பிரம்மச்சரியத்திற்கு உணவைத் தேர்ந்தெடுப்பதும், கட்டுப்படுத்துவதும் எவ்விதம் அவசியமோ, அதேபோல் அதன் புற உதவிக்கு, உண்ணாவிரதம் அவசியம். புலன் உணர்ச்சிகள் கட்டுக்கு அடங்காதவை. மேலும், கீழும், எல்லாப் பக்கங்களிலும் சரியாகத் தடுத்து வைத்தால்தான் அவற்றை அடக்கிவைக்க இயலும். பசி வந்திடப் பத்தும் பறந்து போம் என்பது அனைவரும் அறிந்ததே. ஆகையால், உண்ணா விரதம் இருப்பது புலன்களை அடக்குவதில் அதிக உதவியாக இருக்கும் என்பதில் எனக்குச் சிறிதும் சந்தேகமே இல்லை. ஆனால், சிலர் விஷயத்தில் பட்டினி விரதம் பயன்படுவதில்லை. ஏனெனில், சாப்பிடாமல் இருப்பதனால் மாத்திரம் புலன் அடக்கம் கைகூடிவிடும் என்று இவர்கள் நினைத்து விடுகிறார்கள். இவர்கள் உடம்பைத்தான் பட்டினி போடுகிறார்களே அன்றி, உள்ளத்திற்கு விருந்து அளித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். "பட்டினிவிரதம் முடிந்ததும் என்ன என்ன ருசியான ஆகாரங்களைத் தின்பது, என்ன என்ன ருசியான பானங்களைப் பருகுவது?" என்பதைக் குறித்து எண்ணியவாறே இருக்கிறார்கள்.
இத்தகைய பட்டினி விரதங்கள், ருசியைக் கட்டுப்படுத்தவோ, காம இச்சையைக் கட்டுப்படுத்தவோ அவர்களுக்கு உதவுவதில்லை. பட்டினி கிடக்கும் உடலோடு, உள்ளமும் ஒத்து உழைத்தால்தான் பட்டினி விரதம் பயனுள்ளதாகும். அதாவது உடலுக்கு எவை மறுக்கப்படுகின்றனவோ அவைகளின் மீது பட்டினி விரதம் வெறுப்பை வளர்க்கவேண்டும். எல்லாப் புலன் உணர்ச்சிகளுக்கும் வேராக இருப்பது மனம். ஆகையால், பட்டினி விரதம் ஒரு குறிப்பிட்ட அளவுக்குத்தான் பயன்தரும். பட்டினி விரதம் இருக்கும் ஒருவர், காமக்குரோத உணர்ச்சிகளுக்குத் தொடர்ந்து வயப்பட்டிருப்பவராகவே இருந்துவிடவும் கூடும். என்றாலும், பட்டினி விரதத்தை அனுசரிக்காமல் சிற்றின்ப இச்சையை அழித்து விடுவது சாத்தியமில்லை என்பது பொதுவான விதி என்று சொல்லலாம். அது பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிப்பதற்கு அத்தியாவசியம் என்றும் சொல்லலாம். பிரம்மச்சரியத்தை அனுசரிக்க முற்படுகிறவர்களில், பலர் தவறிவிடுகின்றனர். இவர்கள் மற்றப் புலன்களை உபயோகிப்பதில் பிரம்மச்சாரிகளாக இல்லாமல் இருப்பது தான் இவர்கள் தோல்வியடைவதற்குக் காரணம். ஆகவே, இவர்களுடைய முயற்சி, தகிக்கும் வெயில் காலத்தில், குளிர் காலத்தின் நடுக்கும் குளிரை அனுபவிக்கச் செய்யும் முயற்சியைப் போன்றதாகிறது. பிரம்மச்சாரியின் வாழ்க்கைக்கும், பிரம்மச்சாரிகள் அல்லாத மற்றவர்கள் வாழ்க்கைக்கும் தெள்ளத் தெளிவான வேறுபாடு இருக்கவேண்டும். இவ்விரு பிரிவினரின் வாழ்க்கையும் ஒன்றுபோல் இருப்பதெல்லாம் வெளித்தோற்றத்தில் தான். ஆனால், வித்தியாசம் பட்டப் பகல்போல் வெட்ட வெளிச்சமாக இருந்தாக வேண்டும்.
No comments:
Post a Comment