ஐயா,
நான் பிறப்பால் சைவ உணவு பழக்கம் உடையவள்.அதனால் மட்டுமல்லாமல் சைவ உணவு பழக்கத்தை ஒரு சுயமான கொள்கையாகவும் கொண்டுள்ளேன்.உயிர்களை துன்புறுத்தி உண்பது பாவம் என்பதுதான் கொள்கையின் அடித்தளம்.(உயிர்களை எத்தனையோ விதங்களில் துன்புறுத்தி கொண்டு தான் இருக்கிறோம்.பட்டு சட்டைகள்,லெதர் பைகள் போன்றவை மூலம்.).
தங்களின் ‘நயத்தக்கோர்’ பதிவை படித்தேன்.சுந்தர ராமசாமி அவர்களின் சைவ உணவு பழக்கம் கொள்கையா இல்லை வெறும் பழக்கமா என்று தெரியவில்லை.எதுவாக இருந்தாலும் அதை கடைப்பிடிப்பது என்பது எத்தனை கடினமான விஷயம் என்பது புரிகின்றது.அதை சார்ந்து பெருமிதம் நியாயமானதா என்பதை பற்றிய ஐயம் எழுகின்றது.
ஜி. பி.ஷா-வினுடைய மேற்கோள் ஒன்றை என் வாதமாக வைத்திருந்தேன்.
“A man of my spiritual intensity does not eat corpses”
செடிகளும் உயிர்கள் தானே, உணர்ச்சி உள்ள உயிர்தானே.அதை ஒரு சமண வகுப்பினரும் ஆதரிகிறார்கள் இல்லையா.அனால் அழுகிய பழங்களிலும் உயிர்கள் வாழ்கின்றனவே.உயிர்கள் உயிர்களைத் தானே உண்ண முடியும்? இன்றைய காலத்தில் காய்களானாலும், இறைச்சியானாலும் செயற்கையான உற்பத்தியால்தானே விளைகின்றன? இருந்தும் காந்தி போன்றோர் ஏன் சைவ உணவு பழக்கத்தை பிரசாரம் செய்தார்கள்? என் பழக்கத்தை கொள்கையாக்க ஏதேனும் பொதுவான அடித்தளம் உள்ளதா?இதை பற்றிய தங்களின் கருத்து என்ன?
அன்புடன்,
அனு. Anugraha Sankaranarayanan
அன்புள்ள அனு,
நாராயணகுருவிடம் ஒருவர் சொன்னார், குரு நாம் ஏன் செத்த பசுவைச் சாப்பிடக்கூடாது? அது செத்துவிட்டதே? அதன் பாலைக்குடிக்கிறோமே, அது பசுவின் குருதிதானே?”
குரு நியாயம்தான் என்று சொல்லிவிட்டார். ஆனால் கொஞ்ச நேரம் கழித்து கேட்டார். ”அம்மா இருக்காங்களா?” அவர்””போனவருஷம் போய்ட்டாங்க குரு”’ என்றார். ”தின்னுட்டீங்களா?” என்றார் குரு.
நான் என் மீது இருக்கும் கொசுவை சாதாரணமாக அடித்துக்கொல்வேன். அதேபோல ஓர் எருமையை மண்டையில் உலக்கையைப்போட்டு அடித்துக்கொல்வேனா? மாட்டேன். ஒரு நாயை கல்லால் அடிப்பதைப்பற்றிக்கூட என்னால் யோசிக்க முடியாது. எல்லாமே உயிர்தானே, கருணை என்றால் எல்லாவற்றுக்கும் தானே என்றெல்லாம் கேட்க முடியுமா என்ன?
அதாவது உயிர்கள் எல்லாம் நமக்கு ஒன்று அல்ல. அவற்றுக்குள் பேதம் உள்ளது. பெரிய உயிர் சின்ன உயிர் என உள்ளது. அரிய உயிர் எளிய உயிர் என உள்ளது . ஓர் உயிரின் நுண்ணறிவு, அதன் வாழ்நாள்… அனைத்துக்கும் மேலாக அதற்கும் நமக்குமான உறவு. அது நமக்குள் எவ்வகைப்பட்ட குறியீடாக உள்ளது என்பது. ஒரு மனிதன் நமக்கு மிக முக்கியமான உயிர். நாய் இன்னமும் குறைவான உயிர். ஓணான் இன்னும் கொஞ்சம் குறைந்தது. புழு இன்னமும் குறைந்தது.
