Tuesday, February 15, 2011

இசைகேட்டல் என்பது


உயிர்மையில் ஷாஜி எழுதிய முதல் கட்டுரை முதல் சென்ற இதழில் ஒலி பரப்புக் கருவிகள் பற்றி அவர் எழுதியிருப்பது வரையிலான அத்தனை கட்டுரைகளையும் விரும்பி வாசித்து வருகிறேன். உயிர்மை இதழ் கைக்கு வந்தவுடன் படிக்கும் முதல் படைப்பு ஷாஜியுடையதாகத்தான் இருக்கும். சுகுமாரனின் கட்டுரையும் அதே இதழில் வந்திருந்தால் மட்டுமே இந்த விதிக்கு விலக்கு.
ஷாஜி என்னுடைய சில வருட நண்பர். இசை காரணமாகத்தான் எங்கள் நட்பு தொடங்கியது. இசை கேட்பதும், இசை பற்றிக் கேட்பதும் எனக்கு மிகவும் உவப்பான விஷயங்கள். ஜெயமோகனின் மிகச் சரளமான மொழிபெயர்ப்பு. மற்றவர்கள் மொழிபெயர்க்கும்போதும்- சில சந்தர்ப்பங்களில் தவிர - ஆற்றொழுக்காகப் பாயும் ஷாஜியின் கருத்தோட்டம். இசை பற்றியும் இசைக் கலைஞர்கள் பற்றியும் ஷாஜி பொழியும் புதுப்புதுத் தகவல்கள் - குறிப்பாக போனி எம் பற்றிய கட்டுரை நினைவு வருகிறது. பல சமயங்களில் மிகத் தேர்ந்த எழுத்தாளரை விடவும் நேர்த்தியாகப் பாயும் ஷாஜியின் சிந்தனை - உதாரணமாக, இசைக்கும் பக்திக்கும் உள்ள தொடர்பு பற்றி அவர் எழுதிய கட்டுரை. இதையெல்லாம்விட, நவீனத் தமிழில் இசை பற்றிய பேச்சு இவ்வளவு காத்திரமாக இடம் பெறுகிறது என்பதே ஒரு வரலாற்று நிகழ்வு அல்லவா?
அவருடைய கட்டுரைகள் பிரசுரமான போது, ஒவ்வொரு கட்டுரைக்கும் அடுத்தடுத்த இதழ்களில் வாசகர் கடிதங்கள் பிரசுரமாயினவே தவிர, அந்தக் கட்டுரைகள் தொடர்பான மதிப்பீடு என்ற அளவில் ஒரு கட்டுரைகூட வெளியாகவில்லை. பின்னர் தொகுப்பாக வந்தபோதும், எனக்குத் தெரிந்து, ஒரே ஒரு மதிப்புரைகூடப் பிரசுரமாகவில்லை. நாமாவது ஒன்று  எழுதிவிட வேண்டும் என்று நினைத்திருந்தேன். பழக்கம் கிடையாதா, ஏதாவது சாக்கு வைத்து ஒத்திப்போட்டுக்கொண்டே போனேன். சென்ற இதழில் ஷாஜி எழுதிய கட்டுரை, அவரது கட்டுரைகள் மீதான மதிப்புரையை எழுத நிர்ப்பந்தித்துவிட்டது.
ஷாஜியின் கட்டுரைகள் முக்கியமானவை என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தே கிடையாது. ஆழ்ந்த  ரசிகர் ஒருவரும், தேர்ந்த மொழிபெயர்ப்பாளர்களும்  சேர்ந்து ஒரு கலைவடிவம் பற்றிப் பேசுவதற்கான மாற்று மொழி ஒன்றை உருவாக்குவது அபூர்வமானதொரு  நிகழ்வு - அது எந்த  மொழியில் நிகழ்ந்தபோதும். தமிழில் சுப்புடு போன்றவர்கள் எழுதியது இசை தொடர்பான விகடக் கட்டுரைகள், வணிகப் பத்திரிகைகளில் அவருடைய பாதிப்பாக வரும் இமிட்டேஷன் சரக்குகள் அநேகமும் செய்தித் துணுக்குகள் - விமர்சனங்கள் அல்ல. போன வருட இசைவிழாக் கட்டுரை இந்த வருடம் நூற்றாண்டுப் பழையதாகத் தெரியும். மாறாக, ஷாஜியின் கட்டுரைகளில் தகவல்களும்,  சமூக - தனி மனித உளவியல் தொடர்பு இழைகளும், அவற்றைத் தொகுப்பதன் வாயிலாக ஷாஜி  உருவாக்கும் கருத்துப் பின்னல்களும் என்று ஒருவித நிரந்தரத் தன்மை உண்டு.
ஆனால், ஷாஜியின் கட்டுரையில் இடறலான சில அம்சங்களும் இருந்து வருகின்றன. 'தொடர்ந்து பல வருடங்களாக இசை கேட்டு வருகிறேனே,  நானெல்லாம் இசை கேட்கும் விதமே தவறானதோ' என்று உள்ளூறப் புழுங்கும் இடத்துக்கு என்ன நகர்த்தியிருக்கின்றன ஷாஜியின் சில அபிப்பிராயங்கள். அவை எல்லாவற்றையும் பற்றி எழுதுவதற்கான சந்தர்ப்பம் அல்ல இது. ஆனாலும், ஒரு பீடிகைபோலச் சிலவற்றைக் குறிப்பிட்டு விட்டு, சென்ற இதழ் கட்டுரையை முன் வைத்து மேலும் சில விஷயங்கள் பேசலாம் என நினைக்கிறேன்.
