Friday, April 29, 2011

புத்தகங்களை என்ன செய்வது


To add a library to a house is to give that house a soul. Your library is your portrait.
- Cicero
புத்தகங்களைச் சேர்த்து வைப்பதால் ஒரு பயனுமில்லை, வீட்டில் உள்ள அலமாரி தான் அடைந்து போகிறது அதனால் படித்தவற்றைத் தூக்கி வெளியே போடுங்கள் என்று வீட்டோர் சொல்கிறார்கள், தூக்கி எறிய மனமில்லை, ஆனால் வைத்துக் கொள்ளவும் இடமில்லை , இதனால் வீட்டில் அடிக்கடி சண்டை வருகிறது, படிப்பது சரி என்று ஒத்துக் கொள்கிறவர்கள். புத்தகம் வைக்க இடமில்லை என்று சொல்வது என்னவிதமான மனநிலை, இது போல சங்கடங்கள் உங்களுக்கும் வந்திருக்கும் தானே இதை எப்படி எதிர் கொள்கிறீர்கள் என்று ஆங்கிலத்தில் டி. எஸ். வெங்கட் என்ற நண்பர் ஒரு மின்னஞசல் அனுப்பியிருந்தார், இதே விசயத்தைப் பற்றி  சென்ற முறை கோவை வந்த போது ஒரு நண்பரின் மனைவி என்னிடம் நேரடியாகவே சண்டையிட்டார், அநேகமாக வாசிக்கும் விருப்பம் உள்ள எல்லோரும் எதிர்கொள்ளும் ஒரே சிக்கல் இது தான் என்று தோன்றுகிறது
வாசிக்க விருப்பமுள்ளவர்கள் அத்தனை பேரின் கனவும் வீட்டில் ஒரு நல்ல நூலகம் அமைக்க வேண்டும் என்பது தான், ஆனால் அதை எங்கே வைப்பது, யார் பராமரிப்பது, எப்படிப் பயன்படுத்துவது என்ற கேள்விகள் தொடர்ந்து துரத்திக் கொண்டேயிருக்கின்றன
ஒருவகையில் புத்தகங்களை வைக்க இடமில்லாத நெருக்கடி தான் புத்தகம் படிப்பதைக் காப்பாற்றி வைத்திருக்கிறது என்பேன், வீட்டில் மிகப் பெரிய நூலகங்களை அமைத்தவர்கள் அதன்பிறகு படிப்பதையே விட்டகதையை நான் அறிவேன், நெருக்கடியான இடத்திற்குள் மறைத்தும்  ஒளித்தும் சண்டையிட்டும் சேகரிக்கப்பட்ட புத்தகங்களே நம்மை மறுபடி வாசிக்கத் தூண்டுகின்றன,
ஒரு வணிகநிறுவன உரிமையாளர் தனது தாத்தா வாங்கிச் சேகரித்து வைத்திருந்த இரண்டாயிரம் புத்தகங்களை என்னிடம் காட்டி, இது புத்தகங்களின் கல்லறை போலதானிருக்கிறது, முப்பது வருசமாக யாரும் இதில் ஒன்றைக்கூட புரட்டிப் படிக்கவேயில்லை, அதே நேரம் புத்தகங்களை கடைக்குப் போட மனதுமில்லை, இதை என்ன செய்வது என்று கேட்டார், இது இன்னொரு விதமான நெருக்கடி.
உண்மையில் நமக்கு விருப்பமான ஒரு நூறு புத்தகங்களே போதுமானது தான், அது எந்த நூறு என்று தெரியாமல் தான் பலநூறு புத்தகங்களைச் சேகரித்துக் கொண்டிருக்கிறோம்,
வாசிப்பதற்கு ஒரு புத்தகத்தை தேர்வு செய்வது ஒரு குறிப்பிட்ட மனநிலையே, அப்படிப் படிக்க வேண்டும் என்று தோன்றுகின்ற மனநிலையில் விரும்பிய புத்தகம் கிடைக்காமல் போய்விட்டால் அடையும் வேதனைக்காகவே புத்தகங்கள் பாதுகாக்கபடுகின்றன, இன்னொன்று புத்தகங்கள் கூட இருப்பது ஏதோவொரு பாதுகாப்பு உணர்வைத் தருகின்றன, அதுவும் ஒரு காரணம் தான்,
புத்தகங்களைச் சேகரிப்பதற்கு முன்பு அதை எதற்காகச் சேமிக்கிறோம், எப்படி பயன்படுத்தப்போகிறோம் என்பதை முடிவு செய்து கொள்ள வேண்டும், அத்துடன் புத்தகப்பூச்சி, கரையான், தூசியில் இருந்து அதை எப்படிப் பாதுகாப்பது என்பது முக்கியமானது, அதற்காக ஆண்டிற்கு ஒருமுறை புத்தகங்களை முறையாக உதறி வெயில்பட வைத்து கிருமிநாசினி அடித்து மறுமுறை அடுக்கவேண்டும்,
பல ஆண்டுகளாக புத்தகங்களுக்குள்ளாக அலைந்து நான் சுவாச ஒவ்வாமையால் அவதிப்படுகிறேன், மருத்துவர் சொல்லும் முதல் அறிவுரை எந்தப் பழைய புத்தகத்தையும் கையால் தொடாதே, பழைய நூலகம் எதற்குள்ளும் போகாதே என்பது தான், இரண்டையும் தவறாமல் செய்துவருகிறேன் நான், பின்பு எப்படி ஒவ்வாமை நீங்கும்,
என்னிடம் நாலாயிரத்திற்கும் அதிகமான புத்தகங்கள் உள்ளன, அதில் பாதி அரிய புத்தகங்கள். முதற்பதிப்புகள். பல அரிய மொழியாக்கங்கள், இதை ஒரே இடத்தில் வைத்துப் பாதுகாக்க முடியாது என்று ஆங்காங்கே பிரித்து ஊருக்குக் கொஞ்சமாக தனியே பாதுகாத்து வைத்திருக்கிறேன்,
சமீபமாக இணையத்தில் கிடைக்கின்ற மின்னூல்களைப் படிக்கப் பழகி அதற்கென சோனி ஈபுக் ரீடரை வாங்கி அதில் ஐநூறு புத்தகங்களுக்கும் மேலாகச் சேகரித்து கையில் எடுத்துப்போய் பயணத்தில் படித்துவருகிறேன், கணிணியிலும் மடிக்கணிணியிலுமாக பலநூறு மின்னூல்கள் இருக்கின்றன, இவற்றைப் பொருள்வாரியாகப் பிரித்து தனியே தொகுத்து வைத்திருப்பதால் பயன்படுத்த மிகவும் உதவியாக இருக்கிறது.
ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் இருபது புத்தகங்கள் வாங்கிவிடுகிறேன், நான் வாசிக்க வேண்டும் என அனுப்பபடும் கதை, கட்டுரை, கவிதைப்புத்தகங்களின் எண்ணிக்கை ஐம்பதைத் தாண்டிவிடும். இவை தவிர புத்தகக் கண்காட்சி. பழைய புத்தகக் கடைகள் என்று வாங்கிக் குவித்த புத்தகங்கள் வீட்டில் நிரம்பிப் போயிருக்கின்றன, பலநேரங்களில் வாசிக்க பத்துத் தலைகள் வேண்டும் போலிருக்கிறது.
சிலநேரங்களில் ஒரே புத்தகத்தின் வேறுவேறு பதிப்புகளாக பத்துப் பிரதிகள் வாங்கி வைத்திருக்கிறேன், அது எதற்கு என்று எனக்கே புரியவில்லை, அது போலவே படித்த புத்தகங்களை ஆண்டுக்கு ஒரு முறை முதியோர் காப்பகம் அல்லது கிராமநூலகங்களுக்குத் தந்துவிடுகிறேன், அப்படியிருந்தாலும் புத்தகங்கள் வைக்க இடமேயில்லை,
கன்னிமாரா நூலக அளவில் ஒரு கட்டிடம் தந்துப் புத்தகங்களை வைக்கச்சொன்னாலும் இடம் போதவில்லை என்ற எண்ணம் இருக்கவே செய்யும், அது இடம் தொடர்பான பிரச்சனையில்லை, படிக்கவேண்டும் என்ற தீராத ஆசை தொடர்பானது.
புத்தகங்களை ஒரு முறைப் படித்து முடித்தவுடன் அதன் ஆயுள் முடிந்து போய்விட்டது என்றே பலரும் நினைக்கிறார்கள், பிறகு எப்போதாவது ஒரு முறை அதை இருபது முப்பது பக்கங்கள் புரட்டுவதோடு சரி, தனக்குப் புத்தகம் படிக்கும் பழக்கம் இருக்கிறது என்று அடுத்தவர் நம்பவேண்டும் என்பதற்குத் தான் புத்தகங்களை அடுக்கி வைத்திருக்கிறார்களோ என்று கூடத் தோன்றுகிறது,
பழைய உடைகள். வீட்டுஉபயோகப்பொருள்கள். பொம்மைகள். நாற்காலிகள் மெத்தைகள். கரண்டி டம்ளர்கள் என்று வேண்டாத பலநூறு பொருட்கள் எல்லோருடைய வீட்டிலும் நிரம்பியிருக்கின்றன, ஆனால் அவை எல்லாம் என்றாவது உதவும் என்று நம்புகிறார்கள், புத்தகத்தை அப்படி நினைக்கவேயில்லை
அதைப் படித்து முடித்துவிட்டதும் எடைக்குப் போட்டால் கிலோவிற்கு ஐந்து ரூபாய் தருவார்கள், அதை ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள் என்று நினைக்கிறார்கள்,
உண்மையில் பழைய இரும்பு ஆணிகளுக்குத் தரப்படும் முக்கியத்துவம் கூட புத்தகங்களுக்கு கொடுக்கப்படுவதில்லை,
ஆனால் புத்தக வாசகனுக்கு தான் வாங்கிய புத்தகங்களோடு உள்ள உறவு அது ஒரு புத்தகம் என்பதைத் தாண்டியது, அது  ஒரு விதமான தோழமை உணர்வு, படிப்பின் வழியாக உணர்ந்த நெருக்கம் அவனைப்பற்றிக் கொள்கிறது, அவன் புத்தகங்களை வெறும் அலங்காரப்பொருளாக நினைப்பதில்லை, ஒரு புத்தகம் திறக்கப்படும்போது ஒரு உலகம் திறக்கபடுவதை உணர்கிறான், அது தன் வாழ்வை புரட்டி போடுவதை தானே அனுபவிக்கிறான், ஆகவே அதை உயிருள்ள ஒன்றாகவே கருதுகிறான், புத்தகங்களை தன்னை மேம்படுத்த துணை செய்யும் ஆசானாக. நண்பனாகவே கருதுகிறான், ஆகவே புத்தகவாசகன் ஒரு புத்தகத்தை இழப்பதை எப்போதுமே தனது அந்தரங்க வலியாக உணர்கிறான்,
