Thursday, February 10, 2011

வள்ளல் பெருமான் வாழ்ந்த வீடு



இர. அன்பரசன்

            ஒரு சிவனடியாரின் அருள்வாக்கிற்கிணங்க 1823-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இராமலிங்க சுவாமிகள் இந்த பூமியில் அவதரித்தார். பல்வேறு ஊர்களுக்குச் சென்று வாழ்ந்த அவர் சித்து விளையாட்டுகள் பல செய்து பலரின் சிந்தையைக் கவர்ந்தவர். இறைவன் சிறப்பினை உணரும் வகையில் அருட்பா தந்து வியப்புறச் செய்த சித்தபுருஷர். சிறுவயதிலேயே அளவற்ற ஆன்மிகச் சொற்பொழிவுகள் நிகழ்த்தியதில், மடைதிறந்த வெள்ளமாய் மகிழ்வுக்குரிய சொற்கள் வந்துவிழும். இரவு பன்னிரண்டு மணியானாலும் சூழ்ந்த மக்கள் கூட்டம் சற்றும் கலையாது. அத்தகைய மகத்துவம் மிக்க  சொற்பொழிவுகளில் கிடைத்திட்ட பணத்தை குளத்திலும், மேட்டிலும் வீசி எறிந்தவர்.

இங்கர்சால், பெட்ராண்ட் ரசல், ஈ.வெ.ரா. பெரியார் போன்றோரின் சீர்மிகுந்த சிந்தாத்த வாதங்கள் சீறி வருவதற்கு முன்பே புரட்சிக்கு வித்திட்டு வாழ்ந்த வள்ளல் பெருமான், சைவம்- வைணம், ஏழை- பணக்காரன், ஆண்- பெண் என பேதங்களுக்கு மத்தியில் அமைதி வழியிலே சமூகப் புரட்சி செய்த சிந்தனைச் சுரங்கம்!

கருங்குழி எனும் ஊரில் தங்கி 1865-ல் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் எனும் பொதுநெறியை அறிமுகப்படுத்தி மக்களுக்கு நல்வழியினைக் காட்டினார். 1867-ல் மக்கள் பசிப்பிணி தீர்க்கும் அறச்சாலையை வடலூரில் உருவாக்கினார். அன்று தொடங்கியஅறப்பணி இன்று வரை இடையறாது அந்த அணையா அடுப்பு எதற்கும் இணையில்லாத நிலையில் எரிந்து மன நிறைவைத் தந்து கொண்டிருக் கிறது. 1872-ல் சத்திய ஞானசபையை வடலூரில் நிறுவி ஒளிவழிபாடு எனும் புதுவழியைப் புகுத்திய வள்ளலார்- சத்திய ஞானசபை மூலம் அருளையும் அறச்சாலை மூலம் அன்னத்தையும் வழங்கியவர் வள்ளலார். 1874-ஆம் ஆண்டு தைத்திங்கள் பதினொன்றாம் நாள் வெள்ளிக்கிழமை அன்று, சித்தி வளாகத்தில் ஓர் அறையில் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டு இருள் அகற்றும் ஒளியாகிய ஜோதியோடு ஐக்கியமானார்.

அனைவருக்கும் ஆசி வழங்கி நேசித்த வள்ளலார் சென்னையில் வாழ்ந்த வீடு இன்று கவனிப்பாரற்று அழிந்துவரும் நிலையில் உள்ளது. சென்னை ஏழுகிணறு பகுதியில், எண் 31, வீராசாமி தெருவில், 1825-ஆம் ஆண்டு முதல் 1858-ஆம் ஆண்டு வரை 33 ஆண்டுகள் இந்த வீட்டில் வாழ்ந்துள்ளார். இராமலிங்க அடிகளாரை மக்கள் திருவருட் பிரகாச வள்ளலார் என அழைத்து வந்தனர். அவர் பெயரிலேயே ஏழு கிணறு பகுதி வள்ளலார் நகர் என்று அழைக்கப்பட்டு வருகிறது. இங்கு வாழ்ந்தபோதுதான் அவருக்கு ஞானம் கிடைத்ததாகவும்; ஐந்து திருமுறைகள் இந்த வீட்டில்தான் இயற்றியதாகவும் கூறப் படுகிறது.

சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த மரக்கதவு, முற்றம், தூண்கள் உள்ள இராமலிங்க சுவாமிகள் வாழ்ந்த வீடு புராதனத்திற்குரிய பழமை மாறாத நிலையில் உள்ளது. அந்த வீட்டின் உரிமையாளர்
அதை பலருக்கு வாடகைக்கு விட்டிருக்கிறார். ஆனால் வள்ளலார் வாழ்ந்த (வீடு) அறை மட்டும் பூட்டப்பட்டுக் கிடக்கிறது. உரிமையாளர் வெளியூரில் இருப்பதால் எப்போதாவது வந்து அந்த அறையைச் சுத்தம் செய்து விளக்கு ஏற்றி வைத்துவிட்டுச் செல்வாராம். அப்பகுதியில் வாழ்கின்ற அடிகளாரின் அன்பர்கள் சங்கம் ஒன்று நிறுவி, ஆண்டுதோறும் தைப்பூச ஜோதி தரிசன விழா போன்ற விழாக்களை நடத்தி, அவர் பெயரிலே அன்னதானம் செய்து வருகின்றனர்.

வள்ளலார் வாழ்ந்த வீட்டை அரசுடைமை ஆக்க வேண்டும் என்று பலரின் நீண்ட நாள் முயற்சிக்கு- கடந்த ஆட்சியில் அரசுடைமை ஆக்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. எந்த காரணத்தினாலோ அது இன்னும் நிறைவேறாத நிலையில் உள்ளது. தமிழுக்குத் தொண்டாற்றிய கால்டுவெல், மகாகவி பாரதியார், தமிழக முன்னாள் முதலமைச்சர் காமராஜர் போன்றவர்கள் வாழ்ந்த வீட்டை அரசு நினைவிடமாக்கி பெருமை சேர்த்ததைப்போல, எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் என்று விரும்பிய- வாடிய பயிரைக் கண்ட பொழுதெல்லாம் வாடிய வள்ளல் இராமலிங்க சுவாமிகள் வாழ்ந்த வீட்டையும் அரசுடைமை ஆக்க வேண்டும். தாமதப்படுத்தாமல் தமிழக அரசு வள்ளலாருக்கு வடசென்னையில் வள்ளலார் கோட்டம் அமைக்க உரிய வகையில் இடம் தேர்வு செய்து துரித முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதுவே வருங்கால சந்ததியினருக்கு கருணைக் கடல் வள்ளலாரின் அடையாளச் சின்னமாய் அமையட்டும்.

1 comment:

  1. i am also request to government to take care about above mentioned thing and also prevent the LORD VALLALAR HOME.

    ReplyDelete