1. ஷாஜிக்கு உள்ளூர்க் கலைஞர்கள் சம்பந்தமாக இருக்கும் அளவுகோல்களும், வெளிநாட்டுக் கலைஞர்கள் சம்பந்தமாக உள்ளவையும் ஒன்றுதானா என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது. மொழி தாண்டி, தேசம் தாண்டி, காலம் தாண்டி, ஷாஜி என்ற விமர்சனபூர்வமான ரசிகரின் மனத்தைக் கொள்ளைகொள்ளும் அளவு பிரபலமாகவும், இந்தியச் சந்தையில் இன்றுவரை கிடைக்கக்கூடிய தொகுப்புகளை வெளியிட்டும் இருக்கிற (இவர்களின் புகழ் மற்றும் சம்பாத்தியம் பற்றி அனுமானிப்பதற்குப் பெரிய பிரயாசை எதுவும் தேவைப்படாது) கலைஞர்களை நெகிழ்வான தொனியில் அறிமுகப்படுத்தும் ஷாஜி, உள்ளூரில் ஜெயித்தவர்கள்மீது காட்டும் விகிதப் பொருத்தமற்ற கோபம்.
உதாரணமாக, பி சுசீலா பற்றியும் சீர்காழி கோவிந்தராஜன் பற்றியும் நௌஷாத் பற்றியும் அவர் எழுதி யிருக்கும் வாக்கியங்கள். (இந்தக் கட்டுரைகள் பற்றி விரிவான பதில்களை அவ்வப்போதே நான்  எழுதியிருக்கலாம். ஆனால், படைப்புமுனையில்  வினையாற்றும் அளவுக்கு எதிர்வினையாற்றுவதில் எனக்கு ஆர்வமில்லை.)
2.உள்ளூர்க் கலைஞர்கள் சம்பந்தமாகவும் மாறிக்கொண்டேயிருக்கும் அளவுகோல்கள். ஏ எம் ராஜா நடிகர்களுக்காகத் தன் குரலை மாற்றிக்கொள்ள மாட்டார், பாடும் பாணியை மாற்றிக்கொள்ள மாட்டார் - அது அவருடைய பலம். எஸ் ஜானகி நடிகைக்குத் தக்கவாறு குரலை மாற்றிப்பாடுவார் - ஷாஜியின் நண்பர் மிமிக்ரி என்கிறார் - இது ஜானகியின் பலம். எனக்குக் குழப்பமாகிறது. யோசிக்கும்போது, இருவரும் ஷாஜியின் அபிமானப் பாடகர்கள் என்ற ஒரே அளவுகோல்தான் மிஞ்சுகிறது.
இதில், ஒரே கட்டுரையில்,  பத்திக்குப்பத்தி மாறும் பார்வை வேறு. ஒரு பத்தியில், மாறிவிட்ட திரையுலகச் சூழல் வெறுத்து ஏ எம் ராஜா 'பின்வாங்கு'கிறார். புகழின் உச்சத்தில் இருக்கும் தமது மனைவி ஜிக்கியையும் திரையுலகை விட்டு ஒதுங்கச் செய்கிறார். இன்னொரு பத்தியில் 'புறக்கணிக்கப்பட்டவ'ராகிறார். தாமே ஒப்புக்கொள்ளும் அளவு புகழும் சம்பாத்தியமும் கொண்டிருந்த, பல சாதனைகள் புரிந்து அவற்றுக்குப் பல மொழிகளில் அங்கீகாரமும் அடைந்த ஏ எம் ராஜா (இவையெல்லாமே ஷாஜி தரும் செய்திகள்) ஷாஜியின் கட்டுரையில் அந்தரங்கமாக ஓடும் தொனியின் வழி, வஞ்சிக்கப்பட்டவராக, தோற்கடிக்கப்பட்டவராக உருமாற்றம் கொள்கிறார்.
3. வென்றவர்கள் சம்பந்தமான இளக்காரமும், தோற்றவர்கள் சம்பந்தமான கரிசனமும் கலைமனத்துக்கு இயல்பானது தான். ஆனால், விமர்சனம் என்று வரும் போது சாய்மானமற்ற, கறாரான, புறவயப் பார்வை இருப்பது அவசியம் அல்லவா? சாஸ்திரிய இசையைத் தன் பலமாகக் கொண்டிருப்பது நௌஷாதுக்கு பாதகமான விஷயம் என்றால், சினிமா சங்கீதத்துக்குள் கடைசிவரை வந்துசேரவே இயலாமல் போன டி ஆர் மகாலிங்கத்தின் குரல் மற்றும் பாடும் முறையில் உள்ள சாஸ்திரிய ஒழுங்கு மட்டும் எப்படி சாதகமானதாய்  ஆகும்?
4. வஞ்சிக்கப்பட்டவர்களாக ஷாஜி கருதும் கலைஞர்களை மகோன்னதப் படுத்துவதற்காக, அதே கலைஞரின் சமகால நாயகர்  மற்றொருவரை மட்டம் தட்டிப் பேசுவது சரிதானா? மதன் மோகனை விதந்தோதக் கிளம்புகிறவருக்கு நௌஷாதின்மீது இப்படி ஒரு கோபம் பொங்கவேண்டிய காரணமென்ன? (நான் இரண்டு பேருடைய மெட்டுகளையுமே அதிகம் கேட்டவன் இல்லை. ஆனாலும், கேட்டவரையில், என்னுடைய சாய்வு நௌஷாதின் பக்கம்தான். மொகலே ஆஸம் பற்றி சுகுமாரன் உயிர்மையில் எழுதிய கட்டுரையைத் திரும்ப எடுத்து வாசித்தேன். முதல்முறை வாசித்தபோதே என்னைப் பரவசமடைய வைத்த கட்டுரைகளில் ஒன்று அது. ஷாஜியுமே அதை ஒருமுறை வாசித்துப் பார்க்கலாம் என்று தோன்றுகிறது. 'நௌஷாதையே எடுத்துக் கொள்வோம்' என்று ஷாஜி தொடங்கும் பத்தியில் ஆரம்பித்து, வசவுகள் முடியும்போது கோரைப்பற்கள் முளைத்த வஞ்சக ட்ராகுலாபோல நௌஷாத் என்முன் உதயமாகிறார். சுகுமாரனின் கட்டுரையில், உதாசீனப்படுத்தப்பட்டதாக மனம் புழுங்கும் மகா கலைஞனாக எழும்புகிறார். நான் மானசீகமாக முழந்தாளிட்டு, எல்லாம் வல்ல ஆண்டவனே, இசை விமர்சனங்களிடமிருந்து என்னைக் காப்பாற்று என்று மன்றாடுகிறேன்.)
