Friday, January 28, 2011

கோபத்தை அகற்றுங்கள் (Author: ஆர்.வி. பதி)


மனிதனுக்குரிய பல குணாதிசயங்களில் கோபமும் ஒன்று. தன் வாழ்நாள் முழுக்க முற்றும் துறந்தவர்கள் உட்பட யாராலும் கோபப்படாமல் வாழவே முடியாது என்பது சத்தியம். எல்லாவற்றிற்கும் ஒரு வரைமுறை இருக்கிறது. எப்போது அவசியமோ அப்போது கோபப்படலாம். ஆனால் அத்தகைய சமயங்களில் கூட மனதை கட்டுப்பாட்டில் வைத்து கடினமான வார்த்தைகளைப் பிரயோகிக்காமல் மௌனமாக நமது கோபத்தை வெளிப்படுத்த வேண்டும்.
அடிக்கடி கோபப்படுபவனை யாருமே பொருட்படுத்தமாட்டார்கள். “அவன் எதுக்கெடுத்தாலும் இப்படித்தான் கோபப்படுவான். விட்டுத்தள்ளு’ என்று சொல்லிவிட்டுப் போய்விடுவார்கள். ஆனால் கோபப்படாமல் வாழும் ஒருவன் எப்போதாவது கோபப்பட்டால் சுற்றியுள்ள அனைவரும் மிரண்டு போய்விடுவார்கள். எப்போதாவது வெளிப்படும் கோபத்திற்கு சக்தி அதிகம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதனால்தான் பெரியவர்கள் சாதுமிரண்டால் காடு கொள்ளாது என்று சொல்வார்கள்.
கோபப்படும்போது இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. மூச்சு வாங்குகிறது. வழக்கத்தைவிட படபடப்பு அதிகமாகிறது. இதயம் வழக்கத்தைவிட அதிகமாக துடிக்கிறது. இவை மொத்தமும் சேர்ந்து நமது உடலைக் கடுமையாக பாதிக்கிறது. இவை எல்லாவற்றையும் விட கோபப்படுபவனுக்கு ஒரு பெரிய சிக்கல் ஏற்படுகிறது. அது அவனைச் சுற்றி உள்ளவர்களின் மனதில் அவனைப்பற்றி ஒருவித வெறுப்பை உண்டாக்கிவிடுகிறது. காரணமின்றி தேவையின்றி எதற்கெடுத்தாலும் கோபப்படுபவனை இந்த சமூகம் வெறுக்கிறது. அவனுக்கு பைத்தியக்காரன் என்றொரு பட்டத்தையும் வழங்கி அவனை ஒதுக்கியும் வைக்கிறது.
அனாதைக் குழந்தைகளுக்காக ஒரு விடுதியைக் கட்ட முடிவு செய்த அன்னை தெரசா கொல்கத்தாவில் பல இடங்களுக்கும் சென்று நிதி திரட்டிக் கொண்டிருந்தார். ஒரு கடைக்குச் சென்று நிதியுதவி கேட்டார். கடைக்காரன் நிதி தரமுடியாது என்று சொல்லியிருக்கலாம். ஆனால் கோபக்காரனான அந்த கடைக்காரன் அவசரப்பட்டு தெரசாவின் மீது ஆத்திரம் கொண்டு அவர் முகத்தில் காறி உமிழ்ந்தான்.
தெரசாவிற்கு கோபமே வரவில்லை. எச்சிலை தன் முகத்திலிருந்து துடைத்தெறிந்தார். மீண்டும் அந்த கடைக்காரனிடம் நிதி கேட்டார். இப்போது அந்த கடைக்காரன் அதிர்ச்சி அடைந்தான். ஏன் தெரியுமா?
“என் முகத்தில் நீ உமிழ்ந்த எச்சில் எனக்குத் தந்த பரிசு. என் குழந்தைகளுக்காக ஏதாவது கொடுங்களேன்’.
