Monday, January 17, 2011

ஒழுக்கம் தாந்த்ரீகம்;கடிதங்கள் -writer Jayamohan

அன்புள்ள ஜெயமோகன்
நெடு நாள் ஆயிற்று கடிதம் எழுதி. நலம் என்று எண்ணுகிறேன்.
முதலாக,  ஹுசேன் தீட்டிய ஓவியங்கள் பற்றி.   நீங்கள் குறிப்பிட்ட படி நம் ஹிந்து மதத்தில் காதல் மற்றும் காமம் ஒதுக்க படவேண்டிய அல்லது மறைக்க பட வேண்டிய அம்சம் ஆக இல்லை.  ஆனால்,  நம் சமுதாயத்தில் காதல் என்பது ஒழுக்கக்குறைவு என்றும் காமம் என்பது யாரும் பேசக்கூடாத ஒரு விஷயம் என்றும் இன்றும் கருத படுகிறது.
எத்தனை முறை கேட்டு இருக்கிறோம்,  ஒரு பெண்ணோ அல்லது பையனோ காதலிக்கிறார்கள் என்றால் அவர்களை கேரக்டர் மோசம் என்று இந்த சமூகம் பெயர் இடுவதை.  இப்படி இரண்டு முகம் கொண்ட ஒரு சமூகம் எப்படி இந்த ஓவியங்களை ஏற்கும்?  எதனை பேருக்கு சிவசக்தியின் தாத்பர்யம் புரியும்?  சிவலிங்கத்தின் சிம்பாலிக் தத்துவம் தெரியும்?
நம் சமூகம் இரு வகையான மக்களை கொண்டது.  ஒரு வகை அறியாமையில் ஊறி உள்ளது.  இன்னொன்று அறிந்து இருந்தும் ஏற்று கொள்ளும் மனப்பான்மை இல்லாதது.  ஹிந்து மதத்தில் உள்ள பரந்த பன்மை குணம் பற்றி என்னதான் நீங்கள் கத்தி கூப்பாடு செய்தாலும் இந்த சமூகத்தின் செவிகளுக்கு எட்ட போவதில்லை,  எட்டினாலும் மூளையில் தைக்க போவதில்லை.  ஆனாலும் சங்கை ஊத்தி கொண்டு இருங்கள்.
siva sakthivel

