Creation என்று சார்லஸ் டார்வினைப் பற்றி ஒரு திரைப்படத்தைப் பார்த்தேன். அது மிகவும் பிடித்திருந்தது. அந்தப் படம் பார்த்த இரண்டு நாட்களுக்கு டார்வினைப் பற்றி தேடி நிறைய வாசித்தேன். அவரது இயற்கையின் வரலாறு குறித்த தேடுதலும் அது சார்ந்த கண்டுபிடிப்புகளும் கருதுகோள்களும் விஞ்ஞானத்தின் மீது மனிதன் கொண்ட நம்பிக்கையின் முதல்சாதனை என்றே தோன்றுகிறது. பரிணாம வளர்ச்சி குறித்த விஞ்ஞானத்தை டார்வினுக்கு முன்பு. டார்வினுக்கு பின்பு என்று பிரிக்குமளவு அவர் ஒரு முக்கிய புள்ளியாக இருந்திருக்கிறார்.
இன்று டார்வின் கல்விப்புல மாணவர்களின் பாடப்புத்தகத்தில் உள்ள பிம்பமாக மட்டுமே மிஞ்சியிருக்கிறார். பொது வாழ்வில் அவர்குறித்த பகடிகளும், புரிந்து கொள்ளாத கேலிகளுமே மிஞ்சியிருக்கின்றன. அதிகம் தவறுதலாகப் புரிந்து கொள்ளப்பட்ட ஒரு விஞ்ஞானி என்றே அவரைச் சொல்வேன். டார்வினின் ஆதாரப்புத்தங்களை வாசிப்பவர்கள் இன்று வெகு குறைவே.
அவருக்குப் பின்பு இன்று உயிரியல் விஞ்ஞானம் எவ்வளவோ வளர்ந்து வந்திருக்கிறது. புதிய முன்னேறங்களைக் கண்டிருக்கிறது. ஆனாலும் அவரது வேட்கையும், எதிர்ப்புணர்வும். அர்ப்பணிப்பும் இடைவிடாத பயணமும் இன்றுள்ள இந்திய விஞ்ஞானிகள் பலருக்கும் இருப்பதாகத் தெரியவில்லை.
டார்வின் தன் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து எழுதி வந்திருக்கிறர, அது ஒரு தீவிரமான எழுத்தாளர்களின் படைப்புகளை விட அதிகம், ஆயிரமாயிரம் பக்கக் குறிப்புகள், எழுத்துப்படிவங்கள். புத்தகங்கள், பரிமாண வளர்ச்சி குறித்த கட்டுரைகள், பறவைகள்,விலங்குகளின் ஆதார இயல்புகள் குறித்த குறிப்புகள், ஆய்வுகட்டுரைகள் என்று அவரது பங்களிப்பு மகத்தானது.
டார்வினின் வாழ்க்கை வரலாறு மிகவும் சுவாரஸ்யமானது. அவர் தனது அப்பாவைப்பற்றி எழுதியுள்ளதை வாசிக்கையில் டிக்கன்ஸைப் படிப்பதுபோலவே இருக்கிறது. டார்வினின் எழுத்து தேர்ந்த சொற்களால், நுண்மையாக, உணர்ச்சிபூர்வமான விவரணைகள், காட்சிச் சித்திரங்களுடன் , ஒவியரை போல நுட்பமான நிறவடிவ பேதங்களுடன், எழுதப்பட்டிருக்கின்றது. பெரும்பான்மை விஞ்ஞானக்கட்டுரைகளை பத்தி எழுத்து போல சுவாரஸ்யமாக வாசித்துவிட முடிகிறது
டார்வின் கடிதங்கள், தனிக்குறிப்புகள், நாட்குறிப்புகள், கடற்பயண குறிப்புகள் என்று வாசிக்க இன்று நாலாயிரம் பக்கங்கள் நம் முன்னே இருக்கின்றன. அதில் எவ்வளவு தமிழ்படுத்தப்பட்டு வெளியாகி உள்ளது எனத்தெரியவில்லை. சார்வினின் ஆதார எழுத்துகளை தனியே ஒரு தொகுப்பாக தமிழில் கொண்டுவருவது அவசியமான ஒன்று.