உலகின் கண்களில் புத்தகங்கள் வெறும் அச்சிடப்பட்ட காகிதங்கள், ஆனால் வாசகன் கண்ணில் அது ஒளிரும் ஒரு வைரக்கல், அதன் மதிப்பை காலம் தான் முடிவு செய்ய முடியும் என்ற நம்பிக்கை அவனுக்குள்ளிருக்கிறது, ஒவ்வொரு புத்தகத்திற்கும் ஒரு ஆன்மாயிருக்கிறது, அதை வாசகனால் நன்றாகவே உணர முடிகிறது, புத்தகத்தோடு உள்ள உறவு எப்போதுமே தனித்துவமான நினைவாகிவிடுகிறது, பலநேரங்களில் வாழ்க்கை அனுபவத்தை விடவும் புத்தகங்களே நம்மை வழிநடத்துகின்றன. ஆறுதல்படுத்துகின்றன.
எனது படுக்கையில், எழுதும் மேஜையில், நாற்காலியின் அடியில், அலமாரியில். காரில். என எங்கும் புத்தகங்களே இருக்கின்றன, ஒரு இரவு ரயில்பயணத்திற்கு துணையாக மூன்று புத்தகங்கள் கொண்டு போகின்ற ஆள் நான், காத்திருக்கும் எந்த இடத்திலும் படிக்க கையில் ஒரு புத்தகம் வைத்திருப்பேன், அப்படி விமானநிலையம் ரயில்நிலையத்தில் படித்தவை ஏராளம். இவையின்றி சிலவேளைகளில் படிப்பதற்காகவே தனியே பயணம் செய்திருக்கிறேன், ஆள் அற்ற தனியிடங்களில் தங்கியிருக்கிறேன்.
படிக்க எப்படி நேரம் கிடைக்கிறது என்று கேட்கிறார்கள்,
ஒன்று நான் தினசரி படிக்கின்றவன், மற்றது நான் தேர்வு செய்து படிக்கின்றவன், மூன்றாவது நான் தொலைக்காட்சியே பார்ப்பது கிடையாது, ஆகவே போதுமான நேரம் எனக்கிருக்கிறது, படிப்பதில் திட்டமிடல் தான் முக்கியம்,
நான் ஒரே நேரத்தில் நாலு புத்தகங்கள் படிக்கின்ற ஆள், காலையில் ஒன்று. மதிய உணவுவேளையில் வேறு ஒன்று. காரில் செல்லும் போது படிப்பது வேறு, இரவு ஒன்று. என்று ஒவ்வொன்றிலும் ஐம்பது நூறு பக்கங்கள் படித்துவிடுவேன், நான் படிக்கின்ற வேகம் அதிகம், ஆகவே விரைவாக வாசித்துவிட முடியும்,
அப்படியானால் நிறைய பக்கங்களை மேலோட்டமாகப் புரட்டிவிடுவீர்களோ என்று சந்தேகமாக கேட்பார்கள், நாம் அரைமணி நேரம் சைக்கிள் ஒட்டும் தூரத்தை ரேஸில் ஒட்டுகின்றவன், எப்படி ஐந்து நிமிசத்தில் கடந்து போய்விடுகிறானோ அது போல படிப்பிலும் வேகமும் கூர்ந்த கவனமும் இருந்தால் வாசிப்பது சாத்தியமே, நான் எனது பதிநாலாவது வயதிலிருந்து படித்துக் கொண்டிருக்கிறேன், அன்று காமிக்ஸ் இன்று நீட்சே அவ்வளவு தான் வேறுபாடு.
ஒரு ஆண்டில் எந்த்த் துறை சார்ந்து முதன்மையாகப்படிப்பது என்பதைத் திட்டமிட்டு அது குறித்த ஆதாரப்புத்தகங்களை  வாங்கி அந்த ஆண்டிற்குள் படித்துவிடுவேன், மற்றபடி நண்பர்கள் மூலமும் இணையதளம் வழியாகவும் வேண்டிய புத்தகங்கள் கிடைத்துவிடுகின்றன.
அதிகம் விற்பனையாகிறது, பரபரப்பாகப் பேசப்படுகின்றது., யாரோ ஒரு பிரபலம் சிபாரிசு செய்கிறார் என்பதற்காக எதையும் நான் படிப்பதேயில்லை, பெரும்பாலும் நான் படிக்க ஆசைப்படுகின்றவை நூறு வருசங்களுக்கு முன்பாக எழுதப்பட்டவையாக  இருப்பதே பிடித்திருக்கிறது, இது தற்போதைய மனநிலை, பத்துவருசங்களுக்கு முன்பாக சமகால இலக்கியமாகத் தேடித்தேடி வாசித்தேன், இன்றுள்ள சமகாலச்சூழல் மீது அதிக ஈர்ப்பு இல்லை,
அகழ்வாய்வுகள்,  மன்னர்கள் எழுதிய புத்தகங்கள். வரலாற்று ஆவணங்கள். அறிவியலின் வரலாறு. நுண்கலையின் மகத்தான ஆளுமைகள்,  போன்றவற்றை வாசிக்கையில் துப்பறியும் கதைகள் படிப்பது  போலவே இருக்கிறது,
தமிழில் வாசிப்பது போல நாலு மடங்கு ஆங்கிலத்தில் வாசிக்கிறேன், எனது வாசிப்பின் முக்கியத்துறைகள். இலக்கியம், காமிக்ஸ். வரலாறு, வாழ்க்கைவரலாறு, விஞ்ஞானம் மற்றும் நுண்கலைகள்.  ஜென் கவிதைகள் சார்ந்த புத்தகங்கள்
பயணம் சார்ந்த நூற்களைப் பெரும்பாலும் படிக்க விரும்ப மாட்டேன், அது போலவே கல்விப்புலஆய்வுகள். அசட்டு நகைச்சுவை எழுத்து,  விஞ்ஞானக்கதைகள். திரில்லர் பேய்க்கதைகள். மனவியல் சார்ந்த புத்தகங்கள். இலக்கியக் கோட்பாடு சார்ந்த விளக்கங்கள். ஆய்வுகள் போன்றவை என் விருப்பமானவையில்லை,
சினிமாவின் புதிய தொழில்நுட்ப சார்ந்த விசயங்கள் மற்றும் உலக சினிமா இயக்குனர்களின் நேர்காணல்களை வாசிப்பேன், சினிமா விமர்சனங்களை வாசிப்பதில்லை, பௌத்த தத்துவம் எனது விருப்பங்களில் ஒன்று, அதில் ஆழமாக தேடித்தேடி வாசிக்க கூடியவன்,
பத்தொன்பதாம் நூற்றாண்டு நாவல்கள் தான் எனது விருப்பமான இலக்கியக்களம், அவற்றை மறுவாசிப்பு செய்வது பிடித்தமானது.
ஜப்பானிய மற்றும் சீனப்பண்பாடு கலாச்சாரம். இலக்கியம் கலைகள் குறித்து அறிந்து கொள்ளவும் வாசிக்கவும் அதிக நாட்டமுள்ளவன் அவற்றை நமது மரபின் நீட்சி என்று கருதுவதால் அதிகமாகவே வாசிப்பேன், அதை போலவே என் எழுத்தை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்த ருஷ்ய இலக்கியங்களை அடிக்கடி மீள்வாசிப்பு செய்தபடியே இருப்பேன்.
ஒரு புத்தகம் படிக்க எவ்வளவு நேரம் ஆகும், அதில் எவ்வளவு படிக்க முடியும் என்று நாள், மணி, நேரம் கணக்கிட்டு  நான் படித்த புத்தகங்கள் குறித்து என்னை சந்தேகப்பரிசோதனை செய்யும் சில அடிமுட்டாள்களை நான் கண்டுகொள்வதேயில்லை, காரணம் படிப்பது எனது விருப்பத்திற்காக மட்டுமே, அவர்களது பாராட்டுகளைப் பெறுவதற்கு அல்ல,
வீட்டிலே சிறிய நூலகம் வைத்துள்ள பலரையும் எனக்கு தெரியும், அவர்கள் என்னை விடவும் அதிகமான குடும்ப நெருக்கடியைச் சந்திக்கின்றவர்கள், ஆனால் அவர்கள் எந்த நெருக்கடியிலும் சேகரித்த புத்தகங்களை இழக்கவேயில்லை,
சென்னையில் கவிஞர் ராஜமார்த்தாண்டன் அறையில் ஒரு ஆள் படுக்கப் போதுமான அளவு கூட இடமில்லாத அளவு புத்தகங்கள் நிரம்பியிருந்தன, அதற்குள்ளாக தான் அவர் வசித்து வந்தார், மொழிபெயர்ப்பாளர் சா,தேவதாஸ் அறைமுழுவதும் புத்தகங்களாகவே இருக்கும், கோணங்கியின் நூலகம் மிகப்பெரியது, அபூர்வமான பல புத்தகங்களை சேகரித்து வைத்திருக்கிறார், நாவலாசிரியர் பா.வெங்கடேன், தமிழவன், சுந்தர ராமசாமியின் நூலகங்கள் முறையாக. பகுக்கப்பட்டு துறைவாரியாக அடுக்கிவைக்கப்பட்ட சிறப்பான  நூலகங்கள், கவிஞர் நா. முத்துகுமாரின் தந்தை மிகப்பெரிய புத்தக வாசகர், காஞ்சிபுரத்தில் உள்ள அவரது நூலகம் மிக அற்புதமானது, பல முக்கிய எழுத்தாளர்களின் முதல்புத்தகங்கள் அவர்கள் கையெழுத்துடன் அவரிடமிருந்தன,
எண்பதுகளின் துவக்கத்தில் நானும் கோணங்கியும் கோட்டையூரில் உள்ள ரோஜா முத்தையாவைத் தேடிச்சென்றோம், தமிழ்நாட்டில் தனிநபராக ஒரு லட்சம் புத்தகங்களுக்கு மேல் சேகரித்து தனியே நூலகம் வைத்திருந்தவர் அவர், அவரது சேமிப்பைத் தான் சிகாகோ பல்கலைகழகம் விலைக்கு வாங்கி டிஜிட்டல் முறையில் ஆவணப்படுத்தி இன்று ரோஜா முத்தையா ஆய்வு நூலகம் என சென்னையில் நடத்திவருகிறது, தரமணியில் உள்ள இந்த நூலகம் தமிழின் மிகப்பெரிய பொக்கிஷம்
நாங்கள் ரோஜா முத்தையாவைத் தேடிச்சென்று டால்ஸ்டாய். தஸ்தாயெவ்ஸ்கியின் நாவல்களின் மொழிபெயர்ப்புகளைக் கேட்டபோது அவர் எங்களை வரவேற்று உபசரித்து தன்னிடம் அதன் பிரதிகள் இருப்பதாக எடுத்து வந்து படிக்கத் தந்தார், புத்தகங்களை பாதுகாக்க ரோஜா முத்தையா தனி ஆட்கள் வைத்திருந்தார், அவரது  சேமிப்பில் அரிய பல தமிழ் நூல்கள் இருந்தன, இலக்கியப் புத்தகங்கள். இதழ்கள். நாடக சினிமா நோட்டீஸ். இசைத்தட்டுகள். விளம்பரங்கள்  என்று அவரது சேமிப்பு இன்று ஒரு பெரிய ஆவணக்களஞ்சியமாக விளங்குகிறது
ரோஜா முத்தையா நூலகம் போலவே புதுக்கோட்டையில் ஞானாலயா என்ற அரிய நூலகம் இயங்கிவருகிறது, அதை நடத்திவருபவர்கள் பா.கிருஷ்ணமூர்த்தி – டோரதி தம்பதிகள், தமது வாழ்நாள் முழுவதும் உழைத்துச், சேகரித்த புத்தகங்களை கொண்டு பத்து லட்சம் செலவில் 1800 சதுர அடியில் அமைந்துள்ள இந்நூலகத்தில் அரிய நூல்கள் மட்டுமின்றி, முக்கிய ஆவணங்களும், அரிய புகைப்படங்களும், பிரசுரமாகாத பிரபல அறிஞர்களின் கையெழுத்துக் கடிதங்களும் சேகரிக்கப்பட்டுள்ளன.
