தகவல் தொழில்நுட்பம் – ஐ.டி துறை. இந்தியாவில் ஐ.டி துறையின் வளர்ச்சிஎத்தனையோ மாற்றங்களை பொருளாதார ரீதியில், சமூக ரீதியில், பெருநகரங்களின்வளர்ச்சி அடிப்படையில் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது எனலாம்.
வாரத்தில் 5 நாள் வேலை, அதிக சம்பளம், விடுமுறைக் கொண்டாட்டம், மனஅழுத்தத்தையும், சோர்வையும் போக்குவதாகக் கூறிக் கொண்டு அவ்வப்போதுசினிமா, விருந்து, விழா, கூடிக் கொண்டாடுதல் (get together) போன்றவை இந்தத் துறையில் வெகுசாதாரணமான ஒன்று.
ஆனால், ஐ.டி. நிறுவனங்களின் ஊழியர்களை மகிழ்விக்கும் நோக்கம் உண்மையிலேயே நிறைவேறுகிறதா? இதனால் ஊழியர்களுக்கு சாதகம் இருக்கிறதா? அல்லது மன அழுத்தத்தை மேலும் ஏற்படுத்துகிறதா? என்பது பற்றி இக்கட்டுரையில் பார்ப்போம்.
தனிமையை விரும்புவோர்:
சிலர் எப்போதுமே தனிமையை விரும்புவார்கள். அவர்களுக்கு நல்ல திறமை இருந்தாலும் மற்றவர்களுடன் பழகுவதற்கு மிகவும் யோசிப்பார்கள். சின்ன வயதில் நண்பர்கள் அல்லது பழகியவர்களிடம் ஏற்பட்ட ஏமாற்றம், தேவையிலாத நட்பு வேண்டாம் என்ற அறிவுரை, தன்னைப் போன்றே சிந்திப்பதற்கு யாரும் இல்லை என்ற மனப்பான்மை போன்ற ஏதாவதொரு காரணத்தால் தனிமையில் இருப்பதையே விரும்புவார்கள்.
வலிய வந்து யாராவது பேசினாலும், ஒருசில வார்த்தைகள் மட்டுமே பேசி தட்டிக்கழித்து விடுவார்கள். தனிமையில் இருப்பதே ஒருவகையான மனநோய்தான். ஆனால் அது விபரீதமான சிந்தனைகளுக்கு வழிவகுக்காதவரை பிரச்னை இல்லை.
தகவல் தொழில்நுட்பத் துறை (ஐ.டி) ஊழியர்கள் பெரும்பாலான நேரம் கணினியிலேயே நேரத்தைக் கழிக்க வேண்டியிருப்பதால், பிறருடன் கலந்து பழக வேண்டியது மிகவும் அவசியம். அலுவலகத்தில் எவருடனும் பழகாமல் இருப்பதால் அவர்களது கொண்டாட்டங்களிலும் கலந்து கொள்ள மாட்டார்கள். அதற்குப் பதிலாக உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் விடுமுறையைக் கழித்தால் உண்மையில் எவ்விதப் பிரச்னையும் உண்டாகாது.
மற்றவர்கள் சந்தோஷமாக இருக்கும்போது, தம்மால் சந்தோஷமாகக் கொண்டாட முடியவில்லையே என்று ஆதங்கப்படும்போது தான் பிரச்னை ஆரம்பிக்கிறது. அந்த மனத்தாங்கலே அவர்களுக்கு பல பிரச்சினைகளை ஏற்படுத்தி விடக்கூடும்.
இப்படி தனிமையை விரும்புவர்கள், சில நேரங்களில் தங்களுக்குத் தாங்களே பார்ட்டி வைத்துக் கொள்வார்கள். மற்றவர்கள் சந்தோஷமாக இருக்கும்போது தம்மால் மகிழ்ச்சியாகக் கொண்டாட முடியவில்லேயே என்ற எண்ணத்தில் தனியே எங்காவது சுற்றுப்பயணம் செய்வது, தனியே மது அருந்துவது, பாக்கு, கஞ்சா போன்று ஏதாவது ஒரு போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி விடுவதும் உண்டு.