முன்பு டார்வினைப் பற்றிய எளிய அறிமுகப்புத்தகங்கள் ஒன்றிரண்டு வந்திருக்கின்றன. ஆனால் அதன்வழியே அவரது ஆளுமையின் பன்முகத்தை நாம் அறிந்து கொள்ளமுடியவில்லை. அவரது நகைச்சுவையோடிய எழுத்து தமிழில் வரவேயில்லை.
ஒரு காலத்தில் கலைக்கதிர், மஞ்சரி போன்ற இதழில் அவரைப்பற்றி சில கட்டுரைகளைப் படித்திருக்கிறேன் கலைக்கதிர் போல விஞ்ஞானத்திற்கென தனித்துவமான இதழ்கள் இப்போது வெளியாகிறதா எனத்தெரியவில்லை
சார்லஸ் டார்வினைப் பற்றி பிபிசி தயாரிப்பிலும், இயற்கை வரலாற்றியல் துறை தயாரிப்பிலும் இரண்டு ஆவணப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. அவை அவரை ஒரு விஞ்ஞானியாக சித்தரிப்பதிலே முக்கியத்துவம் கொண்டிருந்தன . அந்த இரண்டையும் விட இந்தப் படம் முக்கியமானது.
இது டார்வின் என்ற விஞ்ஞானியை விடவும் டார்வின் என்ற மனிதனின் அகவுணர்ச்சிகளை முதன்மைபடுத்தியிருக்கிறது. அது முக்கியமானது. டார்வின் குடும்பம் மனைவி மகள் அவரது நண்பர்கள். அவரது தயக்கம் பயம். கோபம் என்று இந்தப்படம் டார்வினை நெருக்கமான ஒரு மனிதனின் கதை போலாக்குகிறது,
கதை கேட்பதில் இருந்து தான் டார்வின் படமும் துவங்குகிறது
ஒவ்வொரு வெற்றிபெற்ற புத்தகத்திற்குப் பின்னும் அந்த புத்தகத்தை விட சுவாரஸ்யமான. உலகம் அறியாத பல சம்பவங்கள், கதைகள். நிகழ்வுகள் மறைந்து போயிருக்க கூடும். அப்படி டார்வினின் On the Origin of Species. புத்தகம் எழுதப்பட்ட காலத்தில் டார்வின் என்ன மனநிலையில் இருந்தார். எந்தவிதமான எதிர்ப்புகளைப் பற்றி கவலைப்பட்டார். அவரது தினசரி வாழ்க்கை எப்படியிருந்த்து என்பதை படம் மிக நுண்மையாகப் பதிவு செய்திருக்கிறது
டார்வின் தனது 22 வயதில் HMS Beagle என்ற கப்பலில் தனது கடற்பயணத்தை துவக்கினார். இந்தக் கப்பல் இங்கிலாந்து மன்னரின் ஆணைப்படி தென் அமெரிக்காவின் கடற்கரைப் பகுதிகளில் உள்ள நிலவியல் மற்றும் இயற்கை வளங்களை ஆராய்ந்து வரும்படியாக அனுப்பபட்டது. வெளிப்படையாக இயற்கையைத் தேடும் பயணம் போலத் தெரிந்தாலும் உள்ளுற இந்தப்பயணத்திற்கு வேறு நோக்கமிருந்தது. அது பூமியில் எந்த இடங்களில் கனிமங்கள் கிடைக்கும். எந்தநாட்டின் துறைமுகம் எப்படி உள்ளது. எங்கே தங்கம் கிடைக்கிறது. எந்த நாட்டில் என்ன இயற்கை வளங்கள் இருக்கின்றன என்ற வணிகப்பேராசை இந்த பயணத்திற்குள்ளும் ரகசியமாக இருந்தது. அத்தோடு நாடுபிடிக்கும் அரசியல் உள்நோக்கமும் அடங்கியே இருந்திருக்க கூடும் என்கிறார்கள் இன்றைய வரலாற்று ஆய்வாளர்கள்.
