Thursday, February 10, 2011

சூட்சுமம் திறந்த திருமந்திரம்



15
இரண்டாம் பாகம்
டாக்டர் ஜாண் பி. நாயகம் M.B.B.S., M.D., Ph.D., D.Sc., F.C.D.


               "சோதனைமேல் சோதனை- போதுமடா சாமி' என்பதே இன்றைய வாழ்க்கைச் சூழலில் பலரது புலம்பலாக உள்ளது. வேதனைகளும் சோதனைகளும் மனிதனுக்குப் புதிதல்ல. மனித குலம் தோன்றிய காலத்திலிருந்தே இவை இரண்டும் தொடர்கதையாகவே உள்ளன.


"வேதனைகள் வாழ்க்கையின் ஒரு பகுதி என்றே எடுத்துக் கொள்ள பழகிக் கொள்ள வேண்டும்' என அறிஞர்களும் ஆன்மிகவாதிகளும் இன்று அறிவுறுத்தி வருகின்றனர். "துன்பம் இல்லாமல் இன்பம் இல்லை', "பகலும் இரவும் மாறி மாறி வருவதுபோல வாழ்க்கையில் இன்பங்களும் துன்பங்களும் மாறி மாறி வரும்' என்பன போன்ற பல கருத்துகள் இவர்களால் முன்வைக்கப்படுகின்றன.


இவை சரியான கருத்துகளா? இவற்றில் உண்மை உள்ளதா? துன்பங்களும் சோதனைகளும் வாழ்க்கையின் பிரிக்க முடியாத அம்சங்கள்தானா? இந்தக் கேள்விகளுக்கு திருமந்திரம் கூறும் பதிலை சில பாடல்கள் மூலம் காணலாம்.


"இன்பத்துளே பிறந்து இன்பத்துளே வளர்ந்து
இன்பத்துளே நினைக்கின்றது இது மறந்து
துன்பத்துளே சிலர் சோறொடு கூறையென்று
துன்பத்துளே நின்று தூங்குகின்றார்களே.''
-திருமந்திரப் பாடல் எண்: 2089.


நமது ஆன்மா (உயிர்) என்பது இறைவனின் அம்சம். இறையோடு ஒன்றியிருக்கும் வரையில் அந்த ஆன்மாவுக்குத் துன்பங்கள் கிடையாது. மாயையின் கட்டுகள் இல்லாத நிலையில் ஆன்மாவானது எல்லையற்ற ஆனந்த நிலையில் இருக்கும். இதுவே ஆன்மாவின் இயல்பு நிலை.


இந்த ஆன்மாவானது ஒரு கருவினுன் நுழைந்து உயிராக மாறுகிறது. இந்த நிலையிலும் அது ஆனந்த நிலையிலேயே இருக்கிறது. கருவிலிருக்கும் குழந்தைக்குத் துன்பங்கள் இல்லை. உலக மாயைகளின் பாதிப்புகள் இல்லாததால் துன்பங்கள் எதுவுமில்லை.


சுமார் ஒரு வயது வரையில் இந்த ஆனந்த நிலை நீடிக்கிறது. "தான்' என்ற அகங்காரமோ, "தனது' என்ற சுயநலமோ இல்லாத ஒரு நிலை. முற்றிலும் இன்பமய மான நிலை. இதையே இப்பாடலின் முதல் அடியில்,


"இன்பத்துளே பிறந்து இன்பத்துளே வளர்ந்து' 
என்கிறார் திருமூலர்.
குழந்தை வளர வளர சுயநலம், 


அகங்காரம், ஆணவம், அவா, அழுக்காறு, பந்த பாசங்கள் என மாயையின் கயிறுகள் ஒவ்வொன்றாகப் பற்றிக் கொள்ளத் துவங்குகின்றன. "தான்' என்ற ஆணவ மலம் வளரும்போது, இறைவன் அங்கே இரண்டாம்பட்சமாக மாறிப் போகிறான். இதுவே துன்பங்களுக்கான வாசலைத் திறந்து விடுகிறது.


இதுவரையில் தான் இருந்த ஆனந்த நிலைக்குக் காரணமானவன் இறைவனே என்பதை மறக்கும்போதுதான் துன்பங்களும் சோதனைகளும் தலைதூக்கத் துவங்குகின்றன.


