அன்னக்கிளி திரைப்படத்தின் டைட்டில் எழுத்துகள் ஓடும்போது பின்னணியில் வேகமான கிராமிய தாளக்கருவிகள், நாதஸ்வர இசை, துள்ளும் தந்திக்கருவிகள் அனைத்தும் சேர்ந்து ஒலிக்கும். “இசை - இளையராஜா (அறிமுகம்)” என்ற இடத்தில் மட்டும் இந்த இசைக்கருவிகள் விநாடிக்கும் குறைவான நேரம் அமைதியாகி, மீண்டும் உற்சாகமாக அத்திரைப்படத்தின் துடிப்பான பாடலான ‘மச்சான பாத்தீங்களா’ பாட்டின் துடிப்பான பகுதிகளை இசைக்கத் தொடங்கும். கிராமிய இசையிலிருந்து இந்தப் பாட்டின் மெலடிக்கு மாறும் தருணத்தின் பொருத்தம் ஒரு புதிய இசையமைப்பாளர் தமிழில் களமிறங்கியிருக்கிறார் என்பதை கவனிக்க வைப்பதாய் இருக்கும். இளையராஜாவின் இசை பார்வையாளர்களின் கவனத்தைத் தன் பெயர் மீது மட்டும் திருப்பவதாக இல்லாமல், திரைப்படங்களின் பின்னணி இசை என்ற கலை மீதும் திருப்பியது. இளையராஜாவின் வருகை நிகழ்ந்திராவிட்டால், இன்று நாம் பேசிக்கொண்டிருக்கும் அளவுக்குத் தமிழ்த் திரைப்படங்களின் பின்னணி இசை குறித்து நாம் பேசியிருக்கமாட்டோம்.
மைய உணர்வைத்தரும் ‘தீம்’ (theme) இசையைத் தமிழ்த்திரைப்படங்களின் பின்னணி இசையில் புகுத்தியது இளையராஜா. Motif என்றழைக்கப்படும் மீண்டும் மீண்டும் இசைக்கப்படும் தீம் இசை மூலமாக, இளையராஜா ஒவ்வொரு திரைப்படத்துக்கும், அதன் கதாபாத்திரங்களுக்கும் தனித்துவமான ஆளுமையை உருவாக்கித் தருகிறார். (Motif என்பது பொதுவாக மீண்டும் மீண்டும் இசைக்கப்படும் தீம் இசை. Leitmotif - என்பது திரைப்படங்களில் ஒரு கதாபாத்திரத்தையோ, நிகழ்வையோ முக்கியப்படுத்தி இசைக்கப்படும் தீம் இசை). இந்த Motif, Leitmotif வடிவங்கள் மூலமாக, பார்வையாளர்கள் பின்னணி இசையை கவனித்துக் கேட்காவிட்டாலும், அந்த இசை வரும்போதெல்லாம் அனிச்சையாக அவர்களைக் கதாபாத்திரங்களோடும், நிகழ்வுகளோடும் தொடர்புபடுத்திக்கொள்ளச் செய்தார் இளையராஜா. இப்படிப்பட்ட பின்னணி மெலடியை சலிப்பேற்படுத்தாமல் வெவ்வேறு சிறு சிறு மாறுதல்களோடு படம் முழுதும் தருவார். உதாரணமாக தளபதி திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களான ரஜினியும் மம்முட்டியும் சந்திக்கும் இடங்கள் ‘தளபதி, எங்கள் தளபதி’ என்ற தீம் மூலமும், ரஜினி - ஷோபனா சந்திப்புகள் கல்யாணியில் இழையும் பின்னணி இசையாலும், ஸ்ரீவித்யாவின் கதாபாத்திரம் ஓர் ஒற்றைப் புல்லாங்குழல் மூலமும் அடையாளப்படுத்தப்பட்டிருக்கும். இவைபோக, வில்லன் கதாபாத்திரத்துக்கு வலுவான காற்றுக்கருவிகள், தந்திக்கருவிகள் சேர்க்கையும் அடையாளம் தரும். இந்தத் தீம் துணுக்குகள் இசைக்கப்படும்போதே பார்வையாளர்கள் அந்தச் சூழலுக்குள் நுழைந்துவிடுவார்கள்.
இளையராஜாவின் பின்னணி இசையில் நம்மை வியப்பிலாழ்த்தும் விஷயம் அதன் துல்லியம். ஒரு உணர்விலிருந்து இன்னொரு உணர்வுக்கான தீம் மெலடிக்குள் கனக்கச்சிதமாக, இசையனுபவத்தையும், திரைப்படச்சூழலையும் சிதைக்காமல் நகர முடிவது இளையராஜாவின் தனிச்சிறப்பு. இந்த நகர்வில் இளையராஜா காட்டும் நேர்த்தி இவரை உலகின் சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவராக்குகிறது. இளையராஜா ஒரு திரைப்படத்தை அதன் இயக்குநர் அளவுக்கு (பல சமயங்களில் அவருக்கும் மேலாக) புரிந்துகொண்டு உள்வாங்கிக்கொள்கிறார். அதனால்தான் விஷுவல் காட்சிகள் எப்படியிருந்தாலும், பின்னணி இசையின் தரம் எப்போதும் மிகவும் உயர்ந்ததாகவே இருக்கிறது. அதனால்தான் ஒரு நேர்த்தியான திரைப்படத்தின் பிற விஷயங்களைப்போலவே இளையராஜா அமைக்கும் பின்னணி இசையும் கவனிக்குப்புக்குரியதாகவே இருக்கிறது. 2010-இல் இளையராஜாவின் இசையோடு வெளிவந்த ஒரே தமிழ்த் திரைப்படமான மிஷ்கின் இயக்கிய நந்தலாலாவும் இளையராஜாவின் சிறப்பான பின்னணி இசையோடு வெளிவந்த நேர்த்தியான திரைப்படம்.
