Thursday, February 10, 2011

காமத்தை ஒழித்து ஞானத்தை அருணகிரியாருக்கு துர்தேவதை வழிபாடு, மாந்த்ரீக- தாந்த்ரீக முறையில் நரபலி கொடுத்தல் என ஆன்மிகம் சீர்கெட்டுக் கிடந்த காலகட்டம். அப்போது சிவனின் அம்சமாக அவதரித்தார் ஆதிசங்கரர். சிறு வயதிலேயே சந்நியாசம் ஏற்ற அவர், நர்மதை நதிக்கரையிலுள்ள ஓங்காரேஸ்வரர் குகையில் கோவிந்த பகவத்பாதரை சந்திக்கச் சென்றார். கோவிந்தர், "யார்?' எனக் கேட்க, "சிவானந்த ரூபம் சிவோஹம்' என்றார் ஆதிசங்கரர். அதாவது "சிவானந்தமயமான சிவனே நான்' என்றார்.

அத்தகைய ஆதிசங்கரர், ஜீவனும் பரமனும் ஒன்றே என்னும் அத்வைதக் கொள்கையை ஸ்தாபித்தாலும், ஞான முதிர்ச்சி அடையாதவர்கள் உய்வுறும் வண்ணம் உருவ வழிபாட்டையும் போதித்து, அவரவர் உணர்வுகளுக்கேற்ப வழிபாடியற்ற காணாபத்யம் (விநாயகர்), சைவம் (சிவன்), சாக்தம் (சக்தி), வைணவம் (திருமால்), கௌமாரம் (முருகன்), சௌரம் (சூரியன்) ஆகிய ஆறு சமயங்களைப் பகுத்து வழிபடும் நெறியை விளக்கினார். சிருங்கேரி, துவாரகா, பதரி, பூரி, காஞ்சி போன்ற இடங்களில் தலைமை மடங்களை அமைத்து, சீடர்களையும் நியமித்து விட்டு கயிலாயம் ஏகினார்.
அந்த ஆதிசங்கரரே அருணகிரியாக அவதரித்தார் என்பர். அது எப்படி?

சுவாமிமலையில் சிவனுக்கு பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்து முருகப் பெருமான் தகப்பன் சுவாமியான கதை யாவரும் அறிந்ததே. அப்போது சிவன்,  ""பிரணவப் பொருளை நீ எவ்வாறு அறிந்தாய்?'' என கேட்க, ""தாங்கள் என் தாய் உமைக்கு உபதேசம் செய்தபோது, அவள் மயிலின் அழகைக் கண்டு ரசித்தாள். அதனால் கோபம் கொண்ட நீங்கள் அன்னையை மயிலாக மாறும்படி சபித்தீர்கள். பின்னர் அன்னை மயிலையில் மயிலுருவில் தவம் செய்து மீண்டும் சுய உரு பெற்றாள். அப்போது பிரணவப் பொருளைக் கேட்டதும் உணர்ந்ததும் அன்னை மடியிலிருந்த நானல்லவா?'' என்றார் முருகப் பெருமான்.

""அப்படியானால் அது முறையாக உபதேசம் பெற்றதற்குச் சமம் ஆகாது. எனவே நீ பூவுலகில் பிறந்து எனைப் பாடுவாயாக'' என்றார் சிவன்.

""அப்படியே ஆகட்டும். நான் பூவுலகில் பிறக்கும் சமயம் நீங்கள் தான் எனக்கு ஞானமளிக்க வேண்டும். மேலும் நீங்களும் பூவுலகில் பிறந்து தீந்தமிழால் எனைப் பாட வேண்டும்''என்றார்.

ஆக, முருகனே சீர்காழி யில் வைகாசி மாத மூல நட்சத்திரத்தில் ஞானசம்பந்தராகப் பிறந்து, சிவ- பார்வதி வந்து ஞானப் பாலூட்ட, "தோடுடைய செவியன்' என்று பாடத் தொடங்கி ஏராளமான பாசுரங்களை இறைவன்மேல் பாடினார். தனது 16 வயதில்- பலரும் சூழ்ந்திருக்க ஆச்சாள் புரம் கோவிலில் ஜோதி ரூபமாக சிவனுள் கலந்தார். சிவன் வேறு, குமரன் வேறல்ல. சூர சம்ஹாரத்திற்காக சிவனின் ஜோதியல்லவா முருகனாக அவதரித்தது!