உயிர்க்கொலை என்பது இந்த பூமியின் ஓர் இயற்கையான நிகழ்வு. அதற்கு எதிராக பண்பாடு உருவாக்கிக்கொண்ட விழுமியம்தான் கருணை என்பது. எல்லா விழுமியங்களும் ஓர் நடைமுறைத்தேவையில் இருந்து உருவானவையே. அவை ஒரு சமூகத்தைக் கட்டி எழுப்புகின்றன. வீரம் என்பதும் கருணை என்பதும் ஒரே சமூகத்தால் உருவாக்கப்படுகின்றன.ஒரு இடத்தில் கொலை வீரமாக கருதப்படுகிறது. இன்னொரு இடத்தில் அது பாவமாக.
அதேபோலத்தான் கருணையும். அது முழுமுற்றான ஒன்றல்ல. எந்த விழுமியமும் முழுமுற்றானதல்ல. அவை சார்புநிலை உடையவை. செடியை பிடுங்கி நறுக்கி உண்பது கருணைக்கு மாறானதல்ல, கொசுவைக் கொல்வது போல. ஆனால் ஆட்டை வெட்டி உண்பது கருணைக்கு மாறானது.
எளிமையான பதிலே இதுதான், கீரையை நறுக்குபவர்கள் ஆட்டைக் கொல்வார்களா? ஆடு நம் மனதில் வெறும் உயிரல்ல. அது ஒரு குறியீடாக, நெருக்கமானதாக உள்ளது. அதன் பழக்கங்கள், அவற்றின் வழியாக வெளிப்படும் அதன் மனம் நாம் அறிந்ததாக உள்ளது. கொசுவைக் கொல்லும்போது நாம் வெறுமொரு உயிரைக் கொல்கிறோம். ஆட்டைக் கொல்லும்போது ஓரு மனதையும் சேர்த்தே கொல்கிறோம். நமக்கும் ஆட்டுக்கும் இடையே உள்ள உறவைக் கொல்கிறோம். அதன் மூலம் உருவான ஒரு குறியீட்டைக் கொல்கிறோம்.
விழுமியங்கள் என்பவை சமூகக் கட்டுமானங்கள்தான். உதாரணமாக சென்ற தலைமுறையினருக்கு மரங்களை வெட்டுவதில் குற்றவுணர்ச்சியே இல்லை. ஒரு காயைப்பறிப்பதுபோல வெட்டுவார்கள். நமக்கு இப்போது குற்றவுணர்ச்சி உள்ளது. நம் தேவைக்காக ஒரு மரத்தை வெட்ட நம்மால் முடியாது. வெட்டினால் நிம்மதி இழப்போம். இந்த விழுமியம் சமீபகாலமாக, கடந்த 50 வருடங்களில், மானுடகுலத்தில் உருவாக்கப்பட்டது.
கருணை என்ற விழுமியம் மனிதர்கள் சமூகமாக உயிர்வாழ ஆரம்பித்த காலத்தில் அவர்களுக்கு தேவையாக இருந்திருக்கலாம். இயற்கையை எதிர்மறைச் சக்தியாகக் காணாமலிருக்க சக உயிர்களுடன் ஒரு நல்லுறவை உருவாக்கிக்கொள்ள. அதற்கும் மேலாக சகமனிதன் மீதான வன்முறையின்மைக்கான குறியீடாக.
ஆகவே கொல்லாமை என்பதும் ஒரு முழுமுற்றான நடைமுறை அல்ல. அது ஒரு குறியீட்டு ரீதியான விழுமியமே. கொல்லாமையை கடைப்பிடிப்பவன் நெஞ்சில் கருணை அதிகரிக்கும், சகமனிதன் மீதும் அக்கருணை உருவாகும் என்ற நம்பிக்கை. முதலில் மனிதனைக் கொல்லாதீர்கல். அடுத்து நெருக்கமான மிருகங்கலைக் கொல்லாதிருங்கள். அடுத்து சுயலாபத்துக்காக உயிர்களை கொல்லாதிருங்கள். அடுத்து நமக்கு தீங்கு அளிக்காத உயிர்களைக் கொல்லாதிருங்கந்- இவ்வாறு அந்த விழுமியம் வளர்கிறது. அதுவே அதன் இயல்பான வளர்ச்சி
அதன் அடித்தட்டில் இருந்து திருப்பிக் கேட்பது அபத்தம். செடிகளைக் கொல்கிறாயே அப்படியானால் உயிர்களை ஏன் கொல்லக்கூடாது? உயிர்களை கொல்கிறாயே ஏன் மனிதனைக்கொல்லக்கூடாது என்று தான் அது செல்லும்.
