Wednesday, June 29, 2011

நாவலின் நரம்பு


உறுபசி - ஒரு பார்வை   -  ஆதவா
தனிமையின் கசப்பும் நிராகரிப்பும் நிறைந்த என் வாழ்வில் புத்தகம் வாசிப்பதற்கான வாய்ப்பு குறைவாகவே இருந்து வந்திருக்கிறது. பெருத்த அச்சம் ஏற்படுத்தக் கூடிய தனிமை எனக்கு பலநாட்கள் வாய்த்திருந்த போதிலும் வாசிப்பைக் காட்டிலும் எழுதுவதில் அக்கறை எடுத்துக் கொண்டேன். திரு.எஸ்.ராமகிருஷ்ணனோடு உண்டான வாசிப்புத் தொடர்பிலிருந்து வாசிப்பின் அடர்த்தி பெருகிக் கொண்டு வருவதை இப்பொழுது என்னால் உணரமுடிகிறது. அது உறுபசி நாவலின் வழியே நீண்டு கொண்டிருக்கிறது.
உறுபசி. நாவலை வாங்கிய பிறகு உறுபசி என்றால் என்ன என்று தேடத்துவங்கினேன். நண்பர்கள் கூட உறுபசி என்றால் என்ன என்று கேட்கத் துவங்கினார்கள். பசி உறுதல் என்று சொல்லிச் சமாளித்து வைத்தேன்.
உலர்ந்த சொற்களால் இந்நாவல் எழுதப்பட்டிருக்கிறது என்ற வரியே நாவலை வாங்கத் தூண்டியது என்றும் சொல்லலாம். எஸ்.ராமகிருஷ்ணனின் உலர்ந்த எழுத்துக்கள் நன்கு காய்ந்த பாறைகளில் படர்ந்திருப்பதாகவும் அதை என் எச்சிலற்ற நாவில் துடைத்து இழுப்பதாகவும் நாவல் படிக்கையில் உணர்ந்தேன். சம்பத்தின் இறப்பை ஒட்டிய நண்பர்களின் நினைவுகளும் சம்பத்தின் காய்ந்த வாழ்வுமே நாவலின் நரம்பாக இருக்கிறது. ஒவ்வொரு பக்கங்களைத் திருப்புகையிலும் ஒரு வெறுப்பின் அடையாளம் இருப்பதாகத் தோன்றி அது எழுத்துக்களின் வளைவுகளில் நின்று என்னையே உமிழ்வதைப் போன்றும் இருக்கிறது. . நாவல் குறித்தான கசப்பை மெல்ல மெல்ல மேகங்கள் விலகுவதைப் போல உறுபசி விலக்கி வந்ததை               சில மணிநேரங்களில் உணரமுடிந்தது.
சம்பத்தின் கல்லூரி நண்பர்களான ராமதுரை, அழகர், மாரியப்பன் மற்றும் யாழினி ஆகியோரின் சம்பத் குறித்தான நினைவுகளில் நாவல் பயணிக்கிறது. கல்லூரியில் தமிழ் இலக்கியம் விரும்பிப் படிக்கும் சம்பத்தோடு ராமதுரை, மாரியப்பன், அழகர் மூவரும் நிர்பந்திக்கப்பட்டு படிக்கிறார்கள். சம்பத்தின் வித்தியாசமான வாழ்க்கையும் விசித்திர எண்ணங்களும் மூவரையும் நன்கு கவர்கிறது. சம்பத் யாழினியின் காதலனாக, கடவுள் மறுப்பு கொள்கைகளில் ஈடுபடுகிறான். கம்பராமாயணத்தைக் கிழித்து எரிக்கிறான். அரசியல் கூட்டங்களில் பேசுகிறான். நன்கு மது அருந்தி தன்னைத் தானே ஒதுக்கிக் கொள்ளும் நிலைக்கும் வந்துவிடுகிறான். அவனது கல்லூரி வாழ்க்கை நிராசைகளோடும் மிகுந்த களிப்புகளோடும் செல்லுவதாக இருக்கிறது.
பின்னர் அழகரோடு சொந்த வீட்டுக்குச் செல்லும் போது தன் தந்தையையே வெறிமிகுதியால் விறகுக்கட்டையில் சாத்துகிறான். லாட்டரிச் சீட்டு வாங்கும் பழக்கமுள்ளவனாக இருக்கிறான். அவன் தங்கியிருக்கும் லாட்ஜுக்குக் கீழே உள்ள ஒரு டெலிபோன் பூத்தில் வேலை செய்யும் ஜெயந்தியுடன் உண்டான பழக்கம் சட்டென்று திருமணத்தில் முடிகிறது. அவர்களது திருமணம் தனித்து விடப்பட்ட இருவரின் மனநிலைக்குப் பொருத்தமாக இருக்கிறது. திருமணத்துக்குப் பிந்திய சம்பத்தின் காமம் கடந்தகால நினைவுகளின் மோதலாக இருக்கிறது. யாழினியின் நிராகரிப்பு அவனது வெறிமிகுந்த காமத்தின் தீனியாக மாறியிருக்கலாம் என்று நினைக்கிறேன்.
சம்பத் ஒரு கிரைம் பத்திரிக்கையில் பிழை திருத்துபவனாக செல்கிறான். அங்கே குரூரமான உலகத்தில் தான் இயங்குவதாக எண்ணிக் கொள்கிறான். அவனது நிலைகொள்ளாத எண்ணங்கள் அக்கூர்மையான குரூரத்தின்பால் அலைகழிக்கப்பட்டு வேலையை உதறுகிறான். அதன் விளைவுகள் அவனை ஒரு மனச்சிதைவுக்கு உள்ளாக்கியிருந்தது. சம்பத் தன் வாழ்வு நெடுகவும் எந்த ஒரு தொழிலையும் விரும்பிச் செய்ததாக இல்லை. அது பூச்செடிகள் வளர்ப்பதாகிலும், ஏன், லாட்டரி வாங்குவதாகிலும் கூட.
சம்பத்தின் மனைவி ஜெயந்தியின் தாம்பத்திய வாழ்வு மிகக்குறுகியதாகவும், சந்தோஷங்களும் வருத்தங்களும் மிகுந்ததாகவும் இருக்கிறது. சம்பத் மருத்துவமனையில் சுருண்டு படுத்திருந்த பொழுது அவளது அலைக்கழிப்பும், தனிமையும் சம்பத்தின் வாழ்வுக்குப் பின்னர் ஏற்படும் மாற்றங்களும் மனதில் தாக்கம் ஏற்படுத்தாமல் இல்லை. ஒருவகையில் சம்பத்திற்கு ஏற்றவள் அவளாக மட்டுமே இருக்கமுடியுமென்று நினைக்கிறேன். யாழினி மிகக் கச்சிதமாக அவனைப் பற்றி தெரிந்து கொண்டு கழற்றிவிடுகிறாள். சம்பத், ஜெயந்தி தனக்குச் சரியானவளாக இருப்பாள் என்று கச்சிதமாக மணமுடிக்கிறான்.
இறப்புக்குப் பின்னர் ஏற்படும் சலனங்கள் குறித்து வெகுநாட்களாக சிந்தித்திருக்கிறேன். இந்த உலகம் ஒவ்வொருவருக்கும் தகுந்த வேலை கொடுத்திருப்பதாகவும் அந்த வேலையின் விளைவுகள் இறப்பிற்குப் பின்னர் ஒளிக்கவேண்டும் என்பதாகவுமே நினைத்துக் கொள்கிறேன். சம்பத்தின் நண்பர்கள் அப்படியானதொரு கலக்கத்தில் இருந்திருக்கவேண்டும்.
ஒருவகையில் சம்பத்தைப் போன்றுதான் நாமெல்லாமே. மனச்சிதைவை நமக்குள்ளாகவோ, அல்லது நம் எழுத்துக்கள், கோபங்கள், ஏன் சந்தோஷங்களின் வழியேவோ கரைத்துவிடுகிறோம். நமக்குள் நாமே உருகி புதியவனாய் மாறிக் கொள்கிறோம். சம்பத்தின் இச்சைகளைப் போன்றே நமக்கும் இருப்பதாகத் தோன்றுகிறது. என்னைக் கேட்டால் சம்பத் எந்த தவறும் செய்யவில்லை என்றேதான் நினைக்கிறேன்.
நாவலின் வழிநெடுகவும் வன்மத்தின் வண்ணம் ஊறிக் கொண்டே செல்கிறது. அது அடர்த்தி மிகுந்து கழுத்தை இறுக்குவதாகவும்கூட தெரிந்தது ( சட்டென்று நாவலை மூடி வைத்துவிட்டேன். ) திண்ணையெங்கும் தழுவிக் கிடக்கும் வெப்பத்தின் ஊடாக நாவலின் இளஞ்சூடு வாசிக்க இயலாத வெறுப்பைத் தோற்றுவித்ததை உணரமுடிகிறது. எழுத்துக்களை இவ்வளவு சூடாக எழுதமுடியா என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன். நாவல் படிக்கப் படிக்க என்னோடு ராமதுரையும், மாரியப்பனும், அழகரும் அவர்கள் சென்ற மலையிடுக்குகளில் பயணித்துக் கொண்டே இருந்தார்கள். சம்பத்தோடு உண்டான நினைவுகளும் நிகழ்வுகளுமாக எழுத்துக்கள் சுற்றிக்கொண்டே இருந்தன.
சம்பத் எனும் தனிமனித வாழ்வின் கசப்புகளும், வன்மங்களும், மனச்சிதைவும் நாவலின் பிளந்த பாதையில் காணக்கிடைக்கிறது. புத்தகத்தைப் படித்து முடித்தபிறகும் சம்பத்தின் மனைவி ஜெயந்தியைப் போன்று நாமிருந்தால் எப்படி இருந்திருக்கமுடியும் என்று கேட்டுக் கொள்ளவேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அவளது ஒருபக்க வாழ்வு ஏன் முடிந்துவிட்டது என்று கேட்டுக் கொண்டே இருக்கிறேன். நிகழ்காலத்தின் மீதுண்டான தாபமும் குரூரமும் அலைகளைப் போன்று முட்டி முட்டிச் செல்கிறது.
இன்னொரு வகையில் சம்பத் ஏன் இப்படித் திரிகிறான் என்றும் கேள்வி எழுகிறது. அவனது எண்ணங்கள், நடத்தைகள், எல்லாமே விசித்திரமாகவோ அல்லது கசப்பான மனிதர்களைக் கண்டிராத புதிய அனுபவத்தையோ தோற்றுவிக்கிறது. அவனது காமம் ஏன் அவ்வளவு உமிழ்கிறது? அல்லது எல்லோருடைய காமமும் அப்படியான ஒன்றா?
நாவலின் ஓரிரு இடங்களில் எஸ்.ராமகிருஷ்ணன் தடுமாறியிருக்கிறார். அழகர் கதை சொல்லுவதாக நாவல் செல்கிறது. ஓரிடத்தில் மாரியப்பன் என்று குறிப்பிட்டு, அழகர் மீண்டும் தொடர்வதாக செல்கிறது… நம்பமுடியவில்லை. ஒருவேளை அச்சகப்பிழையாக இருக்கலாம் என்று கருதுகிறேன். அல்லது எனது வாசிப்பனுபவத்தின் குறைபாடாகவும் இருக்கலாம். சொல்லுவதற்கில்லை. அதைப் போன்றே நாவலும் சிறியதாக இருக்கிறதோ என்ற உணர்வும் இருக்கிறது. ஆனாலும் உறுபசியை இன்னும் நீட்டிக் கொண்டிருக்க முடியாதுதான்..
உறுபசி, கடும் பசிக்கு முன்னர் வயிறு ஒலிக்கும் ஓசையைப் போன்று மனதிற்குள்ளிருந்து சப்தங்களை எழுப்பிக் கொண்டிருக்கிறது. அது நிரப்பமுடியாத பசியை சுமந்து கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. புத்தகத்தை மூடி நிதானிக்கையில் மனமூலையெங்கும் எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்துக்கள் இறைந்து கிடப்பதை மட்டும் உணரமுடிகிறது.
(நன்றி : ஆதவா)