எனது நண்பரும்  மிகச்சிறந்த தமிழ் அறிஞருமான பல்லடம் மாணிக்கம் அவர்கள் தனது புத்தகச் சேமிப்பை கொண்டு தமிழ் நூல் காப்பகம் என மிகப்பெரிய நூலகம் ஒன்றை விருத்தாசலத்தில் நடத்திவருகிறார்
பல்லடம் மாணிக்கம் அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படிக்கின்ற காலத்திலிருந்தே வாங்கிச் சேகரித்த ஒரு லட்ச்சத்திற்கும் மேற்பட்ட நூல்கள் இங்குள்ளன, .இருநூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அச்சிடப்பெற்ற பெப்ரீஷியஸ் அகராதி, சங்க இலக்கியம் தொடங்கி சிற்றிலக்கியங்கள் வரையான பல முதல் பதிப்புகள், கம்பராமாயணத்திற்குப் பத்துக்கு மேற்பட்ட பதிப்புகள். திருக்குறள் அத்தனைப் பதிப்புகளோடு திருக்குறள் தொடர்பான ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட நூல்களும் இங்கு உள்ளன.
வேதங்கள், உபநிடதங்கள்,கலைக்களஞ்சியங்கள், பல்கலைக் கழகங்களின் வெளியீடுகள், சிந்தனையாளர்களின் அரிய நூல்தொகுதிகள். ஐநூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வேடுகள் உலகின் தலை சிற்ந்த திரைப்படங்களின் குறுந்தகடுகள் இசைக் குறுந்தகடுகள் என அமைந்திருப்பது நூலகத்தின் கூடுதல் சிறப்பம்சம்.
தரைத் தளத்தில் நூலகமும் மேல் தளத்தில் கூட்டம் நடத்துவதற்கான அரங்கும் ஆய்வாளர்கள் தங்கி ஆய்வு செய்வதற்கான அறைகளும் கொண்டதாக இது அமைந்திருக்கிறது.
இது போலவே திருவாவடுதுறை ஆதீனத்தில் உள்ள சரஸ்வதி மகால் நூலகமும் மிக முக்கியமான ஒன்றே, இங்கே பழமையான ஓலைச்சுவடிகள், பழைய அச்சுப் பதிப்புக்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. முந்நூற்றுக்கும் அதிகமான தமிழ்நூல்களை வெளியிட்டும் மறுபதிப்புச் செய்தும், திருத்தப்பதிப்புச் செய்தும் வெளியிட்டுள்ளது இவ் ஆதீனம்.
தஞ்சையில் உள்ள சரஸ்வதி மகால் நூலகத்தில் தற்போது 10 மொழிகளைச் சேர்ந்த 69,000 நூல்கள், 39,000  ஓலைச்சுவடிகள் மற்றும் சோழர்கால கலைநயமிக்க ஓவியங்கள் உள்ளன.
நாயக்கர் காலத்தில் சரஸ்வதி பண்டார் என்ற பெயரில் 1918 வரை அழைக்கப்பட்ட இந்த நூலகம், மராட்டியர்கள் ஆட்சிக் காலத்தில் தஞ்சை மன்னர் சரபோஜியால் சரஸ்வதி மகால் நூலகம் என்று மாற்றம் பெற்றது. 1918-ல் பொது நூலகமாக அறிவிக்கப்பட்ட இந்த நூலகத்தில் அரிய ஒலைச்சுவடிகளை பாதுகாக்கவும் முறைப்படுத்தி பதிப்பிக்கவும் படுகின்றன.
தமிழ் இலக்கியங்களின் மூலச் சுவடிகளை தேடி சேமித்து, பகுத்து, பாடபேதம் கண்டு, தொகுத்து அச்சிலேற்றும் பணியாற்றும் நூலகம் உவேசா நூலகம், இது சென்னையில் உள்ளது, செவ்வியல் இலக்கியங்களுக்கான 61 ஓலைச் சுவடிகளைக் கொண்ட நூல் நிலையம் இதுவொன்றேயாகும்  பத்தொன்பதாம் நூற்றாண்டு வெளியீடுகள் டாக்டர். உ.வே.சா. கி.வா.ஜ. போன்ற பேரறிஞர்கள்        சேகரித்தவை. அனைத்துத் தமிழ் ‌   இலக்கியநூல்கள். இலக்கண நூற்கள் இங்கே உள்ளன
இது போலவே சென்னையில் ஒரு தமிழ் புத்தகம் கூட இல்லாத ஒரு நூலகமிருக்கிறது, அது சென்னை இலக்கிய சங்க நூலகம், அது நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில், சங்கர நேத்ராலயா  மருத்துவமனைக்கு எதிரில் அமைந்துள்ள D.P.I வளாகத்தினுள் உள்ளது,
1812ஆம் ஆண்டுசென்னையிலிருந்த ராயல் ஏசியாடிக் சொசைட்டியின் ஒரு பகுதியாக இந்த நூலகம் தொடங்கப்பட்டுள்ளது ஒன்றரை லட்சம் புத்தகங்கள் இங்கே உள்ளன. இலத்தின், பிரஞ்சு, ஜெர்மன், ஆங்கிலம் ஆகிய மொழிகளின் புத்தகங்கள் மட்டுமே இங்குள்ளன,  தமிழ் புத்தகமே  கிடையாது, இதில் உறுப்பினராவதற்கு எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லை.  வருட சந்தா ஐநூறு ரூபாய். உறுப்பினர் ஒரே நேரத்தில் நான்கு புத்தகங்களை எடுத்துச் செல்லலாம்.
ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ள 134 ஆண்டு பழமை வாய்ந்த பென்னிங்டன் பொதுநூலகம்முக்கியமான ஒன்று,  1953-ம் ஆண்டிலிருந்து வெளிவந்த தமிழக அரசிதழ்கள் மற்றும் அரசாணைகள் இங்கே பாதுகாக்கப்பட்டு வருகின்றன. 1875-ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்த பென்னிங்டன் ஆசியுடன், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியராக இருந்த சரவணமுத்துப்பிள்ளை, ஏ. ராமசந்திரராவ், டி. ராமஸ்வாமி ஐயர், டி.கிருஷ்ணராவ், முத்துஐயங்கார் மற்றும் முத்துச்சாமி பிள்ளை ஆகியோர் இணைந்து, இந்த  நூலகத்தை ஆரம்பித்தனர். இங்கே தமிழில் 20,113 புத்தகங்களும், ஆங்கிலத்தில் 21,277 புத்தகங்கள் என மொத்தம் 41,390 புத்தகங்கள் உள்ளன.
இது போலவே சேலம் தமிழ்சங்க நூலகம். கும்பகோணம் கோபால்ராவ் நூலகம் மதுரை ரீகல் தியேட்டரின் பின்பக்கம் உள்ள விக்டோரியா நூலகம். சிரவணபெலகோலாவில் உள்ள சமண நூலகம். சித்தாமூரில் உள்ள குந்தகுந்தார் நூலகம். கயாவில் உள்ள பௌத்தநூலகம். பூனாவில் உள்ள பண்ட்ராகர் நூலகம். ராஜபாளையத்தில் உள்ள மு,கு,ஜெகநாத ராஜா நூலகம்.  பிஎஸ்கே,சமஸ்கிருத நூலகம், அண்ணாமலைப் பல்கலைக்கழக நூலகம், கொல்கத்தாவில் உள்ள  இந்திய தேசிய நூலகம். டெல்லி பொது நூலகம், சாகித்ய அகாதமி நூலகம், சென்னைப் பல்கலைக்கழக நூலகம், சென்னை அடையாறில் உள்ள அடையாறு நூலகம். பெரியார் நூலகம். மதுரை காந்தி மியூசிய நூலகம், நெய்வேலி மத்திய நூலகம். பனாரஸில் உள்ள சமஸ்கிருதக் கல்லூரி நூலகம். பரோடாவில் உள்ள மத்திய நூலகம், போன்றவை நான் பார்த்த நூலகங்களில் முக்கியமானவை,
புத்தகங்களை இரவல் கொடுப்பதைப் பற்றி எழுத்தாளர் அனதோலியா பிரான்சு வேடிக்கையாக குறிப்பிட்டது தான் நினைவிற்கு வருகிறது
Never lend books, for no one ever returns them; the only books I have in my library are books that other people have lent me.
ஆனால் கைவிடப்பட்ட புத்தகங்களை விடவும் படிக்கப்படாமல் முடங்கிக் கிடக்கின்ற புத்தகங்கள் வேதனைமிக்கவை, இதைக் கேலி செய்து ஸ்விப்ட் பேடில் ஆப் புக்ஸ் என்ற ஒரு புனைவு எழுதியிருக்கிறார், வர்ஜீனியா வுல்ப் கூட நடைபாதைக்கடைகளில் விற்கப்படும் புத்தகங்களை வீடில்லாத புத்தகங்கள் என்று சொல்கிறார்,
புத்தகங்களை கண்ணாடி அலமாரியில் வைத்துப் பூட்டி சவமாக்கிவிடுவதை விட அவற்றை யாரோ படிக்கட்டும் என்று உலகின் கைகளுக்கே திரும்ப தந்துவிடுவது நல்லது என்றே தோன்றுகிறது, அது தான்  எப்போதும் புத்தகங்களின் விதிவசம் போலும்,
••
ஞானாலயா முகவரி: ஞானாலயா ஆய்வு நூலகம், 6, பழனியப்பா நகர், திருக்கோகர்ணம் அஞ்சல், புதுக்கோட்டை, 622002 இந்தியா தொலைபேசி: 914322221059. Gnanalaya Research Library, 6, Pazhaniyappa Nagar, Thirukkokarnam, Pudukkottai, 622002, India. Phone: 914322221059.
••
டாக்டர். உ.வே.சா. நூல் நிலையம்
எண்.2.அருண்டேல் கடற்கரை சாலை
பெசன்ட் நகர், சென்னை-90, இந்தியா
தொலைபேசி: 24911697
••
பல்லடம் மாணிக்கம் தமிழ்நூல் காப்பகம்,
சேலம் நெடுஞ்சாலை, தமிழ்நகர்,விருத்தாசலம்-606 001
செல்பேசி: + 91 9443042344
••
Roja Muthiah Research Library
3rd Cross Road
 CPT Campus Taramani
Chennai 600 113
,
Phone nos. (044) 2254-2551 & 2254-2552
Fax no. (044) 2254-2552