அன்புள்ள சிவா
நீங்கல் சொல்வது உண்மை. ஆனால் இந்த நிலை சமீபகாலமாக உள்லதுதான். நம்முடைய மரபில் இந்து தத்துவங்களை கற்பிக்கும் பல அமைப்புகள் இருந்தன. உதாரணமாக எந்த குக்கிராமத்திலும் பாரத மண்டபங்கள் இருப்பதைக் காணலாம். பாரதம் படிபப்தற்கும் விவாதிப்பதற்குமான மையங்கள் அவை. அந்நூல்கள் வழியாக இந்துஞான மரபு எப்போதுமே பேசப்பட்டிருக்கிறது.
குமரி, நெல்லை மாவட்டங்களில் சென்ற தலைமுறை வரை  புலவர் என்று சொல்லப்படும் அறிஞர்கள்  இல்லாத ஊர்களே இல்லை. ஹரிகதைகள் வில்லுப்பாட்டுகள் பல்வேறு வகை சொற்பொழ்வுகள் மூலம் மதக்கல்வி ஒவ்வொரு நாளும் ஏதோ ஒருவகையில் வழங்கப்பட்டிருந்தது.
அத்துடன் நாடோடிக்கலைஞர்கலின் அறிவு கூட வியக்கத்தக்கது. உதாரணமாக தோல்பாவைக்கூத்துக் கலைஞர்கள் அரிய தத்துவங்களை சர்வ சாதாரணமாகச் சொல்லிச் சென்றார்கள்.நானே கேட்டிருக்கிறேன்.
அந்த அமைப்புகள் எல்லாமே நிலப்பிரபுத்துவக் கட்டமைப்பால் உருவாக்கப்பட்டு பேணப்பட்டன. ஒரு கிராமத்து புலவர் கிராமத்து வேளாண்மைப்பொது நிதியால் பேணப்பட்டார். நிலப்பிரபுத்துவம் அழிந்ததுமே அந்த அமைப்பும் இன்று சிதறி விட்டது. இதை தவிர்க்க முடியாது. அதாவது, நிலப்பிரபுத்துவம் அழிந்தது. முதலாளித்துவ அமைப்புகளான பொதுவாசிப்பு, நூலகம் போன்றவை உருவாகவும் இல்லை. இங்கேதான் இன்றைய தேக்கநிலை
இந்தியாவின் ஒழுக்கக் கட்டுப்பாடுகள் மைய மதத்தால் கட்டுப்படுத்தப்பட்டவை அல்ல. அவை பழங்குடி வேர் உள்ள குல ஆசாரங்களால் பேணப்பட்டவை. அவற்றுக்கான வழிகாட்டு நெறியாகவே நமது தர்ம சாஸ்திரங்கள் இருந்தன. அவை எங்குமே நேரடியாக செயல்பட்டதில்லை. ஆசாரங்கள் குலத்துக்குக் குலம் மாறுபட்டன. நாயர் சாதியில் பெண்களுக்கு முழுமையான உரிமைதான் அளிக்கப்பட்டிருந்தது
தமிழ்நாட்டில் பார்த்தால் கூட பொதுவாக நில உடைமையின் மேல்தட்டில் இருந்த சாதிகளில் பெண்களுக்கு இருந்த கட்டுப்பாடுகள் கீழ்த்தளங்களில் இல்லை. கீழ்த்தளங்களில் காதல், திருமணம், விவாகரத்து போன்றவற்றில் பெண்களுக்கு முழுமையான சுதந்திரம் பெரும்பாலான உழைக்கும் சாதிகளில் இருந்ததைக் காணலாம்.
காலம் இன்று மெல்ல மாறுகிறது. மாறும் காலம் என்பது மாறும் கருத்துக்கள் மூலமே நிகழ்கிறது. அதில் ஒரு சிறு பங்களிப்பு
ஜெ
அன்புள்ள ஜெயமோகன்,
தங்களுடைய காந்தியும் காமமும் பற்றிய கட்டுரைகள் படித்தேன். இந்த கட்டுரைகளுக்கு சில நண்பர்களின் எதிர் வினைகள் மிக மன வேதனையை ஏற்படுத்தியது. இன்றைய காலங்களில் தியானம், மனவலிமை, பிரம்மச்சரியம், புலனடக்கம் பற்றிய தவறான பரப்புரைகள் மூலம் விளக்கங்கள் குறைவான  காலகட்டத்தில் உள்ளோம் . அந்நண்பர்கள் புரிந்து கொண்டது இவ்வாறு தான் என எண்ணுகிறேன்.
1. தாந்திரீகம் உடலுறவை ஊக்க படுத்த கூடியது
2. காந்தி தனது பேத்தியுடன் உடலுறவு கொண்டார்
3. பிரேமானந்தவை போன்ற போலி சாமியார்

