Thursday, February 10, 2011

காமத்தை வெல்வது எப்படி?

ஒரு சிஷ்யன் பரமஹம்ஸரிடம் வந்து காமத்தை
எப்படி ஜெயிப்பது என்று கேட்டான்.
தான ஜபதபங்கள் செய்து வந்த போதிலும் தன் மனத்தில்
அடிக்கடி கெட்ட நினைவுகள் உண்டாவதாகத் தெரிவித்தான்.
அதற்குப் பகவான், பதில் சொன்னதாவது : -
“ஒரு மனிதன் ஒரு நாயை வெகு பிரியமாக வளர்த்து
வந்தான். அவன் அதனோடு கொஞ்சுவான்,
விளையாடுவான், அதைக் கைகளில்
தூக்கிக் கொண்டு போவான், அதை முத்தமிடுவான்.
இந்த முட்டாள்தனத்தை கவனித்த ஓர் அறிஞர், நாய்க்கு
அப்படி இடங்கொடுக்கக் கூடாதென்றும், அது பகுத்தறிவற்ற
பிராணியாதலால் என்றைக்காவது ஒரு நாள் அவனைக்
கடித்துவிடுமென்றும் கூறிவிட்டுச் சென்றனர். நாயின் எஜமானன்
இதைக் கேட்டு அதன்படி நடக்க எண்ணித் தன் மடிமீதிருந்த
அந்நாயைத் தூர எறிந்துவிட்டு, அதனோடு இனிமேல் ஒருபோதும்
கொஞ்சிக் குலாவுவதில்லை என்று தீர்மானம் பண்ணினான்.
தன் எஜமானனுடைய மனமாற்றத்தை நாய் அறியவில்லையாதலால்
அது அடிக்கடி அவனிடம் ஓடி வந்து குலாவத் தலைப்பட்டது.
நன்றாய்ப் பல தடவை அடிபட்ட பிறகுதான் அது தன்
எஜமானனைத் தொந்தரவு செய்வதை விட்டது. உனது நிலைமையும்
அப்படிப்பட்டதே.
உன் மனத்தில் இதுவரையில் வைத்துப் போற்றி வந்த நாயை நீ
விலக்க நினைத்தாலும் அது உன்னை எளிதில் விடாது. இருந்தாலும்
பாதகமில்லை. அந்த நாயோடு இனிமேல் கொஞ்சிக் குலாவாது,
உன்னிடம் அது குலாவ வரும்போதெல்லாம் அதை நன்றாய் அடி.
காலக்கிராமத்தில் அதனுடைய தொந்தரவுகள் உனக்கு முற்றிலும்
இல்லாமலே அகன்றொழியும்


இருக்கின்ற கட்டுப்பாடுகளிலேயே மிகவும் கடினமானது உணர்வுக் கட்டுப்பாடுதான். இவ்விஷயத்தில் கட்டுப்பாட்டைக் கொண்டு வர முடியாது என்ற எண்ணம் மனிதனுக்கு இருக்கிறது. காம உணர்வை அன்பு என்று நிறைய பேர் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். காமத்தின் தாக்குதலிலிருந்து தப்ப முடியாது என்று பரவலாக ஓர்அபிப்பிராயம் இருக்கிறது. காமத்தின் காரணமாக பெரிய குற்றங்கள் நிகழ்ந்துள்ளன. 

காம உணர்வைக் கட்டுப்படுத்துவதற்காக சமூகம், பலவிதமான கட்டுப்பாடுகளை உருவாக்கி இருக்கிறது. பெரும்பாலும் இந்தக் கட்டுப்பாடுகள் உடைக்கத்தான் படுகின்றன. அப்படியே காமம் தடுக்கப்பட்டாலும் பின்னால் அது பெரிய வெடிபோல் வெடிக்கத்தான் செய்கிறது. இதிலிருந்து நாம் என்ன புரிந்து கொள்ள வேண்டும் என்றால் கட்டுப்பாட்டுகளால் காமத்தை அடக்க முடியாது. காமத்தை விட உயர்ந்த தெய்வீக அன்பு என்ற ஒரு பெரிய சக்தியைக் கொண்டு தான் இந்த உணர்வையே நம்மால் திருவுருமாற்றம் செய்ய முடியும். தெய்வீக அன்பு என்ற ஒரு சக்தி உலகில் செயல்படாவிட்டால் உலகம் inconscient நிலைக்குப் போய்விடும். 