The Tree - ஒரு மரத்தை வாழ்வின் குறியீடாகக் கொண்ட மிகச்சிறப்பான படம்

Thursday, April 28, 2011

(டார்வினின் மகள்) http://creationthemovie.com


Creation என்று சார்லஸ் டார்வினைப் பற்றி ஒரு திரைப்படத்தைப் பார்த்தேன். அது மிகவும் பிடித்திருந்தது. அந்தப் படம் பார்த்த இரண்டு நாட்களுக்கு டார்வினைப் பற்றி தேடி நிறைய வாசித்தேன்.  அவரது இயற்கையின் வரலாறு  குறித்த தேடுதலும் அது சார்ந்த கண்டுபிடிப்புகளும் கருதுகோள்களும் விஞ்ஞானத்தின் மீது மனிதன் கொண்ட நம்பிக்கையின் முதல்சாதனை என்றே தோன்றுகிறது.   பரிணாம வளர்ச்சி குறித்த விஞ்ஞானத்தை டார்வினுக்கு முன்பு. டார்வினுக்கு பின்பு என்று பிரிக்குமளவு அவர் ஒரு முக்கிய புள்ளியாக இருந்திருக்கிறார்.
இன்று டார்வின் கல்விப்புல மாணவர்களின் பாடப்புத்தகத்தில் உள்ள பிம்பமாக மட்டுமே மிஞ்சியிருக்கிறார்.  பொது வாழ்வில் அவர்குறித்த பகடிகளும், புரிந்து கொள்ளாத கேலிகளுமே மிஞ்சியிருக்கின்றன. அதிகம் தவறுதலாகப் புரிந்து கொள்ளப்பட்ட ஒரு விஞ்ஞானி என்றே அவரைச் சொல்வேன். டார்வினின் ஆதாரப்புத்தங்களை வாசிப்பவர்கள் இன்று வெகு குறைவே.
அவருக்குப் பின்பு இன்று உயிரியல் விஞ்ஞானம் எவ்வளவோ வளர்ந்து வந்திருக்கிறது. புதிய முன்னேறங்களைக் கண்டிருக்கிறது. ஆனாலும் அவரது வேட்கையும், எதிர்ப்புணர்வும். அர்ப்பணிப்பும் இடைவிடாத பயணமும் இன்றுள்ள இந்திய விஞ்ஞானிகள் பலருக்கும்  இருப்பதாகத் தெரியவில்லை.
டார்வின் தன் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து எழுதி வந்திருக்கிறர, அது ஒரு தீவிரமான எழுத்தாளர்களின் படைப்புகளை விட அதிகம், ஆயிரமாயிரம் பக்கக் குறிப்புகள், எழுத்துப்படிவங்கள். புத்தகங்கள், பரிமாண வளர்ச்சி குறித்த கட்டுரைகள், பறவைகள்,விலங்குகளின் ஆதார இயல்புகள் குறித்த குறிப்புகள், ஆய்வுகட்டுரைகள் என்று அவரது பங்களிப்பு மகத்தானது.
டார்வினின் வாழ்க்கை வரலாறு மிகவும் சுவாரஸ்யமானது. அவர் தனது அப்பாவைப்பற்றி எழுதியுள்ளதை வாசிக்கையில் டிக்கன்ஸைப் படிப்பதுபோலவே இருக்கிறது. டார்வினின் எழுத்து  தேர்ந்த சொற்களால், நுண்மையாக, உணர்ச்சிபூர்வமான விவரணைகள், காட்சிச் சித்திரங்களுடன் , ஒவியரை போல நுட்பமான நிறவடிவ பேதங்களுடன், எழுதப்பட்டிருக்கின்றது. பெரும்பான்மை விஞ்ஞானக்கட்டுரைகளை பத்தி எழுத்து போல சுவாரஸ்யமாக வாசித்துவிட முடிகிறது
டார்வின் கடிதங்கள், தனிக்குறிப்புகள், நாட்குறிப்புகள், கடற்பயண குறிப்புகள் என்று வாசிக்க இன்று நாலாயிரம் பக்கங்கள் நம் முன்னே இருக்கின்றன. அதில் எவ்வளவு தமிழ்படுத்தப்பட்டு வெளியாகி உள்ளது எனத்தெரியவில்லை. சார்வினின் ஆதார எழுத்துகளை தனியே ஒரு தொகுப்பாக தமிழில் கொண்டுவருவது அவசியமான ஒன்று.
முன்பு டார்வினைப் பற்றிய எளிய  அறிமுகப்புத்தகங்கள் ஒன்றிரண்டு வந்திருக்கின்றன. ஆனால் அதன்வழியே அவரது ஆளுமையின் பன்முகத்தை நாம் அறிந்து கொள்ளமுடியவில்லை. அவரது நகைச்சுவையோடிய எழுத்து தமிழில் வரவேயில்லை.
ஒரு காலத்தில் கலைக்கதிர், மஞ்சரி போன்ற இதழில் அவரைப்பற்றி சில கட்டுரைகளைப் படித்திருக்கிறேன்  கலைக்கதிர் போல விஞ்ஞானத்திற்கென தனித்துவமான இதழ்கள் இப்போது  வெளியாகிறதா எனத்தெரியவில்லை
சார்லஸ் டார்வினைப் பற்றி பிபிசி தயாரிப்பிலும், இயற்கை வரலாற்றியல் துறை தயாரிப்பிலும் இரண்டு ஆவணப்படங்கள் வெளியாகி இருக்கின்றன.  அவை அவரை ஒரு விஞ்ஞானியாக சித்தரிப்பதிலே முக்கியத்துவம் கொண்டிருந்தன . அந்த இரண்டையும் விட இந்தப் படம் முக்கியமானது.
இது டார்வின் என்ற விஞ்ஞானியை விடவும் டார்வின் என்ற மனிதனின் அகவுணர்ச்சிகளை முதன்மைபடுத்தியிருக்கிறது. அது முக்கியமானது.  டார்வின் குடும்பம் மனைவி மகள் அவரது நண்பர்கள். அவரது தயக்கம் பயம். கோபம் என்று இந்தப்படம் டார்வினை நெருக்கமான ஒரு மனிதனின் கதை போலாக்குகிறது,
கதை கேட்பதில் இருந்து தான் டார்வின் படமும் துவங்குகிறது
ஒவ்வொரு வெற்றிபெற்ற புத்தகத்திற்குப் பின்னும் அந்த புத்தகத்தை விட சுவாரஸ்யமான. உலகம் அறியாத பல சம்பவங்கள், கதைகள். நிகழ்வுகள் மறைந்து போயிருக்க கூடும். அப்படி டார்வினின் On the Origin of Species. புத்தகம் எழுதப்பட்ட காலத்தில் டார்வின் என்ன மனநிலையில் இருந்தார். எந்தவிதமான எதிர்ப்புகளைப் பற்றி கவலைப்பட்டார். அவரது தினசரி வாழ்க்கை  எப்படியிருந்த்து என்பதை படம் மிக நுண்மையாகப் பதிவு செய்திருக்கிறது
டார்வின் தனது 22 வயதில் HMS Beagle என்ற கப்பலில் தனது கடற்பயணத்தை துவக்கினார். இந்தக் கப்பல் இங்கிலாந்து மன்னரின் ஆணைப்படி தென் அமெரிக்காவின் கடற்கரைப் பகுதிகளில் உள்ள நிலவியல் மற்றும் இயற்கை வளங்களை ஆராய்ந்து வரும்படியாக அனுப்பபட்டது. வெளிப்படையாக இயற்கையைத் தேடும் பயணம் போலத் தெரிந்தாலும் உள்ளுற இந்தப்பயணத்திற்கு வேறு நோக்கமிருந்தது. அது பூமியில் எந்த இடங்களில் கனிமங்கள் கிடைக்கும். எந்தநாட்டின் துறைமுகம் எப்படி உள்ளது. எங்கே தங்கம் கிடைக்கிறது. எந்த நாட்டில் என்ன இயற்கை வளங்கள் இருக்கின்றன என்ற வணிகப்பேராசை இந்த பயணத்திற்குள்ளும் ரகசியமாக இருந்தது. அத்தோடு நாடுபிடிக்கும் அரசியல் உள்நோக்கமும் அடங்கியே இருந்திருக்க கூடும் என்கிறார்கள் இன்றைய வரலாற்று ஆய்வாளர்கள்.
இதற்காக பீகிள் கப்பல் மூலம் நீண்ட கடற்பயணத்தை மேற்கொண்டு கடல்வரைபடத்தை உருவாக்க முனைந்தது இங்கிலாந்து அரசு. இந்த கப்பலின் முதல்பயணம் 1826ல் துவங்கியது. அப்போது இதன் கேப்டனாக இருந்தவர் Captain Pringle Stokes , 380 டன் எடையுள்ள இந்தக்கப்பலில் ஆறு பீரங்கிகள் பொருத்தபட்டிருந்தன.  புயல் மழையில் சிக்கி  கப்பல் பயணம் அடிக்கடி தடைபடுவதும் பின்பு அதிலிருந்து நீங்கிச் செல்வதுமாக தொடர்ந்தது.
டார்வினின் கடற்பயணம் அவர் நினைத்தது போல எளிதாகயில்லை. கடற்பயணத்தின் நடுவே மனத்தடுமாற்றம் கொண்ட கப்பலின் கேப்டன் தற்கொலை செய்து கொண்டார். அதன்பிறகு புதிய கேப்டனாக நியமிக்கபட்டவர் Robert FitzRoy. இவர் ஒரு தேர்ந்த கடலோடி. இவர் தான் டார்வினைத்  தனது கப்பலின் இயற்கை ஆய்வாளராகப் பணியாற்றும்படி அழைத்து அதற்குத் தேவையான பணஉதவிகளைச் செய்தவர். மூன்று ஆண்டுகாலப்பயணம் எனத் திட்டமிடப்பட்டது ஆனால் பயண முடிவில் ஐந்து ஆண்டுகாலமாகிப் போனது. ஒவ்வொரு சிறு தீவாகச் சென்று ஆராய்ந்து அதன் இயற்கை வளங்களைப் பற்றி நுட்பமாக பதிவு செய்திருக்கிறார் டார்வின்.
இந்தக்குறிப்புகளில் அங்கே என்ன நிறமான மண் உள்ளது. வானம் எப்படி இருந்தது. என்னவிதமான நண்டுகள், பறவைகள், மீன்கள் இருந்தன. அதன் பிரத்யேகத்தன்மைகள் என்ன? பூர்வகுடிமக்கள் எப்படியிருந்தார்கள் என்று பல்விதமான குறிப்புகளை டார்வின் எழுதியிருக்கிறார்.
இந்த கப்பலில் மருத்துவர், நிலவியலாளர், கனிம ஆய்வாளர் , வரைபட உதவியாளர். வானவியில் ஆய்வாளர் என்று 74 பேர் இருந்தார்கள். 1831ம் ஆண்டு டிசம்பரில் இக்கப்பல் புறப்பட்டது. ஐந்தாண்டுகாலம் இது பிரேசில் அர்ஜென்டினா பெரு மாலதீவு, சிட்னி  தென்னாப்பரிக்கா என்று சுற்றியலைந்து இங்கிலாந்தை வந்து அடைந்தது. இந்தப்பயணம் தான் டார்வினை பரிமாணவளர்ச்சி குறித்த விஞ்ஞானியாக உருவாக்கியதில் முக்கியபங்கு வகித்திருக்கிறது. இப்பயண அனுபவத்தை டார்வின் மிக விரிவான மூன்று தொகுதிகளாக எழுதியிருக்கிறார்.