‘இளையராஜா இசையனுபவம்’ (Ilaiyaraaja musical) என்று சொல்லத்தக்க வகையில் நந்தலாலா திரைப்படத்தின் பின்னணி இசை, காட்சி உணர்வுகளின் மெலடிக்கேற்ப நடனமாடுவதாக இருக்கிறது. மிஷ்கின் இளையராஜாவின் பின்னணி இசையை விஷுவல் காட்சிகளுக்குப் பின்னணியாக மட்டுமில்லாமல் கதை சொல்லும் ஒரு கருவியாகவே உபயோகப்படுத்திக் கொண்டுள்ளார்; வெளிப்படையாகச் சொல்லமுடியும் கதையை விஷுவல் காட்சிப்படுத்தல் மூலம் சொல்லிக்கொண்டே, பின்னணியில் வெவ்வேறு கதை இழைகளை இளையராஜா மூலம் சொல்லியிருக்கிறார். நந்தலாலாவின் பின்னணி இசை குறைவான இசைக்கருவிகளின் கூட்டிசையையும் (orchestration), அதே சமயம் அழுத்தமான மெலடியையும் கொண்டதாக இருக்கிறது. இத்திரைப்படத்தில் வரும் ஒவ்வொரு இசைத்துணுக்கிலுமே தெளிவானதொரு மெலடி இருக்கிறது. ஒட்டுமொத்த உணர்வையும், சூழலையும் மட்டும் பிரதிபலிக்காமல் திரைப்படமாகவே மாறுகிறது இளையராஜாவின் இசை.
திரைப்படம் ஆரம்பமாகும்போது டைட்டிலில் இசைக்கப்படும் பின்னணி இசையில் கேட்கும் நீரோடையின் ஓசை தியானத்திலாழ்த்தும் மனோநிலையைத் தருகிறது. அந்த இசை தரும் அமைதி, படம் முழுதும் நாம் கேட்கவிருக்கும் இசையமைதியையும், கொண்டாட்டங்களையும் ரசிப்பதற்கான மனோநிலையைத் தருகிறது. இத்திரைப்படம் ஒரு சிறுவன் (அகி), ஒரு வளர்ந்த மனிதனுக்குள் இருக்கும் சிறுவன் (பாஸ்கர் மணி) - இருவரும் சேர்ந்து மேற்கொள்ளும் பயணம் குறித்தது. இருவரும் வெவ்வேறு காரணங்களுக்காகத் தத்தமது தாயைத் தேடி அந்தப் பயணத்தை மேற்கொள்கிறார்கள். ஆனால் அந்தப் பயணமோ திரைப்படம் தொடங்கும் சலசலத்தோடும் நீரோடையைப் போல அமைதியான ஒன்று இல்லை.
அகி திரையின் ஃப்ரேம் நடுவே நமக்கு முகத்தைக் காட்டாமல் தலை குனிந்தபடி நிற்கிறான். அவன் ஒரு பள்ளி யூனிஃபார்மை அணிந்திருக்கிறான். அவனுக்குப் பின்னால் மற்ற குழந்தைகள் தங்கள் பெற்றோரோடு பள்ளியிலிருந்து வெளியேறுகிறார்கள். அங்கே ஒரு அசாத்தியமான நிசப்தம் நிலவுகிறது. நமக்கு அது என்ன சிச்சுவேஷன் என்று புரியவில்லை. இளையராஜாவும் உணர்த்துவதில்லை. ஆனால் சில விநாடிகளிலேயே நமக்கு என்ன கதைச்சூழல் என்பதும், அந்த சிறுவன் யார், அவன் ஏன் தனியாக நின்று கொண்டிருக்கிறான் என்றும் புரிந்துபோகிறது. இங்கேதான் இளையராஜா, இத்திரைப்படத்தின் மைய இசையை (அகி தீம்) பியானோவில் இசைக்கிறார். இந்த இசைத்துணுக்கு மொத்த மெலடியையும் பியானோவில் வெளிப்படுத்திவிடுகிறது. அதற்கடுத்து, ஒரு வயலின் அந்த பியானோ மெலடியைத் தனதாக்கிக் கொண்டு இரக்க உணர்வை வெளிப்படுத்தும்படி இசைக்கிறது. இந்த இசைக்கருவி மாற்றம் மிகவும் முக்கியமானதான ஒன்றாகும். ஏனென்றால் திரை விஷுவலிலும் நமக்கு ஒரு புதிய தகவல் கிடைக்கிறது. அகி இப்போது தன்னந்தனியாக நின்று கொண்டிருக்கிறான். மற்ற எல்லா குழந்தைகளும் தத்தமது பெற்றோர்களோடு வீட்டுக்குப் போய்விட்டார்கள். அகியைக் கூட்டிச் செல்ல யாரும் வரவில்லை. அவன் பின்னணியில் இசைக்கப்படும் வயலினைப் போலவே தனியாக நின்றுகொண்டிருக்கிறான்.
அகி தன் அம்மாவின் புகைப்படத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறான்; அம்மாவைப் பார்ப்பதற்காக ஏங்கிக்கொண்டிருக்கிறான். இங்கே இளையராஜா மைய இசையை இப்போதுபுல்லாங்குழலில் தருகிறார். நள்ளிரவில் அகி தன் வீட்டுக்கு வெளியே ஏதோ ஒரு குழந்தை வீறிட்டு அழுவதைக் கேட்டு, அக்குழந்தையைத் தேடி வெளியே ஓடி வருகிறான். அக்குழந்தை ஏன் அழுகிறது என்ற கேள்வி எழுவதற்கு முன், “உன் அம்மா எங்கே?” என்பதுதான் அகி மனதில் எழும் கேள்வியாக இருக்கிறது. ஏனென்றால் அவனும் உள்ளுக்குள் அழுதுகொண்டிருக்கும் ஒரு குழந்தைதான். அதற்கான காரணமும் ‘அம்மா எங்கே?’ என்ற கேள்விதான். முதல்காட்சியில் வயலினிலிருந்து புல்லாங்குழலுக்கு மெலடி மாறியதைப் போலவே, இக்காட்சியிலும் புல்லாங்குழலுக்கு மாறுகிறது. அன்னைவயல் என்ற ஊரில் அவன் அம்மா வசிக்கிறாள். அவளைத் தேடி அந்த ஊருக்கு அகி மேற்கொள்ளும் பயணத்தைக் குறித்த குறிப்பு இன்னும் நமக்குக் கிடைக்கவில்லை. அப்படித்தான் நான் நினைத்தேன். ஆனால் இப்படி ஒரு பயணம் நிகழவிருப்பதை புல்லாங்குழலில் இசைக்கப்படும் ஒரு புதிய தீம் இசை மூலம் நமக்கு உணர்த்துகிறார் இளையராஜா. இந்த இசை மூலம் நமக்குக் கிடைக்கும் குறிப்பு என்ன? அதைத் தெரிந்துகொள்வதற்கு இத்திரைப்படத்தின் இன்னொரு கதாபாத்திரமான பாஸ்கர் மணியைப் பார்க்கவேண்டும்.