எனக்கு தெரிந்த வகையில் விளக்க முற்படுகிறேன். உண்மை என்ன என்பதை மேலும் தாங்கள் விளக்க வேண்டுகிறேன்.
இந்நிகழ்ச்சியில் ஈடுபடும் போது காந்தி ஒரு பிரம்மச்சாரி என்பதையும், உடலுறவை முற்றிலும் தவிர்த்தவர் என்பதும் கவனத்தில் கொள்ள வெண்டுகிறேன். தியானம் & தாந்திரிகம் பற்றிய புரிதல் இல்லாமல் இந்நிகழ்வை எதிர்க்கும் நண்பர்களுக்கு விளக்க வேண்டி ஒரு உதாரணம் தர விரும்புகிறேன்.
  • தாந்திரீகத்தில் ஒரு வழி எல்லா பெண்களையும் தாயாக காணுதல். அதன் மூலம் உடலிச்சையை அகற்றுதல். (தாந்திரிகத்தில் மேலும் பல வழிகள் உள்ளன. காந்தி கடைபிடித்தது அவை அல்ல. அவை இங்கே பொருந்தி வரக் கூடியவை அல்ல.)
  • ஒரு மனிதன் தன் தாயின் உடலை முழு நிர்வாணமாக காண நேர்ந்தால் அது உடலிச்சையை தூண்டுமா அல்லது தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துமா அல்லது பக்தியுடன் தொழ தோன்றுமா ?
  • காந்தியின் தாயார் உயிருடன் இருந்திருந்தால் தன் தாயுடனும் இதே வகையான சோதனையை மேற் கொண்டிருப்பார். உண்மையில் மற்ற பெண்களிலும் தாயையே கண்டார் என்பது தான் இங்கு அடிப்படியே
மேலும் மேற்கண்ட நிகழ்வை சரியான வகையில் புரிந்து கொண்டால்,
  1. தாந்திரிகம் எனபது ஒரு கருவி. அது உடலுறவை இயற்கையின் ஒரு பகுதி என தியானத்தின் கருவியாக உபயோக படுத்துகிறது. உடலுறவை வளர்ப்பதும் இல்லை. எதிர்ப்பதும் இல்லை. தாழ்வு மனப்பான்மை கொள்வதும் இல்லை.
  2. காந்தி ஈடுபடுத்தி கொண்டது அக்னி பரிட்சை கூட இல்லை. நெருப்பாற்றில் நீந்துவது. தனது பேத்தியுடன் இவ்வாறு இருந்தது உடலுறவிற்காக இல்லை. காந்தி என்பதே ஒரு உடல் இல்லை. உடலை துறந்தவன் என்பதை உணர்த்துவதற்கு ஏற்படுத்திய வழி.
  3. காந்தி ஒரு மகாத்மா
என்பது யாவரும் ஒப்பு கொள்வர்.
தாந்திரிகம் என்பது மேல் நிலை தியானம். அது தியானம் பற்றி அடிப்படை கூட அறியாத பொது மக்களுக்கு அறிவிக்க படுதல் இது போன்ற எதிர்மறையான எண்ணங்களையே ஏற்படுத்தும். எனவே தான் விருப்ப படுபவர்கள் மட்டுமே அறிந்து கொண்டுள்ளனர்.
காந்தியின் மேல் சுமத்தபடும் அரசியல் குற்றசாட்டு    இதில் ஈடுபடுத்த பட்ட பெண்கள் பாலியல் ரீதியாக சுரண்ட பட்டனர் என்பது. இவ்வகை குற்றசாட்டுகளுக்கு வரலாற்று அறிவு பெற்ற நீங்கள் விளக்குவதே சிறப்பானதாக இருக்கும்.
காந்தியின் ஆசிரமத்தில் பிரம்மச்சரியமும், தாந்திரிகமும் பயிற்றுவிக்க பட்டதா ? இதில் ஈடுபடுத்த பட்ட பெண்கள் தாந்திரிகம் பற்றிய அடிப்படை அறிவு பெற்றவர்களா ?
தங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள்.
நன்றி
சபரிநாதன் அர்த்தநாரி.

