Sunday, May 8, 2011

உரிமை கொண்டாடுகிற ஆளுமை


ஜே. கிருஷ்ணமூர்த்தி ( தமிழாக்கம்: பி.கே. சிவகுமார்)




அவர்கள் இருவரும் தொடர்புடைய, அவர்கள் இருவரையுமே பாதிக்கிற பிரச்சினை என்பதால் மனைவியையும் உடன் அழைத்து வந்ததாகக் கணவர் கூறினார். மனைவி, உருவில் சிறியவராகவும், பிரகாசமான கண்களுடன், உற்சாகமானவராகவும் - ஆனால், அமைதியைத் தொலைத்தவராகவும் - காணப்பட்டார். கணவன், மனைவி இருவருமே எளிமையானவர்களாகவும், கபடமற்றவர்களாகவும், சிநேகபாவமுள்ளவர்களாகவும் இருந்தனர். கணவர் ஆங்கிலத்தில் சரளமாக உரையாடினார்; மனைவி ஆங்கிலத்தைப் புரிந்து கொண்டு, சுலபமான கேள்விகளை ஆங்கிலத்தில் கேட்கும் திறன் பெற்றிருந்தார். உரையாடல் தீவிரமடைந்து, நீண்டு, புரிந்து கொள்ளச் சற்றுக் கடினமானபோதெல்லாம் மனைவி கணவரை ஏறிட்டு நோக்க, அவர் மனைவிக்குத் தன் மொழியில் விவரித்துச் சொன்னார். கால் நூற்றாண்டுக்கும் மேலாக அவர்கள் தம்பதிகளாக இருப்பதையும், அவர்களுக்குப் பல குழந்தைகள் இருப்பதையும் சொன்ன கணவர் - அவர்களின் சிக்கல், குழந்தைகளாலோ அல்லது குழந்தைகள் பற்றியதோ அல்ல என்றும், அவர்களுக்கிடையேயான மனஸ்தாபமும் வருத்தமும் தான் என்றும் சொன்னார். மிதமான வருமானம் தரும் வேலையில் அவர் இருப்பதை விவரித்த கணவர் - இந்த உலகத்திலே ஒருவர் - அதிலும் முக்கியமாகத் திருமணமானவர் - அமைதியுடன் வாழ்வது மிகவும் கடினம் என்றும் தொடர்ந்தார். புலம்பவில்லை என்றும் அதிருப்தியில் முனகவில்லை என்றும் அவர் சொன்ன போதிலும், அவர் சொன்னவிதம் அப்படித்தான் இருந்தது. ஒரு கணவருக்கான கடமைகளிலும் இலக்கணங்களிலும் அவர் ஒருபோதும் தவறவில்லை என்றும் - அல்லது அப்படி நம்புவதாகவும் - சொன்ன கணவர், அப்படி இருப்பது சுலபமான காரியம் அல்ல என்றும் சொன்னார்.

அவர்களின் பிரச்சினையை நேரடியாக அணுகுவதும், விவரிப்பதும் அவர்களுக்கு கடினமானதாக இருந்தது. எனவே, அவர்கள், அவர்களின் குழந்தைகளின் கல்வி, பெண்குழந்தைகளின் திருமணம், கொண்டாட்டங்களில் வீணடித்த பணம், குடும்பத்திலே சமீபத்தில் நிகழ்ந்த மரணம் என்று பலதரப்பட்ட விஷயங்களைப் பேசினார்கள். தாங்கள் சொல்லுவதைக் கவனித்துக் கேட்கிற ஒருவரிடம் பேசுவது நன்றாக இருக்கிறது என்பதாலும், அப்படிக் கேட்கிறவர் தங்கள் பிரச்சினையைப் புரிந்து கொள்ளவும் கூடும் என்கிற வாய்ப்பினாலும், மிகவும் செளகரியமான, சாவதானமான சூழ்நிலையில் தங்களை அவர்கள் உணர்ந்தார்கள்.