ஷாஜி தன் அபிமான  டி ஆர் மகாலிங்கத்துக்குப் பீடம் கட்ட உடைத்துப்போட்ட செங்கல் ஜல்லியாக சீர்காழி கோவிந்தராஜனை ஏன் பயன்படுத்துகிறார்? இருவருக்கும் கணீரென்ற மணிக்குரல் என்ற ஒரே ஒற்றுமையின் காரணமாக மட்டுமா? தன்னை  நாத்திகர் என்று உரத்து  விளம்பிக்கொள்ளும் ஒரு இசை ரசிகரால், பித்துக்குளி முருகதாஸின் குரல்வளம் பற்றி, அவருடைய இசையின் மனோலயம் பற்றிப் புறவயமான, நடுநிலையான அள வீடுகளை நிறுவ முடியுமா என்றும் சந்தேகமாக இருக்கிறது. (வழிதவறி வந்து திரு. முருகதாஸ் திரைப்படத்தில் பாடிய ஒரே ஒரு பாடலும் பக்திப் பாடலாகப் போய் விட்டது!) சீர்காழி கோவிந்தராஜனும் கூட, தமது திரைப் பாடல்களால் அடைந்ததை விட அதிகமான கீர்த்தியைத் தமது பக்திப் பாடல்களுக்காக அடைந்தவர் அல்லவா.
என்றாலும்,  சீர்காழி கோவிந்தராஜனின் 'அன்பொளி வீசி உயிர் வழிந்தாடும் - விழியில் மான் கண்டேன்' என்ற கோகிலவாணி படப்பாடலையோ, தாயின் கருணை படத்தின் 'ஒரு கோடிப் பாடலுக்கும் விதை ஒன்றுதான்' என்ற பாடலையோ, தங்க ரத்தினம் (என்று நினைக்கிறேன்) படத்தின் 'சாட்டை கையில் கொண்டு வாங்கக் கண்டு' பாடலையோ ஷாஜி கேட்டிருக்கிறாரா, அவை பற்றிய அவரது மேலான முடிவுகள் என்ன என்று தெரிந்துகொள்ள ஆசையாய் இருக்கிறது எனக்கு.

5. சந்தர்ப்ப சூழ்நிலைகளால் தோற்கடிக்கப்பட்டவர் ஏ எம் ராஜா என்பது போன்ற துக்கமயமான தோற்றத்தை உருவாக்கிய அந்தக்  கட்டுரையைப் படித்து விட்டுச் சில நாட்கள் மனம் கலங்கி இருந்தேன். ஏ எம் ராஜாவின் பாடல்கள் எனக்கும் ரொம்பப் பிடிக்கும்... நாலைந்து நாட்களுக்குப் பிறகு மெல்ல மனம் சமனமுற ஆரம்பித்தது.
அவர் காலத்தில் இருந்த பிரதான நடிகர்களில் யாருக்கெல்லாம் ராஜாவின் குரல் பொருந்தும்? எம்ஜியாருக்கும் சிவாஜிகணேசனுக்கும்கூட ராஜா பின்னணி பாடியிருக்கிறாரே? டி எம் எஸ்ஸின் குரல் அவர்களுக்குப் பொருந்திய அளவு ராஜாவின் குரல் பொருந்துமா? ஏன், ஜெமினி கணேசனுக்கேகூட ராஜாவின் குரலைவிட பி பி ஸ்ரீநிவாஸின் குரல்தானே கூடுதல் பொருத்தம்? வாழ்க்கைப் படகு படத்தின் 'சின்னச் சின்னக் கண்ணனுக்கு' பாடலையும், அதன் ஆரம்பத்தில் ஜெமினி கணேசன் பேசும் ஒரு வரி வசனத்தையும் இங்கு நினைவு கூரலாம்.
இந்தப் 'பொருத்தம்' என்ற அம்சமுமே வெளிப்படையாகத் தெரிகிற அளவு நேரடியான விஷயமா? சிவாஜியின் வசனக் குரலுக்கேகூட ஒத்துப் போகும் டி எம் எஸ்ஸின் குரல், எம்ஜியாரின் மெல்லிய குரலுக்கு எப்படி ஒத்துப் போயிற்று? இப்போது வேறொரு அம்சம் உள்ளே நுழைந்து விடுகிறது. பாடல்களின் கருத்தும் மெட்டும் எம்ஜியாருக்கு உகந்தவையாகத் தயார் செய்யப்படும்போது, அவற்றுடன் இசையக் கூடிய குரல் வேண்டியிருக்கிறது. 'அன்னமிட்ட கை, ஏமாற்றாதே ஏமாறாதே, நான் ஆணையிட்டால்' போன்ற பாடல்களை நாம்  ஏ.எம்.ராஜாவின் குரலில் கற்பனை செய்து பார்க்கலாம்.