தங்களது கப்பல் எந்த திசையில் சென்றது. எந்த்த் தீவில் கரை இறங்கினார்கள். அங்கு தீவுவாசிகள் எப்படியிருந்தார்கள். எந்த நிறத்தில் மணல் இருந்தது. எந்த வடிவில் பாறைகள் இருந்தன. தண்ணீரில் என்ன உயிர்கள் வசித்தன. எத்தனை வகையான பறவைகள் வசித்தன. புதையுண்டு கிடந்த எலும்புகள் என்னவிதமானவை என்று அவர் ஆழ்ந்து அறிந்து எழுதிய குறிப்புகளை வாசிக்கையில் வியப்பாக இருக்கிறது . டார்வின் இந்த நாட்களில் கடல்வாழ் உயிரினங்கள் குறித்தும் நிலவயில் குறித்தும் அதிக ஈடுபாடு காட்டியிருக்கிறார். அதே நேரம் தீவுவாசிகளை அவர்கள் எவ்வளவு அலட்சியமாக நடத்தினார்கள் என்பதைப் பற்றியும்  தீவுவாசிகளின் விசித்திரமான உணவுமுறைகள். சடங்குகள் பற்றியும் எழுத்தாளர்களை போல சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறார்.
கப்பலின் கேப்டனாக இருந்த பிட்ஜ்ரேயும் முந்தைய கேப்டனை போலவே மனக்கோளாறு கொண்டவர். அது பிட்ஜ்ரே குடும்பத்தின் பரம்பரை வியாதி. ஆகவே அவர் எப்போதும் யாராவது தன்னோடு கூடவே இருக்க வேண்டும் என்று உள்ளுறப்பயந்தபடியே இருந்தார். நிலையில்லாத இந்தக் கற்பனை பயம், மிதமிஞ்சிய அச்சம், குழப்பம் மற்றும் மனத்தடுமாற்றம் என்று மிகுந்த உணர்ச்சிவசப்பட்ட பிட்ஜ்ரேயை டார்வின் அன்போடு நேசித்தார். அவர்களது நட்பு உறுதியாக இருந்தது. இதனால் பிட்ஜ்ரே சில தீவுகளில் டார்வின் மாதக்கணக்கில் தங்கி ஆய்வு செய்து வர அனுமதி தந்ததோடு தனது ஆய்விற்காக டார்வின் சேகரித்த உயிரினங்கள், கற்கள், எலும்பு படிவங்கள், மிருகங்கள் அத்தனையும் தனது கப்பலில் ஏற்றி முறையாக பாதுகாக்கவும்  செய்திருக்கிறார். 
ஆனால் பிட்ஜ்ரே தீவிரமான மதப்பற்று கொண்டிருந்தார். ஆகவே அவர்  உலகம் அறியாமல் வாழ்ந்து கொண்டிருந்த தீவுவாசிகளை கிறிஸ்துவர்களாக மாற்ற பெரும்முயற்சி எடுத்து கொண்டிருக்கிறார்.
இதை பற்றி ஒரு சம்பவம் குறிப்பிடப்படுகிறது. பிட்ஜ்ரே ஒருமுறை மூன்று ஆதிவாசிச் சிறுவர்களை விலைக்கு வாங்கி தன்னோடு நகருக்கு அழைத்து சென்று ஆங்கிலம் கற்பித்து அழகான உடைகளை தந்து ,நாகரீகமான மனிதர்களைப் போல உருமாற்றி மறுபடியும் அதே தீவிற்கு அழைத்து சென்றிருக்கிறார்.
தங்களது சொந்தத்தீவைக் கண்டதும் ஆதிவாசிச் சிறுவர்கள் தங்களது நாகரீக ஆடைகளை அவிழ்த்து எறிந்துவிட்டு நிர்வாணமாக தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு மாறிப்போய்விட்டார்கள். ஐந்து வருசங்கள் அந்த சிறுவர்களை  வலிந்து திருத்திய போதும் அவர்களின் மனம் மாறவேயில்லை என்று பிட்ஜ்ரே மிகவும் வருந்தி தனது நாட்குறிப்பில் எழுதியிருக்கிறார். பிட்ஜ்ரேயின் கடிதங்களும் குறிப்புகளும் தனித்து புத்தகமாக வெளியாகியிருக்கின்றன. 
க்ரியேஷன் திரைப்படத்தில் இந்தக் காட்சிகள் இடைவெட்டாக வந்து போகின்றன. படம் இங்கிலாந்தின் சிறிய கிராமப்புறம் ஒன்றில் டார்வின் இளைஞராக வசித்துக் கொண்டிருப்பதில் இருந்து துவங்குகிறது. தனது பத்து வயது மகள் ஆனியைப் புகைப்படம் எடுக்க அழைத்து போகிறார் டார்வின். அவள் புகைப்படம் எப்படி எடுக்கபடுகிறது என்று ஒரு கேள்விகேட்கிறாள். அதை விஞ்ஞானப்பூர்வமாக விளக்குகிறார் டார்வின். அன்றிரவு மகள் அப்பா எனக்கு ஒரு கதை சொல்லுங்களேன் என்கிறாள். என்ன கதை என்று கேட்க, உங்கள் பயணத்தின் கதை என்று சொல்லிச் சிரிக்கிறாள்.
டார்வின் பிட்ஜ்ரேயுடன் தனது கடற்பயணத்தில் கண்ட ஆதிவாசிச் சிறுவர்களைப் பற்றிய கதையைச் சொல்லி சிரிக்கிறார். அப்பாவிற்கும் மகளுக்குமான உறவும் நெருக்கமுமாக படம் வளர்கிறது. துடிப்பான, விஞ்ஞானத்தில் நாட்டமுள்ள பெண்ணாக மகள் வளர்வது டார்வினிற்கு மிகவும் பிடித்திருக்கிறது.
அவர் ஆனி பிறந்த சில மணிநேரத்தில் இருந்து அவளது வளர்ச்சியை படிப்படியாகப் பரிசோதனை செய்து தனது குறிப்பேட்டில் குறித்து கொண்டு வருகிறார். ஆகவே குழந்தைகள் எப்படி வளர்கிறார்கள் என்று அவரால் துல்லியமாக அறிந்து கொள்ள முடிந்திருக்கிறது.
ஒவ்வொரு முறையும் ஆனி அப்பாவிடம் தனக்காக ஒரு கதையைச் சொல்லுங்கள் என்று கேட்கிறாள். டார்வின் கடந்த கால நினைவில் இருந்து ஒரு சம்பவத்தைச் சொல்கிறார். உராங்குட்டான் வகையை சேர்ந்த குரங்கு ஒன்றினை காட்டில் இருந்து பிடித்துவந்து கூண்டில் அடைத்து லண்டன் மிருக்க் காட்சி சாலையில் வேடிக்கைப் பொருளாக வைத்திருந்தார்கள். லண்டன்வாசிகள் பார்த்த முதல் உராங்குட்டான் அதுவே.
அதை மனிதனைப் போல உடை அணிய செய்து ஒரு கூண்டில் அடைத்து வைத்திருந்தார்கள். இளம் ஆய்வாளரான டார்வின் அந்தக் குரங்கோடு பழகி அதன் தினசரி நடவடிக்கைகளைக் குறிப்பேட்டில் பதிவு செய்து கொள்கிறார். இருவருக்கும் இடையில் நட்பு உருவாகிறது. அந்தக் குரங்கு அவரை மிகவும் நேசிக்கிறது. ஆனால் அது நோய்மையுற்று சில நாட்களில் இறந்து போகிறது
இந்தச் சம்பவம் டார்வின் மனதில் அழியாத துயரமாகப் பதிந்து போயிருக்கிறது. சோகக்கதையான இதை ஆனி அடிக்கடி கேட்கிறாள். அவளுக்கும் இறந்து போன குரங்கின் மீது காரணமற்ற துயரம் உருவாகிறது. அவள் அந்தகதையின்  மீது ஏனோ அதிகமாக ஈடுபாடுகாட்டுகிறாள்.
டார்வினின் மனைவி எம்மா தீவிரமான மதநம்பிக்கை கொண்டவள். டார்வினோ உணவுவேளையில் பிரார்த்தனை செய்வதைக் கூட மறந்து போனவராகயிருக்கிறார். அவர் மனது எப்போதும் எதையோ யோசனை செய்தபடியோ, கற்பனை செய்தபடியோ இருக்கிறது.
ஒரு நாள் அவரைத் தேடி வரும் அல்டாஸ் ஹக்ஸ்லி உங்கள் விஞ்ஞானக் கருதுகோளின் மூலம் கடவுளின் இடம் காலி செய்யப்படுகிறது. நீங்கள் கடவுளைக் கொன்ற கொலையாளி என்று சொல்லிச் சிரிக்கிறார்.
அது தான் டார்வின் குழப்பத்திற்கான முக்கிய காரணம் என்று புரிகிறது. டார்வின் மதத்தை எதிர்த்து தனது கண்டுபிடிப்புகளை, விஞ்ஞான நிரூபணங்களை முன்வைக்க வேண்டுமா என்று தடுமாறிக் கொண்டேயிருக்கிறார். டார்வின் தனது விஞ்ஞானக் கோட்பாடுகளால் மதத்தை எதிர்ப்பதை அவரது மனைவியே விரும்பவில்லை. இந்த நிலையில் அவரது மகள் திடீரென நோய்மையுறுகிறாள்.
மனைவியின் ஆலோசனையை மீறி அவளை நீர்சிகிட்சை செய்து குணமாக்க குளியல் கூடம் ஒன்றிற்குக் கொண்டு செல்கிறார் டார்வின். அந்தச் சிகிட்சை பலன் அளிக்காமல் மகள் இறந்து போய்விடுகிறாள். இந்தக் குற்றவுணர்ச்சி அவரை வாட்டுகிறது.
தன்னால் தான் மகள் இறந்து போய்விட்டாள் என்று மனைவி வெறுப்பதாக டார்வின் நினைக்கிறார். இந்த்த் தடுமாற்றம் அவர்களுக்குள் பிரிவையும் பேதங்களையும் உருவாக்குகிறது. மகளின் மரணம் தந்த மனப்போராட்டம் அவரை மிகவும் வேதனைப்படுத்துகிறது
முடிவில் மகளின் மரணத்தோடு அவரது மதநம்பிக்கை முற்றுப்பெறுகிறது. அவர் தனது புதிய நூலான On the Origin of Species யை வெளியிட முடிவு  செய்து தபாலில் பதிப்பாளருக்கு அனுப்பி வைக்கிறார். தபால்வண்டி நகரை நோக்கிப் புறப்பட்டு போகிறது. டார்வின் மனநிம்மதியோடு தனது வீடுநோக்கி நடந்து போகையில் அவரோடு இறந்து போன அவரது மகள் கூடவே நடந்து போவது போல இறுதிக்காட்சி முடிவடைகிறது.
ஒரு விஞ்ஞானியாக உலகின் ரகசியங்களை அறிந்து கொள்ள முடிந்த மனிதருக்கு மரணமும் மகளின் அன்பும் அவளது பிரிவு தரும் துயரும் புரிந்து கொள்ளவே முடியாத உண்மைகளாக இருக்கின்றன. எல்லா விஞ்ஞானிகளும் சராசரி மனிதர்களே என்பது தானே உண்மை. டார்வின் எனும் தந்தையைப் பற்றிய படமே இது. இந்த தந்தையின் அன்பும் தடுமாற்றங்களும் நம்மை நிறைய யோசிக்க வைக்கின்றன.
மதத்தின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள ஒரு விஞ்ஞானி எவ்வளவு போராட வேண்டியிருக்கிறது என்பதை இப்படம் மிக அழகாக வெளிப்படுத்துகிறது . Paul Bettanyசார்லஸ் டார்வினா அற்புதமாக நடித்திருக்கிறார்.  ஒளிப்பதிவு, இசை, கலைநுட்பம் என்று யாவும் ஒன்றிணைந்து காலத்தின் பின்போய் திரும்பிய அனுபவம் கிடைக்கிறது
டார்வின் வெறும் விஞ்ஞானியில்லை. அவர் நம் காலத்தின் உண்மையான கலகக்காரன்
டார்வினைப்பற்றி அறிந்து கொள்வது விஞ்ஞானத்திற்கும் சமூகவளர்ச்சிக்குமான உறவைப்பற்றி அறிந்து கொள்வதேயாகும். அதற்காகவாவது அவரைப் பற்றிய  இந்தப் படத்தை அவசியம் பார்க்க வேண்டும்