உணவுப் பழக்கம் என்பது பல்வேறு உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தக் கூடிய விடயமாக நமது நாட்டில் கருதப்படுகிறது. உதாரணமாக, துறவிகள், பூசாரிகள், சன்னியாசிகள் ஆகியோர் சாத்வீக (உப்பு, காரம் இல்லாத) உணவுகளை உட்கொள்கின்றனர். அந்த உணவின் மூலம் உடல் இயக்கத்திற்கு தேவையான சக்தி கிடைக்கும் என அவர்கள் கூறுகின்றனர்.

உடல் நலனை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாக உணவு திகழ்கிறது. ஆனால் உணவின் மூலமாக மட்டுமே ஒருவருக்கு காம எழுச்சி ஏற்படுவதில்லை. இந்த விடயத்தில் மனித மனத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும். 

எனவே, உணவுப் பழக்கத்தால் மட்டுமே காம இச்சையை குறைத்து விட முடியும் என்று எண்ணக் கூடாது.

வெங்காயம், பூண்டு, அசைவ உணவுகள் ஆகியவற்றைத் தவிர்த்து பாதி உப்பு, பாதி காரத்தில் மட்டும் சாப்பிட்டால் காம இச்சை முற்றிலுமாக அடங்கிவிடாது. மனதைக் கட்டுப்படுத்துவதற்கும் சில பயிற்சிகளைச் செய்ய வேண்டும். 

மனதை அடக்க தியானம் செய்வதே சிறந்தது என சில நூல்களில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இன்றைய நிலையில் தியானம் என்றால் என்னவென்றே பலருக்கு தெரியவில்லை. அதுபோன்றவர்கள் கடுமையான உடற்பயிற்சி, பயணம் மேற்கொள்ளலாம். 

உடற்பயிற்சிக்காக தனியாக நேரம் ஒதுக்க முடியாதவர்கள் அன்றாடப் பணிகளின் மூலம் தனது வேலைப்பளுவை அதிகரித்துக் கொள்ளலாம். தோட்டம் அமைக்கலாம், உளவாரப் பணிகளை மேற்கொள்ளலாம். இதனால் அவர்களுடைய உடலில் ஏற்படும் இச்சைகளும், மனதில் ஏற்படும் மாசுகளும் குறையும்/மறையும். 

ஒரு சிலர் ஆலயத்திற்கு உள்ளேயே தவறான காரியங்களில் ஈடுபடுகிறார்களே? என்று பலர் கேட்கலாம். எந்த வகையான உடல் உழைப்பும் இன்றி விதவிதமான உணவு வகைகளை உட்கொள்வதால் அவர்களுக்கு காமஇச்சை அதிகரித்து வழிதவறி இருக்கிறார்கள். 

எனவே, உடலை வருத்தி உழைத்து, ஏழை, எளிய மக்களுக்கு பயன்படும் விதத்தில் சில பணிகளை மேற்கொண்டால் மனம் தெளிவுபெறும். அதுமட்டுமின்றி காமம் நிலையானது அல்ல என்பதை சம்பந்தப்பட்டவர்கள் மனதளவில் உணர வேண்டும். 

அதனை உணர முடியாதவர்கள் மருத்துவமனைக்கு சென்று நோயாளிகளுக்கு சில பணிவிடைகளைச் செய்வதுடன், அவர்கள் படும் அவஸ்தைகளை பார்த்தால் உடல் நிலையற்றது என்ற எண்ணம் அவர்கள் மனதில் ஆணித்தரமாக பதிவாகிவிடும்.

பாலுணர்வுகளை மன தளவில் அடக்கி உடலளவில் அதன் தேவையையும் அடக்கலாம். அது இலகுவானது மனிதனைப் பொறுத்தவரை. கடினமானதல்ல. அதற்கு ஆண்கள் பெண்கள் தங்களைப் பழகப்பட்டுத்திக் கொண்டால் பாலியல் தவறுகள் நோய்கள் பெருகுவதும் கருக்கலைப்புகள் தொடர்வதும் தவிர்க்கப்படும்

1 comment:

  1. சமுதாயத்திற்கு தேவையான பொறுப்பான கட்டுரையைத் தந்த தங்களை உளமார பாராட்டுகிறோம்!

    ReplyDelete