ராஜாவைவிடவும் இளமையாக இருந்த அன்றைய எஸ்பி பாலசுப்ரமணியனின் குரலில் அபாரமான வரவேற்பைப் பெற்ற 'ஆயிரம் நிலவே வா' பாடல் எம்ஜியாருக்காகப் பாடப்பட்டது என்பதும் ஞாபகம் வருகிறது. சாவித்திரி என்ற கனத்த சொந்தக் குரலுடைய நடிகைக்கும், சரோஜாதேவி என்ற சதா கொஞ்சிக்கொண்டே இருக்கும் கிளிக்கும் பி.சுசீலாவின் குரல் எப்படிப் பொருந்தியது என்ற ஆச்சரியத்தையும் யோசித்துப் பார்க்கலாம்? ஆக, திரையிசை என்பது சாஸ்திரிய இசை அளவு தெளிவான இலக்கணம் கொண்டது அல்ல என்பதோடு, அறவே நேர்கோட்டுத் தன்மையற்றது. பல்வேறு சமூகவியல், கூட்ட-உளவியல் காரணிகளால் பாதிப்புறுவது. இதில் வெற்றியும் தோல்வியும், சம்பந்தப்பட்ட கலைஞரின் திறனை மட்டும் சார்ந்தது அல்ல. திரை இசைக்கே உரித்தான திறன் கொண்டவர்கள் அனைவரும்  அப்பாவிகளை ஓரங்கட்டச் சூழ்ச்சிகள் புரியும் கூட்டுச் சதிகாரர்களும் அல்ல.
கே.ஜே.ஜேஸுதாஸின் வருகைக்குப் பிறகு களத்துக்கு வந்த-ஜெயச்சந்திரன், ஜாலி ஆப்ரஹாம், பிரம்மானந்தன், உன்னிமேனன், எம்.ஜி.ஸ்ரீகுமார் போன்ற-மலையாளத் திரைப் பாடகர்கள் அநேகருக்கு அவருடைய குரலின் சாயலே இருந்ததன் காரணம்  பற்றியும் நாம் ஆராயலாம். தமிழ்த் திரையிசையில் நீண்ட காலம் கோலோச்சிய டி.எம்.எஸ்ஸின் சாயல், மிகக் குறைவான பாடல்களுடன் களத்திலிருந்து விலக்கப்பட்டு விட்ட கோவை சவுந்தரராஜனுக்கு மட்டுமே இருந்தது. (இதற்குத் தொழில் அரசியல் சார்ந்த உள்காரணங்கள் என்று ஒரு பட்டியல் எங்கிருந்தாவது புறப் படலாம். வெகுமக்களின் ரசனையும் ஆதரவும்கூட பொதுப் புத்தி சார்ந்த அரசியல் காரணங்களில் ஒன்றாகக் குறிப்பிடவும் படலாம். அதெல்லாம் என்னை மாதிரிப் பாமர ரசிகர்களுக்குத் தெரியாது. அரசியல் செயல்படாத தொழில்துறை ஏதேனும் உண்டா என்பதுகூடத் தெரியாது.)
மிகை நடிப்பைக் கொண்டாடும் சுபாவம் கொண்ட தமிழ்த் திரைப்பட உலகத்தில் (இன்று நிலைமைகள் ரொம்பவும் மாறிவிட்டதாக நமக்கெல்லாம் கொஞ்சம் பிரமை) துளியும் நடிக்காத, நேரடியான, எல்லா நேரத்திலும் மெல்லிய துயரம் பூசிய ஏ.எம். ராஜாவின் குரல் இவ்வளவு பெயரும் புகழும் சம்பாதித்ததே எவ்வளவு பெரிய சாதனை?
இவையெல்லாவற்றையும்விட, முக்கியமான கேள்வியொன்றைக் கடைசியில் கேட்பதற்காக ஒத்திப் போட்டிருந்தேன். இன்றுவரையிலும் திருட்டு எம்ப்பிதிரீ குறுந்தகடுகள் விற்பனையில் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கிறார் ஏ.எம்.ராஜா. சென்னை நகரத்தின் நடைபாதைக் கடைகள் எதிலும் உங்களுக்கு சுலபமாகக் கிடைப்பார். இறந்து இருபது வருடம் கழித்தும்-அதற்கு சுமார் பதினைந்து வருடங்கள் முன்பாகவே அவர் அதிகம் பாடுவது குறைந்திருந்தது-இவ்வளவு அமோகமாக திரையிசை ரசிகனின் ஞாபகத்தில் தங்கியிருப்பவரைத் தோற்றவர் என்று எப்படி வகைப்படுத்துவது? அல்லது, இசைக் கலைஞனின் வெற்றி என்று ஷாஜி கருதும் அம்சம்தான் என்ன?
அவ்வளவுதான். ஒருவழியாகப் பீடிகையை முடித்துவிட்டேன். சென்ற இதழ் கட்டுரைக்கு வருவோம்.
கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிடப்படும் சஞ்சீவ் அப்யங்கரின் கச்சேரிக்கு நானும் சென்றிருந்தேன். இசை தொடர்பான விமர்சன வாக்கியங்களை அடித்துப் பேசும்  ஷாஜி  தனக்கு நேரடியாகத் தெரிந்த நபர்கள் விஷயமாக இவ்வளவு கூச்சம் கொள்ள வேண்டியதில்லை. ஷாஜி கட்டுரை எழுதும் பத்திரிகை குமுதமும் அல்ல, பிறகெதற்கு கிசுகிசு பாணியெல்லாம்.