புலால் உண்ணும் வழக்கம் நாம் குரங்குகளாக இருந்தபோதே இருந்திருக்கலாம். சிம்பன்ஸிக்கள் கர்ப்பமாக இருக்கும்போது மாமிசம் உண்கின்றன. உபரியான புரோட்டீனுக்காக உண்ண ஆரம்பித்து எளிய உணவு, கனமான உணவு என்பதனால் நீண்டு சுவைக்கு அடிமையாகி இன்று வரை நீள்கிறது.
நான் அசைவம் உண்பவன் . அந்த சுவைக்காக மட்டுமே. அசைவம் உண்பவன் என்பதனால் அதை நியாயப்படுத்த மாட்டேன். அது மனிதனுக்கு இயல்பான,நல்ல உணவு அல்ல. அசாதாரண உடலுழைப்புள்ளவர்களுக்கு மலிவான புரதமாக அது இருக்கலாம். ஆனால் தேவையானதோ தவிர்க்க முடியாததோ அல்ல.
இன்றைய உடலுழைப்பற்ற சூழலில் மாமிச உணவு கெடுதலானது. ஏன் பலசமயம் விஷம் போன்றது. ஆனால் பழகியபின் விடுவது கடினம். அதன் பின்னணியில் உள்ள கொலை என்பது நியாயப்படுத்த முடியாத ஒன்றுதான்
அடுத்த ஐம்பது வருடங்களில் செயற்கை புரோட்டின் வந்து மாமிச உணவே இல்லாமல் ஆகிவிடலாம். நம்முடைய வாரிசுகள் ‘அடாடா மிருகங்களை கொன்று தின்ற கொடூரர்களா நம் முன்னோர்’ என எண்ணலாம். இன்று நாம் நம் முன்னோர் இழைத்த சாதிக்கொடுமைகளை அறிந்து அதிர்வது போல!
வர்த்தமானர் முதல் காந்தி,நாராயணகுரு வரை கொல்லாமையை ஏன் சொன்னார்கள் என்றால் அது கருணைக்கான பயிற்சி என்பதனால்தான். ஒன்றில் இருந்து ஒன்றாக வன்முறையை கைவிடுவதற்கான பயணம் என்பதனால்தான்.
அது எனக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும் என் நாவின் பலவீனத்தால், என் ஆளுமையின் ஆழமின்மையால், என்னுடைய சிறுமையால் நான் அசைவன்
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்
அந்த உயிர்களிடம் கைகூப்பி மன்னிப்பு கேட்டுக்கொள்ளலாம்
ஜெ
13 Responses to “உயிர்க்கொலை”
''புலால் உண்ணக் கூடாது .உயிர்க்கொலை செய்யக்கூடாது !''
இவ்வுலகில் உண்டாகும் துன்பங்களுக்கு
அடிப்படைகாரண்ம்,உயிர்க்கொலைசெய்வதும்,
மாமிசம் [புலால்]உண்பதும்.
இவ்வுலகில் உணவு, இரண்டு வகையாகப்
பழக்கத்தில் உள்ளது ,சைவஉணவு ,அசைவ உணவு ,
என்பதாகும்.
பலபேர் சைவஉணவு விரும்புகிறார்கள் ,பலபேர் அசைவஉணவு ,
விரும்புகிறார்கள்,இந்த மாற்றத்திற்கு என்னக்காரணம் ,?
யார்காரணம் ? என்பதை கவனித்தால் நன்குவிலங்கும் ,
ஆதியிலே மனிதன் காட்டுமிராண்டிகளாய் வாழ்ந்த காலத்தில்
வேட்டையாடி விளங்க்க்குகளை புசித்துவந்தான் ,அதன் பிறகு
மனிதனை மேம்படுத்த வந்த சமயங்களும் ,மதங்களும் ,
சாஸ்திரங்களும் ,உணவு வகைகளை முறைபடுத்த ,
தவறிவிட்டது,
கடவுளைப் பற்றி போதிக்கவந்த சமயங்களும் ,மதங்களும்,
அவர்கள் எழுதிய ,
கதைகளில்,வேட்டையாடுவதும்,கொலைகள் செய்வதும்
போன்ற, கற்பனை கதைகளில்,கொலைகள் செவது குற்றமில்லை ,
புலால் உண்பது குற்றமில்லை ,அதற்கு உண்டான பரிகாரம் ,
செய்தால் ,யாவும் தீர்ந்து விடும் ,எனறு பொய்யான செய்திகளை
மக்கள் மத்தியில் விதைத்துவிட்டு சென்றுவிட்டார்கள் .