பாஸ்கர் மணி ஒரு மனநிலை சரியில்லாத மனிதன். அவனுடைய அம்மா அவனைக் காப்பகத்தில் விட்டுவிட்டுப் போய்விடுகிறாள். அதற்குப்பின் அவனை வந்து பார்த்ததேயில்லை. அவனும் தன் தாயைப் பார்க்க விரும்புகிறான். ஆனால் அதற்கான காரணம் வேறு. பாஸ்கர் மணி காப்பகத்தில் இன்னொரு நோயாளி ‘அம்மா’ என்று அரற்றிக்கொண்டே இருப்பதை ஒருநாள் கேட்கிறான். அடுத்த நாள் அந்தக் குரல் இறந்துவிடுகிறது. அதைக் குறித்து பாஸ்கர் சிந்திக்க ஆரம்பிக்கிறான். இளையராஜா இங்கே சென்ற காட்சியில் அகியின் ஏக்கத்துக்காக வாசித்த அதே புல்லாங்குழல் மெலடியை வாசிக்கிறார். இந்த இரு நிகழ்வுகள்தான் அகியும், பாஸ்கர் மணியும் மேற்கொள்ளும் பயணத்துக்கான உந்துதலாக இருக்க வேண்டும். இந்தக் குறிப்பை இளையராஜாவின் இசையைத் தவிர வேறு எதுவும் நமக்குத் தருவதில்லை.
இளையராஜா திரைப்படம் முழுதும் பாஸ்கர் மணியின் மாறிக்கொண்டேயிருக்கும் மனோநிலைக்கேற்ப வெவ்வேறு தீம் இசைகளைத் தந்தபடியே இருக்கிறார். ஒரு குழந்தை போன்ற மனநிலையைக் கொண்ட பாஸ்கர் மணிக்குக் கோபம் வரும்போதெல்லாம் அதை உணர்த்த ஒருஇருண்ட மெலடியைப் பயன்படுத்துகிறார் இளையராஜா. அது புல்லாங்குழலின் பாஸ் (bass) ரெஜிஸ்டர்களில் இசைக்கப்படுகிறது. இந்த தீம் இசை முதலில் அகியைக் காப்பாற்றுவதற்காக பாஸ்கர் மணி ஒரு திருடனோடு சண்டை போடும்போது இசைக்கப்படுகிறது. பாஸ்கர் மணியை யாராவது ‘மெண்டல்’ என்று சொன்னால் அவனுக்குக் கோபம் வரும். அப்படிக் கோபம் கொண்டு ஒருவனை அடிக்கும்போது இந்த இருண்ட மெலடியை மீண்டும் இசைக்கிறார் இளையராஜா. பாஸ்கர் மணியின் செய்கைகள் நமக்குப் புன்னகையை வரவைக்கும் தருணங்கள் ஏராளமாக இருக்கின்றன. லாரியிலிருந்து ஹார்னைத் திருடுவது, பீர் பாட்டிலை ஒருவர் தலையில் அடித்து உடைப்பது, கிலியேற்படுத்தும் சத்தமெழுப்பி ட்ரக் ட்ரைவர்களை பயமுறுத்துவது இப்படி. இப்படி எல்லா தருணங்களிலும் இளையராஜா ஒரு குறிப்பிட்ட இசையை இசைக்கிறார். ஆனால் இந்த இசை பாஸ்கர் மணியின் செய்கைகளுக்கு முன்பே இசைத்துவிடுகிறார். அந்த குறிப்பிட்ட தருணங்களில் நிசப்தம் நிலவுகிறது. இதனால்தான் நகைச்சுவை அவ்வளவு சிறப்பாக வெளிவருகிறது.
பாஸ்கர் மணி தன் பயணத்துக்காக சில்லறைக் காசுகளை சேகரித்து வைக்கிறான். ஒரு சிறியவைப்ரஃபோன் மெலடி இசைத்துணுக்கு பாஸ்கர் மணி பலரிடமிருந்து சில்லறைக் காசுகளைச் சேகரிக்கும் எல்லா காட்சிகளையும் தொடர்புபடுத்துகிறது. பாஸ்கர் மணி அகியின் பெட்டியிலிருந்து காசுகளைத் திருடும்போதும், பெட்டியைத் திருப்பிக் கொடுக்கும்போதும் இசைக்கப்படுகிறது. விஷுவல்களோடு சேர்த்து இந்த இசை நம்மைப் புன்னகைக்க வைக்கிறது. ஆனால் அதையும் தாண்டியதொரு ஆழமான முக்கியத்துவம் இந்தத் தீம் இசையின் இறுதியில் வரும் ஒரு சிறிய சிந்தடிக் மெலடியில் பொதிந்திருக்கிறது.