சிவாம்சம் ஆதிசங்கரராக அவதரித்து மீண்டும் ஈசனுடன் கலந்ததல்லவா? அந்த சிவாம்சமே முருகனின் வேண்டுகோளுக்கிணங்க திருவண்ணாமலையில் ஆனி மாதம், மூல நட்சத்திரம், பௌர்ணமி திதியில் அருண கிரியாகப் பிறந்தது.

அருணகிரியாரின் தாயார் பெயர் ஆதி அம்மை. தந்தையின் பெயர் அறியக் கிடைக்கவில்லை. உரிய பருவத்தில் புராணங்கள், இதிகாசங்கள், வேதங்கள், நாடகம் உள்ளிட்ட கலைகளைப் பயின்ற அருணகிரியார், வாலிபப் பருவத்தில் காமக் கலையே பிரதானமென்று மூழ்கித் திளைத்தார். அருணகிரியாரின் தாய் மரண மடைவதற்குமுன் மகள் முத்துவிடம், "அருணகிரியின் மனம் நோகாத வண்ணம் பார்த்துக்கொள்' என்று கூறி மறைந்தார்.தம்பி அருணகிரியை எந்தக் குறையுமின்றி பராமரித்து வந்த முத்து, அவரின் களியாட்டங்களுக்கு வேண்டிய பொருளையும் கொடுக்க வேண்டியதாயிற்று. அதீத பெண்ணாசையில் உழன்ற அருணகிரிக்கு உடல்நலம் கெட்டது. அதன் காரணமாக விலைமாதர் அவரிடம் அதிக பணம் கேட்டனர். தம்பியின் தேவைக்கு பணம் கொடுக்க முடியாத இக்கட்டான சூழலில் ஒருநாள், அக்கா முத்து தன் தம்பியைப் பார்த்து, "உன் காமப் பசியை என் உடலிலேயே தீர்த்துக்கொள்' என்று மனமுடைந்து கூறினாள்.

அந்த சொற்கள் அருணகிரியின் உள்ளத்தைத் தைத்தன. நொறுங்கிய மனதுடன் வீட்டைவிட்டு வெளியேறிய அருணகிரி தான் செய்த தவறுகளை எண்ணி கண்ணீர் சிந்தினார். இவ்வுலகில் வாழ தனக்கு அருகதை இல்லை என்றெண்ணி உயிர் துறக்க எண்ணம் கொண்டார். அருணாசலர் கோவிலின் வள்ளால கோபுரத்தின் மீதேறி, அங்கிருந்து கீழே குதித்து உயிர்விடத் துணிந்தபோது, முருகப் பெருமான் தோன்றி தடுத்தாட்கொண்டார்.

அருணகிரிக்கு ஜெபமாலை தந்த முருகன், "எம்மைப் பாடுக' என்றார்.

என்ன பாடுவது என்று புரியாமல் அருணகிரி திகைக்க, "முத்தைத் தரு பத்தித் திருநகை' என்று முதல் அடியெடுத்துக் கொடுத்தார் முருகப் பெருமான். (பக்தியே முக்தியைத் தரும் என்னும் முருகப் பெருமானின் வாக்கு நோக்கத் தக்கது.) பின்னர் கவிமழை பொழிந்தார் அருணகிரியார்.

"திருச்சிக்கு அருகிலுள்ள குமாரவயலூருக்கு வா' என்று ஆணை கிடைக்க, அத்தலத்திற்குச் சென்றார் அருணகிரியார். அங்கு கோவில் கொண்டிருந்த விநாயகர், "முருகனின் புகழை மட்டுமில்லாது முருகனின் தலங்கள், வேல், மயில் வாகனம், சேவல் கொடி போன்றவற்றையும் பாடுக' என்று கூறி, அந்தப் பாக்களுக்கு "திருப்புகழ்' என்று பெயருமிட்டார்.