மற்றவர் சிக்கல்களை, சிரமங்களைச் செவிமடுத்துக் கேட்க யார் அக்கறை காட்டுகிறார்கள், ஆசைப்படுகிறார்கள் ? நம்முடைய சிக்கல்களும், துன்பங்களுமே நமக்குத் தலைக்கு மேலே இருக்கும்போது, அடுத்தவர்களின் பிரச்சினைகளைக் கேட்க நமக்கு நேரம் இல்லை. மற்றவர், நம்முடைய பிரச்சினைகளைக் கேட்பதற்கு, அவருக்கு நாம் பணம், பிராத்தனை, நம்பிக்கை போன்ற 'தட்சணை 'களுள் ஒன்றைத் தரவேண்டி இருக்கிறது. தங்களின் தொழில் அதுவாக இருப்பதால், பிரச்சினைகளுக்கு ஆறுதலும் வழியும் சொல்லுகிற தொழிலிலே இருப்போர் பொறுமையாகக் கேட்கலாம். ஆனால், அப்படித் தொழில்ரீதியானவர்களிடம் பேசுவதால், பிரச்சினையிலிருந்து நீடித்த விடுதலையோ, நிம்மதியோ கிடைப்பதில்லை. நம்முடைய சுமைகளை எல்லாம், கட்டுப்பாடுகள் இன்றிச் சுதந்திரமாகவும், தன்னிச்சையாகவும், பின்னர் எண்ணி வருந்தாத மனநிலையுடனும் இறக்கி வைக்கவே நாம் விரும்புகிறோம். குற்றங்களை ஒப்புக் கொள்வதிலும், பாவமன்னிப்புக் கேட்பதிலும் கிடைக்கிற புனிதமானது, அவற்றைச் செவிமடுத்துக் கேட்கிறவரைப் பொறுத்தது அல்ல; தன்னுடைய இதயத்தைத் திறந்து முழுமையாகக் கொட்டுகிறவரைப் பொறுத்தது. ஒருவர் தன் இதயத்தை முழுவதும் திறப்பதே முக்கியமானது; அப்படித் திறக்கிற இதயம், செவிசாய்த்துக் கேட்க ஒருவரை - அப்படிக் கேட்கிறவர் பிச்சைக்காரராகக் கூட இருக்கலாம் - நிச்சயம் கண்டடைந்து, இதயபாரம் இறக்கி சாந்தப்படும். ஒருவர் தனக்குள்ளேயே செய்யும் சுயதரிசன உரையாடலால் ஒருபோதும் இதயத்தைத் திறக்க முடியாது. அத்தகைய சுயதரிசன உரையாடல், ஒரு விசாரமான, உறையிலிடப்பட்ட, முற்றிலும் பலனற்ற நிகழ்வேயாகும். இதயத்தைத் திறக்க - நாம் என்ன பேசுகிறோம் என்பதை மட்டும் அல்லாது, நாம் தொடர்புடைய ஒவ்வொரு தாக்கத்தையும், ஒவ்வொரு அசைவையும் கவனமாகக் கேட்க வேண்டும். நாம் காது கொடுத்துக் கேட்கிறவற்றைப் பற்றி சாத்தியமான, விளைவுகள் தெரிகிற செயல்களை நாம் செய்யவோ, செய்ய இயலாமலோ போகலாம். அது முக்கியமல்ல. ஏனெனில், சொல்கிறவர் தன்னுடைய இதயத்தைத் திறந்து சொல்கிறார் என்கிற அடிப்படை உண்மையே, அதன் நிஜமான விளைவாகும். அப்படிச் செவிசாய்த்தல், மனத்தின் அழுக்குகளிலிருந்து நம் இதயத்தைத் துவைத்துத் தூய்மையாக்குகிறது. இதயத்தின் மூலம் நுகராமல், மனத்தின் மூலம் கேட்டல் என்பது வெறும் வம்பும் வீண்பேச்சுமேயாகும்; அது வெறும் வலியின், வேதனையின், மூடத்தனத்தின் தொடர்ச்சிதான்.