அன்புள்ள அர்த்தநாரி,
என்னுடைய கட்டுரைகளில் நீங்கள் சொன்ன விஷயங்களை மிக விளக்கமாகவும் தெளிவாகவும் சொல்லியிருக்கிறேன்.
1 காந்தி தாந்த்ரீகத்தின் ஒரு பிரிவாகிய தட்சிண மார்க்கத்தின் சில முறைகளைச் செய்து பார்த்திருக்கலாம்.  அதில் காமத்துக்கோ உடலுறவுக்கோ இடமில்லை.
2 முழுமையான பிரம்மசரிய நெறியே இருந்தது இவ்விஷயங்களை கடுமையாக எழுதி வெளியே கொண்டுவந்தவர்களே அதைப் பதிவுசெய்கிறார்கள்.
3அவர் தன்னை ஒரு தாய் ஆக உருவகித்துக்கொண்டிருந்தார். அவருடன் இருந்த பெண்கள் அவரை தாய் ஆக எண்ணினார்கள்.
4 அவர்களிடம் பேசி முழு சம்மதத்துடன் அவர்கள் பெற்றோருக்கும் அவர்களைக் கோண்டே தகவல் சொல்லச்செய்தபின் அவர் அதில் ஈடுபட்டார். அவர்களின் பதிவுகளையும் அவர் கணக்கில்கொண்டார்.
5 அவர்கள் எவருமே உளப்பாதிப்படைந்ததாகத் தகவல் இல்லை. அவர்கள் அதை மிகச்சாதாரணமாக, காமமே கலக்காத ஒன்றாக மட்டுமே எடுத்துக்கொண்டிருந்தார்கள்.  அதை பிறர் தவறாகப் பார்த்ததைத்தான் அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை
இத்தனையும் என் கட்டுரையில் இருக்கிறது. தாந்த்ரீகம் குறித்த தெளிவான விளக்கமும் இருக்கிறது
1. அது புலனிச்சைகளை வென்று செல்வதற்கான வழி
2 அது அறிதலின் பாதை நுகர்தலின் பாதை அல்ல
3 அது எல்லாவற்றையும் குறியீட்டுச்செயல்பாடாக ஆக்குகிறது.நேரடியாக எதையும் செய்வதில்லை
அதை வாசித்தபின் ஒருவர் நீங்கள் சொல்வதுபோலச் சொல்கிறார் என்றால் அவர் தமிழில் எழுதப்படிக்கக் கற்றுக்கொள்வது நல்லது
ஜெ
அன்புள்ள ஜெயமோகன்
நலம் என்று எண்ணுகிறேன்.

இந்திய,  விக்டோரிய ஒழுக்க நெறி பற்றி தொடர்ந்து வாசிக்கிறேன்.  சிலவற்றில் என் சந்தேகங்கள் தீர்ந்தன.  ஆனால் பிற சில விஷயங்களில் ஐயங்கள் துளிர்ந்து விட்டன.  தயவு செய்து விளக்கவும்.
1 .  எந்த நெறியானாலும்,  எல்லாம் குழப்பம்.
2 .  விதி விலக்குகளும்,  மீறல்களும் விசேஷ தளங்களில் அனுமதிக்க பட்டு உள்ளன என்று எழுதி இருக்கிறீர்கள்.  இங்கு விசேஷ தளங்கள் என்று நீங்கள் குறிப்பிடுவது என்ன?
3 . நடைமுறை தளத்தில் அவை மறுக்க பட்டதற்கு என்ன காரணம்?
4 .  இந்த நெறிகள் எல்லாம் ஆண் பெண் இரு பாலருக்கும் பொதுவானவை தானா?
5 இன்று நம் நாட்டில் எல்லா பத்திரிகைகளிலும் நம் பண்பாடு,  கலாசாரம்,  ஒழுக்கம் எல்லாம் குறைந்து விட்டன என்று புலம்புகின்றன.  பெண் சம்பாத்தியம்,  பெண்ணின் பொருளாதார முன்னேற்றம், சுதந்திரம்,  அதனால் பெண்கள் உடுத்தும் உடை,  நடை,  மது அருந்துவது,  பாலுறவு சுதந்திரம் ஆகியவற்றை காரணம் காட்டுகின்றன. இவற்றை எல்லாம் ஆண் செய்யும் போது கெடாத கலாசாரம்,  ஒழுக்கம்,  அவற்றை பெண் செய்யும் போது கேட்டு விடுமா?
அன்புடன்
சிவா சக்திவேல்