இதற்காக பீகிள் கப்பல் மூலம் நீண்ட கடற்பயணத்தை மேற்கொண்டு கடல்வரைபடத்தை உருவாக்க முனைந்தது இங்கிலாந்து அரசு. இந்த கப்பலின் முதல்பயணம் 1826ல் துவங்கியது. அப்போது இதன் கேப்டனாக இருந்தவர் Captain Pringle Stokes , 380 டன் எடையுள்ள இந்தக்கப்பலில் ஆறு பீரங்கிகள் பொருத்தபட்டிருந்தன. புயல் மழையில் சிக்கி கப்பல் பயணம் அடிக்கடி தடைபடுவதும் பின்பு அதிலிருந்து நீங்கிச் செல்வதுமாக தொடர்ந்தது.
டார்வினின் கடற்பயணம் அவர் நினைத்தது போல எளிதாகயில்லை. கடற்பயணத்தின் நடுவே மனத்தடுமாற்றம் கொண்ட கப்பலின் கேப்டன் தற்கொலை செய்து கொண்டார். அதன்பிறகு புதிய கேப்டனாக நியமிக்கபட்டவர் Robert FitzRoy. இவர் ஒரு தேர்ந்த கடலோடி. இவர் தான் டார்வினைத் தனது கப்பலின் இயற்கை ஆய்வாளராகப் பணியாற்றும்படி அழைத்து அதற்குத் தேவையான பணஉதவிகளைச் செய்தவர். மூன்று ஆண்டுகாலப்பயணம் எனத் திட்டமிடப்பட்டது ஆனால் பயண முடிவில் ஐந்து ஆண்டுகாலமாகிப் போனது. ஒவ்வொரு சிறு தீவாகச் சென்று ஆராய்ந்து அதன் இயற்கை வளங்களைப் பற்றி நுட்பமாக பதிவு செய்திருக்கிறார் டார்வின்.
இந்தக்குறிப்புகளில் அங்கே என்ன நிறமான மண் உள்ளது. வானம் எப்படி இருந்தது. என்னவிதமான நண்டுகள், பறவைகள், மீன்கள் இருந்தன. அதன் பிரத்யேகத்தன்மைகள் என்ன? பூர்வகுடிமக்கள் எப்படியிருந்தார்கள் என்று பல்விதமான குறிப்புகளை டார்வின் எழுதியிருக்கிறார்.
இந்த கப்பலில் மருத்துவர், நிலவியலாளர், கனிம ஆய்வாளர் , வரைபட உதவியாளர். வானவியில் ஆய்வாளர் என்று 74 பேர் இருந்தார்கள். 1831ம் ஆண்டு டிசம்பரில் இக்கப்பல் புறப்பட்டது. ஐந்தாண்டுகாலம் இது பிரேசில் அர்ஜென்டினா பெரு மாலதீவு, சிட்னி தென்னாப்பரிக்கா என்று சுற்றியலைந்து இங்கிலாந்தை வந்து அடைந்தது. இந்தப்பயணம் தான் டார்வினை பரிமாணவளர்ச்சி குறித்த விஞ்ஞானியாக உருவாக்கியதில் முக்கியபங்கு வகித்திருக்கிறது. இப்பயண அனுபவத்தை டார்வின் மிக விரிவான மூன்று தொகுதிகளாக எழுதியிருக்கிறார்.
தங்களது கப்பல் எந்த திசையில் சென்றது. எந்த்த் தீவில் கரை இறங்கினார்கள். அங்கு தீவுவாசிகள் எப்படியிருந்தார்கள். எந்த நிறத்தில் மணல் இருந்தது. எந்த வடிவில் பாறைகள் இருந்தன. தண்ணீரில் என்ன உயிர்கள் வசித்தன. எத்தனை வகையான பறவைகள் வசித்தன. புதையுண்டு கிடந்த எலும்புகள் என்னவிதமானவை என்று அவர் ஆழ்ந்து அறிந்து எழுதிய குறிப்புகளை வாசிக்கையில் வியப்பாக இருக்கிறது . டார்வின் இந்த நாட்களில் கடல்வாழ் உயிரினங்கள் குறித்தும் நிலவயில் குறித்தும் அதிக ஈடுபாடு காட்டியிருக்கிறார். அதே நேரம் தீவுவாசிகளை அவர்கள் எவ்வளவு அலட்சியமாக நடத்தினார்கள் என்பதைப் பற்றியும் தீவுவாசிகளின் விசித்திரமான உணவுமுறைகள். சடங்குகள் பற்றியும் எழுத்தாளர்களை போல சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறார்.