பாஸ்கர் மணி தாய்வாசல் என்ற ஊரிலிருக்கும் தன் அம்மாவைப் பார்க்கச் செல்வதற்கான பயணத்துக்காக அந்தக் காசுகளைச் சேகரிக்கிறான். அந்த சிறிய சிந்தடிக் மெலடி உண்மையில் அந்த நீண்ட பயணத்துக்கான தீம் இசையின் ஒரு துளி. பாஸ்கர் மணி காப்பகத்திலிருந்து தப்பிக்கும்போது இளையராஜா தாளக்கருவிகளை இசைக்கிறார். காட்சியில் மலர்ந்து விரிந்திருக்கும் சிகப்புப்பூக்கள் ஃபோகஸ் செய்யப்படும்போது, பின்னணியில் துள்ளலான synth இசை கேட்கிறது. அது பாஸ்கர் மணி அனுபவித்துக்கொண்டிருக்கும் புதிய சுதந்திரத்தை முன்னிலைப்படுத்துகிறது. இந்த இசைத்துணுக்கும் பாஸ்கர் மணி மேற்கொள்ளும் பயணத்தின் தீம் இசையின் ஒரு சிறிய துணுக்கோடு முடிகிறது.
பயணத்துக்கு முன்பே வரும் காட்சிகளில் பொருத்தமான இடங்களில் பயணத்தின் தீம் இசையின் சில துணுக்குகளை நுட்பமாக உபயோகித்ததன் மூலம், இளையராஜா இப்படியொரு பயணம் வரப்போகிறது என்பதை நமக்கு உணர்த்தியபடியே இருக்கிறார். அகியும், பாஸ்கரும் தங்கள் பயணத்தைத் தொடங்கும்போது முதல்முறையாக தீம் இசை நமக்கு முழுமையாகக் கேட்கக் கிடைக்கிறது. அப்போது ஓபோ, புல்லாங்குழல் இரண்டிலும் இந்த தீம் இசை வாசிக்கப்படுகிறது. இந்தப் பயண இசை படம் முழுக்க மீண்டும் மீண்டும் இசைக்கப்படுகிறது. குறிப்பாக எங்கெல்லாம் அவர்கள் ஓய்வுக்குப்பின்னோ, விபத்துக்குப் பின்னோ, ஒரு புதிய மனிதரை சந்தித்துவிட்டோ தங்கள் பயணத்தைத் தொடர்கிறார்களோ அப்போதெல்லாம் இசைக்கப்படுகிறது.
இளையராஜா இந்தப் பயண இசையோடு தொடர்ந்து விளையாடியபடியே இருக்கிறார். இந்தத் தீம் இசை நுட்பமாக வெவ்வேறு வடிவங்களில் வந்தபடியே இருக்கிறது. அதை மிக நுணுக்கமான, நுட்பமாக வேறுபடுத்துவதற்கு பின்னணியில் இருக்கும் தாளகதியை உபயோகித்துக்கொள்கிறார். முதன்முதலில் இந்தத் தீம் இசையைக் கேட்கும்போது அதன் தாளத்தில் ஒருவித நிலையின்மை இருக்கும். மெலடியோடு இயைந்து போகும் அளவுக்கு அந்தத் தாளகதிக்கு நம்பிக்கை இருப்பதாகத் தோன்றாது. பயணத்தின் ஆரம்பத்தில் பாஸ்கர் மணிக்கும், அகிக்கும் தங்கள் பயணத்தைக் குறித்து இருக்கும் மனக்கிலேசங்களையும், உறுதியின்மையையும் இதன் மூலம் வெளிப்படுத்துகிறார் இளையராஜா. ஆனால் கதை முன்னகர, முன்னகர இந்தத் தாளகதி தனக்கென ஒரு உறுதியான வடிவத்தைக் கொண்டுகொள்கிறது. அப்போது ஆரம்ப சந்தேகங்கள் மறைந்து பயணமும் ஒரு நிலைக்கு வந்துவிடுகிறது.
பாஸ்கர் மணியும், அகியும் பயணத்தை மேற்கொள்வதற்கான காரணங்களைக் குறித்துப் பேசிக்கொள்கிறார்கள். பாஸ்கர் மணி, அகியிடம், “அம்மாவைப் பார்த்தவும் என்ன செய்வாய்?” என்று கேட்கிறான். “கட்டிப்பிடித்து முத்தமிடுவேன்” என்று பதில் சொல்கிறான் அகி. அகி அப்படி பதில் சொன்னவுடன், இளையராஜா ஒரு ஆச்சரியக்குறியைத் தன் ஒற்றைப் புல்லாங்குழல்மூலம் இசைக்கிறார். அதன்பின் பயணம் மீண்டும் தீம் இசையோடு தொடர்கிறது. அவர்களுடைய பயணம் ஒரு கிராமத்தில் நடக்கும் சாதிச்சண்டையால் தடையாகிறது. பிரதான சாலையிலிருந்து திரும்பி அவர்கள் வேறு வழியே பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. ஓர் ஊனமுற்ற மனிதர் அவர்களுக்கு வழித்துணையாக வருகிறார். இளையராஜா இங்கே பயண இசையை இசைக்கிறார். இங்கே பயண இசையோடு அதன் தாளகதி தெளிவாகப் பொருந்திப் போவதை முக்கியமாகக் கவனிக்கவேண்டும். மேடுபள்ளமான சாலையில் நடக்கமுடியாமல் ஊனமுற்ற மனிதர் மீண்டும் மீண்டும் கீழே விழுகிறார். ஒரு கட்டத்தில் அவர் அழ ஆரம்பிக்கிறார். அவர் தன் வாழ்க்கையையும் முக்கியமாகத் தன் தாயையும் வெறுக்க ஆரம்பிக்கிறார். இப்போது கதையின் குவிமையம் அகி, பாஸ்கர் மணி இருவரிடமிருந்து அந்த ஊனமுற்ற மனிதர் மீது விழுகிறது. அதனால்தானோ என்னவோ, அந்த மனிதர் மீண்டும் எழுந்து பயணத்தைத் தொடரும்போது பயண இசை பின்னணியில் தாளக்கருவி இல்லாமல், பல தந்திக்கருவிகளின் துணையோடு இசைக்கப்படுகிறது.