மகத்தான சந்திப்பு -Must Read


ஆறு மாதங்களுக்கு முன்பாக சேலம் சென்றிருந்த போது திருவண்ணாமலையில் இருந்து நண்பர் பவா செல்லதுரை தொலைபேசியில் என்னை அழைத்து சேலத்தில் உங்களை காண வேண்டும் என்று இரண்டு வாசகர்கள் விரும்புகிறார்கள், அவர்களைச் சந்திக்க முடியுமா என்று கேட்டார், அவசியம் சந்திக்கிறேன், என் அறைக்கு வரச்சொல்லுங்கள் என்றேன்,
அவர்களால் வீட்டிலிருந்து வெளியே வர இயலாது, உங்களுக்கு நேரமிருந்தால் அவர்கள் வீட்டிற்குப் போய் பார்க்கலாம் என்றார், அதற்கென்ன அவசியம் பார்க்கிறேன் எனறேன்,
வாசகர்களை வீடு தேடிப்போய் சந்திப்பது எனக்கு மிகவும் இயல்பானது, புத்தகங்களை நேசிக்க கூடிய ஒருவரை எழுத்தாளர் தேடிச் சென்று பார்ப்பதே சரி என நினைக்கிறவன் நான், அதனால் அன்று காலை அவர்கள் வீடு உள்ள எழில் நகருக்கு போகும் வரை அந்த வாசகர்களைப் பற்றி எந்த்த் தகவலும் தெரிந்து கொள்ளவில்லை
நகரை விட்டு விலகிய சாலைகளில் கார் பயணம் செய்து மண்சாலையில் இறங்கிச் சென்றது, முகவரியைத் தேடிக்கண்டுபிடித்து போய் சேர்ந்தேன், என்னோடு கவிஞர் சிபிச்செல்வன் வந்திருந்தார், வாழையும் மரங்களும் கொண்ட அழகான சிறிய வீடு, வீட்டின் உள்ளே முகம் எல்லாம் சிரிப்பும் சந்தோஷமாக என்னை இருவர் வரவேற்றார்கள், அப்போது தான் முதன்முறையாக வானவன் மாதேவியையும் வல்லபியையும் சந்திதேன்,
இருவருமே  சகோதரிகள், Muscular Dystrophy  எனும் தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள். முப்பது வயது என்றார்கள், ஆனால் ரெக்கையடிக்கப் பழகும் புறாக்குஞசுகளைப் போல இருந்தார்கள்,
அவர்களுக்காக நான் கொண்டுபோயிருந்த புத்தகங்களைக் கையில் கொடுத்த போது அந்த கரங்களைப்  பற்றிக் கொண்டேன், என் கையில் இருந்த நடுக்கத்தை என்னால் மறைக்க இயலவில்லை, அதை அவர்களும் உணர்ந்திருக்க கூடும், மனம் அவர்களைப் பார்த்த மாத்திரத்தில் கனத்துப் போயிருந்த்து, பேச முடியாத  தவிப்பேறிய தொண்டையுடன் அவர்களையே பார்த்துக் கொண்டேயிருந்தேன்,
நடக்கமுடியாமல் ஒடுங்கிப்போன உடல், ஆனால் பேச்சில், முகத்தில் உற்சாகம் பீறிடுகிறது, ஆர்வம் கொப்பளிக்க அங்கிருந்த அத்தனை பேரிடமும் என்னைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள், துணையெழுத்து, கதாவிலாசம், தேசாந்திரி, நெடுங்குருதி, யாமம் என்று பேச்சு வளர்ந்து கொண்டேயிருந்த்து, நான் அவர்கள் மீதிருந்த கவனித்திலிருந்து விலகவேயில்லை
எல்லா மனிதர்களுக்கும் உடலில் உள்ள செல்கள் அழிந்து புதிய செல்கள் உருவாகும். ஆனால், தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, பழைய செல்கள் அழியும். புதிய செல்கள் உருவாகாது.  அதன் காரணமாக உடலில் உள்ள தசைகள், மெள்ள மெள்ளத் தனது செயல்பாட்டை இழக்கத் தொடங்கும்.
அதாவது உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயல் இழக்கத்துவங்கி அவர்கள் உடல் முடங்கிவிடும்,  முடிவில் ஒரு நாள் இதயம் கூட செயல் இழந்து விடும்,
வலியும் சோர்வும் பயமும் அவர்களை முடக்க முயலும் போதெல்லாம் நோயிற்கு எதிராக உறுதியான மனவலிமையுடன் வாழ்வின் மீது தீராத பற்றும், சக மனிதர்கள் மீது மிகுந்த அன்பும் அக்கறையுமாக அவர்கள்  போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நன்றாகவே உணர முடிந்தது,
உடல் நலிவுற்று நடமாட இயலாத சூழலிலும் கூட அவர்கள் புத்தகங்களைத் தேடித்தேடி வாசித்திருக்கிறார்கள். தங்கள் வீட்டில் உள்ள சிறிய நூலகத்தை எனக்குக் காட்டினார்கள்,
பிரபஞசன், வண்ணதாசன். அசோகமித்ரன். சுந்தர ராமசாமி, கிரா. ஜெயமோகன் நான் என அத்தனை முக்கிய தமிழ் படைப்பாளிகளையும் வாசித்து, ஆழமாகப் புரிந்து கொண்டு விவாதிப்பதோடு அந்த எழுத்தைப் பற்றி தன்னைத் தேடி வருபவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.
படித்த நல்ல பதவியில் உள்ள, பல ஆயிரம் பணம் சம்பாதிக்கும் பலருக்கும் இல்லாத இந்த மனநிலையும் அக்கறையும் என்னை நெகிழ்ச்சியுறச் செய்தது,
பெரிய புத்தகங்களை அவர்களால் கைகளில் வைத்துப் படிக்க முடியாது, கைவலியாகிவிடும், ஆனாலும் வலியைப் பற்றிய கவலையின்றி விரும்பிய  புத்தகங்களை வாசிக்கிறார்கள், இவ்வளவு தீவிரமான இலக்கிய வாசிப்பு கொண்ட இருவரை நான் கண்டதேயில்லை, என் வாழ்வில் நான் சந்தித்த மகத்தான வாசகர்கள் இவர்களே,
இவர்களை ஒருவேளைச் சந்திக்காமல் போயிருந்தால் அந்த இழப்பு எனக்குத் தீராத ஒன்றாகவே இருந்திருக்கும்
சிறிய அகல் விளக்கின் வெளிச்சம் மொத்த அறையையும் ஒளிரச்செய்வது போல அவர்கள் சிரிப்பும் சந்தோஷமும் அங்கிருந்த அத்தனை பேரிடமும் தொற்றிக் கொண்டிருந்தது, தங்கள் மீது எவரும் பரிதாபம் கொள்ளவோ. வேதனை கொள்ளவோ வேண்டியதில்லை என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தார்கள், அது எனக்கு மிகவும் பிடித்திருந்த்து, தனது நோயைப் பற்றி சொல்லும் போது கூட உணர்ச்சிவசப்படாமல் இயல்பாகவே பேசினார்கள்
இருபது வருசங்களுக்கும் மேலாக மாதேவியும் வல்லபியும் தசை சிதைவு நோயோடு வாழ்கிறார்கள், அவர்கள் அப்பா இளங்கோ மின்சார வாரியத்தில் கடைநிலை ஊழியர், சிறியகுடும்பம்,
வானவன் மாதேவிக்கு  ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது நோய் துவங்கியிருக்கிறது, கெண்டைக்கால் சதைகள் வலுவிழந்து போயின, நடக்க முடியாமல் சிரமமானது, பள்ளிக்கூடம் போய்வருவதற்குள் பத்து இடத்தில் விழுந்து விடுவாள். தனியே டாய்லெட் கூட போக  முடியாது, மருத்துவர்கள் பரிசோதனை செய்துவிட்டு  தசைச் சிதைவு நோய்  அதிக நாள் வாழமுடியாது என்று சொன்னார்கள்
.இரண்டாவது வருசமே இதே நோய் அவரது தங்கைக்கும் ஏற்பட்டது, குடும்பமே கலங்கிப்போனது, நோயோடு போராடியபடியே இருவரும் பத்தாம் வகுப்பு வரை படித்தார்கள், பிறகு வீட்டில் இருந்து கொண்டு பிளஸ் டு அதன் பிறகு அஞச்ல் வழிடியல் டிசிஏ படித்திருக்கிறார்கள்,
வானவன் மாதேவி யாருக்கோ நடந்தைதைப் பேசுவது போல இயல்பாகத் தன் உடலின் வலி வேதனைகளைப் பற்றி சொல்லிக கொண்டிருந்தார்
எங்களால் எதையும் தன்னிச்சையாக செய்ய முடியாது, எங்களை ஒருவர் தூக்கி உட்கார வைக்க வேண்டும், போன் பேச வேண்டும் என்றால் கூட யாராவது காதருகே  போனை வைக்க வேண்டும். பேசிக் கொண்டிருக்கும் போது கழுத்து சாய்ந்து பின்பக்க்மாக போய்விடும், உடம்பு எங்களுடையது, ஆனால் அதன் கட்டுபாடு எங்களிடமில்லை,
ஆனால் மனம் வலிமையாக இருக்கிறது, புத்தகங்களின் வழியே நாங்கள் நிறைய நம்பிக்கை பெற்றிருக்கிறோம், வாழ்நாளில் நாங்கள் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கிறது என்பதைப் புத்தகங்களே அறிமுகம் செய்து வைத்தன, இன்று எங்களை போன்ற நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நாங்கள் ஒரு அறக்கட்டளை உருவாக்கி, மருத்துவ நிலையம் அமைக்க முயன்று வருகிறோம், எங்களை போல நூற்றுகணக்கானோர் இதே நோயில் பாதிக்கபட்டு உரிய மருத்துவ வசதியின்மையால் அவதிப்படுகிறார்கள்
இந்த நோய் உருவாக முக்கியக் காரணங்களில் ஒன்று சுற்றுச்சூழல் சீர்கேடு, ஆகவே அதற்கு எதிரான போராட்டங்களில் கலந்து கொள்கிறோம் பி.டி. கத்தரிக் காய்க்கு  எதிராக, எங்கள் பகுதிக் கிராமங்களில் கையெழுத்துக்கள் வாங்கினோம். மேல்வன்னியனூர்  என்ற இடத்தில் மலைக் குன்றின் பாறைகளை வெட்டிக் கடத்துவதற்கு எதிரான  போராட்டங்களில் கலந்துக் கிட்டோம். என்கிறார்
அவரைத்தொடர்ந்து வல்லபி சொன்னார்
அதிகபட்சம் 10 வருஷங்கள்தான் உயிரோடு இருக்க முடியும்னு  டாக்டர்கள் சொன்னாங்க ஆனால் நாங்கள் மனஉறுதியால் இன்றும் நோயை எதிர்த்துப் போராடி வருகிறோம், ஒருவேளை எங்கள் இதயம் கூட செயல் இழந்து போய்விடலாம், அதைப் பற்றி எங்களுக்கு கவலையில்லை,  நோயின் மொத்த வலியை நாங்கள் ஏற்றுக் கொண்டுவிட்டோம் அடுத்த தலைமுறைக்கு இந்த நோய் இருக்காது, என்று தீர்க்கமாகச் சொன்னார்
அவர்களது நோயிற்குப் புதிய மருந்து கண்டுபிடிக்கபட்டிருக்கிறது, அதன் விலை அதிகம், உங்களுக்கு மட்டும் இலவசமாக தருகிறோம் என்று ஒரு மருத்துவமனை முன்வந்த போது எங்களைப் போன்று தசைச் சிதைவு நோயால் பாதிக்கபட்ட அத்தனை பேருக்கும் இலவசமாக மருந்து கொடுங்கள் கடைசியாக நாங்கள் வருகிறோம் என்று வானவன் தேவியும் வல்லபியும் மறுத்திருக்கிறார்கள் என்பது சமீபத்திய செய்தி
அதை விடவும் ஒரு அமெரிக்க தன்னார்வ நிறுவனம் அவர்களது அறக்கட்டளை வழியாக மருத்துவமனை உருவாக்க பெரிய தொகையை தர முன்வந்த போது அவர்களை போன்ற பன்னாட்டு கம்பெனிகளால் தான் இந்தியா சீரழிக்கபடுகிறது என்று அந்த்த் தொகையை வாங்க மறுத்துவிட்டார்கள், அந்த தார்மீக நெறி மகத்தானது
தனது நோயைப் பற்றி பொருட்படுத்தால் சமூக போராட்டங்களில் கலந்து கொள்வதுடன் தீவிரமான புத்தக வாசிப்பு. விவாதம். சூழலியல் செயல்பாடு என்று துடிப்போடு இயங்கும் அவர்களைக் காணும் போது பரவசமாக இருந்த்து
நான் எழுதிய கட்டுரைகளில் விவாதிக்கபட்ட செகாவை பற்றியும் டால்ஸ்டாய் பற்றியும் நெடுங்குருதி நாவலின் கதாபாத்திரங்களைப் பற்றியும் விரிவாகப் பேசினார்கள்,  அன்று அவர்களின் பிறந்த தினம் என்று பிறகு தான் தெரிய வந்த்து, அதை அனைவரும் சேர்ந்து கொண்டாடினோம், அவர்கள் வீட்டின் பின்புறம் ஒரு மரக்கன்று நட்டேன்,
அந்த மரம் வளரும் போது அதன் இலைகளின் வழியே அவர்களை அருகிலிருந்து நான் பார்த்துக் கொண்டேயிருப்பேன் என்ற நம்பிக்கை உருவானது
அவர்கள்’ஆதவ்  அறக்கட்டளை என்ற ஒன்றை ஆரம்பித்திருக்கிறார்கள். தசைசிதைவு நோயால் வட இந்தியாவில்  ‘ஆதவ்’ என்ற சிறுவன் இறந்து போயிருக்கிறான் அவனது நினைவாக இந்த பெயரை வைத்திருக்கிறார்கள் 
மஸ்குலர் டிஸ்ட்ரோபி வியாதியால் பாதிக்கப் பட்டவர்களைப் பாதுகாத்துப்�
பராமரிக்க ஒரு மருத்துவமனை உருவாக்க வேண்டும் என்ற  கனவு அவர்கள் கண்களில்   மின்னுகிறது. 
ஆறு மாதங்களுக்கு முன்பாகவே சென்னை திரும்பியதும் அவர்களை பற்றி எழுத வேண்டும் என்று மனதில் தோன்றியது, ஆனால் கணிப்பொறியின் முன்பு உட்கார்நது அவர்களைப் பற்றி  நினைக்க துவங்கியதும் மனதில் இனம்புரியாத வலியும் வேதனையும் சேர்ந்து கொண்டுவிடும், சொல்லற்று போன நிலையில் அவர்கள் புகைப்படங்களையே பார்த்துக் கொண்டிருப்பேன்
நேற்று கோவையில் அவர்கள் இருவரும் உயிர்கொல்லி எதிர்ப்பு கருத்தரங்கின் மேடையில் அமர்ந்து ஆவேசமாக தங்கள் எதிர்ப்புணர்வைப் பகிர்ந்து கொண்ட போது மனதில் அவர்களது நோய் சார்ந்து உருவாகியிருந்த பிம்பம் உடைந்து போய் அந்த ஆவேசம் எனக்குள்ளும் புகுந்து கொண்டது.
புத்தகங்கள் என்ன செய்யும் என்ற உதவாத கேள்வியை கேட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் இந்தப் பெண்களின் வாழ்க்கையைப் படித்துப் பாருங்கள், அவர்களுக்கு நம்பிக்கை தரும் மருந்தாக இருந்திருக்கிறது புத்தகங்கள்,
புத்தகங்களைப் படித்துத் தூர எறிந்துவிடாமல் அதிலிருந்து ஒரு வாழ்க்கை நெறியை உருவாக்கி கொண்டு வீதியில் இறங்கிப் போராடுகிறார்கள், அந்த துணிச்சல். அக்கறை பலருக்கும் இல்லை என்பதை நிதர்சனம்,
வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் கொள்வது நம் கையில் தானிருக்கிறது, வானவன் மாதேவி வல்லபி இருவரும் வேண்டுவது நமது பரிதாபத்தை அல்ல, அன்பை, அக்கறையை, ஆக்கபூர்வமான  செயல்பாடுகளை,
,இவர்களை பற்றி முன்னதாக விகடன் மற்றும் நாளிதழ்களில் கட்டுரைகள் வெளியாகி உள்ளன, அவர்களோடு இணைந்து செயல்படும் இளைஞர்கள் பலர் வீடு தேடி வருகிறார்கள், அன்பைப் பகிர்ந்து கொள்கிறார்கள், அந்த வீட்டில் எப்போதும் சந்தோஷம் ஒளிர்ந்து கொண்டயிருக்கிறது, அதன் கதகதப்பும்  நெருக்கமும் வேறு எங்கும் கிடைக்காத்து
வானவன் மாதேவி வல்லபி இருவரும்  படிக்க நல்ல புத்தகங்கள் தேவைப்படுகின்றன, விருப்பமான நண்பர்கள் அவர்களுக்குத் தேவையான புத்தகங்களை வாங்கி கொடுங்கள், மருத்துவசிகிட்சை  சார்ந்த அவர்களின் தேவைகளுக்கு உதவி செய்யுங்கள், அவர்கள் முன்னெடுகின்ற சமூக இயக்கங்களில்  கைகோர்த்து உறுதுணை செய்யுங்கள்,
எல்லாவற்றையும் விட அவர்களை நேரில் சென்று பாருங்கள், உங்கள் அன்பையும் அக்கறையையும் தெரியப்படுத்துங்கள், எவ்வளவோ பணத்தை விரையும் செய்யும் நாம் தங்கள் நோய்மையோடும் சமூகமேம்பாட்டிற்காக போராடும் அவர்களுக்கு உதவி செய்வது கட்டாயமான ஒன்று.‘
தொடர்புக்கு:�
ஆதவ் அறக்கட்டளை Aadhav Trust�கடை எண்: 28-1 F, பிளாட் எண் 1,�எழில் நகர்போடிநாயக்கன்பட்டி,�சேலம் – 636005,�அலைபேசி :   99763 99403 .9976399409 
**

