Friday, December 23, 2011

அகிரா குரோசவாவின் 'இகிரு' : வாழ்வதின் பிரியம்

சு. யுவராஜன்
2003-ல் ஒரு பிற்பகல் வேளையில் பல்கலைக்கழகத்தின் தமிழ் நூலகத்தில் புத்தகங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். தவறு, பெண்களைப் நோக்கும் அதே ஆவலோடு புத்தகங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன் என்பதுதான் சரி. எப்போதும் மேயும் சிறுகதை, நாவல் பகுதியிலிருந்து விலகி மொழிப்பெயர்ப்பு நூல்கள் இருந்த பகுதியில் மேய்ந்துக் கொண்டிருந்தேன். ஆங்கிலத்தில் நேரடியாக வாசிக்கும் மனதிட்பம் அப்போது இல்லாததால் மொழிப்பெயர்ப்பில் கொஞ்சம் காலூன்றிய பிறகு நேரடியாக வாசிக்கலாம் என முடிவு செய்திருந்தேன். இரஷ்ய சிறுகதைகள்தான் என்னுடைய முதல் தேர்வு. புத்தகங்களை ஒவ்வொன்றாக இழுத்து இழுத்துப் பார்த்துக் கொண்டிருந்தபோதுதான் ‘ரஷோமோன்’ திரைக்கதை மொழிப்பெயர்ப்பை எதேச்சையாகக் கண்டேன். அகிரா குரோசாவா என்ற பெயரை முதன் முதலில் அறிந்து கொண்ட நாள் அது.

அப்போது மலாயா பல்கலைக்கழகத்திலுள்ள ஆசியா ஐரோப்பிய மையத்தில் ஒவ்வொரு புதன்கிழமை எட்டு மணியளவில் உலகத் திரைப்படங்கள் ஒளியேறும். அதுவரை வெளிநாட்டுப் படங்கள் என்றால் ஹாலிவூட் மட்டும்தான் என்று நினைத்திருந்தேன். புரியாத மொழிகளில் மனதை நெகிழ வைக்கும் படங்கள் எனது சிந்தனையில் புதிய திறப்புகளுக்கு வழிகோலின. புதுமைப்பித்தன், வண்ணநிலவன், ஹெமிங்வே, தோல்ஸ்தோய் போன்றோரின் வரிசையில் கில்லொவ்ஸ்கி, மஜிட் மஜிடி, வால்டர் செல்லாஸ், குரோசாவா போன்றவர்களும் முக்கியமான படைப்பாளிகளாக மனதில் இடம்பெற தொடங்கினர்.

இதன் அடிப்படையில்தான் ரஷோமோன் திரைக்கதையை ஆவலோடு படித்தேன். திரைக்கதையை வாசிப்பது முதல் முறையாதலால் அதன் வடிவத்தை அனுபவிக்க கடினமாக இருந்தது. இருப்பினும் கதையின் புதுமை ஈர்ப்பாக இருந்தது. உடைந்த கண்ணாடி சிதறல்களின் பிரதிபலிப்பாக இருக்கும் உண்மையின் சாராம்சத்தை ஆராய்கிறது ரஷோமோன். படத்தை எப்படியாவது பார்த்துவிட வேண்டுமென தேடத் தொடங்கினேன்.

எனக்கு முதன் முதலாக கிடைத்த குரோசாவாவின் படம் ரென் (Ran). படம் பார்க்கத் தொடங்கியபோது மணி இரவு 11 இருக்கும். காலையில் எழுந்தபோது அரை மணி நேர படத்தின் கதைதான் ஞாபகத்தில் இருந்தது. படம் என்னைக் கவராதது படத்தின் குற்றமல்ல. தட்டச்சு செய்யவும், சினிமா பாடல்களை மட்டும் கேட்கவே பயன்படுத்திய பழைய கணினியும், நல்ல படங்களை இரசிக்கத் தெரியாத மேலோட்டமான என்னுடைய இரசனையுமே காரணம்.

வாழ்க்கை சில நேரங்களில் அஞ்சல் ஓட்டத்தைப் போன்றது என்பர். ரென் எனக்காக வாங்கிய படமல்ல. என் தம்பி காளிதாஸிற்காக வாங்கப்பட்டது என்பதை தாமதமாக புரிந்துக் கொண்டேன். விடுமுறைக்கு வீடு திரும்பியபோது ரென் பட விசிடியை கொண்டு சென்றிருந்தேன். அடுத்த விடுமுறையின் போது குரோசாவாவின் ‘யோஜிம்போ’ (Yojimbo), ‘செந்தாடி’ (Red beard) போன்ற படங்கள் இருப்பதைக் கண்டேன். காளி தேர்ந்த ரசிகனாய் உலகத் திரைப்படங்களை வாங்கிக் குவிக்கத் தொடங்கினார். குரோசாவாவின் 90 சதவித படங்கள் அவரிடம் இருந்தன.