அந்த சுழ்நிலையிலும் கோபப்படாமல் அன்பாய் பேசிய அன்னை தெரசாவின் முகத்தைப் பார்த்த அந்த கடைக்காரன் அதிர்ச்சியில் உறைந்து போனான். அன்பின் சிகரமாய் விளங்கிய ஒரு பெண்மணியின் மீது கோபம் கொண்டு தான் செய்த காரியத்திற்காக வெட்கப்பட்டு தலைகுனிந்து நின்றான். இங்கே தலைகுனிந்தது அவன் இல்லை. கோபமே தோற்று தலைகுனிந்து நின்றது. அன்பும் அமைதியும் வென்று தலைநிமிர்ந்து நின்றது. கோபத்தை ஒழித்து அன்பை விரும்பினால் நீங்களும் தலைநிமிர்ந்து வாழலாம் என்பதை நமக்கு உணர்த்தும் நிகழ்ச்சியே இது.
தேவையின்றி எதற்கெடுத்தாலும் கோபப்படுவதால் ஏதாவது நன்மை இருக்கிறதா? நிச்சயமாக இல்லை என்பதே உண்மை. கோபப்படும் போது எடுக்கப்படும் முடிவுகள் நூறு சதவீதம் தீய விளைவுகளை ஏற்படுத்துகிறது. அதனால்தான் பெரியவர்கள் கோபமான மனநிலையில் எந்த ஒரு முடிவையும் எடுக்காதே என்று சொல்லியிருக்கிறார்கள். சிலர் தான் பணிபுரியும் நிறுவனத்தின் மீது கோபப்பட்டு யோசிக்காமல் உடனே வேலையை இராஜினாமா செய்து விடுவார்கள். நிறுவனமும் அவருடைய இராஜினாமாவை ஏற்று உடனே அவருக்குச் சேர வேண்டியதைக் கொடுத்து குட்பை சொல்லிவிடும். சில வருடங்கள் கழித்து தான் அவசரப்பட்டு வேலையை இராஜினாமா செய்துவிட்டோமே என்று அவர்கள் வருந்தும் நிலை ஏற்படும். இப்படி சிலர் தேவையின்றி கோபப்பட்டு அந்த கோபமான மனநிலையில் தவறான முடிவை எடுத்து தன் வாழ்நாள் முழுவதும் வருந்திய கதைகள் ஏராளம் உண்டு.
பக்கத்து வீட்டுப் பையன் அதிக மதிப்பெண் வாங்கிவிட்டால் அவனையும் அவன் குடும்பத்தாரையும் பார்த்து கோபப்படுபவர்கள் கூட இருக்கத்தானே செய்கிறார்கள். தன் பையனைவிட அவன் அதிக மதிப்பெண் எடுத்துவிட்டானே என்ற ஆதங்கம் மற்றும் இயலாமை போன்றவையே இங்கே கோபமாக மாறுகிறது. அவன் ஏன் அதிக மதிப்பெண் வாங்குகிறான் என்பதை ஒரு நிமிடம் சிந்திக்க வேண்டும். ஒருவருடைய உழைப்பைக் கண்டு கோபப்படுவதில் எவ்வித நியாயமும் இல்லை. அவனைப் பாராட்டி அவன் எப்படி அதிக மதிப்பெண் வாங்குகிறான் என்பதை அவனிடமே கேட்டறிந்து நம் பையனுக்கும் அதை எடுத்துச் சொல்லி அவனைப் போலவே நம் பையனையும் அதிக மதிப்பெண் பெறச்செய்யலாம்.
