Author: எச்.நடராஜன்
“எலும்புக்கும் சதைக்கும் மருத்துவம் கண்டேன் இதற்கொரு மருத்துவம் கண்டேனா?”
என்று கவிஞர் கண்ணதாசன் சொல்ல மறந்த கொடிய நோய் என்ன தெரியுமா? பொறாமை!
அடுத்தவர் நன்றாய் வாழ்ந்தால்
அடுத்தவர் நல்ல உடை உடுத்தினால்
அடுத்தவர் உயரமாய் இருந்தால்
அடுத்தவர் கணவர் பொருத்தமாய் இருந்தால்
அடுத்த வீட்டு பெண் வசதியாய் இருந்தால்
பொறாமை
யார் எப்படி பொறாமைப்படுவது என்று விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது. முதலில் பொறாமையின் தன்மையை நாம் ஆராய முற்பட வேண்டும்.
ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதோ தான் 200 ஆண்டுகள் உடல் நலத்துடன் வாழப்போவதாகவும், அதனால் தான் நினைத்த காரியம் நடத்திக்காட்டி, தான் பெரியவன் என்று உலகத்தார் மூக்கின் மேல் விரல் வைக்குமாறு காட்டப் போகிறேன் என்று எண்ணத்தில் நான்தான் எல்லாரையும் விட சிறப்பாக இருக்க வேண்டும், என்னைவிட அதிக குணநலன்கள் உடையவனை எனக்கு பிடிக்காது. என் விருப்பத்துக்கு மாறாக நடப்பவர்களை வெறுக்கிறேன். அவர்களை எப்படியாவது கஷ்டப்பட வைத்து அதைக் கண்டு ஆனந்தம் அடையப்போகிறேன்! என்று மனக்கணக்குகள் போடுகிறான்.
இதுதான் மற்றவரைப்பார்த்து பொறாமைப்படும் அனைவரது மனநிலையாகும். இந்தக் கொடிய நோயான பொறாமை எப்படி கையாள்வது, இதிலிருந்து எப்படி மீள்வது? இப்போது சில உதாரணங்களைக் காணலாமா?
1. ஒரே குடும்பத்தில் ஒரு தாய் தனக்குப் பிடித்த மகனை விட, மற்றவர்கள் முன்னேறுவதைக் கண்டு பொறாமைப்படுவது.
2. வியாபாரத்தில் இருப்பவர் நிரந்தர அரசாங்க உத்தியோகத்தில் இருப்பவரைப் பார்த்து ஏங்குவது.
3. திருமணத்தில் மற்ற பெண்களின் நகைகள், புடவைகளைப் பார்த்து பெருமூச்சுவிடும் பெண்கள்.
4. தனது கீழ் பதவி வகிக்கும் அதிகாரி, தன்னை விட திறமையானவராகவும், தன்னைவிட அதிக மதிப்பைப் பெற்றவனாகவும், மனைவி குழந்தையுடன் சந்தோஷமாக வாழ்கிறான் என்ற பொறாமையால் அவரை வெகு தூரத்துக்கு மாற்றல் வாங்கி அவன் குடும்பத்தை எப்படியாவது பிரிந்து துன்பப் பட வைக்க வேண்டும் என்று அலையும் உயர் அதிகாரிகள்!
இப்படியாக பொறாமையின் வெளிபாடுகளை அடுக்கிக்கொண்டே போகலாம். இதற்கெல்லாம் ஆதரமாய் அமைவது சமுதாயத்தில் நாம் உயர்ந்த அந்தஸ்த்தில் வாழ மற்றவர்களின் முன்னேற்றம் தனக்கு தடைக்கல்லாக மாறக்கூடாது, என்ற தற்குறித்தனம்தான். அந்த எதிர்மறை எண்ணம் மிகக் கொடிய வியாதியாய் மாறி அந்த மனிதரை பாடாய் படுத்துகிறது.
இந்த நோய்க்கு மருந்துதான் என்ன? எப்படி வெல்வது?
நாம் வாழ்க்கையின் குறிக்கோளைப் புரிந்து கொண்டால் போதும் எல்லா பிரச்சினைகளும் விலகி விடும்.
எதற்கு வாழ்கிறோம்? இதை ஆராயமல், பிறந்ததற்குக் காரணம் என்ன? தெரியாது! ஏதோ பிறந்தோம் வளர்கிறோம். திருமணம் ஆகிறது. அவரவர்க்கு ஏதோ வேலை கிடைக்கிறது. சிலர் வியாபாரி ஆகிறார்கள். சிலர் ஊர் புகழ, உலகம் புகழ உயர் வாழ்க்கை, உயர்ந்த அந்தஸ்து, கார், பங்களா என வசதிகள் பெருகி மிகச்சிறப்பாக வாழ்கிறார்கள்.
செப்டம்பர் 11, 2002ல் இரண்டு விமானங்களில் பயணம் செய்த பயணிகள் அத்தனை பேரும் உயிர்விடப் போகிறோம் என்று நினைத்தார்களா? சிறிது நேரத்தில் அமெரிக்க வணிக வளாகத்தில் மோதி நாம் உயிர் விடப்போகிறோம் என்று உணர்ந்த சில பயணிகள் மனநிலைமை எப்படி இருந்து இருக்கும்?
