Friday, December 23, 2011

போரும் அமைதியும்-டால்ஸ்டாய்

இதைப் பற்றி எழுதுவதற்கும் ஒரு தகுதி இருக்க வேண்டும் எனலாம். ஆனால் படிப்பவனுக்கு எதையும் சொல்ல உரிமை போதும். தகுதி தேவையில்லை.உலகின் மிகச் சிறந்த நாவல். என் மனைவி இதை நாவல் என்றே ஒத்துக் கொள்ளவில்லை. அவள் படிப்பது நாவலாம். இது வேறோ ஒன்றாம். இருக்கலாம். எல்லோராலும் எல்லாவற்றையும்  உட்கார்ந்து படித்து விட முடியாது.
நீண்ட காலத் தேடுதல். எந்த நூலகத்திலும் கிடைக்கவில்லை. காசு  கொடுத்து வாங்கவும் வசதியில்லை. அண்மையில் ஆசை கை கூடியது. சுளையாக 1000 இந்திய ரூபாய்கள் கொடுத்து வாங்கினேன். மதுரை சர்வோதய புத்த நிலையத்தில். அங்கும் இருந்தது ஒரே ஒரு புத்தகம் மட்டுமே. வேறு எங்கு கிடைக்கும் என்றும் தெரியவில்லை.
சீதை பதிப்பகத்தார் வெளியிட்டுள்ளார்கள். மொத்தம் 2500 பக்கங்கள் தேறும்.தமிழாக்கம் செய்திருப்பவர் சொக்கலிங்கம். ஆங்கிலத்தில் என்னிடம் இருக்கிறது. நூலகத்திலும் கிடைக்கும். ஆனாலும் தமிழில் படிக்க வேண்டும் என்று காத்திருந்து சாதிதேன்.இருந்தாலும், இந்த மொழி பெயர்ப்பு அவ்வளவு தூரம் எடுபடவில்லை. உதாரணத்துக்கு திலகவதி மொழி பெயர்த்த குற்றமும் தண்டனையும்-உடன் ஒப்பிட முடியாது. ஆனாலும் சொக்கலிங்கம் பாராட்டுக்குரியவர். இந்தப் பெரிய புத்தகத்தை வாசித்து முடிக்கவே ஒரு மாதம் தேவைப்பட்டது. அதை படித்து புரிந்து மொழி மாற்றுவது கண்டிப்பாக இலேசுப் பட்ட காரியம் கிடையாது.அதுவும் சிலர் நான் அதைப் படிச்சேன், இதைக் கிழிச்சேன் என்று புலம்பிக் கொண்டு திரிகையில் இது ஒரு ஆக்கபூர்வமான செயலாகும்.
இனிப் புத்தகத்துக்கு வருவோம்.
எனக்கென்னவோ உலகின் சிறந்த நாவல் என்பது அதிகம் போல இருக்கிறது. டால்ஸ்டாயின் அனேகமான படைப்புகள் ஓரளவுக்கு வசதி படைத்தவர்களைச் சுற்றியே இருக்கும். புத்துயிர்ப்பு அல்லது அன்னா கரினினா. மொத்தமாக வசதி படைத்தவர் வீட்டு பிரச்சினைகளையே மையமாகக் கொண்டிருக்கும். அவரும் அந்த வர்க்கத்தைச் சேர்ந்தவர் என்பதால் இருக்கலாம். கார்க்கியோ, தஸ்தாயேவ்ஸ்க்கியோ இதில் அவரிடம் இருந்து வேறு படுகிறார்கள்.
படித்துக்கொண்டு போகும் பொழுதெல்லாம் யாரை மையமாகக் கொண்டு எழுதுகிறார் என்பதை புரிந்து கொள்ளவே சிரமமாக இருக்கும். மூன்று பாகங்களில் மூன்று பேரை வைத்து சம்பவங்களினை  நடத்திச் சென்றிருப்பார். எனக்கென்னவோ பீயர் தான் கதா நாயகன் என்று தோன்றியது. பீயரின் குணாதியசங்கள் எனக்கும் ஒத்து வந்ததாலோ அல்லது டால்ஸ்டாய் தன்னையே பீயருக்கு கொடுத்திருந்ததாலோ தெரியவில்லை.
ஆரம்பமே ஆட்டம்,பாட்டம்,கூத்து என்று அமர்க்களப் பட்டிருக்கும். புத்தகம் பூராவுமே விருந்துகளும்,போதையேறிய  சம்பவங்களும் விரைவிக் கிடக்கும். வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல் அங்கு நிகழும்  கேவலமான அரங்கேற்றங்களை படம் பிடித்துக்காட்டியிருப்பார். ஒவ்வொருவரும் தமது பெண்களுக்கு மாப்பிள்ளை பார்ப்பதினையும், தப்பான சேர்க்கைகளை கூட்டுவதினையும், தத்தமது  சுயலாபத்திற்காய் எந்த மாதிரி தகிடுத்தனம் பார்க்கிறார்கள் என்பதையும் ஆற அமர விளக்கியிருப்பார். ஒவ்வொரு மக்களுக்கும் ஒவ்வொரு பிரச்சினை. அதில் சிக்கிக் கொண்டு எப்படி கதி கலங்குகிறார்கள் என்பதை படித்தால் தான் தெரியும்.