அவர் குறிப்பிடும் 'ஒரு நண்பர்' யுவன்சந்திரசேகர் என்ற பெயரில் சில வருடங்களாகத் தமிழில் எழுதி வருகிற நான்தான். என்னோடு வந்திருந்த நண்பர் திரு. உமாபதி. ஹிந்துஸ்தானி இசையை எனக்கு அறிமுகம் செய்தவர். தோல்வியுற்ற ஹிந்துஸ்தானி இசைக்கலைஞன் ஒருவனை மையப் பாத்திரமாக வைத்து நான் எழுதியுள்ள எனது நாவலை அவருக்குத்தான் சமர்ப்பணம் செய்திருக்கிறேன். நான் இன்றுவரை இசை ருசித்துவரும் ஸி. டி. ப்ளேயர், ஆம்ப்ளிஃபயர், ஃப்ளோர் ஸ்ட்டாண்டிங் ஸ்பீக்கர்கள் ஆகியவற்றை அவரிடமிருந்துதான் விலைக்கு வாங்கிக் கொண்டேன்- பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பு. அவற்றின் பெயர்களைத் தனியாகப் பெட்டிச் செய்தி தரமாட்டேன். அவற்றைத் தயாரிப்பவர்களுக்கு என்னை விடவும்  தரமான விளம்பர நிறுவனங்கள் உதவி வருகின்றன.
விஷயம் இதுதான். ஒருமுறை கேட்டவுடன் தரத்தைத் தானே விளம்பிக்கொள்ளும் இசை வடிவம் மாதிரியோ, ஷாஜி குறிப்பிடும் ஹைஃபிடலிட்டி சாதனங்கள் மாதிரியோ எளிமையான சமாசாரம் அல்ல மனித மனம். குறைந்தபட்சம், கச்சேரி இடைவேளையில் என்னை மாதிரிப் புகைப்பிரியர்கள் எழுந்து வரும்போது,  அல்லது சிறுநீர் கழிக்கச் சென்று திரும்பும் போது  பரிமாறிக்கொள்ளும் நாலைந்து அறிமுக வாக்கியங்களில் முழுக்கப் புரிந்துவிடும் அளவுக்கு எளிமையானதல்ல. இது ஷாஜிக்குத் தெரியாத விஷயமும் அல்ல.  கட்டுரைகள் எழுதும்போது இன்னொரு தடவை அவர் நினைவூட்டிக்கொள்ளலாமே என்பதற்காகத்தான் சொன்னேன்.
மேற்படி நண்பர் உமாபதியிடம் உள்ள ஒலிக் கருவிகள் பற்றி கிட்டத்தட்ட நாற்பது வருடங்கள் அரசாங்க இலாகாவில் வேலை பார்த்துக் கிட்டிய தன் சம்பாத்தியம் முழுவதையும், விருப்ப ஓய்வு தந்த பெருந் தொகையையும் இந்தக் கிறுக்கினால் இழந்தது பற்றி, ஆறு மாதங்களுக்குக் கூடுதலாக ஒரு கருவியில் கேட்க மாட்டார், புதியதை நாடி ஓடிக்கொண்டேயிருப்பார் என்பது பற்றி, பிரபலமான சீட்டுக் கம்பெனி ஒன்றில் குமாஸ்தாவாகப் பணிபுரிகிற, கவரிங் நகைகள் அணிந்து வேலைக்குச் சென்றுவருகிற, பேரிளம் பெண்ணான அவரது மனைவி இதற்கெல்லாம் உதவிகரமாக இருந்துவருகிறார் என்பதுபற்றி, ஷாஜி  குறிப்பிட்ட பெயர்கள் தவிர வேறு சில பெயர்களில் ஒலிச் சாதனங்களை உமாபதியின் வீட்டில் பார்த்திருக்கிறேன். ஷாஜி குறிப்பிடும் ஆடியோஃபைல்களுக்கான பத்திரிகைகள் எந்தெந்தப் பழைய, புதிய புத்தகக் கடைகளில் கிடைக்கும், அவர்கள் உமாபதிக்காகவென்று தனியாக எடுத்து வைக்கிறார்கள் என்பது பற்றியெல்லாம் நான் விரிவாகக் குறிப்பிட மாட்டேன்.  உயிர்மை வாசகர்களுக்கு இந்த உபரித் தகவல்கள் அநாவசியம் என்றே கருதுவேன்.
ஆனால், அவரைப் பற்றிக் குறிப்பிட நேரும்போது, பெயரைக் குறிப்பிடுவதற்குத் தயங்கவும் மாட்டேன். பிரபலமானவர்களைத் தவிர்த்த பிறரெல்லாம் அநாமதேயங்கள் என்ற கருத்து, பொதுப்புத்திக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம்-ஷாஜி போன்ற அறிவுஜீவிகள் அவ்வாறு கருதலாமா?
ஒரு சந்திப்பில் அறிமுகமான புதியவரைப் பற்றி ஏளனமான குரலில் பேசும் இயல்புக்கும், அதன் பின்புலமாக  உள்ள மனோபாவத்துக்கும் தாய்மொழிப் பிரதேசத்தின் சீதோஷ்ணத்துக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்பதும் ஆராயவேண்டிய விஷயம்தான். ஆனால், தான் உதிர்ப்பவை அனைத்துமே ரத்தினங்கள், கேட்கிறவன் தன் காதிலும் கழுத்திலும் கவனமாக வாங்கி மாட்டிக்கொள்ள வேண்டும் என்பதெல்லாம் எந்த மொழியில் எழுதுபவருக்குமே  இயற்கையாய் இருக்கக்கூடிய பிடிவாதம் தான் போலிருக்கிறது.