இந்தக் கட்டம் வரை நாம் பயண இசையை ஓபோ இசைக்கருவியில் மட்டுமே கேட்கிறோம். ஆனால் அகியும், பாஸ்கர் மணியும் அன்னைவயல் கிராமத்தை அடைந்து அகி ஒவ்வொரு வீடாக ஓடிச்சென்றுத் தன் அம்மாவைத் தேடும்போது இந்த தீம் இசை ஒரு புதிய வடிவத்தைஅடைகிறது. இப்போது இந்தத் தீம் மெலடி ஒரு ஒற்றை வாத்தியக்கருவியால் இசைக்கப்பட்டு, புல்லாங்குழல், ஓபோ, தந்திக்கருவிகளால் ஒத்திசைக்கப்படுகிறது. இந்த இடத்தில் பயணத்துக்கு இசைக்கப்படும் மேற்கத்திய இசை வடிவமான கோடா போல இந்தத் தீம் இசை இருக்கிறது. மேற்கத்திய இசையில் கோடா (coda) என்பது ஒரு இசைக்கோர்வையின் இறுதியில் இசைக்கப்படுவது. இந்த இடத்தில் பயணம் முடிந்துபோகலாம் என்பதை இசை நமக்கு உணர்த்துகிறது.
ஆனால் விதியின் திட்டங்கள் வேறு விதமாக இருக்கின்றன. பயணத்துக்கான தீம் இசை அதற்குப்பின் தன் மூல வடிவத்துக்கு வருவதேயில்லை. பாஸ்கர் மணி அகியின் அம்மாவைக் குறித்தத் தகவலால் மனச்சுமைக்கு ஆளாகிறான். அவன் தன் வெகுளித்தனத்தைத் தொலைக்கிறான். அகியோ தன் அம்மாவை அன்னைவயலில் காணாமல் மிகுந்த மனத்துயரில் இருக்கிறான். அவர்கள் மனோநிலை பயணத்தின் ஆரம்பத்தில் இருந்தது போல் சந்தோஷமாகவோ, நம்பிக்கையுடனோ இனி எப்போதும் இருக்கப்போவதில்லை. இந்த மனோநிலை மாற்றம் அகியும், பாஸ்கர் மணியும் அன்னைவயலிலிருந்து தாய்வாசலுக்கு மேற்கொள்ளும் பயணத்தின்போது நன்றாகத் தெரியவருகிறது. அவர்கள் நெடுஞ்சாலையில் பயணம் மேற்கொள்கிறார்கள். இப்போது இசைக்கப்படும் தீம் இசை புல்லாங்குழலில் மட்டுமே கேட்கிறது. ஓபோ இசைக்கப்படுவதில்லை. மேலும், இந்தப் பயணத்தில் அதற்குப்பின் ஓபோ உபயோகிக்கப்படுவதேயில்லை.
அந்தத் தருணம் வந்துவிட்டது. நாமும், பாஸ்கர் மணியும் அகியின் அம்மாவை சந்திக்கப்போகிறோம். முன்னணியில் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கும் தீம் இசை இங்கே ஒரு தற்காலிக நிறுத்தத்துக்கு வருகிறது. பாஸ்கர் மணி வீட்டுக்குள் நுழையும்போது பெரிய நிசப்தம் நிலவுகிறது. பாஸ்கர் மணி அகி அம்மாவின் வீட்டைக் கண்டுபிடித்துவிட்டதை நாம் உணர்கிறோம். அகியின் அம்மா பாஸ்கர் பணியைப் பார்க்கிறார். தந்திக்கருவிகள் மெல்ல மெல்ல நாம் ஏற்கனவே அறிந்ததொரு தீம் இசையை வாசிக்கத் தொடங்குகின்றன. அதை நாம் அப்போது அறிவதில்லை. அகியின் அம்மா பாஸ்கர் மணியை வீட்டுக்குள் அழைத்துச் சென்று பேசத்தொடங்குகிறார். அவர் என்ன சொல்கிறார் என்று நமக்குக் கேட்கவில்லை. கொஞ்ச கொஞ்சமாகக் கசிந்து கொண்டிருக்கும் தீம் இசை - அதை ‘ஏங்கவைக்கும் தீம்’ (Yearning Theme) என்று அழைப்போம் - ஒரு பெரிய தந்திக்கருவிகளின் ஆர்க்கெஸ்ட்ராவாக விரிவடைகிறது. ஒவ்வொரு வயலின் லேயரும் மற்ற லேயர் வயலின் வாத்தியங்களுக்கு எதிர்-இணையாக (counter) வருகிறது. இசை காட்சியை ஊடுருவிச் சென்று ஆழமான உணர்ச்சிகளை ஏற்படுத்துகிறது. தன் அம்மாவைப் பார்க்க முடியாத அகியைப் பார்த்து நம்மைப் பரிதாபம் கொள்ளவைக்கிறது. அம்மாவைப் பார்க்க முடியாதது மட்டுமல்ல, தன் அம்மா அன்னைவயலில் இல்லை என்றும் தெரிந்து நொறுங்கிப் போகப்போகும் அகியை நினைத்து உருக வைக்கிறது. நாம் இந்த ஏங்கவைக்கும் தீம் இசையைக் கேட்பது முதல்முறையல்ல.
‘ஏங்கவைக்கும் தீம்’ இசை படம் முழுதும் வெவ்வேறு காட்சிகளில், வெவ்வேறு உணர்ச்சிகளில் கேட்டுக்கொண்டேயிருக்கிறது. முதல்முறையாக அதை நாம் ஓர் ஒற்றை ஓபோ இசையாகக்கேட்டிருக்கிறோம். பாஸ்கர் மணி தன்னை ‘மெண்ட்டல்’ என்று திட்டியவனை அடித்தபின் அழும் காட்சியில் அது இசைக்கப்படுகிறது. ஊனமுற்றவர் தன் தாயைத் திட்டும் காட்சியில் திருட்டுத்தனமாக உள்ளே வந்துபோகிறது. ஆச்சரியப்படுத்தும்வகையில் அவரைக் குணப்படுத்தும் மருத்துவரும் ஊனமுற்றவர்தான் என்று தெரிந்து ஒரு வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுக்கொள்ளும் வேளையிலும் இந்தத் தீம் இசை இசைக்கப்படுகிறது. மேரி மாதாவின் சிலையைக் கண்கொட்டாமல் பாஸ்கர் மணி பார்க்கும் காட்சியிலும் இந்தத் தீம் இசைஇசைக்கப்படுகிறது. ஒரு மலைப்பாம்பு அகி-பாஸ்கர் மணி இருவர் தூக்கத்துக்கும் தொந்தரவு கொடுக்காமல் தன் பாட்டுக்குத் தன் பயணத்தை மேற்கொள்ளும் இடத்திலும் இதே தீம் இசைஇசைக்கப்படுகிறது. முதல்முறை நாம் கேட்டவடிவத்திலேயே அகி பாஸ்கர் மணியைப் பார்த்து ‘போடா மெண்ட்டல்’ என்று கத்தும் இடத்தில் இந்தத் தீம் இசை கடைசியாக இசைக்கப்பட்டுவட்டம் முழுமையடைகிறது.
