Friday, December 23, 2011

ஓவியம் புரிதல்(பார்க்க,ரசிக்க)


அ.நாகராஜன்

முதலில் கலையையும் இலக்கியத்தையும் ஒரு தளத்தில் வைத்துப் பேசுவது எந்த அளவுக்குசரியாக இருக்கும் என்பதில் நான் இந்த(நவீன) ஓவியம்புரிதல் பற்றி தொடங்குகிறேன்.
இலக்கியம் படைக்க, படிக்க,ரசிக்கக் கல்வி அறிவு அவசியம். ஆனால், இசை , நடனம், ஓவியம்பயிலவோ, அவற்றை அணுகி ரசிக்கவோ கல்வி அறிவு தேவை இல்லை. கலைஞனும்எழுத்தாளனும்படைக்கிறார்கள் என்பதுடன் அவர்கள் தளம் வேறாகி விடுகிறது. இதிலும் நிகழ் கலை என்னும்தலைப்பில் இசையும் நடனமும் என்றாகி விடுவதால் ஓவியம் மட்டும்தான் தனித்து நிற்கிறது, எதிலும்சேராமல் ஒரு பிடிவாதக் குழந்தையைப்போல்.
அடுத்ததாக நான் பேசப் போவது புரிதல் என்பது பற்றி.ஒரு தமிழனுக்கு (இது ஒரு உதாரணம் மட்டுமே) தன் மண்ணின் இசை பற்றியோ, நாட்டியம் பற்றியோ ஒரு தெளிவான புரிதல் உண்டு. அவனுக்கு அதில் போலியையும் உன்னதத்தையும்அடையாளம் காண முடியும். ஆனால் ஓவியம் அதுவும் நவீன ஓவியம் என்றதும் பயந்து, குழம்பி, வெறுத்து விலகுகிறான். தீ.ஜா. வானாலும் நாட்டிய மேதை ருக்மிணி அருண்டேல் அனாலும் இதில் விதிவிலக்கல்ல.
இது ஏன்என்று பர்க்கலாம்.
நமது கலைகள் எல்லாமே எப்போதும் மதம் சார்ந்ததுதான். அவை வளர்ந்ததும் பாதுகாக்கப் பட்டதும் மதங்கள் மூலம்தான். இன்று நாம் கேட்கும் இசையும் நாட்டியமும் ஒருமுழுமையான வளர்ச்சியை 1000வருடங்களுக்கும் முன்பே அடைந்துவிட்டன( நாட்டியம், இசை பற்றி சிலப்பதிகாரத்தில்உள்ளது இன்றும் நடைமுறையில் உள்ளது) இப்போது அவை மாற்றப்படுவதையோ, அவற்றைசிதைப்பதையோ எவரும் ஏற்கமாட்டார். தமக்கு முன்னோர்களிடம் இருந்து வந்ததை தமது அடுத்ததலைமுறைக்கு வடிவம் மாறாமல் கொடுப்பதையே விரும்புவர். எனவே அவை இரண்டையும் அருங்காட்சிப்பொருள்களாகவே நான் காண்கிறேன்
தமிழர் வாழ்க்கையில் ஓவியத்தின் இடம் என்ன என்று பார்த்தால் ஒரு உண்மை தெரியும். அது எப்போதும் மதம் சார்ந்த வரலாறு, அல்லது இதிகாச புராணங்கள் இவற்றை படிப்பறிவு இல்லாதவர்களுக்கு கொண்டு சேர்க்கவே பயன்பட்டிருக்கிறது.இதுசிற்பத்துக்கும் பொருந்தும். இங்கு கலைஞன் யார் என்பதோ அவனது மற்ற விவரங்களோ யாருக்கும் தேவைப்படவில்லை. ஓவியங்களும் கோவிலையும் பூஜை அறையையும் தாண்டி வெளியே வரவில்லை. தத்ரூபம் என்று நாம் இயல்பாக ஓவியம் பற்றிப் பேசும்போது பயன்படுத்தும் வடமொழிச்சொல்லுக்கு இணையான ஒற்றைச்சொல் தமிழில் எனக்குத் தெரியவில்லை. இந்திய ஓவியத்தில் இது என்றும் இருந்ததற்கான அடையாளம்ஏதும் நான் கண்டதில்லை. பண்டைய இலக்கியங்களில் ஓவியம் பற்றிய செய்திகளில் உண்மை ஏதும் புலப்பட வில்லை. நமது ஓவியம் எப்போதும் இரு பரிமாண அணுகுமுறையில்தான் இருந்துவந்து இருக்கிறது. சிற்பத்தில் கிரேக்கப் படையெடுப்புக்குப் பின் இந்திய, கிரேக்க பாணி கலந்து காந்தார பாணி ஒன்றுஉருவாயிற்று.( ஆடைகளில் மடிப்புகள்)