Tuesday, June 28, 2011

சிறுகதை : மழையில் பூத்த மத்தாப்பு - நாகூர் ரூமி


புடவைத் தலைப்பை எடுத்து இடுப்பில் சொருகிவிட்டாள் தங்கப்பாப்பா.
அதன் அர்த்தம் உடனே புரிந்துவிட்டது முருகராசுக்கு. அது புரிவதற்கு அவன் எந்தப் பிரயத்தனமும் செய்யத் தேவையில்லை. அதற்கு அவசியமும் அவனுக்கு இல்லை. அவள் பொறுமைக்கோட்டைத் தாண்டிவிட்டதற்கு அடையாளம் அது.
அடுத்து அவள் என்ன செய்வாள் என்று அவன் அறிவான். அவன் கைகளிலும் கால்களிலும் இருந்த தழும்புகள் தங்கபாப்பாவின் இடுப்புச் சொருகலுக்கு விளக்கம் சொல்லப் போதுமானதாக இருந்தது.
இருந்தாலும் ஒரு நப்பாசை. அவள் சட்டென்று பாய்ந்து பிடிக்க முடியாத தூரத்தில் பாதுகாப்பாக நின்று கொண்டு கெஞ்சிப் பார்த்தான்.
"அம்மாம்மா, ஒரே ஒரு புசுவானம்மா. ஒன்னே ஒன்னும்மா.."
"ஆமா ஒங்கப்பன் கொட்டிக் குடுக்கறதுலெ, புசுவானம் ஒன்னுதாங் கொறச்ச. என் வால்க்கெயே புசுவானமாக்கிட்டான் இந்த குடிகாரக் கம்மினாட்டி. சூடு போட்ருவேன். இங்கெருந்து போயிடு மருவாதியா. இங்கெ நிக்காதெ" அவள் கருணையோடு அவனை விரட்டினாள்.
அதற்குமேல் அங்கிருந்தால் சூடு போட்டுவிடுவாள். கையிலோ காலிலோ அசிங்கமான மஞ்சளாக தழும்பு ஏற்படும். அது காய்ந்தாலும் அசிங்கமாக நிலைத்துவிடும். அதோடு அதன் பிடிவாதமான எரிச்சல் அவன் மட்டுமே உணர்ந்தது. தன் கறுப்பு நிறத்தை இந்த முறையில் மாற்றிக்கொள்வதில் அவனுக்கு உடன்பாடில்லை.
எத்தனையோ முறை தீ அவன் கால்களோடும் கைகளோடும் பேசியுள்ளது. ஆனால் ஒவ்வொரு முறையும், தன் முறையீடுகளை எல்லாம் நிராகரிக்கும் போதும் சரி, தண்டிக்கும் போதும் சரி, அம்மா ஏன் அழுதுகொண்டே இருந்தாள் என்று அவனுக்கு முழுதுமாக விளங்கவில்லை. அப்பா காரணமாக இருக்கலாம்.
எப்போதும் போல அப்பா மயக்கத்திலிருந்தார். அவருக்கு எதுவும் தெரியாது. அவர் எப்போதுமே மிதந்துகொண்டிருப்பவர். தனக்காக அவர் ஏற்படுத்திக் கொண்ட பிரத்தியேக உலகத்தில். அங்கே மனைவியோ மகனோ வீடோ விஷேஷமோ எதுவும் கிடையாது. தனக்கு சூடு போடுவதற்கு பதிலாக அம்மா அப்பாவுக்கு போட்டிருக்கலாம். அவன் பலமுறை நினைத்ததுண்டு. தீயின் கோபம் அவரை ஒன்றும் செய்திருக்க முடியாது. அவனுக்குத் தெரியும்.
ஒருமுறை தன் கையில் இழுத்துவிட்டுப் போன 'செங்கோ'லை அவன் அம்மா வைத்துவிட்டு (முருகராசின் காலில்தான்) அழுதுகொண்டே போன பிறகு ஒரு துணியை வைத்து பிடித்து அவன் எடுத்துப் பார்த்தான். அப்பாவால்தான் இத்தனையும் என்று தோன்றியது. அம்மா செய்யத் துணியாத காரியத்தை தான் செய்தால் என்ன என்று தோன்றியது.
எடுத்த வேகத்தில் அப்பாவின் பாதத்தில் வைத்துவிட்டு ஓடிப்போய் மரத்தின் மறைவில் நின்று பார்த்தான். அவன் அப்பா அதை பொருட்படுத்தவே இல்லாதது அவனுக்கு பெரிய ஆச்சர்யமாக இருந்தது. தனக்கு மட்டும் ஏன் அது பயங்கரமாக சுடுகிறது? தானும் அப்பா மாதிரி ஆக முடியாதா என்ற ஏக்கம் பிறந்தது.
என்ன செய்வதென்று அறியாமல் நடந்து வந்துகொண்டே இருந்தான். மனம் போன, கால் போன போக்கில். பூத்திரி, தரை சக்கரம், புசுவானம், அனுகுண்டு, பாம்பு மாத்திரைகள், கேப்பு, துப்பாக்கி, கலர் தீக்குச்சிகள் எல்லாம் அவன் கண்ணெதிரே வந்து அவனிடம் விளையாட்டுக் காட்டின. அவற்றின் வண்ண மாயாஜாலம் அளவிட முடியாத சந்தோஷம் தருவதாக இருந்தது.
ஒரே ஒரு புசுவானம் மட்டுமாவது அம்மா வாங்கித் தருவதாக இருந்தால் அதற்காக இன்னொரு முறைகூட சூடு போட்டுக் கொள்ளலாம். ஆனால் அவனுடைய கலர்கலரான பிரச்சனைகள் எதையுமே கண்டு கொள்ளாமல் ஊர் தீபாவளிக்காக குதூகலப் பட்டுக்கொண்டிருந்தது. அவனுக்குக் கோபம் கோபமாக வந்தது.
வெளிச்சம் வருவதற்கு முன்பே அம்மா எழுப்பி விட்டுவிடுவாள். உடனே அவள் தருவதையெல்லாம் எடுத்துக் கொண்டு மலை ஏற வேண்டும். நாக்கனேரி போனால்தான் விறகு வெட்டி வர முடியும். அம்மா வெட்டி வெட்டிக் கொடுப்பதை சாயங்காலம் வரை இருந்து தூக்கி வரவேண்டும். இடையில் கஞ்சிதான். ஒரு டீக்கடை கூட கிடையாது. டீ குடிக்க ஊருக்குள் இறங்கித்தான் வர வேண்டும்.
இப்படியெல்லாம் அம்மாவுக்கு உதவி செய்தாலும் வருஷத்துக்கு ஒரு தடவைகூட கேட்பதை வாங்கித் தராவிட்டால் என்ன செய்வது? இனி அம்மாகூட மலைக்குப் போகவே கூடாது. அவன் முடிவு செய்து கொண்டான்.
அவனுடைய வருத்தத்தை யாரும் பொருட்படுத்தியதாக தெரியவில்லை. எங்கு பார்த்தாலும், தெருவுக்குத் தெரு, வெடிச்சத்தம் காதுகளை அடைத்தது. மாரியம்மன் கோவில் தெருவில் சப்தம் ரொம்ப பலமாக இருந்தது. அது அவனை இழுத்தது.
போய்ப்பார்த்தபோதுதான் தெரிந்தது அது தீபாவளிக்காக கொளுத்தப்பட்ட பட்டாசுகளல்ல. வாகனப் போக்குவரத்தும் மக்கள் நடமாட்டமும் பூனையைக் கண்ட எலியாட்டம் ஸ்தம்பித்துவிட்டிருந்தன. யாரோ தலைவர் வருகிறாராம். அவருக்கு ஸ்பெஷல் மரியாதை. தான் வரும்போதும் மக்கள் இந்த மாதிரி மரியாதை செய்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தான். அந்த சப்தமான மரியாதை அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.
நூற்றுக்கணக்கான வெடிகள் நடு ரோட்டில் வீணாக வெடித்துச் சிதறின. அதை யாரும் ரசித்ததாகவோ, தன்னைப் போல சந்தோஷப் பட்டதாகவோ தெரியவில்லை. நின்று கொண்டிருந்தவர்களில் சில பெண்கள் காதுகளைப் பொத்திக் கொண்டிருந்தனர்.
சரவெடி தொடர்ந்து வெடித்துக்கொண்டே சென்றது. வெடித்துச் சாவதில் அவைகளுக்கு அப்படி என்னதான் அவசரமோ? சில கணங்களில் சிதறிய தாள்களாகவும் துண்டுகளாகவும் கைகளில் ஒட்டும் ஒரு வித சாம்பல் நிற பொடியாகவும் மாறிப்போயின. ஒரு முனையில் பற்ற வைத்த ஒரு சின்ன கங்கு. அக்கினியின் குஞ்சு. ரோட்டையே அலற வைக்கிறது.
அவைகள் வெடித்து தங்கள் கடமையை முடித்துக்கொண்ட பிறகு கூட்டம் மெல்ல சாலையைக் கடக்க ஆரம்பித்தது. ஆனால் ஒரு விதமான வாடை காற்றில் கலந்திருந்தது. சிலர் கர்சீ·ப்களை வைத்து மூக்கைப் பொத்திக் கொண்டு சென்றனர்.
அந்த வெடிகளில் ஒரு சிலதையாவது தனக்குக் கொடுப்பதைப் பற்றி யாரும் யோசித்ததாக தெரியவில்லை. இனம் புரியாத துக்கம் அவன் தொண்டையில் வந்து அனுகுண்டு வெடியைப் போல அடைத்துக் கொண்டது. அவனும் தொடர்ந்து நடக்க ஆரம்பித்தான். ஏதோ மற்றவர்கள் மாதிரி  தனக்கும் ஒரு நோக்கம் இருப்பதைப்போல.
ஒரு வீட்டின் வாசலில் குழந்தைகள் நின்று மத்தாப்பு, பூத்திரி, தரை சக்கரம், புஸ்வானம் சகிதமாக எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு வந்ததைப் பார்த்த அவன் அந்த வீட்டிற்கு எதிரில் போய் நின்று கொண்டான். தனக்குப் போட்டியாக யாரும் மறைத்துக்கொண்டு பார்க்காதது அவனுக்கு சந்தோஷமாக இருந்தது. தன் எதிர் வீட்டு டிவியில் பார்த்த "அய்யன் பட்டாசுகள் படபடபட"வென அவன் மனதில் வெடிக்க ஆரம்பித்தன. அங்கிருந்த ஆஸ்பத்திரி நடைபாதையில் வசதியாக உட்கார்ந்து கொண்டான் முருகராசு.
எதிர்வீட்டு சின்னப் பையன் ஒருவன் கேப்புகளைக் கொண்டு வந்து கீழே பரத்தினான். ஒரு கல்லை எடுத்து வந்து ஒவ்வொன்றாக அடித்து வெடிக்க வைத்தான். அவன் ஒவ்வொரு அடிக்கும் அது வெடிக்கவில்லை. பல அடிகள் இலக்கு தவறி பட்டதால் கல் தரையை அடிக்கும் சப்தம் மட்டுமே கேட்டது. தான் அந்த இடத்தில் இருந்தால் ஒரே அடியில் நாலைந்தை வெடிக்க வைத்திருக்கலாமே என்று நினைத்து வருத்தப்பட்டான் முருகராசு.