பயணம் முழுக்க அகியும், பாஸ்கர் மணியும் புதிய புதிய மனிதர்களைச் சந்தித்துக் கொண்டேயிருக்கிறார்கள். அந்த மனிதர்களுக்கு அகியும், பாஸ்கர் மணியும் உதவும் தருணங்களும் இருக்கின்றன. அவர்கள் செய்யும் உதவிகள், வெகு சிறிதாக இருந்தாலும், அவை அந்தந்த சமயங்களுக்கு மிகவும் தேவையான, அவசியமான உதவிகள். இளையராஜா இப்படிப்பட்ட தருணங்களுக்காகவே ஒரு தீம் இசையை உருவாக்கியிருக்கிறார். அது இந்த இருவரின் வெகுளித்தனமான அன்பையும், கருணையையும் வெளிப்படுத்துவதாக இருக்கிறது.
ஒரு சிறுமி சைக்கிளிலிருந்து கீழே விழுந்துவிடுகிறாள். பாஸ்கர் மணி வெகுளியாக அந்தப் பெண்ணின் துணியை விலக்கிக் காயத்தைப் பார்க்க முயற்சிக்கிறான். அந்தச் சிறுமி அவனை அறைந்துவிடுகிறாள். அவன் மீண்டும் முயற்சிக்கிறான். அவள் மீண்டும் அறைகிறாள். அவன் அதற்குப்பின்னும் முயற்சிக்கும்போது, அவள் கையை உயர்த்திப் பாதியிலேயே நிறுத்திவிடுகிறாள். அவனுடைய குரலிலிருக்கும் அப்பாவித்தனம் அவனுடைய நல்லெண்ணத்தை அப்பெண்ணுக்கு உணர்த்துகிறது. இளையராஜா கிடாரில் ஒரு மென்மையான தாலாட்டாக ஆரம்பிக்கிறார். கூடவே சற்று நேரத்தில் அன்பையும், பிரியத்தையும் உணர்த்தும் உயிரை உருக்கும் ஒரு ஒற்றைப் புல்லாங்குழலும் சேர்ந்து கொள்கிறது. இதே இசைத்துணுக்கு பாஸ்கர் மணியும், அகியும் இளநீர் விற்கும் ஒரு கிழவிக்கு உதவும் இடத்திலும் இசைக்கப்படுகிறது.
ஒரு நீண்ட இடைவெளிக்குப்பின் அகி தீம் இசை இடைவேளைக்கு முந்தைய காட்சியில்இசைக்கப்படுகிறது. பல்வேறு வாத்தியங்களின் கூட்டிசை வடிவம் பாஸ்கர் மணி, அகியின் கையைப் பிடித்துக்கொண்டு ஒரு தாயைப் போல அன்னைவயலிலிருந்து வெளியேறும்போது இசைக்கப்படுகிறது. இந்தத் தீம் இசை திரைப்படத்தின் பின்பகுதியிலும் முக்கியமான தருணங்களில் இசைக்கப்படுகிறது.
அகி, பாஸ்கர் மணி இருவரோடும் இப்போதும் இன்னொரு பெண்ணும் சேர்ந்து கொள்கிறாள். பாஸ்கர் மணி அப்பெண்ணை அவள் விருப்பத்துக்கு மாறாக அவளை கட்டாயப்படுத்திக்கொண்டிருந்ததொரு வயதான மனிதனிடமிருந்து அவளைக் காப்பாற்றியிருக்கிறான். ட்ரக் ஓட்டும்போது தூங்கிவிடும் நாஸர் இவர்களுக்கு உதவுகிறார். இந்தக் காட்சி முழுவதும் துள்ளலான தந்திகளில் மீட்டப்படும் அகி தீம் இசையால் நிரம்பியிருக்கிறது. இந்த இசையைத் தவிர பின்னணியில் காட்சிக்குத் தேவையான ரோட்டிலிருந்து தடம்புரளும் வண்டி சத்தத்தையும், நொறுங்கிய வண்டியைக் கிழவர் கோபமாகக் குச்சியால் அடிக்கும் ஒலியையும் மட்டுமே கேட்கிறோம். இந்தத் தீம் இசை உள்ளார்ந்த அர்த்தங்களைப் பேசும் அதே வேளையில், அதிலிருக்கும் கனவுத்தன்மை விஷுவல்களின் தாளகதியோடு ஒத்துப்போகிறது.