சில நேரங்களில் அளவு தெரியாமல் குடித்து விட்டு, சாலையில் தள்ளாடி நடப்பது, கீழே விழுந்து அடிபடுவது, வாந்தி எடுப்பது போன்றவை ஏற்பட்டு மயங்கி விழக்கூடும்.
அடுத்த நாள் அவர்கள் மீதே அதிக வெறுப்பு ஏற்பட்டு பிறருடன் பேசுவதை மேலும் குறைத்துக் கொள்வார்கள். இதனால் கிட்டத்தட்ட ஒரு மனநோயாளியின் நிலைக்கே தள்ளப்படுவார்கள். எவருடனும் பழக விருப்பம் இல்லை என்பதும் உண்மையில் ஒரு மனநோய்தான் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். ஊருடன் ஒத்து வாழ்பவர்களால் மட்டுமே வாழ்க்கையை எளிதாகக் கொண்டு செல்ல முடியும்.
வீட்டிற்கும் தாவும்
அலுவலகத் தோழர்களுடன் பேசுவதில் இருக்கும் விருப்பமின்மை நாளடைவில் வீட்டுக்கும் பரவக் கூடும். தாய், தந்தை மற்றும் உறவினர்கள் பேசினால்கூட எரிச்சலும், கோபமும் உண்டாகி தனித்தீவாக மாறி விடுவார்கள். அப்படியொரு நிலை உருவாகும் முன்பே, உரிய மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். மனதுக்குப் பிடித்தவர்கள் யாருடனாவது ஒரு சில நிமிடங்களாவது பேசுவதைக் கட்டாயமாக்கிக் கொள்ள வேண்டும்.
கொஞ்சம் கொஞ்சமாக பேசும் நேரத்தைக் கூட்டிக் கொள்ள வேண்டும். மனதில் இருக்கும் சோகம், துக்கம், வேதனை போன்றவற்றை அடுத்தவர்களோடு பகிர்ந்து கொள்ளும் போதுதான் அவை குறையும். ஆறுதல் சொல்ல நண்பர்கள் இருப்பதே பெரும் பலமாக இருக்கும்.
இவற்றுக்கெல்லாம் என்னதான் தீர்வு?
கொண்டாட்டத்தை அனுபவிக்கக்கூடிய மனநிலை இருப்பது போன்று, அதை நிறுத்துவதற்கான மனநிலையையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். எல்லா வாரமும் கொண்டாட்டம் வேண்டும் என்று அடம்பிடிக்கக் கூடாது.
ஒருவாரம் குடும்பத்துக்கு, ஒரு வாரம் பழைய நண்பர்களுக்கு என்று விடுமுறையைப் பகிர்ந்து கொண்டால் எந்தப் பிரச்னையும் வராது.
இந்த விஷயத்தில் ஐ.டி. நிறுவனங்களும் தங்களது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். ஊழியர்களைத் தக்கவைத்துக் கொள்வதற்காக இதுபோன்ற கொண்டாட்டங்களை சில நிறுவனங்கள் ஊக்குவிக்கின்றன. ஊழியர்களுக்குத் தேவையான வாகன வசதி செய்து தருவது, மது மற்றும் உணவு வகைகளை ஏற்பாடு செய்வது, ஹோட்டல் ரிசார்ட்ஸ் புக் செய்வது என்றெல்லாம் ஊழியர்களை பலமாகக் கவனிக்கிறார்கள்.
இவையெல்லாம் ஊழியர்களின் நன்மைக்காகச் செயல்படுகின்றன என்றுதான் நிறுவனங்கள் சொல்கின்றன. ஆனால் நிறுவனங்களின் இத்தகைய ஏற்பாடுகள் ஊழியர்களின் வாழ்க்கையைத்தான் பாதிக்குமே தவிர, நன்மை எதையும் செய்து விடாது. ஊழியர்கள், அதலபாதாளத்தை நோக்கிப் பயணப்பட்டால், நிறுவனங்கள் கைகொடுத்து அவர்களை மீட்க வேண்டும். மாறாக அழிவுக்கான பயணத்தை விரைவுபடுத்தி விடக்கூடாது.
More Info :http://mahizhaithiru.wordpress.com/
More Info :http://mahizhaithiru.wordpress.com/
No comments:
Post a Comment