இங்கு கருத்தில் கொள்ளவேண்டிய இன்னொரு விஷயம் இவைஎல்லாம் எப்போது அறிவு ஜீவிகளிடம், அல்லது அரசவைகளில் குடிபுகுந்ததோ அப்போதே அவை தம் யதார்த்த உருவை இழந்துவிட்டன. இன்று அதற்கு உதாரணம் கேரளாவின் கதகளிநடனம்.( தெருக் கூத்துக்கும் இதேகதிதான்) இந்திய சிற்ப,ஓவிய வழியில் எப்போதும் தனி நபர்அடையாளமே இருந்ததில்லை, அண்மைக்காலம் வரை. அஜந்தாஓவியப் பாணி இலங்கையில்சிகிரியா கோட்டையில்காணக்கிடைக்கிறது. அதுவே சித்தன்னவாசலிலும் கிடைக்கிறது. ஓவியம் பயிலும் இன்றைய முறை நம் நிலம் சார்ந்தது அல்ல. ஐரோப்பிய கலாசார பாதிப்பினால் ஆங்கிலேயர் மூலம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது நம்மிடம் எந்தமாதிரியான ஓவியம் பயிற்றுவிக்கும் முறை பின்பற்றப் பட்டுவந்தது என்னும் கேள்விக்கு
பதில்இல்லை.நமதுசங்கஇலக்கியங்களில்இருப்பதாகயாரும் கூறுவதில்லை. வட மொழியில் தான் இதற்கு நூல் இருக்கிறது. அதன் ஆங்கில மொழி புத்தகத்தைப் புரட்டினால் அதில் தூரிகை,சித்திரம் தீட்டும் கித்தான் அமைக்கும் முறை, வண்ணங்கள் எந்த மூலப்பொருள்கள் கொண்டுதயாரிக்கவேண்டும், என்பன போன்ற தெளிவான பயில்விக்கும் முறையைக் காணமுடிகிறது. அது போலவேசிற்பக் கலையிலும் பயில்விக்கும் முறை வடமொழியிலேயே உள்ளது. இன்றும் தமிழ்நாட்டில் ஸ்தபதி வழியில் சிலைசெய்பவர்கள் கிரந்த எழுத்தில் இருக்கும் நூலையே பயிலப் பயன்படுத்துகிறனர். ஏன் இவைதமிழில் இல்லை என்பதற்கு விவரம் தெர்ந்தவர்கள்ஆதாரபூர்வமான விளக்கம் அளிக்கவேண்டுகிறேன். இவ்வாறான செய்திகளின் மூலம் நான் இந்த முடிவுக்குத் தள்ளப் படுகிறேன்; அதாவதுதமிழ்நாட்டில் என்றுமே ஓவியத்துக்கு ஒரு பெருந்தன்மையான இடம்இருந்திருக்க வாய்ப்பில்லை; சிற்பம் போல.
இதற்கு நான் முன் வைக்கும் மூன்று காரணங்கள்:
காரணம் 1)
வரலாற்றில்ஓவியத்துக்கு ஒரு தொடர்ச்சியில்லை. சித்தன்னவாசல் பின்புதஞ்சை பெரிய கோவில்சோழர் காலத்து சுவர் ஓவியங்கள், பின்பு விஜயநகர, மராட்டியர் பாதிப்புடன் கூடியஓவியங்கள் என்று பெரும் இடைவெளிகளுடன் ஒன்றுக்கு ஒன்று தொடர்பின்றி உள்ளன. ஆனால் சிறபக்கலையைப்பொறுத்தமட்டில் கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்துஅதன் அறுபடாத தொடற்சி பல்லவர்,சோழர்,களப்பிறர், பாண்டியர், நாயக்கர்,என்று எங்கும்கொட்டிக்கிடக்கிறது.
இப்போது ஓவியம்,ஓவியன்,பார்வையாளன் பற்றி இன்னும் கொஞ்சம் பேசலாம்.
பொதுவாகவே ஓவியம் வாங்குவது, அதைத் தனது வீட்டில் அலங்காரமாகத் தொங்கவிடுவது போன்ற பழக்கம் நம்மிடம் கிடையாது. பூஜை அறையில் கடவுள் உருவங்களை( அதன் செய் நேர்த்தி பற்றின உணர்வு இல்லாமல், காலாவதியான தினத்தாள் அட்டையில் இருக்கும் படத்துக்காக) சுவர் முழுவதும் நிரப்புவதுதான் எங்கும் கிடைக்கக்கூடிய காட்சி. நாம் ஓவியம் வங்கும் ஜாதி இல்லை. செலவு பண்ணும் காசுக்கு முழுப்பலன் பார்ப்பவர்கள்.