அன்புள்ள சிவா
எல்லா ஒழுக்க நெறிகளும் ஒரு சமூக ஒழுங்கை உருவாக்கவே அமைக்கப்பட்டிருக்கும். சமூக ஒழுங்கை உருவாக்காமல் சமூக உறவுகளை உருவாக்க முடியாது. உற்பத்தியையும் வினியோகத்தையும் நடத்த முடியாது. ஆன்மீகமான முன்னேற்றத்தை சமூகம் அடைய முடியாது. ஒழுக்கக் கட்டுப்பாடுகள் இல்லாத சமூகங்களே பூமியில் இல்லை.
எந்த நெறியும் குழப்பம் இல்லாமல் முழுமுற்றானதாக இருக்காது. இருந்தால் அது வன்முறையாக ஆகும். ஏனென்றால் காலம் மாறும் தோறும் இடம் மாறும் தோறும் நெறிகள் மாறுபடும். அப்படி மாறுவதற்கு விவாதம் அவசியம். ஆகவே ஒழுக்கநெறிகள் எப்போதுமே விவாதிக்கப்பட்ட நிலையிலேயே இருக்கும். அந்த விவாதத்துக்காகவே நீதிசபைகள் இருந்தன. நீதி மாறாததாக இருந்தால் நீதிபதியே தேவை இல்லையே
இந்தியச் சட்டமே ஒவ்வொருநாளும் மாற்றப்பட்டுக்கொண்டேதான் இருக்கிறது. ஒவ்வொருகணமும் விவாதிக்கப்பட்டபடியே இருக்கிறது
விசேஷ தளம் என்பது அன்றாட வாழ்க்கை சார்ந்தது அல்ல. ஞானம் கல்வி போன்ற தளங்களுக்கு அளிக்கப்படும் விதிவிலக்கு. பிணத்தை ஒருவன் நிர்வாணமாக்கி அறுத்தால் அது குற்றம். மருத்துவர் அதைச் செய்ய சட்டம் இடமளிக்கிறது அல்லவா? ஓர் ஒழுக்கம் சமூக ஒழுங்குக்கு தேவை. ஆகவே அது விதி. அந்த ஒழுக்கத்தை மீறிச்சென்று மேலும் தீவிரமான ஒன்றை தேடுபவனை அது கட்டுப்படுத்தாது என்பதே விசேஷ தளம்
பெண்களை குழந்தைபெறுபவள், குழந்தையை வளர்ப்பவள் என்ற அடிப்படையில் மேலும் சில நெறிமுறைகளை வகுத்தும் மேலும் சில எதிர்பார்ப்புகளைக் கொண்டும் கட்டுப்படுத்தியது நம் மரபு. இது உலகமெங்கும் ஏதெனும் வழியில் உள்ளதுதான். ஆகவே பெண்களின் மீறல் குழந்தைகளை பாதிக்கும் என்ற அச்சம் உள்ளது. இது இயல்பானதே.
குழந்தை வளர்ப்பு சமூக நிறுவனங்களின் கைகளுக்குச் சென்றுகொண்டிருக்கும் இன்று பெண்கள் மேலும் சுதந்திரம் அடைகிறார்கள். ஆகவே நெறிகள் தளர்கின்றன.
ஒழுக்க நெறிகள் நடைமுறைப் பயன் சார்ந்தவை.  எந்த ஒழுக்கமும் சமூக வளார்ச்சியை கட்டுப்படுத்தவோ தடைசெய்யவோ வேண்டுமென்றே உருவாக்கப்பட்டிருக்காது. ஆகவே நடைமுறைப்பயன் சார்ந்தே அவற்றை மீறுவதைப்பற்றியும் யோசிக்க வேண்டும். நேர்நிலையாக. அவற்றை எதிர்மறையாக வீம்பாக யோசிப்பது அழிவையே அளிக்கும்

No comments:

Post a Comment