Thursday, January 27, 2011

உன்னதமாய் வாழ்வோம் -Health Tips

- டாக்டர் அனுராதா கிருஷ்ணன்
இனிய நண்பர்களே! இந்த உலகில்         உடலைப் பருமனாய் வளர்த்து, கழிவு களைச் சேர்த்து வாழ்க்கையை எப்படியாவது ஓட்ட வேண்டும் என்று யாரும் தீர்மானமாக இருப்பதில்லை. நாம் எல்லோரும் குண்டு தன்மையில் சிக்காமல் இருக்கவே விரும்பு கிறோம். ஆனால், வழி தெரியாமல்தான் முழிக்கின்றோம். நண்பர்களே! நாம் குண்டாவதைத் தவிர்க்கும் செயல்களை செய்தாலே போதும். வெற்றி கிடைக்கும். அந்த விதத்தில் நம்மை குண்டாக்கும் உணவுகளை கண்டறிந்து தவிர்த்தால் குண்டாக மாட்டோம்.
கெட்ட கொழுப்பு உணவுகள்
1. துரித உணவுகள் : துரித உணவுகள் (Fast Food) மற்ற எல்லா உணவுகளை விட மிக அதிகமாக கெட்ட கொழுப்பை உண்டாக்கும் தன்மை கொண்டவை. துரித உணவுகளை அதி விரைவாக சூடாக்குவதால் உயிர்ச்சத்துக்கள் அனைத்தும் அயை மட்டுமே செயற்கை இரசாயன சுவையூட்டி ஆவி பறக்க சாப்பிடு கிறோம். உண்மையில் இவ்வித உணவுகளை சூடு ஆறியபின் வாயில் வைக்க சகிக்காது. அப்போது தெரியும் அதன் உண்மைத்தரம். நண்பர்களே! எந்த ஒரு உணவையும் பக்குவமாய் சமைத்தால் உணவின் பாகுத்தன்மை (Colloidal property) கெடாமல் உயிர்ப்புத் தன்மை காக்கப்படுகிறது. உயிர்ச்சத்துக்கள் கெடாமல் இருப்பதால் உணவு தரமாக செரிக்க வழி கிடைக்கிறது.
2. மாவுச் சத்து உணவுகள் : நம் உழைப்பு தேவைக்கும் அதிகமான மாவுச்சத்து எடுத்துக் கொள்ளும்போது, நம் உழைப்புக்கு வேண்டிய சக்தியை கொடுத்தது போக மீதம் உள்ள மாவுச்சத்தெல்லாம் கொழுப்பாக மாறிவிடும். செயற்கை இனிப்புகளை உள்ளடக்கிய அல்வா, சாக்ரின், செயற்கை குளிர் பானங்கள், வெள்ளைச் சர்க்கரை மற்றும் முழுமையல்லாத மாவுச் சத்துக்களை உள்ளடக்கிய மைதா (பரோட்டா) உணவுகள், வெள்ளை ரவை, வெள்ளை சேமியா, நூடுல்ஸ் ஆகியவை அனைத்தும் கெட்ட கொழுப்பாகவே மாறும். இவைகளில் உயிர்ச் சத்துக்களும் (Vitamins) தாதுச்சத்துகளும் (Minerals) நீக்கப்படுவதால் கெட்ட குளுக்கோஸாக மாறி பின் கெட்ட கொழுப்பாக மாறி விடுகின்றன.
3. பச்சை மிளகாய் : பச்சை மிளகாயை அதிகம் எடுத்துக் கொள்ளும் போது நம் இரைப்பை அமிலத்தன்மை அடைந்து, கல்லீரலைக் கெடுத்து, கொழுப்பு மற்றும் புரதச் செரிமானத்தைக் கெடுத்து விடுகிறது. இதன் விளைவாக கெட்ட கொழுப்பு உற்பத்தி அதிகமாகிறது. இன்னொரு புறம் பச்சை மிளகாய் நம் நரம்புகளை நீர்த்துப் போகவைத்து, கெட்ட கொழுப்பு தேங்கும் இடங்களை மூளைக்கு தெரிவிக்க முடியாமல் போகிறது.
4. புளிப்பு உணவுகள் : புளிப்புச்சுவை அதிகம் கொண்ட உணவுகள் கல்லீரலை அதிகம் தூண்டி பித்தத்தை கெடுத்து விடுவதால் கொழுப்புச் செரிமானம் பாதிப்படைகிறது. குறிப்பாக அசைவ உணவு எடுத்துக் கொள்ளும் போது புளிப்புச் சுவையை குறைவாக எடுத்துக் கொள்வது நல்லது. குறிப்பாக மாங்காய் எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. அசைவம் சுலபமாகச் செரிக்க காரத்தையும் (குறிப்பாக மிளகுக்காரம்) துவர்ப்பையும் சேர்த்துக் கொள்வது பயன்தரும்.
