Tuesday, February 15, 2011

நூல் விமர்சனம்: சில நேரங்களில் சில மனிதர்கள்


நாவல்: சில நேரங்களில் சில மனிதர்கள்
நாவலாசிரியர்: ஜெயகாந்தன்

இந்திய அரசின் பெறுமை மிகுந்த பரிசான சாகித்திய அகாதமி பரிசு பெற்ற, இந்த நாவல் தொடர்கதையாக வெளிவந்த காலத்திலும் சரி, பின்னர் புத்தகமாக வெளிவந்த பிறகும், அதற்கு பின்னர் திரைப்படமாக வெளிவந்த பிறகும் மிகுந்த சர்ச்சையை உருவாக்கிய, இன்றளவும் உருவாக்கிக் கொண்டிருக்கின்ற ஒரு நாவல் இது. பல ஆண்டுகளுக்கு முன்னர் இதனை வாசித்த ஞாபகம் உண்டு; திரைப்படத்தை பார்த்ததில்லை; நாவலை மீண்டும் வாசிப்போமே என்று நினைத்து இதனை இணையத்தின் வழி அண்மையில் வாங்கியிருந்தேன்.

இந்த நாவலின் முதல் பதிப்பு 1970ல் வெளிவந்து இப்போது நான் வாங்கியிருக்கும் இந்த வெள்ளைத்தால் பதினாறம் பதிப்பு வரை மறுபதிப்பு கண்டிருக்கும் இந்த நாவல் வியாபார அடிப்படையிலும் வெற்றிகண்டிருக்கின்றது. விலை ரூ100. தினமணிக் கதிரில் காலங்கள் மாறும் என்ற தலைப்பில் தொடராக இந்த நாவல் வெளிவந்து பின்னரே புதுப் பெயருக்கு மாற்றம் கண்டிருக்கின்றது.

நாவலின் ஆரம்பத்திலேயே ஜெயகாந்தன் சமுதாயத்தின் மேல் தனக்கிருக்கும் நிலைப்பாட்டை கதைக்கு முன்னுரை தருவது போல விளக்கிவிடுகின்றார்.

மனிதர்களை அதிலும் பெண்களுக்கு புனித நிலையை வழங்கி புனிதத்தன்மையோடு பார்க்க விரும்பும் தமிழ் (இந்திய) வாகர்களுக்கு /பிரியர்களுக்கு மனிதர்கள் இப்படியும் இருக்கின்றார்கள் என்று நிதர்சன வாழ்க்கையின் ஒரு சிறு பகுதியை இந்த நாவல் காட்டி அவர்களை சிந்திக்க வைத்திருக்கின்றது. மனித வாழ்க்கை புராணக் கதைகளில் வருகின்ற நாயகன் நாயக இலக்கணத்திற்கு உட்பட்ட ideal நிலைப்பாட்டுடன் அமைவதில்லை. வெளியே சிரித்துப் பேசிக்கொண்டு பற்பல விதமான முகமூடிகளைத் தேவைக்கேற்ப அணிந்து கொண்டிருக்கும் நம் எல்லோருக்குமே ஒரு தனிப்பட்ட ஒரு வாழ்க்கை இருக்கின்றது. அதில் அழகும் இருக்கின்றது; அசிங்கமும் இருக்கின்றது. வாழ்க்கை இப்படி அமைந்தால் நன்றாக இருக்குமே என கணவு காண முடியும்; அதற்கான முயற்சிகளில் இறங்கி ஓரளவு வெற்றியும் பெற முடியும்; ஆனால் இப்படித்தான் அமைந்திருக்க வேண்டும் என்று சட்டம் போடுவது அபத்தம். ஒருவருக்கு சரியான ஒரு நியாயம் மற்றவருக்கு வேறுபட்ட நிலைப்பாட்டை கொடுக்க முடியும். ஒரு நாட்டு மக்களுக்கு சரியாகப் படுகின்ற ஒரு நீதி மற்ற இன மக்களுக்கு வேடிக்கையான அல்லது ஒவ்வாத ஒரு விஷயமாகப் படலாம்.

ஆக இப்படி வேறுபட்ட நிலையிலான பல்வேறு மக்களுடன் நாம் ஒவ்வொரு கணமும் சேர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கின்ற நிலையில் இந்த நாவல் காட்டுகின்ற பிரச்சனை ஒரு தனி ரகம்.
நாவலின் முடிவு மனதை வேதனையுடன் பிசைந்தாலும் உண்மையை உண்மையாகப் பார்க்க வேண்டும் என்று ஆரம்பத்திலேயே ஜெயகாந்தன் போடுகின்ற கட்டளை கொஞ்சம் உதவுகின்றது.
இந்த நாவல் முழுவதுமே உளவியல் கூறுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப் பட்ட உண்மை சம்பவம் போல தோன்றுகின்றது. படிக்கின்ற ஒவ்வொரு வாசகரின் மன நிலை, பக்குவ முதிர்ச்சி, அடிப்படை, இதனைப் பொறுத்து வேறுபட்ட சலனங்களை வாசகர்களுக்கு இந்த கதை கொடுத்திருக்கின்றது என்பதை ஜெயகாந்தனின் முன்னுரையிலேயே தெரிந்து கொள்ள முடிகின்றது.

"ஒரு பாத்திரத்தின் மீது அர்த்தமில்லாத வெறுப்பும் அல்லது அசட்டுத்தனமான அனுதாபமும் கொள்ளுகின்ற வாசகர்கள் இலக்கியத்தின் மூலம் வாழ்வை புரிந்து கொள்ள மறுத்து விடுகின்றார்கள். இப்படியெல்லாம் நடக்குமா? இப்படியெல்லாம் நடக்கிறதா? இப்படியெல்லாம் நடக்கலாமா? என்கின்ற கேள்விகளுக்கெல்லாம் ஆம் ஆம் என பதில் கூறுகின்றது" என்று இந்த நாவலை முன்வைக்கின்றார் ஜெயகாந்தான்.

அருமையான நாவல்; வாசித்து முடிந்து மூன்று நாட்களாகியும் கங்காவும் பிரபுவும் என் மனதை விட்டு நீங்கவில்லை!

More Info :http://ksuba.blogspot.com/2004/12/blog-post.html

No comments:

Post a Comment