ஒரு குட்டிப்பாப்பா வந்து ஒரு கொத்து பூத்திரிகளைக் காட்டியது. ஒரு பெண் வந்து கொளுத்திக் கொடுத்து குழந்தையின் கையைப் பிடித்து வட்டமாகச் சுற்றினாள். அவள் அதன் அம்மாவாக இருக்கலாம். நாம் ஏன் இந்த வீட்டின் பிறக்கவில்லை என்று முருகராசு நினைத்தான். தீயின் சந்தோஷம் வண்ணப்பூக்களாய் பாப்பாவின் கைகளைச் சுற்றிப் பூத்தன. சில பெரிய பையன்கள் வந்து தரைசக்கரங்களை விட்டனர்.
சிமெண்ட் தரையில் சிரித்த நெருப்பைப் பார்க்கப் பார்க்க முருகராசுக்கு பேரானந்தமாக இருந்தது. தன் உடம்பின் மேல் மட்டும் நெருப்பு ஏன் இவ்வளவு கோபம் காட்டுகிறது?
கடைசியாக புசுவானம் வந்தது. ஒரு மூன்று நான்கு. ஏதோ கலர் சினிமாவை டிக்கட் வாங்காமல் பார்ப்பதைப் போல முருகராசு பார்க்க ஆரம்பித்தான். அவைகளைக் கொளுத்த ஆரம்பித்த நேரத்தில்தான் ஒரு கூர்க்கா வந்து முருகராசை விரட்டினான்.
"டேய் போடா போ, இங்கெல்லாம் உக்காரக்கூடாது". அவன் கையில் ஒரு கம்பும் முகத்தில் முரட்டு மீசையும் வைத்திருந்தான். அவனைப் பார்ப்பதற்கே பயமாக இருந்தது.
அப்போதுதான் யாரும் எதிர்பார்க்காமல் வானம் பொத்துக்கொண்டது. மாண்டியா விவசாயிகளை அலட்சியப் படுத்திவிட்டு கபினி அணை தானே திறந்து கொண்டமாதிரி கொட்ட ஆரம்பித்தது. அந்த புஸ்வானங்களுக்கு உயிர் வருவதற்கு முன்பே மழை அவற்றின் உயிரைப் பறித்துக் கொண்டது. சில நிமிஷங்களில் ஊரின் வெடிச்சப்தங்கள் யாவும் செத்து அடங்கின. தீயின் பூக்கள் எங்குமே பூக்கவில்லை.
நனைந்து கொண்டே வானத்தைப் பார்த்தான் முருகராசு. அந்தப் பார்வையில் இருந்தது நன்றியா கோபமா சொல்லமுடியவில்லை

கடிதம் : நட்புக்கான வழியும் மொழியும் : திறந்த கடிதம் -- நாகூர் ரூமிஅன்பான தமிழோவியம் வாசகர்களுக்கு என் வணக்கம்.
கடந்த ஒன்பது வாரங்களாக தமிழோவியத்தில் நல்லடியார் என்ற நண்பர் வஹீ பற்றி எழுதிவந்திருக்கிறார். நேசகுமாரின் (மொழிபெயர்ப்புக்) கட்டுரைக்கு பதில் கொடுக்கும் முகமாக.
அதில் வந்த கட்டுரையைவிட பல மடங்கு பெரிய மறுமொழிகளையும் நான் படித்தேன். அதில் பல இடங்களில் நேசகுமார், மனிதன், மதுரவேல், நல்லடியார், சோலை, பகுத்தறிவுவாதி போன்ற சிலர் என் பெயரைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அதில் நான் இந்துக்கடவுள்களைக் கிண்டல் செய்து எழுதியிருந்ததாகவும் நேசகுமாருக்கும் எனக்கும் சொந்தப்பகை இருப்பதாகவும் கருத்து தெரிவித்து இருந்தார்கள்.
இதுநாள்வரை நான் எதற்கும் பதில் சொல்லாமல் இருந்ததற்கு இரண்டு காரணங்கள் உண்டு.
ஒன்று
மதங்களைப் பற்றிய எந்த விவாதமும் புரிந்துகொள்ளும் நோக்கோடு செய்யப்பட்டால் சரி. ஆனால் ஒரு மதத்தின் அடிப்படை நம்பிக்கைகளே தவறு என்று சொல்வதற்காக வாதிட்டுக்கொண்டிருந்தால் அதற்கு முடிவே கிடையாது. எனவே, முடிவற்ற ஒரு காலவிரய வேலையில் என்னை நான் ஈடுபடுத்திக்கொள்ள விரும்பவில்லை. என்னுடைய நம்பிக்கை தவறு என்று நீங்கள் வாதிடுவதனால் எனக்கும் நன்மையில்லை, உங்களுக்கும் நன்மையில்லை.
இரண்டு
என் எழுத்துப்பணிகள் காரணமாக என்னால் விவரமான பதில்களை உடனுக்குடன் கொடுத்துக்கொண்டிருக்கவும் முடியவில்லை.
நேசகுமார் பற்றி
எனக்கும் நேசகுமாருக்கும் எந்தப் பகையும் கிடையாது. அவர் யாரென்றுகூட எனக்குத் தெரியாது. ஆனால் அவர் எனது 'இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம்' நூலைப்படித்து விட்டு எழுதிய விமர்சனம் அவரைப் புரிந்துகொள்ள உதவியது.
அவருடைய நோக்கம் இஸ்லாமிய நம்பிக்கைகளைத் தகர்க்க வேண்டும், முஹம்மது நபியின் ஒழுக்கத்தைக் குறைசொல்ல வேண்டும் என்ற ரீதியில் தொடர்ந்து இருக்கிறது. ஊர் பேர் தெரியாத எல்ஸ்ட் என்பவனின் கட்டுரையைத் தேடிப்பிடித்து அவர் அவசரமாக தமிழாக்கியதிலிருந்தே இது தெரிகிறது.
இது காலம் காலமாக இஸ்லாத்தை வெறுத்த மேற்கத்தியர்கள் செய்த வேலைதான். டிஷ்னரி ·ப் இஸ்லாம் எழுதிய தாமஸ் பாட்ரிக் ஹ்யூஸ் என்ற பாதிரியைப் போல. அற்புதமான உழைப்பில் உருவான அந்த நூலில் ஆங்காங்கு அவர் இஸ்லாத்தின் மீதும் நபிகள் நாயகத்தின் மீதும் நஞ்சு தடவி வைத்திருப்பார். கவனமாகப் படிப்பவர் யாரும் இதைப்புரிந்துகொள்ள முடியும்.
நேசகுமார் எழுப்பும் கேள்விகளுக்கெல்லாம் எனது நூலிலேயே பதில் இருக்கிறது. ஆனால் அவருக்கு அதெல்லாம் போதவில்லை. அல்லது தவறாகப்படுகிறது. அவர் நினைப்பதை நான் சொல்லியிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். எந்த பதிலாலும் அவரைத் திருப்திப்படுத்த முடியாது.