அவைகளை உண்மை எனறு நம்பி,இன்றுவரை மக்கள்,
அறியாமையால் அப்படியே கடைப்பிடித்து வருகிறார்கள் ,
'' திருவள்ளுவர் '
திருவள்ளுவர் எழுதிய திருக்குறளில் ,133 ,அதிகாரங்களில் ,
1330 ,குறள்களில், இரண்டு அதிகாரங்களில், இருபது
குறள்கள், கொல்லாமை பற்றியும் ,புலால் உண்ணாமைப்
பற்றியும் ,மிகத் தெளிவாக எழுதிவைத்துள்ளார் .
தமிழ்ப் படித்த,சான்றோர்கள் ,தமிழ் அறிஞ்ஞர்கள்,
தமிழ் ஆராய்ச்சியாளர்கள்,தமிழ்க் காவலர்கள்,
தமிழை வளர்ப்பவர்கள்,தமிழ் பல்கலைக் கழகங்கள்
தமிழ் பேராசிரியர்கள் ,தமிழ் வளர்ச்சி நிறுவனங்கள் ,
அனைத்தும்,என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் ,
மனித வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானது உணவு ,
உணவு வகைகளில்,தாவர உணவு உடலுக்கு நல்லது ,
புலால் உணவு உடலுக்கு கெடுதல் ,என்பதை வலியுறுத்தி
சொல்லாததின் காரணம் என்ன ?
உயிர்க்கொலை செய்வது படுபாதகச செயல் என்பதை
வலியுறுத்தி சொல்லாததின் காரணம் என்ன ?
திருவள்ளுவர் எழுதி வைத்த ,கொல்லாமை ,
புலால் உண்ணாமை,போன்ற அதிகாரங்களில்
உள்ள குறள்கள் தேவையா ?தேவையில்லையா ?
மேடைகளில் திருக்குறளைப் பற்றி பேசும் ,
தமிழ் சான்றோர்கள்,கொல்லாமை ,புலால் உண்ணாமைப்
பற்றி பேசுவதே இல்லை,ஏன்? அவர்களால் புலால்
உண்ணாமல் இருக்க முடியாது என்பதால் ,அவர்கள்
பேசுவதற்கு,தயங்கு கிறார்கள் போலும் .
தயவு செய்து திருவள்ளுவர் வலியுறுத்திய
கொல்லாமை,புலால் உண்ணாமையைப் பற்றி ,
உலக மக்களுக்கு தெரியப் படுத்துங்கள் .
உலக பொதுமறை திருக்குறள் எனறு
சொன்னால் போதாது ,திருக்குறளில் உள்ள
மிக முக்கியமான குறள்கள் ,கொல்லாமை ,
புலால் உண்ணாமை ,என்ற அதிகாரத்தில்உள்ள
குறட்பாக்களாகும்,சமுதாயம் மேம்பட வேண்டுமானால் ,
'' பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்''
என்ற குறளின் கருத்தை பார்த்தால் நன்கு விளங்கும் ,
எல்லா உயிர்களும் ஒன்று எனறு நினைக்கவேண்டும் ,
எல்லா உயிகளும் ஒன்று எனறு நினைத்தால் ,
வாயில்லா ஜீவன்களை ,கொன்று திண்ணலாம்
என்ற எண்ணம் வருமா !
திருவள்ளுவர் எழுதிவைத்த திருக்குறள் ;---
கொல்லாமை ;--
1 ,அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந தரும் .
2 ,பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்த வற்றுள் எல்லாந தலை .
3 ,ஒன்றாக நல்லது கொல்லாமை மற்று அதன்
பின்சாரப் பொய்யாமை நன்று .
4 ,நல்லாறு எனப்படுவது யாதெனின்
யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி .
5 ,நிலை அஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலை அஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை .
6 ,கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான்
வாழ்நாள் மேல்
செல்லாது உயிருண்ணுங் கூற்று .
7 ,தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான் பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை .
8 ,நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கம் கடை .
9 ,கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவா ரகத்து .
10 ,உயிர்உடம்பின் நீக்கியார் என்பசெயிர் உடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்.