அன்றிரவு அருணகிரியின் கனவில் தோன்றிய முருகன், "விராலி மலைக்கு வா' என்று ஆணையிட்டார். காலையில் கண்விழித்த அருணகிரி விராலி மலை எங்குள்ளது என்று தெரியாமல் திகைக்க,  முருகப் பெருமானே ஒரு வயோதிகர் உருவில் வந்து அழைத்துச் சென்று விராலி மலையை அடைந்ததும் மறைந்தார். விராலி மலை, வயலூர் ஆகிய தலங்களைப் பற்றி ஏராளமான பாக்களைப் பாடியுள்ளார் அருணகிரியார். இன்றும் விராலி மலையில் புறா, காகங்களைப்போல ஏராளமான மயில்கள் இருப்பதைக் காணலாம். நாம் "முருகா' என்றால், அவை "குஹா' என்று எதிர்க்குரல் கொடுக்கும்.

சங்கர அவதாரமான ஆதிசங்கரர் அத்வைதம் (ஞான மார்க்கம்), அறுசமயம் (பக்தி மார்க்கம்) என இருவகையாகப் போதித்தார். அதுபோலவே அருணகிரியாரும் பல பாடல்களில் பக்தி நெறியுடன் ஞான நெறியையும் மனோலயமாகப் பாடியுள்ளார். அருணகிரியார் பாடல்களின் இறுதி அடி "பெருமாளே' என்று முடியும். பெருமாள் என்னும் சொல் திருமாலையும் குறிக்கும்; முருகனையும் குறிக்கும். அருணகிரியார் பெரும் + ஆள் = பெருமாள் என்னும் பொருளில் முருகனைக் குறிப்பிடுகிறார்.

அருணகிரியாரின் திருப்புகழை அறுசமயப் பாடல்கள் எனலாம். தன்னைத் தடுத்தாட்கொண்ட முருகப் பெருமானையே அவர் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டாலும், விநாயகர், சிவன், சக்தி, திருமால், சூரியன் ஆகியோரையும் இணைத்தே பாடியுள்ளார். ஆக, அவர் ஷண்முகத்தில் ஷண்மதங்களையும் பாடி, "யாவும் ஒன்றே; உருவ பேதங்களால் மயங்கக்கூடாது. அருவமாய் இருப்பவன் உருவமாகவும் உள்ளான்' என்று உணர்ந்து பாடியுள்ளார்.

அருணகிரியார் பாடியவை 16,000 பாடல்கள் என்பர். தற்போது கிடைத்துள்ளவையே 1330 பாடல்களே. இப்பாடல்கள் கிடைக்கக் காரணமான சுப்ரமண்யா பிள்ளை, செங்கல்வராயப் பிள்ளை ஆகியோரை நாம் நன்றியோடு எண்ண வேண்டும். காமத்துப் பாக்கள்என்றெண்ணி பெரும்பான்மையானவை நடைமுறையில் மறைந்து போயின.

கந்தர் அலங்காரம், திருவகுப்பு, மயில் விருத்தம், சேவல் விருத்தம், வேல் விருத்தம், கந்தர் அந்தாதி என்று பக்திச் சுவைமிக்க பாடல்கள் பல பாடினார். இவரது "திருஎழுகூற்றிருக்கை' என்னும் சித்திரக்கவி பாடல் கந்தபுராணச் சுருக்கமாய் அமைந்துள்ளது.

கடைசியாக கந்தர் அனுபூதி பாடி, கிளி வடிவமாக திருத்தணிகை கந்தன் கையில் அமர்ந்து, ஆனி மாத மூல நட்சத்திரத்தன்று இறையுடன் கலந்தார் என்பர்.

அருணகிரியாரின் பாடல்கள் தீந்தமிழ் சந்தப் பாடல்கள். அவரின் திருப்புகழை மெய்யுருகப் பாடி, முருகனின் அருள் பெற்று உய்வோமாக!

1 comment:

  1. அன்பரே, நற்பதிவு வாழ்த்துக்கள்

    ReplyDelete