கப்பலின் கேப்டனாக இருந்த பிட்ஜ்ரேயும் முந்தைய கேப்டனை போலவே மனக்கோளாறு கொண்டவர். அது பிட்ஜ்ரே குடும்பத்தின் பரம்பரை வியாதி. ஆகவே அவர் எப்போதும் யாராவது தன்னோடு கூடவே இருக்க வேண்டும் என்று உள்ளுறப்பயந்தபடியே இருந்தார். நிலையில்லாத இந்தக் கற்பனை பயம், மிதமிஞ்சிய அச்சம், குழப்பம் மற்றும் மனத்தடுமாற்றம் என்று மிகுந்த உணர்ச்சிவசப்பட்ட பிட்ஜ்ரேயை டார்வின் அன்போடு நேசித்தார். அவர்களது நட்பு உறுதியாக இருந்தது. இதனால் பிட்ஜ்ரே சில தீவுகளில் டார்வின் மாதக்கணக்கில் தங்கி ஆய்வு செய்து வர அனுமதி தந்ததோடு தனது ஆய்விற்காக டார்வின் சேகரித்த உயிரினங்கள், கற்கள், எலும்பு படிவங்கள், மிருகங்கள் அத்தனையும் தனது கப்பலில் ஏற்றி முறையாக பாதுகாக்கவும் செய்திருக்கிறார்.
ஆனால் பிட்ஜ்ரே தீவிரமான மதப்பற்று கொண்டிருந்தார். ஆகவே அவர் உலகம் அறியாமல் வாழ்ந்து கொண்டிருந்த தீவுவாசிகளை கிறிஸ்துவர்களாக மாற்ற பெரும்முயற்சி எடுத்து கொண்டிருக்கிறார்.
இதை பற்றி ஒரு சம்பவம் குறிப்பிடப்படுகிறது. பிட்ஜ்ரே ஒருமுறை மூன்று ஆதிவாசிச் சிறுவர்களை விலைக்கு வாங்கி தன்னோடு நகருக்கு அழைத்து சென்று ஆங்கிலம் கற்பித்து அழகான உடைகளை தந்து ,நாகரீகமான மனிதர்களைப் போல உருமாற்றி மறுபடியும் அதே தீவிற்கு அழைத்து சென்றிருக்கிறார்.
தங்களது சொந்தத்தீவைக் கண்டதும் ஆதிவாசிச் சிறுவர்கள் தங்களது நாகரீக ஆடைகளை அவிழ்த்து எறிந்துவிட்டு நிர்வாணமாக தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு மாறிப்போய்விட்டார்கள். ஐந்து வருசங்கள் அந்த சிறுவர்களை வலிந்து திருத்திய போதும் அவர்களின் மனம் மாறவேயில்லை என்று பிட்ஜ்ரே மிகவும் வருந்தி தனது நாட்குறிப்பில் எழுதியிருக்கிறார். பிட்ஜ்ரேயின் கடிதங்களும் குறிப்புகளும் தனித்து புத்தகமாக வெளியாகியிருக்கின்றன.
