Thursday, March 10, 2011

மனநலத் துறையில் புரட்சி : டாக்டர் சி. ராமசுப்பிரமணியம்


Photo
மருத்துவத்தில் முதுகலைப் பட்டம். வாங்கிக் குவித்திருக்கும் விருதுகளோ ஏராளம். ஆனாலும் டாக்டர் சுப்பிரமணியத்தின் முகத்தில் பெருமையின் சுவடு கொஞ்சம் கூட தெரியவில்லை. மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் தங்களுக்கு இயன்ற வழிகளில் மற்றவர்களுக்கு உதவ வேண்டும். சக மனிதர்களுக்கு உதவுவது சாதனையல்ல. அனைவரும் நிறைவேற்ற வேண்டியது கடமை என்கிறார் வெகு இயல்பாக.
மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் மகத்தான பணியில் சுப்பிரமணியம் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருப்பதற்கு உருக்கமான பின்னணி உண்டு. மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு சமூகம் அளிக்கும் நிலை, அவர்களது குடும்பத்தினர் சந்திக்கும் சங்கடங்கள் இதையெல்லாம் இவரும் அனுபவித்தவர் தான்.
உறவினர்களால் ஒதுக்கப்பட்ட, சமூகத்தால் தள்ளிவைக்கப்பட்ட இவர்களுக்கு மறுவாழ்வு கொடுப்பதையே தனது இலக்கு என்பதை தீர்மானித்தார். மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் மகத்தான பணியை எந்தவித ஆரவாரமின்றி ஒரு தவமாகவே செய்து வரும் இந்த மனித நேயமிக்க மருத்துவரை சந்தித்து பேசியதிலிருந்து…
கேள்வி : குடும்பம், தொழில், சம்பாத்தியம் என்ற சராசரி கோட்டிற்குள் இல்லாமல் மனித நேயபணிகள் சமூகப் பணிகளில் ஈடுபடக் காரணம்?
பதில் : என்னை பொருத்தவரை, வளர்ந்த விதம் வளர்க்கப்பட்ட விதம் மிகவும் முக்கியமானவை. எனது தந்தை ஒரு பொறியாளர் என்பதை விட கருணை உள்ளம் கொண்டவர் என்று தான் பலருக்குத் தெரியும். எதாவது ஒரு சந்தர்பத்தில் யாருக்காவது உதவி செய்ய வேண்டிய நிலை வந்தால், உடனே செய்து விடு. இல்லையென்றால் மீண்டும் அந்த சந்தர்ப்பம் உனக்கு அமையாது என்று என்னிடம் அடிக்கடி கூறுவார். இதுவே என்னை நான் சமூகப் பணியில் ஈடுபடுத்திக் கொள்ளக் காரணம்.
மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்ற காரணம் எனது சகோதரரின் மரணம் தான். மனநலம் பாதிக்கப்பட்ட அவருக்கு உரிய மருத்துவ வசதிகள் கிடைக்காததால் அவர் எங்களை விட்டு பிரிந்தார். அவரின் மரணம் எனது குடும்பத்தை எந்தளவு பாதித்தது என்பது எனக்குத் தான் தெரியும். இது போன்ற நிலை யாருக்கும் வரக்கூடாது, மனநலம் பாதிக்கப் பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும் என எண்ணினேன்.
20 விழுக்காட்டினர் மனநல பாதிப்பின் ஆரம்பத்தில் உள்ளனர்!
கேள்வி : இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் மனநலம் பாதிக்கப் பட்டோரின் நிலை பற்றி விரிவாக …
பதில் : நாட்டின் ஒட்டு மொத்த மக்கள் தொகையில் 2 சதவீதம் பேர் மனநல நோயினால் பாதிக்கப் பட்டு உடனடி சிகிச்சைக்காக காத்துக்கொண்டு இருக்கின்றனர் . இது தவிர 20 சதவீதற்கும் மேற்பட்டோர் மனநல பாதிப்பின் ஆரம்ப கட்டத்தில் உள்ளனர். அத்தனை பேருக்கும் மருத்துவம் பார்க்க மருத்துவர்கள் இல்லை. மொத்தமாகவே 15 ஆயிரம் மருத்துவர்கள் தான் உள்ளனர். விதவிதமான மருந்துகளும், மாத்திரைகளும் வந்து கொண்டுதான் இருக்கின்றனர். நவீன விஞ்ஞான உலகத்தில் ஒரு அமைதிப் புரட்சியே நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துவிட்டால் குணப்படுத்துவது எளிது.
கேள்வி : மருத்துவ சிகிச்சை முறைகளால் மட்டுமே மனநலக் குறைபாடுகளுக்கு தீர்வு காணமுடியுமா?
பதில் : நிச்சயமாக இல்லை. சிகிச்சை முறையில் மருந்து, மாத்திரைகள் ஒரு அங்கமே தவிர அதன் மூலமே தீர்வுக் காணமுடியும் என்பது சாத்தியமில்லாத ஒன்று. மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் முதலில் கவுன்சிலிங் நடத்தப்படும். இறுதியில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மறுவாழ்வுப் பயிற்சியின் மூலம் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு வரப்படுகின்றனர்.
