Thursday, February 10, 2011

காமம் -திருநீலகண்ட நாயனார் புராண சூசனம்


பிறவிப் பிணிதீர்ந்து உய்தற்குத் தடையாய் உள்ள காமமானது, எத்துணைப் பெரியோர்களாலும் நீக்குதற்கு அரியது.  அது நினைப்பினும், காணினும், கேட்பினும் தள்ளினும், விஷமானது தலைக் கொண்டாற் போல எத்துணை நுண்ணறிவாளருடைய அறிவையும் கெடுக்கும் இயல்புடையது.  அது கல்வியறிவொழுக்கங்களால் ஆன்ற பெரியோர்களுடைய உள்ளத்திலே தலைப்படினும்; அவ்வுள்ளமானது தான் செல்லத்தகும் இடம் இது எனவும், செல்லத் தகாத இடம் இது எனவும், ஆராய விடாது.  அது மேலிடம் பொழுது, குணமும் குலமும் ஒழுக்கமும் குன்றுதலையும், பழியும் பாவமும் விளைதலையும் சிறிதும் சிந்திக்க விடாது.  அக்காமமே கொலை, களவு, கள்ளுண்டல் முதலிய பாவங்களுக்கெல்லாம் காரணமாய் உள்ளது.  ஆதலால் அக்காமமே ஆன்மாக்களை நரகங்களிலே எண்ணிறந்த காலம் வீழ்த்தி, வருத்தும் பெருங்கொடுமையை உடையது.  இதற்குப் பிரமாணம், கந்தபுராணம்.  "கண்டதோர் நறவமே காம மேயென - வெண்டருத் தீம்பொரு ளிருமைத் தென்பரா - லுண்டுழி யழிக்குமொன் றுணர்வை யுள்ளமேற் - கொண்டுழி யுயிரையுங் கொல்லு மொன்றரோ" எ-ம்.  'உள்ளினுஞ் சுட்டிடு முணர்வு கேள்வியிற் - கொள்ளினுஞ் கட்டிடுங் குறுகி மற்றதைத் - தள்ளினுஞ் சுட்டிடுந் தன்மை யீதினாற் - கள்ளினுங் கொடியது காமத் தீயதே."  எ-ம்.  "ஈட்டுறும் பிறவியும் வினைகள் யாவையுங் காட்டிய தினையதோர் காம மாதலில் - வாட்டமில் புந்தியான் மற்றந் நோயினை - வீட்டின ரல்லரோ வீடு சேர்ந்துளார்." எ-ம். "நெஞ்சினு நினைப்பரோ நினைந்து ளார்தமை - யெஞ்சிய துயரிடை யீண்டை யுய்த்துமேல் - விஞ்சிய பவக்கடல் வீழ்த்து மாதலா - னஞ்சினுந் தீயது நலமிலகாமமே." எ-ம். "மண்ணாசை தன்னிற் பொருளாசையின் மாய வாழ்க்கைப் - பெண்ணாசை நீங்க லெளிதோ பெரியோர் தமக்கும்." எ-ம். திருவிளையாடற் புராணம் - "அணங்குநோ யெவர்க்குஞ் செய்யு மனங்கனா லலைப்புண்டாவி - யுணங்கினா ருள்ளஞ் செல்லு மிடனறிந் தோடிச் செல்லா - குணங்குல னொழுக்கங் குன்றல் கொலை பழி பாவம் பாரா - விணங்குமின் னுயிர்க்கு மாங்கே யிறுதிவந் துறுவ தெண்ணா." எ-ம். "கள்ளுண்டல் காமமென்ப கருத்தறை போக்குச் செய்வ - வெள்ளுண்ட காமம் போல வெண்ணினிற் காணிற் கேட்கிற் - றள்ளுண்ட விடத்தி னஞ்சந் தலைக்கொண்டா லென்ன வாங்கே - யுள்ளுண்ட வுணர்வு போக்கா துண்டபோ தழிக்குங் கள்ளூண்." எ-ம். "காமமே கொலைகட் கெல்லாங் காரணங் கண்ணோ டாத - காமமே களவுங் கெல்லாங் காரணங் கூற்ற மஞ்சங் - காமமே கள்ளுண் டற்குங் காரண மாதலாலே - காமமே நரகபூமி காணியாக் கொடுப்ப தென்றான்." எ-ம்.  நாலடியார் - "அம்பு மழலு மவிர்கதிர் ஞாயிறும் - வெம்பிச் சுடினும் புறஞ்சுடும் - வெம்பிக் - கவற்றி மனத்தைச் சுடுதலாற் காம மவற்றினு மஞ்சப்படும்." எ-ம். "ஊரு ளெழுந்த வுருகெழு செந்தீக்கு - நீருட் குளித்து முயலாகு - நீருட் - குளிப்பீனுங் காமஞ் சுடுமேகுன் றேறி - யொளிப்பினுங் காமஞ் சுடும்." எ-ம். நீதிசாரம் - "ஊரு ரெனும்வனத்தி லொள்வேற்கண் மாதரெனுங் - கூருர் விடமுட் குழாமுண்டு - சீரூர் - விரத்திவை ராக்கிய விவேகத் தொடுதோ - லுரத்தணியா தேகலெவனோ." எ-ம். வரும்.  ஆதலால், காமம் மனசிலே சிறிதாயினும் எழ ஒட்டாமல் அடக்கல் வேண்டும்.  சிறிது எழுங்காலத்து, சிவனடியாரோடு கலத்தல் சிவசாத்திரம் பொருள்களைச் சிந்தித்தல், கேட்டல் முதலிய நற்செய்கைகளாலே, அதனிடத்தே கருத்து இறங்காவண்ணம் காலம் போக்கல் வேண்டும்.  மனைவியைப் புணர்தல் மாத்திரமே வேதாகமாதிகளில் விதிக்கப்பட்டதாம். மனனவியையும், புத்திரநிமித்தமன்றிப் போக நிமித்தம் புணர்தல் பாவமேயாம்.
