Monday, January 31, 2011

சித்தர்கள் அருளிய யோகாசனம்


தமிழ் மருத்துவ முறையில் கற்பம் மருந்துகள் முதன்மையானது. இதுசித்தர்களால் கண்டுபிடிக்கப்பட்டவை. கற்பம் என்பது உடம்பினை நோயுறாதபடி நல்ல நிலையில் வைத்திருந்து நரை, திரை, மூப்பு இவற்றையும் பிணியினையும் நீக்கும். உடம்பின் மேன்மையை நன்குணர்ந்த சித்தர்கள் நரை, திரை, மூப்பு அறியா நல்லுடலைப் பெற்றவர்கள்.
மனிதன் இல்லறத்தானாயினும் துறவறத்தானாயினும் உடலைப் பேணுதல் முதன்மையானது. இதனைத் திருமூலர் தம்திருமந்திரத்தில் கீழ்க்கண்டவாறு கூறுகின்றார்.
உடம்பார்அழியில் உயிரார் அழிவர்
திறம்பட மெய்ஞ்ஞானம் சேரவு மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.
உடலைக் காப்பது கற்பம். இது உடலைக் கல்லைப் போலாக்கும். கல்லினால் செய்த சிலை பன்னெடுங்காலமானாலும் நரை, திரை, மூப்பு, பிணி அடைவதில்லை. கற்பம் உண்டால் காயம் அழியாது என்கிறார் திருமூலர்.
கற்பம் பொது, சிறப்பு என இருவகைப்படும். பொதுக் கற்பம் உடலைக் காத்து, மேனிக்கு எழிலும் பலமும் தந்து நரை, திரை, சாக்காடு வராமல் தடுக்கும். சிறப்புக் கற்பம் உடல் உறுப்புகளிலாவது உடல் முற்றுமாவது கண்ட பிணியை நீக்கி உடலுக்கு வலிமை தந்து பலம் ஊட்டும்.
பொது, சிறப்பு என்று பிரித்துக் கூறப்பட்ட கற்பத்துள் மூலிகை, தாது, சீவப்பொருள், அவிழ்தங்களும், மேலும் உடலைக் காக்கும் யோகாசனப் பயிற்சிகளும் பிராணாயாமம் என்று சொல்லப்படும் மூச்சுப் பயிற்சியும், யோகம், முப்புவும் அடங்கும். யோகாசனத்தாலும், மூச்சுப் பயிற்சியாலும் பிராணாயமத்தாலும் உடல் கற்பமாகும் என்கின்றனர் சித்தர்கள்.
யோகாசனம்
சிவயோகம் என்னும் இராஜ யோகம் பண்ணுங் காலத்துச் சித்தாசனம் என்னும் ஆசனமும், இல்லறத்தாருக்கு அவர்கள் வாயுதாரனை என்னும் உயிர்ப்பு பண்ணும் காலத்து பத்மாசனமும் சிறந்ததென்று அட்டாங்க யோக நூல்கள் கூறுகின்றன.
பொதுவாக ஆசனங்கள் யாவும் உடற்பயிற்சி போன்றவையே. என்றாலும் ஆசனங்கள் உடற்பயிற்சிகளிலிருந்து செயலிலும் நிலையிலும் வேறுபடுகின்றன. பொதுவான உடற்பயிற்சிகள் உடலின் மேற்புறமுள்ள உடல் தாதுக்களையே வலிமைப்படுத்துகின்றன. ஆனால் யோக இருக்கை என்னும் ஆசனங்கள் உடலின் உள்உறுப்புகளை வலிமைப்படுத்துகின்றன.
ஆசனங்கள் தொகையால் எண்ணற்றன. இதனைத் திருமூலர் ‘பல் ஆசனம்’, ‘எண்ணிலா ஆசனம்’ என்று குறிப்பிடுவதால் அறியலாம். இருப்பினும் இவற்றுள் இன்று ஒரு சில ஆசனங்களே நடைமுறையில் உள்ளன. திருமூலர் தம் தமிழ் மூவாயிரத்தில் பதுமாசனம், பத்திராசனம், குக்குடாசனம், சிங்காசனம், சொத்திராசனம், வீராசனம், கோமுகாசனம் என்ற சிலவற்றை மட்டுமே கூறியுள்ளார். இதில் பத்திரம், வீரம், பதுமம், கோமுகம், குக்குடம் ஆகிய ஐந்து ஆசனங்களும ஞான சாதனைக்கு உரிய ஆசனங்களாகும்.
ஆசனப் பலன்
யோகாசனப் பயிற்சியினால் உடல் உள்ளுறுப்புகள் பலம் அடைகின்றன. உடலில் வீணான சதைப் பிடிப்புகள் உண்டாவதில்லை. உடல் அழகுடன் திகழ்ந்து நோயின்றியும் வலுவுடனும் விளங்கும். உடல் முழுமைக்கும் இரத்த ஓட்டத்தை உண்டாக்கும். சுறுசுறுப்பு, புத்தித் தெளிவு, நினைவாற்றல், மனத்தூய்மை முதலிய உண்டாகும். மேலும் உடலை நல்ல நிலையில் வைத்திருப்பதுடன் பிணிகள் உடலில் சேராதும் தடுக்கின்றன. வந்த பிணியை நீக்குகின்றன.
யோகாசனம் செய்ய மான் தோல், புலித்தோல் சித்திரக் கம்பளம், வெண் துகில், தருப்பை ஆகிய ஆசனங்கள் சிறந்த என்கின்றனர் சித்தர்கள். மேடு பள்ளம் இல்லாத சமதளத்தில் யோகாசனம் செய்ய வேண்டும். கூனுதல், குறுகுதல் தவிர்த்து நிமிர்ந்து நேராய் இருந்து அசனம் செய்ய வேண்டும். பயிற்சிகளை மெதுவாயும், நிதானமாயும் செய்ய வேண்டும்.
கோபம் தவிர்
பொதுவாக மனம் ஒரு நிலையில் இருப்பதில்லை. மனதை ஒருமைப்படுத்தும் எண்ணத்துடனேயே நம் முன்னோர்கள் இறைவழிபாடு, தவம் முதலியன செய்தனர். ஒவ்வொரு உடல் உறுப்புடனும் இணைக்கப்பட்டிருக்கும் நரம்பு உணர்ச்சிகளை மனம் சார்ந்து நிற்கிறது. அதனால்தான் அளவுக்கு மீறிய கோபம் ஏற்படும்போது கண் சிவந்து உடல் சூடேறுகிறது. கோபம் தணிந்ததும் களைப்பும் சோர்வும் ஏற்படுகின்றன. மனதில் மாற்றம் ஏற்பட்டால் உடலிலும் தளரும். ஒன்று வலிவு பெறும் போது மற்றதும் வலிவு பெறும். மனம் தூய்மையானால் அது உடலுக்குக் கேடு விளைவிப்பதில்லை. நன்மை உண்டாக்கும். உடலை நல்ல நிலையில் வைத்திருக்க மனத்தூய்மை வேண்டும். மனதால் உண்டாகும் காமம், வெகுளி, மயக்கம், அவா, துன்பம் ஆகியவை நீங்கின் உடலில் பிணி சேராது. இதனால்தான்,
மனமது தூய்மை யானால்
மந்திரம் செபிக்க வேண்டாம் என்றனர் ஆன்றோர்.

No comments:

Post a Comment