Saturday, March 5, 2011

அற்புத கலைஞன் அப்பாஸ் கிராஸ்தமி


வாழ்வை நமக்கு நெருக்கமாக காட்டுகிற சினிமாக்கள் ஈரானிய திரைப்படங்கள். இஸ்லாமிய புரட்சிக்கு பின் மிக கடுமையான தணிக்கை முறையிலிருந்து வெற்றி பெறுவது அவ்வளவு லேசான காரியமில்லை என்று கூறினால் அது கண்டிப்பாக மிகையில்லை.
இன்று அதி உன்னத நிலையை ஈரானிய திரைப்படங்கள் அடைந்ததற்கு மிக முக்கியமாக காரணிகளில் ஒருவர் தான் அப்பாஸ் கிராஸ்தமி. உலக சினிமா ரசிகர்களை ஈரானிய சினிமாக்களின் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர்களுள் முக்கியமானவர்.
1940ம் வருடம் ஜீன் 22ம் தேதி டெஹ்ரானில் பிறந்தார். சிறுவயது முதலே ஓவியத்திலும் கலையிலும் அவருக்கு ஈடுபாடு அதிகம் இருந்தது. அந்த விருப்பத்தின் பேரில் டெஹ்ரான் பல்கலைகழகத்தில் கலையும் ஓவியமும் பயின்றார்.

தனது 18வயதில் ஒரு ஓவிய போட்டியில் பரிசு பெற்றதுடன் தனது வாழ்க்கை இனி கலை ஓவியம் சார்ந்த்தாக இருக்க வேண்டும் என்று மனதார நம்பிக்கை கொண்டார்.

ஆனால் கல்லூரி படிப்பு முடித்ததும் அவருக்கு கிடைத்ததோ டிராபிக் போலிஸ் வேலை. சில நாட்கள் மனம் லயிக்காமல் கிடைத்த வேலையை செய்தார். பின்னர் நண்பர் ஒருவரின் உதவியால் விளம்பரங்களுக்கு போஸ்டர் டிசைன் செயவதும் ஓவியம் வரைவதுமாக இருந்தார்.

பெரும் வாழ்க்கை போராட்டத்திற்கு பிறகு விளம்பர படங்கள் எடுக்கும் வாய்ப்பும் கிட்டியது. 1962 முதல் 1966 வரை நான்கு ஆண்டுகள் இரானிய தொலைகாட்சிக்காக சுமார் 150க்கும் மேற்பட்ட விளம்பர படங்களை இயக்கினார். 1969ல் கிராஸ்மிக்கு பர்வீன் என்ற பெண்ணுடன் திருமணமானது. அஹ்மத் கிராஸ்மி, பாஹ்மான் கிராஸ்மி என்ற இரு மகன்கள் உள்ளனர்.

1979 புரட்சிக்கு பிறகு பெரும்பாலான கலைஞர்கள் ஈரானை விட்டு வெளியேறி மேற்கத்திய நாடுகளில் குடியேறினர். ஆனால் கிராஸ்தமி தன் சொந்த மண்ணை விட்டு செல்பவன் ஒரு கலைஞனாக இருக்க முடியாது என்ற எண்ணத்தில் ஈரானிலேயே வாழ்ந்து வந்தார்.

தாய் நாட்டு மண்ணின் மணத்தை அறிந்து கொள்ளவும் அனைத்து வகைப்பட்ட கடை நிலை மனிதர்களின் மனதை அறிந்து கொண்டதின் மூலம் மட்டுமே தனது நீண்ட நாள் கலைவாழ்க்கைக்கு பயணிக்கிறது அதற்கு இதுவே முக்கியமான முடிவாக இருந்தது என்று நன்றியுடன் நினைவு கூறுகிறார்.


The Bread and Alley இவர் 1970ம் ஆண்டு இயக்கிய முதல் கறுப்பு வெள்ளை குறும்படம். ஒரு சிறுவன் ரொட்டி துண்டுடன் வீடு செல்லும் போது பசியுடன் துரத்தும் ஒரு நாயை பற்றியது. பத்தே நிமிடங்களில் ஒடகூடிய இக்குறும்படத்தின் மூலம் தான் யார் என்பதை தானே அறிமுகப்படுத்தி கொண்டார்.

