Tuesday, January 18, 2011

துறவு என்பது முதிர்ச்சி அடைந்த ஒரு மன நிலை


  • இயற்கையுடன் மனிதன் நடத்தும் இறுதிப் போராட்டமே துறவு.
இல்லறத்தவரின் மன நிலை வேறு. அவர்களின் சிந்தனைத் தளங்கள் வேறு. இல்லறத்தவர்கள் மனைவியை அல்லது காதலியை காணும் போது அவர்களுக்கு காதல் உணர்வு வருகிறது, அதை அவர்கள் தடுக்க விரும்பவில்லை, அவர்களால் தடுக்க முடியவும் இல்லை. அதே போலத்தானே துறவிக்கும் இருக்கும் என சில பரந்த உள்ளம் படைத்தவர்கள் முடிவு கட்டி விடுகின்றனர். எனவே தான் “விடுய்யா … பாவம்…. நமக்கு ஆசை இல்லையா…. அதைப் போல அவனுக்கும் ஆசை இருக்குமையா” என, நான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்னும் வகையிலே கருத்து தெரிவிக்கின்றனர்.
ஆனால் ஒருவன் முதலில் எதற்காக துறவு நிலையை மேற்கொள்ள வேண்டும் என எண்ணிப் பார்க்க வேண்டும். புத்தர் எதற்க்காக துறவு நிலையை மேற்கொண்டார். ஒரு நாள் அவர் ஒரு மிக வயதான மனிதர், ஒரு பெரு நோயாளி , ஒரு பிணம் ஆகியவற்றிக் கொண்டார். துன்பங்களில் இருந்து தன்னைக் காத்துக் கொள்ள முடியாத நிலையிலேயே மனிதன் இருப்பதாய் அவர் உணர்ந்து கொண்டு விட்டார். துன்பம் இல்லாத நிலையை அடைய அவர் உறுதியான முடிவு எடுத்து விட்டார். அந்த துன்பம் இல்லாத நிலையை, துன்பங்களில் இருந்து விடுபட்ட நிலையை அடைவதை தவிர வேறு எதுவும் தனக்கு அவசியமல்ல , முக்கியமல்ல என்பதை புத்தர் நன்றாகப் புரிந்து கொண்டு விட்டார். அன்பு மனைவியை, அருமைக் குழந்தையை விட்டு விட்டு துறவு பூண்டு காட்டுக்குப் போனார்.
இந்த்ரியார்த்தேஷு வைராக்கிய – மன அஹங்கார எவ ச ஜன்ம மிருத்யு ஜரா வியாதி சுக துக்க தோஷானு அனுதர்ஷன (கீதை (13-8))
பிறப்பு இறப்பு மூப்பு சாக்காடு உள்ள வாழ்க்கையை உணர்ந்து புலன் இன்பங்களை விட்டு வைராக்கிய மன நிலை அடைபவன்!என்கிறது கீதை!
இந்த உலகத்தில் நாம் இன்பம் என்று கருதும் ஒவ்வொரு பொருளும், உண்மையில் நாம் சிக்கிக் கொண்ட கண்ணி வலையே (trap) என்பதே துறவியின் மன நிலை .
யாதனின் யாதனின் நீக்கியான் நோதல்
அதனின் அதனின் இலன் (குறள் - 341, அத்தியாயம் - துறவு)
ஒருவன் எந்தப் பொருளிலிருந்து எந்தப் பொருளிலிருந்து பற்று நீங்கியவனாக இருக்கிறானோ, அந்தந்தப் பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை என்கிறார் வள்ளுவர்.
தன சவுக்கியமு தா நெறுகக யொருலகு தகு போதன சுகமா? கனமகு புலி கோ ரூப மைதே தியாகராஜனுதன சிசுபாலு கல்குனோ ராமா நீ யெட
இந்த உலகத்தவர் சிலர் செல்வம் மற்றும் சுகங்களை தேடியவாறே வுபதேசமும் செய்கின்றனர். பசுத்தோல் போர்த்திய புலி பால் குடுக்குமா என்கிறார் தியாகராஜர்!
இயற்கையிடம் வாங்கிய அடி போதும், இயற்கையே இனி நீ குடுக்கும் இன்பமும் வேண்டாம், துன்பமும் வேண்டாம், உன்னிடம் அடிமையாக வாழாமல் விடுதலை பெற்று சுதந்திரம் அடைவேன் என, வாங்கிய அடியின் வலியில், வேதனையின் மன உறுதி பெற்று ஒருவன் மேற்கொள்வதே துறவு."

No comments:

Post a Comment