சாவகாசமாக அவர்களின் பிரச்சினைக்கு அவர்கள் வருகிறார்கள்.

'எங்களின் சிக்கலைப் பற்றி பேசவே நாங்கள் வந்தோம். நாங்கள் அவநம்பிக்கையும், சந்தேகமும், பொறாமையும் கொண்டவர்களாக இருக்கிறோம் - நான் இல்லை, ஆனால் என் மனைவி அப்படி இருக்கிறார். இப்போது இருக்கிற மாதிரி, வெளிப்படையான நம்பிக்கையின்மையும் சந்தேகமும் கொண்டவராக அவர் முன்னர் இருந்ததில்லை எனினும், அத்தகைய முணுமுணுப்பு அவரிடம் எப்போதும் இருந்தே வந்திருக்கிறது. அவர் அப்படி நினைக்கிற அளவுக்கு நான் ஒருபோதும் நடந்து கொள்ளவில்லை என்றாலும், அவநம்பிக்கையும் சந்தேகமும் கொள்ள அவர் ஏதேனும் ஒரு காரணம் கண்டுபிடிக்கிறார். '

அவநம்பிக்கை கொள்வதற்கும் சந்தேகப்படுவதற்கும் ஏதேனும் காரணம் இருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்களா ? அவநம்பிக்கைக்கும் சந்தேகத்திற்கும் தூண்டுதல் உண்டா ? காரணம் தெரிந்துவிட்டால், சந்தேகம் போய் சந்தோஷமும், அவநம்பிக்கை போய் நம்பிக்கையும் வந்து விடுமா ? காரணம் தெரிந்த பிறகும் கூட, நம்பிக்கையின்மையும், சந்தேகமும், பொறாமையும் தொடரவே செய்கிறது என்பதை எப்போதேனும் நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா ? காரணிகளையும் தூண்டுதல்களையும் தேடாமல், அவநம்பிக்கையையும் சந்தேகத்தையும், அதனால் பிறக்கிற பொறாமையையும் புரிந்து கொள்ள நாம் முயல்வோம். நீங்கள் சொன்னது போல், அவநம்பிக்கை கொள்ள ஒருவர் எத்தகைய காரணம் வேண்டுமானாலும் கண்டுபிடிக்கலாம். பொறாமையையும் அதனால் பிறக்கிற பகையையும் தான் நாம் புரிந்து கொள்ள வேண்டுமே தவிர, அவை எதன்பொருட்டு பிறக்கின்றன என்பதை அல்ல.

'அவநம்பிக்கையும் சந்தேகமும் என்னிடம் நிறைய வருடங்களாகவே இருந்து வருகின்றன. எனக்குத் திருமணமான புதிதில், கணவரைப் பற்றி ஒன்றும் தெரியாததால், பிரச்சினை இல்லை. அப்புறம் இவையெல்லாம் எப்படி வருகின்றன எனபதுதான் உங்களுக்குத் தெரியுமே. மெதுவாக, கொஞ்சம் கொஞ்சமாக, சமையலறையில் புகை விரவுவது போல, அவர் நடத்தை பால் அவநம்பிக்கையும் சந்தேகமும் பொறாமையும் என்னுள் நுழைந்தன. '