மனநல குறைபாட்டின் அறிகுறிகள்!
கேள்வி : மனநலக் குறைபாடுகளுக்கான அறிகுறிகள் உண்டா?
பதில் : சில அறிகுறிகளை வைத்து அவர்கள் மனநலப் பாதிப்பின் ஆரம்பக்கட்டத்தில் உள்ளார்கள் என்பதை நம்மால் யூகிக்க முடியும். உதாரணமாக கலகலப்பாக பேசி சிரிக்கும் ஒருவர் திடீரென்று யாரிடமும் பேசாமல் மௌனமாக இருப்பது, நன்கு படிக்கும் மாணவர் திடீரென சரிவர படிப்பில் கவனம் செலுத்தாமல் இருப்பது, அமைதியாக இருப்பவர் அதிகமாக பேசுவது போன்றவற்றை அறிகுறிகளாக சொல்லலாம்.
கேள்வி : மனநல பாதிப்புக்கு ஆளாவதற்கான காரணங்கள்…
பதில் : அளவுக்கு மீறி ஆசைப்பட்டு அது அடைய முடியாத நிலை வரும் போது ஏற்படும் விரத்தி , நல்ல திறமை இருந்தும் அதற்கான சூழ்நிலை வராமல் போகும் போது ஏற்படும் மன அழுத்தம், தன்னுடைய உணர்வுகளை யாருடனும் பகிர்ந்து கொள்ளாமல் மனதில் போட்டு அழுத்தி வைப்பது போன்றவையெல்லாம் மனநலம் பாதிப்பிற்கான காரணங்களாக அமைகின்றன.
கேள்வி : சிகிச்சை முறையில் மட்டுமின்றி வேறு எந்தவிதமான வசதிகள் மற்றும் சூழ்நிலைகளை உருவாக்கி தரவேண்டும்.
பதில் : மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இயற்கைச் சூழலுடன் கூடிய இட வசதி மிகவும் அவசியமான ஒன்று. அவர்களை சங்கிலியால் கட்டிப் போடுவதோ, தனி அறையில் பூட்டி வைப்பதோ கூடாது. சுதந்திரமாக செயல்பட அவர்களை அனுமதிக்க வேண்டும். கவுன்சிலிங் மூலம் அவர்களின் மனநிலையை அறிந்து ஏதாவது ஒரு துறையில் அவர்களின் திறமையை வெளிக்கொணர வேண்டும். குறிப்பாக தாழ்வு மனப்பான்மையை போக்கி அவர்களை ஊக்குவிப்பது முக்கியமான ஒன்று. இதனால் அவர்களுக்கு தன்னம்பிக்கை வளரும். சமுதாயத்தில் தங்களாலும் சாதிக்க முடியும் என்ற எண்ணம் தோன்றும். கற்பனை உலகத்திலிருந்து எதார்த்தமான நடைமுறை வாழ்க்கைக்கு மனநலம் பாதிக்கப்பட்டவர்களை கொண்டு வரவேண்டும்.
கேள்வி : சிகிச்சை முறைகளும் மருந்த முறைகளும் சராசரி சாமான்ய மக்கள் பெற சாத்தியமான நிலை உள்ளது.
பதில் : மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்படும் மருந்து மாத்திரைகள் பொதுவாக விலை உயர்ந்தவை. ஆனால் மனநோயின் ஆரம்ப அறிகுறிகள் தெரிந்த உடனேயே சிகிச்சை மேற்கொள்ளப்பட்டால் மருந்தின் அளவும் அவர்களை குணப்படுத்துவதற்கான கால அளவும் குறையும். சிகிச்சை நேரத்தில் மறுவாழ்வு பயிற்சியில் ஈடுபடுத்தும் போதும் அவர்களுக்கு கொடுக்கப்படும் மாத்திரையின் அளவும் குறையும்.
கேள்வி : மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்காக கொண்டு வரப்பட்ட சட்டம் எந்தளவில் பயனளிக்கிறது.
பதில் : இந்தியாவை பொறுத்தவரையில் மனநல மருத்துவத்தில் தமிழகம் மிக முன்னிலையில் உள்ளது. இதற்காக கொண்டுவரப்பட்ட சட்டமும் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் மனநல காப்பக மையம் ஆரம்பிக்க வேண்டுமென்றால் அரசின் அனுமதி பெற்ற பிறகே ஆரம்பிக்க முடியும். இது வரவேற்கக் கூடிய ஒன்று.
மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு இயல்பு நிலைக்கு கொண்டு வந்து மறுவாழ்வு கொடுப்பது என்பது அவ்வளவு சாதாரண காரியமல்ல. ஆனால் இவரைப் போன்ற மனிதநேயமிக்க மருத்துவர்களும், அதற்கு துணையாக அரசும் எடுத்து வரும் முயற்சிகளை நாம் பாராட்டாமல் இருக்க முடியாது. அதே தருணத்தில் சமுதாயமும், தன்னார்வத் தொண்டு நிறுவங்களும் இதற்கு எவ்வாறு உறுதுணையாக இருக்க வேண்டும்?
More Info :http://mahizhaithiru.wordpress.com

No comments:

Post a Comment