Saturday, March 5, 2011

Song of Sparrows



மனித நேயத்தையும் மனித உறவுகளின் நெகிழ்ச்சியான கவித்துவ வாழ்வியலை கொண்டவை ஈரானிய திரைப்பட‌ங்கள்.

உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை ஈரானிய சினிமாவின் பக்கம் ஈர்த்த மஜித் மஜிதி என் மானசீக இயக்குநர். அற்புத படைப்பாளி. அவருடைய அனைத்து திரைப்படங்களிலும் அடிப்படை அன்பு மட்டுமே. மற்றும் இவரது ஒவ்வொரு திரைபடங்களில் ஒவ்வொரு காட்சியும் ஒரு ஓவியம் போல விரிகிறது.

தெஹரைனிலுள்ள தீக்கோழி பண்ணையில் பணிபுரிகிறான் கறீம். வாழ்க்கை பிரச்சனையின்றி போகும்போது, பண்ணையில் இருந்து ஒரு கோழி காணாமல் போனதால் கறீம் வேலையில் இருந்து வெளியேற்றப்படுகிறான்.

இதைத் தொடர்ந்து புதிய வேலையில் சேர முற்படுகிறான். காது கேளாத மகளின் காது கேட்கும் இயந்திரம் வீட்டின் அருகே இருக்கும் ஒரு பாழும் கிணற்றுக்குள் விழுந்து செயலிழக்கிறது. அதை ரிப்பேர் செய்யும் பொருட்டும் புது வேலை தேடவும் நகரத்துக்குச் செல்கிறான். அதன்பிறகு கரீமின் வாழ்க்கையில் நடந்த பல்வேறு மாற்றங்களே உணர்வு பூர்வமான படைப்பு.

நகரத்துக்கு போகும் கறீமை மோட்டார் சைக்கிளில் ஆட்களை ஏற்றி செல்பவர் என தவறாக நினைத்து ஏறி கொள்கின்றனர். இதே ஒரு நல்ல வருமானம் வரும் தொழிலாக எண்ணி அதையே தொடர்கிறான் கறீம்.

பொருட்களை ஏற்றி செல்லும் போது ஒரு நாள் ஒரு குளிர் சாதன பெட்டியை உரிய இடத்தில் சேற்க இயலாமல் வீட்டிற்கு கொண்டு வந்து விடுகிறான். புதிதாக வீட்டிற்கு வாங்கி வந்ததாக எண்ணி குடும்பமே மகிழ்ச்சி அடைகிறது. ஆனால் நேர்மை தவறாத கறீம் மறுநாள் அந்த கம்பெனியிலேயே ஒப்படைக்க அங்குள்ள மேலாளர் கறீமின் அளவற்ற நேர்மையை பாராட்டி தொடர்ந்து வேலை தருவாதாக கூறுகிறார். வருமானமும் பெறுகிறது.

நகரத்தில் உடைந்த கட்டிடங்களிலிருந்து வீண் என தூக்கி எறிய வைக்கப்பட்டிருக்கும் பல்வேறு பொருட்களை எல்லாம குருவி போல சேகரித்து வீட்டிற்கு உபயோகமானதாகவும் மாற்றவும் செய்கிறான்.

வீட்டின் பாழடைந்த கிணற்றை தூறு எடுத்து அதில் வண்ண மீன்கள் வளர்த்து விற்பனை செய்தால் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்று கூறும் கறீம் சிறிய மகனும் அதற்காக பெரும் முயற்ச்சி மேற் கொள்கிறான். ஆனால் அந்த எண்ணமும் ஈடேறாமல் வாங்கி வந்த மீன் குட்டிகள் தொட்டி உடைந்து வீணாகின்றன.

திடீரென எதிர் பாரத விபத்தில் கறீமுக்கு கால் எலும்பு முறிந்து விடுகிறது. குடும்ப சூழலையும் குழந்தைகளின் எதிர்காலத்தையும் எண்ணி சொல்ல முடியாத சோகத்தில் தவிக்கிறான். உறவினர் ஒருவரின் உதவியால் மருத்துவமனை சென்று சிறிது சிறிதாக உடல் நலமும் தேற முற்படுகிறான்.

