனியில்
ஆற்றங்கரை யதனில் முன்ன மொருநாள் - எனை
அழைத்துத் தனியிடத்திற் பேசிய தெல்லாம்
தூற்றி நகர்முரசு சாற்றுவன்... (மேற்படி, 5)

என்று அச்சுறுத்துகிறாள். அருட்பாத் தலைவியைப் போல் மன்னிப்பைக் கோரி மிரட்டும் பாணி கண்ணம்மாவுக்குத் தெரியவில்லை. ஏனெனில் அவள் பாரதியின் புதுமைப்பெண். அதனால்தான் முன்னவள் 'வழக்கிடுவேன்' என்று சொல்ல. இவள் 'தூற்றி நகர்முரசு சாற்றுவன்' என்கிறாள். வழக்கிடும் செய்தி எல்லோருக்கும் தெரிய வாய்ப்பில்லை. முரசறைந்து கூறும் செய்தி எவருக்கும் தெரியாமல்போக வாய்ப்பில்லை.
அச்சுறுத்தலுக்கு அடிபணிந்த தலைவனோடு கூடிப் பின் களிவெள்ளத்தில் மூழ்குகிறாள் கண்ணம்மா. இதை அவள் மட்டுமே நினைந்து நினைந்து இன்புறுகிறாள். சொல்ல வார்த்தையில்லை. சொல்லாமலிருக்கவும் முடியவில்லை. இறுதியில் அந்தக் சுகத்தை
எண்ணும் பொழுதி லெல்லாம் - அவன்கை
இட்ட விடத்தினிலே
தண்ணென் றிருந்ததடீ - புதிதோர்
சாந்தி பிறந்ததடீ
                                                  (பா.க., கண்ணன் என்காதலன். 7)