ஆணையும் பெண்ணையும் தாங்கிப் பிடிக்கிற வழிகளில் ஒன்றுதானே, சந்தேகமும் பொறாமையும். எந்த அளவிற்கு மேலும் மேலும் பொறாமைப்படுகிறோமோ, அந்த அளவிற்கு மேலும் மேலும் உரிமை கொண்டாடுகிறோம். ஒன்றை உரிமையினால் 'பற்றி 'க் கொள்ளுதல் நமக்கு மகிழ்ச்சி தருகிறது. எதுவொன்றையும் - அது நாய் ஆனாலும் கூட - நமக்கு மட்டுமே என்று பிரத்யேகமாக பரிபூரண உரிமையாக்கிக் கொள்வது நமக்கு இதமாகவும், சுகமாகவும் இருக்கிறது. அந்தப் பரிபூரண உரிமை, நம்மைப் பற்றியே நமக்கு ஒரு உறுதியான நிச்சயத்தன்மையைத் தருகிறது. ஒன்றிற்கு உரிமையாளராய் இருப்பது, நம்மை முக்கியமானவர் ஆக்குகிறது. அந்த முக்கியத்துவத்தையே நாம் 'பற்றி 'க் கொண்டிருக்கிறோம். ஒரு பென்சிலையோ, வீட்டையோ அல்ல, ஒரு மனிதரை நாம் உரிமை கொண்டாடுகிறோம் என்கிற நினைப்பு, நம்மை வலிமையானவர்களாகவும், ஒருவகையில் திருப்தியுற்றவர்களாகவும் செய்கிறது. அவநம்பிக்கையும் பொறாமையும் மற்றவராலோ, உரிமை கொண்டாடுகிற பொருளாலோ வருவது அல்ல; அது நம்மீது நமக்குள்ள மதிப்பினாலும், முக்கியத்துவத்தினாலுமே வருகிறது.

'ஆனால், எனக்கு நான் முக்கியமில்லை; என் கணவர்தான் எனக்கு எல்லாமே. என் குழந்தைகள் கூட எனக்கு ஒரு பொருட்டோ, நம்பிக்கையோ இல்லை. '

நாம் எல்லோருமே ஒரு பொருளைத்தான் - அந்தப் பொருள் பல வடிவமான போதும் - 'பற்றி 'க் கொண்டிருக்கிறோம். நீங்கள் உங்கள் கணவரைப் 'பற்றி 'க் கொண்டிருக்கிறீர்கள்; இன்னும் சிலர் அவர்கள் குழந்தைகளைப் 'பற்றி 'க் கொண்டிருக்கிறார்கள்; அங்ஙனமே, இன்னும் பிறர், நம்பிக்கைகளைப் 'பற்றி 'க் கொண்டிருக்கிறார்கள். ஆனால், எல்லோருடைய நோக்கமும் ஒன்றுதான். நாம் பற்று வைத்திருக்கிற பொருள் இன்றி, நாம் நம்பிக்கையிழந்தும், தொலைந்தும் போகிறோம்! இல்லையா ? நாம் தனிமையைக் கண்டும், தனித்திருக்கவும் அஞ்சுகிறோம். அந்த அச்சம்தான் - பொறாமை, வெறுப்பு, வலி, வேதனை எல்லாம். பொறாமைக்கும் வெறுப்புக்கும் பெரிதாய் ஏதும் வித்தியாசம் இல்லை.

'ஆனால், நாங்கள் ஒருவரையொருவர் நேசிக்கிறோம். '

அப்படியென்றால், நீங்கள் எப்படி அவநம்பிக்கையும் சந்தேகமும் பொறாமையும் கொள்ள இயலும் ? நாம் நேசிப்பதில்லை; அதுதான், நேசம் என்று நாம் அழைப்பதில், இருக்கிற துரதிர்ஷ்டமே. சந்தோஷத்தின் பொருட்டும், துணையின் பொருட்டும், தனிமை என்னும் எண்ணத்தை விரட்டும் பொருட்டும், நீங்கள் உங்கள் கணவரைப் பயன்படுத்திக் கொள்ளுகிறீர்கள்; அதே காரணங்களுக்காக, உங்கள் கணவர் உங்களைப் பயன்படுத்திக் கொள்ளுகிற மாதிரி. நீங்கள் அவர்மீது ஆதிக்கம் செலுத்தாதமலும், அவரை மிகவும் 'பற்றா 'மலும் கூட இருக்கலாம். ஆனாலும், உங்கள் துணையாக அவர் உங்களுடன் எப்போதும் இருக்கிறார். இந்தப் பரஸ்பர தேவையையும், பயன்படுத்திக் கொள்ளலையுமே நான் அன்பு என்று அழைக்கிறோம்.

