Tuesday, March 1, 2011

ஐந்தறிவுக்குள் இருக்கும் விசுவாசம்


மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்லும் நாய் : ஐந்தறிவுக்குள் இருக்கும் விசுவாசம்

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 19,2011,22:03 IST



சேலம் : "நன்றி மறப்பது மனிதர் குணம்; நன்றியை நினைப்பது நாய்களின் குணம்' என, உண்மையை உலகத்துக்கு எடுத்துக் கூறும் வகையில், எஜமானின் மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்று, வீட்டுக்கு அழைத்து வரும் அபூர்வ பணியை மேற்கொள்கிறது, சேலத்தைச் சேர்ந்த மாது என்பவரின் பாசக்கார, "மொட்டுவால்' நாய். ஐந்தறிவுக்குள் இருக்கும் உண்மை, விசுவாசம், அங்கிருப்போரை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது.

"கோழியை பாரு; காலையில் விழிக்கும். குருவியை பாரு; சோம்பலை பழிக்கும். காக்கையை பாரு; கூடிப் பிழைக்கும். நம்மையும் பாரு; நாடே சிரிக்கும்' என, மனிதர்களின் மன நிலையைப் பற்றி அப்போதே கவிஞர் ஒருவர், வரிகளால் தாக்கியிருக்கிறார். பறவை, விலங்குகள் எப்போதும் மனிதனுக்கு உதவியாக தான் இருக்கும். நாய்களை வீட்டு பாதுகாப்புக்கு வைத்துக் கொள்வோர் ஏராளம். பாதுகாப்புக்கு மட்டுமின்றி, நன்றியையும் அவர்களுக்கு எடுத்துரைக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்று, திரும்ப வீட்டுக்கு அழைத்து வரும் வரை, எஜமானுக்கு விசுவாசமாக இருந்து வருகிறது நாய் ஒன்று. சேலம் பேர்லண்ட்ஸ் காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் மாது. பால் உற்பத்தி தொழில் செய்து, பிழைப்பு நடத்தி வருகிறார். ஐந்து கறவை மாடுகள்,10 ஆடுகள், ஆறு கோழிகள், மூன்று கன்றுகள், இரண்டு நாய்களையும் வளர்த்து வருகிறார். மனைவி, மகன்களுக்கு அடுத்தபடியாக, அவருடைய உலகம், இந்த வாயில்லா ஜீவன்கள் தான்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன், குட்டியாக கொண்டு வந்த நாயை, பாசத்துடன் இன்றளவும் வளர்த்து வருகிறார். அவற்றுக்கு வழங்கும் உணவை, சுத்தமானதாகவும், சுகாதாரமான முறையிலும் வைத்து, ஆரோக்கியத்தை பேணுகிறார். தினமும், மாலை 4 மணிக்கு, தான் வளர்க்கும் ஐந்து மாடுகளை மேய்ச்சலுக்கு அவிழ்த்து விடுவார்.

சேலம் மாநகரின் முக்கியப் பகுதிகளில், வலம் வரும் மாடுகளை யாராவது பிடிக்க நினைத்தாலோ, தொட முயன்றாலோ, அவைகளுக்கு பாதுகாப்பாக, "மொட்டுவால்' நாய் பாய்ந்து வருகிறது. மாலையில் மேய்ச்சலுக்கு செல்லும் மாடுகள், இரவு 8 மணிக்கு தான் வீடு திரும்பும். இந்த காட்சியை தினமும் பேர்லண்ட்ஸ் பகுதியில் காணமுடியும்.
ஒரு முறை மாநகராட்சி நாய் பிடிப்பவர்கள் வலைவிரிக்க, அவர்களிடமிருந்து தப்பி வந்து எஜமானின் காலடியில் படுத்துக் கொண்டது. எஜமான் விசுவாசத்தையும், மாடுகள் மீது நாய் கொண்ட அக்கறையையும் பார்த்து, காட்டூர் பகுதி மக்கள் மகிழ்ச்சியடைகின்றனர்.

மாது குடும்பத்தினர் கூறியதாவது: காலம், காலமாக பால் உற்பத்தி தொழில் செய்து தான் பிழைத்து வருகிறோம். விவரம் தெரிந்தது முதல் கறவை மாடுகளுடன் தான் வாழ்க்கை கழிகிறது. ஐந்து மாடுகள், ஆடுகள், கோழிகள் உள்ளிட்டவை தான் சோறு போடுகின்றன. ஐந்து வருஷத்துக்கு முன், நாய் குட்டி ஒன்றை எடுத்து வந்து வளர்த்தோம்.

அதற்கு, "மொட்டுவாலன்' என, பெயரிட்டு, நாங்கள் எல்லாரும் பாசமாக பாதுகாத்து வருகிறோம். மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்வதற்கு, நான், என் பையன் கூட அதிகமாக சென்றதில்லை. தினசரி மாடுகளை அவிழ்த்து விட்டால், அந்த மாடுகளுக்கு முன்னாடியே சென்று, வீடு திரும்பும் வரை இந்த நாய் பார்த்து கொள்கிறது. அதை பிரிந்து நாங்கள் வெளியூர் சென்றாலும், எங்கள் நினைப்பெல்லாம் அந்த மொட்டுவாலன் மீது தான் இருக்கும். இவ்வாறு மாது குடும்பத்தினர் கூறினர்.

No comments:

Post a Comment