உயிருக்கு உயிராய் நேசித்தவர்களை விட்டுவிட்டு சில நிமிடங்களில் உயிர் பிரியப்போவதை எண்ணி எப்படி துடித்திருக்கும் அந்த ஆன்மாக்கள்?
“கொடுத்தவன் உயிரை கேட்கின்றான் அதை இல்லை என்றால் அவன் விடுவானா?” விமானத்தில் இறந்தவர் போக வணிக வளாகத்தில் ஆயிரக்கணக்கில் இறந்தார்கள்! எத்தனை கனவுகளை கலைத்துவிட்டு, எத்தனை உறவினர்களை துக்கத்தில் ஆழ்த்திவிட்டு நொடியில் மறைந்து விட்டனரே?
நேற்றைய கோடீஸ்வரன் தெருவில் சாப்பாட்டுக்காக பிச்சை எடுக்கும் கொடூரத்தை குஜராத் பூகம்பம் காட்டியது. வழியனுப்பியவர்களுக்கு கையைசைத்துவிட்டு விமானத்தில் ஏறிய முன்னால் மத்திய அமைச்சர் மாதவராய் சிந்தியா 30 நிமிடத்தில் விபத்தில் சிக்கி உயிர் இழப்பார் என்று எவருக்குத் தெரியும்? எவ்வளவு தூரத்து கனவுகள் தவிடுபொடியாயின?
இப்படி துக்க நிகழ்ச்சிகளை நான் கோடிட்டுக் காண்பித்தன் நோக்கம் ஒன்றேதான்?
இவற்றை எல்லாம் நான் ஏன் சொல்கிறேன் என்றால் வாழ்க்கையின் நிலையாமையை எடுத்துச் சொல்லத்தான்! வாழ்க்கை எனும் இரயிலில் இறங்கும் இடத்துக்கு பயணச்சீட்டு வாங்கிவிட்டு ஏறிவிட்டோம். பயணம் முடியும் முன்னர் பாவ மூட்டைகளை வீசி எறிந்து விட்டு வெறும் கையுடன் போகலாம். இல்லையெனில் புண்ணியம் எனும் சிறப்புகளைக் கண்டு செல்லலாம். எதை எடுத்துச் செல்வது, எதை விட்டுச் செல்வது என்ற நாம்தான் முடிவு செய்ய வேண்டும். தெரிந்தே பல சுமைகளை சுமந்து செல்லத்தான் வேண்டுமா? சிறிது யோசியுங்கள்.
ஒரு மனிதனால் அவர் எண்ணங்கள் பல கொடிய பாவங்களைச் செய்யத் தூண்டுவது கொடுமைதான். அடுத்தவனை ஒழிக்க வேண்டும் என்றுதான் மனிதன் தவறுக்குமேல் தவறு செய்கிறான். அடுத்தவனைக் கெடுக்க எண்ணும் ஒவ்வொரு எண்ணமும் கொடிய நாகம். திரும்ப வந்து நம்மையே கொத்தும் என்பதை உணர்ந்தால் 95% தவறுகளைநாம் செய்யமாட்டோம்.
வாழ்க்கை வாழ்வதற்கே!
வெல்வதற்கே! வீழ்வதற்கல்ல.
சிலருக்குப் பசுமையான தோட்டமாகவும், சிலருக்கு கொடிய பாலைவனமாகும் வாழ்க்கை அவரவர் விளவுகளுக்கேற்றபடி இயற்கையாக அமைகிறது. அதே சமயத்தில் மனிதன் பிறந்த பிறகு தன் வாழ்க்கையைப் பாலைவனமாகவும், சோலையாகவும் மாற்றும் திறன் நம் உள் மனத்தில் புதைந்து உள்ளது என்பதையும் நாம் உணர்ந்து செயல்பட்டால் எதையும் சாதிக்கலாம்.
நாம் சமீபத்தில் பார்த்த ஆங்கிலப் படத்தின் கதை, ஒரு கப்பல் உடைந்து கரையில் ஒதுக்கப்பட்ட நபர் வருடக் கணக்கில் தனியாகவே ஒரு தீவில் வாழ்ந்து எப்படி தப்பி மறுபடியும் நகரத்துக்கு வருவது என்பதுதான். ஒரு மனிதன் பேச்சுத் துணைக்குக்கூட இல்லாத நேரத்தில் ஒரு பொம்மை உருவம் தயாரித்து அதற்குப் பேர் வைத்து நண்பனாகப் பாவித்து தினமும் அதனுடன் பேசுகிறான். கடைசியில் அந்த பொம்மை கைவிட்டுப் போகும்போது கதறி அழுகிறான். அப்படிப்பட்ட இடத்தில் எங்கிருந்து வரும் போட்டி பொறாமை?
பொறாமையின் இன்னொரு பக்கம். ‘நான்’ என்ற அகந்தை,
வாழ்ந்தவர் கோடி; மறைந்தர் கோடி; மக்கள் மனதில் நின்றவர் யார்?