அவருக்குள் ஒளிந்திருந்த அந்த கலைஞனின் கலைப்பயணம் ஆரம்பமாகியது.


The Experience { 1973 } என்ற குறும்படத்தையும் இயக்கினார். இதில் அவர் அவ்வளவாக திருப்தியடையவில்லை. இன்னும் கடுமையாக முயற்ச்சி செய்ய வேண்டும் என்ற எண்ணமே அவரின் மனதை உறுத்தி கொண்டு இருந்தது.

1974ல் வெளியான The Traveller திரைபடத்தை குறிப்பிட்டு சொல்ல வேண்டும். ஆனால் இது 71 நிமிடங்களில் ஒரு முழு நீள திரைப்படமாயிற்று. ஈரானிய தேசிய கால்பந்தாட்டத்தை காண ஆவலுடன் துடிக்கும் ஒரு பத்து வயது சிறுவனின் வாழ்வியல் நிகழ்ச்சிகளையும் உள்ளுணர்வுகளையும் சித்தரிக்கும் காவியம். ஒரு விருப்பத்தின் அல்லது அதீத ஆசையின் காரணமாக பதின்ம வயது மனதுக்குள் ஏற்படும் விபரீத எண்ணங்களை சித்தரிக்கும் படமாக அமைந்து அனைவரின் பாராட்டுகளையும் அள்ளியதோடு ஈரானிய சினிமா ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்த ஒரு அற்புத திரைப்படம்.

So Can I , Two solutions for one problem, A wedding Suit ஆகிய படங்களையும் 1975களில் இயக்கினார்.
அபபாஸ் கிராஸ்தமியின் முதல் திரைப்டம் என்று 1977ல் வெளியான The Reportதிரைப்படத்தை சொல்லலாம். இத்திரைப்படம் 112 நிமிடங்களில் முடிவடைவதாக எடுக்கப்பட்டது. வரி வசூல் செய்யும் ஒருவன் குடும்ப சூழ்நிலையின் காரணமாக கையூட்டு பெற முற்படுவதும் பின்னர் மன உளைச்சலில் தற்கொலைக்கு முயலுவதின் பின்னணியில் பின்னப்பட்ட ஒர் அற்புத நிகழ்வுகள் நிறைந்த திரைப்படம்.

மற்றும் ஒரு பெருமையும் இத்திரைப்படத்திற்கு உண்டு. இத்திரைப்படத்தில் இருபது வயது இளம் பெண்ணாக இவரால் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகைShohreh Aghdashloo. இவர் தனது 54 வயதிலும் இன்று வரை அமெரிக்க தொலைகாட்சிகளிலும் ஹாலிவுட்டில் நடிப்பது மட்டுமல்லாது ஆஸ்கருக்கும் பரிந்துரைக்கப்பட்ட முதல் ஈரானிய நடிகை.

முழுநீள திரைப்படங்களை இயக்கினாலும் குறும்படங்களில் மீதான காதல் இவருக்கு எப்போதும் உண்டு. 1980களிலும் நிறைய குறும்படங்களை இயக்கினார்.

ஈரானை விட்டு வெளியேயும் இவரின் புகழ் பரவ காரணமானது Where Is the Friend's Home? இத்திரைப்படம் 1987ல் வெளியானது.

பள்ளி நண்பனின் நோட்டு புத்தகத்தை அவனிடம் சேர்க்க பாடுபடும் ஒரு சிறுவனின் கதை. அந்த நோட்டு புத்தகம் இல்லையெனில் நண்பன் பள்ளியில் இருந்து வெளியேற்றபடுவான் என்ற பயத்தால் பக்கத்து கிராமத்திற்கு செல்கிறான். வாழ்க்கையின் எளிய நிகழ்வுகளே இந்த திரைப்படத்தின் ஆதாரம். அதுவும் குழந்தைகளின் உலகை இவரை போன்று யதார்த்தமாக காட்சிபடுத்துவதில் இவருக்கு இணை இவரே.