அளவற்ற சோதனைகளின் முடிவாக காணாமல் போன தீக்கோழி கிடைத்துவிடவே மீண்டும் வேலையில் சேருமாறு செய்தி வர ஆனந்தமடைவது கறீம் மட்டுமல்ல திரைப்படம் பார்க்கும் நாமும் தான்.

ஒரு குடும்பம் வருமானம் ஈட்டவும் அதற்கு ஒவ்வொருவரும் நேர்மையுடனும் உற்சாகத்துடனும் செய்யும் முயற்ச்சியும் திரைப்படம் பார்ப்வர்க்ளையும் பற்றி கொள்ளும் விதத்தில் படமாக்கியுள்ள மஜித் மஜிதியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். வாழ்விய்லை இப்படியெல்லாம் திரைப்படமாக்க இயலுமா என எண்ணி வியந்து போனேன்.

காது கேளாத மகளுக்கு ஒரு இயந்திரம் வாங்க தந்தை படும் பாடுகளும் தந்தை நிலை அறிந்து மகள் காது கேட்பது போல பாவனை செய்வதும் திரைப்படத்தை பார்பவர்களின் கண்களில் கண்ணீரை வர வைக்கும். அது வார்த்தைகளில் அடங்காத காட்சிகள்.

அத்துணை சோகத்திலும் சொல்ல முடியாத வேதனையிலும் கறீம் தன் மனையின் மீது காட்டும் அளவற்ற காதலுடனும் குழந்தைகள் மீது தீராத அன்புடனும் நேர்மையுடன் வாழ்வது அவ்வளவு இயல்பு.

தாயாகித் தந்தையுமாய் தாங்குபவன் என்றும், தாயுமானவன் என்றும், இப்படி எல்லா இடத்திலும் தாயை முன்வைத்துத் தகப்பனைச் சொன்னாலும் - தாயன்புக்குச் சற்றும் குறைந்ததல்ல, தந்தையின் அன்பு, பாசம், பிரியம். ஒரு தகப்பனின் பாசத்தை விளக்கும் வண்ணம் அன்று "காவல்காரன்' படத்தில்
காலத்தை வென்ற நம் அருமை கவியரசர் கண்ணதாசன்:

"குழந்தை பாரம் உனக்கல்லவோ...

குடும்ப பாரம் எனக்கல்லவோ...

கொடியிடையின் பாரம் எல்லாம்பத்து மாதக்கணக்கல்லவோ...

மனைவியையும் குழந்தையையும்
ஒருவனாகச் சுமக்கின்றேன்
சுமப்பதுதான் சுகம் என்று மனதுக்குள்ளே ரசிக்கின்றேன்

என்ற வரிகளை எல்லாத் தந்தையர்களும் முற்றாக ஆமோதிப்பார்கள்.

எத்துணை உண்மையான வரிகள் என்பதிற்கு சிறுகதைக்கு‌ரிய கச்சிதத்தையும், கவிதைக்கு‌ரிய கவித்துவத்தையும் ம‌ஜித் ம‌ஜிதியின் இத்திரைப்படம் ஒரு இலக்கணம்.

உலக அரங்கில் பல்வேறு பாராட்டுதல்களைப் பெற்றதுடன் நடிப்பு, இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் & இயக்கம் என பல விருதுகளையும் வாரி குவித்துள்ளது.

கறீமாக நடித்த Mohammad Amir Naji க்கு பல விருதுகளை பெற்று தந்துள்ளது. அண்மையில் நடந்து முடிந்த கோவா திரைப்பட விழாவில் இறுதி நாளில் திரையிடப்பட்டு கெளரவப்படுத்தப்பட்டது. அத்துடன், ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதும் மற்றொரு சிறப்பு.

சந்தர்ப்பம் கிடைத்தால் கண்டிப்பாக பாருங்கள்.
Please don't miss.
நாடு : ஈரான்

வெளியான ஆண்டு : 2008

இயக்குனர் : மஜித் மஜிதி

நேர அளவு : 96 நிமிடம்

No comments:

Post a Comment