அகந்தைதான் அழிவுக்கு அடிக்கல் என்று எத்தனையோ பேர் உலகில் தோன்றி பாடங்கள் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் பாவம் மனிதனின் மனம் திரும்பத் திரும்ப தவறுகள் இழைத்துக் கொண்டே இருக்கிறது.
“ஆடி அடங்கும் வாழ்க்கையடா
இதில் ஆறடி நிலமே சொந்தமடா” என்றார்
உவமைக் கவிஞர் சுரதா
ஒரு முஸ்லீம் பெரியவர் சொன்னார்,
எவ்வளவு உயரம் வேண்டுமானாலும் பற!
கீழே விழுந்தால நீ செல்லாக்காசு”
நேற்றுவரை தான் என்ற அகந்தையில் அடுத்தவரை ஏளனப்படுத்திய, பாடகர்கள், இசையமைப்பாளர்கள், நடிகர்கள், அரசியல்வாதிகள் முதலியோர் இன்று எல்லாமிழந்து அகந்தயின் விளைவுகளை வெளிச்சம் போட்டுக் காட்டிய பின்பும்
“உயர உயர பறந்தாலும்
ஊர்க்குருவி பருந்தாகாது”
என்ற உண்மையை உணர மறுக்கிறது மனித மனம்.
பலரது விஷம் ஏறிய நெஞ்சங்கள், உறவு என்ற அழகிய விலை உயர்ந்த கண்ணாடிப் பாத்திரத்தைத் தெரிந்தே போட்டு உடைக்கின்றன! உடைந்த கண்ணாடிப் பாத்திரம் எவ்வளவு ஒட்டினாலும் சேராது. தெரிந்தே அடுத்தவரை வருத்தப்பட வைக்கும் மனிதப் பிறவிகள் நரகத்தின் வாசலை உயிரோடு இருக்கும்போதே தட்ட ஆரம்பித்து விடுகிறார்கள்.
பாவத்தை உரம் போட்டு வளர்க்கும் சகோதர சகோதரிகளே, வேண்டாம், வேண்டாம், வேண்டாம், சற்றே யோசித்து பாதையை உடனே மாற்றிக்கொள்ளுங்கள்.
“உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவர் உறவு கலவாமை வேண்டும்” என்று வள்ளலார் எத்தனையோ முறை கெஞ்சிக்கேட்டும் திருந்த மாட்டேன் என்கிறதே நம் சமுதாயம்?
நான் என்றால் உதடுகள் ஒட்டுவதில்லை. நாம் என்னும்போதுதான் ஒட்டுகிறது.
தன் வீட்டில் ஆயிரம் ஓட்டை இருந்தும், அதை சுத்தம் செய்ய எண்ணம் இல்லாமல் அடுத்த வீட்டு செல்வ நிலைமைப்பார்த்து பொறாமைப்படுதல் எப்படி நியாயம்?
இயற்கையின் மிகப்பெரிய இரகசியம் என்னவென்றால், நாம் செய்யும் எந்த செயல்களும் கண்ணுக்குத் தெரியாத சுற்றல் மோதி அதே வேகத்தில் நம்மிடம் திரும்பி வரும் என்பதுதான். ஆகாயப் பதிவேடுகளில் உலகின் எல்லா நிகழ்ச்சிகளும் படமாக்கப்பட்டு வருகின்றன. பதிக்கப்பட்டு வருகின்றன.
கண்ணுக்குத் தெரியாத ஒரு வீடியோ கேமரா நம்மைப் படம் எடுத்துக்கொண்டுதான் இருக்கிறது இரகசியம் என்பது நம் மனதுக்குள் தான் படைத்தவனது பார்வையில் இல்லை என்பதை உணர வேண்டும். உடலில் உயிர் பிரிந்த பின்பு நம் செயல்களைப் படமாகப் பார்க்கும்போது நம்மால் அதைக் கண் கொண்டு பார்க்க முடியுமா? அப்படிப்பட்ட அவச்செயல்களை செய்யத்தான் வேண்டுமா?
எப்படிப்பட்ட அருமையான பிறவி மனிதப் பிறவி? வீணாக அடுத்தவரை துன்புறுத்தும் செயல்களில் செலவிடுவது, எப்படிப்பட்ட மகத்தான முட்டாள்தனம்?
நான் சொன்னவற்றை ஒரு முறை சுருக்கமாக புரட்டிப் பார்ப்போம்.
வாழ்க்கையின் குறிக்கோளை புரிந்து கொள்ள வேண்டும்.
வாழ்வின் நிலையாமையை உணர வேண்டும்.
‘தான்’ என்ற அகந்தை – நீக்க வேண்டும்.
வாழ்க்கை வாழ்வதற்கே, வீழ்வதற்கல்ல என்பதை உணரவேண்டும்.
மேற்கண்டவற்றை ஆராய்ந்தது நம்மிடம் அந்தக் குறைகள் இருந்தால் அவற்றை உடனே நீக்கி வாழ்வில் மகிழ்ச்சி அடைய முயற்சிக்கலாமே?
No comments:
Post a Comment