அவருடைய கேள்விகளுக்கு ஏன் நான் மௌனம் சாதிக்கிறேன் என்று பல நண்பர்கள் பலமுறை என்னைக் கேட்டிருக்கிறார்கள். வெள்ளையைக் கறுப்பென்று சாதிக்கும் ஒருவர் குருடராக இருக்க வேண்டும் அல்லது பார்வைக் கோளாறு உள்ளவராக இருக்க வேண்டும். இப்படிப்பட்டவருக்கு நான் என்ன பதில் சொல்ல? இம்மையில் குருடர்களாக இருப்பவர்கள் மறுமையிலும் குருடர்களாகவே இருப்பார்கள் என்று திருக்குர்ன் கூறுவது ஞாபகம் வருகிறது.
என்னுடய விமர்சனக் கட்டுரைகளின் நேர்மையைக்கூட அவர் சந்தேகித்து அதற்கு சாமர்த்தியம் என்ற பெயர் கொடுக்கிறார். கல்லால் அடித்துக் கொல்லும் தண்டனை நிறைவேற்றப்படுவதைக் கண்டித்து நான் கற்காலம் என்ற தலைப்பில் என் தளத்தில் ஒரு கட்டுரை வெளியிட்டேன். அதுகூட மறைமுகமாக இஸ்லாத்துக்கு வக்காலத்து வாங்கும் செயல் என்று அவர் சொல்கிறார்.
நான் இப்போது சொல்கிறேன். மறைமுகமாகச் செய்யவேண்டிய அவசியம் எனக்கு ஏதுமில்லை. நான் வெளிப்படையாகவே செய்கிறேன். நான் மதத்தால் ஒரு முஸ்லிம். திருக்குர்ன் என்பது இறைவனுடைய செய்தி என்பதில் எனக்கு சந்தேகமில்லை. அதில் தவறிருக்க முடியாது என்று நான் திடமாக அறிகிறேன்.
இறைச்செய்தியின் தன்மை
இறைவனின் செய்தி என்பது மொழிதாண்டிய ஒரு விஷயம் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். அதனால்தான் சில நேரங்களில் வஹீ தனக்கு தேனீக்களின் ரீங்காரம் போலவும் மணியோசை போலவும் வந்ததாக நபிகள் நாயகம் கூறியிருக்கிறார்கள்.
தேனீக்களின் ரீங்காரமும் மணியோசையும் அரபி மொழியில் இருக்காது என்பது தெளிவு. அப்படியானால்? மிகத்தெளிவாக நாம் புரிந்துகொள்ள வேண்டிய ஒரு விஷயம் இது. நபிகள் நாயகம் பேசிய, அவர்களுக்குத் தெரிந்த ஒரேமொழி அரபி மொழிதான். எனக்கு இறைச்செய்தி வந்தால் அதை நான் தமிழில்தானே புரிந்துகொள்ள முடியும்? அதேபோல அவர்கள் அவர்களுடைய மொழியில் அதை உள்வாங்கிக்கொண்டார்கள்.
இதுதான் ஹதீதுகளின் உட்குறிப்பு.
இந்த அடிப்படையில்தான் நான் திருக்குர்னின் வசனங்களைப் புரிந்துகொள்கிறேன். விபச்சாரம் புரிந்தததாக நிரூபிக்கப்படும் பெண்ணுக்கும் ஆணுக்கும் கசையடி கொடுங்கள் என்று சொல்லும் வசனத்தை, குற்றவாளிகளை தண்டியுங்கள் என்று இறைவன் சொல்வதாகத்தான் நான் அர்த்தப்படுத்துகிறேன். ஏனெனில் காவல் நிலையமோ, சிறைகளோ, லத்திகளோ, துப்பாக்கிகளோ, நீதிமன்றங்களோ இல்லாத ஒரு காலம் அது. சாட்டையும், அம்பும், வாளும், தோளும் கொண்டு மனிதர்கள் வாழ்ந்த காலம். எனவே இன்றைய காலகட்டத்தில் 'அடல்ட்ரி' செய்த ஒருவருக்கு இன்றைய சட்டங்களின்படிதான் தீர்ப்பளிக்க வேண்டும் என்பது என்னுடைய விளக்கம் அல்லது புரிந்துகொள்ளல். இதை ஒத்துக்கொள்ளாத முஸ்லிம் அறிஞர்கள் இருக்கலாம்.
இன்றைக்கு பள்ளிவாசல்களில் மொசைக் தரை அல்லது மார்பிள் தரை போடப்பட்டுள்ளது. ஒலிபெருக்கி வைக்கப்பட்டுள்ளது. குளிர்பதனம் செய்யப்படுகிறது. மின்விசிறிகள் சுழல்கின்றன. குழல் விளக்குகள் எரிகின்றன. நபிகள் நாயகத்தின் காலத்தில் இருந்த மாதிரியா வெறும் பாலவனக் களிமண்ணில் இருக்கின்றன? நபிகள் நாயகம் காய்ந்த ரொட்டியையும் பேரீச்சம் பழங்களையும்தான் பெரும்பாலும் சாப்பிட்டார்கள். நாம் அப்படியா சாப்பிடுகிறோம்? சிக்கன் 65, பிரியாணி என்று வெளுத்துக் கட்டவில்லையா? கல்லாலடித்துக் கொல்லும் கொடூர தண்டனை கொடுக்கும் நீதிபதிக்கும் இது பொருந்தும்.
மற்ற எல்லா வகைகளிலும் 21-ம் நூற்றாண்டை ஏற்றுக்கொண்ட நாம் தண்டனை கொடுப்பதில் மட்டும் ஏன் 1425 ண்டுகளுக்கு முந்திப் போகவேண்டும்? இதுதான் என் கட்டுரையின் பிரதான கேள்வி.
கூடாஒழுக்கத்தில் ஒரு குரங்கு ஈடுபட்டிருந்ததாகச் சொல்லும் ஹதீது ஒன்றைக் குறிப்பிட்டு அந்த ஹதீதைச் சொல்பவரும் ஒரு குரங்காகத்தான் இருப்பார் என்றுகூட அந்தக் கட்டுரையில் நான் மறைமுகமாகக் கிண்டல் செய்திருக்கிறேன். ஹா, ஹதீதில் குறிப்பிடப்படும் ஒருவரை எப்படி நாகூர் ரூமி அப்படிச் சொல்லலாம் என்று உடனே எனக்கு எதிராக ‘·பத்வா’க்கள் வழங்கினால் என்னர்த்தம்? யாரையும் கேவலமாகப் பேசுவதோ குரங்கென்று சொல்வதோ எனது நோக்கமல்ல. அப்படி ஒரு ஹதீது இருக்க சாத்தியமில்லை என்ற கருத்தைத்தான் நான் அப்படி உணர்த்த முயன்றிருக்கிறேன். எந்த முஸ்லிம் பத்திரிக்கையும் அதை வெளியிட முன்வாரத நிலையில்தான் எனது தளத்தில் அதை வெளியிட்டேன். (இந்துக்கடவுள்களை நான் கிண்டல் செய்தேன் என்ற கற்பனையான குற்றச்சாட்டும் இந்த வகையைச் சேர்ந்தததுதான்). என்னுடைய நேர்மையை சாமர்த்தியம் என்கிறார் நேசகுமார்!
நேசகுமாரின் எழுத்தின் தன்மை
முதலில் நேசகுமார் இஸ்லாம் பற்றி ஒரு விவாதத்தைத் துவக்கியிருக்கவே தேவையில்லை. அதற்கான தகுதியும் அவருக்கு நிச்சயமாகக் கிடையாது. காரணம், திருக்குர்னும் ஹதீதும் மூலமொழியாகிய அரபியில் இருக்கின்றன. எந்த மொழியில் நாம் மொழிபெயர்த்துப் படித்தாலும் அது நம்முடைய புரிந்துகொள்ளலாகவே இருக்கும். எனவே எந்தவொரு மொழிபெயர்ப்பையும் வைத்து ஒரு வசனம் அல்லது ஹதீதின் அர்த்தம் இதுதான் என்று நாம் அடித்துக்கூற முடியாது. இது ஒருவிஷயம்.
அடுத்தது இஸ்லாத்தின் அடிப்படை நம்பிக்கைகள் தொடர்பானது. இது முஸ்லிம்கள் மட்டும் சம்பந்தப்பட்ட விஷயம்.
திருக்குர்ன் இறைவனின் வேதம் என்றோ நபிகள் நாயகம் இறுதித் தூதர் என்றோ ஒரு முஸ்லிம் நம்புவதில் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு என்ன பிரச்சனை? அப்படியெல்லாம் கிடையாது என்று ஏன் ஒருவர் மறுக்க வேண்டும்? அதற்கான அவசியம் என்ன ஏற்பட்டது?  நீங்கள் நம்ப வேண்டும் என்ற அவசியமில்லையே!
சமஸ்கிருதம் தெரியாத நான், கீதையின் சில வசனங்களை மொழிபெயர்ப்பில் எடுத்து வைத்துகொண்டு, பகவத் கீதையின்படி ஸ்ரீ கிருஷ்ணர் ஒரு ஸ்த்ரீ லோலர் என்று கீதையை 'விளக்க' ஆரம்பிக்கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். விஷய ஞானமுள்ள அறிஞர்கள் சிலர், அதை அப்படிப் பார்க்கக் கூடாது என்று எனக்கு விளக்குவதாக வைத்துக்கொள்வோம். அதையும் மீறி, நான் 'இல்லை, இப்படித்தான்' என்று 'ஆதாரங்கள்' காட்டிக்கொண்டிருந்தால் என்னைப் பற்றி நீங்கள் என்ன நினைப்பீர்கள்?
திருக்குர்னின் வசனங்களுக்கு ‘விளக்கம்’ சொல்ல வரும் நேசகுமாரின் கதையும் இதேதான். ‘சாத்தான் வேதம் ஓதுகிறது’ என்பதன் அர்த்தத்தை அவர் புரியவைத்துக் கொண்டிருக்கிறார்! இஸ்லாத்தைப் பற்றி முஸ்லிமல்லாதவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது இஸ்லாத்தையோ முஸ்லிம்களையோ எந்த வகையிலும் பாதிக்கப் போவதில்லை.
நாகூர் ரூமி இந்துக்கடவுள்களைப் பற்றி கிண்டலாக எழுதிவிட்டார் என்றுதான் வெறுப்பிலும் காழ்ப்புணர்ச்சியிலும் நேசகுமார் இஸ்லாத்தைப் பற்றி இப்படி எழுதிக்கொண்டிருக்கிறார் என்றால் எங்கேபோய்ச் சிரிப்பது?
முதலில், நான் இந்துக்கடவுள்களைப் பற்றி எங்கே கிண்டலாக எழுதியிருக்கிறேன் என்று சுட்டிக்காட்டுங்கள். என் நடை கிண்டலானதுதான். நான் எதை எழுதினாலுமே. (தவறான ஹதீது ஒன்றின் அறிவிப்பாளரைக் குரங்கென்று கிண்டல் செய்த உதாரணத்தை இங்கே இணைத்துப் பார்க்கவும்). ஆனால் இந்துக் கடவுள்களை கிண்டல் செய்து எழுதியதாக எனக்கு ஞாபகமில்லை. அப்படி நான் எழுதியிருந்தால், அதை எனக்கு நாகரீகமாக யாராவது சுட்டிக்காட்டியிருந்தால், அதில் உண்மையிருந்தால், நான் நிச்சயமாக என் கருத்தை மாற்றிக்கொண்டிருந்திருப்பேன். ஆனால் ஒரு கற்பனையான குற்றச்சாட்டுக்காக, இஸ்லாத்தையும் நபிகள் நாயகத்தையும் அவதூறு செய்வேன் என்று ஒருவர் சொல்வது அபத்தமானதல்லவா?
எழுத்தும் நட்பும்
ஒரு இந்துவும் ஒரு முஸ்லிமும் நண்பர்களாக இருப்பதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். மனிதாபிமானம், அன்பு, நட்பு இதெல்லாம் மதம் பார்த்து வருவதில்லை. மனிதம் பார்த்து வருவது. ஆனால் இரண்டு மதங்களின் அடிப்படை நம்பிக்கைகள் வெவ்வேறாக இருக்கும்போது, ஒரு மதத்தின் அடிப்படை நம்பிக்கையே தவறு என்று வாதிடுவதால் நிச்சயமாக நட்பு மலராது. நட்பு மலரவேண்டும் என்பதுதான் என் எண்ணம்.