"இன்பத்துளே நினைக்கின்றது இது மறந்து'


என்ற இரண்டாவது அடி இதையே சுட்டிக்காட்டுகிறது. இனி, மூன்றாவது அடியைக் காணலாம்.


"துன்பத்துளே சிலர் சோறொடு கூறை'. 


என்று உண்ண உணவு, வசிக்க இடம் ஆகியவையே ஒரு மனிதனின் அடிப்படையான தேவைகள். (உடுக்க உடையின்றிகூட வாழ்ந்துவிட முடியும்- உணவும் உறைவிடமும் இன்றியமையாதவை.) இந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதே வாழ்க்கையின் லட்சியம் என்று ஆகும்போது அங்கே இன்பம் மறைந்து துன்பம் தலைதூக்கத் துவங்குகிறது.


பூமியில் பிறந்த ஒரு ஆன்மா சக்தி நிலையில் மேன்மையடைந்து, மீண்டும் இறையோடு இணையும் முக்தி நிலையை அடைய வேண்டும். இது சாத்தியமாக "இறை நினைவு' அல்லும் பகலும் அந்த ஆன்மாவில் நிறைந்திருக்க வேண்டும் என்பதை கடந்தஅத்தியாயத்தில் சில திருமந்திரப் பாடல்கள் மூலம் கண்டோம்.


ஆனால் உலக மாயைகளில் சிக்குண்ட ஆன்மா, இறையை மறந்து, சோறும் கூரையுமே வாழ்க்கையின் லட்சியம் என இயங்கத் துவங்கும் போதுதான் "துன்பம்' எனும் சூழலில் சிக்கிக் கொள்கிறது. பாடலின் கடைசி வரியைக் கவனித்துப் பாருங்கள். அதில் அருமையான ஒரு சூட்சுமம் பொதிந்து நிற்கிறது.


"துன்பத்துளே நின்று தூங்குகின்றார்களே' 


உறக்கமும் விழிப்பும் மாறி மாறி வரும். இது மனிதர்களுக்கு மட்டுமின்றி அனைத்து உயிர்களுக்கும் பொருந்தும். இதுவே இயற்கையின் நியதி. ஆனால் துன்ப மாயையில் சிக்கிக் கிடப்பவர்களை "தூங்குகின்றார்களே' என்கிறார் திருமூலர். ஏன்?


இறை நினைப்பொழிந்து, உலக மாயைகளின் பிடியில் நாம் சிக்கிக் கொண்டிருக்கிறோம் என்ற நினைப்போ உணர்வோ நம்மிடம் அறவே இல்லை. மாயையின் கட்டுகளால் உடலும் அறிவும் உணர்வும் மந்தமாகிப் போய் சுணங்கிக் கிடக்கும் நிலையையே திருமூலர் சூட்சுமமாக "உறக்க நிலை' என்கிறார்.


இந்த உறக்க நிலையிலிருந்து விழித்தெழும் வரையில் துன்பங்கள் ஒரு தொடர்கதையாகவே இருக்கும். சோதனைகளும் வேதனைகளுமே வாடிக்கையாகிவிடும்.


விவேகானந்தரின் "விழிமின் எழுமின்' என்ற பொன் வாசகங்களை திருமூலரின் கருத்தோடு பொருத்திப் பாருங்கள். மேலும் பல அற்புதமான சூட்சும உண்மைகள் புரிபடும். "விழித்திரு, தனித்திரு,  பசித்திரு' என்ற வள்ளலாரின் அறிவுரையும் பல சூட்சுமங்களைத் தன்னுள்ளே கொண்டுள்ளது. அசை போட்டுப் பாருங்கள்.


இவ்வாறு உலக மாயைகளில் சிக்குண்டு வாழ்நாளை வீணாக்குபவர்களின் நிலை குறித்து விளக்கும் மற்றொரு திருமந்திரப் பாடலைக் காணலாம்.


"வித்துப் பொதிவார் விதைவிட்டு நாற்றுவார்
அற்றதம் வாழ்நாள் அறிகிலாப் பாவிகள்
உற்ற வினைத்துயர் ஒன்றும் அறிகிலார்
முற்றொளி தீமுன் ஈ நின்றவாறே.'
-திருமந்திரப் பாடல் எண்: 2084.


