Wednesday, December 7, 2011

சித்த மருத்துவம் - அடிப்படைகள் (மூலிகைகளை உபயோகிக்கும் முறைகள்)

ஆக்கம்: திரு.P.கிருஷ்ணகுமார்,,B.Com.,SMP,(RIMP), சித்த மருத்துவம், தியானம், சுவடிகள் ஆராய்ச்சி, வனசஞ்சாரம் முதலியவற்றில் ஆர்வமுடையவர்.

சித்தர்கள் மனித சரீரத்தை மூன்று வகையாக பிரித்து உள்ளார்கள். சரீரமாகிய தேகத்தில் உயிர் தங்கியிருக்க காரணமாகிய வாதம் (காற்று), பித்தம் (உஷ்ணம்), சிலேத்துமம் (நீர்), இரசதாது, இரத்ததாது, மாமிசதாது, மேதோதாது, அஸ்திதாது, மச்சைதாது, சுக்கிலதாது, மலம், மூத்திரம் என்னும் பனிரெண்டும் நாம் உண்ணும் உணவிலிருந்து பிரிக்கப்பட்டு, பலத்தையும் இயக்கத்தையும் கொடுக்கிறது. நாம் உண்ணும் உணவே உயிர் உடலிருக்க செய்யும் மருந்தாகும். அவரவர் தேகத்திற்குப் பொருந்தாத மற்றும் முறையில்லாமல் உண்பதினாலும் பிணிகள் உற்பத்தி ஆகின்றன. இதனை வள்ளுவர் திருக்குறளில் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்,
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் 
  வளிமுதலா எண்ணிய மூன்று 
     - திருவள்ளுவர். 
 
நம் உடலில் காற்று, வெப்பம், நீர் இவை மூன்றும் தாம் இருக்க வேண்டிய அளவில் குறைவுபட்டாலும், அதிகமானாலும் நோய் தோன்ற காரணமாக அமையும். இவைகளை வாத, பித்த, கப நோய்களாக பிரிக்கப்படும்.
வாத சம்பந்த பிணிகள்:
வாதத்தில் முக்கியமாக எண்பது நோய்களாகும். நரம்பு வலி, நரம்பு பிடிப்பு, காக்காய் வலிப்பு, பக்கவாதம், வாயு, இரத்த அழுத்தம், இருதய நோய் முதலியவை இதில் அடங்கும்.
பித்த சம்பந்த பிணிகள்:
பித்தத்தில் முக்கியமாக நாற்பது நோய்களாகு ம். செரியாமை, வயிற்றுவலி, வயிற்றுப்புண், மஞ்சட்காமாலை, இரத்த சோகை, இரத்த வாந்தி, கல்லீரல் மற்றும் பித்தப்பை ஆகியன கெட்டுப் போதல் போன்ற நோய்கள் இதில் அடங்கும்.
சிலேத்தும சம்பந்த பிணிகள்:
சிலேத்துமத்தில் தொண்ணூற்றாறு நோய்கள் முக்கியமானதாகும். அவற்றில் மூக்கில் நீர்வடிதல், மூக்கடைப்பு, தடுமன், இருமல், க்ஷயம், ஆஸ்துமா போன்றவை அடங்கும்.

நோய்களைத் தவிர்க்கும் முறை பற்றிய மற்றொரு திருக்குறளைப் பார்ப்போம்.
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது 
  அற்றது போற்றி உணின். 
     - திருவள்ளுவர். 
மருத்துவ மூலிகைகளைக் கொண்டு நோயை நீக்கிக் கொள்வது, மிகப் பழங்காலத்திலிருந்தே உலகம் முழுவதும் பின்பற்றப்பட்டு வரும் செயல். இது மனிதர்கள் மட்டுமல்லாமல் மிருகங்களும் தானாகவே பின்பற்றும் செயல் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
"புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது" என்பது பழமொழி. ஆனால் வயிற்றுக் கழிச்சல், ஒவ்வாமை போன்ற குறைபாடு ஏற்பட்டால், புலி இரையைத் தேடாமல் சில குறிப்பிட்ட தாவரங்களை மட்டும் தேடி உண்டு விட்டு குறை தீரும் வரை உபவாசம் இருப்பதாக அறிந்துள்ளார்கள்.
பாரம்பரிய இந்திய மருத்துவ முறைகளான சித்த, ஆயுர்வேத முறைகள், சீன மற்றும் திபெத்திய மருத்துவ முறைகளில் மருத்துவ மூலிகைகளுக்கே முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த உலகில் எவ்வாறு உயிரினங்களின் தேவைக்காக உணவு படைக்கப்பட்டதோ, அதே போல அவைகளுக்கு ஏற்படக் கூடிய நோய்களுக்கு மருந்துகளும் படைக்கப்பட்டுள்ளன என்பது எல்லா பாரம்பரிய மருத்துவ முறைகளின் அடிப்படைக் கருத்தாகும்.
அவ்வாறு கண்டறியப்பட்ட சில பொதுவான மூலிகைகளின் பட்டியல் கீழே உள்ளது. அந்த பெயர்களை 'க்ளிக்' செய்வதன் மூலம் அவற்றைப் பற்றிய விபரங்களைக் காணலாம்.
மூலிகைகளை உபயோகிக்கும் முறைகள்: இந்த மூலிகைகளை நேரடியாக உபயோகிக்கும் முன்பாக, சில விபரங்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.
சித்த, ஆயுர்வேத முறைகளில் தாவரங்களில் உள்ள குணாதிசயங்கள் மட்டுமல்லாமல், சில குறிப்பிட்ட கால நேரங்களில் கிரக நிலைக்கேற்ப இந்த தாவரங்களில் பொதிந்து விலகும் 'எல்லைக்கு அப்பாற்பட்ட சக்தி'களும் மிக முக்கிய பண்பாகக் கருதப்படுகிறது. ஆகவே இந்த தாவரங்களை மருத்துவத்திற்க்காக சேகரிக்கும் காலங்களும், சேகரிப்பவரின் உடல் சுத்தம், உள்ளச் சுத்தம், சேகரிக்கும் போதும் மருந்து தயாரிக்கும் போது உச்சரிக்க வேண்டியவை முதலியவற்றை தேர்ந்த வல்லுநரிடமே அறிந்து கொள்ள வேண்டும்.
பல மூலிகைகளில் உள்ள நற்பயன்களைப் பெறும் முன்பு, அதில் உள்ள எதிர் தன்மைகளை நீக்க வேண்டும், அப்போது தான் அந்த நற் பயன்களை தேவையான அளவில் நேரடியாக பெற முடியும். உதாரணமாக, மிளகை நாம் சாதாரணமாக உணவில் பயன்படுத்துகிறோம். ஆனால் மருத்துவத்திற்கு பயன்படுத்தும் முன்பு அதில் உள்ள எதிர் தன்மைகளை (மருத்துவக் கூற்றுப்படி - நச்சுத் தன்மைகளை) நீக்க மிளகை புளித்த மோரில் 3 மணி நேரம் ஊறவைத்து உலர்த்த வேண்டும்.
மூலிகைகள் சாதாரணமாக பக்க விளைவுகள் இல்லாதவை. மேலும் பல மூலிகைகளை நாம் தினசரி உணவிலும் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் மருத்துவ முறைகளில் உபயோகிக்கும் போது கடைபிடிக்க வேண்டிய பல நுணுக்கங்கள் இருப்பதால், மூலிகைகளின் முழுப்பயனை அடைய தேர்ந்த வல்லுநரின் வழிகாட்டலின் படி நடப்பதே சிறந்தது.

No comments:

Post a Comment