புத்தகம் படிப்பது எப்படி?



புத்தகம் படிப்பது என்பது எளிமையானதில்லை. அது ஒரு நுட்பமான கலை. என்ன படிப்பது. எப்படி படிப்பது. ஏன் சில புத்தகங்கள் உடனே புரிந்துவிடுகின்றன. சில புரிவதேயில்லை. ஒரே புத்தகம் எப்படி வெவ்வேறு வாசகர்களால் வேறு விதமாகப் படிக்க படுகிறது. சில புத்தகங்கள் ஏன் பல நூறு வருசமாக யாவருக்கும் பிடித்திருக்கிறது. படிப்பதனால் என்ன பயனிருக்கிறது. இப்படி புத்தகங்கள் தொடர்பாக நூறு கேள்விகளுக்கும் மேலாகயிருக்கின்றன.
இந்தக் கேள்விகளை வேறு வேறு வடிவங்களில் உலகின் எல்லா இடங்களிலும் யாரோ யாரிடமோ கேட்டுக் கொண்டுதானிருக்கிறார்கள். இதற்கான பதில்களை ஒவ்வொரு எழுத்தாளனும் அவனளவில் தெளிவுபடுத்திக் கொண்டேயிருக்கிறான். ஆனால் கேள்வி அப்படியே இருக்கிறது.
நான் படிக்க துவங்கிய வயதில் இதே கேள்விகளுடன் இருந்தேன். இன்று வாசிக்க துவங்கும் ஒரு இளம்வாசகன் அதே கேள்விகளுடன் என்னிடம் வருகிறான்.
இந்த கேள்விகளுக்கான பதிலாக நான் வாசிக்க சிபாரிசு செய்வது ஒரு கட்டுரையை . அதன் தலைப்பு. How Should One Read a Book?.1926 வது வருடம் இந்த கட்டுரையை  வர்ஜினியா வுல்ப் (VirginiaWoolf )எழுதியிருக்கிறார். 83 வருசங்களுக்குப் பிறகும் இக்கட்டுரை தரும் விளக்கம் நெருக்கமாகவே உள்ளது.
வர்ஜீனியாவின் கட்டுரை இந்த பதில்களை ஒரு அறிவுரையாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்ற எச்சரிக்கையோடு துவங்குகிறது. காரணம் புத்தகம் வாசிப்பதற்கு எவரது அறிவுரையும் வழிகாட்டலும்  பயனற்றதே.  அது  நீச்சல் அடிப்பது எப்படி என்று  சொற்பொழிவு ஆற்றுவது போன்றது,
எது நல்ல புத்தகம் என்று நமது வாசிப்பு அனுபவத்தை வேண்டுமானால் பரிந்துரை செய்யலாம். மற்றபடி இப்படிப் படி. இப்படி படித்தால் மட்டுமே புரியும் என்ற அறிவுரைகள் பெரும்பாலும் பொருந்தக்கூடியதில்லை.
ஆகவே வர்ஜீனியா வுல்ப்பின் கட்டுரை எப்படி ஒரு புத்தகத்தை வாசிப்பது என்பதைப் பற்றிய தன்னிலை விளக்கம் போலவே உள்ளது. மூன்றே பக்கம் உள்ள சிறிய கட்டுரை. ஆனால் பலமுறை வாசித்து விவாதிக்க வேண்டியது.
வர்ஜீனியாவின் முதல் பரிந்துரை. எந்தப் புத்தகத்தையும் படிப்பதற்கு முன்பும் அதை பற்றிய முன்முடிவுகள் வேண்டாம், திறந்த மனதோடு இருங்கள். எழுத்தாளரை உங்களது எதிரியைப் போல பாவிக்காதீர்கள். எழுத்தின் மீதான உங்கள் தீர்ப்பைச் சொல்வதற்காக படிக்க முயற்சிக்க வேண்டாம். அது உங்களை நீங்களே நீதிபதி ஸ்தானத்தில் உட்கார வைத்துக் கொண்டு புத்தகத்தையும் எழுத்தாளனையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவது போன்றது. அதில் நஷ்டமடையப் போவது நீங்களே.
ஒரு புத்தகம் அதிகம் விற்பனையாவதாலோ.அல்லது பிரபலமாக இருப்பதாலோ நல்லபுத்தகமாக இருக்கபோவதில்லை. மாறாக அது நல்ல புத்தகமா இல்லையா என்பதை தீர்மானிக்க போவது நீங்களும் உங்களது திறந்த மனதுமே.அந்த மனது உள்ளுணர்வு சார்ந்தே  பெரிதும் செயல்படக்கூடியது. ஆகவே உங்கள் உள்ளுணர்வு ஒன்றைப் படிக்கத் தேர்வு செய்கிறது என்றால் அதை அனுமதியுங்கள். படிப்பதற்கான மனநிலையும், நேரமும், விருப்பமும், பகிர்ந்து கொள்ள நட்புமே புத்தக வாசிப்பில் முக்கியமானவை.
இரண்டாவது பரிந்துரை. எழுத்தையும் எழுத்தாளர்களையும் விமர்சனம் செய்வது எளிமையானது. ஆனால் புரிந்து கொள்வது எளிதானதில்லை. அதற்கு வாசகன் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். எந்த ஒரு படைப்பையும் வாசிப்பதற்கு மூன்று விசயங்கள் முக்கியமானவை.  ஒன்று அகப்பார்வை. அதாவது நாம் எதை வாசிக்கிறோமோ அதை நம் மனதால் உணர்ந்து கொள்வது. (perception) ,
இரண்டாவது கற்பனை. (imagination) படைப்பின் ஊடாக வெளிப்படும் மனிதர்கள், நிலக்காட்சிகள், நிகழ்வுகள், நினைவுகளைக் கற்பனை செய்து புரிந்து கொள்ளும் இயல்பு.இதன் மூலமே கதையோ கவிதையோ நாம் அர்த்தப்படுத்திக் கொள்கிறோம்
மூன்றாவது கற்றல் (learning) எழுத்தின் வழியாக நாம் கற்றுக் கொள்ள முன்வருவது. இது தகவலாகவோ, அறிவுதொகுப்பாகவோ, உண்மையாகவோ. வாழ்வியல் அனுபவமாகவோ எவ்விதமாகவும் இருக்கலாம். அதை நாம் கற்றுக் கொள்கிறோம் என்ற ஈடுபாடும், தீவிர அக்கறையுமே புத்தகத்தை ஆழ்ந்து வாசிக்க உதவும்.
ஒரு புத்தகம் புரியவில்லை என்றால் கொஞ்ச காலம் கழித்து மறுபடி படித்துபாருங்கள். அப்படியும் புரியவில்லை என்றால் இன்னும் கொஞ்ச நாள் காத்திருங்கள். அதற்காக புத்தகம் தவறானது என்ற முடிவிற்கு அவசரமாக வரவேண்டாம். காரணம் எளிய வரிகள் கூட இன்றும் புரிந்து கொள்ளபடாமலே இருக்கின்றன. ஆத்திசூடியில் வரும் ஙப்போல்வளை என்பதற்கு என்ன பொருள் என்று கேளுங்கள். எண்பது சதவீதம் பேர் விழிப்பார்கள். ஆகவே எளிய விசயங்களில் கூட புரியாமை இருக்கவே செய்கிறது. கண்ணால் மரத்தை பார்த்துவிட முடியும். அதன் வேர்களை கண்ணால் பார்த்து தெரிந்து கொண்டுவிட முடியாது. அப்படி தான் புத்தகங்களும்.
புத்தகங்களுடான நமது உறவு எப்போதுமே உணர்வுபூர்வமானது. ஆகவே புத்தக வாசிப்பில் உணரச்சிவெளிப்பாட்டிற்கு முக்கிய இடமிருக்கிறது. ஒரு புத்தகம் எப்படி உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறது. எந்த கணங்களில் அது வாசகனை ஒன்றிணைக்கிறது. எந்த நிலைகளில் வாசகனை மீறிச்செல்கிறது என்று வாசகன் எப்போதுமே உன்னிப்பாக அவதானிக்கிறான்
அத்தோடு வாசிப்பின் வழியாக ஒரு இன்பம் தூய்த்தலை வாசகன் நிகழ்த்துகிறான். இது புத்தகம் வாசிப்பதற்கான முக்கிய காரணிகளில் ஒன்று. ஜனரஞ்சமான நாவல்களின் வெற்றிக்கு முக்கிய காரணம் அது தரும் உடனடி வாசிப்பு இன்பமே. அதே போல செவ்வியல் படைப்புகள் பலமுறை திரும்பத் திரும்ப வாசிக்கப் படுவதற்கும் அதன் தனித்துவமான வாசிப்பு இன்பமே முக்கிய காரணமாகயிருக்கிறது.
வாசிப்பின் வெற்றியை முடிவு செய்வதில் வாசிப்பு இன்பத்திற்கு எப்போதுமே பெரிய பங்கிருக்கிறது. ஆகவே சுவாரஸ்யமாக இருப்பது இலக்கியதரமில்லாதது என்று முடிவு செய்துவிட முடியாது. அதே நேரம் வெறும் சுவாரஸ்யம் ஒரு போதும் இலக்கியமாகிவிடாது.
புரிந்து கொள்ள முடியவில்லை என்பதே புத்தக வாசிப்பின் பெரிய சவால். ஒரு புத்தகம் புரிந்து கொள்ளபடாமல் போவதற்கு புத்தகம் மட்டுமே காரணமாக இருந்துவிடாது. வாசிப்பவனுக்கும் சமபங்கிருக்கிறது. அர்த்தம் புரியாமல் போவது வேறு. எதற்காக எழுதப்பட்டிருக்கிறது என்று புரிந்து கொள்ளாமல் போவது வேறு.
ஒன்று அதன் மொழி மற்றும் வாக்கிய அமைப்புகள் காரணமாக அது புரியாமல் போயிருக்க கூடும். எந்தப் பொருள் பற்றி பேசுகிறதோ அது நமக்கு பரிச்சயமற்றிருக்ககூடும். அல்லது அது ஆழ்ந்து புரிந்து கொள்ள வேண்டிய பயற்சி தேவைபட்டதாக இருக்ககூடும்.
அல்லது அந்த  கதையோ. கவிதையோ எதைப்பற்றி பேசுகிறதோ அது நேரிடையாக இல்லாமல் மறைமுகமாக. அரூபமான தளங்களில் வெளிப்படுத்தபட்டிருக்க கூடும். ஒரு படைப்பைப் புரிந்துகொள்ள அது குறித்து ஆதாரமான அறிவை வளர்த்து கொள்ள வேண்டும். இசையை போல படைப்பை நாம் கற்பனை செய்து கொள்வதன் வழியே ஆழமான தளங்களை நோக்கி வாசிப்பை நகர்த்திக் கொண்டுபோக முடியும்.
சில புத்தகங்களை வாசிப்பதற்கு வயதும் அனுபவமும் போதாமல் இருக்க கூடும். அந்தப் புத்தகம் இன்னொரு வயதில் இன்னொரு மனநிலையில் புரிவதோடு நெருக்கமாகவும் மாறிவிடும். சமூக கலாச்சார, சரித்திர, விஞ்ஞான அறிவும், சங்கேதங்கள், குறியீடுகள், கவித்துவ எழுச்சிகளை புரிந்து கொள்ளும் நுட்பமும் வாசகனுக்கு அவசியமானவை. அவை ஒரு நாளில் உருவாகிவிடுவதில்லை. தொடர்ந்த வாசிப்பும்,  புரிதலுமே அதை சாத்தியமாக்குகின்றன
வர்ஜீனியாவும் அதையே சொல்கிறார். புத்தகங்களை நாம் எப்போதுமே இன்னொரு புத்தகத்தோடு ஒப்பிடுகிறோம். இந்த ஒப்பீட்டினை விமர்சனம் என்று நினைக்கிறோம் . ஒப்பிடுவது தவறில்லை. ஆனால் எதை எதோடு ஒப்பிடுகிறோம். அப்படி ஒப்பிட என்ன காரணம். என்று யோசிப்பதேயில்லை.