கொல்கத்தாவில் ஹீப்ளி நதிக்கரையினை ஒட்டி அமைந்திருந்த காளிகோயிலுக்கு அருகில் மாநகராட்சிக்குச் சொந்தமான தர்மசத்திரம் ஒன்று இருந்தது. அன்னை தெரசா ஆதரவின்றி நடைபாதைகளில் உயிர்விடும் மனிதர்களுக்காக இறப்போர் நல இல்லம் என்ற பெயரில் ஒரு இல்லத்தை உருவாக்க முடிவு செய்து கொல்கத்தா மாநகராட்சிக்கு விண்ணப்பித்தார். இதன் விளைவாக 1952 ஆம் ஆண்டில் கொல்கத்தா மாநகராட்சி தர்மசத்திரத்தை அன்னைக்கு இலவசமாகத் தந்தது. அந்த இடத்திற்கு அன்னை “நிர்மல் ஹிருதயம்” என்று பெயர் இட்டார். மாநகராட்சி தெரசாவிற்கு இடத்தைத் தந்ததை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த சிலர் அன்னையின் நோக்கம் சேவை அல்ல மதமாற்றமே என்று தவறாக பிரச்சாரம் செய்யத் தொடங்கினார்கள். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அப்பகுதியில் இருந்த ஒரு அரசியல் தலைவரை அணுகி இது குறித்து புகார் செய்தார்கள். உடனடியாக தெரசாவை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்று கூறினார்கள்.
உண்மை நிலையை அறிய விரும்பிய அந்த தலைவர் அன்னையின் ‘நிர்மல் ஹிருதயம்’ இல்லத்திற்குச் சென்றார். அவர் சென்ற சமயத்தில் அன்னை புற்றுநோயால் தாக்கப்பட்ட ஒரு நோயாளியின் உடலைச் சுத்தம் செய்து கொண்டிருந்தார். அந்த நோயாளியின் உடலிலிருந்து துர்நாற்றம் வீசிக்கொண்டிருந்தது. அந்த இல்லத்தில் பலரது மரண ஓலம் கேட்டுக் கொண்டே இருந்தது. இந்த காட்சிகளைப் பார்த்த அந்த அரசியல் தலைவரின் கண்கள் நீரால் நிறைந்தன.
இதன் பின்னர் அன்னைக்கு எதிரான கூட்டத்தினர் தலைவரை மீண்டும் மீண்டும் வற்புறுத்திக் கொண்டே இருந்தார்கள். பலர் கோபப்பட்டு அவதூறாய் பேசினார்கள். அன்னையின் தன்னலமற்ற சேவையைப் புரிந்து கொண்ட அந்த தலைவர் ஒருநாள் அவர்கள் அனைவரையும் அழைத்துப் பேசினார்.
“நீங்கள் சொல்வது அனைத்தையும் நான் ஒப்புக்கொள்ளுகிறேன். தற்போது இல்லத்தில் துன்பப்பட்டுக் கொண்டிருப்பவர்களை நாம் நிராதரவாய் விட்டுவிட முடியாது. தற்போது இல்லத்தில் இருப்பவர்களுக்கு சேவை செய்ய நீங்கள் உங்கள் வீட்டுப்பெண்களை அழைத்து வருகிறேன் என்று எனக்கு உறுதி கொடுங்கள். நான் அன்னை தெரசாவை உடனடியாக இல்லத்தைவிட்டு வெளியேற்றுகிறேன்’.
இப்போது அன்னையை வெளியேற்ற வேண்டும் என்று போர்க்குரல் உயர்த்தியவர்களில் ஒருவரைக் கூட அங்கே பார்க்க முடியவில்லை.
கோபத்தை விரட்ட பல வழிகள் உள்ளன. உங்களுக்கென ஒரு வழியினை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். கோபம் வரும்போது தெருக்களில் ஓடியாடும் சிறு குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் தோட்டத்தில் உள்ள பூக்களைப் பாருங்கள். பசுமையான மரம் செடி கொடிகளைப் பாருங்கள். உங்கள் வீட்டில் தோட்டம் இல்லையெனில் ஒரு அறைக்குச் சென்று அமைதியாக கண்களை மூடிக்கொண்டு உட்கார்ந்து கொள்ளுங்கள். உட்கார உங்கள் மனம் இடம் கொடுக்கவில்லையெனில் படுத்துக் கொண்டு தூங்க முயற்சி செய்யுங்கள். அப்படியும் கோபம் அடங்கவில்லையெனில் உங்கள் சிறுவயதில் நீங்கள் செய்த குறும்புகளையெல்லாம் நினைவு கூர்ந்து பார்க்க முயற்சி செய்யுங்கள். இவை எதுவுமே உங்களுக்கு சரிபட்டு வரவில்லையெனில் இருக்கவே இருக்கிறது இசை. எம்பி3 பிளேயரை எடுத்து மென்மையான இசையினைக் கேளுங்கள்.
