Monday, January 17, 2011

மகாத்மா காந்தியின் சத்திய சோதனை -பிரம்மச்சரியம் -2


தீர விவாதித்து, ஆழ்ந்து சிந்தித்த பிறகே, 1906-ஆம் ஆண்டில் நான் பிரம்மச்சரிய விரதத்தை மேற்கொண்டேன். இது சம்பந்தமாக எனக்கு இருந்த எண்ணங்களைக் குறித்து, அதுவரையில் என் மனைவியிடம் நான் எதுவும் கூறவில்லை. விரதத்தை மேற்கொண்ட சமயத்தில் மாத்திரமே அவளைக் கலந்து ஆலோசித்தேன். அவளுக்கு எவ்வித ஆட்சேபமும் இல்லை. ஆனால், முடிவான தீர்மானத்திற்கு வருவதில் எனக்கு அதிகக் கஷ்டம் இருந்தது. அதற்கு வேண்டிய மனபலம் என்னிடம் இல்லை. எனது சிற்றின்ப இச்சையை அடக்குவது எப்படி? ஒருவன் தன்னுடைய மனைவியிடம் கூடச் சிற்றின்ப உறவைப் போக்கிக் கொண்டுவிடுவது என்பது விசித்திரமானதாகவே அப்பொழுது தோன்றிற்று. ஆனால், ஆண்டவனின் அருள் பலத்தில் பூரண நம்பிக்கை வைத்து, துணிந்து விரதத்தை மேற்கொண்டேன்.
அந்த விரதத்தை அனுசரித்து வந்திருக்கும் இருபது ஆண்டு காலத்தை நான் இப்பொழுது எண்ணிப் பார்க்கும்போது எனக்கு அளவற்ற ஆனந்தமும் ஆச்சரியமுமே உண்டாகின்றன. புலன் அடக்கத்தில் ஏறக்குறைய வெற்றிகரமாக அனுசரித்து வந்திருக்கும் பயிற்சி 1901-ஆம் ஆண்டிலிருந்தே நடந்து வருகிறது. ஆனால், விரதத்தை அனுசரித்த பிறகு எனக்கு ஏற்பட்ட சுதந்திரத்தையும் ஆனந்தத்தையும் 1906-ஆம் ஆண்டிற்கு முன்னால் நான் அனுபவித்ததில்லை. விரதம் கொள்ளுவதற்கு முன்னால் எந்தச் சமயத்திலும் ஆசைக்கு அடிமை ஆகிவிடக்கூடும் என்ற நிலையில் நான் இருந்தேன். ஆனால், இப்பொழுதோ எந்த ஆசையினின்றும் என்னைக் காக்கும் நிச்சயமான கேடயமாக விரதம் இருந்து வருகிறது. 
பிரம்மச்சரியத்தின் அபார சக்தி, நாளுக்கு நாள் எனக்குப் புலனாகி வந்தது. நான் போனிக்ஸில் இருந்தபோது, இவ்விரதத்தை மேற்கொண்டேன். வைத்தியப் படைவேலை நீங்கியதும் போனிக்ஸு க்குப் போனேன். பிறகு ஜோகன்னஸ்பர்க்கிற்குத் திரும்பிவிட வேண்டியதாயிற்று. நான் அங்கே திரும்பிய ஒரு மாதத்திற்கெல்லாம் சத்தியாகிரகப் போராட்டத்திற்கு அடிகோலப்பட்டது. பிரம்மச்சரிய விரதம், எனக்குத் தெரியாமலே என்னைச் சத்தியாகிரகத்திற்குத் தயார் செய்து கொண்டிருந்தது போல் இருந்தது. சத்தியாக்கிரகம், முன்னாலேயே யோசித்துச் செய்யப்பட்ட திட்டம் அன்று நான் விரும்பாமலே அது தானாக வந்தது. ஆனால், என்னுடைய காரியங்களெல்லாம் அந்த லட்சியத்தில் கொண்டு போய் விட்டன என்பதைக் காண்கிறேன். ஜோகன்னஸ்பர்க்கில் அதிகமாக இருந்து வந்த வீட்டுச் செலவுகளையெல்லாம் குறைத்து விட்டேன். பிரம்மச்சரிய விரதத்தை மேற்கொள்வதற்கென்றே போனதைப் போல் போனிக்ஸு க்குச் சென்றேன்.



No comments:

Post a Comment