Sunday, May 8, 2011

தனித்திருத்தலும் தனிமைப்படுத்தப்படுதலும் (Aloneness and Isolation)


ஜே. கிருஷ்ணமூர்த்தி (தமிழாக்கம்: பி.கே. சிவகுமார்)
சூரியன் வானத்திலிருந்து கீழிறங்கி விட்டிருந்தது. இருளில் கறுத்துப் போன மரங்கள் இருண்டு கொண்டிருந்த வானத்தை நோக்கிச் சீராக உயர்ந்து நின்றன. ஆழமும், அகலமும் நிறைந்த - அதனால் பலம் பொருந்திய - நதி அமைதியாகவும், சலனமற்றும் கிடந்தது. தொடுவானத்தில் நிலவு தோன்ற ஆரம்பித்திருந்த நேரம். அந்த நிலவுப் பெண் இரண்டு மரங்களுக்கிடையே முகம் காட்டியபடி மெதுவாக மேலேறி வந்து கொண்டிருந்தாள். ஆனால், இன்னமும் அவள் நிழல்களை உருவாக்கும் உயரத்துக்கு வரவில்லை.

செங்குத்தான ஆற்றின் கரையின் மீதேறிக் கடந்து, பசுமையான கோதுமை வயல்களை ஒட்டிய பாதையில் நாங்கள் நடக்க ஆரம்பித்தோம். பன்னெடுங்காலமாக விரிந்து கிடக்கிற பாதை அது. பல்லாயிரக்கணக்கான பாதங்கள் பதிந்த பாதை அது. பாரம்பரியத்திலும், நிசப்தத்திலும் செழித்த பாதை அது. அது பரந்து விரிந்த பரப்புகளுக்கிடையேயும், மாமரங்களுக்கிடையேயும், புளிய மரங்களுக்கிடையேயும், சிதிலமும் பாழும் அடைந்து போன வழிபாட்டுத் தளங்களுக்கிடையேயும் மனம் போன போக்கில் அலைந்தது. ஆங்காங்கே ஒட்டுப் போட்டாற்போல பெருந்தோட்டங்கள் தெரிந்தன. அவற்றிலிருந்து கிளம்பும் பட்டாணியின் இனிய சுவைமிக்க மணம், காற்றுக்கு நறுமணம் ஏற்றிக் கொண்டிருந்தது. கூடு திரும்பிய பறவைகள் இரவை எதிர்பாத்து அடங்க ஆரம்பித்திருந்தன. ஒரு பெரிய குளத்தின் நீர்ப்பரப்பு நட்சத்திரங்களைப் பிரதிபலித்துக் கொண்டிருந்தது. அந்தப் பின்மாலைப் பொழுதிலே, இயற்கை பேசுகிற - தொடர்பு கொள்கிற - மனநிலையில் இல்லை. மரங்கள் - இருளினுள்ளும், நிசப்தத்தினுள்ளும் தலை நுழைத்துப் பின்வாங்கி - ஏகாந்தத்தில் தொடர்பற்று விலகி நின்றன. சுவாரஸ்யமாகப் பேசியபடி சில கிராமத்து ஜனங்கள் சைக்கிள்களில் எங்களைக் கடந்து போனார்கள். மீண்டும் அங்கே ஆழமான நிசப்தமும் - எல்லாப் பொருட்களும் தனித்திருக்கும்போது பிறக்கிற அமைதியும் - குடி கொண்டன.

இந்த தனித்திருத்தல் (Aloneness), வலியுண்டாக்குகிற, அச்சமூட்டுகிற தனிமை அல்ல. அது தன்னையறிகிற தனித்திருத்தல். அது களங்கமற்றது, செழுமையானது, முழுமையானது. அந்தப் புளிய மரத்துக்கு, புளிய மரமாக இருப்பதைத் தவிர வேறு வாழ்க்கை இல்லை. அப்படித்தான் இந்த தனித்திருத்தலும். ஒருவர் தனித்திருக்கிறார் - தீயைப் போல, மலரைப் போல. ஆனால், அவர் அதன் தூய்மையையும், ஆழமிக்க பிரம்மாண்டத்தையும் உணர்ந்திருப்பதில்லை. தனித்திருக்கிற தன்மை வாய்த்திருக்கும்போதே ஒருவர் உண்மையாகவே பிறருடன் தொடர்பு கொள்ள இயலும். தனித்திருத்தல் மறுதலிப்பின் விளைவோ, தனக்குள் தானே சுருங்கிப் போகிற சுய-உறையிலிடப்பட்டத் தன்மையின் முடிவோ அல்ல. எல்லா நோக்கங்களிலிருந்தும், ஆசையின் பொருட்டு அலைகிற எல்லாத் தேடல்களிலிருந்தும், எல்லா முடிவுகளிலிருந்தும் - விலக்கிக் கழுவித் தூய்மைப்படுத்துவது தனித்திருத்தலே ஆகும். தனித்திருத்தல் மனத்தின் இறுதி விளைபொருள் அல்ல. தனித்திருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்ப முடியாது. அத்தகைய விருப்பம், பிறருடன் தொடர்பு கொள்கிற திறனற்றத் தன்மையிலிருந்து தப்பிக்க செய்யப்படும் வெறும் தப்பித்தலே ஆகும்.