இருப்பினும் நான் நெடுநாட்களாக பார்க்க எண்ணியிருந்த ‘இகிரு’வின் டிவிடியைச் சென்ற ஆண்டுதான் காளி வாங்கியிருந்தார். நான் இகிருவை பார்ப்பதற்காக துடித்துக் கொண்டிருந்ததிற்கு முக்கிய காரணம் மார்லோன் பிராண்டோதான். ஒரே துறையை சார்ந்தவர்கள் மற்றவர்களின் திறமையைப் பாராட்டுவது அரிது. இகிருவை பார்த்துவிட்டு அசந்து போய் மனதார தன் நண்பர்களிடம் பாராட்டி பேசினாராம் பிராண்டோ. என்ன ஆச்சரியம் பாருங்கள். இகிருவின் நாயகனுக்கு வயிற்று புற்று நோய். அம்மாவும் புற்றினால் வயிறை இழந்து சென்ற ஆண்டுதான் கொஞ்சம் கொஞ்சமாக தேறிக் கொண்டிருந்தார். எனக்கு அஞ்சல் ஓட்டம் மீண்டும் நினைவுக்கு வருகிறது.

காஞ்சி வதனாபே சுமார் முப்பது வருடமாக அரசாங்க அதிகாரியாக பணிப்புரிபவர். வேலையில் சவாலில்லாததால் ஈடுபாடில்லாமல் இருக்கிறார். மற்ற அதிகாரிகளும் அப்படியே. தங்கள் பகுதியில் விளையாட்டு திடல் பழுதாகிவிட்டதை முறையிட வரும் பெண்களிடம் மெத்தனமாக இருக்கின்றனர். அவர்களை அலைக்கழிக்க வைக்கின்றனர். வதனாபேவிற்கு வயிற்று வலியால் சரியாக சாப்பிடக் கூட இயலவில்லை. சாப்பிட்டதும் கொஞ்ச நேரத்தில் வாந்தியாக வந்து விடும். அவருடைய அலுவலகத்தில் பணிப்புரியும் கீழ்நிலை ஊழியரான பெண் மட்டும் எப்போதும் உற்சாகமாக இருக்கிறார்.

வதனாபேவிற்கு வயிற்று புற்று என்பது உறுதியாகிறது. மிகவும் உடைந்து போய் தன் நோய் பற்றி தன் மகனிடம் சொல்ல முயல்கிறார். மகனோ அவரது பணத்திலேயே குறியாக இருக்கிறார். மனம் நொந்து போய் மது விடுதிக்குச் செல்கிறார். அங்கு அறிமுகமாகும் நண்பர்களோடு உல்லாசமாக இரவுப் பொழுதைக் கழிக்க முயல்கிறார். இருப்பினும் அவரால் அந்த உல்லாசத்திலும் முழுமையாக ஒட்ட முடியவில்லை. விடுதியில் பாடகர் பாடும் ‘Gondola na uta’ (Life is brief) பாடல் வதனாபேவை ஆழ்ந்த சோகத்திற்கு உட்படுத்துகிறது. 

மறுநாள் தன் அலுவலகத்தில் வேலை செய்த உற்சாகமான பெண் வேலையை விட்டு செல்வதாக சொல்கிறார். காரணம் கேட்டதற்கு புதிய வேலையான பொம்மை செய்வதில் ஜப்பானிலுள்ள அனைத்து குழந்தைகளின் தோழியாக உணர்வதாக சொல்கிறாள்.

இந்த காட்சிக்கு பிறகான சில மாதங்களில் வதனாபே இறந்து விடுகிறார். அவரின் இறுதி சடங்கின் பிறகான நினைவாஞ்சலி கூட்டத்தில் வதனாபேவுடனான தங்கள் அனுபவங்களை அவரது நண்பர்களின் பகிர்வுகளாக படம் நகர்த்தப்படுகிறது. பெரும்பாலான நண்பர்கள் வதனாபே தான் உண்டு தன் வேலையுண்டு என அமைதியாக இருப்பவரென சொல்கின்றனர். ஆனால் ஒரு நண்பர் மட்டும் அதைக் கடுமையாக மறுக்கிறார். 

