Friday, January 28, 2011

உள்ளம் உயர்ந்தால் வாழ்வு உயரும்


Author: எச்.நடராஜன்
விற்பனையில் வியத்தகு சாதனை

வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்து அனையது உயர்வு

இதைப் படித்தவுடனேயே திருவள்ளுவர் எல்லோருடைய பொறாமைக்கும் ஆளாகிறார் ஏன்?  இரண்டே வரிகளில் எப்படிப்பட்ட உயர்ந்த வாழ்க்கை நெறியைக் கூறமுடிகிறது அவரால்?

பள்ளியில் படிக்கும் மாணவர்களைக் கேளுங்கள். வாழ்க்கையின் குறிக்கோள் என்ன? என்று, பொறியியல், அல்லது கம்ப்யூட்டர் கோர்ஸ் படித்து எம்.பி.ஏ. பாஸ் செய்து நல்ல வேலை தேட வேண்டும் என்பதுதான். அவர்களின் பதிலாக இருக்கும்.

நான் தொழில்நுட்பக் கல்வி படிக்காத போதிலும் தற்போது என் கீழ் பணிபுரியும் விற்பனை அதிகாரிகள் யாவரும் பொறியியல், எம்.பி.ஏ. படித்தவர்கள்தாம்.  இதனால் என்னுடைய கேள்வி என்னவெனில் நான் எவரிடமும் இல்லாத தகுதியுடையவன் என்பதால் எனக்கு இத்தகைய அங்கீகாரம் அளித்திருக்கிறார்களா?  இல்லை என் கீழ் வேலை செய்பவர்கள் திறமை குறைந்தவர்களா?
இரண்டும் இல்லை!  உண்மை என்னவென்றால் என்னால் மேலதிகாரிகள் எதிர்பார்க்கும்படி திறைமையாகச் செயல்பட்டு அவர்கள் எதிர்பார்க்கும் இலக்கிணை அடையமுடியும் என்பதால் தான் இந்தப் பதவியில் என்னை அமர்த்தியுள்ளார்கள்.
நாம் இதுவரை எத்தனை திறமைசாலியாக இருந்தோம் என்று நம்மை கணக்கிடுகிறோம்.  ஆனால் நம் உயர் அதிகாரிகள், இன்று இவனால் என்ன சாதிக்க முடியும் என்பதைக் கண்டுதான் மதிப்பிடுகிறார்கள்.  இந்தப் பெரிய இரகசியத்தை யாவரும் 24 மணிநேரமும் நினைவில் கொள்ள வேண்டும்.
ஒரு முறை விற்பனை ஆய்வு நேரத்தில் என்னைப் போல மற்றொரு மண்டல உயர் அதிகாரியை “ஏன் விற்பனை குறைவு”? என்று பொது மேலதிகாரி கேட்டபோது, அவர் “சார், போன வருடம் மிகக் கடுமையான இலக்குகளை அடைந்ததால் இந்த முறை விற்பனை குறைந்துவிட்டது” என்றார்.  அதற்கு பொது மேலதிகாரி இவ்வாறாக கோபமாகக் கூறினார். “அன்று என் முப்பாட்டனார் ராணுவ ஜெனரலாக இருந்தாலும் நான் இன்று வெறும் சிப்பாய்தானே”? தயவு செய்து இன்றைய இலக்கினை அடைய சரியான முயற்சிகளைச் செய். பழம் கதையைப் பேசாதே என்று.
மனமிருந்தா மார்க்கம் உண்டு!  சமீப காலத்தில் எங்கள் நிறுவனத்தில் வேறு துறைகளில் இருந்து விற்பனை அனுபவம் இல்லாதவர்களை மண்டல உயர் அதிகாரிகளைப் பதவிமாற்றம் செய்தார்கள். பலர் இதற்கு எதிராகக் குரல் எழுப்பினார்கள். விற்பனை பற்றி தெரியாதவர், விற்பனைப் பிரிவை எப்படித் தலைமை தாங்கி நடத்துவார்? என்று எள்ளி நகையாடினார்கள்.
ஆனால் வருடக் கடைசியில் விற்பனை இலக்கு முடிவுகளைப் பார்க்கும்போது, விற்பனைப் பிரிவை இதற்கு முன் கையாளாத மண்டல உயர் அதிகாரிகள்தான் மிகச் சிறப்பாக முதல் மூன்று இடங்களில் இருப்பதைப் புரிந்து பார்த்து யாவரும் வியந்தார்கள்.