ரூ.1000/-கொடுத்து ஒரு ஓவியம் வாங்குவதைவிடவும் ஒரு புடவை வாங்கி மனைவியை மகிழ்ச்சிப்படுத்தும் நடுத்தர வர்கம். அவன் வாங்க விரும்பினாலும் அது சாத்தியப் படமுடியாதபடி ஓவியத்துக்கு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இங்கு ஒன்றை குறிப்பிடவேண்டும். ஓவியம் மூலப்பிரதிதான் விலைப்போகும். அதன் பிரின்ட் வாங்குவது அது கிட்டவில்லை என்பதால்தான்.( ரவி வர்மாவின் ஓவியம் போல) ஓவியத்தின் விலையை வாங்குபவன்தான் தீர்மானிக்கிறான். பணத்தேவைக்குத் தக்கபடி ஓவியன் கொடுக்கிறான். ஆனால் நமது மக்கள் ஓவியத்தின் அளவு, அதன் பொருள் செலவு இவற்றைத்தான் ஓவியத்துக்கு விலை நிர்ணயிக்க அளவுகோலாகப் பயன்படுத்துகிறார்கள்.திறமையின் அடிப்படையில் அல்ல.
நவீன ஓவியன் படைக்கும் ஓவியங்களில் வெற்று உள்ளீடு இருப்பது உண்மைதான்; புதுக்கவிதைகளில் உரைநடையே கவிதையாவதுபோல.ஆனால் ஒரு ஓவியம் முழுமையானதா, வெற்று உள்ளீடு கொண்டதா என்பதை எப்படி முடிவு செய்வது ? அது பற்றிய அறிவை வளர்த்துக் கொண்டவன் இனம் பிரித்துக் காண்பான்.
கலை முதலில் அதைப் படைப்பவனுக்காக மட்டுமே. தானும் தனது படைப்பும் மத்திரமே இருக்கும் ஒரு அந்தரங்க நேரத்தில் யாருடைய குறுக்கிடும் நேர்ந்துவிட அவன் ஒப்பமாட்டான். தன்னை மறந்து இசையில் மூழ்கிய பாடகனும், நடனமாடும் நர்த்தகியும், ஓவியனும் ஒரே அனுபவம்தான் பெறுகிறார்கள். அவர்கள் மற்றவரிடமிருந்து தனிப்பட்டு விலகிப் போகிறார்கள். தான் பெற்ற சிசுவை மற்றவர் கண்டு மகிழ்வதைப்போல ஓவியன் தன் ஓவியத்தைப் பிறர் காணவிழைகிறான்.
கலையை ரசிப்பதுடன்(இந்த வடமொழிச்சொல்லுக்கு இணையான ஒற்றைத் தமிழ்ச் சொல் தெரியவில்லை) அதைத் தொடர்ந்து புரிந்துகொள்ள முயல்வதே அவனது அடுத்த முயற்சியாக இருக்கவேண்டும். “வெற்று உள்ளீடு”களை அடையாளம் காணத்தெரிந்தவன் இவை தெரிந்தவனாகவே இருப்பான். நமது கலைகள்(ஓவியம்,சிற்பம், இசை,நாட்டியம்) வெகு காலமாக புழக்கத்தில் இருப்பதால் முழுமையை எட்டிவிட்டன. வடமொழிபோல் அதை நமது கருவூலங்களாகப் பயன்படுவதுதான்சரியாக இருக்கும். இறைவழிபாட்டையும், மதத்தையும் நீக்கிவிட்டால் நமது பாரம்பரியக்கலையே பொருள் அற்றத்தாகிவிடும்.
இன்றைய எதிர்பார்ப்புக்கு ஓவியன் தனது பழைய பாணியை நம்பியிருக்க இயலாது. உலகம் முழுவதுக்கும் கோடும் வண்ணமும் பொது. எனவே ஓவியனை ,அவனது படைப்பை, அவன் சார்ந்த நிலத்துடன் அடையாளப்படுத்த புதிய அளவுகோல் தேவைப்படுகிறது.
காரணம் 2)
தமிழ் முத்தமிழ் என்று சிறப்பித்துச் சொல்லப்படுகிறது “ இயல்,இசை,நாட்டியம்” என்பதாக. இதில் சிற்ப-ஓவியக் கலைகளின் இடம் எங்கே ? தமிழில் ஓவியம் பற்றி ஏதேனும் கல்வெட்டு காணப்படுகிறதா ?