    சிவபத்தி அடியார்பத்திகளிற் சிறந்தவராய் இல்லறத்தில் வாழும் இயல்புடைய இத்திருநீலகண்ட நாயனார், தம்முடைய மனைவி இருப்பவும்.  தம் மனசிலே தலைப்பட்ட காம மிகுதியினாலே, நூல்களில் விலக்கப்பட்டதாகிய பரத்தைப் புணர்ச்சியைச் செய்தார்.  செய்தாராயினும், தம்முடைய மனைவியார் கொண்ட ஊடலைத் தீர்க்கும் பொருட்டு, அவரைத் தீண்டும்படி சென்றபொழுது, அவர், "நீர் எம்மைத் தீண்டுவீராயில் திருநீலகண்டம்" என்று சிவனைச் சுட்டி ஆணையிட்டதைக் கேட்டவுடனே, அவரைத் தீண்டாமல், நீங்கினமையாலும்; அதுமாத்திரமன்றி, இவர் எம்மை என்று பன்மையாகச் சொன்னதனால் இவரை மாத்திரமன்று மற்றைப் பெண்களையும் மனசினால் நினைத்தலுஞ் செய்யேன் என்று உறுதி கொண்டமையாலும்; இவருடைய மனசிலே காமந்தலைப்பட்ட போதும் சிவபத்தி அதினும் மிகத் தலைப்பட்டிருந்தது என்பதும், அதனால் அச்சிவபத்தியானது பின் ஒருபோதும் இவர் மனசிலே காமம் சிறிதாயினும் எழவொட்டாமல் தடுத்தது என்பதும் துணியப்படும்.
    இவ்விருவரும், மிக்க இளமைப் பிராயத்தினராய் இராப்பகல் ஒரே இடத்தில் இருந்தும், தங்களுள்ளே நிகழ்ந்த சபதம் சிறிதாயினும் வழுவாவண்ணம், காமத்தை முற்றும் ஒழித்து வாழ்ந்த பெருந்தகைமையை நினைக்குந்தோறும், இவர்களிடத்துள்ள சிவபத்தியின் வலிமை விளங்குகின்றது.  விட்டுணு, சலந்தராசுரன் இறந்துவிட, காம மிகுதியினால் அவனது சரீரத்திலே பிரவேசித்து, அவனுடைய மனைவியைப் பலநாட் புணர்ந்து, பின்பு தம்மை விட்டுணு என்று உணர்ந்த அவளாலே சபிக்கப்பட்டு, வருத்தமுற்றார்.  பிரமா தம்மாலே படைக்கப்பட்ட திலோத்தமையினது அழகைக் கண்டு மயங்கி, அவளைப் புணரின் மகட்புணர்ச்சிக் குற்றமாம் என்பது பாராமல், அவளைத் தொடர்ந்தார்.  இந்திரன் கெளதம முனிவருடைய மனைவியாகிய அகலிகையைப் புணர்ந்து தன்னுடம்பிலே ஆயிரம் யோனி உண்டாகும்படி அம்முனிவராலே சபிக்கப்பட்டான்.  சந்திரன் தன் குருவாகிய வியாழனுடைய மனைவியைப் புணர்ந்து, கயரோகம் அடைந்தான்.  இன்னும் முனிவர்கள் பலர் உண்டி முதலியவற்றை ஒழித்து, மலைகளினும், காடுகளினும் தவஞ்செய்யும் பொழுதும், தேவப் பெண்களையும் அசுரப் பெண்களையும் இராக்ஷசப் பெண்களையும் கண்டு மயங்கி, பாவம் என்பதும் பழியென்பதும் பாராமல், அவர்களைப் புணர்ந்து, தங்கள் தவத்தை இழந்தார்கள்.  தருமம் வளர்ந்தோங்கும் முன்னை யுகங்களிலே, தேவர்கள், முனிவர்கள் தாமும், காமமிகுதியினாலே பரஸ்திரீ கமனம் புத்திரிகமனம் குருபன்னிகமனம் முதலிய பெருங்கொடும் பாவங்களைச் செய்தார்களே! இக்கலியுகத்திலே இந்நாயனாரோ, தமது மனைவியார் சிவனைச் சுட்டி இட்ட ஆணைகடத்தல் சிவத்துரோகமாம் என்பது பற்றி, மனைவியைத் தானும் புணராதொழிந்தார்! இதனால் இவரது பத்தி மகிமை எவ்வளவு வியக்கத்தக்கது!  இவ்வியப்பு நோக்கி அன்றோ, பட்டணத்துப் பிள்ளையாரும் "மாது சொன்ன சூளா லிளமை துறக்கவல் லேனல்லன்" என்றார்.