உலக அளவில் பேசப்பட்ட இத்திரைப்படம் ஸ்விஸ் திரைப்பட விழாவில் வெண்கல சிறுத்தை பரிசை பெற்றதோடு டெஹ்ரான் திரைப்பட விழாவில் தங்க பரிசையும் வென்றது.
30,000 மக்களை கொன்று தன் அகோர பசியை தீர்த்து கொண்ட 1990 ஈரானிய கடும் பூகம்பத்தில் பெரிதும் பாதிக்கபட்டார். தன் முந்தைய திரைப்படத்தில் நடித்த மக்களை தேடி புறப்பட்டு அதை ஒரு திரைப்படமாக்கினார். அதுவே 1991ல் வெளியான Life, and Nothing More... இது ஒரு ஆவணப்படம் போன்றும் எடுக்கப்பட்டது. ஆனால் டாக்குமெண்ட்ரிக்குரிய வறட்டுதனம் சிறிதும் இல்லாமல் இருப்பது ஒரு ஆச்சரியமே.

1994ல் Through the Olive Trees என்ற திரைப்படத்தை எழுதி இயக்கினார். கட்டிட வேலை செய்யும் ஒருவனை திரைப்பட நாயகனாக்கும் முயற்ச்சி பற்றிய கதை. இதுவும் கிராமிய பின்னணியில் எடுக்கப்பட்டதுடன் இதில் ஊடே ஒரு காதல் கதையும் உண்டு.

இந்த மூன்று திரைப்படங்களும் ஈரானிய மிகச்சிறிய கிராமமான கோக்கர் என்ற சிற்றூரில் எடுக்கப்ப்ட்டதால் இவை Koker trilogy என்று சினிமா ஆர்வலர்களால் ஆர்பரிக்கப்பட்டது.

அப்பாஸ் கிராஸ்தமியின் மேலே உள்ள மூன்று திரைப்படங்களும் எளிமையான தோற்றத்துடன் ஆழமான உள்ளுணர்வுகளை வெளிப்படுத்துபவை. ஒரு திரைப்ப்டத்திற்கு தகுதியில்லாதவை என்று ஒதுக்கி தள்ளும் எளிய நிகழ்வுகளை கொண்டே கட்டமைக்கபட்ட்வை. ஆனால் வாழ்வோடு இசைந்த ஆதார சுருதியை மனதின் அடியிலிருந்து மீட்டு திரைப்படங்களாக வடிவமைத்து அதை படைப்பதில் பெரும் வெற்றி பெற்றதோடு திரைப்படங்களுக்கு ஒரு புது இலக்கணத்தை எழுதியிருக்கிறார்.

இந்த Koker trilogy என்ற சொல்லபடுகின்ற திரைப்டங்கள் வெற்றி பெறாத இடங்களே இல்லை. பிரான்ஸ், நெதர்லாந்து, ஸ்வீடன் ம்ற்றும் பின்லாந்து ஆகிய அனைத்து நாடுகளின் திரை ஆர்வலர்களை வியப்பில் ஆழ்த்தியது.

வால்ட் டிஸ்னியின் திரைப்பட வெளியீடும் நிறுவனமான Miramax Films நிறுவனம் இத்திரைப்டங்களை அமெரிக்காவில் மட்டுமல்லாது உலகமெங்கும் வெளியிட்டு அப்பாஸ் கிராஸ்தமிக்கு ஒரு மிகப்பெரிய சிவம்பு கம்பளத்தை விரித்து கொடுத்தது.

தான் மட்டும் வரலாற்றில் பதிய வைக்க கூடிய ஒரு இடத்தை அடைந்து விட்டால் போதுமா..?? அதில் மட்டுமே ஒரு நிஜ கலைஞன் திருப்தியடைவதில்லை. தனது வெற்றிக்கு உறுதுணையாய் இருந்தவர்களையும் அரவணைத்து அவர்களுக்கும் முடிந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பதன் மூலம் தான் ஆத்ம திருப்தி கொள்ள இயலும்.

அதனால் தான் தனது துணை இயக்குநர் Jafar Panahi க்காக திரைக்கதை எழுதி அவரை இயக்கவும் வைத்த பெருமையும் உண்டு அப்பாஸ் கிராஸ்மிக்கு.