5. மாறுதல் செய்யப்பட்ட கொழுப்பு உணவுகள் (Trans Fat) : செயற்கை முறையில் மாற்றம் செய்யப்பட்ட கொழுப்பு  உணவுகளாக வனஸ்பதி (டால்டா), பனீர் (Paneer), ஐஸ்கிரீம், பதப்படுத்திய (Processed) கொழுப்பு உணவுகள், கொழுப்பு நீக்கிய பதப்படுத்திய பால் ஆகியவை இரைப்பை மற்றும் கல்லீரலைக் கெடுத்து கெட்ட கொழுப்பு உற்பத்தியை அதிகரிக்கிறது.
6. வறுத்த உணவுகள் : நம் உணவை சாலடாக (Salad) சாப்பிட்டால் தரமாக செரித்துவிடும். அதையே இலசாக வேகவைத்து சாப்பிட்டால் செரித்துவிடும். ஆனால் கொஞ்சம் உயிர்ச்சத்துக்கள் போய்விடும். உணவை அதிகமாக வேகவைத்தால் உயிர்ச்சத்துக்கள் அனைத்தும் அழிந்துவிடும். இதே உணவை எண்ணையில் பொறித்து சாப்பிட்டால் உயிர்ச் சத்துக்கள் அழிவது மட்டுமல்லாமல் உணவின் கொழுப்பு அனைத்தும் கெட்ட கொழுப்பாக மாறிவிடும். ஆகவே, நம் உணவை அதிகம் எண்ணையில் பொறிக்காமல் குறைவாக வதக்கி சாப்பிடுவது நல்லது.
7. உருளைக்கிழங்கு : உருளைக்கிழங்கு குளிர் பிரதேசங்களில் (Temperate region) நெருப்பாக வளரும் ஒரு மாவுச் சத்து உணவாகும். அந்த பிரதேசங்களில் வாழும் மக்கள் இதை மாவுச்சத்து உணவாக மட்டுமே எடுத்துக் கொள்கிறார்கள். அது அவர்களுக்கு அந்தக் குளிர் சூழல் ஒருவித வெப்பத்தை அளிப்பதால், அது அவர்களுக்கு உகந்த உணவாக இருக்கும். அதுவே, நம்மைப்போல் வெப்ப நாடுகளில் வாழ்பவர்கள், இதை எடுத்துக்கொண்டால் நம் உடலை மேலும் உஷ்ணப்படுத்தி கல்லீரலைக் கெடுத்து, கொழுப்புச் செரிமானத்தையும் கெடுத்துவிடும். மேலும், நம்மவர்கள் அரிசி அல்லது கோதுமை உணவில் உள்ள மாவுச்சத்தோடு உருளைக் கிழங்கில் உள்ள மாவுச் சத்தையும் அதிகப் படியாக எடுத்துக்கொள்கிறார்கள். இதனால் நம் உழைப்புக்கு அதிகப்படியான மாவுச் சத்தானது அதிகப்படியான கொழுப்பாக மாறி குண்டாக வழி வகுக்கிறது. வெப்பப் பிரதேசங்களில் உருளைக்கிழங்கானது வாய்வை உண்டாக்கும் தன்மை கொண்டது. உருளைக்கிழங்கைத் தோல் நீக்கி சமைப்பதாலும், வறுவலாக உண்பதாலும் கண்டிப்பாக வாய்வை உண்டுபண்ணுகிறது. நண்பர்களே! உருளைக்கிழங்கின் மேல் உண்டான வாய்வை ஆசையை விட்டால் குண்டாவது குறையும்.
8. நொறுக்குத் தீணிகள் : நொறுக்குத் தீனி கள் மொறுமொறுப்பாக இருப்பதால் நம் வயிற்றில் உள்ள ஈரப்பதத்தை காலி செய்து மண்ணீரல் செரிமானத்தைக் கெடுத்துவிடும். இதனால், கல்லீரலுக்கு கிடைக்க வேண்டிய மண்ணீரல் செரிமான சக்தியானது குறைந்து கொழுப்புச் செரிமானம் பாதிப்படைகிறது. முடிவாக, நொறுக்குத்தீனிகளில் உள்ள கொழுப்புப் பொருள் யாவும் கெட்டக் கொழுப்பாக மாறிவிடுகின்றன.
9. குளிர் உணவுகள் : ஐஸ்கிரீம், மில்க் ஷேக், குளிர் நீர் (Ice Water) குளிர் பதன உணவுகள் மற்றும் குளிர் பானங்கள் ஆகியன மண்ணீரல் செரிமானத்தைக் கெடுத்து, கல்லீரலுக்கு  கிடைக்க  வேண்டிய  சக்தி குறைவதால் கெட்ட கொழுப்பு உருவாக வழியாகிறது.