தமிழோவியத்திலேயே நான் எழுதிய 'நிலவைச் சுட்டும் விரல்' என்ற தீபாவளி பற்றிய கட்டுரையையோ ஜே.கிருஷ்ணமூர்த்தி பற்றிய 'இறக்கும் கலை' என்ற கட்டுரையையோ, எனது தளத்தில் நான் எழுதியுள்ள ரமணர், பகவத்கீதை பற்றிய கட்டுரைகளையோ, திசைகளில் நான் எழுதிய ஓஷோ பற்றிய 'நூறாவது டிகிரி' என்ற கட்டுரையையோ படித்துப் பாருங்கள். என் மனது உங்களுக்குப் புரியலாம்.
எழுத்தின் அடிநாதமாக உள்ள spirit-ஐப் புரிந்துகொள்ள வேண்டும். அதுதான் முக்கியம். புண்படுத்துவது எப்போதுமே என் நோக்கமல்ல. ஆனால் உயிரைவிட நாங்கள் மேலாக மதிக்கும் நபிகள் நாயகத்தையோ அவர்களின் மனைவிமார்களான அன்னையர்களையோ ஒருவர் கேவலமாகப் பேசினால் எந்த ஒரு உண்மையான முஸ்லிமுக்கும் கோபம் வரத்தான் செய்யும். அத்தகைய கேவலமான காரியத்தை திரும்பத் திரும்ப ஏன் செய்ய வேண்டும்? உங்களுடைய தாயையோ சகோதரியையோ பற்றி ஒருவர் கேவலமாக எழுதினால் இப்படி பொறுமையாக விவாதித்துக்கொண்டிருப்பீர்களா?
என்னுடைய இஸ்லாம் பற்றிய நூல் ஒரு அறிமுக நூல்தான். அது ஒரு விமர்சன நூல் அல்ல. என்னைப் பொறுத்தவரை இஸ்லாம் அமைதியைப் போதிக்கின்ற மார்க்கம். அதற்கான கூறுகளைத்தான் இஸ்லாமிய வரலாற்றிலும் நபிகள் நாயகத்தின் வாழ்விலும் பார்க்க முடியும். முஸ்லிம்கள் சிலர் தீவிரவாதத்தில் ஈடுபடுவார்களேயானால் திருக்குர்னும் நபிகள் நாயக வழிகாட்டுதலும் அதற்கு எதிரானதாகவே இருக்கின்றன என்பதுதான் என்னுடைய புரிந்துகொள்ளல். மற்ற எல்லா வகையான வன்முறை விளக்கங்களும் தவறானவை என்பதே என் கருத்து.
என் கருத்து எனக்கு. உங்கள் கருத்து உங்களுக்கு. நட்புடன் இருக்கத்தான் எழுத்தும் பேச்சும் மூச்சும் எல்லாமே. அதற்கான வேலைகளைச் செய்யலாமே!
எனவே மீண்டும் ஒரு விவாதத்தைத் துவக்குவதற்கான கட்டுரை அல்ல இது. எல்லா விவாதங்களையும் முடிப்பதற்கான ஒரு வேண்டுகோள். நேசகுமார் இதற்கும் ஒரு நூறு பக்கத்துக்கு பதில் எழுதினாலோ அல்லது வேறு யாரும் மறுப்பு எழுதினாலோ நான் பதில் சொல்லப்போவதில்லை. விருப்பு வெறுப்பின்றி நான் சொல்வதை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டுகிறேன். அவ்வளவுதான்.
இந்தக் கடிதத்துக்கு வரும் நியாயமான பதில்களை மட்டும் அனுமதிக்கும்படியும், விவாதத்தைத் தூண்டும் விதமாகவும், நாகரீகமற்ற மொழியில் வரும் மறுமொழிகளையும் அனுமதிக்க வேண்டாமென நண்பர் கணேஷ் சந்திராவையும் நான் இதன் மூலம் கேட்டுக்கொள்கிறேன்.
கூடிய விரைவில் சூ·பித்துவம் பற்றிய ஒரு தடித்த புத்தகத்துடனும், ஹோமரின் காவியமான இலியட்-டின் தமிழாக்கத்துடனும் உங்களை சந்திக்கிறேன்.
அன்புடன்
நாகூர் ரூமி
இது தொடர்பாக தனிப்பட்ட கேள்விகள் இருப்போர் ruminagore@gmail.comஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதவும்.