அடுத்து ;-- ''புலால் மறுத்தல் ''
1 தன்னூன் பெருக்கற்குத் தான் பிறிது உணுன்பான்
எங்கனம் ஆளும் அருள்.
2 ,பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை
அருளாட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு .
3 ,படை கொண்டார் நெஞ்சம் போல் நனரூக்காது
ஒன்றன்
உடல் சுவை உண்டார் மனம்.
4 ,அருளல்லது யாதெனில் கொல்லாமை கோறல்
பொருளல்லது அவ்வூன் தினல்.
5 ,உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அன்று .
6 ,தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின்
யாரும்
விலைப் பொருட்டால் ஊன்தருவார் இல் .
7 ,உண்ணாமை வேண்டும் புலால் பிறிதொன்றன்
புண்ணது உணர்வார்ப் பெறின்.
8 ,செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன் .
9 ,அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று .
10 ,கொல்லான் புலாலை மறுத்தானைக்
கைகூப்பி
எல்லா உயிரும் தொழும் .
மேலே கண்ட குறள்கள் ,கொல்லாமை பற்றியும் ,
புலால் உண்ணாமைப் பற்றியும் மிகத்தெளிவாக
தெரிவித்துள்ளார் ,
பிற உயிர்கள் படும் துன்பத்தை தன் துன்பம் போல்
எண்ணிக் காப்பாற்றாவிட்டால் அறிவு பெற்று ,எவ்வளவுதான்
படித்து இருந்தாலும் என்ன பயன் என்கிறார் திருவள்ளுவர் .
நல்ல வழி எனறு சொல்லப்படுவது ,எது என்றால் எந்த
உயிரையும் கொல்லாமை என்பதாகும் ,அதுவே எல்லா
அறத்தை விட உயர்ந்த அறமாகும் ,
உண்மை பேசுவதைவிட ஒருஉயிரைக் கொல்லாதிருப்பது ,
உயர்ந்த கொள்கையாகும் என்கிறார் .கொலை செய்பவர்கள்
எந்த காலத்திலும் உயர்ந்த நிலையை அடையமுடியாது ,
என்கிறார் ,கொலைசெய்பவர்களுக்கு,ஆண்டவரிடத்தில் ,
மன்னிப்பு என்பதே கிடையாது என்கிறார் .
திருக்குறளை படித்தால் ''கொலை செய்வது '' என்பது ,எவ்வளவு
கொடுமையான செயல் என்பதை தெரிந்து கொள்ளலாம் .
அடுத்து ;--'புலால் மறுத்தல்'--
திருவள்ளுவர் புலால் மறுத்தல் பற்றி மிகவும்
தெளிவாக விளக்கியுள்ளார் ,
தன்னுடைய உடம்பை வளர்ப்பதிற்க்காக இன்னோர் உயிரை
கொன்று அதன் இறைச்சியை தின்பவன் எப்படிக் கருணை
உள்ளவனாக இருக்கமுடியும் ,
ஓர் உயிர் வாழ்ந்த உடம்பை சுவையாகப் பக்குவப்படுத்திச
சாப்பிட்டவரின் மனம் கொலைக் கருவியைக் கையில்
வைத்திருப்பவரின் நெஞ்சம் போன்றது ,அங்கே கருணை
எப்படி இருக்கும் ,கருணை எப்படிவரும் ,
அருளைப் பற்றி பேசுகிறார்கள், ஓர் உயிரை கொன்று
தின்பவர்களுக்கு ,அருள் எப்படி வரும், எப்படி கிடைக்கும்,
உங்கள் தவறை தீர்த்துக் கொள்ள, ஆயிரம் யாகங்கள்
செய்வதை விட ,ஓர் உயிரை கொன்று அதன் உடம்பை
உண்ணாதிருத்தல் பல கோடி புண்ணியம் தரும் .
ஓர் உயிரையும் கொள்ளாமல், மாமிசம் சாப்பிடாமல்
இருப்பவரை உலகில் உள்ள எல்லா உயிர்களும் ,
கைக்கூப்பி வணங்கும் என்கிறார் திருவள்ளுவர் .
அவர்களே கடவுளாகக் கருதப் படுவார்கள் .
மனிதன் உணவு உண்டு வாழ்வதற்காக ,இயற்கை நமக்கு
அளவு கடந்த தாவர உணவுகளை வழங்கி இருக்கிறது ,
அவைகளை உண்டு வாழ்ந்தாலே போதுமானதாகும் .
அவைகளை உண்பது உயிக்கொலையாகாது ,
அவைகளை உண்பதால் அறிவு வளர்ச்சி பெருகும் ,
கருணையும்,அன்பும் ,தயவும் மேன்மேல் பெருகும் .
அதனால் மனித நேயம் ,ஆன்மநேயம் உண்டாகும் ,
உலகில் அமைதி ஏற்ப்படும் ,உலகில் உள்ள அனைவரும் ,
நலமுடன் வாழலாம்.
இதனை உலக நாடுகள் கவனிக்கவேண்டும் .உலக
அறிவியல் ஆராச்சியாளர்கள் ,ஆன்மீக சிந்தனையாளர்கள்,
அரசியல் மேதைகள் ,பொதுஅறிவுக் கொளகையுடையவர்கள்.
அணு ஆராச்சியாளர்கள் ,மத போதகர்கள்,மற்றும் ,
விஞ்ஞானிகள்,மற்றும்
உலகில் உள்ளஅனைவரும் கவனிக்க வேண்டிய ஒன்றாகும் .
மேலும் அருட்பிரகாச வள்ளலார் அவர்கள் ,
உயிர்க்கொலைப் பற்றியும் ,புலால் உண்ணாமைப்
பற்றியும் ,என்ன சொல்கிறார் என்பதை அடுத்த
வலைப்பூவைப் பாருங்கள் .
நன்றி ;--அன்புடன் கதிர்வேலு .
மீண்டும் பூக்கும்.
Fantastic to read your article on vegetarianism.To people like me vegetarianism was more a habit\ belief without any deep understanding of why the habit exists\continues, .By your writings i am able to understand the thought process behind my own habits ,beliefs
Hats off to you
Regards
Gomathi
சைவர்கள் எத்தனை பேர் தங்கள் வீட்டில் ஆடு, கோழி வளர்க்கிறார்கள்? “கொடூர மனம் படைத்த அசைவர்களே வளர்க்கிறார்கள்” என்பது முரண் நகையே. நான் அலுவல் நிமித்தமாக பணிபுரிந்த வெளிநாடுகளிலும் இதைப் பெரிய விசயமாக அவர்கள் எடுத்துக் கொளவதில்லை. அவர்கள் இயல்பு என் கிராமத்தோடு ஒத்திருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டிருக்கிறேன். இந்தியாவில் பேசப்படும் மித மிஞ்சிய சைவ வாதமே, வெளிநாடுகளுக்கு மாமிச வுணவு ஏற்றுமதிக்கு பயன்படுமானால் மகிழ்ச்சியே.
மேனகா காந்தி சமீபத்தில் மாடுகளை உழுவதற்குப் பயன்படுத்தக் கூடாது என சொல்லியிருந்தார்.தன வயிற்று சோற்றுக்கே அல்லல் படும் விவசாயி வேறு எதற்க்காக மாட்டு வளர்ப்பான்? இந்த அடிப்படை புரிதல் கூட இல்லாத “கருணையாலர்களை நினைத்து என்ன செய்வது?
அன்புடன்,
செங்கோவி
கிராஸ் புத்திசாலிகள் சொல்கிறார்கள். மனிதர்களுக்கு தீங்கிழைக்கும் தெருநாய்களை கொள்ளக்கூடாது
என்று கூறும் புளூகிராஸ் எந்த பாவாமும் அறியாத கசாப்புக்கடையில் தொங்கும் ஆடுகளை கொல்லக்கூடாது என்று ஏன் சொல்வதில்லை. ஏனென்றால் மிருகவதையை தடுக்கும் அமைப்பின் பலர் மட்டன் பிரியாணியை சாப்பிட்டுவிட்டே போராட்டத்திற்கு வருகிறார்கள்.
பின் குறிப்பு: // மதுரையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த வெறி நாய்கடியால் ரேப்பிஸ் நோய் தாக்கப்பட்ட எயிட்ஸ் நோயாளி தப்பி ஓட்டம்// இது அண்மையில் படித்த செய்தி.
இந்தியா மற்றும் ஆப்ரிக்க நாடு ஒன்றிற்கு செல்லும் ஐரோப்பிய சுற்றுலா பயணிகளுக்கு அந்தந்த ஐரோப்பிய நாடுகள் விடுத்த எச்சரிக்கை என்னவென்றால் ”தெருநாய்கள் அதிகம் ஜாக்கிருதை”
ரேப்பிஸ் நோய் தாக்கினால் மரணம் நிச்சயம்
வெறி நாய் கடிக்கு அரசு மருத்துவ மனையில் போதிய மருந்துகள் கையிருப்பில் இருப்பதில்லை. தனியார் மருத்துவ மனையில் வெறி நாய் கடிக்கு போடும் ஊசி மருந்தின் விலை சில ஆயிரங்கள்
தெருவில் நாய்களை சுதந்திரமாக திரிய விடும் நாய் உரிமையாளர்கள் எப்போதும் கூறும் ஒரு செய்தி ” எங்கள் நாய் காடிக்காது”
பணிவன்புடன்
பெருமாள்
கரூர்
இதற்கு இன்றுவரை எல்லோரும் ஒத்துக்கொள்ளும்படியான பதில் கிடைக்கவில்லை என்றே தோன்றுகிறது. மனதில் நெருடும்படியான உயிர்க்கொலையை (அது அவரவர்கள் மனக் கடினத்தைப் பொறுத்ததே) . வியாத கீதையின் குரல் உயிர்க்கொலை புரியும் ஒருவனுடயதே. பொதுவாகப் பேசப்போனால் மனிதன் கூட உயர்நிலைப்பட்ட மிருகம்தான். அவனிடமும் மிருக தன்மை உள்ளது. அது இன்னும் பரிணாம வளர்ச்சியில் இன்னும் மேலோங்க வேண்டும். அது வரையில் தன் இரைக்காக தன்னை விட பலவீனமான உயிரை அடித்து உண்ணும் மிருக குணத்திலிருந்து மனிதன் அப்படியொன்றும் மகா பெரிய உன்னத அளவை எட்டி விடவில்லை என்றே தோன்றுகிறது. (வலது காலால் இடது திசையில் – எதிர் கடிகார திசையில் வட்டமிட்டுக்கொண்டே வலது கையால் வலது திசையாக – கடிகார திசையில் – வட்டமிட முடிகிறதா என்று பாருங்கள்? முடியாது. ) நான்கு கால் மிருக அடிப்படையின் ஒத்திசைவுத்தனம் இன்னும் நம்மில் இருக்கிறது. ஆனால் வலியைப்பற்றிய வலி அவனுக்கு தெரிந்திருக்கும்போது கொலை செய்ய யோசிக்கிறான். நீங்கள் சொல்வது போல உயிர்களிலும் பேதம் இருக்கிறதே. உணவுப்ப் பழக்கத்தின் மரபு மற்றும் தேவைகளின் தீவிரம் கூட காரணியாகிறது. கொல்கத்தாவில் மீன் அசைவ வகை இல்லை என்கிறார்கள். மனிதனின் சுவை உணர்வுதான் அவனுக்கு மேலான அதிகாரத்தில் இருக்கிறது. இது பற்றி கொஞ்சம் அறிந்துகொண்டு உங்களோட பதிவு செய்ய விருப்பம்.
அண்ணல் ஒரு சம்பவம் என் மனதில் அழுத்தமாக படிந்தது. என்னுடைய மகன் – அப்போது பத்து பதினொரு வயதிருக்கும் – இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோடு – எதிரே ஒரு ஆட்டை மாலையிட்டு மேளம் அடித்துக்கொண்டு ஊர்வலம் வந்தனர் – அப்போது அவன் அந்த ஆட்டை பார்த்தபடியே – பாவம் அந்த ஆடு என்றன். நான் அது சில வழக்கத்தின் முறைகள். நம்பிக்கை சார்ந்த விஷயம் என்றேன். கூட்டம் எங்களை தாண்டி போய் விட்டது. அப்போது சொன்னான் – ஆடு வெட்டப்படுவது குறித்து கூட இல்லை – அதனை சிறிது முதல் வளர்த்து அதனை கொண்டாடி தான் ஏதோ மேய்ச்சலுக்கோ எங்கோ போகிறோம் என்று நினைத்துக்கொண்டு அது போகிறது. அதன் நம்பிக்கையை கொலை செய்கிறார்களே அதுதான் பாவமாக இருக்கிறது என்று சொன்னால். நான் திகைத்தேன். எனக்கு நிறைய திகைப்புகள் உண்டு இதுமாதிரியாக.
