பிரம்மச்சாரி, பிரம்மச்சாரி அல்லாதவர் ஆகிய இருவரும் கட்புலனை உபயோகித்தே பார்க்கின்றனர். கடவுளின் மகிமையைக் காண்பதற்கே, பிரம்மச்சாரி கட்புலனைப் பயன்படுத்துகிறான். ஆனால், மற்றவனோ, தன்னைச் சுற்றிலும் உள்ள அற்பத்தனங்களைப் பார்க்கவே அதை உபயோகிக்கிறான். இருவரும் தங்கள்காதுகளை உபயோகிக்கின்றனர். இதில் ஒருவன், கடவுளின் புகழுரையைத் தவிர வேறு எதையும் செவிகொடுத்துக் கேட்பதில்லை. மற்றவனுக்கோ, ஆபாசப் பேச்சுக்களைக் கேட்பதே செவிக்கு விருந்தாக இருக்கிறது. இருவரும் இரவில் நீண்டநேரம் கண் விழிக்கின்றனர். ஒருவன், அந்நேரத்தைப் பிரார்த்தனையில் செலவிடுகிறான்; மற்றவனோ, வெறித்தனமான வீண் களியாட்டங்களில் பாழாக்குகிறான். அந்தராத்மாவுக்கு இருப்பிடமான உடலாகிய திருக்கோயிலுக்கே இருவரும் உணவளிக்கின்றனர். ஒருவன், ஆண்டவனின் திருக்கோயிலைப் பழுதுபடாமல் நல்ல நிலையில் வைத்திருப்பதற்கே அதைச் செய்கிறான். மற்றொருவனோ, கண்டவைகளையெல்லாம் அதில் போட்டு நிரப்பி, அந்தத் தெய்வீகப் பாத்திரத்தைத் துர்நாற்றம் அடிக்கும் சாக்கடை ஆக்கிவிடுகிறான். இவ்விதம் ஒருவருக்கொருவர் எவ்விதச் சம்பந்தமும் இன்றித் தொலைவிலேயே வாழ்கின்றனர். நாளாக ஆக இவ்விருவருக்கும் இடையே இருக்கும் தூரம் அதிகமாகுமே அன்றிக் குறையாது.
பிரம்மச்சரியம் என்பது மனம், வாக்கு, செயல் ஆகிய மூன்றிலும் புலன்களை அடக்குவதேயாகும். மேற்கண்டதைப் போன்ற புலன் அடக்கத்தின் அவசியத்தை ஒவ்வொரு நாளும், மேலும் மேலும் நான் நன்றாக அறிந்துவருகிறேன். பிரம்மச்சரியத்திற்கான சாத்தியங்கள் எவ்விதம் எல்லையற்று இருக்கின்றனவோ, அதே போல் துறவுக்கும் எல்லையில்லாச் சாத்தியங்கள் உண்டு. அத்தகைய பிரம்மச்சரியத்தை ஒரு வரையறைக்கு உட்பட்ட முயற்சியினால் அடைந்துவிடுவது சாத்தியம் அல்ல. அநேகருக்கு அது வெறும் லட்சியமாக மாத்திரமே இருக்க முடியும். பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடித்து ஒழுக விரும்புகிறவர், தம்மிடம் உள்ள குறைபாடுகளை எப்பொழுதும் உணர்ந்தவராக இருப்பார். தமது அடிமனத்தின் மூலை முடுக்குகளில் இருக்கும் ஆசைகளைத் தேடிப்பிடித்து, அவற்றைப் போக்கிக்கொள்ளுவதற்கு இடைவிடாது பாடுபட்டு வருவார். எண்ணங்கள் முற்றும் உறுதி பெற்றாலன்றிப் பூரணமான பிரம்மச்சரியம் சித்திக்காது. தானாகத் தோன்றும் எண்ணம், உள்ளத்தின் ஓர் இச்சையாகும். ஆகையால், எண்ணத்தை அடக்குவது என்பது மனத்தை அடக்குவதுதான் என்று ஆகிறது. மனத்தை அடக்குவதோ, காற்றை அடக்குவதைவிட இன்னும் அதிகக் கஷ்டமானது. என்றாலும், உள்ளத்தினுள் ஆண்டவன் இருந்து வருவதால் மனத்தை அடக்குவதும் சாத்தியமாகிறது. "அது கஷ்டமாக இருப்பதால் அது சாத்தியமானதே அல்ல" என்று யாரும் எண்ணிவிட வேண்டாம். அது மிக உயர்வான லட்சியம். ஆகவே, அதை அடைவதற்கு மிக அதிகமான முயற்சி தேவையாவதில் ஆச்சரியம் எதுவும் இல்லை.
No comments:
Post a Comment