கட்டுரை : இறைவனிடம் கேட்டுப் பெறுவது எப்படி? - நாகூர் ரூமி


[Rumi-001.JPG]
உண்மையில் கேட்பவனும் கொடுப்பவனுமாக இருக்கின்ற இறைவனுக்கே எல்லாப் புகழும்.
இந்த உலகத்தில் கேட்டுப் பெறுபவர்கள் கொடுத்து சந்தோஷம் அடைபவர்கள் என்று மனிதர்கள் இரண்டு வகையாக உள்ளனர். ஆனால் கேட்பவர்களுக்கும், அவர்களுக்குக் கொடுப்பவர்களுக்கும் உண்மையில் கொடுப்பவனாக இருப்பவன் இறைவன் என்பதே என் நிலைப்பாடு. இதில் உங்களுக்கும் உடன்பாடு இருக்கும் என்றே கருதுகிறேன்.
மனிதர்களிடம் கேட்டுப் பெறுகின்ற மனிதர்கள் ஒன்று உறவுக்காரர்களாக இருப்பார்கள், அல்லது பிச்சைக்காரர்களாக இருப்பார்கள். ஆனால் ஒருவகையில் எல்லா மனிதர்களுமே பிச்சைக்காரர்கள்தான். ஏனெனில் காற்றில் இலை அசைவதற்குக்கூட இறைவனுடைய உத்தரவு வேண்டியிருக்கும்போது இறைவனுடைய விருப்பமில்லாமல் ஒரு மனிதனால் இன்னொரு மனிதருக்கு எந்தவித நன்மையும் செய்துவிடுவது சாத்தியமில்லை.
Pray to Godஅப்படியானால் நம்முடைய தேவைகளை இறைவனிடம் எப்படிக் கேட்டுப் பெறுவது? இதுதான் நம் முன் நிற்கும் முக்கியமான கேள்வி இப்போது. இதற்கு சரியான பதில் தெரியாததால்தான் பலர் வறுமையிலேயே உழன்று கொண்டிருக்கிறார்கள். சிலர் மட்டும் செல்வத்துக்கு மேல் செல்வம் சேருபவர்களாக வாழுகின்றார்கள். அப்படியானால் மனித முயற்சிக்கும், உழைப்புக்கும் வேலையில்லையா என்று கேட்கக் கூடாது. ஏனெனில் ஒரு முக்கியமான பிரச்சனையை வேறு ஒரு கோணத்தில் பார்க்க நாம் இப்போது முயன்று கொண்டிருக்கிறோம்.
தட்டுங்கள் திறக்கப்படும் என்று இயேசு சொன்னதாக நாம் நம்புகிறோம். அப்படியால் தட்டுவது எப்படி என்பதுதான் இப்போதைய கேள்வி. தட்டுவதாக நினைத்துக்கொண்டு நாம் கதவுகளை உடைத்துக் கொண்டிருக்கலாம். அதன் காரணமாக வீட்டுக்குச் சொந்தக்காரனின் கோபத்துக்கு ஆளாகி இருக்கலாம். அல்லது எந்தக் கதவைத் தட்ட வேண்டுமோ அதை விட்டுவிட்டு வேறு கதவுகளைத் தட்டிக் கொண்டிருக்கலாம். தட்டுங்கள் திறக்கப்படும் என்பது சரிதான், ஆனால் கதவுகள் எங்கே என்பதுதான் கேள்வி என்று ஒரு கவிஞர்கூடக் கிண்டலாகச் சொன்னார். கதவுகளைப் பூட்டியது யார் என்றும் ஒரு கேள்வி உள்ளது. இறைவனுடைய அருளுக்குக் கதவுகளே கிடையாது என்ற கருத்தும் உண்டு. கதவு என்ற ஒரு வார்த்தையை வைத்துக் கொண்டு இப்படியாக நாம் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் விளையாடிக் கொண்டிருக்கலாம். நமது நோக்கம் இங்கே வார்த்தை விளையாட்டல்ல. கதவு என்பதெல்லாம் ஒரு புரிந்து கொள்ளலுக்காகச் சொல்லப்பட்ட குறியீட்டுத் தன்மை கொண்ட சொல் அவ்வளவுதான்.
கொடுக்க இறைவன் தயாராக இருக்கிறான் என்பது சரி. கையேந்தி ஒரு மனிதன் என்னிடம் கேட்டுவிட்டால், அவனை வெறும் கைகளோடு திருப்பி அனுப்ப உங்கள் இறைவன் வெட்கப்படுகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். செருப்பின் வார் அறுந்து போனாலும் இறைவனிடமே கேளுங்கள் என்று கூறியதும் அவர்கள்தான்.
ஆனால் நாம் அப்படியா கேட்டுக் கொண்டிருக்கிறோம்? இல்லையே! அப்படியானால் நபிமொழிக்கு மாற்றமாக நாம் நடந்து கொண்டிருக்கிறோமா? இல்லை. நாம் மனிதர்களிடம் கேட்டுப் பெற்றாலும் இறைவனிடமிருந்து பெற்றதாகத்தான் அர்த்தம்.
என்றாலும், கேட்பதெல்லாம் கிடைத்து விடுவதில்லை. கேட்கும்போதெல்லாமும் கிடைத்துவிடுவதில்லை. ஏன்?
கேட்கும் முறை தெரியவில்லை. இதுதான் நான் சொல்ல வரும் முக்கியமான விஷயம்.
மனிதர்களிடம் கேட்பது, கேட்டுப் பெறுவது பற்றிய விஷயங்களிலெல்லாம் நாம் நிபுணர்களாக இருக்கிறோம். ஆனால் இறைவனிடம் எப்படிக் கேட்பது என்பதுதான் தெரியவில்லை. இதுவரை எப்படி நாம் இறைவனிடம் கேட்டிருக்கிறோம் என்பதை இப்போது நாம் மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டியிருக்கிறது.
முஸ்லிமாக இருந்தால் ஐவேளை தொழுது, அல்லது தொழும்போதெல்லாம் கேட்கிறோம். தொழுது முடித்துவிட்டுக் கையேந்திக் கேட்கிறோம். அல்லது கையேந்தாமல் மௌனமாகக் குனிந்து கேட்கிறோம். நமது ஆசைகளை, விருப்பங்களை, தேவைகளை முன் வைக்கிறோம். அரபி மொழியில் நமக்கு மனப்பாடமாகியுள்ள சில வசனங்களைச் சொல்கிறோம். அல்லது கும்பலாக அமர்ந்து ஒருவர் கேட்க, அனைவரும் அதற்கு 'அப்படியே ஆகுக' என்னும் 'ஆமீன்' போடுகிறோம்.
ஹிந்துவாக இருந்தால் கோயில்களுக்குச் சென்று கன்னத்தில் போட்டுக் கொண்டு அல்லது போட்டுக் கொள்ளாமல் கேட்கிறோம். அல்லது வீடுகளில் இருக்கும் பூஜை அறைகளில் அமர்ந்து கேட்கிறோம். கிறிஸ்தவர்களாக இருந்தால் தேவாலயங்களுக்குச் சென்று மெழுகுவர்த்தி ஏற்றி மண்டியிட்டு அல்லது மண்டியிடாமல் கேட்கிறோம்.
இப்படி ஒவ்வொரு மதத்தைச் சேர்ந்தவரும் அவரவர் மதச் சடங்கு சம்பிரதாயங்களுக்கேற்ப அரபி, உர்து, பாரசீகம், சமஸ்கிருதம், தமிழ் என பல மொழிகளிலும் கேட்கின்றனர். ஆனால் இப்படி மொழி வழியாக முன் வைக்கப்படும் பிரார்த்தனைகள் எதுவும் இறைவனின் காதுகளைச் சென்றடைவதில்லை என்பது என்னுடைய உறுதியான அபிப்பிராயம். (இறைவனுக்குக் காதுகள் உண்டா என்று கேட்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்). நம்முடைய பிரச்சனைகள் மொழியில்தான் தொடங்குகின்றன.
அரபியிலே கேட்டால்தான் இறைவனுக்குப் புரியுமா? அப்படியானால் ஒரு ஊமை என்ன செய்வான் என்று என் நண்பர் ஒருவர் கேட்டார். அவர் அரபி என்று சொன்னதை எந்த மொழிக்கு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். ஆனால் அவர் கேட்டது சரியான கேள்வியாக எனக்குப் படவில்லை. காரணம், ஊமைக்கு வாய்க்குள் இருக்கின்ற ஒரு நாக்குதான் சப்தத்தைப் பொறுத்தவரை செயலிழந்துவிட்டதே தவிர, அவனுடைய மனதின் நாக்குகள் பேசுகின்றவர்களுடையதைவிட ஆற்றல் மிக்கது. மௌனத்தின் எண்ணற்ற நாவுகள் ஒரு வினாடிகூட சும்மா இருப்பதில்லை. அவைகள் கணந்தோறும் பேசிக்கொண்டேதான் இருக்கின்றன. ஆனால் அவை நம் காதுகளுக்குத்தான் கேட்பதில்லை. ஒரு ஊமைக்கும் தாய்மொழி இருக்குமல்லவா? அதில் அவன் நினைத்துக் கொள்வான். எனவே மொழியைப் பயன்படுத்தி இறைவனிடம் முறையிடும் கூட்டத்தினரில் ஊமையும் அடங்குகிறான் என்பதுதான் என் முடிவு.
மொழியைப் பயன்படுத்தி கேட்கப்படுகின்ற முறையீடுகள் இறைவனை ஏன் சென்றடைவதில்லை என்று நான் கூறுகிறேன்? ஏனெனில், நான் ஆராய்ந்த வரையில், இறைவனிடமிருந்து மனிதனுக்கு வந்த செய்தி மொழியைச் சார்ந்ததாக இல்லை. அது மொழி தாண்டியதாகவே இருந்துள்ளது. நபிகள் நாயகமவர்களுடைய வரலாற்றிலிருந்தே இதற்கான ஆதாரத்தை ஒருவர் பெறமுடியும்.
நபிகள் நாயகத்துக்கு மூன்று வழிகளில் இறைவனிடமிருந்து செய்தி அருளப்பட்டதாக அவர்களுடைய ஹதீஸ் தொகுப்புகளிலிருந்து நாம் அறிந்து கொள்ள முடிகிறது. அதில் ஒருவழி, வானவர் ஜிப்ரயீல் மூலமாக சொற்களாகவே அருளப்பட்டது. இரண்டு, அதே வானவர் மனித உருவில் வந்து சொல்வது. மூன்று, தேனீக்களின் ரீங்காரம் போன்றும், மணியின் ஓசை போலவும் இறைச் செய்தி வந்தது. இந்த மூன்றுமே சாதாரண மனிதனுடைய நேரடி அனுபவத்துக்கு அப்பாற்பட்ட முறைகளே என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மூன்றாவது முறையில் இறைச் செய்தி அருளப்பட்டதுதான் என்னை சிந்திக்க வைத்தது.
வானவர் ஜிப்ரயீலாவது அரபி மொழியிலேயே வசனங்களை இறக்கியிருக்க வாய்ப்புண்டு. ஒரு வானவர் எப்படி மனித மொழி பேசியிருப்பார் என்று சிந்திக்க ஆரம்பித்தாலும் நாம் கொஞ்சம் குழம்பிப்போக வாய்ப்புண்டு. ஆனாலும் நாம் அதை அப்படியே எந்தக் கேள்வியுமின்றி எடுத்துக் கொள்கிறோம். காரணம், எல்லாம் வல்ல இறைவன் வானவர்களுக்கு மானிட மொழி பேசும் ஆற்றலையும் வழங்கியிருப்பான் என்று நாம் நம்புகிறோம்.
ஆனால் மூன்றாவது வழியைப் பற்றி நாம் கொஞ்சம் சிந்தித்தால் அது நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். தேனீக்களின் ரீங்காரத்திற்கு மொழி கிடையாது. மணியின் ஓசையும் அப்படியே. ஞொய் என்றும் டங் என்றும் இறைச் செய்தி வந்ததாக ஹதீஸ் கூறுகிறது. இப்படி வந்த செய்திதான் புரிந்து கொள்வதற்கு மிகவும் கடினமாக நபிகள் நாயகத்துக்கு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இயற்கைதானே?
திருக்குர்ஆனில் ஒரு இடத்தில் மலைகளில் கூடுகளைக் கட்டுவதற்கு தேனீக்களுக்கு இறைவனே கற்றுக் கொடுத்தான் என்று கூறும்போது 'அவ்ஹா' என்ற சொல்லை இறைவன் பயன்படுத்துகிறான் (அத்தியாயம் 16 : வசனம் 68). நபிகள் நாயகம் அவர்களுக்கு செய்தி அனுப்பியதைக் குறிப்பிடப் பயன்படுத்தும் 'வஹீ' என்ற சொல்லின் இன்னொரு இலக்கண வடிவம்தான் 'அவ்ஹா' என்பது இங்கே கவனிக்கத் தக்கது. திருக்குர்ஆன் விரிவுரையாளர்களின் அடிக்குறிப்புகளும் இதை உறுதி செய்கின்றன. அதாவது நபிகள் நாயகத்துக்கு இறைவன் அனுப்பியதும் வஹீதான். தேனிக்களுக்கு இறைவன் அனுப்பியதும் வஹீதான். செய்தியின் தன்மையும் கனமும்தான் வித்தியாசமானவை. ஆனால் சொல்லும் அது குறிக்கும் பொருளும் ஒன்றுதான்.
அப்படியானால், இறைவனிடமிருந்து மனிதர்களுக்கு மட்டுமல்ல, எல்லா உயிர்களுக்கும், ஏன், உயிரற்றதாகத் தோற்றமளிக்கும் இந்த பிரபஞ்சம் முழுமைக்கும் செய்தி வந்து கொண்டுதான் இருக்கிறது. அந்தச் செய்தி அல்லது உத்தரவு, மொழி கடந்ததாக இருக்கிறது. இதுதான் நாம் இங்கே கவனிக்கத் தக்க முக்கியமான விஷயமாகும்.
இறைவனிடமிருந்து வந்த, அல்லது வரும் செய்திகள் மட்டும்தான் மொழி கடந்து இருக்க வேண்டுமா? இறைவனுக்கு நாம் அனுப்பும் செய்திகளும்கூட மொழி கடந்து இருக்கலாமல்லவா? மொழி இல்லாத மொழிதான் இறைவனின் மொழி என்றால் அதிலேயே நாம் அவனோடு பேசுவதுதானே நாம் அவனுக்குச் செய்யும் சரியான மரியாதையாக இருக்க முடியும்? ஒருவருக்கு அவருடைய மொழியிலேயே பேசினால்தானே அவருக்கு நம்மீது பிரியம் வரும்? இதுதானே இயற்கை? இறைவனிடம் பேசும்போது, அவனுடைய மொழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதுதானே அறிவார்ந்த செயலாக இருக்க முடியும்?
இறைவனுடைய மொழி மனதின் மொழி. இறைவனுடைய மொழி மௌனத்தின் மொழி. இறைவனுடைய மொழி மொழிகளைக் கடந்த மொழி. எனவே அவனுடைய மொழியில் கேட்பதுதான் அவனுக்குப் பிடிக்கும்.
அப்படியானால் பல மொழிகளிலும் செய்யப்படுகின்ற பிரார்த்தனைகளெல்லாம் வீணா என்று கேட்கக் கூடாது. காரணம், அவை வீணா அல்லது பயன் தரத்தக்கவையா என்பது கேட்பவரின் மனதைப் பொறுத்த விஷயம். ஏனெனில், நீங்கள் அரபியில் கேட்பதற்காக, அரபியை மிகச் சரியாக உச்சரிப்பதற்காக, நீங்கள் சமஸ்கிருதத்தில் கேட்பதற்காக, அதை மிகச் சரியாக உச்சரித்து விட்டதற்காக இறைவன் எதையும் கொடுத்து விடுவதில்லை. ஏனெனில் இறைவன் செயலைப் பார்ப்பதில்லை. அதன் பின்னால் உள்ள மனதையே பார்க்கிறான். ‘அஷ்ஹது’ என்ற உச்சரிப்பு வராத, அதைத் தவறாக ‘அஸ்ஹது’ என்று உச்சரித்த கறுப்பர் பிலாலின் தொழுகை அழைப்பு ஒலிதான் வானங்களைத் தாண்டிச் சென்று வானவர்கள் பதில் கூறுமளவுக்கு இருந்தது என்பதை இஸ்லாமிய வரலாறு கூறுகிறது. ஏனெனில் இறைவன் கறுப்பர் பிலாலின் உச்சரிப்பைப் பார்க்கவில்லை. அவருடைய தூய வெள்ளை உள்ளத்தையே பார்த்தான்.
இன்னமல் அஃமாலு பின் நிய்யத்தி. அதாவது எல்லா செயல்களுக்குமான விளைவு அல்லது பயன் அச்செயலின் பின்னால் உள்ள நோக்கத்தைப் பொறுத்துள்ளது என்று நபிகள் நாயகம் மிகத் தெளிவாகக் கூறியுள்ளார்கள். இறைவனும் அதை உறுதிப் படுத்தியுள்ளான்.
ஆதமுடைய மகன்களான ஹாபில், காபில் என்ற இருவரும் பலி கொடுக்கின்றனர். அதில் ஒருவரின் பலியை ஏற்றுக்கொண்ட இறைவன் இன்னொரு மகனுடைய பலியை ஏற்றுக் கொள்ளவில்லை. காரணம், அவரிடம் பயபக்தி இல்லாத காரணத்தால் என்று இறைவனே திருக்குர்ஆனில் கூறுகிறான் (அத்தியாயம் 05 : வசனம் 27).
மேலும், பலியிடப்படும் பிராணிகளின் சதைத்துண்டுகளோ அவைகளின் ரத்தமோ தன்னைச் சென்றடைவதில்லை என்றும், பலி கொடுப்பவர்களின் பயபக்திதான் தன்னை வந்து சேர்கிறதென்றும் இறைவன் திருக்குர்ஆனில் தெளிவாகக் கூறுகிறான் (அத்தியாயம் 22: வசனம் 36).
இப்படியான உதாரணங்கள் நிறைய உண்டு. எனவே, கூட்டிக் கழித்து நான் சொல்ல வருவது இதுதான்:
நீங்கள் மொழியைப் பயன்படுத்தினாலும் சரி, மௌனத்தைப் பயன்படுத்தினாலும் சரி, இரண்டும் ஒன்றுதான். காரணம், மொழியின் பின்னால் உள்ள மனதைத்தான் இறைவன் பார்க்கிறான். ஒரு இதயத்திலிருந்து இன்னொரு இதயத்து அனுப்பும் முறையைத்தான் அவன் மிகவும் விரும்புகிறான். அதனால்தானோ என்னவோ ஹீராக் குகையில் நபிகள் நாயகத்தை முதன் முதலில் சந்தித்த வானவர் ஜிப்ரயீல் நபிகள் நாயகத்துக்கு இறைச் செய்தியை அறிவிக்கு முன்னர் மூன்று முறை மார்போடு மார்பாக இறுக்கமாக கட்டிப் பிடித்து, பின்னர் விட்டார்கள். இதைத்தான் சூஃபிகளும் 'ஸீனா-ப-ஸீனா', இதயத்திலிருந்து இதயத்துக்கு என்று கூறினார்கள்.
ஆசைப்படுவதுதான் 'துஆ' என்று என் ஞானாசிரியர், மறைந்த மேதை நாகூர் எஸ்.அப்துல் வஹ்ஹாப் பாகவி அவர்களும் அடிக்கடி என்னிடம் கூறியுள்ளார்கள். அதன் பொருளை நான் அனுபவப் பூர்வமாக உணர்ந்து கொள்ள அவர்களது ஆசியும் இறைவனது அருளும் எனக்கு உதவின.
இதைத்தான் ஆங்கிலத்தில் Burning Desire என்று சொல்கிறார்கள். பற்றி எரியும் ஆசை. இப்படி ஒருவன் ஆசைப்பட்டு விட்டால் போதும். அது பிரார்த்தனையாகப் பரிணமித்து இறைவனுக்கு செல் பேசி மூலம் செய்தி அனுப்பியதுபோல உடனே சென்று சேர்ந்துவிடும். அதன் பிறகு, அந்த ஆசை நிறைவேறுவதற்கான பாதைகளை அது அவனுக்குக் காண்பிக்க ஆரம்பித்து விடும். இதனால்தான் இறைவன் சிலருக்கு சீக்கிரமாகவும் பலருக்கு தாமதமாகவும் தருகிறான் போலும். பற்றி எரிகின்ற ஆசை ஏதுமின்றி, கும்பலில் போடும் கோவிந்தாக்களுக்கு இந்த தகுதி கிடையாது என்பது வருந்தத் தக்க உண்மை.
சப்தமாகச் சொல்லாதீர்கள். குரல்களை உயர்த்தாதீர்கள் என்று என்று சில இடங்களில் திருக்குர்ஆனில் இறைவன் கூறுகிறான்.
என்னுடைய கருத்தில் தவறு இருக்குமானால், இறைவன் மன்னிப்பானாக.
இறைவனிடம் கேளுங்கள். குரலை உயர்த்தாமல் கேளுங்கள். குரலே இல்லாமல் கேளுங்கள். மௌனமாகக் கேளுங்கள். மொழிகளிலிருந்து மீண்டு வந்து கேளுங்கள். உள்ளத்தால் கேளுங்கள். உணர்ச்சிகளால் கேளுங்கள். அந்த கருணையாளனின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்