ஒரு உண்மையை இப்போது நாம் ஒத்துக்கொள்ள வேண்டும். மேலதிகாரிகளுக்குத் தேவை அவுட்புட் எனப்படும் வெற்றி அடையும் விளைவுகள். இன்புட் (செயல்படுத்தும் வழிகள்)  பற்றி யாரும் பெரிதாக்க் கவலைப்படுவதில்லை.
ஒரு BE., M.B.A., Dr. டாக்டர் வெளிநாட்டுப் பட்டம், இவையாவும் ஒரு கம்பெனியில் முதல் முதலில் நுழையப் பயன்படலாம். ஆனால் பதவி உயர்வு என்று வரும்போது அன்றைய நேரத்தில் நாம் எவ்வளவு அந்த நிறுவனத்துக்கு உபயோகமாக இருக்கிறோம் என்பதைப் பொறுத்துத்தான், பதவி உயர்வுதரப்படுகிறது.
சமீபவருடங்களில் மிகப்  பிரபலமான தலைசிறந்த நிறுவனங்களில் இருந்து ஏதோ, மேலதிகாரிகளுடன் மனஸ்தாபம் சிறுசிறு வருத்தங்கள் காரணமாக பதவியை உதறி, பின்னர் புதிதாகத் தொடங்கப்பட்ட மிகப் பெரிய தனியார் நிறுவனங்களில், “நல்ல பதவி பெற்று வெற்றி அடைந்துவிட்டேன் பார்” ? என்று  பெருமைப்பட்டவர்களின் கதை ஒரு வருடத்துக்குப் பின் எப்படி ஆகிவிட்டது தெரியுமா?
அந்த கம்பெனியின் மேலதிகாரிக்கு அவர் செய்யயும் வேலை திருப்திகரமாக இல்லை! எனவே அவருக்குத் தரப்பட்ட வசதிகளில் ஒவ்வொரு வசதியாகக் குறைத்துக் கொண்டே வந்தார்கள்.
முதலில் பெரிய அறையில் இருந்து சிறிய அறைக்கு மாற்றப்பட்டார்.
தொலைபேசியில் எஸ்.டி.டி. எடுக்கப்பட்டது.
கம்பெனி கார் கொடுக்கப்படுவது நிறுத்தப்பட்டது.
முக்கியமான கார் கொடுக்கப்படுவது நிறுத்தப்பட்டது.
முக்கியமான ஆவணங்கள் பார்வைக்கு வருவது நின்றுவிட்டது.
மேலதிகாரி அவரை ஒரு பொறுப்பானவராக மதிக்கவில்லை.
கடைசியில் மனம் வெறுத்து நொந்து நூலாகிப் போய் அந்தப் பதவியையும் விட்டு விலக நேரிட்டது. சமீப காலத்தில் VRS (நிரந்தர விடுப்பு எடுத்துக்கொள்ளல்) எனும் முறையின் பெரிதும் ஆள் குறைப்பு செய்வது நிறுவனத்திறகுப் பயன் அளிக்கும் என்பதால் வேறு வழியின்றி வங்கி போன்ற பல நிறுவனங்களில் இது தினமும் நடக்கும் கதையாகிவிட்டது.
பல வண்ணக் கனவுகளுடன் கையில் நிறைய பணத்துடன், மீதிக் காலத்தைச் சுகமாகக் கழிக்கலாம் என மனக்கோட்டை கட்டிக்கொண்டு, உயர்ந்த பதவிய விட்டு விலகி வேறு வேலை தேடலாம்  என்று வெளி வரும் அதிகாரிகள் தங்களுக்கு திருப்தி தரும் வேலை கிடைக்காமல் வீட்டில் வேலையில்லாமல் பொழுதைக் கழிக்க முடியாமல் மனம் நொந்து கிடப்பதை நிறைய பார்க்க முடிகிறது.
மனம் என்னும் குரங்கைக்கட்டி வைக்க நிரந்தர வேலை, அல்லது சொந்தமான வியாபாரம் அல்லது வேறு ஏதாவது ஒன்று ஒவ்வொருவரம் கைவசம் நிச்சயம் வைத்து இருக்க வேண்டும்.
என் கண்முன்னாலேயே, பதவியை திடீரென ராஜினாமா செய்துவிட்டு, கோபம் கண்டு எங்கள் நிறுவனத்தை விட்டுப்போனவர்கள் ஏறக்குறைய 90% பேர் என்னைப் பார்க்கும்போதெல்லாம் மிகுந்த வேதனையுடன் “அவசரப்பட்டுவிட்டோமே” என்று வருந்துகிறார்கள்.
ஆகவே மேற்சொன்ன உதாரணங்களின்படி உள்ளம் உயர்ந்தால் வலிமையாக்கி, உள்ளத்தை வளப்படுத்துங்கள்.  வாழ்க்கை மேலும் மேலும் உயர்ந்துகொண்டே இருக்கும்

No comments:

Post a Comment