பாஸ்கர் மணி அந்தப் புதிய பெண்ணிடம் அகியின் அம்மாவாக இருக்க விருப்பமா எனக் கேட்கிறான். அவள் சம்மதமாகத் தலையசைக்கிறாள். பாஸ்கர் மணி மகிழ்ச்சியடைகிறான். அந்த மூன்று பேரும் இப்போது தாய்வாசல் கிராம எல்லையில் நிற்கிறார்கள். அகி தன் தாயைத் தேடி ஒவ்வொரு கதவாகத் தட்டுகிறான். திரும்பிவரும் அகி, பாஸ்கர்மணியிடம் தன் அம்மா எங்கே எனக் கேட்கிறான். பாஸ்கர் மணி கைநீட்டும் திசையில் ஓடுகிறான் அகி. ஏற்கனவே அந்தத் தெருவில் அகியின் அம்மாவைத் தேடிச் சென்றிருக்கும் பெண் திரும்பிவருகிறாள். அப்பெண்ணும், அகியும் சந்தித்துக்கொள்கிறார்கள். வெறும் இசையனுபவம் என்ற வகையில் உண்மையில் இளையராஜா இந்த இடத்தில் அகி தீம் இசையையோ, ‘ஏங்கவைக்கும் தீம்’ இசையையோதான் வாசித்திருக்க வேண்டும். ஏனென்றால் கதை அகியின் பார்வையிலிருந்து இன்னும் அம்மாவைத் தேடுவதாகவே இருக்கிறது. ஆனால் இளையராஜா அகியின் பார்வையிலிருந்து நகர்ந்து ஒரு பறவைப்பார்வையாகக் கதையைப் பார்க்கிறார். அங்கே காற்றில் மகிழ்ச்சியைத் தூவும் ஒரு பரவசமான கூட்டிசையை வாசிக்கிறார். ஏனென்றால் அகிக்கு ஏற்கனவே ஒரு தாய் கிடைத்துவிட்டாள். பாஸ்கர் மணிக்கு அது தெரியும். பார்வையாளர்களாக நமக்கும் தெரியும். ஆனால் அகிக்கு மட்டும் இன்னும் தெரியவில்லை.
அகி, பாஸ்கர் மணி, அந்தப்பெண் மூவரும் மீண்டும் ஒரு ட்ரக்கில் பயணிக்கிறார்கள். அவர்கள் தங்கள் பயணத்திலிருந்து திரும்பிக்கொண்டிருக்கிறார்கள். தற்செயல்களின் தற்செயலாக, அகி அவனுடைய உண்மையான அம்மாவைச் சந்திக்கிறான். அவள் தன் குடும்பத்தோடு ஒரு திறந்த ஜீப்பில் பயணித்துக்கொண்டிருக்கிறாள். அகியின் கண்களும், அவன் அம்மாவின் கண்களும் சந்திக்கும் இடத்தில் இளையராஜா அகி தீம் இசையை தந்திக்கருவிகளில் சோகம் இழையஇசைக்கிறார். அகி தன் கைகளிலிருந்து அவன் அம்மாவின் படத்தைத் தவறவிடுகிறான். அவன் திரும்பிக்கொள்கிறான். இசை சில கணங்களுக்கு நின்று நிசப்தமாகிறது. அகி தன் பயணத்தில் உடன் வரும் பெண்ணை நெருங்கி நிற்கிறான். ஓபோ, புல்லாங்குழல் இரண்டும் அகியின் மனநிலையை வெளிப்படுத்தி ஒரு டூயட்டைப் பாடுகின்றன. அகி அப்பெண்ண கட்டியணைத்து, முத்தமிட்டுத் தன் தாயாக ஏற்றுக்கொள்கிறான். ஓர் ஒற்றை வயலின் தெய்வீகமான மெலடி ஒன்றை இசைத்து அகியின் ஒப்புதலைத் தெரிவிக்கிறது. எல்லாம் தன் இயல்பு நீரோட்டத்துக்குத் திரும்புகிறது. நாம் டைட்டில் இசையில் பார்த்ததைப் போன்றதொரு அமைதி நிலைக்கு வாழ்க்கை திரும்புகிறது.
அகி, தன் அம்மாவோடு பள்ளியிலிருந்து கிளம்பும்போது, அகி தீம் இசை கடைசியாக ஒருமுறை பியானோவின் இனிமையான பின்னணியோடு கேட்கிறது. பலூன் விற்றுக்கொண்டிருக்கும் பாஸ்கர் மணியைப் பார்க்கிறான் அகி. பாஸ்கர் மணி அகிக்கு ஒரு பலூனைப் பரிசளித்துவிட்டு நடக்கத் தொடங்குகிறான். அத்தோடு படம் முடிகிறது. பட இறுதியில் வரும் டைட்டில் இசைத்துணுக்கின் ஆரம்பத்தில் வரும் ஒரே ஸ்வரத்தில் நீண்டநேரம் சுழன்று கொஞ்ச கொஞ்சமாக மறைந்துபோகும் (fade) ஓபோவைப் போன்ற தெய்வீகமான ஒலிகள் இந்த உலகத்தில் வெகு குறைவு.
இன்னும் புரிந்துகொள்ளப்படவேண்டிய எத்தனையோ இசைத்துணுக்குகள் இத்திரைப்படத்தில் எத்தனையோ இருக்கின்றன. சில கேள்விகளும் இருக்கின்றன. இளையராஜா ஒரு குறிப்பிட்ட காட்சியில் மட்டும் சிந்தட்டிக் புல்லாங்குழலில் மெலடியை முழுக்க வாசிக்கிறார். படம் முழுக்க உண்மையான புல்லாங்குழலும், ஓபோவும் இசைக்கப்பட்டிருக்கும்போது ஒரு காட்சியில் மட்டும் ஏன் சிந்தட்டிக் புல்லாங்குழலை அவர் உபயோகித்திருக்கிறார்? அவரைக் கேட்டால் நம்மைப் பார்த்துப் புன்னகைத்துக்கொண்டே அவர் சொல்லக்கூடிய பதில்: “எனக்குத் தெரியவில்லை. அந்த நேரத்தில் எனக்குத் தோன்றியது அது. நான் அதையெல்லாம் பற்றி நிறைய யோசிப்பதில்லை. நீங்கள் ஒரு பறவையிடம் போய் அது எப்படிப் பறக்கிறது என்று கேட்கிறீர்களா என்ன?” என்பதாக இருக்கும்.
இந்தத் திரைப்படத்தில் இளையராஜாவின் இசை உரத்து ஒலிக்கிறது என்று சிலர் எழுதியிருந்ததைப் படித்தேன். ஒரு திரைப்படத்தில், எந்தத் தருணத்திலும் மூன்று அடிப்படை ஒலியிழைகள் இருக்கின்றன. சுற்றுச்சூழல் ஒலிகள், கதாபாத்திரங்களின் உரையாடல், பின்னணி இசை என்பவைதான் அவை. சுற்றுச்சூழல் ஒலிகளோடும், கதாபாத்திரங்களின் உரையாடலோடும் இணைந்து கதையைச் சொல்ல உதவுவதாகப் பின்னணி இசை இருக்க வேண்டும். ஒரு இசைத்துணுக்கு பின்னணி இசையாக இருக்கவேண்டும் என்றால் அது வேறெதோ ஒரு விஷயத்துக்குப் பின்னணியில் இருக்க வேண்டும். ஆனால் நந்தலாலாவில் பின்னணி இசை பின்னணியில் இருக்க, முன்னணியில் இருக்கும் ஒலி வெகு வெகு குறைவு.