க்ரியேஷன் திரைப்படத்தில் இந்தக் காட்சிகள் இடைவெட்டாக வந்து போகின்றன. படம் இங்கிலாந்தின் சிறிய கிராமப்புறம் ஒன்றில் டார்வின் இளைஞராக வசித்துக் கொண்டிருப்பதில் இருந்து துவங்குகிறது. தனது பத்து வயது மகள் ஆனியைப் புகைப்படம் எடுக்க அழைத்து போகிறார் டார்வின். அவள் புகைப்படம் எப்படி எடுக்கபடுகிறது என்று ஒரு கேள்விகேட்கிறாள். அதை விஞ்ஞானப்பூர்வமாக விளக்குகிறார் டார்வின். அன்றிரவு மகள் அப்பா எனக்கு ஒரு கதை சொல்லுங்களேன் என்கிறாள். என்ன கதை என்று கேட்க, உங்கள் பயணத்தின் கதை என்று சொல்லிச் சிரிக்கிறாள்.
டார்வின் பிட்ஜ்ரேயுடன் தனது கடற்பயணத்தில் கண்ட ஆதிவாசிச் சிறுவர்களைப் பற்றிய கதையைச் சொல்லி சிரிக்கிறார். அப்பாவிற்கும் மகளுக்குமான உறவும் நெருக்கமுமாக படம் வளர்கிறது. துடிப்பான, விஞ்ஞானத்தில் நாட்டமுள்ள பெண்ணாக மகள் வளர்வது டார்வினிற்கு மிகவும் பிடித்திருக்கிறது.
அவர் ஆனி பிறந்த சில மணிநேரத்தில் இருந்து அவளது வளர்ச்சியை படிப்படியாகப் பரிசோதனை செய்து தனது குறிப்பேட்டில் குறித்து கொண்டு வருகிறார். ஆகவே குழந்தைகள் எப்படி வளர்கிறார்கள் என்று அவரால் துல்லியமாக அறிந்து கொள்ள முடிந்திருக்கிறது.
ஒவ்வொரு முறையும் ஆனி அப்பாவிடம் தனக்காக ஒரு கதையைச் சொல்லுங்கள் என்று கேட்கிறாள். டார்வின் கடந்த கால நினைவில் இருந்து ஒரு சம்பவத்தைச் சொல்கிறார். உராங்குட்டான் வகையை சேர்ந்த குரங்கு ஒன்றினை காட்டில் இருந்து பிடித்துவந்து கூண்டில் அடைத்து லண்டன் மிருக்க் காட்சி சாலையில் வேடிக்கைப் பொருளாக வைத்திருந்தார்கள். லண்டன்வாசிகள் பார்த்த முதல் உராங்குட்டான் அதுவே.
அதை மனிதனைப் போல உடை அணிய செய்து ஒரு கூண்டில் அடைத்து வைத்திருந்தார்கள். இளம் ஆய்வாளரான டார்வின் அந்தக் குரங்கோடு பழகி அதன் தினசரி நடவடிக்கைகளைக் குறிப்பேட்டில் பதிவு செய்து கொள்கிறார். இருவருக்கும் இடையில் நட்பு உருவாகிறது. அந்தக் குரங்கு அவரை மிகவும் நேசிக்கிறது. ஆனால் அது நோய்மையுற்று சில நாட்களில் இறந்து போகிறது
இந்தச் சம்பவம் டார்வின் மனதில் அழியாத துயரமாகப் பதிந்து போயிருக்கிறது. சோகக்கதையான இதை ஆனி அடிக்கடி கேட்கிறாள். அவளுக்கும் இறந்து போன குரங்கின் மீது காரணமற்ற துயரம் உருவாகிறது. அவள் அந்தகதையின் மீது ஏனோ அதிகமாக ஈடுபாடுகாட்டுகிறாள்.
டார்வினின் மனைவி எம்மா தீவிரமான மதநம்பிக்கை கொண்டவள். டார்வினோ உணவுவேளையில் பிரார்த்தனை செய்வதைக் கூட மறந்து போனவராகயிருக்கிறார். அவர் மனது எப்போதும் எதையோ யோசனை செய்தபடியோ, கற்பனை செய்தபடியோ இருக்கிறது.
ஒரு நாள் அவரைத் தேடி வரும் அல்டாஸ் ஹக்ஸ்லி உங்கள் விஞ்ஞானக் கருதுகோளின் மூலம் கடவுளின் இடம் காலி செய்யப்படுகிறது. நீங்கள் கடவுளைக் கொன்ற கொலையாளி என்று சொல்லிச் சிரிக்கிறார்.