The Jounery, White Balloon ஆகிய திரைப்படங்களுக்கு திரைக்கதை மட்டும் எழுதினார். குருவின் பெயரையையும் காப்பாற்றினார் Jafar Panahi.

White Balloon திரைப்படம் பல விருதுகளை அள்ளியது. இந்த திரைப்படத்தை பற்றிய எனது முந்தைய பதிவு.

பல திறமையான இயக்குநர்களை கண்டறிந்து அவர்களுக்காக சில திரைபடங்களையும் தயாரித்து சிறந்த திரைப்பட தயாரிபாளருமானார்.


மீண்டும் 1997ல் The Taste of Cherry என்ற திரைபடத்தை தயாரித்து இயக்கவும் செய்தார். இந்த திரைப்படமும் அப்பாஸ் கிராஸ்தமியின் மற்ற படங்கள் போலவே பெரிய கதையம்சம் கொண்டதில்லை.
ஒரு மனிதனின் ஒரு நாள் வாழ்க்கையில் எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்கள், சந்திப்புகள் என்று சதாரண காட்சியமைப்புகளே. ஆனால் இந்த காட்சியமைப்புகள் உரையாடலில் கிராஸ்தமி உருவாக்கும் அதிர்வலைகள் மிக மிக அழுத்தமானது. திரைப்படம் முடிந்ததும் ஒரு இனம் புரியாத அழுத்தத்தை ஏற்படுத்தி விடும். இந்த திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் தங்க பரிசை தட்டி சென்றது.

1999ல் வெளியானது The Wind Will Carry Us. இந்த திரைப்படத்தை ஏற்கனவே சிலாகித்து எழுதியது இங்கே.

2002ல் இயக்கிய Ten திரைப்படம் முற்றிலும் வேறுபட்ட வகையில் படமாக்கப்பட்ட ஒரு திரைப்படம். ஒரு காரின் பயணத்தில் தொடங்கி காரிலேயே முடிவடையும் திரைப்படம்.
காரில் ஒரு தாயும் மகனும் கடும் விவாதத்தில் ஈடுபடுவதாக தொடங்கி அவள் செல்லும் வழியில் லிப்ட் கொடுப்பவர்களின் வாழ்க்கையை பற்றி அவள் அறிந்து கொள்ளும் போது நடைபெறும் உரையாடலில் பயணித்து அதுனூடே திரைப்படம் பார்ப்பவர்களையும் பயணிக்க வைத்திருப்பார். ஒரு திரைப்படத்தை கார் பயணத்தில் தொடங்கி காரிலேயே முடித்து விடும் தைரியம் இவரை தவிர வேறு எவருக்கும் வருமா என்பது சந்தேகமே..?

இதற்கிடையே 2001ல் ஐக்கிய நாடுகளின் International Fund for Agricultural Development என்ற அமைப்பு உகாண்டா நாடுகளின் ஆதரவற்ற எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட மக்களை பற்றிய ஆவண படமெடுக்க அப்பாஸ் கிராஸ்தமியை தேர்வு செய்தது.

இம்முறை ஈரானுக்கு வெளியே சென்று ABC Africa ஒரு மிகச்சிறந்த ஆவண படத்தை இயக்கி தந்தார். இம்முறையும் குழந்தைகளுடன் பணி புரிய எனக்கு கிடைத்த அரிய சந்தர்பம் என்று நினைவு கூறுகிறார் அப்பாஸ்.

2004ல் மீண்டும் Ten on Ten என்ற ஆவணபடத்தையும் இயக்கினார். இது தனது முந்தைய திரைப்படமான 2002ல் உருவாக்கிய Ten உருவாக்கப்பட்ட விதத்தையும் விவரிக்கிறது.

Tickets 2005ல் வெளியான நகைச்சுவை கலந்த திரைப்படம். நாம் அன்றாட பயணிக்கும் பொது போக்குவரத்தான பேருந்துகளிலும் தினசரி சாலைகளில் சந்திக்கும் முன் பின் தெரியாத நபர்களின் ஊடே நடக்கும் சிறு சிறு சம்பவங்களின் தொகுப்பு.

இவரின் குறும்பட ஆசை தணியாது போலும். 32 நிமிடங்கள் ஒடும் The Roads of Kiarostami என்ற குறும்படத்தை 2006ல் இயக்கியுள்ளார்.