"விதை' என்பதையே வித்து என்பர். "வித்துப் பொதிவார்' என்றால் விதைகளைச் சேர்த்து வைப்பார் என்று பொருள். விவசாயிகள் அடுத்த பருவத்திற்கான விதைகளை முன்னரே பத்திரமாகச் சேர்த்து வைப்பர். காலம் வரும்போது அந்த விதைகளை விதைத்து, பின்னர் நாற்று நட்டு, பயிராக வளர்த்தெடுப்பர்.


இறைவனை மறந்து உலக மாயைகளில் சிக்கித் தவிக்கும் மானிடர்களும் இதுபோன்றே ஆசைகள் எனும் விதைகளைத் தேடித் தேடி சேமித்து வைத்து, விதைத்து, நாற்று நட்டு, பயிராக வளர்த்து அறுவடை செய்கின்றனர்.


"அற்றதம் வாழ்நாள் அறிகிலாப் பாவிகள்'


இவ்வாறு மாயையின் உந்துததால் உலக மாயைகளில் நேரத்தையும் சக்தியையும் இவர்கள் செலவிடும்போது, தமது வாழ்நாள் கரைந்துகொண்டே போகிறது என்ற உண்மையை இவர்கள் உணர்ந்து கொள்வதில்லை என்பதே இந்த இரண்டாவது அடியின் பொருள்.


"உற்ற வினைத்துயர் ஒன்றும் அறிகிலார்'


தனது துன்பங்கள் அனைத்திற்கும் தனது செயல்களே காரணம் என்பதையும் இவர்கள் அறிவதில்லை. சொந்த காசில் சூனியம் வைத்துக் கொள்வதுபோன்று, இவர்கள் தங்களுக்கான துன்பங்களைத் தாங்களே விதைத்து, தாங்களே அறுவடை செய்து பத்திரமாகச் சேமித்து வைத்துக்கொள்கிறார்கள். தங்களது செயல்களின் பலனே இந்தத் துன்பங்கள் என்பதை இவர்கள் அறிவதில்லை. மீண்டும் மீண்டும் சேர்ப்பதும் விதைப்பதும் அறுப்பதுமாகவே இவர்களது வாழ்நாட்கள் சென்று கொண்டிருக்கின்றன.


இந்தச் செயல் எதற்கு ஒப்பானது தெரியுமா? கடைசி அடியைப் பாருங்கள்...


"முற்றொளி தீ முன் ஈ நின்றவாறே'


"முற்றொளி' என்றால் "மூண்டு எழும்' என்று பொருள். முற்றொளி தீ- மூண்டு எழும் பெரு நெருப்பு. இந்த பெரு நெருப்பின் முன்னால் ஒரு ஈ சென்று நின்றால் என்னவாகும்? பொசுங்கிச் சாம்பலாகும்.


அதேபோல் தங்களது வினைகளால் தாமே மூட்டிக் கொண்ட பெரும் நெருப்பில் மாந்தர்கள் சிக்கித் துன்புறுகிறார்கள் என்பது இப்பாடலின் சூட்சுமமான பொருள். இந்தப் பாடல் வரிகளோடு, "தினை விதைத்தவன் தினை அறுப்பான்; வினை விதைத்தவன் வினை அறுப்பான்' என்ற கருத்தையும்;


"வானத்துப் பறவைகளைப் பாருங்கள்.


அவை விதைப்பதும் இல்லை; கொய்வதும் இல்லை. ஆனால் அவற்றையும் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உணவளித்துக் காப்பாற்றுகிறார்' என்ற விவிலிய வசனத் தையும் இணைத்துப் பார்த்து மனதில் அசை போடுங்கள். சிந்திக்கச் சிந்திக்க பல புதிய சூட்சும உண்மைகள் புலனாகும்.


"தானே தனக்குப் பகைவனும் நட்டானும் 
தானே தனக்கு மறுமையும் இம்மையும்
தானே தான் செய்த வினைப் பயன் துய்ப்பானும்
தானே தனக்குத் தலைவனும் ஆமே.'
-திருமந்திரப் பாடல் எண்: 2228.
மிகமிக எளிமையான பாடல் இது. 