10. தயிர் : குண்டாக வேண்டாம் என்று நினைப்பவர்கள் தயிரை அறவே விட்டுப் பாருங்கள், நீங்கள் மேலும் குண்டாக மாட்டீர்கள். தயிரானது செரிக்க 18 மணி நேரம் ஆகும். ஆகவே, தயிரை பகல் மட்டுமே சாப்பிடலாம். இரவில் சாப்பிடும் தயிரானது செரிப்பதற்குள் பெருங்குடலை அடைந்து, செரிமானம் ஆகாததால் மலச்சிக்கலாக தேங்கிவிடுவது நிகழ்கிறது. செரிக்காத தயிர் புளித்து, நுரைத்து, வாய்வாகி, கெட்ட கொழுப் புடன் சேர்த்து உடலை குண்டாக்கிவிடுகிறது.
11. அதிகத் தண்ணீர் : தாகம் எடுக்காத போது தேவையில்லாமல் எடுத்துக் கொள்ளும் தண்ணீரானது செரிமான நொதிகளை நீர்த்துப்போக வைத்து செரிமானத்தை கெடுத்து கெட்ட கொழுப்பு  உற்பத்திக்கு வழி வகுக்கிறது. சாப்பிடும் போது தண்ணீர் அருந்தாமல் இருப்பது நல்லது. அதே போல், சாப்பிட்டு அரை மணி நேரம் தண்ணீர் அருந்தாமல் இருப்பதும் நல்லது. தாகத்திற்கு மட்டும் தண்ணீரும், பசிக்கு உணவும் எடுத்துக் கொள்ளும் போது கண்டிப்பாக குண்டாக மாட்டோம்.
12. ஊறுகாய் : உப்பும் புளிப்பும் அதிகம் உள்ள ஊறுகாயானது அதிப்படியாக நொதிகளைச் சுரக்கச் செய்து செரிமானம் முடியும் முன்னே காலி செய்ய வழி காண்கிறது. ஊறுகாய் அதிகம் எடுத்துக் கொள்ளும் போது அதிக அளவில் உணவினை எடுக்க வைத்து, உழைப்புக்கு மிஞ்சிய உணவை கொழுப்பாக மாறிவிடுகிறது.
13. கடலைப்பருப்பு : தோல் நீக்கிய கொண்டைக்கடலையானது வாய்வையே உண்டு பண்ணும். இதை பருப்பு வடையாக சாப்பிடும்போது இன்னும் மோசம். வாய்வானது கல்லீரலைக் கெடுத்து கொழுப்புச் செரிமானத்தை பாதித்துவிடும். கடலைப் பருப்புக்கு பதில் வாய்வு உண்டாக்காத பாசிப்பருப்பை தாராளமாக சாப்பிடலாம்.
14. பிஸ்கட் மற்றும் சாக்லேட் : பிஸ்கட் மற்றும் சாக்லேட் ஆகிய இரண்டும் மண்ணீரல் மற்றும் கல்லீரல் செரிமானத்தைக் கெடுத்து உடற்கழிவு தேக்கத்திற்கு வழி வகுக்கும். பிஸ்கட் வயிற்று மந்தத்தையும், உப்பு சத்தையும் தரக்கூடியது. சாக்லேட் பித்தத்தைக் கொடுத்து உடலை வறட்சியாக்கி இரத்தை முறிக்கச் செய்யும். இதனால் கெட்ட கொழுப்புச் சேரும் தன்மையைத் தரும்.
நண்பர்களே! கெட்ட கொழுப்பு உணவுகளைத் தவிர்த்து நல்ல கொழுப்பு உணவுகளைத் தெரிவு செய்து உடல் பருமனைத் தவிர்த்து, இலகுவான இரத்தக் குழாய், மென்மையான நரம்பு மற்றும் பளபளப்பான தோல் ஆகியவற்றை பெற்று ஆரோக்கியமாய் வாழுங்கள்.
தீதும் நன்றும் பிறர் தர வாரா
தீயதை விட்டு நல்லதைத் தெரிவு செய்வோம்
More Info :

டாக்டர் அனுராதா கிருஷ்ணன்

டாக்டர் அனுராதா கிருஷ்ணன்
Name:டாக்டர் அனுராதா கிருஷ்ணன்
Description:டாக்டர் அனுராதா கிருஷ்ணன் அவர்கள், வேளண்மை படிப்புத் தளத்தில், பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் துறை முனைவர் பட்டத்தை பெற்று, பண்டித ஜவர்லால் நேரு வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இணைப் பேராசிரியராகப் பனியாற்றுகிறார். மேலும், இத்துறையில் பத்துக்கும் மேற்பட்ட கல்லூரிப் பாட புத்தகங்களை எழுதியுள்ளார். இன்றைய வாழ்வியலுக்கு ஏற்றதாகவும் உள்ளவற்றையும் பொருக்கி எடுத்து, உங்களுக்காக "உன்னதமாய் வாழ்வோம்!” என்ற தலைப்பில் தன்னம்பிக்கை இதழில் தொடராக எழுதியுள்ளார்



No comments:

Post a Comment