அச்சமும், வலியும், வேதனையும் நிறைந்த தனிமையே தனிமைப்படுத்தப்படுதல் (isolation) ஆகும். அது சுயத்தின் - நான் என்கிற நிலையின் - தவிர்க்க முடியாத செயல் ஆகும். தனிமைப்படுத்தப்படுகிற இயக்கம் - அது சிறுத்துக் குறுகியதாயினும் சரி, அல்லது பெருகி விரிந்ததாயினும் சரி - குழப்பத்தின், முரண்பாட்டின், துயரத்தின் விளைபொருளே ஆகும். தனிமைப்படுத்தப்படுகிற இயக்கமானது என்றும் தனித்திருக்கிறத் தன்மையைப் பிரசவிக்காது. ஒன்று பிறப்பதற்கு மற்றொன்று மரிக்க வேண்டும். தனித்திருத்தல் பிரிக்க இயலாத் தன்மையுடையது; அச்சமும் வலியும் நிறைந்த தனிமைப்படுத்தப்படுதலோ பிரிவாகும். எது தனித்திருக்கிறதோ, அது வளைந்து கொடுக்கிறது; நீடித்து நிலைக்கிறது. தனித்திருக்கிற தன்மை பெற்றவரே - காரணங்களற்ற, நியாயப்படுத்துதல்கள் இல்லாத, அளக்க இயலாத - ஒன்றுடன் தொடர்பு கொள்ளவும், உறவாடவும் இயலும். தனித்திருப்பவர்க்கு வாழ்க்கை ஆதியும் அந்தமுமில்லாத முடிவற்றது. தனித்திருப்பவருக்கு மரணம் இல்லை. தனித்திருப்பவர் எப்போதும் அந்நிலையிலிருந்து மாறுவதுமில்லை.

நிலவு அப்போது தான் மரங்களின் உச்சி மீதேறியிருந்ததால், நிழல்கள் இருண்டும், பருத்தும் விழுந்தன. ஒரு சிறு கிராமத்தை நாங்கள் கடந்தபோது ஒரு நாய் குரைக்க ஆரம்பித்தது. நாங்கள் திரும்பி நதியின் துணையோடு நடக்க ஆரம்பித்தோம். நதி மிகச் சலனமற்று, விண்மீன்களையும், தூரத்துப் பாலத்தின் விளக்குகளையும் தன்னுள் வாங்கி வெளியுமிழ்ந்து கொண்டிருந்தது. உயரே நதிக்கரையின் மீது சிறுவர்கள் கூட்டமாய் நின்று கொண்டும், சிரித்துக் கொண்டுமிருந்தார்கள். ஒரு கைக்குழந்தை அழுகிற சத்தம் கேட்டது. மீனவர்கள் தங்கள் வலைகளைச் சுத்தம் செய்து கொண்டும், பிரித்துச் சுருட்டிக் கொண்டுமிருந்தார்கள். ஓர் இரவுப் பறவை அமைதியாய் எங்களைத் தாண்டிப் பறந்து சென்றது. விசாலமான நதியின் எதிர்க்கரையில் யாரோ ஒருவர் பாட ஆரம்பித்தார். அவரின் குரலும் வார்த்தைகளும் - தெளிவாகவும், ஊடுருவும் தன்மை கொண்டனவாகவு மிருந்தன. மீண்டும், எங்கும் ஊடுருவி, விரவிப் பரவுகிற வாழ்வின் தனித்திருக்கிற தன்மை.

(மூலம்: வாழ்க்கை குறித்த வர்ணனைகள் - வரிசை: 1 - ஜே. கிருஷ்ணமூர்த்தி [Commentaries on living - Series: 1 - J. Krishnamurthi])


No comments:

Post a Comment