ஆனால் திருமந்திரப் பாடல்களில் மிகச் சிறந்தவற்றுள் இதுவும் ஒன்று. வாழ்க்கையின் மிகப் பெரிய ரகசியத்தை- சூட்சுமத்தை விளக்கும் பாடல் இது.


"தானே தனக்குப் பகைவனும் நட்டானும்'


"நட்டான்' என்பது நண்பன் என்னும் பொருளைக் குறிக்கும் ஒரு சொல். ஒரு மனிதனுக்கு பகைவனும் அவனே; நண்பனும் அவனே!


"தானே தனக்கு மறுமையும் இம்மையும்'


"இம்மை' என்பது இந்த பிறவியையும்; "மறுமை' என்பது இனி எடுக்கப்போகும் பிறவிகளையும் குறிக்கும். ஒரு மனிதன் இப்பிறவியில் அனுபவிக்கும் இன்ப- துன்பங்களுக்கும், இனிவரும் பிறவிகளில் அனுபவிக்கப் போகும் இன்ப- துன்பங்களுக்கும் அவன்தான் காரணம். இது எப்படி என்பதை பாடலின் அடுத்த அடி விளக்குகிறது.


""தானே தான்செய்த வினைப் பயன் துய்ப்பானும்'


ஒருவன் தனது வாழ்நாளில் சந்திக்கும் இன்ப துன்பங்கள் அனைத்திற்கும் அவனது முற்பிறவி வினைப் பயன்களே காரணமாக அமைகின்றன என்பது நமது இந்திய சித்தாந்தம்.


ஆகவே, ஒருவன் இப்பிறவியில் செய்யும் நல்லவை- தீயவை அனைத்திற்கான வினைப் பயன்களையும் இப்பிறவியிலும் மறுபிறவி யிலும் அவனேதான் அனுபவித்தாக வேண்டும். வேறு எவரோடும் அந்தத் துன்பங்களைப் பங்கிட்டுக் கொள்ள முடியாது. தான் செய்த வினைகளின் பயனை தானேதான் அனுபவிக்க வேண்டும். இதையே இந்த மூன்றாவது அடியில் அழுத்தமாகக் கூறுகிறார் திருமூலர். (தன் வினை தன்னைச் சுடும்.) இனி கடைசி வரியைக் காண்போம்.


"தானே தனக்குத் தலைவனும் ஆமே'


ஒரு கூட்டத்திற்குத் தலைமை ஏற்று வழி நடத்திச் செல்பவனையே தலைவன் என்கிறோம். சமுதாயத் தலைவர்கள், சமயத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், ஆட்சியை நடத்தும் தலைவர்கள் என பலவிதமான தலைவர்கள் உள்ளனர்.


அனைத்து உயிர்களிலும் இருக்கும் ஆன்மா ஒரே இறையின் அம்சம் எனும்போது அங்கே உயர்வு- தாழ்வுகள் இல்லை. தலைவனும், தொண்டனும் இல்லை. இறைவனின் அம்சமான ஆன்மா உள்ளே இருப்பதால் ஒவ்வொரு மனிதனும் இறைவனின் அம்சம்.


தன் உள்ளே தேடி, ஆன்மாவை- இறைவனைக் கண்டு உணர்வதே உண்மையான ஞானம். இந்த ஞானம் வரும்போது அனைத்து உயிர்களும் ஒன்றே என்ற பிரபஞ்ச ஞானமும் அன்பும் உருவாகும். இந்த நிலையில் தலைவர்கள் தேவையில்லை. விழிப்படைந்த ஆன்மா தன்னைத்தானே வழி நடத்திக்கொள்ளும். இதையே "தானே தனக்குத் தலைவனும் ஆமே' என சூட்சுமமாகக் கூறுகிறார் திருமூலர்!


இரண்டாம் பாகம் முற்றும்.


ஒரு சிறிய இடைவேளைக்குப்பின் "சூட்சுமம் திறந்த திருமந்திரம்' மூன்றாம் பாகத்தில் மீண்டும் சந்திப்போம்.

No comments:

Post a Comment