Thursday, January 27, 2011

எது சந்தோஷம்?

- அனிதா குமார்
நெய்யின் நறுமணத்தோடும் முந்திரி பருப்பும் கிஸ்மிஸ் பழத்தின் சுவையோடும் கலந்து வைக்கப்பட்டிருந்த சர்க்கரைபொங்கல் ஒரு பெரிய பாத்திரம் முழுவதும் வழிய வழிய இருந்தது. அந்த பாத்திரம் கோயில் வளாகத்தின் மேஜையின் மீதிருந்தது. தேங்காய் துருவல் அதிகம் கலந்து செய்யப்படிருந்த சுண்டலும் ஒரு பாத்திரம் நிறைய இருந்தது.
கோயிலுக்கு வந்திருந்தவர்களின் கவனம் முழுவதும் இந்த பிரசாதத்தின் மீதுதான் இருந்தது. சுவாமிக்கு அபிஷேகம் முடிந்தவுடன் பிரசாதத்தை சுவைத்து பார்த்து விடவேண்டும் என்ற ஆவல் அதிகமாயிருந்தது.
பிரசாதத்தை சுவாமிக்கு படைப்பதற்காக கொண்டுவந்திருந்த அந்த ஊர் பெரியவர் ராஜாராம் மிடுக்காக நின்றுகொண்டிருந்தார். அவர் அணிந்திருந்த பட்டு வேஷ்டியும் சிப்பாவும் புலிநகத்தை டாலராக கொண்ட தங்க சங்கிலியும் அவரது செல்வாக்கின் மதிப்பை காண்பித்தது. அவரது ஒரே மகள் அமெரிக்கா சென்று எம்.டி. முடித்து கோல்ட் மெடலுடன் இந்தியா திரும்பி வருவதால் சுவாமிக்கு இந்த ஸ்பெஷல் பூஜை. அனைவரின் கவனமும் அவரது பிரசாதத்தின் மீது இருந்ததால் ராஜாராமுக்கு பெருமிதமாக இருந்தது. நரைத்த மீசையை முறுக்கிய படி சுவாமிக்கு நடந்து கொண்டிருந்த பூஜையை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது. . .
‘அய்யா’ என்று நடுக்க மான குரல் அவரது பின்னால் இருந்து வந்தது. ராஜாராம் திரும்பிப் பார்த்தார். ஒரு வயதானவர் சிறிய கொம்பை ஊன்றிக் கொண்டு லேசாக தள்ளாடியபடி நின்று கொண்டிருந்தார். வெற்றுடம் போடு இருந்தார். அழுக்கு படிந்த காவிவேஷ்டி கட்டி யிருந்தார்.
“என்ன?” என்று கேட்டார் ராஜாராம்.
“சாப்பிட்டு இரண்டு நாளாச்சு பசி தாங்க முடியல, கொஞ்சம் பிரசாதம் தர்றீங்களா?”
“யார் நீங்க?”
“நான் ஒரு அனாதைங்க சாமி. வயசான காலத்துல கோயில் குளம்னு ஏதோ என் காலத்தை தள்ளிகிட்டிருக்கேன். பசியின் கொடுமை தாங்க முடியல கொஞ்சம் பிரசாதம் தர்றீங்களா சாமி, புண்ணியமாக போகும்!”
“யோவ் கண்ணுதெரியல, சுவாமிக்கு இன்னும் பூஜை முடியல, பூஜை முடிந்ததும் தான் எல்லோருக்கும் பிரசாதம் தருவாங்க!”
“அதுவரைக்கும் என்னால பசி தாங்க முடியாதுங்கய்யா. . . கொஞ்சம் தயவு பண்ணுங் கய்யா . . கண்கள் இருட்டுது கைகாலெல்லாம் பசியால் வெல வெலப்பாக இருக்கிறது நாலுவாய் பிரசாதம் சாப்பிட்டால் பசி ஆறிடும்!”
நாக்கு வரள கண்கள் பசி மயக்கத்துக்கு போக அந்த பெரியவர் பரிதாபமாக கெஞ்சினார். ஆனால் பெரியவரின் நிலை ராஜாராமின் நெஞ்சை தொடவே இல்லை. அவரது கூப்பாடு காதில் விழாதது போல் பூஜையை பார்த்துக் கொண்டிருந்தார். பெரியவர் கூட கொஞ்சம் சோர்ந்து போனார். பொக்கை வாயை லேசாக பிளந்தபடி ஏக்கத்துடன் ராஜாராமின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்.
“அய்யா உங்களுக்கு இரக்கமே கிடையாதா நாலு வாய் பிரசாதத்தை தருவதற்கா இவ்வளவு தயங்குறீங்க?”
“யோவ் நீ சாப்பிட்ட எச்சியை சுவாமிக்கு படைக்க முடியாது. பூஜை முடித்து சுவாமிக்கு படைத்தபிறகு தான் எல்லோருக்கும் பிரசாதம் விநியோகம் பண்ணுவேன்” சுள்ளென்று எரிந்து விழுந்தார் ராஜாராம். பூஜையின் நடுவே இப்படி தொந்தரவு செய்கிறாரே என்ற கோபக்கனல் அவரது முகமெல்லாம் அடித்தது.
“அய்யா, ஏழைங்களோட வயிறு நிறைஞ்சாலே கடவுளோட வயிறு நிறைஞ்ச மாதிரி. . .!”
இதைக் கேட்ட ராஜாராம் சவுக்கால் அடிபட்டவர் போல் நிமிர்ந்தார்.
“எ. . . என்னங்கய்ய சொன்னீங்க?” பெரிய வரை பார்த்து பயபக்தியுடன் கேட்டார்.
“ஏழைங்களோட வயிறு நிறைஞ்சாலே கடவுளோட வயிறு நிறைஞ்ச மாதிரி. . .!”
“நீங்க சொன்ன இந்த ஒரு வார்த்தையால் என் கண்ணை திறந்துட்டீங்க. இதற்கு மேலும் நான் உங்களின் வயிறைகாய போட மாட்டேன்!” என்று அந்த பெரியவரை கை பிடித்து அழைத்து போய் சர்க்கரை பொங்கலையும், சுண்டலையும் இலை நிறைய வைத்துக் கொடுத்தார்.
“சாப்பிடுங்கய்யா உட்கார்ந்து சாப்பிடுங்க. . சாப்பிட்டு முடிச்சிட்டு இன்னும் கொஞ்சம் வாங்கிகோங்க. . .!” என்று பெரியவரை கோயி லின் தூண் அருகே அமரச் செய்து சாப்பிட வைத்தார்.
பெரியவர் சாப்பிட தொடங்கியதும் தான் ராஜாராம் மனது நிறைவாக உணர்ந்தார்.
அவர் ஒவ்வொரு கவளமாக எடுத்து சாப்பிட சாப்பிட கடவுளின் வயிறு நிரம்புவது போன்ற உணர்வு ஏற்பட்டது. ராஜாராமின் மனது ஆத்ம திருப்தி அடைந்தது

No comments:

Post a Comment