பழுதான விளையாட்டு திடலை மறுசீரமைக்கும் பணியில் தனது இறுதிக் காலங்களில் முழுமையாக ஈடுப்படுத்திக் கொண்டதை நினைவு கூர்கிறார் நண்பர். அதற்காக பல அரசு அதிகாரிகளிடம் பேச பல மணி நேரங்கள் காத்திருக்கிறார். அவருடைய நடவடிக்கையால் வரும் கேலிகளையும் வசைகளையும் அவர் பொருட்படுத்துவதில்லை. நடவடிக்கை எடுக்கச் சொல்லி கெஞ்சுகிறார். கெஞ்சுவதைப் புரிந்து கொள்ள முடியாதவர்களிடம் கதறி அழுகிறார். உணவு, உடை பற்றிய சிந்தனைகளை மறந்து மறுசீரமைப்பு பணி ஒன்றிலே முழுமூச்சாக இருக்கிறார். 

அவருடைய கடின முயற்சியில் சீரமைக்கபட்ட விளையாட்டு திடலின் ஊஞ்சலில் அமர்ந்து ‘life is brief’ பாடலை வதனாபே பாடும் காட்சியைக் கண்ணீரோடு மட்டுமே காணக் கூடியது. அவரது உடமைகளை தருவதற்காக வீட்டிற்கு வரும் காவலரின் மீள்நினைவில் வருகிறது இக்காட்சி. பனி பொழியும் இரவில் வதனாபே ஊஞ்சலில் அமர்ந்தபடி பாடும் அப்பாடல் தன்னை மிகவும் உலுக்கிவிட்டதையும், அவர் குரலில் வழிந்த சோகத்தை சொல்லும்போது தாள முடியாமல் காவலரே கண் கலங்குகிறார். இனிமேல் தங்கள் பணிகளில் சிறப்பாக செயல்படபோவதாக வதனாபே நண்பர்கள் கையில் மது பாட்டில்களுடன் உறுதியெடுக்கின்றனர். ஆனால் மீண்டும் பழைய மாதிரியான முறையிலேயே பணிகள் செய்வதாக காட்டப்படுவதுடன் படம் முடிகிறது.

குரோசாவாவின் படங்களில் பெண்களின் சித்திரம் மிகவும் வலிமையாக கட்டமைக்கப்பட்டிருக்கும். விளையாட்டு திடல் சீரமைக்க வேண்டியதை முதலில் அவர்கள்தான் உணர்கிறார்கள். அவர்களின் முறையிடல் சரியாக ஏற்கபடாத போது ஏற்படும் அழுகை எனக்கு ஒப்பாரியை ஞாபகப்படுத்துகிறது. விளையாட்டு திடலை நம் உலகத்தின் உவமையாக கொண்டோமென்றால் அது பழுதுப்பட்டிருப்பதை முதலில் பெண்கள்தான் உணர்கிறார்கள். சீரமைப்பு செய்யாவிட்டால் தங்கள் குழந்தைகளுக்கு பாதகம் நேருமே என கலங்குகிறார்கள். ஆண்களோ அதிகார சூழலில் மாட்டிக் கொண்டு சூழ்நிலை கைதிகளாக இருக்கிறார்கள். வதனாபே போல வாழ்க்கையில் விளிம்பில்தான் வாழ்வதின் சாரம் ஆண்களுக்குப் புரிகிறது. வாழ்க்கை என்பது தனக்காக மட்டும் இல்லாமல், சுற்றி இருப்பவர்களும், சூழலும் தரமாக இருப்பதை உறுதி செய்வதில் இருக்கிறது. சூழல் தரமாக இல்லாத பட்சத்தில் அதை மாற்றுவதற்காக போராடுபவர்கள்தான் மனிதர்கள்; வாழ்பவர்கள். குரோசாவா சிறப்பாக இகிருவில் சொல்லும் சேதியும் அதுதான்.

பின்குறிப்பு:

1. இவ்வருடம் குரோசாவாவிற்கு நூற்றாண்டு விழா. (23/3/1910). அவர் படங்களின் மூலம் எனக்களித்த முக்கியமான கணங்களை பத்திரமாக இதயத்தின் ஆழத்தில் அமைதியாக.

2. Life is brief மொழிப்பெயர்க்க முயன்றேன். கண்றாவியாக இருந்தது. ஆதலால் அப்படி ஆங்கிலத்திலேயே தருகிறேன்.

3. சில தரவுகளைச் சரிப் பார்க்க உதவிய விக்கிபீடியாவிற்கு நன்றி.

Life Is Brief

life is brief.
fall in love, maidens
before the crimson bloom
fades from your lips
before the tides of passion
cool within you,
for those of you
who know no tomorrow
life is brief
fall in love, maidens
before his hands
take up his boat
before the flush of his cheeks fades
for those of you
who will never return here
life is brief
fall in love, maidens
before the boat drifts away
on the waves
before the hand resting on your shoulder
becomes frail
for those who will never
be seen here again
life is brief
fall in love, maidens
before the raven tresses begin to fade
before the flame in your hearts
flicker and die
for those to whom today
will never return

(Used as a theme song in Akira Kurosawa's 1952 film Ikiru)

No comments:

Post a Comment