ஒவ்வொரு புத்தகமும் ஒரு மனப்போக்கின் வெளிப்பாடு. அதன் தனித்தன்மையை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். பிறகு அதை ஒப்பிடு செய்து பார்க்கலாம். மோசமான புத்தகங்களை கழித்துக்கட்ட ஒப்பீடு அவசியம் தான். ஆனாலும்  அப்போதும் கூட அந்த புத்தகத்தை பற்றிய தீர்ப்பு போன்று முடிவுகளை வெளிப்படுத்துவதை விட அதை எப்படி புரிந்து கொண்டேன், அதில் என்ன அம்சங்கள் மிகையாகவோ, வலிந்து உருவாக்கபட்டதாகவோ, செயற்கையாகவோ, பொருத்தமில்லாமில்லாமோ இருக்கிறது. அது எழுத்தாளனின் நோக்கமா. அல்லது வாசகன் அப்படிப் புரிந்து கொள்ள சுதந்திரமிருக்கிறதா என்று விவாதத்திற்கான புள்ளியாகவே வளர்த்து எடுக்க வேண்டும்.
நாவலை வாசிப்பது என்பது ஒரு பெரிய அடுக்குமாடி கட்டிடம் ஒன்றை தூரத்தில் இருந்து பார்த்து அது ஒரு கட்டிடம் என்று சொல்லிக் கடந்து போவதை போல எளிதானதில்லை. கண்ணில் பார்ப்பதைப் போல இலக்கியத்தில் யாவும் உடனே புரிந்துவிடாது. வார்த்தைகளை கொண்டு உருவாக்கிய உலகமது. ஆகவே அதைப் புரிந்து கொள்ள நீங்கள் எழுத்தாளரின் சகஜீவி போல. உடன் வேலைசெய்யும் ஒருவரை போல இணக்கமான மனநிலையோடு அணுகுங்கள்.
ஒரு நண்பனை போல அவனோடு சேர்ந்து பயிலுங்கள். சேர்ந்து உரையாடுங்கள். எழுத்து ஒரு திறந்த உரையாடல். எல்லா எழுத்தாளர்களும் இயல்பில் வாசகர்களே. ஆகவே அவர்களும் நம்மை  போலவே ஏதோ சில புத்தகங்களின் தீவிர வாசகர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.
எழுத்தாளர் பிரபலமானவர். புகழ் அடைந்தவர் என்பதற்காக எந்தப் புத்தகத்தையும் நல்லது என்று முடிவு செய்யாதீர்கள். நல்ல எழுத்தாளர்கள் மோசமான புத்தகங்களை எழுதியிருக்கிறார்கள். மோசமான எழுத்தாளர்கள் சமயங்களில் நல்ல புத்தகங்களை எழுதிவிடுகிறார்கள். ஆகவே புத்தகம் அதற்கான விதியை கொண்டிருக்கிறது. ஆகவே எழுத்தாளனின் பெயர் புகழால் மட்டுமே வாசகனின் விருப்பதிற்கு உரியதாக  புத்தகங்கள் அமைந்துவிடுவதில்லை.
ஷேக்ஸ்பியர், டிக்கன்ஸ்,விக்டர் க்யூகோ, பால்சாக், மாபசான், டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி உள்ளிட்ட உலகில் உள்ள பெரும்பான்மை வெற்றி பெற்ற எழுத்தாளர்கள் தங்கள் புத்தகங்களில் சில மிக குறைவான வாசகர்களையே பெற்றிருக்கிறது என்று அறிந்தேயிருந்தார்கள். லட்சம் பேர் படிப்பதால் எந்த ஒரு புத்தகமும் உயர்ந்த இலக்கியம் ஆகிவிடாது. நூறு பேர் மட்டுமே படிப்பதால் அது தரம்குறைந்தது என்று எண்ணிவிட முடியாது. புத்தகங்களை வாசிப்பவர்களின் எண்ணிக்கை நிலையானதில்லை. அது மாறிக் கொண்டேயிருக்க கூடியது.
ஒவ்வொரு புத்தகத்தையும் வாசகன் தனது ஒரு குறிப்பிட்ட மனநிலையில் இருந்தே படிக்கிறான். அதுவே புத்தகத்தைத் தேர்வு செய்கிறது. அதனால் தான் ஒரே நேரத்தில் வாசகனால் பல்வேறுவிதமான எழுத்தாளர்களின் புத்தகங்களை படிக்கவும் ரசிக்கவும் முடிகிறது.
ஒரு புத்தகம் முழுவதும் பிடிக்காமல் போவது என்பது வேறு . புத்தகத்தின் சில பகுதிகள் பிடித்திருக்கிறது என்பது வேறு. பலநேரங்களில் முழுமையாக ஒரு புத்தகம் நமக்கு பிடித்திருக்காது. ஆனால் அதில் உள்ள சில நல்ல வரிகள் பத்திகளுக்காக அதை வாசித்து கொண்டேயிருப்போம்.
கதை கவிதை நாவல் சிறுகதை, கட்டுரை வாழ்க்கை வரலாறு, விமர்சனம் என  இலக்கியத்தினை எத்தனையோ விதமாக வகைப்படுத்தி வைத்திருக்கிறோம்.  வாசகன் ஒவ்வொன்றையும் வாசிக்க ஒருவிதமான பயிற்சியும் நுட்பமும் வைத்திருக்கிறான். அதற்கென அவன் எந்த விசேச பயிற்சியும் எடுத்துக் கொண்டதில்லை
கவிதையில் அரூபமாக உள்ள ஒன்றை எளிதாக புரிந்து கொள்ளும் வாசகன் நாவலில் அரூபமான, மாயமான சம்பவங்களை ஒத்து கொள்ள மறுக்கிறான். தர்க்கம் செய்கிறான். அது தான் வாசகனின் இயல்பு. ஆனால் வாழ்க்கை வரலாற்றை வாசிக்கையில் அது நாவல் போல உணர்வதும், நாவலை வாசிக்கையில் அது உண்மையான  மனிதர்களின் வாழ்வு போல நம்பபடுவதுமே இலக்கிய வாசிப்பின் நுட்பம்.
இன்று வாசகன் ஒரு ரசிகன் என்பதைத் தாண்டி எழுத்தாளனுக்கு இணையாக வைத்து பேசப்படுகிறான். தான் எப்படி ஒன்றைப் புரிந்து கொண்டேன் என்பதை முன்வைப்பதே வாசிப்பின் முதன்மை செயல்பாடாக உள்ளது.
புத்தகத்தைப் பற்றிய ஆசிரியரின் முடிவுகள் இன்று வாசகனை கட்டுபடுத்துவதில்லை. சமூகம் , உளவியல், மொழியியல், தத்துவக்கோட்பாடுகள், தர்க்கம் மற்றும் விமர்சன பார்வைகளின் வழியே ஒரு படைப்பை ஆழ்ந்து அணுகி அதன் சமூக கலாச்சார அரசியல் தளங்களை, புரிதல்களை கண்டு அடைவதும் விமர்சிப்பதும் வாசகனின் முன்உள்ள சவாலாக உள்ளன.
ஆகவே வாசகன் ஒரு புத்தகத்தின் வழியே எழுத்தாளனின் மன அமைப்பை , அவனது பலம் பலவீனஙகளை ஆராய்கிறான். அதற்கான உளவியல் காரணங்களை கண்டுபிடிக்க முயற்சிக்கிறான். மொழியை எழுத்தாளன் பயன்படுத்தும் முறையும் அதன் அர்த்த தளங்களையும் கவனமாக பரிசீலனை செய்கிறான். விஞ்ஞான பரிசோதனை கூடங்களில் மேற்கொள்ளப்படும் ஆய்வு போல துல்லியமான தர்க்க ரீதியான ஆய்வுப்பொருளாக புத்தகங்களை வாசிக்கும் தீவிர வாசிப்பு நிலை இன்று சாத்தியமாகியிருக்கிறது.
அதற்காக ரசனை சார்ந்து வாசிப்பு கைவிடப்படவில்லை. பெருவாரியான வாசகர்கள் இன்றும் தங்களது புத்தக வாசித்தலுக்கான அடிப்படையாக ரசனையை கொண்டிருக்கிறார்கள். அந்த ரசனையின் தரமும், நுட்பமும் முன்பை விட இன்று வளர்ந்திருக்கிறது. எழுத்தாளரை ஒரு ரட்சகனை போல காண்பதை தாண்டி, எழுத்தாளன் மனசாட்சியை போல  செயல்படுகிறான் என்றே வாசகர்கள் உணர்கிறார்கள்.
புத்தகத்தைப் புரிந்து கொள்ள வாசிப்பின் வழியாக நாம் பெற்ற அனுபவத்தை எழுதிபார்ப்பதே சிறந்தது என்கிறார் வர்ஜீனியா. காரணம் அப்போது தான் சொற்கள் எவ்வளவு வலிமையானவை. எந்தச் சொல்லை எப்படி பயன்படுத்துகிறோம், அதில் எவ்வளவு சிரமம் சவால் உள்ளது என்ற எழுத்தின் நுட்பம் பிடிபடும் என்கிறார். ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத பொருட்கள் நிகழ்வுகள் எப்படி வாக்கியங்களின் வழியே ஒன்றிணைக்கபடுகின்றன என்று நுணுகி வியந்து புரிந்து கொள்ள முயற்சிப்பவனே புத்தகத்தினை கொண்டாடுகிறான்
வாசகன் என்பதே ஒரு கற்பனை தான். ஒரு வாசகன் என்பவன் எப்படியிருப்பான் என்று இதுவரை தீர்மானமாக ஒரு சித்திரத்தை  முடிவு செய்யவே முடியாது. ஆகவே உலகின் வியப்பூட்டும கற்பனை கதாபாத்திரம் தான் வாசகன். அந்த முகமூடியை யாரும் அணிந்து கொண்டுவிட முடியும். அது யாவருக்கும் பொருந்தக்கூடியது என்கிறார் ஜோர்ஜ் லூயி போர்ஹே,
ஏய் வாசக உனக்கு தான் எத்தனை எழுத்தாளர்கள் என்று நகுலன் ஒரு கவிதை வரிசொல்கிறது. அது தான் உண்மை.
வர்ஜீனியா வுல்பின் கட்டுரையை போல நானும் இதே கேள்விக்கான சில பதில்களை வைத்திருக்கிறேன். என்வரையில் ஒவ்வொரு புத்தகமும் மானுட வாழ்வின் ஏதோ சில புதிர்களை அவிழ்க்க முயற்சிக்கிறது. மனித இருப்பு குறித்த சில கவலைகள், ஆதங்கங்கள், வருத்தங்கள், சந்தோஷங்களை ஆவணப்படுத்துகிறது.
இயற்கை, பிறப்பு, இறப்பு, பசி, காமம், மூப்பு , நோய்மை, அதிகாரம், வெற்றி தோல்வி, விதிவசம் என்று எல்லா நூற்றாண்டிலும் மனிதன் சந்தித்த ஆதாரமான கேள்விகளுக்கான விடை தேட முயற்சிக்கிறது. மனித வாழ்வின் மீது நிஜமான அக்கறை கொள்கிறது. அதை மேம்படுத்தவும், சகமனிதனைப் புரிந்து கொள்ளவும் உதவி செய்கிறது.
அன்றாட வாழ்க்கை சார்ந்து உருவாகும் வலிகள், தோல்வியுணர்வு, வெறுப்பு, ஏமாற்றம், வெறுமை, இயலாமை, நிர்கதி யாவும் கடந்து மனிதனை வாழ்வின் மீது பற்று கொள்ள வைக்கிறது. மானுட நினைவுகள் காற்றில் கரைந்து போய்விடாமல் காப்பாற்றி வைக்கிறது.
ஆகவே புத்தகங்கள் வாழ்வின் சின்னசிறிய ஆவணங்கள். அதன்வழியே மனிதர்கள் கடந்தகாலத்தை அறிந்து கொள்ள முடியும். நிகழ்காலத்தை சந்திக்க துணை கொள்ளலாம். எதிர்காலத்தை திட்டமிட முடியும். நல்ல புத்தகங்கள் இதன் சாயல்களைக் கட்டாயம் கொண்டிருக்கின்றன.

