Friday, April 1, 2011

உயிரை உலுக்கிய குறும்படம்

வெறும் ஆறு நிமிடங்கள் மட்டுமே ஓடும் Chicken-a-la-Carte எனும் இந்த குறும்படம் உயிரையே உலுக்கி எடுக்கிறது. 2005ம் ஆண்டு தயாராக்கப்பட்ட இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் ferdinand-dimadura என்பவர்.
ஒரு புறம் உலக மயமாக்கலில் வெளிச்ச விளக்குகள், மறுபுறம் வறுமையின் கோரப் பிடியில் வாழும் மக்களின் வயிற்றுப் பிரச்சினைகள் என நாணயத்தின் சமநிலையற்ற இரண்டு பக்கங்களை சில நிமிடங்களில் காட்டி மனதை நிலை குலைய வைக்கிறார் இயக்குனர்.
தினமும் பல்லாயிரக் கணக்கான மக்கள் வறுமையினால் மடிகிறார்கள் என நிஜத்தின் வாசகமும், கனக்கும் இசையுமாக மனதை ஸ்தம்பிக்க வைக்கிறது குறும்படம். உலகின் எல்லா பாகங்களிலும் இந்த நிமிடத்தில் நடக்கும் செயல் இது எனும் உண்மை பொசுக்குகிறது.
படத்தின் துவக்கத்தில் கே.எஃப்.சி உணவகத்தில் இளம் பெண்கள் புன்னகையும், கதையுமாக சிக்கனை அரையும் குறையுமாகக் கடித்து உயர்தட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தைப் பிரதிபலிக்க,
பின்னர் தொடரும் காட்சிகளில் மிச்சம் மீதிகளைப் பொறுக்கும் ஓர் ஏழையும், அவன் கொண்டு செல்லும் அந்த மிச்ச மீதிக்காகக் காத்திருக்கும் குழந்தைகள் கூட்டமும் என மனதுக்குள் சட்டென ஈட்டி இறக்குகின்றன காட்சிகள்.
மீந்து போன உணவுகளை உற்சாகத்தின் உச்சத்தில், சிரிப்பும் களிப்புமாக குழந்தைகள் உண்பதைக் காணும்போது விழிகள் நீர்சொரியவும் மறந்து உறைந்து போகின்றன என்பதே உண்மை.
வறுமை வறுமை என பேசிப் பேசி அந்த வார்த்தையின் வீரியமே நீர்த்துப் போய்விட்ட இன்றைய சமூகச் சூழலில் வறுமையின் வீரியத்தை ஆணி அடித்தார் போல சொல்கிறது இந்தக் குறும்படம்.
ஊடகங்களில் இத்தகைய குறும்படங்கள் ஒளிபரப்பப்பட்டு உலகின் ஒட்டு மொத்த வீடுகளுக்குள்ளும் சென்று சேரவேண்டும்.
கல்லும் கரையும் இந்தக் குறும்படம் நிச்சயம் பலருடைய மனித நேயக் கதவுகளை வலுக்கட்டாயமாய்த் திறக்கும் என்பதில் ஐயமில்லை.

நன்றி to சரவணன் பிச்சாண்டி, லிங்க் அனுப்பியமைக்கு.

1 comment:

  1. kannir thuligal mattume namakku sontham....

    entha nilai marum.....MATRAPPADUM.....Logan....

    ReplyDelete