சிற்ப ஸாஸ்திரம் வடமொழியில்தான் உள்ளது தமிழில் இல்லை. ஏன்னில்லை என்பதற்கு என்னிடம் பதில் இல்லை. ஏதேனும் ஆதாரபூர்வமான தடையம் காட்டி இதை யாரேனும் பொய்யாக்கினால் நான் மகிழ்ச்சி அடைவேன்.
காரணம்3)
ஆனால் வட இந்தியாவில் ஓவியம் பெரும்பாலும் சிறிய அளவில் (miniature format) தயார்செய்த காகிதம் அல்லது கித்தான் ஓலைச்சுவடி களில் தீட்டப்பட்டது. தென் இந்தியாவில் சுவர் ஓவியம் மட்டும்தான். அதுவும் தொடர்பு இல்லாமல்.வட இந்தியாவை எடுத்துக் கொண்டால் கூர்ஜரம் முதல் அஸ்ஸாம் வரை, காஷ்மீரம் முதல் ஹைதிராபாத் வரை சுமார் 10 நூற்றாண்டுகள் வளர்ச்சியும் மாற்றமும் ஓவியத்தில் இழை அறுகாமல் பாதுகாக்கப் பட்டு வருகிறது.( இங்கு மொகலாயப் பேரரசின் பங்கு வெகு முக்கியமானது என்பதை நினைவுகொள்ளவேண்டும்)
தமிழ் நிலத்தில் இம்மாதிரியான எதையும் எடுத்துக்காட்டாகக் கூறமுடிவதில்லை. 18.ஆம் நூற்றாண்டில் ( தோராயமாகத்தான்) மராட்டிய மன்னன் சிவாஜிக்குப் பின் தஞ்சாவூர் ஓவியங்கள் என்று இன்று நாம் குறிப்பிடும் பாணி இங்கு பழக்கத்துக்கு வந்தது. கதா காலட்ஷேப முறைகூட அங்கிருந்துதான் இறக்குமதி.நமது அண்டை மாநிலங்களென்று இன்று அறியப்படும் கேரளம், கர்நாடகம், ஆந்திரம்ஆகிய பிரதேசங்களிலும் பெரிய மாறுதல் அல்லது வித்தியாசம் ஏதும் இல்லை.
இப்படியான ஒரு பின்புலத்தில் தமிழனுக்கு ஆங்கிலேய ஆட்சி மூலம் அறிமுகப்படுத்தப் பட்ட ஓவிய முறை எப்போதுமே அன்னியமானதாகவே இருந்து வருகிறது. குழுக் கலையாகப்பயிலப்பட்ட,குடும்பத்தொழிலாகவே பாவிக்கப்படகைவினைக்கலைஞனுக்கும் சிற்ப-ஓவியம் பழகிய கலைஞனுக்கும் இதில் எந்த வேறுபாடும் கிடையாது..குரு- சீட மரபை விட்டு விலகி தனித்து இயங்கும் ஓவியன் தமிழ் மண்ணுக்குப் புதிது. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு இந்திய ஓவியன் -சிற்பி பெரும் குழப்பத்தில் இருந்து மீளாமுடியாமல் சிக்கித்தவிக்கிறான். ஐரோப்பிய கலைத்தாக்கத்தில் சிக்கி அதையே தனதாகபாவித்து எண்ணம்,செயல் என்று எல்லாமே நகல்செய்து கொண்டிருந்தான். நமது இந்திய கலாசாரம்,மரபு இவையெல்லாம் தன் கலைப் பயணத்தில் ஒரு முதுகு அழுத்தும் சுமை என்று கருதி அவற்றினை விட்டு விலகி தடம் மாறி வழிதப்பிய பயணியாக உணர்கிறான். ஆனால் தான் வாழும் காலத்துப் பதிவுகளை தனது மரபு உத்திகள் மூலம் பதிவுசெய்யமுடியாதவனாக இருக்கிறான்.
என் ஓவிய அனுபவத்தில் ஓவியக் கண்காட்சிக்கு வரும் பார்வையாளர்(குறிப்பாக இலக்கிய நண்பர்கள் முன்வைக்கும் இரண்டு கேள்விகள்
1. இந்த ஓவியங்கள் ஏன் புரியவில்லை ?
2. இதன்மூலம் ஓவியராகிய நீங்கள் ஒரு உழைப்பாளிக்கு என்ன செய்தி தருகிறீர்கள் ?
3. புரியாத நவீன ஓவியம் எதற்கு ?