நந்தலாலா ஒரு சிறுவன், இளைஞன் இருவரும் சேர்ந்து மேற்கொள்ளும் ஒரு பயணத்தின் காட்சிக்கலவையாகவே (montage) நமக்குக் காட்டப்படுகிறது. படத்தில் வெகு வெகு சில வசனங்களே இருக்கின்றன. காட்சிக்கு வெகு வெகு அத்தியாவசமான சுற்றுச்சூழல் ஒலித்துணுக்குகள் மட்டுமே வெகு வெகு குறைவாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. உதாரணமாக லாரியோடு நாசர் வரும் காட்சியில் ட்ரக் சத்தமே soundtrack-இல் கிடையாது. விபத்து நடந்த சத்தம் கேட்டு நாசர் விழித்துக்கொண்டு, நாசர் ஹார்ன் அடிப்பது மட்டுமே அந்தக் காட்சியில் நாம் கேட்கும் சூழலொலி. ஏனென்றால் அந்த ஒலி மட்டுமே காட்சிக்கு அவசியமானதாக இருக்கிறது. முதல் காட்சியில் சிறுவன் பள்ளி வாசலில் நின்று கொண்டிருக்கும்போது நமக்குப் பிற சிறுவர்களின் ஒலி, உண்மையான புறச்சூழல் சத்தமே பதிவு செய்யப்படவில்லை. இந்த புறச்சூழல் ஒலி ஒரு யதார்த்தமான படத்துக்கு அவசியமான ஒன்று. ஆனால் ஒரு பேட்டியில் மிஷ்கின் தான் யதார்த்தமான படங்களை எடுக்க விரும்பவில்லை என்று தெரிவித்திருந்தார். ஆக, எங்கே புறச்சூழல் ஒலி வரவேண்டும், பின்னணி இசை எந்த ஒலியளவில் எப்படிச் செயல்படவேண்டும் என்பதை இயக்குநர்தான் முடிவு செய்யவேண்டும். இந்தப் புறச்சூழல் ஒலியோ, வசனங்களோ இல்லாத பட்சத்தில் பின்னணி இசை மட்டுமே நாம் கேட்கும் soundtrack-ஆக இருக்கும். ஒரு இயக்குநர் விரும்பினால் ஒரு தேர்ந்த இசையமைப்பாளரைக் கொண்டு, வேறெந்த ஒலியும் இல்லாமல் பின்னணி இசையை மட்டுமே வைத்துக்கொண்டு கதையை சுவாரசியமாகவும், உணர்வுபூர்வமாகவும் சொல்லிவிடமுடியும். அதைத்தான் மிஷ்கின் நந்தலாலாவில் செய்திருக்கிறார். மேலும், நந்தலாலாவில் புறச்சூழல் ஒலியோ, வசனங்களோ வரும் தருணங்களில் இளையராஜா முற்றிலும் நிசப்தமாகவோ, இல்லை நாம் ‘பின்னணி இசை’ என்று சொல்லக்கூடிய அடக்கிவாசிக்கப்பட்ட இசையையோ தருகிறார்.
அதைப்போலவே திரைப்படத்தின் ஒலியளவை (volume) இசையமைப்பாளர் நிர்ணயிப்பதில்லை. பின்னணி இசையில் வரும் வாத்தியக்கருவிகளின் தனித்தனி ஒலியளவை மட்டுமே இசையமைப்பாளர் முடிவு செய்கிறார். கடைசி டைட்டிலில் ஓபோ மெல்ல fade ஆகிறது என்று சொல்லியிருந்தேன். அது எந்த அளவுக்கு ஒலித்து எப்படி மென்மையாக fade ஆகவேண்டும் என்பதைப் போன்ற விஷயங்களை மட்டுமே ஒரு இசையமைப்பாளர் முடிவுசெய்து தன்னுடைய இசைக்குறிப்பில் (scoresheet) எழுதித்தரமுடியும். பின்னணி இசை, சூழலொலி (ambient noise), பேச்சொலி இவற்றின் ஒலியளவை சமநிலைப்படுத்துவது இறுதிக்கட்ட மிக்ஸிங்கில் Sound Engineer செய்வார். ஹாலிவுட் படங்களைப் போலல்லாமால், இந்திய இசையமைப்பாளர்கள் நேரடியாக இந்த மிக்ஸிங் வேலையில் தலையிடுவது இல்லை.
இதுபோன்ற நடைமுறைச் சிக்கல்களை அறியாமல், பொதுவாகவே தமிழில் எழுதப்படும் சினிமா விமர்சனங்களில் கேமாராக்களின் வித்தியாசமான கோணங்களுக்கான பாராட்டையும், விமர்சனங்களையும் ஒளிப்பதிவாளர் தலையிலும், உரத்த ஒலி குறித்த விமர்சனத்தை இசையமைப்பாளர் தலையிலும் சுமத்திவிடுவதைப் பார்த்திருக்கிறேன். அதுதான் நந்தலாலாவிலும் நடந்தது. உண்மையில் மிஷ்கின் தன்னுடைய பிற படங்களைப் போலவே (‘அஞ்சாதே’ ஆஸ்பத்திரி காட்சியில் சூழலொலியே இருக்காது.) நந்தலாலாவிலும் இளையராஜாவின் துணையோடு காட்சி ஊடகம் வழியாக ஒரு இழையையும், இசை வழியாக இன்னொரு இழையையும் சொல்கிறார். அது வெகு சிறப்பாகவே இத்திரைப்படத்தில் வெளிப்பட்டிருக்கிறது.
No comments:
Post a Comment