போகட்டும், இசை கேட்பது என்றால் என்ன என்பதைப் பற்றி சில பத்திகள் யோசிப்பதற்கு என் நண்பர் ஷாஜி வழங்கிய சந்தர்ப்பமாகவே  மேற்படிக் கட்டுரையைக் கருதுகிறேன். அதன் தலைப்பு வேறு, நான் முன்பே குறிப்பிட்டபடி, நாம் சரியாகத் தான் இசை கேட்கிறோமா என்று இருக்கிறதல்லவா?

ஜப்பானியர்கள் இசைகேட்கும் விதம் பற்றி ஒரு செய்தி எப்போதோ வாசித்திருக்கிறேன். ஒலி வழங்கும்  சாதனத்துக்கு முதுகைக் காட்டியபடி சுவரைப் பார்த்து அமர்ந்து, காது மடல்களில் உள்ளங்கைகளைப் பதித்து சுவர் நோக்கி ஒருமித்து, மௌனமாக  அமர்ந்து  கேட்பதுதான் சரியான முறையாம்.
என்னுடைய உறவினர் ஒருவர் இருந்தார். என் அத்தையின் மருமகன். கிருஷ்ணமூர்த்தி என்ற அவரது பெயரைவிடவும், காதுமடல்களில் துலங்கிய சிவப்புக் கடுக்கன்கள் பசுமையாகப் பதிந்திருக்கின்றன  எனக்குள்.  மேல்  ஷட்ஜமம்,  அனுலோமம், ஜன்யராகம் என்பது போன்ற பிரயோகங்கள் இல்லாமல் அவரால் இசை கேட்கவே முடியாது, பாவம். ஹிந்துஸ்தானி கேட்கப் போயிருந்தால் அந்த்தரா, ஸ்தாயி, போல், தாட் போன்ற சொற்கள் வழியாகவும், மேற்கத்திய இசையை ஸொப்ரானோ, ஜி மேஜர், ஸி மைனர் போன்ற சொற்கள் வழியாகவும் கேட்டிருப்பாரோ.
அவருடைய இன்னொரு சிறப்பம்சம், '64-  மதுரையில் அரியக்குடி பாடிக் கேட்ட தோடிதான் இது வரையில் நான் கேட்ட பெஸ்ட் தோடி' என்பார். இந்தத் தலைமுறைப் பாடகரின் கரஹரப்பிரியாவை ஒலிநாடாவில் கேட்டுவிட்டு, '57-ல் மதுரை மணி மயிலாப்பூரில் பாடிய கச்சேரியில் கேட்ட கரஹரப்பிரியாவுக்கு இது உறை போடக் காணாது' என்பார். எப்படித்தான் ஒப்பிடுவாரோ. நடமாடும் டேப் ரிக்கார்டர் மாதிரி என் கண்ணுக்குத் தென்படுவார்.
யெஹுதி மெனுஹின் என்ற ஜெர்மானிய யூதரான வயலின் மேதையும், ரவிசங்கர் என்ற இந்திய ஸித்தார் கலைஞரும் இணைந்து வாசித்த இசைத் தொகுப்புகள் இரண்டு உண்டு. அறுபதுகளில் வெளிவந்திருக்கலாம். இன்றுவரை உலகெங்கும் ரசிகர்கள் கொண்டாடும் இசைத் தொகுப்பு அது. கவித்துவமான பெயர் வேறு. மேற்கைச் சந்திக்கிறது கிழக்கு. மூன்றாவது தொகுப்பில் அவர்களுடன் ஜீன் பியர் ராம்ப்பால் என்ற புகழ் பெற்ற புல்லாங்குழல் கலைஞரும் இணைவார். ஹார்ப் என்ற ஐரோப்பிய இசைக்கருவியை-தென்னிந்தியாவின் யாழ் போன்ற கருவி என்று நினைக்கிறேன்-உபவாத்தியமாகக் கொண்டு ஐந்தாறு நிமிடங்களுக்கு ஒரு தனிக் கோர்ப்பு வாசித்திருப்பார் ராம்ப்பால். இரண்டு நண்பர்களுடன் அதைக் கேட்டேன். ஒருவர் கோவிந்தராஜன். 'ராம்ப்பால் வாசித்தது சுத்தமான சுபபந்துவராளி, ஹிந்துஸ்தானியில் அதைத் தோடி' என்கிறார்கள் என்று கருத்துரைத்தார். கேட்கத் தொடங்கிய மாத்திரத்தில் அறுபது எழுபது ராகங்கள் வரையில் அநாயாசமாகக் கண்டுபிடிக்கக் கூடியவர். ராகத்தை இனம் காணும்வரை, நிம்மதி கெட்டுக் காணப்படுவார்.
இன்னொரு நண்பர், கண்ணை மூடி அமர்ந்து கேட்டவர், இசை முடிந்தவுடன் இமை திறந்தார். விழிகள் சிவந்திருந்தன. 'ஒரு பிரமாண்டமான கோயில்லே ஒவ்வொரு பிரகாரமாகக் கடந்துபோயிட்டே இருக்கேன். ராஜகோபுரத்திலேர்ந்து சந்நிதியைப் பாத்து நேரா நடக்கிறேனா, மூலவருக்கு ஒவ்வொரு அபிஷேகமா நடந்து முடியிறதைப் பாத்துக்கிட்டு இருந் தேண்டா' என்றார். அவர் பெயர் தண்ட பாணி. அமரர் கிருஷ்ணன் நம்பி ட்சாய்க் கோவ்ஸ்கியின் இசைத் தொகுப்பைக் கேட்டுவிட்டு 'பனிமலைகளில் திரிந்த மாதிரி இருந்தது' என்று சொன்னாராம்-கேள்விப்பட்டிருக்கிறேன்.
