Thursday, January 27, 2011

தொழில் இரகசியம் - ஸென் கதை


ஒரு கில்லாடித் திருடனின் மகன் தன் தந்தையிடம் தொழில் இரகசியத்தைத்
தனக்கும் சொல்லித் தர வேண்டும் என்று கேட்டான். அனுபவத்திலும் வயதிலும்
முதிர்ந்த அவனுடையத் தந்தை தன் பிள்ளையிடம், "இன்று இரவு அருகில்
இருக்கும் ஊரில் உள்ள ஒரு பெரிய வீட்டில் கன்னம் வைத்து திருடுவதை பற்றி
உனக்குச் சொல்லித் தருகிறேன்" என்று கூறினான். அந்த பெரிய வீட்டில்
அனைவரும் உறங்கும் போது தன்னுடைய இளவயது மகனை யாருக்கும் தெரியாமல் உள்ளே கூட்டிக் கொண்டு சென்றான். துணிகள் அனைத்தையும் மாட்டி வைக்கும் ஒரு சிறிய அறையில் தன்னுடைய மகனை அனுப்பி சிலத் துணிகளை எடுத்துக் கொண்டு வரச் சொன்னான். மகன் அந்த அறையின் நுழைந்த உடனே வேகமாக அந்த கதவை இழுத்து வெளிப் பக்கமாக பூட்டி சாத்தினான். பின்பு வெளித்தாழ்வார கதவுக்கு சென்ற திருடன் வேகமாக எல்லாருக்கும் சத்தம் கேட்கும் படி தடதடவெனத் தட்டி சத்தம் எழுப்பி விட்டு யாரும் பார்ப்பதற்கு முன்பு அங்கிருந்து வெளியேறினான்.

வீட்டில் இருந்த அனைவரும் சத்தம் கேட்டு விழித்தனர். வேலைக்காரப் பெண் ஒருத்தியிடம் விளக்கு ஒன்றினைக் கொடுத்து, "மேலேயுள்ள துணிகள் அறையில் ஏதோ சத்தம் கேட்கிறது. போய் என்னச் சத்தம் என்று பார்" என்று அனுப்பி வைத்தாள் அந்த வீட்டு எஜமானி. உள்ளேயிருந்த பையனுக்கோ தன் வாழ்நாளிலேயே பார்த்திராத பயம் உடலெல்லாம் பரவ ஆரம்பித்தது. வேலைக்காரப் பெண் அருகில் நடந்து வரும் சத்தம் கேட்டதும், "மியாவ், மியாவ்" எனப் பூனையைப் போல சத்தம் கொடுக்க ஆரம்பித்தான். ஏதோ பூனை உள்ளே மாட்டிக் கொண்டிருக்கிறது என நினைத்து கதவைத் திறந்தாள் வேலைக்காரி. உடனடியாக வெளியே ஓடிவந்த பையன் அவள் கையிலிருந்த விளக்கை தட்டி அனைத்து விட்டு வெகு வேகமாக திறந்திருந்த வெளித்தாழ்வாரத்தின் வழியாக ஓடினான்.

வேலைக்காரி, "திருடன், திருடன்" என கூச்சலிட்டதைப் பார்த்ததும், வீட்டில் இருந்தவர்கள் வெளியே ஓடினவனைத் துரத்த ஆரம்பித்தார்கள். பையனும் தன்னுயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் வேகத்துடன் அங்கிருந்து வேகமாக ஓட ஆரம்பித்தான். கொஞ்சம் தூரம் ஓடியவன் அருகிலிருந்த கிணற்றைப் பார்த்தான். அதில் தன்னுடைய சட்டையைக் கழற்றி எறிந்து விட்டு கீழேயிருந்த பெரியக் கல்லை எடுத்து போட்டான். பின்பு அருகில் இருந்த புதரில் மறைந்து கொண்டான். இருட்டில் அவனைத் துரத்திக் கொண்டு வந்தவர்கள் கிணற்றில் சத்தம் கேட்கவே அதனுள்ளே விளக்கைக் காட்டி பார்க்க ஆரம்பித்தனர்.

இந்த சந்தர்பத்தை பயன்படுத்திய சிறுவன் அங்கிருந்து மெதுவாக நழுவினான். ஒரு மணி நேரம் கழித்து வேர்க்க விறுவிறுக்கத் தன்னுடைய வீட்டை அடைந்தவன், அந்த சோர்விலும் "அப்பா" என்று ஆத்திரம் பொங்க அடித்தொண்டையிலிருந்து கத்தினான். "எதற்காக என்னை துணியறையில் வைத்து பூட்டீனீர்கள்? எங்கே அகப்பட்டு விடுவோனோ என்ற பயம் பட்டும் என்னிடத்தில் இல்லாவிட்டால், என்னால் அங்கிருந்து தப்பியிருக்கவே முடியாது, என்னுடைய முழுசக்தியையும், கற்பனையையும் உபயோகிதித்ததால்
மட்டுமே என்னால் அந்த அறையிலிருந்து வெளியே வர முடிந்தது" என்றான்.
அனுபவம் வாயந்த அவனுடையத் தந்தையோ புன்னகையுடன், "மகனே, திருட்டுக் கலையின் முதல் பாடத்தினை இன்று நீ கற்றுக் கொண்டு விட்டாய்" என்றார்.

1 comment: