Thursday, January 27, 2011

உலகே மாயம் -Zen Story



காட்டின் நடுவே ஒரு சிறு கோயில். அதில் ஒரு குரு.

அவர் இயற்கையுடன் ஒன்றி வாழ்ந்தார். மக்கள் நடுவே செல்வதோ, அறிவுரை, போதனை என்று தடபுடல் செய்வதோ கிடையாது.

ஒரு சமயம் அவ்வழியாகப் புத்தபிட்சுக்கள் சிலர் வந்தனர். அவர்களது முகமே அவர்கள் மிகப் பெரிய படிப்பாளிகள் என்பதை உணர்த்தியது.

வந்தவர்களுக்கு குரு உபதேசித்தார்.

''உங்கள் பெயர்?'' என்று கேட்டனர் வந்தவர்கள்.

''என் பெயர் ஹோகன்!'' என்றார் குரு.

''ஞான குரு ஹோகன் தாங்களா?''

''இல்லை. நான் குருவும் அல்ல. பெரிய ஞானம் எதுவும் எனக்குக் கிடையாது!'' என்றார் குரு.

உணவு முடிந்து இரவு அங்கேயே தங்கினர் பிட்சுக்கள். இரவு குளிராய் இருக்கவே குளிர்காயத் தீமூட்டிச் சுற்றிலும் அமர்ந்து கொண்டனர். தங்களுக்குள் மெதுவாகப் பேசிக் கொண்டனர். பேச்சு மெல்ல மெல்ல மத சம்பந்தமான தத்துவங்களில் திரும்பியது. அதுவே விவாதமாக மாறியது. சிறிது நேரத்தில் விவாதம் சூடுபிடித்தது. உரத்த குரலில் அவர்கள் பேச ஆரம்பிக்கவே, தூக்கம் கலைந்த குரு ஹோகன் மெல்ல எழுந்து வந்து அவர்கள் நடுவில் அமர்ந்தார்.

பிறகு விவாதம் மனிதனின் அகவாழ்வு, புறவாழ்வு பற்றித் திரும்பியது.

''மனிதனின் புறவாழ்வே மாயம். அக வாழ்வுதான் மரணத்துக்குப் பின்பும் தொடரும். எனவே அதுதான் சாசுவதம்!'' என்றார் ஒருவர்.

''அகம் என்பதே வெறும் எண்ணங்களின் குவியல். கனவில் கண்ட செல்வம் ஒருவனுக்கு நிஜ வாழ்வில் உதவாது. ஆகவே அகம் என்பது மாயை. தோன்றும் உலகம் தொடரும் வாழ்வு இதுவே உண்மை!'' என்றார். வேறொருவர்.

''உலகமே ஒரு மனோ ரீதியான மாயை!'' என்பது இன்னொருவரின் வாதம்.

''இல்லை. உலகம் உண்மை. புறநிலையின் பிரத்தியட்சம்!'' என்ற கருத்தை வலியுறுத்தினார் ஒருவர்.

''உலகம் உண்மைதான். அதைத் தாண்டிய மானஸ வாழ்வும் உண்மைதான். அதையும் தாண்டிய பயணம்தான் மிக முக்கியமானது!'' மற்றொருவர் விவாதம் இப்படி இருந்தது.

கடைசியில் தீர்ப்புக் கேட்டு, அவர்கள் குரு ஹோகன் பக்கம் திரும்பினார்கள்.

''உங்கள் கருத்து என்ன? உலகம் பிரத்தியட்சமான உண்மையா? அல்லது மனோ ரீதியான மாயையா?'' கேள்விகளால் துளைத்தெடுத்தார்கள் குருவை.

ஹோகன் அவர்களைப் பார்த்துக் கேட்டார்.

''அதோ ஒரு பெரிய பாறை தெரிகிறதே, அது மனதின் மாயையா? அல்லது பிரத்தியட்சக் கண்கூடா?''

''போதி சத்துவரின் கண்ணோட்டத்தில் எல்லாமே மனத்தின் மாயைதான். தோன்றும் பொருட்கள், தோன்றாப் பொருட்கள் யாவுமே மனத்தின் சலனக் காட்சிகள்தான். அந்த வகையில் அந்தப் பெரிய ''பாறை நிஜம் அல்ல. அது என் மூளையில் இருப்பதுதான்.''

''அவ்வளவு பெரிய கல்லை உங்கள் மூளையில் சுமந்து கொண்டு திரிகிறீர்களே! உங்கள் தலை ரொம்பக் கனக்காதோ?''

குரு ஹோகன் போட்ட போடு அவர்களுக்கு மெய்யறிவை உணர்த்தியது. தங்கள் வாத வல்லமைகளையும், அறிவின் கனத்தையும் மூட்டிய தீயில் பொசுக்கிவிட்டு அவரின் சீடராயினர்.

குருஜி வாசுதேவ்

No comments:

Post a Comment