அது தான் டார்வின் குழப்பத்திற்கான முக்கிய காரணம் என்று புரிகிறது. டார்வின் மதத்தை எதிர்த்து தனது கண்டுபிடிப்புகளை, விஞ்ஞான நிரூபணங்களை முன்வைக்க வேண்டுமா என்று தடுமாறிக் கொண்டேயிருக்கிறார். டார்வின் தனது விஞ்ஞானக் கோட்பாடுகளால் மதத்தை எதிர்ப்பதை அவரது மனைவியே விரும்பவில்லை. இந்த நிலையில் அவரது மகள் திடீரென நோய்மையுறுகிறாள்.
மனைவியின் ஆலோசனையை மீறி அவளை நீர்சிகிட்சை செய்து குணமாக்க குளியல் கூடம் ஒன்றிற்குக் கொண்டு செல்கிறார் டார்வின். அந்தச் சிகிட்சை பலன் அளிக்காமல் மகள் இறந்து போய்விடுகிறாள். இந்தக் குற்றவுணர்ச்சி அவரை வாட்டுகிறது.
தன்னால் தான் மகள் இறந்து போய்விட்டாள் என்று மனைவி வெறுப்பதாக டார்வின் நினைக்கிறார். இந்த்த் தடுமாற்றம் அவர்களுக்குள் பிரிவையும் பேதங்களையும் உருவாக்குகிறது. மகளின் மரணம் தந்த மனப்போராட்டம் அவரை மிகவும் வேதனைப்படுத்துகிறது
முடிவில் மகளின் மரணத்தோடு அவரது மதநம்பிக்கை முற்றுப்பெறுகிறது. அவர் தனது புதிய நூலான On the Origin of Species யை வெளியிட முடிவு செய்து தபாலில் பதிப்பாளருக்கு அனுப்பி வைக்கிறார். தபால்வண்டி நகரை நோக்கிப் புறப்பட்டு போகிறது. டார்வின் மனநிம்மதியோடு தனது வீடுநோக்கி நடந்து போகையில் அவரோடு இறந்து போன அவரது மகள் கூடவே நடந்து போவது போல இறுதிக்காட்சி முடிவடைகிறது.
ஒரு விஞ்ஞானியாக உலகின் ரகசியங்களை அறிந்து கொள்ள முடிந்த மனிதருக்கு மரணமும் மகளின் அன்பும் அவளது பிரிவு தரும் துயரும் புரிந்து கொள்ளவே முடியாத உண்மைகளாக இருக்கின்றன. எல்லா விஞ்ஞானிகளும் சராசரி மனிதர்களே என்பது தானே உண்மை. டார்வின் எனும் தந்தையைப் பற்றிய படமே இது. இந்த தந்தையின் அன்பும் தடுமாற்றங்களும் நம்மை நிறைய யோசிக்க வைக்கின்றன.
மதத்தின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள ஒரு விஞ்ஞானி எவ்வளவு போராட வேண்டியிருக்கிறது என்பதை இப்படம் மிக அழகாக வெளிப்படுத்துகிறது . Paul Bettanyசார்லஸ் டார்வினா அற்புதமாக நடித்திருக்கிறார். ஒளிப்பதிவு, இசை, கலைநுட்பம் என்று யாவும் ஒன்றிணைந்து காலத்தின் பின்போய் திரும்பிய அனுபவம் கிடைக்கிறது
டார்வின் வெறும் விஞ்ஞானியில்லை. அவர் நம் காலத்தின் உண்மையான கலகக்காரன்
டார்வினைப்பற்றி அறிந்து கொள்வது விஞ்ஞானத்திற்கும் சமூகவளர்ச்சிக்குமான உறவைப்பற்றி அறிந்து கொள்வதேயாகும். அதற்காகவாவது அவரைப் பற்றிய இந்தப் படத்தை அவசியம் பார்க்க வேண்டும்
More Info : http://www.sramakrishnan.com/?p=2125
No comments:
Post a Comment