கோபத்தை நம் வாழ்வில் இருந்து அகற்ற என்ன செய்ய வேண்டும்? ஒன்றும் கடினமில்லை. நம்மைச் சுற்றியுள்ளவர்களிடத்தில் நாம் அன்பு பாராட்ட பழகிக் கொள்ள வேண்டும். அக்கம்பக்கத்தில் உள்ள யாரேனும் சாதனை செய்ததாகக் கேள்விப்படுகிறீர்களா? நீங்கள் உடனே அவரைத் தேடிச் சென்று கைகொடுத்து உங்கள் வாழ்த்துக்களைத் தெரிவியுங்கள். உங்கள் அண்டை வீட்டாருக்குப் பிறந்தநாளா? நேரிலோ அல்லது தொலைபேசி மூலமாகவோ வாழ்த்துக்களைச் சொல்லுங்கள். உங்களுக்குத் தெரிந்த யாருக்கேனும் உடல்நலம் சரியில்லை என்று கேள்விப்படுகிறீர்களா? உடனே சென்று நலம் விசாரியுங்கள். அவர்களுக்கு ஆறுதல் சொல்லுங்கள். இதற்கெல்லாம் பெரியதாக பணம் எதுவும் செலவு செய்யத் தேவையில்லை. இதற்குத் தேவை மனம்தான். உங்களால் முடிந்தவரை உங்களைச் சுற்றியுள்ளவர்களை சந்தோஷப்படுத்துங்கள். உங்கள் மனம் மெல்ல மெல்ல லேசாவதை நீங்கள் நாளடைவில் உணருவீர்கள்.
அமைதியாக வாழப் பழகிக் கொள்ளுங்கள். அமைதியாக வாழ்பவர்களுக்கு எப்போதும் இந்த சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். கோபத்தால் எந்த ஒரு நன்மையும் விளைந்ததாக சரித்திரமில்லை. அன்பாய் வாழ்ந்தவர்கள் அழிந்து போனதாகவும் சரித்திரமில்லை. காந்திஜி அன்பை ஆயுதமாக ஏந்தியே நம் நாட்டு மக்களை சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கச் செய்தார் என்பது சரித்திரத்தில் பதிவு செய்யப்பட்ட உண்மை. கோபப்பட்டு அடக்குமுறைகளை ஏவிய பிரிட்டிஷ்காரர்கள் கடைசியில் இந்தியாவை விட்டு வெளியேறினார்கள் என்பதும் சரித்திரத்தில் பதிவு செய்யப்பட்ட உண்மை. இப்போது இந்த இரண்டையும் எடைபோட்டு எந்த ஆயுதம் சிறந்தது என்பதை முடிவு செய்யுங்கள்.
நம்முடைய வாழ்க்கையில் அனைவருடைய குறிக்கோள் என்ன? மகிழ்ச்சியாக வாழ்வதுதானே? நீங்கள் மனது வைத்தால் அதற்கு ஒரு எளிமையான வழி இருக்கத்தான் செய்கிறது. அன்பு எனும் தீபத்தை மனதில் ஏற்றி கோபம் எனும் அறியாமை இருளை அகற்றுங்கள். நிம்மதிக் காற்றை வாழ்நாள் முழுக்க நிரந்தரமாய் சுவாசியுங்கள்.
முற்றும்

1 comment: