எனது லேட்டஸ்ட் நூலான இந்த விநாடி வெளிவந்துவிட்டது. நண்பர் காரைக்குடி நாராயணனின் அன்பு வேண்டுகோளுக்கு மதிப்புக் கொடுத்து அவரது அழகப்பர் பதிப்பகத்தின் வெளியீடாக இந்த நூல் வருகிறது. அட்டைப்படத்தை நண்பரும் கவிஞருமான யாழன் ஆதி செய்திருக்கிறார். என் நிழல்படம் முன் அட்டையிலேயே வரவேண்டும் என்பது நாராயணனின் விருப்பம். அதற்கேற்றவாரும் அட்டை வடிவமைக்கப்பட்டுள்ளது .
நூல் அழகாக வெளிவந்துள்ளது. கிட்டத்தட்ட 180க்கும் மேற்பட்ட பக்கங்கள். விலை ரூ. 80/- இன்னும் பிரதிகள் கைக்கு வரவில்லை. ஆனால் திங்கள் கிழமையெல்லாம் சென்னை புத்தகக் கண்காட்சிக்குச் சென்றுவிடும்.
அந்த நூலுக்கு நான் கொடுத்த முன்னுரையை இங்கே தருகிறேன். அது இந்த நூலைப் புரிந்து கொள்ள வழிவகுக்கும். இந்த நூலுக்கு் நடிகர் சிவகுமார், நடிகர் ராஜேஷ், நண்பர்-இயக்குனர் அகத்தியன் ஆகியோர் வாழ்த்துரை, அணிந்துரை, மதிப்புரை வழங்கியிருப்பது கூடுதல் சந்தோஷம்.
என்னுரை
எல்லாம் புகழும் இறைவனுக்கே.
சில ஆண்டுகளுக்கு முன்பு அடுத்த விநாடி என்ற தலைப்பில் நான் ஒரு புத்தகம் எழுதினேன். அது ஆயிரக்கணக்கான வாசகர்களைப் பெற்றது. ரொம்ப சீரியஸாக இசபெல் ஆஸ்பத்திரியில் இருந்த தன் மகளுக்காக அடுத்த விநாடியில் நான் சொல்லியிருந்த பயிற்சிகளையெல்லாம் தான் செய்ததனால் தன் மகள் உயிர் பிழைத்தாள் என்று ஒரு ஆசிரியை அந்தப் புத்தத்தை வெளியிட்ட கிழக்கு பதிப்பகத்தாரிடம் சொன்னார். அந்த ஆடியோ கோப்பை எனக்கு அவர்கள் போட்டுக் காட்டினர்.
நான் சென்னை பெசன்ட் நகரில் இருந்தபோது ஒரு நாள் ஒரு ஆட்டோ ஓட்டுனர் வந்தார். நாகூர் ரூமி யார் என்று கேட்டு என் காலில் விழுந்தார். ரொம்ப கூச்சமாகவும் சங்கடமாகவும் எனக்கு இருந்தது. கொஞ்சநாள் அவருக்கு மனநிலை பிறழ்வு இருந்ததாகவும் (அவர் காலில் விழுந்ததற்குக் காரணம் அதுவல்ல), ஆஸ்பத்திரியில் வைத்துப் பார்த்தும் குணமடையவில்லை எனவும், ஆனால் அடுத்த விநாடி படித்த பிறகு தெளிவடைந்து விட்டதாகவும் கூறினார்.
தொலைபேசியிலும், அலைபேசியிலும், மின்னஞ்சல் மூலமாகவும் எண்ணிக்கையில் அடங்காதவர்கள் என்னோடு தொடர்பு கொண்டு அந்தப் புத்தகம் படித்ததனால் தங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட நன்மைகளை சொல்லினர், எழுதினர்.
இவ்வளவு நன்மைகளை அந்த ஒரு புத்தகம் ஏற்படுத்தியதில் வியப்பே இல்லை. காரணம் அது என் புத்தகமே அல்ல! இன்னும் சொல்லப் போனால் அது யாருடைய புத்தகமும் அல்ல! அது என் குருநாதர் நாகூர் ஹஸ்ரத் மாமா அப்துல் வஹ்ஹாப் பாகவி அவர்கள் எனக்கு எடுத்துக்காட்டிய வழி, வாழ்முறை அது. அவர்கள் பல ஆண்டுகளாக எனக்கு எடுத்துச் சொன்ன விஷயங்களிலிருந்து சில உண்மைகளை மட்டும் நான் அதில் சொல்லியுள்ளேன். ஆங்காங்கே சில வரலாற்று நிகழ்வுகளையும், நகைச்சுவைக் கதைகளையும் சேர்த்தது மட்டும்தான் என் பங்கு. எனவே அது என் புத்தகமல்ல. அது என் வாழ்க்கை. நான் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை.