Ramesh Kalyan
Read as:
1) மனதில் நெருடும்படியான உயிர்க்கொலையை செய்வதற்குத்தான் மனிதனுக்குத் தயக்கம் (அது அவரவர்கள் மனக் கடினத்தைப் பொறுத்ததே) .
2) கடைசி பத்தி ‘அண்ணல்’ என்பது ‘ஆனால்’ என்றிருக்க வேண்டும்
அசைவம் சாப்பிடுவது பாவம் என்று சொல்லும் பலர், அதைவிட மகா பாவமான லஞ்சம் வாங்குவது, லஞ்சம் கொடுப்பது போன்ற தேசதுரோகத்தை கொஞ்சம் கூட குற்றவுணர்ச்சியில்லாமல் செய்கின்றனர். எவன் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்று வாழ்கின்றனர். வடநாட்டில் போய்ப் பார்த்தால் தெரியும், “நான் சுத்த சைவம்” என்பான், புகையிலையைக் குதப்பிவிட்டு கண்ணுக்குத்தெரிந்த இடத்தில் “புளிச்சு” என்று துப்புவான். இவனெல்லாம் சைவம் சாப்பிடுவதால் இவனது பாவச்சுமை குறைந்தா போகப்போகிறது ?
நாம் எதை முதன்மைப் படுத்துகிறோம் என்ற விவஸ்தை நமக்கு வேண்டும்.
உணவுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் சக மனிதனுடன் நாமும் வாழவேண்டிய சமூகத்துக்குக் கொடுக்கவேண்டாமா ? இப்படி சமூக அக்கறையில்லாத மிருகங்கள் சைவமாக இருந்தாலென்ன, அசைவமாக இருந்தாலென்னா ? சக மனிதனையே மதிக்காதவன் மிருகத்துக்கு என்ன மதிப்பு கொடுத்துவிட முடியும் ? ஆனால், அசைவம் சாப்பிடுபவனைப்பார்த்து அவர்கள் விடும் அலப்பரை அநியாயத்திலும் அநியாயம்.
இலவச டிவி, வேட்டி வாங்கிக்கொண்டு போட்ட ஓட்டிற்கு காசும் வாங்கிக்கொண்டு திரும்பி வரும்போது மறக்காமல் இலவசமாகக் கிடைக்கும் இந்த பெல்ட்டையும் வாங்கிக்கொண்டு வரலாம் என்றிருக்கிறேன். திரும்பி வரும்போது நான் சொல்ல வேண்டியது என்ன?
அ. புத்தம் சரணம் கச்சாமி (but, please don’t touch me)
ஆ. உமது ராச்சியம் பூலோகத்திலும் ஏற்படுவதாக
இ. ஹே ராம் !!
கட்டுரைக்கு நன்றி. கோயிலில் கிடா வெட்டி, அசைவ உணவு உண்னும் குடும்பத்தில் பிறந்த நான், ஆன்மீக, ஜீவகாருண்ய காரணிகளுக்காக, கடந்த ஒன்பது ஆண்டுகளாக கடும் சைவம். முட்டை கூட கிடையாது.
குமுதம் ஜோதிடம் இதழின் ஆசிரியர், உயர் திரு A.M.ராஜகோபாலன் அவர்களை மானசீக குருவாக கருதுகிறேன். அவரின் எழுத்தை படித்தே சைவமாக மாறினேன். அவரை ஒரு மகானாக கருதுகிறேன். (ஆனால் அவரின் சில கருத்துக்கள் பழமைவாக இந்துத்தவாதி போல இருக்கும் தான்).
ஜீவகாருண்யம், மனிதனேயம் மற்றும் அறத்தை பற்றிய அவரின் போதனைகள் மற்றும் கேள்வி பதில்கள் ஒரு counselling போல இருக்கும்..
எனக்கு தெரிந்தவரை எல்லா இறப்புக்கும் பொதுவானது வலி . தாவரங்களுக்கு முளை இல்லாததால் அவைகளுக்கு வலி இல்லை . மற்றவற்றிற்கு முளை வலி இன்ன்றி இறப்பதற்கு வழியிள்ளதாதால் அது கொடுமையாகிறது.
முரளி
சிங்கை
போர் வீரர்கள் எல்லாம் பருப்பும் கீரையும் சாப்பிட்டுவிட்டு சண்டைக்குப் போவார்களா ? இல்லை, இமய மலை உச்சியில் மைனஸ் நாற்பது டிகிரி குளிரில் கீரைக்கூட்டு சாப்பிட்டுவிட்டு உயிர்வாழ முடியுமா ?