'ஓ, இது மிகவும் அச்சமூட்டுகிற பயங்கரமானது. '

அது அச்சமூட்டுகிற பயங்கரமானது அல்ல; நாம் அதை எப்போதும் பொருட்படுத்துவதோ, கூர்ந்து நோக்குவதோ இல்லை. அச்சமூட்டுவது, பயங்கரமானது என்று அவற்றிற்கு பெயர் சூட்டி விட்டு, நாம் விரைவாக விலகிவிடவே விரும்புகிறோம் - நீங்கள் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறீகள்.

'எனக்குத் தெரிகிறது. நான் அதை கூர்ந்து நோக்கவோ, ஆராயவோ விரும்பவில்லை. இப்போது இருப்பதைப் போலவே - அவநம்பிக்கையுடனும் பொறாமையுடனும் - இந்த வாழ்க்கையைத் தொடரவே விரும்புகிறேன். ஏனெனில், வாழ்க்கையில் என்னால் வேறெதையும் தேடவோ, நாடிப் போகவோ இயலாது. '

நீங்கள் வேறு ஏதேனும் ஒன்றைப் பார்த்தாலோ, அதனால் ஈர்க்கப்பட்டாலோ, உங்கள் கணவர் மீது சந்தேகமும் அவநம்பிக்கையும் கொள்ள மாட்டார்கள்! கொள்வீர்களா ? ஆனால், உங்கள் கணவரைப் 'பற்றி 'க் கொண்டிருந்தது போல, அந்த மற்றொன்றைப் 'பற்றி 'க் கொண்டுவிடுவீர்கள். அதனாலேயே, பின்னர் அந்தப் புதிய பொருளின் மீதும் அவநம்பிக்கையும் சந்தேகமும் பொறாமையும் கொள்வீர்கள். அப்போது - நீங்கள் உங்கள் கணவருக்கு மாற்று தேடுகிறீர்களே தவிர, பொறாமையிலிருந்து விடுதலை பெற வழி தேடவில்லை. நாம் எல்லோருமே அப்படித்தான். ஒன்றை விட்டு விடும் முன்னர், மற்றொன்றை உறுதிப்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். நீங்கள் முழுவதும் நிர்ணயமற்றத் தன்மையுடையவராய் இருக்கும்போது, அங்கே அவநம்பிக்கையோ பொறாமையோ இல்லை. நிர்ணயமான நிலையிலேயே, உங்களுக்கே இறுதியாக உரியது என்னும் நிலையிலேயே, பொறாமையும் பகையும் பிறக்கிறது. பரிபூரணமான உரிமை என்பது இத்தகைய நிச்சயத்தன்மையே ஆகும். ஒன்றை உரிமை கொள்ள விரும்புவதும், கொள்வதுமே பொறாமையுடையவராக இருத்தல் ஆகும். உரிமையே வெறுப்பை உருவாக்குகிறது. நமக்கு உரிமையானதை, நாம் உண்மையிலேயே வெறுக்கிறோம்; அந்த வெறுப்பே அவநம்பிக்கை, பொறாமை ஆகியவற்றால் வெளிப்படுகிறது. எங்கே பற்றும் உரிமையும் இருக்கிறதோ அங்கே அன்பு இல்லை; ஒன்றின் மீது உரிமை கொண்டாடுவது, அன்பினை அழிப்பதாகும்.

'எனக்கு புலப்பட ஆரம்பிக்கிறது. நான் எப்போதும் என் கணவரை நேசிக்கவே இல்லை, அப்படித்தானே! எனக்கு புரிய ஆரம்பிக்கிறது. '

அந்த மனைவி தலை குனிந்து அழ ஆரம்பித்தார்.

(மூலம்: வாழ்க்கை குறித்த வர்ணனைகள் - வரிசை: 1 - ஜே. கிருஷ்ணமூர்த்தி [Commentaries on living - Volume I - J. Krishnamurthi])











No comments:

Post a Comment