Saturday, March 5, 2011

பசித்துயர்


கி.ராஜநாராயணன் தொகுத்த நாட்டார் கதைத் தொகுப்பில் பசி என்ற ஒரு கதை உள்ளது. இக்கதை மிக முக்கியமானதொரு மரபுக்கதை
தீராதபசியில் உணவு தேடி அலைகிறாள் ஒரு பெண், அவளுக்கு ஏழு ஆண்பிள்ளைகள் இருந்தும் எவரும் அவளைக் கவனிக்கவில்லை, எட்டாவதாக பிறந்த மகளுடன் அவள் சாப்பிட ஏதாவது கிடைக்காதா என்று தேடுகிறாள்.
ஊரில் எவரும் அவளுக்கு உணவு தரவில்லை , பசியை அடக்கிக் கொள்ள குளத்து தண்ணீரையாவது குடிக்கலாம் என்று போனால் குளம் தண்ணீர் தர மறுத்து தண்ணீரைப் பெரிய பாறையாக உறைய வைத்துவிடுகிறது.
சுடுமணலில் நடந்து அவள் பனை மரத்திடம் சென்று பசிக்கு ஒரேயொரு நொங்கு கேட்கிறாள்,  பனையும் தர மறுக்கிறது. இப்படி இயற்கை கூட உணவு தர மறுக்கிறது, பசி தாளமுடியாத அப்பெண்  ஆற்று மணலில்  நடக்கையில் கால் சூடு பொறுக்க முடியாமல் தனது பெண்பிள்ளையை மணலில் போட்டு அதன் மீது ஏறி நின்று தனது ஆற்றாமையைப்  புலம்புகிறாள், பின்பு இருவரும் கற்சிலையாகி விடுகின்றனர்.
பசியில் ஒரு பெண் தனது மகளை மணலில் போட்டு அதன் மீது ஏறி நின்று புலம்பும் காட்சி மனதைத் துவளச் செய்கிறது, அந்தப் படிமம் கிராமவாழ்வின் உச்சபட்ச புறக்கணிப்பின் சித்திரமாக உள்ளது, பிழைப்பிற்காக ஊர் விட்டு ஊர் போன மனிதர்களின் பசித்துயரை அது வலிமையாக காட்சிப்படுத்துகிறது
தேவதை கதைகள் எழுதும் ஹான்ஸ் கிரிஸ்டியன் ஆண்டர்சன் ஒரு கதை எழுதியிருக்கிறார, இதுவும் நார்வே நாட்டின் தேவதை கதை மரபில் உருவானது தான்.
இக்கதையில் தாய் வீட்டில் இல்லாத நேரத்தில் மரணதேவன் வீடு புகுந்து பிள்ளையின் உயிரைப் பறித்து கொண்டு போய்விடுகிறான், அவனைத் துரத்திக் கொண்டு பின்னாடியே ஒடுகிறாள் தாய்
வழியில் ஒரு முட்புதர் தெரிகிறது, அதனிடம் மரணதேவன் எந்தப் பக்கம் போகிறான் என்று  கேட்கிறாள் தாய், அதற்கு முட்புதர் இதுவரை தன்னை எவரும் ஆசையோடு கட்டிப்பிடித்ததேயில்லை, நீ அப்படி கட்டி அணைத்தால் வழி சொல்கிறேன் என்கிறது,
அவள் பிள்ளை மீதான பாசத்தில் முள்செடியைக் கட்டி அணைக்கிறாள், உடலில் முட்கள் குத்தி ரத்தம் சொட்டுகிறது, அதைக் கண்டு நெகிழ்ந்து போன முட்செடி வழி காட்டுகிறது,
அங்கிருந்து மரணதேவனைத் தேடி ஒடுகிறாள், வழியில் ஒரு குளம் உள்ளது, அது நான் ஒரு முறையாவது உலகைக் காண வேண்டும், உன் கண்களை தந்தால் வழி சொல்கிறேன் என்கிறது,
அந்த்த் தாய் தன் கண்களைத் தோண்டி குளத்திடம் தருகிறாள். குளம் வழி காட்டுகிறது, இப்படியாக உடல் உறுப்புகளை இழந்து அவள் மரண தேவன் வீட்டிற்கு போய்ச் சேர்கிறாள், அவன் உன் குழந்தையின் உயிர் இங்குள்ள தோட்டத்தில் ஒரு செடியாக உள்ளது, அதன் இதயத் துடிப்பை நீ உணர முடிந்தால் தேடி எடுத்துக் கொள் என்கிறான்
பார்வையில்லாத அந்தத் தாய் தோட்டத்திற்குள் போகிறாள், ஆயிரக்கணக்கான குழந்தைகளின் உயிர்கள் செடிகளாக மாறியிருக்கின்றன,  இதயவொலி தோட்டமெங்கும் கேட்கிறது
அதில் அவள் தன் குழந்தையின் இதயவொலியை சரியாக அடையாளம்  கண்டு கட்டிக் கொள்கிறாள், அவளது பாசத்தைக் கண்டு நெகிழ்ந்து போன மரணதேவன் அவளது மகனை அவளிடமே ஒப்படைக்கிறான்,
குளம் உலகைக் காண வேண்டுமென கண்கள் கேட்கிறது, தாய் தன் கண்களைத் தருகிறாள் என்ற காட்சிப் படிமம் படிக்கையில் மனதை அதிச் செய்கிறது, இரண்டு கதைகளும் மரபான கதை சொல்லுதலின் உன்னதங்கள்,
இன்றுள்ள புதிய எழுத்தாளர்கள் பின்பற்ற வேண்டிய கதைசொல்லும் முறைகள் மரபில் நிறையவே இருக்கின்றன, இன்னமும் அதை முழுமையாக நாம் அறிந்து கொள்ளவும் கொண்டாடவும் இல்லை என்பதே நிஜம்.
-எஸ். ராமகிருஷ்ணன்

No comments:

Post a Comment