என்று கோடிட்டுக் காட்டுகிறாள்.
பாரதியின் படைப்புகளுள் குறிப்பாக அகத்துறைப் பாடல்களை வாசிப்பவர்களுக்கு அவனது புதுமையை எண்ணி வியப்புறத் தோன்றும். ஆனால் வள்ளலாரின் அடிச்சுவட்டிலேயே அந்தப் பயணம் செல்வதை மறந்துவிடக் கூடாது. அதனால்தான் "திருக்கோவை யாரையும் ராமலிங்க சுவாமிகளின் திருவருட்பாவையும் அனுபவித்த தமிழருக்கு இவ்விதம் வழிபடும் துறை புதிதாகப் படாது"18 என்று பாரதியின் கண்ணன் பாட்டை மதிப்பிடுகிறார் வ.வே.சு. ஐயர்.
சித்தர் மரபால் அனுபூதி பெறல்
சித்தர்கள் என்போர் யார் என்பதை வரையறுப்பது எளிதல்லவாயினும் பொதுவில் வள்ளலாரை சித்த மரபில் அடக்கலாம். மட்டுமன்றி அவரே தன்னை, முத்தி நிலை பெற்றவர்கள் போற்றும் அருட்சித்தராகிய சிவனது மகன் நான் (திரு. 5593) என்று தனது சித்த மரபை நிலைநாட்டுகிறார். பாரதியும் தன்னை ஒரு சித்தர் என்றே குறிப்பிட்டுக்கொள்வதும் நினைக்கத்தக்கது.
வள்ளலாரின் கொள்கைகளுள் மிக முக்கியமானது மரணமிலாப் பெருவாழ்வும் அதற்கு அடிப்படையான ஆன்மநேய ஒருமைப்பாடும். முத்தியின்பத்தை நித்திய தேகத்துடனேயே அனுபவிக்க வேண்டும் என்பதே வள்ளலாரின் நோக்கம். தான் மட்டுமன்றி இவ்வுலக மாந்தர்களும் "இகத்தே பரத்தைப் பெற்று மகிழ்ந்திட" அவர் விழைந்தார். அதற்கு வழிகாட்டுவதற்காகவே இறைவன் தன்னை அனுப்பியதாகவும் வள்ளலார் கூறுகிறார். பாரதியாரும், "கலியுகத்தைக் கிருதயுகமாக மாற்ற வேண்டும் என்பது தெய்வம் எனக்கிட்ட ஆணை"11 என்று கூறியுள்ளார்.
எல்லா உயிர்களையும் சமமாகப் பாவிக்கும் பண்பே ஆன்மநேய ஒருமைப்பாடு எனப்படும். "எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம்முயிர்போல் எண்ணி உள்ளே ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார் உள்ளம் எம்பெருமான் நடம் புரியும் இடம்" (திரு. 5297) என்கிறார் வள்ளலார். இதையே பாரதியும்.
அண்ட பகிரண்டங்கள் எல்லாவற்றையும் உள்ளே இருந்து ஆட்டுவிக்கும் பரஞ்சுடரே நம்மை சூழும் அனந்த கோடி ஜீவராசிகளாக நின்று களிக்கிறது.
உன்னுடைய ஆத்மாவும் உலகத்தினுடைய ஆத்மாவும் ஒன்று. நீ, நான், முதலை, ஆமை, ஈ, கருடன், கழுதை எல்லோரும் ஓருயிர்12
என்கிறான். எல்லா உயிர்களையும் சமமாகப் பாவிக்கச் சொன்ன வள்ளலாரின் ஆன்மநேய ஒருமைப்பாட்டின் தத்துவத்தையே பாரதி வழிமொழிந்துள்ளான் என்பதை மேலுள்ள வரிகள் சுட்டிநிற்கின்றன.
மரணத்தை வெல்ல விரும்பிய வள்ளலார் தனது சத்திய விண்ணப்பத்தில்,
இறைவனிடத்து ஆறறிவுள்ள உயர்வுடைத்தாகிய தேகத்தைப் பெற்று யான், இத்தேகத்திற்கு இடைக்கிடை நேருகின்ற மரணம், பிணி, மூப்பு, துன்பம் முதலிய அவத்தைகள் எல்லாவற்றையும் நிவர்த்தி செய்து இத்தேகத்தை நித்திய தேகமாக்கிக்கொண்டு எக்காலத்தும் எவரிடத்தும் எத்துணையும் பெற்று வாழ்தல் வேண்டும் என்பதே எனது சத்தியமான அதிதீவிர முயற்சியாக இருக்கிறது.13
என்று கூறுகிறார். அதன் பிறகு இறைவன் அதை அவருக்கு அளித்தான். இதனைக் "காற்றாலே புவியாலே ககனமதனாலே / கனலாலே புனலாலே கதிராதியாலே / கூற்றாலே பிணியாலே கொலைக் கருவியாலே/ கோளாலே பிறவியற்றுங் கொடுஞ்செயல்களாலே/ வேற்றாலே யெஞ்ஞான்றும் அழியாதே விளங்கும்/மெய்யளிக்க வேண்டுமென்றேன் விரைந்தளித்தான் எனக்கே. . ." (திரு. 5450) என்கிறது திருவருட்பா.
அருட்சோதி ஆனேன் என்ற அறையப்பா முரசு
அருளாட்சி பெற்றேன் என்று அறையப்பா முரசு
மருட்சார்பு தீர்ந்தேன் என்று அறையப்பா முரசு
மரணந்த விர்ந்தேன் என்று அறையப்பா முரசு
(திரு. 5296)
என்றும் அவர் பாடுகிறார். மட்டுமன்றித் தனக்குப் பின்னால் வரக்கூடிய சமூகமும் இதை அடைய எண்ணி அருட்பெருஞ்சோதி இறைவனைச் சார்ந்தால் "மரணமிலாப் பெருவாழ்வு வாழ்ந்திடலாம் கண்டீர்; பொய் புகலேன் புனைந்துரையேன் சத்தியம் சொல்கின்றேன்" என்று அறிவுறுத்திச் செல்கிறார்.
வள்ளலாரின் மரணமிலாப் பெருவாழ்வில் தன்னைப் பறிகொடுத்த பாரதி அதை அடைந்திட விழைந்ததை அவரது வாழ்க்கைக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. பாரதி "தான் சாகாமலிருக்க வழி கண்டுபிடிக்கப் போவதாக முன்பு ஒருநாள் சொன்னார்"14 என்று யதுகிரி அம்மாள் கூறியிருப்பதும் கவனிக்கத்தக்கது. பாரதி மேலும் கூறுகிறான்.
செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம்
        சேர்ந்திட லாமென்றே எண்ணியிருப்பார்
பித்த மனித ரவர்சொலுஞ் சாத்திரம்
        பேயுரை யாமென்றிங் கூதேடா சங்கம்
இத்தரை மீதினி லேயிந்த நாளினில்
        இப்பொழு தேமுத்தி சேர்ந்திட நாடிச்
சுத்த அறிவு நிலையிற் களிப்பவர்
        தூயர ராமென்றிங் கூதேடா சங்கம்
(பா.க., வேதாந்தப் பாடல்கள்)
செத்த பின்பு மேலுலகம் சேர நினைப்பவர்கள் மூடர்கள். இப்பிறப்பிலேயே நித்திய தேகத்துடன் முத்தியடைய முடியும் என்று மேற்சுட்டிய பாடலில் பாரதி குறிப்பிடுகிறான். இது வள்ளலாரின் மரணமிலாப் பெருவாழ்வுக் கோட்பாட்டுடன் ஒத்தது. அத்துடன் இந்தப் பாடலில் இடம் பெறும் "சுத்த அறிவு நிலை" என்பது வள்ளலார் கூறிய "சுத்த சன்மார்க்க நிலைதான்" என்று அறுதியிட்டுக் கூறுகிறார் ம.பொ.சி.15
மரணத்தை வெல்ல நினைப்பவர்களிடம் பயம் இருக்கக் கூடாது என்பார் வள்ளலார். இது குறித்து 'நித்திய கருமவிதி'யில் தெளிவாகவே கூறியுள்ளார். பயத்தின் மூலம் காற்று விரயமாகும். அது விரயமாகும்போது தேகம் பலவீனப்படும். எனவேதான் பயம் கூடாது என்றார் வள்ளலார். இதைத்தான் பாரதியும்.
அச்சத்தை வேட்கைதனை அழித்துவிட்டால்
அப்போது சாவுமங்கே அழிந்து போகும்
                                                                (பாரதி அறுபத்தாறு. 7)