மேற்படி மெனுஹின்-ரவிசங்கர் இசையை என் வீட்டுக்கு முதன்முறையாக வந்த எழுத்தாள நண்பருக்குப் போட்டுக் காட்டினேன். 'அகில பாரத சங்கீத சம்மேளனம் கேட்கிற மாதிரி இருக்கிறது. அதை அணைத்து விடுங்கள்' என்று கறாராகச் சொல்லிவிட்டார்.  ஜஸ்ராஜின் கச்சேரியை டெல்லிக் குளிரில் கேட்ட அனுபவத் தைப் பரவசத்தோடு என்னிடம் போனவாரம்தானே  சொன்னார், இப்போது இவ்வளவு ஆத்திரப்படுகிறாரே என்று வியந்தேன். சரி, ஊரறிந்த பின் நவீனத்துவர் இல்லையா, அதற்குத் தக்கபடி நடந்து கொள்ள வேண்டாமா என்று சமாதானப்பட்டுக்கொண்டேன். அவரே பின்னாளில்  தியாகராஜ பாகவதரையும், பி.யூ.சின்னப்பாவையும், கே.பி.சுந்தராம்பாளையும் பற்றி நெக்குருகிக் கட்டுரைகள் எழுதியபோது, 'அட! இவர் பின் நவீனத்துவரேதான்' என்று உறுதியாக உணர்ந்தேன். உயிர்மையின் தொடர் வாசகர்களுக்கு இன்னொரு தடவை சொல்ல வேண்டாம், இது  மற்றவர்களுக்காக,  அந்த  எழுத்தாள  நண்பர் சாருநிவேதிதா.
கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோவிலுக்குப் பின்னால் உள்ள காந்தி மைதானத்தில், இளைஞராக முதிர்ந்துவிட்ட சங்கரன் நம்பூதிரியின் கச்சேரி. உள்ளூர் ஒலிபெருக்கிக் கருவி தன்னிச்சையாய் அவ்வப்போது வழங்கும் ஊளையிசையையும் சேர்த்துக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். 'மஹாராஜபுரம் சந்தானத்தின் குரலில், ஜேஸுதாஸின் பாணியில் பாடுகிறாரே, பிள்ளைப் பிராயத்தில் இவரிடம் 'க்ஷீர ஸாகர சயனா' என்று அபாரமாகப் பொங்கி வழிந்த மனோதர்மம், வாலிபனானதும் அறுதியாய்க் காணாமல்போன மாயம் என்ன' என்று திகைத்துப்போய் அமர்ந்திருக்கிறேன். வாய் நிறைய வெற்றிலையுடன், கறுத்த வெற்றுடம்புடன், உருமால் தலையுடன், பகல் முழுக்க உழைத்த வியர்வையின் அடர்த்தியான நெடியுடன் அருகில் அமர்ந்திருந்தவருக்கு அறுபதுக்குமேல் வயதிருக்கலாம். ஆலாபனை முடிந்தவுடன், 'போடு, சுத்த சந்யாசி' என்று வியந்தார். இந்தப்புறம் இருந்த  என் மனைவி உஷா சிரித்தாள்-'சுத்த தன்யாசி' என்று சொல்லவேண்டுமாம்.
என்னைப் பொறுத்தவரை, எந்த நேரத்தில் எந்தச் சூழ்நிலையில் எந்த மாதிரியான இசையாய் இருந்தாலும் ஒரு சொட்டுக் கண்ணீர் வரவைக்கவேண்டும். அவ்வளவு தான். மற்றபடி ஸ வுக்கும் ரி க்கும் வித்தியாசம் தெரியாது. தெரிந்து என்ன பண்ணிவிடப் போகிறோம் என்ற அலட்சியம்தான் காரணமோ என்னவோ.
இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால், இந்தியாவின் பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த பல்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த ஏகப்பட்ட கலைஞர்களுக்குத் தெரிந்திருக்கிறது-இசையை எப்படி வழங்கினால் சந்திரசேகரனுக்குக் கண்ணீர் வரும் என்பது.
சொந்தமாக வானொலிப் பெட்டி வாங்குவதற்கு வக்கில்லாமல், எங்கள் கிராமத்தில் இருந்த மிலிட்டரி ஹோட்டலின் புகைபடிந்த வால்வு ரேடியோவில் ஓசியில் இசைகேட்பதற்காக மஃப்ளரைக் கட்டிக்கொண்டு என்னையும் கைபிடித்து நடத்திச் சென்ற என் தகப்பனாரையும் அவர்கள் கிறங்க வைத்திருக்கிறார்கள்- இன்றைக்குக் கல்லூரியில் படிக்கும் இளைஞனான அவரது மகன்வழிப் பேரனையும் மயக்குகிறார்கள்.

போகட்டும், ஷாஜியின் கட்டுரை வாயிலாக இன்னொரு உண்மை தெரிய வந்திருக்கிறது. இசை கேட்பதற்கு முக்கியமான இன்னொரு தகுதி, பத்தாயிரக்கணக்கில் செலவு செய்து சாதனங்கள் வாங்க வேண்டும்-குறைந்தபட்சம் பெட்டிச் செய்தி பார்த்துப் புழுங்கவாவது வேண்டும். இதில், இந்த மாதிரியான ஹைஃபிடலிட்டி சாதனங்களின் ஸ்பீக்கர்களை-ஃப்ளோர் ஸ்டாண்டிங் ஸ்பீக்கர்கள் வேறு-எத்தனை அடி இடைவெளியில் நிறுத்துவது உசிதம், எவ்வளவு தொலைவிலிருந்து கேட்பது உத்தமம் என்பதற்கு அந்த சாதனங்களின் பயனாளர் கையேடுகளிலும், ஆடியோ ஃபைல்களுக்கான பத்திரிகைகளிலும் விரிவாக எழுதியிருப்பார்கள். மேன்ஷன்களிலும், புறாக்கூட்டு மாடிகளிலும் எட்டடிக் குச்சுக்குள்ளே குடியிருக்கும் லட்சக்கணக்கானவர்களுக்கு இந்த அருகதை இல்லாமல் போய்விடும்-அதனாலென்ன, இசை கேட்டல் என்பது ஒலி கேட்டல்தானே. இன்னும் இன்னும் என்று நயமாக ஒலியைக் கேட்டால் போதாதா? மனோலயமாவது மண்ணாவது?