இதுவரை இயக்கிய திரைபடங்களில் எதிலும் இல்லாத ஒரு புதுமையை கையாண்டு 2008ம் ஆண்டு Shirin என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். 114 இரானிய நாடக மற்றும் திரைகலைஞர்களுடன் பிரான்ஸ் நடிகை Juliette Binocheயுடன் இணைத்து இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

800 ஆண்டுகளுக்கு முந்தைய பெர்சிய காதல் கதையை இவர்கள் பார்ப்பது போலவும் அதனால் அவர்கள் மனதில் ஏற்படும் எண்ணங்களை வெளிப்படும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க குளோசப் காட்சிகளை மட்டுமே கொண்ட திரைபப்டமாகும். இதுவரை 65வது கேன்ஸ் திரைப்பட விழாவில் மட்டுமே திரையிடப்பட்டுள்ளது.
இவரின் திரைப்பயணம் இன்னும் தொடர்கிறது.

இத்தனை உலக விருதுகளை வாரி குவித்திருந்தாலும் அப்பாஸ் கிராஸ்தமி தனது திரைப்படங்களில் எந்த கதையும் சொல்வதும் இல்லை என்று மேலோட்டமான குற்றசாட்டும் இவர் மீது உண்டு. இது சரி இது தவறு அவர் எதையும் வகைப்படுத்துவதுமில்லை என்கிறார்கள் சில உலக சினிமா பார்வையாளர்கள்.

ஆனால் இவரோ ஒன்றை மட்டும் முதன்மை படுத்துவதோ சரி தவறு என்று நிர்ணயிப்பதும் வன்முறையின் ஒரு பகுதிதான் என்கிறார். எனது படங்களில் எது இருக்கிறதோ அவையே எனக்கு பிடித்தவை என்றும் உணர்ச்சி வசப்பட வைப்பது தனக்கு பிடிக்காத விஷயம் என்கிறார்.

பல படங்கள் உங்களை மகிழ்வித்து நாற்காலியோடு உட்கார வைக்கும். ஆனால் படம் முடிந்ததும் தியேட்டரை விட்டு வெளியேறும் போது ஏமாற்றப்பட்டது மெள்ள மெள்ள தெரிய வரும். சக்தியை கொடுப்பது போல் எனர்ஜி பூஸ்டர் அல்ல நான் என்கிறார். மேலும் ஒரு நல்ல படம் சக்தியை இழக்க செய்வதாக வாழ்க்கையின் நெருக்கத்தை ஏற்படுத்துவதாதான் இருக்க வேண்டுமே தவிர பார்வையாளனை பிணைக்கைதியாக பிடித்து வைத்திருப்பதாக இருக்க கூடாது என்கிறார். { இது நமக்கு மிகவும் கவனிக்க வேண்டிய செய்தியாக எனக்கு தெரிகிறது }

உலகின் எல்லா இயக்குநர்களுக்கும் எது பிரச்சினையோ அதுதான் ஈரானிய இயக்குநர்களுக்கும் இருக்கிறது. ஒரு திரைப்படம் வெற்றியடையுமா தோல்வியடையுமா என்று யாருக்கும் தெரியாது. ஆனால் ஒரு தயாரிப்பாளனின் நன்மதிப்பை பெறுவதே மிகப்பெரிய சாதனைதான்.

ஆனாலும் வாழ்வியலோடு இணைந்து வாழ்வின் மெய்மையை கண்டடையும் பயணமாகி அதுனூடே திரைப்படத்தை ஒரு கலையாக கருதி தன்னை ஒரு ஓவியனாக, கலைஞனாக, எடிட்டராக, தயாரிப்பாளராக மற்றும் இயக்குநராக வடிவமைத்து கொண்டு அந்த கலை வடிவத்தை அன்பாக, நேசமாக, காதலாக யதார்த்தின் ஒரு பதிவாக அவற்றை வெளிப்படுத்துவதால் அப்பாஸ் கிராஸ்தமி ஒரு அற்புத கலைஞன் என்று சொல்வதில் மிகுந்த ஆனந்தமே...

More Info :http://butterflysurya.blogspot.com

No comments:

Post a Comment