வெற்றி பெற வழி

வெற்றி பெற வழி
தனக்கும் பிறருக்கும் தற்காலத்திலும் பிற்காலத்திலும் துன்பம் வராத செயல்கள் செய்ய வேண்டும்.
கூடுமான வரையில் பிறருக்கு உதவ வேண்டும்.
இது தான் வேதங்கள், புராணங்கள் சொல்லும் சாரம்(Essence) ஆகும்.
ஏதோ சந்தர்ப்ப வசத்தால் பிறருக்கும் துன்பம் வந்து விடுகிறது. அவர்களால் தீர்த்துக் கொள்ள முடியவில்லை.
துன்பத்தைத் தீர்க்கிறபோதும், அதனால் நமக்கு துன்பம் வந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஏனென்றால் நமக்கே துன்பம் வந்து, நாம் பிறரிடம் போய் அதைத் தீர்க்கும்படி கெஞ்சும் நிலை வந்துவிடக் கூடாது அல்லவா?
அந்த அளவில் விழிப்பாக இருந்து கொள்ள வேண்டும்.
தனக்கும் துன்பமில்லாது பிறருக்கும் துன்பம் விளைவிக்காத வாழ்க்கையில்
நமக்கு என்னென்ன தேவையோ, அப்படிப்பட்ட சூழ்நிலை தானாகவே அமையும்.
இதற்காகக் கெஞ்சிக் கேட்டு ஒன்றும் நாம் பெறவேண்டியதே இல்லை.
எந்த இடத்திலே, எந்த காலத்திலே, எந்த நோக்கத்தோடு,
எந்தச் செயலை நீ எவ்வளவு திறமையாகச் செய்கிறாயோ
அதற்குத் தகுந்தவாறே உனக்கு விளைவும் வரும், வெற்றியும் வரும்
வாழ்க வளமுடன் வேதாத்திரி மகரிஷி

For More Info :
Email
  • vinborntowin@skygroups.orgh
  • vinborntowin@yahoo.com

Facebook

அன்பு


அன்பு
by Sita Lakshmi

அன்பைக் கொடுத்துதான் அன்பைப் பெற வேண்டும்.ஆனால்,வெறுப்பைக் கொடுத்து அன்பை எதிர்பார்க்கிறோம்.
அன்பைப் பற்றி பேச ஒரு வார்த்தை போதும்.ஆனால் அன்போடு வாழ ஒரு வாழ்கையே வேண்டும்...
அன்பின் ஒரே எதிரி கோபம்தான்.கோபத்தின் ஒரே நண்பன் வெறுப்பு.வெறுப்பின் காரணம் எதிர்பார்ப்பு.
எதிர்பார்த்தது நடக்கவில்லை எனில் வெறுப்பு வருகிறது.கோபமும் கூடவே வந்துவிடும்..கோபம் வந்தால் அன்பு பறந்தோடி விடும்..
எதையும் யாரிடமும் எதிர் பார்க்க வேண்டாம்..வருவதை ஏற்றுக்கொள்வோம்...வாழ்க வளமுடன்
அன்பான மனிதராக வாழ்வதற்கு
நம் மனதில் பிறரைப் பற்றிய அன்பான வார்த்தைகள், கருத்துகள்.
அவர்களிடம் இருக்கும் நல்ல குணங்கள்.இவற்றை பதிய வைக்க வேண்டும்.பிறரைப் பற்றிய எதிர்மறையான கருத்துக்களை மனதில் வைத்துக்கொண்டு,வெளியில் அன்பு காட்ட முனைந்தால் அது வெறும் நடிபாகத்தான் இருக்கும்.
பிறரது பிரச்சினைகளை நம் பிரச்சினைகள் போல எடுத்துகொண்டுஆறுதல் கூறுவது, பிரச்சினைகள் தீர வழி காண்பது, அவர்களுக்காக சங்கல்பிப்பது, இறைவனை வேண்டுவது, முடிந்த உதவிகளை செய்து  வாழ்வது, பிறர் தவறை  ஏற்றுக் கொள்வது, பொறுத்துக்கொள்வது, சகித்துக்  கொள்வது. இவை அன்பான மனிதரின் அடையாளங்கள்

For More Info :
Email
  • vinborntowin@skygroups.orgh
  • vinborntowin@yahoo.com

Facebook

வாழ்வில் வெற்றி பெற


 
வாழ்வில் வெற்றி பெற
by Sita Lakshmi

ஒரு தவறு செய்கிறோம். உணர்ந்து திருத்த முயல்கிறோம்.
மீண்டும் தவறு செய்கிறோம், மீண்டும் சரி செய்ய முயல்கிறோம்.
இதில் தோல்வி என்பது செய்யும் தவறுகளில் இல்லை,திருத்த முயலும் முயற்சி குட வெற்றியின் அடையாளம்தான்.
எப்போது முயற்சியில் அயற்சி ஏற்படுகிறதோ அங்குதான் தோல்வி துவங்குகிறது.நம் முன்னேற்றத்தில் வரும் தடைகளுக்கு வருந்த வேண்டாம்.ஆனால் முயற்சிக்கே தடை வந்தால் வருந்த வேண்டி வரும்.
கீழே விழுந்தாலும் எழுந்து நடக்கும் மனோதிடம், சரியான பாதை எனத் தெரிந்தபின், எத்தனை தடை வந்தாலும் தாண்டிச் செல்லும் வைராக்கியம் இருந்தால் எந்த ஒரு முயற்சியும் வெற்றி அடையும்.
muyarchi thiruvinaiyakum, vetri unathakum, vazhga valamudan
***
உண்மையை மறவாதே!

உனக்கு முன்னும் பின்னும், சூழ்ந்தும், ஊடுருவியும், செயல் ஆற்றிகொண்டிருப்பது இயற்கையின் பேராற்றல் . இது அணு முதற் கொண்டு, அண்டம் ஈறாக ஒழுங்கு தவறாமல், இயங்கி கொண்டிருகின்றது. மனிதச் செயல் ஒவ்வொன்றுக்கும் தக்க விளைவை இன்பமாகவோ, துன்பமாகவோ அளிதுக்கொண்டிருகின்றது.

இந்த உண்மையை மறவாதே! இப்பேராற்றலை மதித்து உனது செயலில் அளவு, முறை, ஒழுங்கு இவற்றைக் கடைப்பிடி. இதுவே தெய்வ வழிபாடாகும். அப்பேராற்றலோடு இணைந்த மனம், உணர்ந்த நம்பிக்கை கொண்ட மனம் என்றும் வெற்றியும், மகிழ்ச்சியும், அமைதியும் பெற்று நிறைவு நிலையில் இருந்து வரும், பிறவியின் நோக்கமும் ஈடேறும்.

For More Info :
Email
  • vinborntowin@skygroups.orgh
  • vinborntowin@yahoo.com

Facebook

Vethathiri Tamil Quotes


கருத்தும் கடவுளும்
கடவுளை வணங்கும் போது, கருத்தினை உற்றுப் பார் நீ !
கடவுளாய்க் கருத்தே நிற்கும் காட்சியைக் காண்பாய் ஆங்கே
மனிதனிடம் எதையும் எதிர் பார்க்காதீர்கள்
அப்படி எதிபார்த்தால் வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியாமல் போய்விடும்
உங்களின் எதிர்பாப்பு கடவுளிடம் இருக்கட்டும்
***
மனிதன் எவ்வளவு வளர்ந்தாலும், எவ்வளவுதான் கற்றாலும், எவ்வளவுதான் தீவிரமாக முயன்றாலும்,
அவர்களுடைய பழக்க வழக்கம் அவர்களை கீழ் நோக்கி இழுத்துவிடும்
அதனால் நாமெல்லாம் பழக்கத்தில் இருந்து விளக்கத்திற்கு நம்மை மாற்றி அமைக்க வேண்டும்
அப்பொழுது தான் எதையும் புரிதல் உணர்வோடு வாழமுடியும்.
***
எத்தனை கோடி இன்பம் படைத்தாய் இறைவா என்றால் "துவைதம்" (இரண்டு என்று அர்த்தம்)
எத்தனை கோடி இன்பமானாய் இறைவா "அத்வைதம்" (ஒன்றாக மாறிக்கொன்டிருத்தல்)
***
அறிவின் வளர்சியுடைய உயிர்தான் ஆக்க வாழ்வு பெற முடியும்.
அறிவின் மதிப்பு குறையாமல் உயிர் போனாலும் சரி, அதை ஏற்றுக்கொள்வோம். அறிவு கெட்டு உயிர் நீடித்துப் பயன் இல்லை
என்பது அறிஞர் கண்ட தெளிவு
***
உள்ளத்தின் களங்கமாகிய நோய்களும் உயிரின் களங்கமாக விளங்கும் வாழ்க்கை சிக்கல்களும் கவலையாக மாறுகிறது
***
வினா: ஐயா, தங்கள் கால்களைத் தொட்டு வணங்க வேண்டாம் என்று கூறுவது ஏன்?
வாழ்க வளமுடன் வேதாத்திரி மகரிஷி விடை:
குருவின் கால்களைத் தொட்டு வணங்கினால் பாவம் எல்லாம் போய்விடும். நாம் தூய்மை பெற்றுவிடலாம் என்ற தவறான
எண்ணம் மக்களிடையே உள்ளது. அதனால் மக்கள் காலை தொட்டு வணங்க வேண்டும் என நினைக்கிறார்கள். உங்களை
இறைநிலை வரை உயர்த்தி விட்டிருக்கிறேனே. இன்னும் ஏன் குனிந்து கால்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றீர்கள் ? குருவின்
ஆசியைப் பெற அவரின் கண்களைப் பார்த்தாலே போதுமானது.
***
உள்ளத்தின் சோதனை.
மனதின் நிலையே வாழ்வின் வளம் ஆகும். நிலத்தில் ஊன்றும் வித்து எதுவென்றாலும் நீர் தெளித்து வந்தால் அது முளைத்து
பயிராகி அதனதன் தன்மைக்கேற்ற பயன் தருகின்றது. அதுபோன்றே உள்ளத்தில் ஊன்றும் எண்ணங்களும் நாளுக்கு நாள்
உறுதிபெற்று வாழ்வின் பயனாக விளைந்துவிடும்.
ஆகவே நமது வாழ்வு நலமுற வேண்டுமெனில் எந்த விதமான கெட்ட எண்ணத்தையும் நமது உள்ளத்தில் உன்றவோ
வளரவிடவோ கூடாது.
1. கோபம், 2. வஞ்சம், 3. பொறாமை, 4. வெறுப்புணர்ச்சி, 5. பேராசை, 6. ஒழுக்கம் மீறிய காம நோக்கம், 7. தற்பெருமை, 8.
அவமதிப்பு, 9. அவசியமற்ற பயம், 10. அதிகாரபோதை என்ற பத்து வரையும் நமது உள்ளத்தில் நிலைபெற வொட்டாமல்
அவ்வப்போது ஆராய்ந்து களைந்து கொண்டே இருக்க வேண்டும். இவை வளர்ந்தால் நல்லெண்ணம் வருவதற்கோ,
நிலைப்பதற்கோ, இடமில்லாத துன்பம் தரும் காடாக நமது உள்ளம் மாறிவிடும். உடல் காந்த சக்தியை பாழாக்கிக்கொண்டே
இருக்கும் ஓட்டைகளாக இக்கெட்ட குணங்கள் மாறிவிடும்.
காலையிலும் மாலையிலும் 10 நிமிடநேரம் அமைதியாக உட்கார்ந்து உள்ளத்தை சோதனையிடும் பணியைத் தொடங்குங்கள். 30
நாட்களில் கிடைக்கும் வெற்றியை அனுபவத்தில் கண்டு மகிழுங்கள்.
***
கன்மம்
சீவகாந்தம் உயிரினத்தில் சீர்குலைந்த்தால்
தடைப்பட்டால் மின்குறுக்காம்
சிக்கலே வலி துன்பம் சாவு
இவை விரும்பிச் செய்தால் பழிச்செயல் ஆம்
***
நான் திருந்தி என்ன பயன்? அவர் திருந்த வேண்டாமா? என்று நினைக்காமல் முதலில் நம்மை திருத்திக் கொள்வோம்.
அடுத்தவர் தாமே திருந்தி விடுவார்
***
அனுபோகப் பொருட்கள் மிகமிக உடல் நலம் கெடும்
சொத்துக்களின் எண்ணிக்கை மிகமிக மன அமைதி கெடும்
***


For More Info :
Email
  • vinborntowin@skygroups.orgh
  • vinborntowin@yahoo.com

Facebook