Monday, April 25, 2011

My Alltime favourite

Music for Book Lovers

இசையை விட்டுவிடுகிறேன் இளையராஜா சவால்

ராஜாவை மேடையில் பார்ப்பதென்பது அரிதானது. அப்படியே வந்தாலும் சொற்ப வார்த்தைகளுடன் தனது உரையை முடித்துக்கொண்டு புறப்பட்டுவிடுவார். ‘அழகர்சாமியின் குதிரை’ படவிழாவிலும் அதன் தொடர்ச்சியாக நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பிலும் ராஜா நடந்துகொண்ட விதம் இதுவரை காணாதது. சுனாமியும், அமைதியும் கலந்த கலவையாக இருந்தது அவரது பேச்சு.
எத்தனையோ குப்பை படங்களுக்கு இசையமைத்துவிட்டேன். நல்ல படங்களுக்கு இசையமைக்கும்போது மனசுக்கு திருப்தியா இருக்கும். சுசீந்திரன் இயக்கியுள்ள அழகர்சாமியின் குதிரை ஒரு முக்கியமான படமாக இருக்கும். இன்னிக்கு காலையிலதான் டைட்டில் பாடலை முடித்துவிட்டு இங்கு வந்திருக்கேன். இந்த படம் பார்க்கும்போது இந்த பாடலுக்கான இசையை உங்க மொபைல் போனையெல்லாம் ஆஃப் பண்ணிவிட்டு கண்ணைமூடி கேளுங்க. உங்க கண்ணிலிருந்து நாலு சொட்டு தண்ணீராவது வரலைன்னா நான் இசையமைப்பதையே விட்டுவிடுகிறேன்.

இந்த மாதிரி இசையை நானாக கொடுப்பதில்லை. நல்ல கதைகளே நல்ல இசையை தானாக உருவாக்குகின்றன. அழகர்சாமியின் குதிரை கதை அப்படியொரு சந்தர்பத்தை கொடுத்துள்ளது. இந்த மாதிரி படத்தை எடுக்க முன்வந்த தயாரிப்பாளர் மதனுக்கு எனது பாராட்டுகள்.”என்ற ராஜா, கதையின் நாயகன் அப்புக்குட்டியை பார்த்து, “இந்த படத்துல நீ அருமையா நடிச்சிருக்க. அதுக்காக உன்னை சூப்பர் ஸ்டாருன்னு சொல்லிடமுடியாது. சூப்பர் ஸ்டாருன்னா
அவரு ஒருத்தர்தான். அதே சமயம் சூப்பர் ஸ்டாரால உன்ன மாதிரி நடிக்க முடியுமா?” என்று கேள்வி எழுப்ப, அப்புக்குட்டியின் முகத்தில் ஆனந்த குதிரை துள்ளி குதித்தது.

More Info :

Friday, April 22, 2011

எஸ்.ராமகிருஷ்ணனுக்கு தாகூர் இலக்கிய விருது







இந்தியாவின் மிக முக்கிய விருதான தாகூர் இலக்கிய விருது எனக்கு கிடைத்துள்ளது, இந்த விருதை கொரிய அரசாங்கம் சார்பில் சாம்சங் நிறுவனம்  சாகித்ய அகாதமியோடு இணைந்து ஏற்படுத்தியுள்ளது. முதன்முறையாக தமிழுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது, அதைப் பெறுவதில் மிகுந்த சந்தோஷமடைகிறேன்,
இந்த விருது குறித்த அறிவிப்பு
**
தாகூர் இலக்கிய விருது
மகாகவி தாகூரின் 150வது ஆண்டினை ஒட்டி இந்திய இலக்கியங்களைக் கௌரவிக்கும் விதமாக கொரிய அரசாங்கம் சார்பில் சாம்சங் நிறுவனம்  சாகித்ய அகாதமியோடு இணைந்து தாகூர் இலக்கிய விருது (Tagore Literature Award) ஒன்றினை ஏற்படுத்தியுள்ளது,
91 ஆயிரம் ரொக்கப்பணமும் தாகூர் உருவச்சிலையும் பாராட்டுப் பத்திரமும் கொண்டது இவ்விருது.
ஒவ்வொரு ஆண்டும் இந்திய மொழிகளில் எட்டு தேர்வு செய்யப்பட்டு அதில் உள்ள மிகச்சிறந்த இலக்கியவாதியின் ஒரு நூலிற்கு தாகூர் இலக்கிய விருது வழங்கப்பட்டு வருகிறது,
இதற்கானத் தேர்வுப் பணியை மேற்கொள்வது டெல்லியில் உள்ள சாகித்ய அகாதமி நிறுவனம், இந்த ஆண்டு இந்திய அளவில் எட்டு இலக்கியவாதிகள் இவ்விருதினைப் பெறுகிறார்கள்
2010ம் ஆண்டிற்கான தாகூர் இலக்கிய விருது எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய யாமம் நாவலுக்கு வழங்கப்படுகிறது.
யாமம் நாவல் சென்னையின் முந்நூறு ஆண்டுகாலச் சரித்திரத்தைப் பின்புலமாகக் கொண்டு எழுதப்பட்ட நவீன நாவல், இந்த நாவல் முன்னதாக தமிழின் சிறந்த நாவலாகத் தேர்வு செய்யப்பட்டு கனடாவின் இயல்விருது பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது
பெருமைக்குரிய இந்திய விருதான தாகூர் இலக்கியவிருது தமிழுக்கு முதன்முறையாக வழங்கப்படுகிறது,  அவ்வகையில் எஸ். ராமகிருஷணன் மிகுந்த பெருமையடைகிறார்.
விருதுவழங்கும் நிகழ்ச்சி மும்பையில் மேமாதம் 5ம் தேதி மாலை மேற்கு தாதரில் உள்ள ரபீந்திர நாட்டிய மந்திர் வளாகத்தில் நடைபெற்ற உள்ளது. இதில் இந்தியாவின் முக்கிய இலக்கியவாதிகள் மற்றும் கொரிய அரசின் அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.