என்று பாடியுள்ளான். அச்சம் அழியும்போது மரணம் தானாகவே நீங்கும், அப்போது எமன் ஒரு துரும்பு, அந்தச் செருக்கால்தான் பாரதி,
"காலாஉனை நான்சிறு புல்லென மதிக்கிறேன்" என்றும் "காலருகே வாடா! சற்றேஉனை மிதிக்கிறேன்" (பா.க; காலனுக்குரைத்தல்) என்றும் பாடுகிறான்.
வள்ளலாருக்கு கிட்டிய மரணமிலாப் பெருவாழ்வு தனக்குக் கிட்டிவிட்டதாகவே பாரதி கருதிக்கொள்கிறான்.
பார்மீது நான்சாகா திருப்பேன் காண்பீர்
                                                                (பாரதி அறுபத்தாறு - 6)

நலிவுமில்லை சாவுமில்லை கேளீர் கேளீர்
                                                                (பாரதி அறுபத்தாறு - 6)

என்றும் அவனால் கட்டியம் கூறமுடிந்தது.
ஆகச் சிறந்த ஒரு படைப்பாளனுக்குரிய படைப்பு தர்மம் யாதெனில், தமக்கு முன்பிருந்த அருளாளர் மரபின் விழுமிய எண்ணங்களை, பண்பாட்டுக் கூறுகளை, இலக்கிய வகைமைகளை உள்வாங்கி, காலத்துக்கேற்ப அவற்றைப் புதுக்கி - ஆனால் அடிப்படைப் பண்புகள் அழியாமல் - பேணிக் காப்பதேயாகும். அப்படிச் செய்யும்போது மரபின் இழையோட்டம் அறுபடாமல் ஒரு பண்பாட்டின் சின்னமாக அது நிலைத்திருக்கும். வள்ளலார் போன்ற அருளாளர்கள் அந்த மரபைச் சிக்கெனப் பிடித்துக்கொண்டார்கள். பாரதி போன்றவர்களுக்கு வழிகாட்டியும் சென்றார்கள். அந்த அடிப்படையில் பாரதிக்கு முன்னோடியாக வள்ளலாரை உணர முடிகிறது.
சான்றுக் குறிப்புகள்:
1. வி.கோ. சூரியநாராயண சாஸ்திரியார் எழுதிய 'தனிப்பாசுரத் தொகை' என்னும் நூலுக்கு 11.07.1901ல் ஜி.யு. போப் எழுதிய அணிந்துரையில் "ஒப்பற்ற தனிச் சிறப்புகளும் நேர்த்தியுமிருந்தும் பொதுமக்கள் தேவைக்கு இயைந்த எளிமையும் பொருள் தெளிவும் தமிழில் பொதுவாகக் குறைவே" என்று எழுதியிருப்பதை நோக்குக.
2. க. கைலாசபதி, ஒப்பியல் இலக்கியம்.
3. க. கைலாசபதி, முன்சுட்டியது. ப. 189
4. பாரதியார் கட்டுரைகள், பாரதி பிரசுராலயம், 1950, பக். 291 & 312.
5. காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கத்தின்மீது பாரதி பாடிய வாழ்த்துப் பாடல்.
6. கி. சுப்பிரமணியன், நீர்மேல் மலர்ந்த நெருப்பு, 2004, பக். 176- 177
7. C.F.E. Supergeon. Mysticism in English Literature, 1913, p. 50
8. T.P. Meenakshisundaram, A History of Tamil Literature, 1965, p. 76.
9. கி. சுப்பிரமணியன், முன்சுட்டியது, ப. 204
10. பாரதியின் கண்ணன் பாட்டுக்கு 1919இல் வ.வே.சு. ஐயர் எழுதிய முன்னுரை.
11. பொய்க்குங் கலியை நான் கொன்று
பூலோ கத்தார் கண்முன்னே
மெய்க்குங் கிருத யுகத்தினையே
கொணர்வேன் தெய்வ விதியிஃதே
                                          (பா.க., விநாயகர் நான்மணிமாலை, 39)

12. பாரதியார் கட்டுரைகள், (சமூகம்), 2005, ப. 307.
13. ம.பொ. சிவஞானம், வள்ளலாரும் பாரதியும், 1965, ப. 20.
14. யதுகிரியம்மாள், பாரதி நினைவுகள். ப. 74.
15. ம.பொ.சி., வள்ளலாரும் பாரதியும், ப.18.


More Info : http://www.kalachuvadu.com/issue-84/bharathi08.asp

No comments:

Post a Comment