இப்போது இந்த புத்தகமும் அதைப் போன்றதுதான். இந்த நூலில் உள்ள விஷயங்களும் என் குருநாதர் சொன்னவைதான். சொன்ன விதம் மட்டுமே எனக்குச் சொந்தம். சொல்லப்போனால் உண்மைகளுக்கு யாருமே சொந்தம் கொண்டாட முடியாது. அவை எல்லோருக்குமானவை. ஒன்று மட்டும் நிச்சயமாகச் சொல்லலாம். இது பல புத்தகங்களைப் பார்த்து எழுதப்பட்ட சுயமுன்னேற்றப் புத்தகமல்ல. என் பாணியில் என் வாழ்க்கையை நான் உங்களுக்கு எடுத்துக் காட்டும் முயற்சியே இது. எனவே எனக்கு என் குருவின் வழிகாட்டுதல் எப்படி பயன் கொடுத்துக் கொண்டிருக்கிறதோ, அப்படியே உங்களுக்கும் கொடுக்கும்.
ஆண்கள், பெண்கள், பத்து வயதான குழந்தைகள் என்று யார் வேண்டுமானாலும் இந்த நூலில் உள்ள பயிற்சிகளை மேற்கொள்ளலாம். முடிந்தவரை முக்கியமான அத்தியாயங்களின் முடிவிலேயே பயிற்சிகளையும் கொடுத்துள்ளேன். அடுத்த விநாடி நூலை நீங்கள் இதுவரை படிக்காவிட்டாலும் இதைப்படிக்கலாம். அதைப் படித்திருந்தாலும் படிக்கலாம். அதில் சொல்லப்படாத பல விஷயங்கள் இதில் சொல்லப்பட்டுள்ளன. தவிர்க்க முடியாமல் சில இடங்களில் கூறியது கூறல் இருக்கலாம். ஆனால் கூறவேண்டியதைக் கூறித்தானே ஆகவேண்டும்?!
வெற்றி, சந்தோஷம் – இந்த உலகத்திலுள்ள எல்லா மனிதர்களுடைய ஆசைகளையும் இந்த இரண்டு வார்த்தைகளில் அடக்கிவிடலாம். வெற்றியையும் சந்தோஷத்தையும் நாம் அடைவதற்கு வழிகாட்டும் பல நூல்கள் உள்ளன. பலவிதமான உத்திகளை அவை உங்களுக்கு சொல்லிக் கொடுக்கலாம். ஆனால் நீங்கள் யார் என்று தெரிந்து கொள்வதுதான் அதற்குத் தலைசிறந்த வழி. எனவே உங்களைப் பற்றி, உங்களுக்கே தெரியாத உண்மைகளை இந்த நூல் உங்களுக்குச் சொல்லும். படித்துப் பாருங்கள். எனக்கு எழுதுங்கள்.
இந்த நூலை அழகாக வெளியிட்ட அழகப்பர் பதிப்பகத்துக்கும், நண்பர் காரைக்குடி நாராயணன் அவர்களுக்கும், அழகாக அட்டைப் படம் வடிவமைத்த நண்பர் கவிஞர் யாழன் ஆதிக்கும் வாழ்த்துரை, மதிப்புரை வழங்கி என்னை கௌரவித்த சகோதரர்கள் திரு சிவகுமார், திரு ராஜேஷ், நண்பர் திரு அகத்தியன் அவர்களுக்கும், திரு என் நன்றிகள்.
நாகூர் ரூமி
டிசம்பர், 11, 2010.
ஆம்பூர்.
வலைத்தளம்: www.nagorerumi.com
மின்னஞ்சல்: ruminagore@gmail.com
சமர்ப்பணம்
என் வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் என் கூடவே இருக்கும் என் குருநாதர் ஹஸ்ரத் மாமா அவர்களுக்கு.
இந்த நூலை விரும்புவோர்
ரவி புக்ஸ் — ஸ்டால் எண் 41
பூங்கொடி பதிப்பகம் — ஸ்டால் எண் 87
முல்லை பதிப்பகம் — ஸ்டால் எண் 95
எல்கேஎம் பப்ளிகேஷன் — ஸ்டால் எண் 261, 262-ல் பெற்றுக் கொள்ளலாம்.
கிழக்கிலும், அம்ருதாவிலும் இந்த நூலை வைப்பதற்கு பேசிக்கொண்டிருக்கிறேன். அனுமதி கிடைத்தவுடன் அங்கும் இந்நூல் கிடைக்கும்.
புத்தகக் கண்காட்சிக்குப் போக முடியாதவர்கள் காரைக்குடி நாராணனைதொலைபேசி யில் / அலைபேசியில் அழைத்தால் உடனே நூல் கூரியரில் உங்கள் வீட்டுக்கே அனுப்பப்படும்.
அவர் அலைபேசி எண்: 94434 92733
No comments:
Post a Comment