Friday, February 4, 2011

யாரையும் புகழ வேண்டாம்


* பிறரிடம் கூறி உங்களது கவலைகளைப் பெருக்கிக் கொள்ளாதீர்கள். 
கூறுவது என்று முடிவெடுத்தால் கடவுளிடம் மட்டும் கூறுங்கள்.
நம் கவலைகளை சர்வேஸ்வரனிடம் சொல்லி முறையிட்டால் நிச்சயம் வழி கிடைக்கும்.

* நான் ஒன்றுமே செய்யவில்லை. எல்லாவற்றையும் இறைவனே செய்கிறார் 
என்ற உறுதியான உணர்வு கொண்டவன் எந்த இடத்திலும் தவறு செய்ய வாய்ப்பே இல்லை. 
ஏனென்றால் அவன் எல்லா இடத்திலும் ஆண்டவனையே பார்க்கிறான்.

* நான் செய்கிறேன் என்ற எண்ணம் கொண்டவன் தான் செய்யும் நல்ல,
தீய செயல்களுக்குப் பொறுப்பாளியாகிறான். அவனுக்கு எல்லாச் செயல்களையும் 
கடவுள் செய்விக்கிறார் என்ற எண்ணம் உண்டாவதில்லை.

* எச்செயலையும் இறைவனுக்கு அர்ப்பணமாக்கி செய்யத் தொடங்கினால் அச்செயல் புனிதமாகி விடும். 
சாப்பிடுவதாக இருந்தாலும் இறைவனுக்கு அர்ப்பணம் செய்த பின்பே சாப்பிடும் போது உணவு புனிதமாகி விடுகிறது.

* ஆன்மிக வாழ்வின் நோக்கமே நமக்கு சொந்தமில்லாதவற்றை உதறி விடுவதாகும். 
இதைத் தான் துறத்தல் என்று குறிப்பிடுகிறார்கள். நமக்கு சொந்தமான கடவுளை மட்டும் பற்றி நிற்பதே 
உண்மையான ஆன்மிக நிலைப்பாடாகும்.

* யாரையும் புகழ வேண்டாம். புகழ்ச்சியை விரும்பவும் வேண்டாம். புகழை விரும்பினால் 
நம்மை அறியாமலேயே அகங்காரம் வளர்ந்து விடும். என்றும் ஒரே நிலையில் இருக்கும் கடவுளைத் தவிர 
வேறு யாரையும் புகழக்கூடாது.

-மாதா அமிர்தானந்த மயி:

No comments:

Post a Comment