மின்சார ரயிலிலும், நகர்ப்பேருந்திலும், முப்பது ரூபாய்க்கு வாங்கிய எஃப்.எம் ரேடியோவைக் காது மடலில் இறுக்கிப் பொருத்திப் பாட்டுக் கேட்கிறவனை, மலிவு விலை மொபைலில் பாட்டுக் கேட்கிறவனை இசை ரசிகன் என்று சொல்லத்தகுமா? தாஜ் ஹோட்டலில் எஸ்ப்ரஸ்ஸோ காஃபி குடிப்பதற்கும், தெருமுனையில் உள்ள டீக்கடையில் சாயா அடிப்பதற்கும் வித்தியாசம் தெரியாத கேணையர்களா நாம்? அல்லது, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவருக்கு ஏஸி வசதி செய்து கொடுத்தால் நிம்மதியாய்த் தூங்குவார்-பாவம், என்ற உண்மை அறியாத குரூரர்களா?
ஆனால், இன்னொரு பிரச்சினை வேறு இருக்கிறது ஷாஜி. என் அபிமானப் பாடகர்களான மதுரை மணி அய்யர், சித்தூர் சுப்பிரமணிய பிள்ளை போன்ற மேதைகள் மல்ட்டி ட்ராக் ஒலிப்பதிவு அற்புதங்கள் வருவதற்கு முன்பாகவே பாடி முடித்து விட்டுச் செத்துப் போய்விட்டார்கள்.  எவ்வளவு உயர்வான சாதனத்தில் கேட்டாலும், மக்கடித்த மாதிரி சப்தம்தான் வருகிறது. சொல்லப்போனால், விலை உயர்ந்த, தொழில் நுட்பத்தில் மேலான சாதனங்களில் கேட்டால் இன்னும் அதல பாதாளத்துக்குப் போய்விடுகிறார்கள் - தாம் வாழ்ந்த காலத்தை விடவும் ஏழெட்டு நூற்றாண்டுகள் பின்னால். ரீமாஸ்ட்டர் செய்யப்பட்ட நாராசங்களைக் கேட்கவே சகிக்கவில்லை. என்னை மாதிரி ஆசாமிகளுக்குப் போக்கிடம் என்ன என்று நினைத்தால் துக்கமாக இருக்கிறது.

சாஸ்திரிய இசை கேட்பதே மேட்டிமை மனோபாவம் என்று ஒரு புகார்த் தரப்பு ஏற்கனவே இருந்து வருகிறது. இதில், தொழில் நுட்பம் தனது கூர்மையை அதிகரித்துக்கொண்டே போகும்போது, போகிற போக்கில், உயர்குடியாளர்களையும் உற்பத்தி செய்கிறது என்பது துக்ககரமான விஷயம்தான்.

இசைகேட்டல் என்பது செவிப்புனல்கள் மட்டுமே சம்பந்தப்பட்ட, மேலோட்டமான சிற்றின்பம்தான் என்று நம்பக்கூடிய அப்பிராணிகளும் இருக்கத்தானே செய்வார்கள் ஒரு கட்டுரையின் வழியாக-கட்டுரையை விளக்கிப் புரிய வைக்க உயிர்மையில் பிரசுரமாகியிருக்கும் படங்களின் உதவி வேறு - தங்கள் ஒலிபெருக்கிச்  சாதனம் பற்றிய குற்றவுணர்வுக்குள்ளும், தாழ்வுணர்ச்சியிலும் அமிழ்ந்து விடுவார்களே, அந்தக்  கடையர்கள் சார்பாக அடித்தட்டுகளின் நிரந்தரக் காப்பாளரும், லெதர் பாரின் வாடிக்கையாளரும், சூரியனுக்குக் கீழுள்ள சகலத்தையும் பற்றிக் கறாரான அபிப்பிராயங்கள் கொண்டவருமான நண்பர் சாருநிவேதிதா போன்றவர்கள் நண்பர் ஷாஜியை எப்படியெல்லாம் கிழிகிழியென்று கிழிக்கப் போகிறார்களோ என்று கவலையாக இருக்கிறது. இன்னொரு பக்கம் ஒரு மெல்லிய ஆறுதலும் முளைக்கிறது-அகிரா குரோஸாவா = செல்வராகவன் போன்று இதற்கும் ஏதாவது சமன்பாடு அல்லது சமரச சன்மார்க்கம் இருக்கவும் வாய்ப்பு உண்டே.
இப்படியெல்லாம் அர்த்தப்படுத்திக் கொள்கிற மாதிரி ஒரு வரிகூட அந்தக் கட்டுரைகளில் இல்லையே என்று ஷாஜியும், அவரது வாசகர்களும், தமிழ் நண்பர்களும் அங்கலாய்க்கக் கூடும். இருக்கலாம், இசையில் மாதிரித்தான்,மொழியிலும் அரூபமான பல தொனிகள் தாமாக வந்து சேரத்தான் செய்யும். இவற்றையும் கணக்கிலெடுத்துக் கொள்வது, விமர்சன எழுத்தின் மேன்மைக்கு உதவியாக இருக்கும்.

No comments:

Post a Comment