பீயர் வெளி நாட்டில் படித்து விட்டு வந்து சந்தர்ப்பத்துக்கு உதவாத கதை பேசிக் கொண்டிருப்பதாகக் காட்டி அவர் மூலம் நெப்போலியனின் உயர்வுகளை கண்டிப்பாக சொல்லி இருக்கிறார். சாதாரண ஒருவன் சக்கரவர்த்தியாவது இலேசுப் பட்ட விடயம் அல்ல. ஏராளமான சரித்திர சம்பவங்களை ஒப்பிட்டு குறியிட்டுருப்பார். பீயர் தப்பான தாய்க்கு பிறந்த படியால் அவருக்கு ஏற்படும் அவமானங்களையும், அவர்  எப்படி அவற்றை இலகுவாக எடுத்துக் கொள்கின்றார் என்பதையும் சுட்டி அதனால் அவர் எப்படி மிகவும் முக்கியமான விடயங்களினையும் மறந்து  போகின்றார் என்பதையும் சுட்டுகிறார். கண்டிப்பாக அவரது இந்தப் போக்குகள் எவ்வளவு துரதிஸ்டமானவை என்பதையும் அவர் கடைசி வரை உணரவே விடவில்லை.
பீயர் எவ்வாறு திருமண் பந்தத்திற்குள் இழுக்கப் படுகின்றார், கூடாத சேர்க்கைகள் உள்ள மனைவியின் கணவன் எந்தளவுக்கு நொந்து போவான் என்று பக்கம், பக்கமாக விபரித்து கடைசியில் அவளின் எண்ணத்துக்கே அவளை விட்டு விடுவது வரை ஒரே களேபரம் தான். அன்னா கரினினாவிலும்,புருசன் சொல்லுவான் நீ எப்படியாவது இருந்துவிட்டுப் போ,ஆனால் எனக்கு மனையாக இரு என்று. ஏன் இந்த தொடர்பு என்று தெரியவில்லை.
பீயரின் மனைவி கெலன். ஏற்கனவே சகோதரனுடன் தப்பான உறவிலலிருந்தாள் என்று சொல்லுகிறார். அவளுக்கும் ஊரில் உள்ள பெரிய பிரபலங்களுக்கும் தவறான சேர்த்தி உள்ளது என்று சொல்லும் அவர் அவற்றை விபரிக்க மறுத்து விட்டார் என்றே சொல்ல வேண்டும். அவளுடன் டோலகோவ் என்பனுக்கு இருந்த உறவால் பீயர் டூயல் சண்டைக்கு போவதும் ,பின்னர் வருந்துவதும் அதனால் மனைவியுடன் ஆக்ரோசத்துடன் ச்ண்டைக்கு தயாராவதுமாக இருந்தாலும் ஏனோ சில படிகளுக்கு மேல் போகவில்லை. இங்கு அவர் பீயர் ஆத்திரம் அடைந்து கோபப்பட்டால் எவ்வளவு பலமிக்கவாகிறார் என்று காட்டும் டால்ஸ்டாய் எந்தக் கட்டத்திலும் பீயர் அதை தனக்காக உபயோகிக்க விடவில்லை.
டால்ஸ்டாய்  எவ்வளவு காலம் எடுத்து இதனை எழுதினார் என்றும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும். புறச் சூழ் நிலைகள் அவரை நிறையவே மாற்றி மாற்றி எழுத வைத்துள்ளன என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.  உதாரணத்துக்கு கெலனையே எடுக்கலாம். தம்பியுடன் தப்பான உறவு . கண்ட பயலுகளுடன் சேர்த்தி என்று போகும் அவள் எப்பொழுதும் தம்பியுடனோ, மற்றவர்களுடனோ எப்படி இருந்தாள் என்பதை சொல்லவில்லை. ஒரே ஒரு வசனம் மட்டுமே வருகிறது.மிகவும் பிரபலமாக இருந்த அவள் நெப்போலியன் ரஷ்யாவுக்குள் வந்ததிலும் அவளின் செய்திகள் முக்கியம் என்று காட்டிய டால்ஸ்டாய் அவளின் சாவை ஒரே வசனத்தில் முடிக்கின்றார்.  அடிக்கடி அவரது இந்த ஒரு வசனம்(கள்)கடுப்பாக்குகின்றது.
பீயரை மனைவியை வைத்தே உயர்வாக்குகின்றார். இந்தக் காலத்து மொழியில் பெண்ணுரிமை. அவர் எப்படி சிந்திக்கின்றார். அவள் கெட்டுப் போன ஸ்திரி என்று தெரிந்தும் அவளை தொந்தரவு செய்யாமல் எப்படி சுதந்திரமாக விட்டு வைக்கின்றார் என்று சொல்லும் டால்ஸ்டாய் ஏன் என்று கடைசி வரை புரியவைக்கவில்லை.
பீயர் பணக்காரராக இருந்தாலும் எவ்வளவு தூரம் மடத்தனமாக இருக்கின்றார். சாதரணமான ஒருத்தனுக்கு தெரியும் விடயங்கள் அவருக்கு ஏன் புரிய மாட்டென்கிறது. சண்டைக் களத்துக்கு சுற்றிப் பார்க்க ஏன் போகின்றார். அது மற்றவர்களுக்கு எவ்வளவு தூரம் சோதனையான விடயம் என்பது அவரது சிந்தனைக்கு எட்டவில்லையா? எல்லாம் காரணத்தோடு தான்.
தொடரலாம்………..

2 comments:

  1. neengal padithathil miga chirantha navol enna ?

    ReplyDelete
  2. Heidi.. published in 1881 - written by Johannaa Spyri.. indha book nalla irukkum

    ReplyDelete