Friday, February 4, 2011

அன்பெனும் பிடிக்குள்...

ஓர் ஆன்மிகப் பெரியவர் புனித யாத்திரை மேற்கொண்டார். சீடர்கள் புடைசூழ ஆலயத்துக்குச் சென்று கொண்டிருந்தார். வழியில் ஒரு சிறிய கிராமத்தைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. அது ஒரு மாலைப் பொழுது. சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்கள் உடைகள் கிழிசலும் கந்தையுமாக இருந்தது.

அந்தப் பெரியவர் நிற்க, கூட்டமும் நிற்கிறது. அந்தச் சிறுவர்களை அருகில் அழைத்து அன்போடு, உரையாடுகிறார். ஒரு சீடர் சொல்கிறார், சுவாமி! பொழுது சாய்ந்து கொண்டிருக்கிறது. சீக்கிரம் போக வேண்டும்,'' என்று. பெரியவர் கண்டுகொள்ளவில்லை. மேலும் சிறுவர்களுடன் பேசி விளையாடிக் கொண்டே, பூஜைக்காகக் கொண்டு வந்திருந்த பட்டுத் துணிகளை ஒவ்வொரு குழந்தைக்கும் அணிவித்து மகிழ்கிறார்.

இந்தச் செயலைக் கண்டு திடுக்கிட்ட சீடர்கள், ""சுவாமி! இவையெல்லாம் பூஜைக்காக!'' என்கின்றனர். பெரியவர் நிதானமாகச் சொன்னார், பூஜைதான் நடந்து கொண்டிருக்கிறதே, என்று பரிசுகளை அள்ளி அள்ளிக் கொடுத்து அந்த ஏழைச் சிறுவர்களின் சிரிப்பில் இறைவனைக் கண்டு மகிழ்ந்தார்.

இங்கு அவரின் புனித யாத்திரை முற்றுப் பெறவில்லை, ஆனால் இறை தேடல் முற்றுப் பெற்றுவிட்டது. இறையனுபவமும் கிடைத்துவிட்டது.

ஆனால் நாம் என்ன செய்கிறோம்?

புனித யாத்திரை, தீர்த்த யாத்திரை, காசி யாத்திரை என எல்லா யாத்திரை களுமே இறைவனைத் தேடுவதற்கே. இதற்குத்தான் எத்தனை எத்தனை முன்னேற்பாடுகள், எத்தனை பொருள் செலவுகள்.

அது மட்டுமல்லாமல் போய்த் திரும்பும்வரை இந்த உடல் நம்முடன் ஒத்து ழைப்பதற்கு வேண்டிய மருந்து, மாத்திரைகள், ஸ்வெட்டர், குல்லா, கம்பளி என ஒரு பெரிய மூட்டை முடிச்சுகளோடு பயணம் தொடங்கினாலும், இந்தப் பாழாய்ப் போன மனம் நம்முடனேயா வரும்? அது நம் வீட்டைச் சுற்றியோ, உறவுகளைச் சுற்றியோ அல்லது வியாபாரத்தைச் சுற்றியோதான் இருக்கும்.

இப்படியாக, ஒரு முழுமையான இறையருளைப் பெறுவதற்கு பிளவுபட்ட மனிதராய்த்தான் நம் பயணம் தொடங்கும். பயணம் முடித்து திரும்பியதும் நம்மைத் தவிர, மற்ற யாவரும் அபாக்யசாலிகள் என்ற அகங்காரமே தலைதூக்கும்.

எப்படா வீடு போய்ச் சேருவோம் என்ற எண்ணமே பயண நேரம் முழுவதுமே இருந்திருக்கும். ஆனால் மற்றவர்களிடம் சொல்லும்போது, அந்த இறைவனே தன்னுடன் பயணித்ததாகச் சொல்லி, ஒரு பிரமையை ஏற்படுத்தி, நம்மையும், மற்றவர்களையும் ஏமாற்றிக் கொள்வோம். ஒரு சிறிய விபத்தைக் கூட பெரிதாய்ச் சொல்லி, அந்தக் கடவுள்தான் எங்களைக் காப்பாற்றினார் என்று அங்கலாய்த்துக் கொள்வோம்.

ஆனால் முக்கியமான ஒன்றை யாரும் செய்வதுமில்லை, கேட்பதுமில்லை.

நாம் புனித யாத்திரை மேற்கொண்டதன் நோக்கம் இறைவனின் பரிபூரண அருளைப் பெறுவதற்கே. இறையருள் கிடைத்ததா? இறை உணர்வு பெற்றோமா? என்கிற இறையனுபவங்களை நாம் எல்லோரும் பகிர்ந்து கொள்வதில்லை.

அந்த அனுபவம் நமக்குக் கிடைத்திருந்தால்தானே அதைப் பகிர்ந்து கொள்ள முடியும்?

வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடி, வாடி தன் கண்ணீரையே உயிர் நீராய் வார்த்தவர் வள்ளல் பெருமான். பசியோடு வாடுகின்ற உயிர்களுக்கு அன்னம் அளிக்க, அவர் ஏற்றிவைத்த அடுப்பு வடலூரில் இன்னமும் எரிந்து கொண்டே இருக்கிறது.

இந்த உலகத்தில் அன்பை உணராதவர் யாருமே இல்லை.

அந்த அன்பு உணர்வை நம் பெற்றோர்கள் நமக்கு அளித்திருக்கின்றனர். நாமும் மனைவி, குழந்தைகளுக்கு அளித்திருக்கிறோம்.

எல்லா உயிர்களுக்கும் பொதுவான இந்த அன்புணர்வை நாம் மற்றவர் களிடமிருந்து பெறுகிறோமோ, இல்லையோ நாம் மட்டும் அள்ளி அள்ளிக் கொடுத்துக் கொண்டே இருப்போம். திரும்பப் பெற்றால் அது இறையருளே! அது இமய மலையை விட உயர்ந்தது.

ரேவதி பாலு 

More Info : http://www.thamilworld.com/forum/index.php?showtopic=2047

No comments:

Post a Comment