    கற்புடைய மகளிரும், அழகிற் சிறந்த ஆடவரைக் காணில், அவர் தமக்குத் தந்தையராயினும், சகோதராயினும், புதல்வர்களாயினும், தமது நிலை கலங்கி, அவரையும் நிலைகுலைப்பார்களே! அது "தந்தையாயினும் விழைவிற் றன்னுடனே யொருவயிற்றிற் சார்ந்தாரேனு - மைந்தரா யினு மிகவும் வனப்புடைய ரெனிலவர் மேன் மடநல்லார்தஞ் - சிந்தைநடந் திடுமதனாற் சாம்பன் மலர்க் கணைவேளிற் செவ்வி வாய்ந்தோன் - பைந்தொடியாரினதமரு முவளகத்திற் றனிவருதல் பான்மை யன்றே." என்னுங் காசிகண்டச் செய்யுளால் அறிக.  இவ்வாறாகவும், இந்நாயனாரும் மனைவியாரும், மிக்க இளமைப்பருவத்தராய் இராப்பகல் ஒரே இடத்தில் இருந்தும், புணர்ச்சி இன்றிச் சபதத்தைப் பேணினமையால், இவர்களது சிவபத்தியின் பெருமை இவ்வளவு என்று சொல்லத் தக்கதன்று.  இந்நாயனார் பரமசிவன் சிவயோகியாராய் வந்து தம்மிடத்துவைத்த ஓட்டைத் தாம் கவராமைக்குத் தமது மனைவியைக் கைப்பிடித்துக் குளத்திலே முழுகிச் சத்தியம் பண்ணித்தரச் சொன்ன வழியும், சபதம் வழுவாமற் காத்தார்.
    இவர்கள், தங்களுக்குள்ளே நிகழ்ந்த சபதம் தங்கள் இருவருக்கு மாத்திரமன்றி அயலவருக்கும் வெளிப்படாதிருப்பவும், அதனை வழுவாது காத்தமையாலும்; இவர் மனைவியைக் கைப்பிடித்துச் சத்தியம் பண்ணித் தரும்படி சிவயோகியார் நெருக்கியபோதும், தமது செயற்கருஞ்செயலை வெளிப்படுத்தாமையாலும்; இறுதியிலே மிக நெருக்கியபோது, தாம் அதனை வெளிப்படுத்தாதொழியில், அவரது சந்தேகம் தீராதென்பது பற்றியே வெளிப்படுத்தினமையாலும்; இவர்கள் புகழை விரும்பிச் சீவர்களைச் சாட்சியாகக் குறியாமல், உயிர்க்குயிராகிய சிவனுடைய திருவடியையே சாக்ஷியாகக் குறித்து ஒழுகினார்கள் என்பது செவ்விதிற்றுணியப்படும்; இவ்வியப்பு நோக்கியன்றோ, ஆசிரியர் சேக்கிழார் "இளமையின் மிக்குளார்க ளிருவருமறிய நின்ற - வளவில்சீ ராணை போற்றி" என்றும், "அயலறியாத வண்ண மண்ணலாராணை யுய்த்த - மயலில் சீர்த் தொண்டனாரை." என்றும், திருவாய் மலர்ந்தருளினார்.  சீவர்களைச் சாக்ஷியாகக் குறியாமல் தமது திருவடியே சாக்ஷியாகக் குறித்துப் புண்ணியம் இயற்றும் பெருந்தன்மை உடையோருக்கு, சிவனே வெளிப்பட்டு வந்து, உலகமெங்கும் அவர் புகழை விளக்கி, யாவரும் அவரை வணங்கும்படி இடையறாத பேரின்பத்தைக் கொடுத்தருளுவர், அது, சிவன் இவர்களுக்கு வெளிப்பட்டு, இவர்களது செயற்கருஞ் செய்கையை உலகமெங்கும் அறியும்படி வெளிப்படுத்தி, "வென்றவைம் புலனான்மிக்கீர்" என்று தமது அருமைத் திருவாயினாலே புகழ்ந்து; இவர்களுக்குப் பேரின்ப வாழ்வைக் கொடுத்தருளினமையால்.  உணர்க.  இக்கருத்து நோக்கியன்றோ, வைராக்கிய சதக நூலாரும் "உன்னுகின்றனை யுனை மணோர் பெரியனென் றுணருமா செயவுன்பான் - மன்னு மீசனே பந்தம்வீ டளிப்பவன் மற்றைய ரறிந்தென்னா - மன்னவன் றிருப் பொன்னடி கரியதா வருந்தவஞ் செய் நெஞ்சே - பின்னை முன்னவ னுலகறிந்திறைஞ்சுமா பெருமைசெய் குவனோரே." என்றார்.

No comments:

Post a Comment