முதலாவது கேள்விக்கு பதிலாக நான்கூற விரும்புவது;
ஒரு கலைஞனுக்கு இன்றைய அனுபவத்தை வெளிக்கொணர ஒரு புதிய இலக்கணம் தேவைப்படுகிறது. எப்படி மறபுக்கவிதை என்ற தளத்திலிருந்து நவீன கவிதை என்னும் புதிய தளத்துக்கு குடிபுகுந்தானோ அவ்வாறே குரு -சீடன் வழியிலிருந்து விலகி ஒருபுதிய பாதை அமைக்க முனைகிறான். இசை, நாட்டியத்தில்(இந்திய) இந்த குரு பாரம்பரியம் மிகவும் முக்கியம். குருவைப் பின்பற்றி,அவரைப் பிரதிபலித்து அவருக்கு புகழ் சேர்ப்பதே சீடன் கடமை. குரு மூலமாகத்தான் அவன் அறியப்படுகிறான். ஆனால் இந்த உத்தி ஓவியத்தில் இன்று கைவிடப்பட்ட ஒன்றாகும். சீடன் தன் குருவின் பாணியிலிருந்து விலகி தனதுஎன்ற பாணி ஒன்றை பின்பற்றி, படைக்கவேண்டிய கட்டாயம். எனவே ஒவ்வொரு ஓவியனும் பொது இலக்கணத்திலிருந்து ஒரு புதிய (தன்னுடைய) இலக்கணம் அமைத்துதனதுஅனுபவங்களை கோடுகள்,வண்னங்கள் மூலமாய் வெளிப்படுத்துகிறான். பார்ப்பவனுக்கு அதே அனுபவம் வாய்க்க சாத்தியமில்லை.
ஒரு உதாரணத்தின் மூலமாக இதை பார்க்கலாம்; ஒரு மரத்தை காணும் ஓவியன் அதனால் ஏற்படும் மனபாத்திப்பை ஓவியமாகத் தீட்டும் போது அங்கு மரம் இருக்க வாய்ப்பில்லை மாறாக அதன் தாக்கமே( அதன் பிரம்மாண்டம், திடம் அது தரும் குளுமை போன்ற பல செய்திகளை அவன் அதில் சொல்லக்கூடும். பார்ப்பவன் அதில் தனக்கு முன்பே தெரிந்த மரத்தைக் காணமுயன்று ஏமாற்றமடைகிறான். முன்பே அறிமுகமான ஒலி, காட்சி, இடம்,அனுபவம் இவற்றிலிருந்து விலகி அன்னியமான ஒரு புதிய அனுபவம் யாருக்கும் சங்கடத்தையும் குழப்பத்தையும் நிச்சயம் தரும்தான். இது புதிய மொழி ஒருவனுக்கு தரும் குழப்பம் போன்றதுதான். ஓவியம் தொடர்ந்து பார்த்து பழக்கப்படுவது ஒன்றுதான் இதற்கு வழி. அதுதான் போலியிலிருந்து அசலை அடையாளம் காண உதவும். கவிதை படிக்க,புரிந்து திளைக்க மொழி அறிவு எப்படித் தேவையோ அதுபோல்தான் இங்கும்.
இரண்டாவது வினாவுக்கு நான் தரும் பதில்
கலை உழைப்பாளிக்கு எப்போதுமே எந்தசெய்தியையும் சொன்னதில்லை. அவனுக்கு அது தேவையும் இல்லை. அவனுக்கு இதற்கெல்லாம் நேரமே கிடையாது. அவனுக்கு இதெல்லாம் இடைஞ்சல் தரும் அம்சங்கள். வேலைநேரம் போக ஓய்வு நேரங்களில் மன உல்லாசத்துக்கு மனம்போல பாடியும் ஆடியும் உண்டும் வாழ்பவன் அவன்.
மூன்றாவது கேள்விக்கு என் பதில்;
உலகில் எந்த மாறுதலும் நம்மைக்கேட்டுக்கொண்டு வருவதில்லை. புரியவில்லை என்பதால் நாம் அவற்றையெல்லாம் துறந்துவிடுகிறோமா ? உபயோகிப்பதில்லையா ?எதையும் தீர்மானம் செய்யும் உரிமை நமக்கு உண்டா ? “பழையன கழிதலும்***” இங்கு எண்ணிப்பார்க்க வேண்டிய ஒன்று. ஒன்று மட்டும் நிச்சயம் இசையைக் கேட்டுப் பழகவேணும் ஓவியத்தைப் பார்த்துப் பழகவேணும்.
***
அன்புடன்,
அ.நாகராஜன்
nagarajan62@vsnl.net

No comments:

Post a Comment